`தாகம்’ தான், மரத் வாடாவில், இந்த வருடத்தின் மிகச் சிறந்த பயிராக இருக்கிறது. `கரும்பை’ மறந்தே விடுங்கள். மனிதன் மற்றும் தொழிற்சாலைகளின் `தாகம்’ மற்ற எல்லாவற்றையும் மறைத்து விடுகிறது. இதை அறுவடை செய்கிறவர்கள், ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுகிறார்கள். நீங்கள் சாலை ஒரத்தில் பார்க்கும் காய்ந்து சருகாகிப்போன கரும்புகள் கடைகளில் கால்நடைத் தீவனமாக மாறிப் போவதில்தான் முடிகிறது. ஆனால் நீங்கள் அந்த சாலையில் காணும் எண்ணிலடங்கா `டேங்கர்கள்’ நகரங்களை, கிராமங்களை, ஆலைகளை நோக்கி சென்றுகொண்டே இருக்கின்றன. நம்மைச் சுற்றி நடப் பவைகளுள் `தண்ணீர் சந்தை’தான் மிகப் பெரிய சந்தை. டேங்கர்கள் அதன் குறியீடாகும்.

தண்ணீரை சேகரிப்பது, அதை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவது, விற்பனை செய்வது என ஆயிரக்கணக்கான டேங்கர்கள் தினசரியும் நாலா பக்கமும் மராத் வாடாவைச் சுற்றிச்சுற்றி வருகின்றன. இதில் அரசு ஒப்பந்தத்துக்குட்பட்டவைகள் எண்ணிக்கையில் குறைவுதான். அதிலும் சில அரசின் வெற்றுத் தாள் களில் மட்டும் இருப்பவைகள் தான். மிக வேகமாகப் பெருகி வளர்ந்து வரும் `தண்ணீர் சந்தை’யில் தனியாரால் நடத்தப்படும் டேங்கர்கள்தான் அதி முக்கியமான பாத்திரம் வகிக்கின்றன.

ஒப்பந்தக்காரர்களாக மாறிப்போன சட்டமன்ற / மாநகராட்சி உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற / மாநகராட்சி உறுப்பினர்களாக மாறிப்போன ஒப்பந்தக்காரர்கள்தான் டேங்கர் பொருளாதாரத்தின் மிக முக்கிய பங்குதாரர்கள். அரசு அதிகாரிகளும், இதில், உண்டு. நேரடியாகவோ, பினாமிகள் மூலமாகவோ இவர் களில் பலர் டேங்கர்களின் உரிமை யாளார்களாய் உள்ளனர்.

தண்ணீர் வர்த்தகம்

அது சரி, டேங்கர் என்றால் என்ன? உண்மையில், மெல்லிய விரிப்பு போன்ற இரும்புத் தகடுகள் பெரிய பீப்பாய்களாக உருமாற்றம் செய்யப்படுகின்றன. ஒவ்வொன்றும் சுமார் 198 கி.கி. எடையுள்ள 5X18’அளவிலான 3 தகடுகளால் ஒரு தண்ணீர் டேங்கர் உருவாக்கப்படுகிறது. டேங்கர்கள் ஒவ்வொன்றும் சுமார் 10000லி கொள்ளளவு கொண்டதாக இருக்கும். இவைகள், டிரக்குகள், லாரிகள் மற்றும் பெரிய வாகனங்களில் பல்வேறு விதங்களில் ஏற்றப்பட்டு எடுத்துச் செல்லப்படும். 5000 லி கொள்கலன்கள் பெரிய லாரிகளின் ரெயிலர்களில் எடுத்துச்செல்ல முடியும். இதுபோலவே 1000லி, 500லி பீப்பாய்கள் சிறிய டிராக்டர்கள், மேல் பக்கம் திறந்து வைக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலமாக பயணப்பட்டு வந்து சேரும்.

தண்ணீர் நெருக்கடி அதிகமாகும்போது, ஒவ்வொரு நாளும், மாநிலம் முழுவதும், இதுபோன்ற நூற்றுக் கணக்கான, பீப்பாய்கள், கொள்கலன்கள் (containers), டேங்கர்கள் உருவாக்கப்படுகின்றன. ஜல்னா மாவட்டத் தலைநகரான ஜல்னாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 1200 டேங்கர்கள், டிரக்குகள் மற்றும் ஆட்டோக்கள் பல்வேறு அளவுகளிலான பீப்பாய்களைப் பொருத்தும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும். நீர்நிலை ஆதாரங்களுக்கும், தண்ணீர் உடனடியாகத் தேவைப்படும் இடங் களுக்கும் என (இடையில்) அங்குமிங்குமாக இவை ஓடிக்கொண்டே இருக்கும். வாகன ஒட்டுனர்கள், வாடிக்கையாளர்களிடம், கைபேசியில் பேரம் பேசிக் கொண்டே இருப்பார்கள். எது எப்படி இருந்தாலும், பெருமளவு தண்ணீர், பெரிய வாடிக்கையாளர்களான தொழிற்சாலைகளுக்கே அனுப்பி வைக்கப்படும்.

”டேங்கர் முதலாளிகளின் வர்த்தகம் நாளன்றுக்கு சுமார் ரூ60.00 லட்சத்திலிருந்து 75.00 லட்சம் வரை நடக்கிறது” என்கிறார் மராத்தி தினசரியான் “லோக்‌ஷட்டா” வைச் சேர்ந்த லெட்சுமன் ரவுத். ”ஒரே ஒரு நகரத்தின் தண்ணீர் சந்தையின் மதிப்பு மட்டுமே இவ்வளவு அளவுக்கு உயர்ந்து போயிருக்கிறது” என்கிறார் ரவுத். அவரும் அவரது பத்திரிகை சகாக்களும் பல ஆண்டுகளாகவே தண்ணீர் வர்த்தகத்தை அவதானித்து வருகிறார்கள்.

டேங்கர் தொழில்நுட்பம்: டேங்கர்களும்?

கொள்கலன்களின் (containers) அளவுகள் மாறுபடலாம். ஆனால், இந்த நகரில் கொள் கலன்களின் சராசரி கொள்ளளவு உத்தேசமாக 5000 லிட்டர்கள் ஆகும். மேற்சொன்ன 1200 கொள்கலன்கள் ஒவ்வொன்றும், நாளன்றுக்கு குறைந்தபட்சம் 3 தடவையாவது பயணிக்கும். எனவே, ஒரு நாளில் ஒரு கோடியே எண்பது லட்சம் லிட்டர் தண்ணீரை, இவை எடுத்துச் செல்லும். 1000 லி தண்ணீரின் அடக்க விலை மதிப்பு ரூ350/& என்ற கணக்கில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. நீரின் உபயோகம், வீடுகளா, கால்நடைகளா அல்லது ஆலைகளா என்பதைப் பொருத்து இதன் அடக்க விலை இன்னும் உயரும்.

நிலவும் தண்ணீர் பற்றாக் குறை, டேங்கர் பொருளாதாரத்தின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கிறது. அதைப் பொருத்து டேங்கர்கள் புதிதாக உருவாக்கப்படும் / பழுது நீக்கப்படும்/ வாடகைக்கு விடப்படும் / விற்கப்படும் /வாங்கப்படும். ஜல்னாநகரத்திற்கு வந்து சேரும் பல வழிகளில், மிகவும் பரபரப்பான செயல்பாடுகளைக் கொண்டுள்ள வழி, அருகாமையிலுள்ள அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள `ரகூரி’யிலிருந்து ஜல்னா வரும் வழியாகும். இங்கு 10000லி கொள்ளளவு உள்ள டேங்கர் ஒன்றை உருவாக்க ரூ.30000/- வரையிலும்ஆகிறது. இதுகிட்டத்தட்ட 2மடங்கு விலையில் விற்கப்படுகிறது.

தாகத்தின் பொருளாதாரமும்

ஒரு சிறு தொழிற்சாலை நகரமான கூரியில் உள்ள ஒரு பட்டறையில் டேங்கர் தொழில் நுட்பம் பற்றிய ‘உடனடிக் கல்வி’ எங்களுக்குக் கிடைத்தது. இரும்புத் தகடுகளைக் கொள்கலன்களாக உருமாற்றும் பட்டறை ஒன்றின் முதலாளியான ஸ்ரீகாந்த் மேல் வேன், விளக்குகிறார். ‘5X18’ அளவிளான எம்.எஸ்.தகடு (M.S.Plate) ஒவ்வொன்றும் 3.5.மி.மீ. .(10 கேஜ்அடர்த்தி) கனம் உடையது.” என்கிறார். இரும்புத் தகடுகளை உருளைகளாக்கும் உருளை இயந்திரத்தை, அவர் எங்களுக்கு காண்பித்தார். இந்த இயந்திரங்கள் மனித உழைப்பால் இயக்கப் படுபவை.

10000லி கொள்கலன் ஒவ்வொன்றும் சுமார் 800கி.கி. எடை உள்ளது என்கிறார் அவர். அவர் மேலும் கூறுகையில், இந்த மூன்று மெல்லிய இரும்புத் தகடுகளின் அடக்க விலை ரூ.27,000/- (ஒருகி.கி.ரூ35/- என்ற கணக்கில்); தொழிலாளர் கூலி, மின்சாரம் மற்றும் இதரச் செலவுகள் எல்லாம் சேர்த்து இன்னும் ரூ.3,000/- பிடிக்கும். ஆக மொத்தம் இதன் அடக்க விலை ரூ.30,000/- வரை ஆகிறது. 10,000 லி கொள்கலன் ஒன்றைத் தயார் செய்ய முழுதாய் ஒரு நாள் ஆகும். இது மிகவும் பரபரப்பான சீசன். இந்த 3 மாதத்தில் சுமார் 150 டேங்கர்களை (பல்வேறு அளவுகளைக் கொண்ட) தயார் செய்துள்ளோம். 1கி.மீ. சுற்றளவில் இதுபோன்ற 15 யூனீட்டுகள் அகமது நகர் டவுனுக்குள் உள்ளன.” என்கிறார்.

“20000லி கொள்ளளவு உள்ள பெரிய டேங்கர்கள், கால்நடை பண்ணைகளுக்கோ அல்லது தொழிற்சாலைகளுக்கோ அனுப்பப்படும்.” நான் தயாரித்த மிகச் சிறிய டேங்கர் 1000லி கொள்ளளவு கொண்ட தாகும். இந்த சிறிய டேங்கர்களை தோட்டப் பயிர் உற்பத்தியாளர்கள் வாங்குகிறார்கள். பெரும்பாலும், சொட்டு நீர்ப்பாசனம் செய்ய முடியாத, மாதுளை விவசாயிகள் தான் இதை வாங்குகிறார்கள். அவர்களுடைய மாட்டு வண்டிகளில், இந்த சிறிய டேங்கர்களை எடுத்துச் செல்வார்கள். இயந்திரங்களின் உதவியின்றி அவர்களாகவே நீர்ப்பாசானம் செய்வதை நானே நேரில் பார்த்திருக்கிறேன்”- என்று கூறுகிறார் மேலவேன்.

அதெல்லாம் சரி. தண்ணீர் எங்கிருந்து வருகிறது. நிலத்தடி நீரை மிக மோசமாகச் சுரண்டுவதிலிருந்துதான். தனியார் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்துதான் இந்த சுரண்டல் நடை பெறுகிறது. இவற்றுள் சில, தற்போதைய தண்ணீர் பற்றாக்குறையை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு புதிதாகத் தோண்டப் பட்டவையாகும். நிலத்தடி நீர் மோசமான நிலைக்கு கீழ் இறங்கிப்போகும் வேளையில், இவைகள் ஒன்றுக்கும் பயன் இல்லாமல் போகும். நீர்ப்பற்றாக்குறையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஊரக வணிக நீர் வியாபாரிகள், நீருள்ள கேணிகளை (வெட்டப்பட்ட கிணறுகள்) விலைக்கு வாங்கி வைத்திருக்கிறார்கள். ஜல்னா நகரில் உள்ள தண்ணீர் பாட்டில் ஆலைகளோ, ஏற்கனவே நீர் நெருக்கடி குள்ளா யிருக்கும் ‘புல்தானா’வில் (விதர்பா பிரதேசத்தில் உள்ளது) இருந்து நீரை வரவழைக் கின்றன. எனவே தண்ணீர்ப் பஞ்சம் அருகாமைப் பிரதேசங்களுக்கும் மிக விரைவில் பரவிவிடும். வேறு சிலரோ, பொது நீர் நிலை ஆதாரங்களான ஏரிகள் மற்றும் குளங்களிலிருந்து நீரைத் திருட ஆரம்பித்து விட்டனர்.

டேங்கர் முதலாளிகள், 10000லி நீரை ரூ.1000- லிருந்து ரூ.1500 வரைக்கும் வாங்குகிறார்கள்; இதையே, ரூ.3,500- விற்பனை செய்வதின் மூலம் ரூ.2000 - ரூ.2500 வரை லாபம் பார்க்கிறார்கள். இவர்களுக்கு, ஏற்கனவே நீர் நிறைந்துள்ள, ஆழ்துளைக் கிணறுகளோ, கேணிகளோ சொந்தமாயிருந்தால், நீரின் அடக்க விலை இன்னும் மலிவு. லாபமோ, இன்னும் அதிகம். இதுவே, பொது நீர் நிலைகளிலிருந்து திருடப்படுமானால், அடக்க விலை என்பதே இல்லை. முழுவதும் கொள்ளை லாபம் தான்.

மாநிலம் முழுவதிலுமாக, சிறியதும் பெரியதுமாக, சுமார் 50000 டேங்கர்கள் இந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன- என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற / சட்ட மன்ற உறுப்பினரான பிரசாத்தான்பூர். “ஏற்கனவே இருக்கும் ஆயிரக்கணக்கான டேங்கர்களை மறந்து விடாதீர்கள். அப்படியானால், மொத்தம் எவ்வளவு டேங்கர்கள் இப்போது செயல்பட்டு கொண்டிருக்கும் என்பதை எவரும் எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்” - என்கிறார் இவர். `தான்பூர்,’ (இந்தப் பிரதேசத்தில் உள்ள) பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த அரசியல்வாதி. இவர், இங்குள்ள `நீர்நிலவரத்தைப்’ பற்றி நன்கு அறிந்தவரும் கூட. வேறு சில புள்ளி விவரங்களோ புதிய டேங்கர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டும் என்கின்றன.

இந்த எண்ணிக்கையை 50,000 என்றே வைத்துக் கொண்டாலும் கூட, மாநிலம் முழுவதிலுமுள்ள டேங்கர் முதலாளிகள் ரூ20 லட்சம் மதிப்புள்ள வர்த்தகத்தை நடத்தியுள்ளார்கள். வேறு தொழிலில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள், இந்தத் தொழிலுக்குள் புகுந்ததால், பழைய தொழில்களும் நசிவை சந்திக்கின்றன. கட்டுமானத் தொழில் கிட்டத்தட்ட தற்காலிக நிறுத்தத்தை சந்தித்து விட்டது. இரும்புக் கிராதிகள், உத்திரங்கள் தயாரிக்கும் வேலைகள் எல்லாம் சுத்தமாக நின்று போய்விட்டதாகத் தெரிவிக்கிறார் மேலவேன்.

மீண்டும் ஜல்னா நகருக்கு வருவோம். டேங்கர் உற்பத்தியாளரான, சுரேஷ்பவார் கூறுகிறார்: ஜல்னா நகரில் சுமார் 100 கொள்கலன் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 90 பேர் இதற்கு முன் டேங்கர் தொழில் பற்றி என்ன, ஏது என்று எதுவுமே தெரியாதவர்கள். ஆனால் இப்போது இந்த தொழிலைச் செய்து வருகிறார்கள்.

ஜல்னா மாவட்டத்திலிலுள்ள ஷெல் கவுன் கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதியும் விவசாயியுமான தீபக் அம்போர் நாளன்றுக்கு ரூ.2000/- வரை தண்ணீருக்காக செலவு செய்கிறார். அவர் கூறுகிறார்: ”நான் தினமும் 5 டேங்கர் லோடு தண்ணீர் வாங்குகிறேன். எனது, 5 ஏக்கர் ஆரஞ்சு தோட்டம் உட்பட 18 ஏக்கர் விவசாய நிலங்களுக்காக ஒரு ‘சௌக்காரிடமிருந்து’ கடன் வாங்கிதான் இதைச் செய்கிறேன்.” விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாய் நசிந்து கொண்டிருக்கும் போது ஏன் இப்படி அதிகமாய் செலவு செய்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, இப்போதைக்கு என் ஆரஞ்சு பயிர்களை காப்பாற்றுவதற்காகத்தான்.” என்கிறார்.

மேற்சொன்ன எல்லா விசயங்களும் கொஞ்சம் அச்சப்படுத்தத்தான் செய்கின்றன. ஆனால் அவை இன்னும் மோசமான நிலையை எட்டி விட வில்லை. ஆம், இப்போது எட்டி விடவில்லை. ஜல்னா நகரில் பல ஆண்டுகளாக டேங்கர்கள் இல்லாமல் மக்கள் வாழ்ந்து விட்டார்கள். ஆனால் இப்போதுதான், தண்ணீர் நெருக்கடியின் பல்வேறு முகங்களும் பயங்கரமாக வெடித்து கிளம்பியிருக்கின்றன. டேங்கர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கின்றது. இது மிக மோசமான சூழ்நிலைக்குப் போக இன்னும் காலம் பிடிக்கும்தான். அது மழை பற்றியதாய் மட்டுமே இராது. சிலருக்குத் தவிர. ஓரு அரசியல் தலைவர் மிகவும் நொந்து கூறினார்.” ஒரு வேளை நான் 10 டேங்கர் வைத்திருந்தால், ‘‘கடவுளே, இந்த வருடமும் வறட்சி வரட்டும்” என்று தான் வேண்டுவேன் என்கிறார்.

மூலம்: ‘The Hindu’ dt. 27/03/13