ஆங்கில மூலம்: சுவ்ரத் ராஜு, எம்.வி.ரமணா

தமிழில் : ஆதி வள்ளியப்பன்

DSC_0055_620

அணு  இழப்பீட்டு மசோதாவை ஏற்றுக்கொள்ள மறுத்து, தங்கள் பொருளாதார நலன்களை 1 சதவிகிதம்-கூட விட்டுத்தரத் தயாராக அணுஉலை நிறுவனங்கள் இல்லாத நிலையில், உள்ளூர் மக்கள் மட்டும் தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ள அணு உலைகளை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்?

கூடங்குளம் அணு உலையை செயல்படுத்தத் தொடங்குவதற்கு எதிராக உள்ளூர் மக்களின் உறுதியான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்-டிருக்கும் நிலையில், அணுசக்தி துறையின் அறிக்கைகள் மூர்க்கமான நிலைக்கு மாற ஆரம்பித்துள்ளன. இந்த போராட்-டங்களுக்குப் பின்னால் அந்நிய சக்தி இருக்கிறது என்று இந்திய அணுசக்திக் கழகத் (என்.பி.சி.ஐ.எல்.) தலைவர் கூறியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமோ, இந்த அணுஉலைகள் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை என்று உறுதி தந்தது மட்டுமில்லாமல், "தி இந்து" நாளிதழில் (சிறப்புக் கட்டுரை, நவம்பர் 6) எழுதி-யிருந்த கட்டுரையில் அணுசக்திதான் இந்தியா நவீன-மயமாவதற்கும், வளம் பெறுவதற்குமான வழி என்று வாதிட்டு இருந்தார்.

இது போன்ற வாதங்கள் பல பத்தாண்-டுகளாக திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டுக்கு, ஜவகர்லால் நேரு, "அணு புரட்சி"யை தொழிற்புரட்சியுடன் ஒப்பிட்டு, "ஒன்று நீங்கள் அதனுடன் சேர்ந்து சென்றாக வேண்டும், இல்லையென்றால்... மற்றவர்கள் முன்னேறி விடுவார்கள். அதன் பிறகு நாம் படிப்படியாக பின்னோக்கி செல்ல வேண்டியதுதான்." என்று கூறியிருக்கிறார். இத்தனைக்குப் பிறகும் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அணுசக்தி சார்ந்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் காப்பாற்றப் படவில்லை. அணுசக்தி சார்ந்து முன்னேறலாம், பொருளாதார வெற்றி கிடைக்கும் என்பதெல்லாம் தேய்ந்துபோன, வரலாற்று ரீதியில் தவறான விஷயங்-களாகி விட்டன.

உற்பத்தி இலக்குகளும் உண்மை நிலையும்

மின்உற்பத்தியில் அணுசக்தி முன்னணி வகிக்கும் என்ற கனவுடன் அணுசக்தித் துறை இதுவரை வெளியிட்ட பல்வேறு பிரகடனங்களை வைத்து பார்க்கும்போது,  அணுசக்தி மீது வைக்கப்படும் அதீத நம்பிக்கை பொய்த்துப் போனதாகத்தான் இருக்-கிறது. எடுத்துக்காட்டுக்கு 2000 ஆம் ஆண்டுக்குள் 43,500 மெகாவாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று 1970களில் கூறியது. ஆனால் 2,720 மெகாவாட்தான் உண்மையில் உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் அணுசக்தியின் பங்கு 2.8 சதவிகிதம் மட்டுமே. உற்பத்தி செய்யப்பட்ட இந்த கொஞ்ச மின்சாரத்துக்கு செய்த செலவோ மலையளவு. இவ்-வளவுக்கும் அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகளின் முழுமையான கொள்கைரீதியிலான ஆதரவு, பொருளாதார ஆதரவு ஆகியவற்றைத் தாண்டி, அணுசக்தித் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

தோரியம் எரிபொருளாவது பற்றி...

தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் விஷயத்தில், அணுசக்தித் துறை செய்த பிரகடனங்-களுக்கும் அது  எட்டிய இலக்குக்கும் இடையிலான இடைவெளி மிகப்பெரியது. 1970ஆம் ஆண்டில் "தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் திட்டம் சரிவை சந்தித்துவிட்டது", என்றாலும் அடுத்த 15 ஆண்டுகளில் தோரியத்தை எரிபொருளாகக் கொண்ட அணுஉலைகள் கட்டப்படும என்று அணுசக்தி கமிஷன் அப்போது கூறினாலும்கூட, தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் அணு உலைகள் இதுவரை கட்டப்படவேயில்லை. எனவே, தோரியம் சுழற்சி தொடர்பான பல்வேறு தீவிரமான தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு இதுவரை தீர்வு கண்டு-பிடிக்கப்படவில்லை.

யுரேனியத்தைப் போல தோரியத்தை அணு-உலைக்-கான நேரடி எரிபொருளாகப் பயன்படுத்த முடியாது. முதலில் ஒரு அணுஉலையை கட்டி யுரேனியத்தின் ஐசோடோப்பான யுரேனியம் 233யை உருவாக்க வேண்டும். யுரேனியம் 233 ஐசோடோப்புக்கு மூன்று முக்கிய பண்புகள் உண்டு.  முதலாவதாக, அது அணுகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதன்-மூலம் அணுகுண்டுகளில் வைப்பதற்கான யுரேனியம், புளூடோனியத்தை உற்பத்தி செய்ய முடியும். இரண்டாவதாக, யுரேனியம் 233 ஐசோடோப்பை உற்பத்தி செய்யும்போதே, யுரேனியம் 232 ஐசோடோப்பும் கூடவே உருவாகிவிடுகிறது. அது சக்திவாய்ந்த காமா கதிர்களை வெளியிடுகிறது. இதன் காரணமாகத்தான் யுரேனியம் 232யை அணுகுண்டுகளில் பயன்படுத்தப்படவில்லை. இந்தப் பண்பு இன்னும் பிரச்சினைக்குரியது. ஏனென்றால், யுரேனியம் 233 ஐசோடோப்பை அணுஉலை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது உருவாகும் புதிய ஐசோடோப்பு, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், செலவு மிகுந்த ஒன்றாகவும் உள்ளது.

எனவே, அணுகுண்டில் தோரியத்தை பயன்படுத்த முடியாத அதே காரணங்கள்தான், தோரியத்தைப் பயன்படுத்தி ஆற்றலை உருவாக்குவதிலும் மிகப்பெரிய தடங்கல்களாக இருக்கின்றன. மூன்றாவதாக, அணுசக்தித் துறையின் திட்டப்படி, யுரேனியம் 233யை மொத்தமாக உற்பத்தி செய்வதற்கான வேக அணுஉலைகள் புளூடோனியத்தை எரிபொருளாகக் கொண்டவை. கனநீர் அணுஉலைகளுடன் இவற்றை ஒப்பிடும்போது, பயங்கரமான விபத்துகள் ஏற்படும் ஆபத்தை இவை மிகப்பெரிய அளவில் கொண்டிருக்கின்றன. மேலும் மின் உற்பத்தியும் மிக அதிக பொருள் செலவில் நடைபெறுகிறது. பெரும்பாலான நாடுகள் மேலே கூறப்பட்டவற்றில் சில அல்லது ஒட்டுமொத்த காரணங்களுக்காக அணுஉலையில் தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டன. ஆனால், இந்தியா மட்டுமே தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துவதில் முதலிடத்தில் இருக்கிறது, காரணம் இந்த ஓட்டத்தில் இந்தியா மட்டுமே ஓடுகிறது என்பதுதான்.

சமீப ஆண்டுகளாக, இந்திய ----&- அமெரிக்க அணு ஒப்பந்-தத்தால் அணுசக்தியின் எதிர்காலம் தொடர்பான கனவுகள் மேலும் பெரிதாக பேசப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் மன்மோகன் சிங் அரசின், மேற்கத்திய நாடுகள் சார்ந்த வெளியுறவுக் கொள்கைச் சாய்வுக்கான அடையாளம். ஆனால் அமெரிக்காவுக்கோ, புஷ் அரசில் முக்கிய ஆலோசகராக இருந்த ஆஷ்லே டெல்லிஸின் வார்த்தைகளில் கூறுவதானால், "இந்தியாவுடன் முழுமையான, பலன்தரக் கூடிய ஒரு ஒப்பந்தமே". மேலும் இந்த ஒப்பந்தம் இரண்டு சமமான தகுதியுடைய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட ஒன்றல்ல என்பதால், விரைவிலேயே அமெரிக்காவின் ராஜதந்திர குறிக்கோள்களுக்கு சார்பான நிலையை இந்தியா எடுத்தது. எடுத்துக்காட்டுக்கு, சர்வதேச அணு சக்தி ஏஜென்சியில் (ஐ.ஏ.இ.ஏ.)ஈரானுக்கு எதிராக இந்தியா இரண்டு முறை வாக்களித்தது. இதன் காரணமாக இந்தியாவின் முக்கிய ஆற்றல் ஆதாரமாக மாற இருந்த, ஈரான் & பாகிஸ்தான் -& இந்தியா எரிவாயுக் குழாய் திட்டம் அடியோடு கைவிடப்பட்டது.

அமெரிக்காவுடனான கூட்டுறவை வலுப்-படுத்து-வதற்காக மன்மோகன் சிங் அரசு என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறது. அணுசக்தித் துறையின் முன்னாள் தலைவரான அனில் ககோத்கர், மராத்தி நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில், பல கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பு கொண்ட அணுஉலைகளை நாம் கட்டாயம் இறக்குமதி செய்தாக வேண்டும். ஏனென்றால், வெளிநாடுகள், அந்நாட்டு நிறுவனங்களின் வர்த்தக நலன்களையும் நாம் மனதில் கொண்டாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த இறக்குமதிகளும், வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றமும், "நவீன கால ஏகாதிபத்திய அடிமைத்தன" நடைமுறையை துரிதப்படுத்தும்.

அக்கறைகளை பொருட்படுத்த வேண்டாமா?

அணுசக்தி விரிவாக்க நடவடிக்கைகளில்தான் "அந்நிய சக்தி" செயல்படுகிறது, புதிய அணு உலைகள் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடங்களில் நடத்தப்படும் போராட்டங்களுக்குப் பின்னணியில் அந்நிய சக்தி இல்லை என்பதே உண்மை. இந்த போராட்டங்களுக்குப் பின்-னணியில் வெளிநாட்டுச் சதி இருக்கிறது என்று என்.பி.சி.ஐ.எல்லின் திட்டமிட்ட வாதம், உள்ளூர் மக்களின்  உண்மையான அச்சத்தை, அக்கறைகளை புறந்தள்ளுவதாக இருக்கிறது. அவர்களது இந்த வாதம் கூடங்குளத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தத் திட்டம் தொடங்கிய காலத்தில் இருந்தே அதை எதிர்த்து வரும் கிராம மக்கள், நம்பிக்கை இழந்து தீவிர போராட்டத்தில் இறங்குவதற்கு முன் வரை புறக்கணிக்கப்பட்டார்கள் அல்லது கேலி செய்யப்பட்டார்கள். கூடங்குளம் அணுஉலைத் திட்டத்துக்குச் செலவு செய்யப்பட்ட மக்கள் வரிப்-பணம் உள்ளூர் மக்களின் விட்டுக்கொடுக்காத தன்மையால் வீணாகிறது என்பதில் உண்மையில்லை, அவர்களது அச்சத்துக்கு பதில் அளிக்க மத்திய அரசு இவ்வளவு காலம் மறுத்து வந்ததே இதற்கு முக்கிய காரணம்.

தங்கள் கவலைகளை வெளிப்படுத்துவதற்கு உள்ளூர் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. அணுஉலை விபத்துகள் மக்கள் உடல்நலனில் மிக பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஃபுகுஷிமா விபத்தால் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றி நீண்டகாலத்தில்தான் மதிப்பிட முடியும். ஆனால் அதில் பெரும்பாலும் மோசமான விளைவுகளாகவே இருக்கும்.

அணுசக்திக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், செர்னோபிலில் 57 பேர் மட்டுமே நேரடியாக இறந்திருக்கிறார்கள் என்ற அபத்தமான, தவறான கருத்தை முன்வைக்கிறார்கள். ஆனால் அந்த விபத்து காரணமாக உலக அளவில் 9,000க்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் இறந்திருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இன்னும் பலருக்கு புற்றுநோய் இருக்கலாம், ஆனால் அது குணமாகிவிடும் என்று யூகித்துக் கொள்ளப்பட்டிருக்கும். செர்னோபிலில் ஐயோடின் 131 ஐசோடோப்பு கதிரியக்கத்துக்கு உள்ளான குழந்தைகளுக்கு இப்போதும்கூட தைராய்டு புற்றுநோய் ஏற்பட்டு வருவதாக, அமெரிக்க புற்றுநோய் நிறுவனத்தின் சமீபத்திய ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருக்குமென இன்னும் சில நோய்கூறியல் வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள்.

இன்றைக்கும்கூட, செர்னோபிலைச் சுற்றியுள்ள 10,000 சதுர கிலோ மீட்டர் பகுதி கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏனென்றால், அந்தப் பகுதி சீசியம் 137 கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டதும், அந்த தனிமத்தின் கதிரியக்க அரைஆயுள்காலம் 30 ஆண்டுகள் என்பதுமே இதற்குக் காரணம். ஐரோப்பா, அமெரிக்காவைச் சேர்ந்த வளிமண்டல அறிவியலாளர்கள் ஃபுகுஷிமாவில் நடைபெற்ற பல்வேறு விபத்துகள் தொடர்பாக சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, செர்னோபிலில் வெளியிடப்பட்டதைப் போல 40 சதவிகிதம் சீசியம் 137 வெளியிடப்பட்டதாக மதிப்பிட்டிருக்கிறது. ஆனால் அப்போது பெரும்பாலான நேரம் பசிஃபிக் பெருங்கடலை நோக்கி காற்று வீசியதால், கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி செர்னோபில்லில் இருந்ததைப் போல 10 சதவிகிதம்தான் என்று அந்த ஆய்வு கூறுகிறது. ஆனால் எல்லா நேரமும் காற்று நமக்குச் சாதகமாக மட்டுமே வீசும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த மதிப்பீடுகள் இந்தியாவைப் பொருத்தவரை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனென்றால், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நிலப்பகுதியையும் கடலையும்தான் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அணுஉலை தொடர்பான வாக்குறுதிகள்

கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் போன்ற நவீன அணுஉலைகள், 100 சதவிகிதம் பாதுகாப்பானவை என்ற வாதத்தை அறிவியல்ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லா அணுஉலைகளும் வரையறைக்கு உட்பட்டவையே, மிக பயங்கரமான விபத்து நேரிடுவதற்கு மிகச் சிறிய அளவிற்காவது வாய்ப்பு இருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டு-மென்றால், வி.வி.இ.ஆர் அணு உலைகளில் கண்ட்ரோல் ராட் மெக்கானிசத்தில் ஏற்கெனவே தவறுகள் நேர்ந்துள்ளன. 2006ஆம் மார்ச் 1ஆம் தேதி, பல்கேரியாவின் கோஸ்லுடியு நான்காவது பிரிவில் மின்சாரம் தடைபட்டதன் காரணமாக, அங்குள்ள நான்கு முதன்மை சர்குலேஷன் பம்புகளில் ஒன்று செயலிழந்தது. இதனால்  கண்டோல் ராட் உள்செலுத்துதலில் பிரச்சினை ஏற்பட்டது. இது விபத்தை ஏற்படுத்துவதற்கு மிக அதிக வாய்ப்பை கொண்டுள்ளது.

இழப்பீட்டு பிரச்சினை

அணுசக்தி நிபுணராக இல்லாதவர்கூட, அணுஉலை பாதுகாப்பை மிக எளிமையாக கேள்விக்கு உட்படுத்தி விட முடியும். அணுஉலைகளில் விபத்து ஏற்படுவதற்கு 1 சதவிகிதம்கூட வாய்ப்பு இல்லை எனும்போது, ஏன் அணுசக்தி இழப்பீட்டில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு அணுஉலை நிறுவனங்கள் தலைகீழாக நிற்கின்றன? கூடங்குளம் அணுஉலையை விற்ற ஆட்டம்ஸ்டோரியெக்ஸ்போர்ட் என்ற நிறுவனம், இரு நாட்டு அரசுகளுக்கான சிறப்பு ஒப்பந்தத்தில், விபத்து நேரிட்டால் தனக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வழக்குத் தொடர முடியாது என்று ஒரு பிரிவையும் சேர்த்து இருக்கிறது. வெஸ்டிங்ஹவுஸ் போன்ற அணுஉலை நிறுவனங்கள் இந்தியாவிடம் அணுஉலைகளை விற்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இதற்குக் காரணம், இந்தியாவின் புதிய அணு இழப்பீட்டு மசோதாவில், விநியோகஸ்தர்கள் மிகக் குறைவான இழப்பீட்டையாவது தர வேண்டும் என்ற பிரிவு இருப்பதுதான். இப்படி அணுஉலை நிறுவனங்கள் தங்கள் பொருளாதார லாபத்தை 100 சதவிகிதம் பாதுகாப்பதில் கவனமாக இருக்கும்போது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய அணுஉலைகளை அனுமதிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்களை மட்டும் அரசு எப்படி கேட்க முடியும்?

(கட்டுரை ஆசிரியர்கள் இருவரும் அணு ஆயுத எதிர்ப்பு, அமைதிக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த இயற்பியலாளர்கள்)

Pin It