அழிக்கப்படும் அவலம்!

மருந்து, உணவு பதப்படுத்துதல் என பல்வேறு துறைகளுக்காக தேவைப்படும் மூலிகைகள் எல்லாம் நெடுங்காலமாக இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற பல்லுயிர் வளம் மிகுந்த காடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டு, மூன்று - நான்கு நிலை கடந்து பெருவணிகர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டன. வழக்கமான விவசாய அவலம் போன்றே, 4 ரூபாய் 5 ரூபாய்க்குச் சேகரிக்கப்பட்ட இந்த மூலிகைகள் இடைத் தரகர்களால், 40 ரூபாய் வரை விற்கும் கொடுமையும் தொடங்கியது. மூலிகை மகத்துவம் அறியாத தொழில் முனைவோரின் வெறித்தனமான, வேரோடு பிடுங்கி அனுப்பும் செய்கையால் பல பயிர்கள் அழிந்ததும், காடுகள் மொட்டையானதும் உண்டு.

மூலிகை அறிவியல் துறை வளரவளர(?), இப்படிச் சேகரிக்கப் படும் மூலிகைகளில் ஏராளமாய்க் கலப்படம் இருப்பதும், அது சேகரிக்கப்படும் இடத்தைப் பொருத்து அதன் மருத்துவக் கூறுகளில் அதிக வேறுபாடுகள் இருப்பதால், மூலிகை வளர்ப்பின் அவசியம் அதிகமானது. இன்று மூலிகைப் பயிரிடல் என்பது பெருவாரியாகப் பேசப்படும் விஷயம். அரசும் இதில் அக்கறை காட்டி பல சலுகை, மானியங்களை கொடுத்து, மூலிகைப் பயிரிடலை ஊக்குவிக்கிறது. பல வளர்ந்து வரும் நாடுகளில் பெருமருந்து நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படை மூலிகைப் பயிரிடலை பெரும் அளவில் செய்து வருகின்றன.

எதற்கு இந்த மூலிகைச் சந்தை?

மாற்று மருத்துவ முறை, பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயனும் அதற்கான தேடலும் உலகெங்கும் அதிகரித்து வரும் காலம் இது. தொற்றுநோயின் பிடியிலிருந்தும், பெருவாரியான உயிரிழப்பிலிருந்தும் நவீன மருத்துவம் அன்று நம்மைக் காப்பாற்றியது மறுக்க முடியாத உண்மை. 19ம் நூற்றாண்டில் பிளேக், காசம், விஷக் காய்ச்சல் என பல நோய்களில் கொள்ளைகொள்ளையாக மரணம் சம்பவித்த கொடூரம், பென்சிலின் முதலான எதிர் நுண்ணியிரிகளின் வரவால் கட்டுப் படுத்தப்பட்டது. அதன் மூலம் சராசரி மனித வாழ்நாட்களின் எண்ணிக்கையும் கணிசமாய் உயர்ந்தது.

அதே நேரத்தில், புதியபுதிய வாழ்வியல் நோய்கள் இன்று பெருகி, வயோதிகம் என்பதே ’மருந்து காண்டம்’ ஆக மாறி முதுமை கசப்பான காத்திருக்கும் காலமாகி வருகிறது. வீட்டிற்கு ஒருவர் ஆஸ்துமா, சர்க்கரை நோய், மாரடைப்பு, புற்றுநோய், மனநோய், பக்கவாதம் எனும் non communicable disease-ஆல் கண்டிப்பாகப் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நோய்களுக்கெல்லாம் நவீன மருத்துவத்தில், உடனடியாகவோ முழுமையாகவோ குணப்படுத்தக் கூடிய வேதிபொருள் மருந்துகள் அதிகம் இல்லை. இதுபோன்ற நோய்களுக்கு, பாரம்பரிய மூலிகை மருந்துகளும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப்பொருட்களும் தான் உலகெங்கும் அதிகம் தேவைப்படுகிறது.

முன்பு நவீன மருத்துவ உலகம் தன் புதிய மருந்துகளுக்கான தேடலில் drug designing என்ற உத்தியை பின்பற்றியது. ஆனால் தற்போது பெரும்பாலான புதிய நவீன மருந்துகளும் மூலிகைத் தாவர கூறுகளில் இருந்து பிரித்தெடுத்து பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். Co enzyme Q-10, Lycopene, Taxol முதலானவை அதற்கான சமீபத்திய உதாரணங்கள். இவை புகையிலை, தக்காளி, இமாலய மலையின் மரத்தின் பட்டையில் முறையே பிரித்தெடுக்கப்பட்டு இதயம், புற்று நோய்களுக்கு உயர்மருந்துகளாகப் பயன்படுத்தப் படுகின்றன.

மேற்கத்திய மருந்து ஆராய்ச்சி உலகில் கண்டறியப்படும் மூலிகை மூலக்கூறுகளுக்கு எல்லாம், அத்தாவரத்தை பயிர் செய்து தர திடீர் சந்தை இந்தியாவில் பிறக்கும். முதலில் ரகசியமாய் அதிக விலையிலும், பின் நாளடைவில் அடிமாட்டு விலையிலும் நகரும் இந்த மூலிகைச் சந்தை எல்லாம் அந்த குறிப்பிட்ட மூலக்கூறுகளுக்காக மட்டுமே. கடந்த ஓரிரு ஆண்டுகளில், சேலம் ஆத்தூர் பகுதிகளில் Gloriosa superba (கண்வலிப் பூண்டு, செங்காந்தள் மலர்), Coleus foerscolli (கோலிஸ் கிழங்கு) பயிரிடும் பழக்கம் வந்தது, இந்தச் சந்தையால்தான்.

மருந்துகள் தவிர மதிப்பு கூட்டப்பட்ட உணவுகள், உணவு கூறுகள், மருத்துவச் சத்து கூறுகள், மருந்தாகும் உணவுகள் - என இவை எல்லாவற்றுக்குமே மூலிகையின் தேவை மிக அதிகமாக உள்ளது. உணவுகளை மணமூட்ட, அலங்கரிக்க, கெட்டுப்போகாமல் பதப்படுத்த, தேவையான வடிவத்திற்கு மாற்ற என அத்தனை சித்துவிளையாட்டுகளுக்கும் மூலிகைக் கூறுகள் பயன்படுத்தப்படுகிறது. அதற்கான மாபெரும் உலக சந்தையும் நாளுக்குநாள் பெருகி வருகிறது.

பெருகும் மூலிகைப் பயிரிடலும் மாறும் அதன் மருத்துவத் தன்மைகளும்:

அன்று வேளாண்மை பல்வேறு புதிய அறிவியல் உத்திகள் புகுத்தப்பட்டு, அதன் பன்முகத்தன்மை சிதைக்கப் பட்டது போல், இப்போது மூலிகைகளுக்கும் அந்த ஆபத்து வரத் தொடங்கிவிட்டது. எப்படி?

1. தனி மூலிகை வளர்த்தல்

 வயல்களில், வரப்பு ஓரங்களில், காடுகளில், மலைகளில் மூலிகைகள் பல்வேறு தாவரங்களுடன் கூட்டமாக வளரும்போது, அந்த சூழலுக்கு ஏற்ப, அத்தாவரத்தில் ஏற்படும் மாற்றங்கள் தான் மூலிகையில் அதன் மருத்துவ குணங்களைக் கொடுக்கும். தனியாக இம்மூலிகைகளை வளர்க்கும்போது, இந்நிலை மாறுகிறது. மாறுபட்ட அருகாமைத் தாவரங்களுடன் உணவுப் பகிர்வு, சூழல் எதிர்கொள்ளல் இல்லாதபோது secondary metobolite-ன் அளவு பெருவாரியாக மாறி மூலிகையின் சுவை, மருத்துவக் குணம் மாறுகிறது. இது வெறும் அனுமானம் அல்ல. பயிரிடப்படும் அமுக்கிராங் கிழங்கு, நெல்லிக்கனியை காடுகளில் சேமித்தவற்றுடன் ஒப்பிட்டு, ரிTLC செய்து பார்த்தபோது, இரண்டதன் படமும் வேறுவேறாகத் தெரிந்தன. இந்த உண்மை, அதன் மருத்துவ குணத்தைப் பெருவாரியாக மாற்றும்; இன்று அதிகமாகப் பேசப்படும் மூலிகைக் கூறுகளின் ஒருமித்த பன்முக ஆற்றல் முற்றிலும் மாறிவிடும் என்பதில் துளிகூட ஐயமில்லை. தொடர்ந்து இந்த மூலிகைப் பயிரிடல் நடைபெற்றால், ஐந்தாறு தலைமுறை தாவரங்களுடன் மூலிகையின் மருத்துவ குணம் எண்ணிப் பார்க்கமுடியாத அளவு மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. அரசோ, அறிவியல் நிறுவனங்களோ எந்த ஒரு அடிப்படை ஆய்வும் நடத்தாமல், பயிரிடலை மட்டும் ஊக்குவிப்பது எப்படிச் சரியாகும்?

2. புகுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள்

மருத்துவத் தாவரங்களின் சாகுபடியைப் பெருக்க, கிழங்குகளின் எடையைக் கூட்ட, பழங்களின் அளவைப் பெருக்க, வண்ணத்தைக் கூட்ட, அதன் மருத்தவத்தன்மை தரும் வேதிக் கூறுகளைக் கூட்ட, பூச்சிகளைக் கொல்ல என பல்வேறு காரணங்களுக்காக உரங்களையும், இயக்குநீர்களையும் (ஹார்மோன்), பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அதிகம் பயன்படுத்தும் நிலைமை பெருகி வருகிறது. இதன் தாக்கம் குறித்து அடிப்படை ஆய்வுகள் ஏதும் முறையாக நடைபெறவில்லை. இயற்கை வேளாண் உத்திகளைப் பயன்படுத்தினால் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஒரு சில சிறு அமைப்புகள் மட்டுமே கூறி வருகின்றன. ஆனால் பெருவாரியாக புதிய உத்திகளை புகுத்துவதுதான் ஒப்பந்த அடிப்படை மூலிகைச் சாகுபடியிலும், ஊடுபயிர் மூலிகைச் சாகுபடியிலும் நடைபெறுகிறது.

3. மரபணு மாற்றப்படும் மூலிகை ஆய்வுகள் - உயிரியல் பயங்கரவாதம்

இது எல்லாவற்றுக்கும் மேலாக அமுக்கரா, ஜீவந்தி, நீர்ப்பிரமி, சிக்கரி, கத்தரிக்காய் என ஐந்து மூலிகைகளில் மரபணுக்களை மாற்றி அதிக மருத்துவ குணங்களைச் சுரக்க வைக்கும் ஆபத்தான ஆய்வை இந்திய அரசின் தொழில்நுட்பக் கழக உதவியுடன் செய்து வருகின்றன இந்திய வேளாண், உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள். அதிகம் தாய்ப்பால் வேண்டும் என பெற்ற மகளுக்கு மூன்றாவது மார்பகத்தை உருவாக்கும் உயிரியல் பயங்கரவாதம் போன்ற செய்கை இது. மூலிகைத் தாவரங்களை அதன் பன்முகத் தன்மையையும், பாரம்பரிய தத்துவங்களையும் சிறிதும் புரிந்துகொள்ளாமல், மூலிகைகளை வெறும் வேதியல் தொழிற்கூடங்களாகப் பார்க்கும் அரைவேக்காட்டு அறிவியலாளர்களின் கையில் இந்தியா இருப்பதுதான் மிகப் பெரிய அவலம்.

இன்னும் நமக்கு மிச்சமிருக்கும் ஒன்றிரண்டு இயற்கை வளங்களில் ஒன்று மூலிகை வளம். அதையும் சுரண்ட தொழில்நுட்பம், சுகாதாரம் ஆகிய முகமூடிகளை அணிந்து பெரும்வணிக நிறுவனங்கள் அரசு உதவியுடன் வரத் தொடங்கிவிட்டன. கேமரூன் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற உலக பாரம்பரிய மாநாட்டில் ஒரு ஆப்பிரிக்க பாரம்பரிய மருத்துவர், பாரம்பரிய உடை அணிந்துவந்து மேடையில் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. ”இவர்கள் MOLECULE HUNTERS, தொழில்நுட்பம் ஆகிய பெயரில் மீண்டும் நம்மைச் சுரண்ட வரும் வெள்ளையர்களிடம் இருந்து என் நாட்டையும் அதன் மருத்துவ பாரம்பரியத்தையும் காப்பாற்றியே ஆக வேண்டும். அதுதான் என் பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாக்கவும் வளர்க்கவும் ஒரே வழி” என முழங்கிச் சென்றார். நமக்கும் தேவையான அடிப்படைச் சிந்தனை அது.

Pin It