இந்தியா போன்ற நாடுகளில் அதி நவீனத் தொடர்பு, மின்னணு கருவிகளை பெரும்பான்மையானோர் மிக ஆர்வமாக வரவேற்கின்றனர். குறிப்பாக அதிநவீன அலைபேசிகள், அதிநவீனக் கணிணிகள், அதிநவீன குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற பொருட்களை வரவேற்று பயன்படுத்தும் அதே நேரத்தில், பழைய பொருட்களான மின்னணு கழிவுகளை அப்புறப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் புதிதாக ஒரு அலைபேசியையோ (அ) கணிணியையோ வாங்கினால், தன்னிடம் உள்ள பழைய பொருளை வெறுமனே எங்காவது வைத்து விடுகிறார்கள். அது நமது பார்வைக்கு தட்டுபடாமல் போனாலும்கூட, இதுவும் சூழியலை பாதிக்கும் காரணியாகும்.

பிப்ரவரி 24லிருந்து 26 வரை இந்தோனேசியாவிலுள்ள பாலியில் நடைபெற்ற ஐ.நா.வின் சூழியல் திட்டக்குழு கூட்டம் இந்த ஆண்டுக்கான மின்னணுக்  கழிவுகள் தொடர்பான அறிக்கையை "மின்னணுகழிவுகளின் மறு சுழற்சியும், வாழ்வா தாரமும்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. மின்னணு தொழிலகங்களில் இருந்தோ, வீடுகளில் இருந்தோ வெளியேற்றப்படும் பயன்படாத மின்னணு பொருட்கள், 'மின்னணு  கழிவுகள்' எனப்படுகின்றன. தொழில் புரட்சி நடைபெற்றதற்கு பின், இதுபோன்ற பொருட்கள் இல்லாமல் நவீன கால வாழ்க்கை நிறைவு பெறுவதில்லை. மருத்துவம், கல்வி, உணவு பொருட்களை பாதுகாத்தல் மற்றும் வழங்குதல், தொலைத் தொடர்பு துறை, பாதுகாப்பு, சூழியல் பாதுகாப்பு மற்றும் பண்பாடு என பல இடங்களில் மின்னணு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டி, குளிர்பதனப் பெட்டி, சலவை இயந்திரம், அலைபேசி, கணிணி, மின்னணு அச்சு இயந்திரங்கள், பொம்மை, தொலைகாட்சிப் பெட்டி உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

பதினொன்று வளரும் நாடுகளில் கிடைத்த தரவுகளை வைத்து நிகழ்கால மற்றும் எதிர்கால மின்னணு கழிவை இந்த அறிக்கை கணித்துள்ளது. பயன்படுத்தப் படாத பழைய கணிணிகள், மடிக் கணிணிகள், அலைபேசி, கணிணி, மின்னணு அச்சு இயந்திரங்கள், பொம்மை, தொலைக்காட்சி, அதிநவீன ஒளிவாங்கி, இசைக் கருவிகள் இதில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்த பொருட்களின் விற்பனை பெரிதும் அதிரித்து வருவதால், அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த மின்னணு கழிவுகளின் அளவும் பல மடங்கு அதிகரிக்கும்.

வளரும் நாடுகளில்  இந்த ஆய்வு நடத்தப்பட்டதற்குக் காரணம், வளர்ந்த நாடுகளில் மின்னணு கழிவுகள் வெளியேற்றுதல், மறுசுழற்சி செய்தல் தொடர்பாக பல விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. வளரும் மற்றும் சந்தை அளவு விரிவடைந்து வரும் நாடுகளில் இந்த பொருட்களுக்கான சந்தை பெருகி வருவதும் மற்றொரு காரணமாகும். ஐ.நா.வின் சூழியல் திட்டக்குழு வளரும் நாடுகளில் மின்னணு கழிவுகள் வெளியேற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்தலுக்கான விதிமுறைகள் உண்டா என்றும், அந்த நாட்டு அரசுகள் சிறப்பு துறைகள் அமைத்து மறுசுழற்சியில் புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்கின்றனவா என்பதையும் இந்த ஆய்வில் கண்டறிய முயற்சித்தது. 2006ல் இந்தியா 500 கோடி கணிணிகளை கொண்டிருந்தது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 25 விழுக்காடு அதிகரிக்கிறது. 2020ல் பழைய கணிணிகள் மூலம் தோன்றும் மின்னணு கழிவுகள் 2007ல் இருந்ததைவிட 500 விழுக்காடு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2020ல் அலைபேசிகள் மூலம் தோன்றும் மின்னணு கழிவுகள் 2007ல் இருந்ததைவிட 18 மடங்கு அதிகரிக்கும், தொலைக்காட்சி கழிவு 1.5லிருந்து 2 மடங்கு வரையும், குளிர்சாதன பெட்டி கழிவுகள் இரண்டு (அ) மூன்று மடங்கும் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் சூழியல் திட்டக்குழுவின் நிர்வாக இயக்குனர் மற்றும் ஐ.நா.வின் தலைமைச் செயலக நிர்வாகக் குழுவில் ஒருவருமான அச்சீம் ச்டீனர்  இந்த அறிக்கை வெளியீட்டின்போது  கூறியது "சீனா மட்டுமல்ல, இந்தியா, பிரேசில், மெக்சிகோ, இன்னும் பல நாடுகள் இந்த மின்னணு கழிவு சவாலை சந்திக்கின்றன. மின்னணு கழிவுகள் மூலம் ஏற்படும் சூழியல் விளைவுகள், உடல்நல பிரச்சனைகள், மின்னணு கழிவுகளை மறு சுழற்சிக்கு உட்படுத்தும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளை குறைப் பதற்கு ஒரு வழியாக, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலமாக மறுசுழற்சி செய்ய வேண்டும். இதன்மூலம் மின்னணு கழிவுகளின் மறுசுழற்சி விகிதாச்சாரத்தை அதிகரித்து நல்ல வேலைவாய்ப்பையும், பசுமையில்ல வாயு உமிழ் அளவை குறைக்கவும், அரிய தனிமங்களான தங்கம், வெள்ளி, பல்லேடியம், தாமிரம், இந்தியம் போன்ற பொருட்களை திரும்பப் பெறவும் முடியும். அதற்காக இந்த நாடுகள் மின்னணு கழிவு சவாலை மின்னணு சந்தர்ப்பமாக மாற்ற நல்ல திட்டமிடுதலும், உடனே அதை செயல்படுத்தலும் மிக அவசியம்" என்றார்.

ஒவ்வோர் ஆண்டும்  உலகளவில் மின்னணு கழிவின் அளவு 400 லட்சம் கல்லெடைகள் (கல்லெடை = 1000 கிலோ) அதிகரிக்கின்றது. அலைபேசி, கணிணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உலகளவில் சுரங்கங்களிருந்து எடுக்கப்படும் தங்கம், வெள்ளியில் மூன்று விழுக்காடை உபயோகப் படுத்துகின்றன. இதில் 13 விழுக்காடு பல்லேடியம், 15 விழுக்காடு கோபால்ட்டும் அடங்கும். நவீன மின்னணு பொருட்கள் கிட்டதட்ட 60 வகை தனிமங்களை கொண்டுள்ளன. இதில் பல அரிதானவை. சில ஆபத்தானவை மற்றும் சில இரண்டு குணநலன்களையும் கொண்டவை.

மின் மற்றும் மின்னணு பொருட்களில் பயன்படுத்தப்படும் தாமிரம், பல அரிய தனிமங்களை எடுப்பதற்காக நடைபெறும் சுரங்க வேலைகளில் மட்டும் 230 இலட்சம் கல்லெடை கார்பன் உமிழப்படுகிறது. இது உலக மொத்த கார்பன் உமிழ்வில் 0.1 விழுக்காடு அளவாகும். (இதில் இரும்பு, அலுமினியம் (அ) நிக்கல் போன்ற பொருட்களின் உற்பத்தி மூலம் வெளியிடப்படும் கார்பன் உமிழ்வின் அளவு சேர்க்கப்படவில்லை)

அமெரிக்க நாடே இந்த மின்னணு கழிவில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அங்கு 2008ல் மட்டும் 15 கோடி அலைபேசிகள் விற்கப்பட்டுள்ளன. அங்கு இரண்டில் ஒருவர் புதிய அலைபேசி வாங்கியுள்ளதாக இதை எண்ணலாம். இது 2003ல் 9 கோடி என்ற அளவில் இருந்தது. உலகளவில் 2007ல் 100 கோடி அலைபேசிகள் விற்றுள்ளன. ஆறில் ஒருவர் புதிய அலைபேசி வாங்கியுள்ளதாக இதை எண்ணலாம். இந்த அளவு 2006ல் 90 கோடி என்ற அளவிலிருந்தது.

புதிய தொழில்நுட்பங்கள்: 

  ஐ.நா.வின் தலைமைச் செயலக நிர்வாகக் குழுவில் ஒருவரும் ஐ.நா. பல்கலைக்கழக நிர்வாகியுமான கொன்ராட் ஓசுட்டர் வால்டரின் கூற்றுப்படி "ஒரு மனிதன் குப்பை என கருதும் ஒரு பொருள் இன்னொரு மனிதனுக்கு மூலப்பொருளாகலாம்". மின்னணு கழிவு சவாலை சரியாக எதிர்கொள்வதன் மூலம் ஒரு பசுமை பொருளாதாரத்தை உருவாக்க முடியும். புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இந்த மின்னணு கழிவை சொத்தாக மாற்றவும், புதிய சூழியல் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடியும். இந்த கழிவுகளிலிருந்து தனிமங்களை பிரித்தெடுப்பதன் மூலம், இந்த தனிமங்களை  மீண்டும் சுரங்கங்களிருந்து எடுத்து, உற்பத்தி செய்ய தேவையான கார்பன் உமிழ்வை குறைக்க முடியும்.

இந்த புதிய தொழில்நுட்பம் பல படி நிலைகளை கொண்டது.

1) மின்னணு கழிவுகளை சேகரித்தல், அதன் மூலம் மூலப்பொருட்கள் பற்றாக்குறையை போக்கி, நல்ல பாதுகாப்பான, பொருளாதார நிலையில் மறுசுழற்சி நிறுவனங்கள் செயல்பட உதவும்.

2) பிரித்தல் மற்றும் முதல் நிலை வேலைகளை செய்தல். இந்த நிலையில் தீங்கு விளைவிக்க கூடிய தனிமங்களைப் பிரித்து பாதுகாப்பான இடங்களில் வைப்பது, தனிமங்கள் பிரித்தெடுத்தலும் நிகழ்கின்றது. உதாரணமாக மின்கலன்கள் பிரிக்கப்பட்டு அதிலுள்ள கோபால்ட், நிக்கல், தாமிரம் போன்ற தனிமங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

3) இதன் மூலமாக பிரித்தெடுக்கப்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட அளவை எட்டிய வுடன் அவை இரும்பு ஆலைகளுக்கும், அலு மினிய கதவுகள் தயாரிக்கும் ஆலைகளுக்கும் அனுப்பப்படுகின்றன

இந்தியாவின் மின்னணு கழிவு மறுசுழற்சியில் அதிகாரபூர்வமற்ற துறையே ஆதிக்கம் செலுத்துகின்றது என இந்த அறிக்கை கூறுகின்றது. மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான சூழலில் தனிமங்களை பிரித்தெடுப்பதன் மூலம் வாழ்க்கையை நகர்த்துவதாகக் கூறுகிறது. இந்த முறைப்படுத்தப்படாத துறையை நெறிப்படுத்து வதற்கான பல முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. இதற்குத் தடையாக உள்ள காரணிகளை அரசு சட்டம் வகுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் மின்னணு கழிவுகளுக்கென தனிச் சட்டம் எதுவுமில்லை. மின்னணு கழிவு சட்டங்கள் வகுக்கும்போது கீழ்காணும் காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்: சூழியல், நீர், காற்று, நகர கழிவுகள், ஆபத்தான கழிவுகளே அவை. மின்னணு கழிவுகளைக் கையாளும் முறை தற்பொழுது மிக ஆபத்தான கழிவுகள் கையாளுதல் என்ற பிரிவின் கீழ் உள்ளது. மின்னணு கழிவில் சில சிறப்பு பகுதிகளை ஏற்றுமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் முறையும் தெளிவில்லாமல் உள்ளது. இது இன்றும் ஆபத்தான கழிவுகள் பிரிவின் கீழே உள்ளது.

இந்தச் சட்டத்தை வளைப்பதற்கு அதிக அளவிலான கையூட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டம் அதன் பங்குதாரர்களுக்கு ஒரு தெளிவான பணி, இடத்தை வழங்கவில்லை.

முன்பே கூறியது போல மின்னணு கழிவுகள் மறுசுழற்சியில் அங்கீகரிக்கப்படாத துறையே ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கு பல சாதாரண, மோசமான தொழில் நுட்பங்களே பயன் படுத்தப்படுகின்றன. இது திறமை குறைந்த பணியாளர்களையும் கொண்டுள்ளது. இவை திறந்த வெளியில் நடப்பதால் தீ விபத்துக்கும், உடல், சூழியல் தீங்குகள் ஏற்படவும் வாய்ப் பளிக்கிறது. மேலும் மின்னணு கழிவில் உள்ள தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களை நீக்குவதற்கு சரியான வழிமுறையும் அவர்களிடம் இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன் புதுதில்லியில் நடைபெற்ற "வாத்தாவரன்" சூழியல் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு ஆவண படம், தலைநகரான தில்லியில் இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலையை எடுத்துரைத்தது. பெரும்பான்மையானதொழிலாளர்கள் அங்கிருந்த தீங்கு விளைவிக்கும் பொருட்கள் என்ன என்றுகூட அறிந்திருக்க வில்லை.

அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி துறைக்கு முக்கியமான சவாலாக திகழ்வது மின்னணு கழிவுகளை சேகரித்தல், அதை நிறுவனங்களுக்கு கொண்டு செல்லுதவதேயாகும். அங்கீகரிக்கப் படாத துறையின் நேரடி போட்டியே இதற்கு முக்கிய காரணம். கழிவுகளை சேகரித்தல், நிறுவனங்களுக்கு கொண்டு செல்லுதல், தீங்கான பொருட்கள், அரிய தனிமங்களை நீக்குதல் என எல்லா செலவும் மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தையே சார்ந்துள்ளது. இதனால் தெளிவான பொருளாதார நிலையை மறுசுழற்சி நிறுவனங்கள் கொண்டிருப்பதில்லை.

பெங்களூரின் வெற்றி கதைகள்:

பெங்களூரில் உள்ள மின்னணு கழிவு மறுசுழற்சி நிறுவனங்களை மற்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இந்த அறிக்கை எடுத்துகாட்டுகின்றது. இந்த அவை மின், மின்னணு கருவிகளையே பெரிதும் நம்பியுள்ளன. இதில் ஏற்படும் மின்னணு கழிவை நீக்குவதற்காக இந்த மின்னணு நகரக் கூட்டமைப்பு "சுத்தமான மின்னணு கழிவு முறை" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இங்கு உள்ள எல்லா நிறுவனங்களும் தங்களது மின்னணு கழிவுகளை நல்ல, சூழியலுக்கு தீங்கு விளைவிக்காத முறையில் வெளியேற்றுகின்றன.

இங்குள்ள இ.பெரிசாரா என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் மின்னணு கழிவு மறு சுழற்சி நிறுவனமாகும். இது பெங்களூரின் புறநகர் பகுதியில் உள்ளது. இந்த நிறுவனம்தான் இந்தியாவின் முதல் அறிவியல்பூர்வமான மின்னணு கழிவு மறுசுழற்சி நிறுவனமாகும். சூழியலை பாதுகாத்தல், நிலத்தில் புதைக்கப்படும் மின்னணு கழிவின் அளவை குறைத்தல், பல அரிதான தனிமங்கள், ஞெகிழி (பிளாஸ்டிக்), கண்ணாடி, பல பொருட்களை பாதுகாப்பான முறையில் திரும்பப் பெறுதல் போன்றவைதான் இந்நிறுவனத்தின் நோக்கம். இந்த நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆய்வு செய்து மின்னணு கழிவை வாங்கி, அதிலுள்ள பொருட்களை பிரித்து அரிய தனிமங்கள், பொருட்களை பிரித்தவுடன் அழித்து, தேவை யெனில் சான்றிதழும் அளிக்கிறது.

 பெங்களூரை மையமாக கொண்ட ஒரு மின்னணு கழிவு மறுசுழற்சி கூட்டமைப்பும் உள்ளது. இது அங்கீகாரமற்ற துறையில் உள்ள நிறுவனங்களுடன் நல்ல உறவை கொண்டுள் ளது. "மின் மற்றும் மின்னணு கழிவுகள் மறுசுழற்சி, பிரித்தல், வெளியேற்றுதல்" ஆகியவற்றுக்காக இந்த அமைப்பு அறியப்பட்டது. இந்த அமைப்பு கர்நாடக மாநில மாசு கட்டுபாட்டு வாரியத் க்ஷ்திடம் 2007ல் தனது வேலைகளை தொடங்குவதற்கு முறைப்படி அனுமதி கேட்டது. அந்த நேரத்தில் இதுபோன்ற ஒரு கோரிக்கை இந்தியாவில் முதன்மையானதும், முக்கியமானதுமாகும். "மின் மற்றும் மின்னணு கழிவுகள் மறுசுழற்சி, பிரித்தல், வெளியேற்றுதல்' அமைப்பு அதிகாரபூர்வமற்ற நிறுவனங்களுடன்  இன்னமும் நல்ல உறவை கொண்டுள்ளது. இதன்மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் முக்கிய பிரச்சினையான மூலப்பொருள் பற்றாக்குறையை இதற்கு இல்லாமல் போனது.

அறிவியல் மற்றும் சூழியல் மைய அமைப்பின் கூற்றுப்படி "மின், மின்னணு கழிவுகள் மறுசுழற்சி, பிரித்தல் மற்றும் வெளியேற்றுதல்" அமைப்பு 2008ல், அதன் முதல் பெரிய நிறுவன வாடிக்கையாளரான டைட்டனுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒவ்வோர் ஆண்டும் கழிவின் விலை, பழைய கடிகாரங்களுக்கு புதிய கடிகாரங்கள் கொடுக்கும் முறையில் பழைய கடிகாரங்கள் பெறப்படுகின்றன. பிறகு பழைய கடிகாரங்கள் இந்த அமைப்புக்கு கொடுக்கப்படுகின்றன. கடந்த வருடம் 6 லட்சத்திலிருந்து 7 லட்சம் வரை பழைய கடிகாரங்களை நிலத்தில் குப்பையாக புதைப்பதை தடுத்து, மறுசுழற்சிக்காக இந்த அமைப்பிடம் டைட்டன் கொடுத்துள்ளது. தான் தயாரிக்கும் நவீன தொழில்நுட்ப கடிகாரங்களும் மின்கழிவின் கீழ் வரும் என்பதை டைட்டன் நிறுவனம் நன்கு அறியும். இந்த அமைப்பு தாங்கள் வாங்குகிற மின்னணு கழிவை பெங்களூரை சேர்ந்த சாகாஸ் நிறுவனத்துடன் சேர்ந்து கையாளுகிறது. சாகாஸ் ஒரு மறுசுழற்சி நிறுவனமாகும். சாகாஸ் அமைப்பு, அதிலுள்ள பல அரிய தனிமங்களை பிரித்துவிட்டு தீங்குவிளைவிக்கும் பொருட்களை நிலத்தில் பாதுகாப்பாக புதைத்து விடுகின்றன.

 எம்பா என்ற ஸ்விஸ் நாட்டு ஆய்வகம் ஒன்று வேதியல் பொருட்கள் மூலம் தனிமங்களை பிரித்தெடுப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் அந்த முறை ஆபத்தானது என்று தவிர்க்கப்பட்டு, நல்ல கருவிகளைப் பயன்படுத்தி தனிமங்களை பிரித்தெடுக்கும் முறையைத் தொடங்க இது ஒரு முன்னுதாரனமாக இருந்தது. அங்கீகரிக்கப்படாத மறுசுழற்சி துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களது வேலை செய்யும் முறையை மாற்றிக் கொள்ளவேன்டும், வெறும் தங்கத்தை பிரித்தெடுப்பதற்காக மட்டும் இல்லாமல் எல்லா தனிமங்களை பிரித்து ஆலைகளின் மூலப்பொருளாக்க வேண்டும் என்பதே இதன் கருத்து. இதில் "மின் மற்றும் மின்னணு கழிவுகள் மறுசுழற்சி, பிரித்தல், வெளியேற்றுதல்' அமைப்பு ஒரு முக்கிய கண்டுபிடிப்பு மையமாகவும் விளங்குகிறது.

 மின்னணு கழிவை பாதுகாப்பாக, மிகச் சரியான முறையில் பிரித்தவுடன் இது உமிகோர் போன்ற நிறுவனத்துக்கு அனுப்பப்படுகின்றது. இங்கு தனிமங்களை பிரித்து தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அழிக்கப்படுகின்றன. நடைமுறையில் பொருட்களை அனுப்பியதிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பின்தான் இவர்களுக்கு மறு சுழற்சி செய்ததற்கான பணம் கிடைக்கிறது. இதனால் மறுசுழற்சி நிறுவனங்கள் நிதி பிரச்சனைக்கு ஆளாகின்றன. இதனால் இந்த மறுசுழற்சி நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஒரு நிதி நிறுவனத்தை நிறுவி அவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

மின்னணு கழிவு : உயிருக்கு ஆபத்து

இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு 4,00,000 டன் மின்னணு கழிவு உருவாகிறது.

இதில் பெருமளவு கணினிகள், கை பேசிகள், இதர மின்னணு கருவிகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஒரு கணினியைச் செய்யப் பயன்படும் பொருள்கள்: ஞெகிழி (பிளாஸ்டிக்), ஈயம், அலுமினியம்,  இரும்பு, செம்பு, தகரம், நிக்கல், துத்தநாகம்,தங்கம், மாங்கனீஸ், வெள்ளி, நியோபியம், பாதரசம், பிளாட்டினம், குரோமியம் உள்ளிட்டவை.

இவை நமக்கு ஏற்படுத்தும்  ஆபத்துகள்:

ஈயம்: மைய நரம்பு மண்டலம், புற எல்லை நரம்புகள், ரத்த நகர்வு, சிறுநீரகம், இனப்பெருக்க உறுப்புகள் போன்றவற்றை பாதிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் குறைபாட்டை உருவாகும். இறப்பும் நேரலாம்.

காட்மியம்: புற்றுநோய் ஏற்படுத்தும். சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும், எலும்புகளை மென்மையாக்கும். சுவாசம், உணவு மூலம் உடலில் சேர்கிறது.

பாதரசம்: மூளை, சிறுநீரகத்தைத் தாக்கும். கரு வளர்ச்சி பாதிப்பு, குழந்தைகளுக்கு பாதிப்பு.

கைபேசி முதல் கணினி வரை பயன் படுத்தப்படுகிறது. உள்ளுறுப்புகள்,உணவுப் பாதை மூலம் மூளையைச் சென்றடை கிறது.

குரோமியம்: கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் புற்றுநோய், சுவாசக் குழாய்

(டேரில் டி‘மாண்டி, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் மும்பை ஆசிரியர். இவர் இந்திய சூழியல் பத்திரிகையாளர் அமைப்பின் தலைவரும், சர்வதேச சூழியல் பத்திரிகையாளர் அமைப்பை தோற்றுவித்தவருமாவார்.)

தமிழில்: ப.நற்றமிழன்

Pin It