தமிழகத்தின் பல பகுதிகளில் இரவு நேரக் காவலாளிகளாகவும், தொழிற்சாலை காவலாளிகளாகவும் உள்ள கூர்க்கா நேபாளிகள், பிழைப்பு தேடி தங்கள் நாட்டைவிட்டு இங்கு வருகிறார்கள். அப்படிப்பட்ட காவலாளியாக தமிழகம் வந்த ராணா, அவர்களில் இருந்து மாறுபட்டு தனித்து நிற்கிறார்.

சென்னையின் வளர்ச்சிக்கு காவு கொடுக்கப்பட்ட வடசென்னைப் பகுதி வறண்ட பகுதியாகவும் கருதப்படுகிறது. இப்பகுதியில் உள்ள தங்கச் சாலை (மின்ட்) தொடங்கி, கும்மிடிப்பூண்டி வரை நீளும் சாலையில் செல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், ஆச்சரியப்படுத்தும் ஒரு மனிதரைப் பார்க்கலாம். விதைகள், கத்தி, கம்பு இவற்றைக் கொண்ட ஒரு பை தோளில் தொங்க, பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீருடன் நடந்து சென்று கொண்டிருப்பார் அவர். ஒரு காலத்தில் காவலாளியாக பொருளீட்டிக் கொண்டிருந்த அந்த முதிர்ந்த மனிதர், எதிர்காலத் தலைமுறைக்கு காவலாக இருக்கப் போகின்ற மரக்கன்றுகளை மிகுந்த அக்கறையுடன் நட்டுக் கொண்டிருப்பார். இப்படியாக அந்தச் சாலைப் பகுதியில் ஏறத்தாழ 10,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இவர் நட்டு பராமரித்துள்ளார்.

தோல் தொளதொளவென்றாகி முதுமை வெளிப்படையாகத் தெரிந்தாலும், அக்கறை மிகுந்த தந்தை குழந்தைகளை வளர்ப்பது போல் மரக்கன்றுகளை வளர்த்துக் கொண்டிருக்கும் ராணாவே ஒரு முதிர்ந்த மரத்தைப் போலத்தான் இருக்கிறார்.

சென்னை எண்ணூரை அடுத்த அத்திப்பட்டு (நிஜ "அத்திப்பட்டு"ங்க இது) புதுநகர் கிராமத்தில் சிறு வீட்டில் மனைவி, மகன்களுடன் வசித்து வருகிறார் ராணா என்றழைக்கப்படும் தேக் பகதுர் ராணா. வறுமை காரணமாக 1962ஆம் ஆண்டு பிழைப்பு தேடி சென்னை வந்த இவருக்கு எண்ணூர் அனல் மின் நிலையத்தில் காவலாளி பணி கிடைத்தது.

காவலாளர் பணி அது பாட்டுக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பணிபுரிந்த சக தொழிலாளிகள் வெயிலுக்கு ஒதுங்க நிழல்கூட இல்லாமல் அவதியுற்றதை, பல நாட்கள் இவர் நேரில் கண்டுள்ளார். இது அவரது மனதை பாதித்துள்ளது. உடனடியாக அப்பகுதியில் இரண்டு மரக்கன்றுகளை வைத்து பராமரித்தார். அந்த மரங்கள் நிழல் தரத் தொடங்க, தொழிலாளர்கள், நண்பர்கள் அனைவரும் கூறிய நல்வார்த்தைகள் அவருக்கு ஊக்கமளித்தன.

அன்றிலிருந்து தனது தனி நபர் மரம் வளர்ப்பு இயக்கத்தைத் தொடங்கினார். இன்றைக்கு 75 வயதைக் கடந்த பிறகும் மரக்கன்று நடும் பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவரது இந்தப் பணி அரை நூற்றாண்டை எட்டப்போகிறது.

"நிழல் தருவது மரம்" என்ற புரிதலை தாரக மந்திரமாக பிடித்துக் கொண்ட அவரது மனம், அந்த மரங்களை பரவலாக நடுவதன் மூலம் தன் மனிதநேயத்தை மீண்டும் மீண்டும் வேர்கொள்ளச் செய்து கொண்டிருக்கிறது. சூழலைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு எதுவும் குறுக்கிடாமல், "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று இவர் செயலாற்றிக் கொண்டிருப்பதுதான் இவரது தனித்தன்மை.

மனைவி, 4 மகன்கள், 1 மகள் என பெரிய குடும்பத் தேரை கட்டி இழுக்க முடியாமல் வறுமை வாட்டிய போதும், மரம் நடுவதை மட்டும் தன் கடமை போலக் கருதிச் செயல்பட்டுள்ளார் ராணா. விதைகள் வாங்குவதற்கோ, செடி நடுவது உள்ளிட்ட இதர செலவுகளுக்கோ இவர் அடுத்தவர் கையை எதிர்பார்த்ததில்லை. யாராவது முன்வந்து தந்தால்கூட, உதறிவிடுகிறார். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த செலவிலேயே இந்த மரங்களைப் பராமரித்துள்ளார்.

மகன்கள் வேலைக்குச் சென்று குடும்பத்தை பராமரிக்க ஆரம்பித்த பிறகு, தன் முழு நேர வேலையாக மரக்கன்று நடுவதை மேற்கொள்ள ஆரம்பித்தார். மரக்கன்று நடுவதுடன் இவரது பணி அடுத்த இடத்துக்கு நகர்ந்துவிடுவதில்லை. தொடர்ந்து சில வாரங்கள் தண்ணீர் ஊற்றி அவை தழைக்க ஆரம்பித்த பிறகுதான், அடுத்த பகுதிக்குச் செல்வார். இதை வழக்கமாகவே கொண்டுள்ளார்.

"ஆரம்ப காலத்தில் செடிகளை பிடுங்கி எறிந்தும், கிளைகளை வெட்டி எறிந்தும் கேலி பேசியவர்கள் இப்பகுதியில் உண்டு. ஆனால் எனது தொடர்ச்சியான முயற்சியைப் பார்த்து மலைத்துப் போன அவர்கள், என்னை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், நிறைய உதவி செய்யவும் தொடங்கினார்கள்" என்று உறுத்தல்கள் ஏதுமின்றி ராணா பழசை அசைபோடுகிறார். இப்படியே எந்த சந்தடியும் இல்லாமல் 10,000க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்துள்ளார்.

காலங்காலமாக இவர் ஊட்டி வளர்த்த மரங்களை, எண்ணூர் துறைமுகத்துக்கான சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வெட்டிச் சாய்க்க அதிகாரிகள் வந்தபோது, அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன்னையே ஒப்படைத்து உருவாக்கிய இந்த மரங்களை, "வளர்ச்சி" என்ற பெயரில் வெட்டி வீழ்த்த யாருடைய மனம்தான் சம்மதிக்கும்? ராஜஸ்தானின் பிஷ்னோய் பழங்குடிகள், சிப்கோ மலையகப் பெண்கள், கர்நாடக அப்பிக்கோ இயக்கத்தினரைப் போல மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் படுத்து போராடினார். இவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற பிறகுதான் அதிகாரிகள் மரங்களை வெட்டினர். தாங்கள் சம்பளத்துக்குச் செய்ய வேண்டிய மரம் வளர்ப்புப் பணியை இவர் சுயமாகச் செய்து கொண்டிருக்கிறார் என்பது அந்த கடமை உணர்வு மிகுந்த அதிகாரிகளுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது? இந்தச் சோகம் ராணாவின் மனதில் ஆறாத வடுவாக இருக்கிறது.

அசோக் லேலாண்ட் நிறுவனம், சில இளைஞர் அமைப்புகள், நகர்வாழ்வு அமைப்புகள், பகுதி மக்கள் நிதி திரட்டி அத்திப்பட்டு பகுதியில் பசுமை இல்லம் என்ற பெயரில் இவருக்கு ஒரு வீட்டை கட்டித் தந்துள்ளதன் மூலம் மனநிறைவு அடைந்துள்ளனர்.

காலை முதல் மாலை வரை மரக்கன்று நடுவது, பராமரிப்பதிலேயே இவரது வாழ்க்கை கழிகிறது. வயது இவரைத் தடைப்படுத்தவில்லை. கடைசி மூச்சு வரை மரம் நடுவதுதான் எனக்கு விருப்பமான பணி என்று உறுதியாகக் கூறுகிறார் இந்த மரங்களின் காவலாளி. ஏட்டறிவு இல்லாத இந்த பாட்டாளி, வறுமையிலும் மேற்கொள்ளும் இந்தப் பணிக்கு எதிர்கால சந்ததி நன்றி சொல்லும்.

Pin It