எனக்கு வேங்கை, பெருநரி, புலி என்று எத்தனையோ பெயர் சூட்டினார்கள். ஆனால் இத்தனை பெயர்கள் இருந்தென்ன? பெயர் மட்டும்தான் மிச்சம். எனது வாழ்க்கை சோகங்களால் நிரம்பி வழிகிறது.

எங்களுக்குப் பின்னால் பூமியில் தோன்றிய மனிதர்கள், வித்தியாசமான முறையில் வாழத் தொடங்கினார்கள். நாங்கள் உயிர் பிழைத்திருக்க வேண்டுமானால், அதற்கேற்ப மாறிக் கொள்ள வேண்டி இருந்தது. அல்லது வட மாநிலங்களில் ஷேர் கான் என்று அழைக்கப்பட்ட எனது சித்தப்பாவை போல கோபமடைந்து, வயதான காலத்தில் ஆட்கொல்லிப் புலியாக மாற வேண்டியிருந்தது. ஆனால் எல்லா வேங்கைப் புலிகளும் எனது சித்தப்பாவைப் போல மாறுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. புல்வெளிகளில் நாலு கால்களில் நடமாடிக் கொண்டிருந்த இரை விலங்குகளை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாங்கள் வேட்டையாடிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். எங்களது சாப்பாட்டுக்காக என்றுமே மனிதனை அடித்துக் கொன்றது இல்லை.

அவன் குகைகளில் வாழ்ந்த காலத்திலும், கூர்மையான கற்களைக் கொண்டு வேட்டையாடிய காலத்திலும்கூட எங்களைப் பார்த்து அச்சத்துடனே காலத்தை கழித்து வந்தான். எனது மூதாதையர்களின் ஓவியங்களை குகைச் சுவர்களில் தீட்டி வைத்துக் கொண்டதன் மூலம், அவர்களது உத்வேகத்தை தான் பெற்றுக் கொண்டு, நிஜ வாழ்க்கையில் எங்களை எளிதாக வேட்டையாட முடியுமா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான். அந்தக் காலத்திலும் சந்தன நிறத்தில் புள்ளிகள் கொண்ட எங்கள் அழகான தோலை அவன் விரும்பினான். புலிப் பற்களை கழுத்தில் கட்டிக் கொண்டான், அறிவிலித்தனமாக.

பிறகு அவன் கொஞ்சம் புத்திசாலியாக மாறியபோது, எங்களை வழிபட ஆரம்பித்தான். எங்களது உடல்வலு, எங்கள் தந்திரம் தொடர்பாக பாடல்களைப் புனைந்தான். முத்திரைகளில் எங்கள் முகத்தைப் பதித்துக் கொண்டான். களிமண் சிற்பங்களையும்கூட வடித்தான். பிறகு அவன் கோவில்களைக் கட்டியபோது, வாயில்காவலர் சிலைகளாக எங்களை நிறுத்தினான். துர்க்கையம்மனின் வாகனமாக மாறினோம். இன்றைக்கும் புலிகளின் மேல் அவள் உக்கிரமாக அமர்ந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில நேரம் எங்களுக்கு பதிலாக எங்களது ஒன்றுவிட்ட சகோதரர் சிங்கமும் இப்படி இருப்பது உண்டு. உண்மையில் வேங்கைகள் என்றழைக்கப்படும் நாங்களே காட்டை ஆள்கிறோம். காட்டில் எல்லா விலங்குகளும் எங்களைப் பார்த்து மருளுகின்றன, பேருடல் கொண்ட யானையைத் தவிர. அது எங்களுடன் நேருக்கு நேராக மோதுவதில்லை என்றாலும், சில நேரம் எங்கள் பாதையை மறித்துக் கொண்டு கம்பீரமாக நிற்பது உண்டு.

எங்கள் வீரம் தொடர்பாக பஞ்சதந்திரம், ஜாதகக் கதைகள் என்று மனிதர்கள் பல்வேறு புத்திசாலிக் கதைகளை புனைந்திருக்கிறார்கள். அதில் சில கதைகள் புலிகளைவிட சின்னஞ்சிறியதான எலிகள் புத்திசாலியாக இருந்தன என்று சொல்லி, எங்களை கிண்டலும் செய்தன. அதைப் பற்றி என்றைக்குமே நான் கவலைப்பட்டதில்லை. மனிதர்களுக்கு எப்பொழுதுமே விசித்திரமான நகைச்சுவை உணர்வும், பொழுதுபோக்கு உணர்வும் உண்டு என்று எனது குட்டிகளுக்கு கற்றுத் தந்து கொண்டிருந்தேன். ஏனென்றால், உலகிலேயே உயிர் வாழ்வதற்காக அன்றி, வெறும் பொழுதுபோக்குக்காக விலங்குகளைக் கொல்பவன் மனிதன் மட்டும் தானே.

மனிதர்கள் வாகனங்களில் வருவதற்கு முன்னாலும் துப்பாக்கியை ஏந்துவதற்கு முன்னாலும் நாங்கள் திறந்தவெளியில் வேட்டையாடி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் அவை இரண்டும் தோன்றிய பிறகு, வளர்ந்த புற்களுக்கு நடுவில் பதுங்கிக்கொள்ள கற்றுக் கொண்டோம். எங்களது மயிர்ப்போர்வை (ஃபர் கோட்) முறையற்ற கறுப்பு வரிகளைக் கொண்டிருப்பதால் சூழலுடன் உருமறைந்து (கேமாஃபிளேஜ்) போவது எங்களுக்குச் சாத்தியமாக இருக்கிறது. இதனால் மனிதன் மிக நெருங்கி வந்தாலும் எங்களைப் பார்க்க முடியாது. ஆனால், மோப்பம் பிடிப்பதன் மூலம் எங்களால் அவனது இருப்பிடத்தை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் அவன் நெருங்கி வந்துவிடும் நேரம், நாங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு சிலையாக நிற்க வேண்டும். ஏனென்றால் இப்பொழுது அவன் வைத்துள்ள செயல்திறன்மிக்க கருவிகள் மூலம் எங்களை எளிதாகக் கண்டுபிடித்து சுட்டுக் கொன்றுவிட முடிகிறது. ஆனால் ஒரு விஷயம், மனிதன் ஏன் இவ்வளவு காலமாக எங்களை மிக மோசமாக வெறுக்கிறான் என்பதற்கான காரணம் மட்டும் எனக்குப் புரியவேயில்லை.

இந்த வெறுப்பு சமீப காலத்தில் மோசமடைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பல நூறு ஆண்டுகளுக்கு முன் அசோகர் என்ற பேரரசர் இருந்தார். அன்றைக்கு அவர் எழுதிவைத்த கல்வெட்டில் எங்களுக்கு பாதகம் செய்யக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார். மக்கள் அவரது சட்டங்களை மதித்தார்கள். காடுகளில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எங்களை விட்டுவைத்தார்கள். அந்தக் காலத்தில் காடுகள் அடர்த்தியாகவும் வளமாகவும் செழித்திருந்தன. எங்களுக்கு மட்டுமின்றி இதர விலங்குகளுக்குத் தேவையான உணவும் அங்கு போதுமான அளவு கிடைத்துக் கொண்டிருந்தது. அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் எங்களைப் பற்றி மிக அழகான பாடல்களைப் பாடியுள்ளனர். அவர்களது மண் குடிசைகளின் சுவர்களில் எங்களை ஓவியங்களாகத் தீட்டி வைத்திருந்தனர்.

"இந்தப் பழங்குடிகளைப் போலவே ஆதி மனிதர்களும் உலகில் பிறந்தபோது ரொம்ப அப்பாவியாகத்தான் இருந்தார்கள். ஆனால் நாகரிகமடைந்த மனிதர்கள் கொஞ்சம்கொஞ்சமாக சுயநல புத்திசாலிகளாக மாறிவிட்டார்கள்" என்று எனது இனத்தைச் சேர்ந்த ஒவ்வொருவர் சுட்டுக் கொல்லப்படும்போதும் எனது கொள்ளுப்பாட்டி கூறுவாராம். தங்க மகுடம் அணிந்து, பெரிய பூம்பட்டுத் துணியிலான குடையின் கீழ், யானையின் மீது அமர்ந்து வந்த ஒரு பேரரசர் கொள்ளுப்பாட்டியின் தாத்தாவை வேட்டையாடிக் கொன்றதை அவர் நேரில் பார்த்திருக்கிறார். அப்பொழுது நூற்றுக்கணக்கான மனிதர்கள் வாளுடன் வந்து, முரசறைந்து, கொம்பு ஊதி அந்தத் தாத்தாவை மிரட்டியிருக்கிறார்கள். ஓர் அப்பாவி மானை மரத்தில் கட்டி வைத்துவிட்டு காத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அது போல் கயிற்றில் கட்டப்பட்ட மான் அருகே செல்லக் கூடாது என்று காலங்காலமாக பெற்றிருந்த உள்ளுணர்வு அந்தத் தாத்தாவை எச்சரித்தாலும், அவர் ரொம்ப பசியாகவும் இருந்தார். பசி அவரை மான் அருகே இழுத்து சென்றது. எனது கொள்ளுப்பாட்டி சொல்லியதைக் கேட்டபோது, அன்று அந்தத் தாத்தா மட்டுமல்ல, பல புலிகள் கொல்லப்பட்டிருக்கின்றன. அரசரின் படைகள் காட்டை ரணகளப்படுத்திவிட்டுத் திரும்பியபோது, யானைகளின் முதுகில் நூற்றுக்கணக்கான புலிகள், செத்த பிணமாக தொங்கிக் கொண்டிருந்தன. கொஞ்ச நாளைக்குப் பிறகு அந்த அரண்மனையின் தளங்களில் எனது மூதாதையர்களின் தோல்கள் அகங்காரத்துடன் விரிக்கப்பட்டன. பிறகு இந்த வேட்டை தொடர்பாக அழகான ஓவியங்களை அரசவை ஓவியர்கள் தீட்டியிருக்கிறார்கள். எனது மூதாதையர்கள் சாகும் வரை நிறைய துணிச்சலுடன் போராடினார்கள் என்று மனிதர்கள் கூறினாலும்கூட, அந்த ஓவியங்களை பார்க்க எனக்கு கொஞ்சம்கூட விருப்பமில்லை. எங்கள் சித்திரவதையில் இருந்து உருப்பெற்றவை அவை.

"நமது தோலின் மேல் மனிதர்களுக்கு ஏன் இவ்வளவு மோசமாக விருப்பம் ஏற்பட்டது" என்று என் குட்டிகள் என்னிடம் கேட்கும் போது, என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனது குகையில் என்றைக்கும் செத்த மனிதனின் தோலை நான் மாட்டிவிட்டு அழகு பார்த்தது இல்லை. மாறாக, அது எனக்கு பயங்கரக் கனவுகளையே வரவழைக்கும்.

இப்பொழுது எங்களைப் பற்றி அழகான ஓவியங்கள் தீட்டும் பழக்கத்தை மனிதன் விட்டுவிட்டான். ஆனால் எங்களை வேட்டையாடுவதை மட்டும் நிறுத்தவில்லை. இப்பொழுது பெரிய கூட்டமாக வரும் மனிதன், உயரமான மரங்களின் மீது அமைக்கப்பட்ட "மச்சன்" என்ற மேடையின் மீது அமர்ந்து எங்களை சுட்டுக் கொன்றுவிடுகிறான். அந்த மனிதர்களின் தோல் வெள்ளையாக இருக்கிறது. வித்தியாசமான தொப்பி வேறு அணிந்திருக் கிறான். அவன் அயல் தேசத்திலிருந்து வந்திருக்க வேண்டும். கொஞ்ச நாளைக்குப் பின் முதன்முறையாக பெண்களும் எங்களை சுட்டுக் கொல்ல வர ஆரம்பித்தார்கள். எங்களது செத்த பிணங்களின் மீது வீராவேசமாக (!) காலை வைத்து போட்டோவுக்கு போஸ் வேறு கொடுக்கிறார்கள். எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது, அவர்களுக்குக் குழந்தைகள் கிடையாதா?

கொஞ்சம் கொஞ்சமாக எங்களைப் பற்றிய பாடல்கள் குறைந்தன, எங்களது எண்ணிக்கையும் குறுகிக் கொண்டே வந்தது. ஒரு காலத்தில் விரட்டிவிரட்டி வேட்டையாடி அழிக்கப்பட்ட எங்களது ஒன்றுவிட்ட சகோதரர் சிவிங்கிப் புலியை (சீட்டா) போன்றே நாங்களும் விரைவில் அழிக்கப்பட்டு விடுவோம் என்றே நான் நம்பினேன். அப்பொழுது ஒரு மாயாஜாலம் நிகழ்ந்தது. எங்களை வாழ அனுமதிக்கலாம் என்று மனிதன் நினைக்கத் தொடங்கினான். எந்தக் காலத்திலும் இல்லாமல், எப்படி வந்தது இந்த திடீர் கரிசனம்? "காட்டின் நலனுக்காக மட்டுமின்றி, மனிதர்கள் வாழவும் புலிகள் அவசியமாம்". அதை மனிதர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியிருந்தார்கள்.

ஹா ஹா ஹா! இது எவ்வளவு பெரிய ஜோக். மனித சிந்தனை விசித்திரமானது என்றுஏற்கெனவே கூறியிருந்தேன். யோசித்துப் பாருங்கள், நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக எங்களை விரட்டி விரட்டி வேட்டையாடி இருக்கிறான். இப்பொழுது திடீரென்று ஒரு நாள் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு, "இது நல்லதில்லை. புலிகளைக் கொல்வதை நாம் நிறுத்தியாக வேண்டும். அவற்றைக் கொல்வது நமக்கும் நல்லதில்லை" என்று அகிம்சைத் தத்துவம் பேசுகிறான். இவ்வளவு காலம் நான் கரடியாகக் கத்திக் கொண்டிருந்ததை புறங்கையால் தள்ளிவிட்டுவிட்டு, இன்றைக்கு இப்படிக் கூறுகிறான் என்றால், இது மாயாஜாலம் தானே. பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால், காட்டின் தேவதைகள் இப்படியாக எங்களுக்கு உயிர்வரம் தந்தார்கள். குகைகளில் தீட்டிய ஓவியங்கள், காற்றில் மிதந்து வந்த பாடல்கள், எங்களைப் பாதுகாக்க கல்வெட்டில் பதிக்கப்பட்ட விதிமுறைகள் எல்லாம் அழிந்து போயிருக்கலாம். இன்றைக்கு மீண்டும் ஏதோ ஒரு ஓரத்தில் எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. எங்களை வேட்டையாடக் கூடாது என்று மனிதன் மீண்டும் சட்டம் போட்டிருக்கிறான். ஆனால் எங்களது தோல், எலும்புகளின் மீது மனிதனுக்கு உள்ள பேராசை அகலாத வரை, இந்தச் சட்டங்களையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்வது? பார்ப்போம், நான் வாழ முடியாவிட்டாலும்கூட, எனது குட்டிகள் இந்த உலகில் பிழைத்திருக்க ஏதோ கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது என்ற நப்பாசை எனக்கு உருவாகி இருக்கிறது.

இப்பொழுதும் மனிதர்களால் சுடப் படுவதற்காக காட்டில் நான் காத்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது வரும் மனிதர்கள் எனக்கு வலிக்காமல் சுடுகிறார்கள். என்னையும் எனது குட்டிகளையும் கேமரா கருவிகளால் மட்டும் சுட விரும்புகிறார்கள். இருந்தாலும், எனது குட்டிகளுக்கு அருகில் வருவதை நான் விரும்பவில்லை. எனது பற்களைக் காட்டி மெதுவாக உறுமுகிறேன். அதைப் பார்த்து அந்த மனிதன் சிலிர்த்துப் போகிறான். அவனுக்கு விசித்திரமான பொழுதுபோக்குகள் உண்டு என்று ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன். அது எனக்கு நன்றாகப் புரிந்து தொலைந்துள்ளதால், என் உடலை சோம்பல் முறித்து, பெரிதாகக் கொட்டாவி விட்டு, பின்பக்கம் உடைந்து போயுள்ள ஒரு பல் உட்பட எனது எல்லா பற்களும் தெரியும் வகையில் வாயை பெரிதாக விரித்து படம் எடுப்பவனுக்குக் காட்டுகிறேன். இன்றைக்கு அவர்கள் மகிழ்ச்சியாக வீடு திரும்பட்டும். எனது இனமும், கொஞ்சம் காடுகளும் சிறிய அளவிலாவது பாதுகாக்கப்படும் என்ற நப்பாசை இன்னும் எனக்கு ஒட்டியிருக்கிறது.

புல்புல் ஷர்மா ஓர் ஓவியர், எழுத்தாளர், சிறப்பு பள்ளி ஆசிரியர்

வேங்கை புலிகளை பாதுகாக்க நாம் என்ன செய்ய முடியும்?

1900த்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இருந்த புலிகளின் எண்ணிக்கை எப்படி ஒரே நூற்றாண்டில் ஆயிரமாகக் குறைந்தது? புலிகளைப் பாதுகாப்பதில் உள்ள பிரச்சினைகள் என்ன? இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுதான் என்ன? இந்தக் கேள்விகளுக்கு காட்சிகளின் வழியாக விளக்கமளிக்கிறது சேகர் தத்தாத்ரி இயக்கியுள்ள "தி ட்ரூத் அபவுட் டைகர்ஸ்" என்ற ஆவணப் படம். இந்தப் படம் தமிழில் கிடைக்கிறது. ஏற்கெனவே பல சர்வதேச, தேசிய விருதுகளைப் பெற்ற காட்டுயிர் ஆவணப் படங்களை இயக்கிய சேகர் தத்தாரியின் படங்கள் நேஷனல் ஜியாகிரபிக், டிஸ்கவரி உள்ளிட்ட சர்வதேச அலை வரிசைகளில் ஒளிபரப்பப் பட்டுள்ளன.

வேங்கைப் புலி நிபுணர் முனைவர் உல்லாஸ் கரந்த், காட்டுயிர் குற்றங்களுக்கு எதிராகப் போராடும் பெலிண்டா ரைட் உள்ளிட்டோரது கருத்துகளை இப்படம் பிரதிபலிக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை புலிகளின் வாழ்க்கையிலுள்ள முக்கிய கட்டங்கள், புலிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மனித செயல்பாடுகளை இப்படம் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. வேங்கைகளை உண்மை யிலேயே காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால்: முதலாவது, வனத்துறையின் பாதுகாப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஆயுதங்கள், சிறப்புப் பயிற்சி வழங்கி, கண்காணிப்புக்கு அதிக ஆட்களை நியமித்து கள்ள வேட்டையை முழுமையாகத் தடுக்க வேண்டும். இரண்டாவது, புலிகளின் இரைகளின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரை எண்ணிக்கை சமநிலையில் இல்லா விட்டாலும் வேங்கைகளின் எண்ணிக்கை குறைந்து போகும். மூன்றாவது, காடுகளுக்குள் வாழும் பழங்குடிகளுக்கு உரிய வசதிகள், நிலத்துடன் காட்டுக்கு வெளியே இடம் வழங்க வேண்டும். ஒரே காட்டில் புலிகளும் மனிதர்களும் வாழ முடியாது. நான்காவதாக, புலிகள் - காடுகள் பற்றிய எந்த ஒரு முடிவு எடுப்பதானாலும் அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும் ஆகிய தீர்வுகளை இந்தப் படம் முன்வைக்கிறது.

வேங்கைகளை பாதுகாக்க வேண்டும் என்று ஒரு நாளுக்கு 30 முறை தனியார் நிறுவனங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் விளம்பரங்களைப் பார்ப்பது, "வேங்கைப் புலிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்" என்று பிரதமருக்கு கடிதம் எழுதுவது போன்ற செயற்கரிய செயல்களைத் தாண்டி, வேங்கைகளைப் பாதுகாக்க சாதாரண மக்கள் உண்மையிலேயே என்ன செய்ய முடியும் என்று இந்த ஆவணப் படம் விளக்குகிறது.

வேங்கைப் புலிகளை தேசிய விலங்கு என்று கூறிக் கொண்டிருப்பதால் மட்டும் நமக்குப் பெருமையில்லை. ஒரு காட்டில் வேங்கைகள் வளமாக வாழ்கின்றன என்றால், அவற்றுக்குத் தேவையான அளவு இரை நன்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். தாவரங்கள் வளமாக இருந்தால்தான் வேங்கைகளின் இரைகளான மான், காட்டெருமை போன்றவை போதுமான எண்ணிக்கையில் இருக்கும். எனவே, ஒரு காட்டில் வேங்கை வாழ்கிறது என்றால், அது அந்தக் காடு வளமாக இருக்கிறது என்று அர்த்தம். காடு வளமாக இருந்தால்தான், ஆறுகளில் நீரோடும். நாம் சுவாசிப்பதற்கு ஆக்சிஜனும் காடு படு பொருள்களும் கிடைக்கும். பூமிப்பந்தும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, வேங்கைகளைக் காக்க வேண்டும் என்பதை அரசுக்கு நாம் உரக்கவே எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த ஆவணப் படம் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. இணையத்தில் சென்று நம்மைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொண்டால், படம் அனுப்பப்படும். இலவச காட்சிகளுக்கும் அவர்களே ஏற்பாடு செய்கிறார்கள். காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தால், திரையிடும்போது ஒரு நிபுணரும் உடன் இருப்பார்.

கூடுதல் தகவல்களுக்கு

www.truthabouttigers.com

www.shekardattatri.com

புல்புல் ஷர்மா (தமிழில்: ஆதி)

Pin It