முதலில் ஒரு கூண்டின் சித்திரம் தீட்டு

திறந்த கதவுடன்

பின்னர் தீட்டவேண்டியவை

கவர்ச்சியாக ஏதாவது

எளிமையாக ஏதாவது

அழகாக ஏதாவது

பயனுள்ள ஏதாவது

பறவைக்காகத்தான்

பிறகு சித்திரம் வரைந்த சீலைத் துணிச்சட்டத்தை

ஒரு மரத்தின் மேல் சாய்த்து வை

ஒரு பூங்காவிலோ

ஒரு தோப்பிலோ

அல்லது ஒரு காட்டிலோ

மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்

ஒன்றும் பேசாமல்

அசையாமல்.......

சிலவேளை பறவை சீக்கிரம் வந்துவிடலாம்

ஆனால் அந்த முடிவுக்கு வருவதற்குப்

பல வருடங்களை எடுத்துக்கொள்ளவும்

செய்யலாம்

நம்பிக்கை இழக்கக்கூடாது பொறுத்திரு

தேவையானால் வருடக்கணக்கில்

பொறுத்திரு

பறவையின் வருகையில் விரைவு அல்லது

தாமதத்திற்கும்

சித்திரத்தின் வெற்றிக்கும்

எவ்விதத் தொடர்புமில்லை

பறவை வரும்போது

அது வருவதாக இருந்தால்

மிக ஆழ்ந்த மௌனம் காட்டு

கூண்டில் பறவை நுழையும்வரை காத்திரு

நுழைந்தவுடன்

தூரிகையால் கதவை மென்மையாகச் சாத்திக்

கூண்டுக் கப்பிகள் அனைத்தையும்

ஒன்றன்பின் ஒன்றாக அழித்துவிடு

பறவையின் இறகுகள் எதன்மீதும்

படாமல் இருக்க கவனம்கொள்

பின்னர் மரத்தைச் சித்திரமாகத் தீட்டு

அதன் கிளைகளிலேயே மிக அழகான ஒன்றைத்

தேர்ந்தெடு

பறவைக்காகத்தான்

பிறகு பசும் தழைக் கொத்துகளையும்

காற்றின் புத்துணர்ச்சியையும்

சூரிய ஒளித் தூசியையும்

கோடை வெப்பத்தில் புற்களிடையே

பூச்சிகள் எழுப்பும் ஓசையையும்

வண்ணமாகத் தீட்டு

பிறகு பறவை பாட விழையும்வரை

காத்திரு

பறவை பாடவில்லையென்றால்

அது மோசமான அறிகுறி

சித்திரம் மோசம் எனும் அறிகுறி

ஆனால் அது பாடினால் நல்ல அறிகுறி

உன்னை நீ அறிவித்துக்கொள்ளலாம்

என்னும் அறிகுறி

ஒரு பறவையின் இறகுகளில் ஒன்றை

மிக மென்மையாகப் பிடுங்கி

சித்திரத்தின் ஒரு மூலையில்

எழுது உன் பெயரை.