சாதாரணமாக, ஒரு குழந்தை ஒரு வயது ஆகும்போது தானாகவே நிமிர்ந்து நடக்க ஆரம்பித்துவிடுகிறது. "பூவுலகு" இதழ் தொடங்கி இந்த இதழுடன் ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் நாளை ஒட்டி பூவுலகு முதல் இதழ் வெளியானது. இந்த ஓராண்டில் நிகழ்ந்த சுற்றுச்சூழல் சீர்கேடுகள், சூழலியல் விழிப்புணர்வு செய்திகள், சூழல் பாதுகாவலர்கள் அறிமுகம், செயல்பாட்டாளர்களின் பேட்டிகள், சூழலை காக்க நாம் என்ன செய்யலாம் என்பது உட்பட பல தகவல்களைத் தாங்கி இதழ்கள் வந்துள்ளன. இந்தக் காலத்தில் நடந்த சுற்றுச்சூழல் பிரச்னைகளைப் பற்றிய கருத்துகளை எழுத்து மூலம் பரப்பியதுடன், இயன்ற நேரங்களில் களப் பணிகளிலும் "பூவுலகின் நண்பர்கள்" ஈடுபட்டு வந்துள்ளோம்.

சூழலியல் அக்கறைகளை பரவலாக்குவதே "பூவுலகு" இதழின் அடிப்படை நோக்கம். கடந்த ஓராண்டில் எங்களது முயற்சியில் சில தப்படிகளையாவது எடுத்து வைத்திருக்கிறோம் என்றால், அதற்கு முதற் காரணம் வாசகர்களாகிய நீங்கள்தான்.  இந்தக் காலத்தில் சூழல் சீரழிவை ஒரு சிறிதளவாவது தடுத்து நிறுத்தவோ, சீர்திருத்தவோ முடிந்திருப்பது நமது கூட்டு முயற்சிகளால்தான் சாத்தியமாகியுள்ளது.

"பூவுலகு" ஒரு வணிகப் பத்திரிகை அல்ல. சிறிய குழு ஒன்றின் முயற்சியால், உங்களைப் போன்ற ஆர்வலர்களை நம்பி நடத்தப்படும் இதழ். எனவே, இதுபோன்ற முயற்சிகளுக்கே உரிய தடுமாற்றங்களுடன்தான் உங்களைச் சந்திக்கிறோம். அதேநேரம், தாமதமானாலும், சில குழப்பங்கள் நேர்ந்தாலும் நம் அனைவரது நோக்கம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுதான். நமக்காக மட்டுமின்றி, நமது வருங்கால சந்ததிகளுக்காகவும் மனித குல நன்மைக்காகவும் சிந்திக்கும் நம் ஒவ்வொருவருக்கும், நமது அறிவுத் தளத்தையும், கருத்துத் தெளிவையும் விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் "பூவுலகு" போன்ற முயற்சிகளில் நாம் ஒன்று சேர்கிறோம். எங்கள் முயற்சியில் நேரடியாக முகம் பார்க்காத உங்களைப் போன்ற வாசகர்கள் தொலைபேசி, கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் கொடுக்கும் உற்சாகம் எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. வரும் ஆண்டுகளில் "பூவுலகு" இதழ் சார்ந்த பிரச்சினைகளை கூடுமான வரை களைவோம்.

இதற்கிடையே கடந்த ஆண்டின் "சிறந்த சிற்றிதழுக்கான சுஜாதா விருது" பூவுலகுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலக்கியச் சிற்றிதழ்களுக்கே இது போன்ற விருதுகள் தரப்படுவது வழக்கம். இந்நிலையில், நிறுவப்பட்ட முதல் ஆண்டே "பூவுலகு" போன்ற ஒரு சுற்றுச்சூழல் இதழுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நமது சமூகத்தில் முக்கியத்துவம் பெறும் விஷயங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இது உணர்த்துகிறது. "பூவுலகு" ஓராண்டை வெற்றிகரமாகக் கடந்ததற்கும், இந்த விருது கிடைத்ததற்கும் உங்களைப் போன்ற வாசகர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் "பூவுலகு" இதழுக்காக தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவழிக்கும் நண்பர்கள், அக்கறை வாய்ந்த தோழர்கள்தான் காரணம். உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி. இது நீண்ட பயணம், கூட்டாகப் பயணிக்கும்போது தூரம் பெரிதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

 - ஆசிரியர் குழு

Pin It