நமது தேசிய விலங்கு என்ற அடைமொழி கொண்ட வேங்கைப் புலிகள் நாடு முழுவதும், ஒவ்வோர் ஆண்டும் அழிந்துகொண்டே வரும் நிலையில், ஆப்பிரிக்காவில் இருந்து சிவிங்கிப் புலியை (Cheetah) இறக்குமதி செய்து நம் காடுகளில் அறிமுகப்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவில் கடைசியாக எஞ்சியிருந்த மூன்று சிவிங்கிப் புலிகள் 1948 ஆம் ஆண்டு காடுகளில் வாழ்ந்தன. மத்தியப் பிரதேசத்தின் கோரியா மன்னன் அந்த மூன்றையும் சுட்டு வீழ்த்தி வேட்டையாடி கொன்றார்.

60 ஆண்டுகள் கழித்து அவற்றை மீட்க வேண்டும் என்ற கரிசன சிந்தனை மத்திய அரசுக்கு திடீரென்று உதித்துள்ளது. இந்திய காட்டுயிர் அறக்கட்டளை (Wildlife Trust of India) வடிவமைத்துள்ள இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் முதல் கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்திய காட்டுயிர் நிறுவனம் (Wildlife Institute of India), பம்பாய் இயற்கை வரலாற்று கழகம் (Bombay Natural History Society) மற்றும் 4 மாநில அரசுகள் இணைந்து இந்த சிவிங்கிப் புலி வளர்ப்புத் திட்டத்தில் பங்கேற்கின்றன.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத் மாநிலக் காடுகளில் இந்தப் புலியை மறுபிரவேசம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆந்திரம், கர்நாடகத்திலும் இவற்றை வளர்க்கத் தகுதியான இடங்கள் இருப்பதாக முதல்கட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் சிவிங்கிப் புலி வளர்ப்பு மையத்தை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அங்கு நடந்த மாநாட்டில் இந்த மறுஅறிமுகப்படுத்தும் திட்டத்தை இந்திய காட்டுயிர் அறக்கட்டளை தலைவர் ரஞ்சித் சிங் முன் வைத்தார் “சிவிங்கிப் புலியை அறிமுகப்படுத்துவதன் மூலம், அதன் வாழ்விடமான புல்வெளிகளை மேம்படுத்தலாம், காப்பாற்ற முடியும்“ என்பது அவரது வாதம்.

“இந்திய, ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகள் இடையிலான பரிணாமப் பிரிவினை வெறும் 5,000 ஆண்டுகள்தான். இதனால் அவற்றின் உடற்கூறுகளில் பெரிய வேறுபாடு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. ஆசிய சிங்கம், ஆப்பிரிக்க சிங்கம் இடையிலான பரிணாமப் பிரிவினை 1,69,000 ஆண்டுகள். எனவே, ஒப்பீட்டளவில் சிவிங்கிகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் பெரிய பிரச்சினை இருக்காது” என்று அமெரிக்க ஆய்வாளர் (Laboratory of Genomic Diversity and National Cancer Institute Chief) ஸ்டீபன் ஜே. ஓபிரெய்ன் தெரிவித்துள்ளார்.

சிவிங்கிப் புலி நடமாடுவதற்கு ஏற்ற காடு, பழங்குடியினர் குடியிருப்புகள், இதர முக்கிய அம்சங்கள் இந்தியாவில் ஏற்றதாக உள்ளன என்று இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் யதவேந்திரதேவ் தெரிவித்துள்ளார். ஆனால் இவையெல்லாமே ஒரு தரப்பு கருத்து மட்டுமே.

1900த்தில் நம் நாட்டில் 40,000 ஆக இருந்த வேங்கைப் புலிகளின் எண்ணிக்கை தொடர் வேட்டையாடுதல், மனித அச்சுறுத்தல் காரணமாக 1970களில் 2000க்கும் கீழ் குறைந்தன. அதன் பிறகு அதைப் பாதுகாக்க “புலிகள் பாதுகாப்புச் செயல்திட்டம்“ வகுத்து, கோடிக்கணக்கில் செலவு செய்தும் இன்று வரை அவற்றின் எண்ணிக்கையை நிலையாக அதிகரிக்க முடியவில்லை.

“ஏற்கெனவே புலிகள் சந்தித்து வரும் அச்சுறுத்தலையே கட்டுப்படுத்த முடியாத நிலையில், இங்கிருந்து அழிந்து போன புலியினம் ஒன்றை மீண்டும் இறக்குமதி செய்யும்போது நிறைய சிக்கல்கள் ஏற்படும்“ என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (National Tiger Conservation Authority) உறுப்பினர் செயலர் ராஜேஷ் கோபால் எடுத்துரைத்துள்ளார். அதேபோல சிவிங்கிகளின் வாழிடம், உணவுக்காக இதர விலங்குகளுடன் ஏற்படும் மோதல், மனிதர்களுடன் ஏற்படக்கூடிய மோதல்கள் தொடர்பாக நான்கு மாநில வனத்துறை அதிகாரிகளும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இத்திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல்-வனத் துறை அமைச்சகம் அக்டோபர் முதல் வாரம் அனுமதி வழங்கியுள்ளது.

“அடுத்த நான்கு மாதங்களில் முழுமையான வரைவுத் திட்டம் தயாரிக்கப்படும். அது செயல்படுத்தப்படும் நிலையில் உலகின் பெரிய பூனை வகைகள் எட்டு வகைகளும், ஆசியாவின் அனைத்து வகை பூனை இனங்களையும் கொண்ட ஒரே நாடு என்ற பெருமையை நம் நாடு பெறும்“ என்று ரஞ்சித் சிங் பூரித்துள்ளார்.

வரலாறு

“சீட்டா” என்று சிவிங்கிப்புலிகளை அழைக்கும் ஆங்கிலப் பெயரே, சீத்தா (புள்ளியுடைய) என்ற வடமொழி சொல்லில் இருந்தே வந்தது. நம் நாட்டுக்கும் சிவிங்கிப் புலிகளுக்கும் உள்ள நெருக்கமான பிணைப்பை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். திவ்யபானு சிங் என்ற சிற்றரசர் 1920களிலேயே ஆப்பிரிக்காவில் இருந்து சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்துள்ளார். முகலாயச் சக்கரவர்த்தி அக்பர், தனது கோட்டையில் சிவிங்கிப் புலிகளை வளர்த்துள்ளார். அவர் தன் வாழ்நாளில் 9,000 சிவிங்கிப் புலிகளை வளர்த்ததாக குறிப்பு இருக்கிறது. முகலாயர்கள் வேட்டைக்கு இந்தப் புலிகளை பயன்படுத்தியதற்கு சான்றுகள் உள்ளன.

சிங்காரா எனப்படும் மான் போன்ற இரலை இன விலங்குகளே சிவிங்கிப் புலிகளுக்கு முதன்மை உணவு. சிந்து மாகாணம், குஜராத், ராஜபுதனம், பஞ்சாப், மத்திய இந்தியா, மைசூர் பகுதி வரை இந்த மான் வாழ்ந்துள்ளது. அதனால் இந்தப் பகுதிகளில் சிவிங்கிகள் வாழ்ந்திருக்கலாம்.

மைசூர் மாவட்டத்தின் அத்திக்கல் காட்டில் தனது தந்தை சிவிங்கிப் புலியை பார்த்துள்ளதாக ஆர்.சி. மோரிஸ் என்ற ஆங்கிலேயர் 1935ல் கூறியுள்ளார். எப்.டபிள்யு. ஜாக்சன் எழுதிய “கோயம்புத்தூர் மாவட்டத்தின் பாலூட்டிகள்” (1875) என்ற நூலில் மைசூரில் சிவிங்கிப்புலி இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளமலை, மசினகுடி பகுதிகளில் 200 ஆண்டுகளுக்கு முன் சிவிங்கிப்புலிகள் வாழ்ந்துள்ளன.

முரண்பாடு

ஆனால் சிவிங்கிப்புலியை இத்தனை ஆண்டுகள் கழித்து மறுஅறிமுகப்படுத்தம் திட்டம் தொடர்பாக சந்தேகங்களையும், எதிர்ப்பையும் பல்வேறு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.

“பெரிய பூனை இனங்களில் அழிந்து வரும் பட்டியலில் இடம்பெற்றுள்ள புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை (Snow Leopard) ஆகியவற்றைக் காப்பாற்றவே நாம் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். சிங்கம், குஜராத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஓரமாய் ஒட்டிக் கொண்டுள்ளது. இந்நிலையில் சிவிங்கிப் புலி எதற்கு? மறுஅறிமுகத் திட்டம் அர்த்தமற்றது” என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் முதல் கூட்டத்திலேயே இந்த அமைப்பின் உறுப்பினரும், சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சருமான மேனகா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் கோவை வந்த பல்லுயிரிய நிபுணர் மாதவ் காட்கிலும் இதே சந்தேகத்தை எழுப்பினார்.

கடந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் ஒரு லட்சம் சிவிங்கிப் புலிகள் இருந்துள்ளன. தற்போது அவற்றின் எண்ணிக்கை 10 ஆயிரமாகக் குறைந்துவிட்டது. இவற்றில் பெரும்பாலானவை தென்ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தவிர, டிஸ்கவரி, அனிமல் பிளானெட் போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகளின் கவனஈர்ப்பாக இவை உள்ளன. இதன்மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு நிறைய வருமானம் கிடைக்கிறது.

ஈரானில் 100 சிவிங்கிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஈரானில் இருந்து சிவிங்கிப்புலியை இறக்குமதி செய்ய இந்தியா கோரிக்கை விடுத்தது. அதற்கு பதிலாக குஜராத்தில் இருந்து சிங்கங்களைத் தர முடியுமா என்று அந்நாட்டு அரசு பதில் கோரிக்கை வைத்துள்ளது. அண்டை மாநிலங்களில் வளர்க்கவே குஜராத் அரசு சிங்கங்களைத் தர முன்வராத போது, ஈரானுக்கு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. (சிங்கங்களை அண்டை மாநிலத்துக்கு வழங்க மறுத்து குஜராத் அரசு முட்டாள்தனமாக பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறது. இடம்பெயர வழியின்றி ஒரே இடத்தில் ஒரு இனம் வாழ்வதால் உள்இன இனப்பெருக்கம் நிகழும். இதனால் மரபணு வளம் குறைந்து அவற்றை எளிதில் நோய்கள் தாக்கலாம். திடீர் பேரழிவு ஏற்படும் நேரங்களிலும் அவை முற்றிலும் அழிந்து போக வாய்ப்பு உண்டு).

இதனால் நமீபியாவில் இருந்து சிவிங்கிகளை இறக்குமதி செய்வதுதான் ஒரே வழி என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறைந்தபட்சம் 10 சிவிங்கிப்புலி இறக்குமதி செய்தால் மட்டுமே அவற்றை இங்கு வளர்க்க முடியும். இதற்கு நிறைய பணம் செலவாகும் என்று மற்றொரு தரப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு புலியைக் காப்பாற்றவே பல லட்சம் முதல் கோடி ரூபாய் வரை செலவு செய்யும் அரசு, சிவிங்கிப் புலிகளைக் கொண்டு வந்தால், அவற்றுக்கு எத்தனை கோடிகளை செலவு செய்ய வேண்டியிருக்கும்? அவை வேட்டையாடப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

சிவிங்கிப்புலிகளை மறுஅறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ள பகுதிகளில் உள்ள வெளிமான்களை (Black Buck) தெய்வமாகவும், இயற்கையின் அத்தியாவசிய அம்சமாகவும் பிஷ்னாய் என்ற பூர்வகுடி மக்கள் கருதி வருகின்றனர். தங்கள் தெய்வத்தை வேட்டையாடக்கூடிய பெரிய ஊனுண்ணியை அவர்கள் மனதளவில் ஏற்றுக்கொண்டு அனுமதிப்பார்களா?

அறுபது ஆண்டுகளுக்கு முன் சிவிங்கிப்புலி முற்றிலும் அற்றுப்போனதற்கான காரணங்கள் என்ன? அந்தச் சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டு விட்டனவா? என்பதையெல்லாம் விளக்காமல், புதிதாக சாதனை படைக்கிறோம் என்ற பெயரில் சோதனையில் இறங்குவது விபரீதமாகவே முடியும் என்று உயிரியலாளர்கள் அஞ்சுகின்றனர்.

“வனப் பாதுகாப்புப் படை, வன நிர்வாகம், வேட்டைக்காரர்களைத் தடுத்தல், இதர விலங்குகளின் வாழிடம், வழித்தடங்கள் பாதுகாப்பு, பழங்குடியினருக்கு மாற்று இடம் வழங்குதல் என தொடரும் பெரிய பிரச்சினைகளைத் தீர்க்காமல் புதிதாக சிவிங்கிப்புலிகளை இறக்குமதி செய்யும் திட்டத்தில் அரசு கவனம் செலுத்துவது முறையற்றது” என்று இந்தியாஒயில்ட்ஸ்.காம் இணையதளத்தின் இயக்குநர் சபயசாச்சி எச்சரித்துள்ளார்.

நதிகளை இணைக்கும் திட்டத்தில் அழிக்கப்படும் பகுதியில் வாழும் உயிரினங்கள் அருகிலுள்ள பகுதிக்கு இடம்பெயர்வதால், அப்பகுதியில் வாழும் உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்து, மோதல்; புவி வெப்பமடைதலால் இயற்கைச் சூழலில் ஏற்படும் மாற்றத்தால் நெருக்கடிக்கு உள்ளாகும் உயிரினங்கள்; உயிரி தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் மரபணு மாற்றுப் பயிர்களால் தாவரங்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து முரண்பட்ட கருத்துகள் நிலவி வரும் வேளையில் ஆப்பிரிக்காவில் இருந்து சிவிங்கிப்புலிகளை வரவழைப்பது எவ்வளவு தூரம் சரி என்பதை உறுதியாகக் கூற முடியாது.

கோவை போன்ற வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் ஒரே இடத்தில் நிரந்தரமாக நிற்கும் சந்தன மரங்களைக்கூட காப்பாற்ற முடியாத வனத்துறை, பதுங்கி வாழும் சிவிங்கிப்புலிகளை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்க முடியுமா?

மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழையும் விலங்குகளை விஷம் வைத்தும், அடித்தும், சுட்டுக் கொல்லும் மனப்பாங்கு மக்களிடம் மாறிவிட்டதா?

ஒரு புலியைக் காட்டவே ரூ. 10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் சூழலியல் சுற்றுலா வழிகாட்டிகளும் தனியார் விடுதிகளும் ஒரு சிவிங்கிப் புலியைக் காட்ட எவ்வளவு தொகை வசூலிப்பார்கள்? இப்படி கேள்விகள் முற்றுப்புள்ளி இல்லாமல் நீள்கின்றன.

Pin It