தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளரும் பேராசிரியருமான பொ. ராஜமாணிக்கம், தான் வேலை பார்க்கும் கல்லூரியில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், மீறி அவை வெட்டப்பட்டதை ஆவணப்படுத்த முனைந்தபோது கல்லூரி நிர்வாகத்தின் கையாட்களால் தாக்கப்பட்டுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் செயல்பட்டு வரும் பேராசிரியர், அகில இந்திய மக்கள் அறிவியல் அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார். அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் பேராசிரியர், "விஞ்ஞானச் சிறகு" இதழின் ஆசிரியரும்கூட. பல்லுயிரியம், புவி வெப்பமடைதல் தொடர்பாக தமிழகம் முழுவதும் பள்ளி - கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடையே உரைநிகழ்த்துதல், வானொலி நிகழ்ச்சிகள், சுற்றுப்பயணங்கள் செய்துள்ளார்.

மதுரை பெருங்குடியில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக அவர் பணிபுரிந்து வருகிறார். நீண்டகாலமாக பேராசிரியர் அமைப்பான மூட்டா உள்ளிட்டவற்றில் பங்கேற்று வருபவர். அந்தக் கல்லூரியில் பல்வேறு பழமையான மரங்கள் உள்ளன. பழந்தின்னி வெளவால்கள், பல்வேறு பறவைகளுக்கு புகலிடமாக இந்த மரங்கள் திகழுகின்றன. இந்தியாவில் வாழும் பழந்தின்னி வெளவால்களில் இந்திய பறக்கும் நரி என்றழைக்கப்படும் மிகப் பெரிய பழந்தின்னி வெளவால்கள் இந்தக் கல்லூரியில் 5,000க்கும் மேல் வாழ்ந்து வருகின்றன. ஆலமரம், புளியமரம், அசோக மரம் ஆகியவற்றில் வாழ்ந்துள்ளன. இந்த மரங்களின் விலை மதிப்பு ரூ. 30 லட்சம் எனப்படுகிறது. இந்த மரங்களையும் கல்லூரியில் உள்ள பல்லுயிரினங்களையும் பாதுகாக்க வேண்டுமென்று பேராசிரியர் ராஜமாணிக்கம் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வருகிறார். இது தொடர்பாகவும், மரங்களை வெட்டுவதற்கு எதிராகவும் வனத்துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த மாதத்தில் திடீரென ஒரு நாள் கல்லூரி நிர்வாகத்தின் துணையுடன் ஒரு கூட்டம் கல்லூரியின் பழைமையான மரத்தை வெட்டிக் கொண்டிருந்தது. பேராசிரியரின் எதிர்ப்பை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து மரம் வெட்டப்படுவதை பேராசிரியர் ஒளிப்படம் எடுக்க ஆரம்பித்தார். அப்பொழுது மரம் வெட்டிக் கொண்டிருந்த கும்பல் அவரைத் தாக்கியது.

ஏற்கனவே இந்தக் கல்லூரியின் தன்னாட்சி அந்தஸ்தை பல்கலைக்கழக மானியக் குழு திரும்பப் பெற்றது. கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத் தடையாணை வாங்கியிருப்பதால் இது தற்காலிகமாக தடைபட்டுள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் சர்வாதிகார போக்குக்கு எதிராக மாணவர்களும், பேராசிரியர்களும் தன்னாட்சி அந்தஸ்தை திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் நிதி பிரச்சினைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் சமூக செயல்பாட்டாளரும் பேராசிரியருமான ராஜமாணிக்கத்தின் மீது கல்லூரி நிர்வாக கையாட்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மதுரையில் உள்ள சூழலியலாளர்களும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அவருக்கு ஆதரவாக மாணவர்களும் கல்லூரி பேராசிரியர்களும் மரம் வெட்டியவர்களையும் ஒப்பந்ததாரர்களையும் விரட்டியடித்துள்ளனர். மதுரை விமான நிலைய சாலையில் மறியல் நடத்தியுள்ளனர். இனிமேல் மரம் வெட்டப்படாது என்று காவல்துறையினர் முன்னிலையில் கல்லூரி முதல்வர் அப்போது உறுதியளித்துள்ளார்.

ஆனால் ஏற்கெனவே ரூ. 10 லட்சம் மதிப் புள்ள 25 மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு வெளவால் களால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்க அந்த மரங்கள் வெட்டப்பட்டதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ள கருத்து விநோதமாக உள்ளது. இவற்றை விற்க வனத்துறையிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். ஆனால் அதுவும் பெறப்படவில்லை. இந்தச் சம்பவத்தை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழக்குத் தொடர்ந்தது. மேற்கொண்டு மரங்களை வெட்ட உயர் நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

நன்றி : தெகல்கா