தமிழகத்தின் இரண்டாவது மிகப் பெரியதுறை முகம் தூத்துக்குடி. ஆனால் அதே நேரம் கடலூர், ராணிப் பேட்டைக்கு அடுத்த படியாக மாசுபடுத்தும் தொழிற்சாலைகளும் சுற்றுச் சூழலுக்கு எதிரான பல திட்டங்களும் மிக அதிக எண்ணிக்கையில், தூத்துக்குடியிலும் தென் மாவட்டங்களிலும் நடைமுறைப் படுத்துவது தொடர்ச்சியாகி விட்டது. இவற்றில் சில திட்டங்கள் மட்டும் தடைப்பட்டுள்ளன.

கனிமங்கள்தான் இனிமேல் உலகை ஆளப் போகின்றன என்பதை உணர்ந்து கொண்ட முதலாளி வர்க்கம், தொடர்ச்சியாக கனிம வளங்களின் மீது கவனத்தை திருப்ப ஆரம்பித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக தென்மாவட்ட தேரிக்காடுகளில் உள்ள டைட்டானியம் மீது கண் பதித்தது இந்தியாவின் பாரம்பரிய ஏகபோக நிறுவனமான டாடா. இந்தத் திட்டத்துக்காக ரூ. 2,500 கோடி முதலீடு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதற்காக டைட்டானியம் டைஆக்சைடு அதிகமாக உள்ள சாத்தான்குளம், குட்டம் பகுதியில் 12,000 ஏக்கர் நிலத்தை குறைந்த தொகைக்கு கையகப்படுத்த அந்த நிறுவனம் முயற்சித்தது. ஆனால் உள்ளூர் மக்கள், சில அரசியல்கட்சிகளின் எதிர்ப்பால் இந்தத் திட்டம் முடங்கியது.

டாடாவின் இந்தத் திட்டத்துக்கு எதிராக அரிய மணல் எடுத்து வரும் உள்ளூர் பெருமுதலாளி ஒருவர் செயல்பட்டார் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. அவர் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அரிய மணல் எடுக்கும் தொழிலில் முழுவீச்சில் இறங்கியதாக சூழலியலாளர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அவருக்கு எதிராக சமீபத்திய இரண்டு ஆட்சிகளும் சட்டப்படி முறையான நடவடிக்கை எதுவும் எடுத்ததாக பதிவுகள் இல்லை. "கப்பம் கட்டுமாறு மிரட்டல்களே அதிகமும் விடுக்கப்பட்டன" என்பது காற்று வாக்கில் வந்த செய்தி.

தூத்துக்குடி அருகே 60 கி.மீ தொலைவில் உள்ள நாங்குநேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க முரசொலி மாறன் 2001ல் திட்டமிட்டார். நல்ல வேளையாக அது தொடங்கப்படவில்லை. ஆனால் இப்பொழுது அதை தூசிதட்டப் போவதாக அரசு அறிவித்துள்ளது. தூத்துக்குடி நகரைச் சுற்றி தொழிற்சாலைகள் பெருகியிருப்பதற்கு இங்குள்ள துறைமுகமும் மற்றொரு காரணம். இந்தத் துறை முகம் 2009 - 2010ஆம் ஆண்டில் 2.37 கோடி டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.

தூத்துக்குடியை மாசுபடுத்தியதில் பெரும் பங்கு வகித்த ஸ்பிக் உர ஆலை கடந்த மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் உரங்கள் தமிழக நவீன வேதி விவசாயத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது நினைவிருக்கலாம். ஸ்பிக்கிடம் இருந்து மூலப்பொருளைப் பெற்று வந்த அதன் துணை நிறுவனமான தூத்துக்குடி ஆல்கலீஸ் நிறுவனமும் மூடப்பட்டுள்ளது. ஆல்கலீஸ் நிறுவனத்தின் நஷ்டம் ரூ. 92 கோடியாம். கடுமையான நஷ்டத்தால் தற்போது கடன்சுமையில் சிக்கி இருக்கிறது ஸ்பிக். இதிலிருந்து மீள்வதற்காக அரசிடம் உதவி கேட்டு நிற்கிறது அந்நிறுவனம். விவசாயி தலையில் ஆண்டாண்டுகளாய் மிளகாய் அரைத்து வந்த இந்நிறுவனம், தற்போது அரசின் வரிப்பணத்தை கொடுத்து உதவுமாறு வேண்டுகிறது.

ஸ்பிக்கில் இருந்து கிடைக்கும் மற்றொரு மூலப்பொருளை கொண்டு இயங்கி வந்த அணு சக்தி துறையின் கனநீர் நிலையமும் தற்போது செயல்பட வில்லை. இவை மூடப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் சுவாசிக்க சற்று இடைவெளி கிடைத்திருப்பதாக தூத்துக்குடி வாழ் மக்களும் சூழலியலாளர்களும் தெரிவிக்கின்றனர்.

Pin It