சூழியல் முக்கியத்துவம் வாய்ந்த, அரிய கடல் வாழ் உயிரினங்கள் வாழக்கூடிய மன்னார் வளைகுடா தேசிய கடல் வளப் பூங்கா பகுதியை, அதன் பல்லுயிர் சூழலை அழித்துக் கொண்டிருந்த ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து மீண்டும் மக்கள் போராட்டம் வலுப்பெற்றுள்ளது.

தென்தமிழகத்தில் முத்துக்குளித்துறை என்று அழைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க முத்துநகர் என்ற தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை 1993 இல் தொடங்கும் போதே மக்களிடம் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அன்று முதல் இன்று வரை மக்களின் களப் போராட்டமும், சட்டப் போராட்டமும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த 23.03.2013 அன்று காலை தூத்துக்குடி நகர மக்களுக்கும், சுற்று வட்ட கிராம பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக விடிந்தது. ரோச் பூங்கா பகுதியில் அதிகாலையில் நடைப்பயிற்சி சென்றவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. காய்கனி சந்தையில், பிரதான வீதிகளில் என எங்கெல்லாம் அதிகாலையில் மக்கள் நடமாட்டம் இருந்ததோ அங்கெல்லாம் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

கால்நடைகள் பாதிக்கப் பட்டன. செடி, கொடி உள்ளிட்ட தாவரங்கள் கருகின. இதனால் நகர் முழுவதும் அச்சமும், பீதியும் நிலவியது. நச்சு வாயுக் கசிவு ஏற்பட்டது எங்கிருந்து என்ற குழப்பமும் நிலவியது. போதிய மருத்துவ வசதிகளோ, முன்னேற்பாடுகளோ இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகமும் முதலில் திணறித்தான் போனது.

பின்னர் சுதாரித்துக் கொண்டனர். வெளியான நச்சு வாயு கந்தக டை ஆக்சைடு என்பதால் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று வருவாய் கோட்டாட்சியர் க.லதா, மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் கோகுலதாஸ், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் பாலாஜி உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாநகரில் 803.5 ppm மற்றும் 1023.6 ppmஅளவிலான கந்தக டை ஆக்சைடு வெளியானது மாசுக் கட்டுப்பாடு வாரிய கண்காணிப்பு மூலம் உறுதி செய்யப்பட்டது. 1 கனமீட்டர் வாயுவில் 65 மைக்ரோ கிராம் கந்தக டை ஆக்சைடு வெளியாகியுள்ளது என்று மாவட்ட ஆட்சியரும் அறிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் - செயலர் பாலாஜி ஆகியோர் தனித்தனியே அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்படி சுற்றுச்சூழல் மாசுபடுதல் தடுப்புச் சட்டம் 1981, பிரிவு 31 ஏ மற்றும் 191, 97 ஆகிய விதிகளின் படி ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் கார்த்திகேயன் உத்தரவின்படி 30.03.2013 அன்று நள்ளிரவு முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டு, ஆலையின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனை வருவாய்த் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலர்களும் நேரில் சென்று உறுதிப்படுத்திக் கொண்டனர்.

தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சென்னை மண்டலத்தில் நீதிபதி எம்.சொக்கலிங்கம், பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் கொண்ட அமர்வில் தமிழக அரசின் சார்பிலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவின் பேரா.பாத்திமா பாபு சார்பிலும், ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுவாயுக் கசிவின் பாதிப்புகளை சுட்டிக் காட்டி வாதாடினர். உச்சநீதிமன்றத்தைப் போலவே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தானே நேரடியாக வழக்காடினார்.

பசுமைத் தீர்ப்பாயம் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பி.எஸ்.டி. சாய், பேராசிரியை லெஜி பிலிப், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் மோகன்நாயுடு (கூடங்குளம் அணு உலையில் இருந்து வெப்பநீர் வெளியேறுவதால் கடல்வளம் பாதிக்கப் படாது என்ற ஆய்வறிக்கையை 25.02.2004 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தவர்), ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் சுமதி ஆகியோரைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை ஆய்விற்காக நியமித்தது.

இதற்கிடையே மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாக ஆர்ப்பாட்டம், முற்றுகை, கடையடைப்பு, உண்ணாவிரதம், மறியல், கொடும்பாவி எரிப்பு என போராட்டங்கள் வீரியமானது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப் பட்டது. நகர வணிகர் சங்கங்களின் சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராம், “ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் கந்தக அமிலப் பிரிவில் 63 மீட்டர் உயர புகைபோக்கி உள்ளது. இதில் இருந்து 477ppm அளவிலான கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதற்கான அனுமதி உள்ளது. ஆனால், 23.03.2013 அன்று 803.5ppm முதல் 1062ppm வரை கந்தக டை ஆக்சைடு வெளியாகியுள்ளதாக பதிவாகியுள்ளது. அதாவது அங்குள்ள அளவு மானியின் உச்சபட்ச அளவான 1063ppm வரை பதிவாகியுள்ளது. அதற்கு அதிகமாக வெளியாகியிருந்தால் கூட பதிவாகி யிருக்காது. அப்படியானால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பலமடங்கு அதிகமாக கந்தக டை ஆக்சைடு வெளியாகியுள்ளது. இரண்டு, மூன்று மணி நேரம் உச்சபட்ச அளவிற்கும் அதிகமாக காற்றில் கந்தக டை ஆக்சைடு கலந்ததின் விளைவுதான் இந்தப் பாதிப்பு” என்கின்றார்.

”இந்த நச்சுவாயுக் கசிவு இப்போது மட்டுமல்ல பலமுறை நிகழ்ந்துள்ளது. ஸ்டெர்லைட் நச்சுப்புகையால் 05.07.1997 அன்று அருகிலுள்ள ரமேசு பூ கம்பெனியில் வேலைபார்த்த 165 பெண் தொழிலாளர்கள் மயக்க மடைந்தனர். சில பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அதுபோல 02.03.1999 அன்று நச்சுப் புகையால் அருகிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தின் அரசு ஊழியர்கள் 11 பேர் மயக்கமடந்து, அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல ஆலையின் உள்ளே தொழிற்சாலை விபத்துக்களும் தொடர்ந்து நடந்தே கொண்டேதான் இருக்கின்றது. இதில் பலியானவர்கள் எண்ணிக்கையை கணக்கிடமுடியாது” என்கின்றனர் சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மக்கள் உரிமைக் குழு அமைப்பின் வழக்குரைஞர். அதிசயகுமார்.

“ஸ்டெர்லைட் நிறுவனம் அதிகளவில் புகையை வெளியிட்டு வருகின்றது. இதனால் பலருக்கும் மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்படுகின்றது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று 15.08.2011 அன்று தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி மன்றத்தின் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளதாக அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் பொன்ராஜ் கூறுகின்றார். இதே கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை செய்த நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, சுகாதார சீர்கேடு, நிலத்தடி நீர் மாசு, கழிவுகள் வெளியேற்றம் ஆகியவற்றைக் கண்டித்து 5 தீர்மானங்களை நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளனர். ஒருவேளை அப்போதே மாசுக்கட்டுப் பாடு வாரியம் நடவடிக்கையில் இறங்கியிருந்தால் இப்போது பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

தெற்கு வீரபாண்டியபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் சீர்கேட்டிற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென 23.07.2011 அன்று கிராம சபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

”தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தடை இல்லா சான்றிதழை 01.08.1994ல் இரு கட்டுப் பாடுகளோடு கொடுத்தது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும். தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் உருவாக்க வேண்டும். ஆனால் ஆலை 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பசுமை வளையம் அமைப்பதை 25 மீட்டர் என்றளவில் விதியை மாற்றி எழுதினார்கள். அதனைக் கூட இந்த ஆலையால் நிறைவேற்ற முடியவில்லை. அத்தனை சட்ட மீறல்களையும், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் செய்த, செய்து வருகின்ற இந்த நச்சு ஆலையை எப்படி விட்டு வைக்க முடியும்?” என்று கேள்வியெழுப்புகின்றார் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேரா.பாத்திமாபாபு.

தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன், “ஸ்டெர்லைட் ஆலைக்கு 2.50 மில்லியன் காலன் (1.5 கோடி லிட்டர்) தண்ணீர் தினமும் தாமிரபரணி ஆற்றில் இருந்து, திருவைகுண்டம் அணைக்கட்டில் நேரிடையாக ஆழ்குழாய் அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதுப்பணித்துறைக்கு ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு 50 பைசா வீதம் குடிநீர் வடிகால் வாரியம் கட்ட வேண்டும். அவர்கள் அதனை சுத்திகரித்து ரூ.15க்கு தொழிற்சாலையிடம் விற்கின்றனர்.

அதாவது தொழிற்சாலைகளுக்கு ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 15 ரூபாய். பொதுமக்களுக்கு கடையில் ஒரு லிட்டர் பாட்டில் குடிநீர் இருபது ரூபாய். இந்த தொழிற்சாலை தாமிரபரணியில் மட்டுமின்றி புதியம்புத்தூர், கவர்னகிரி போன்ற கிராமங்களின் மானாவரி நிலங்களிலும் ஆழ்குழாய் போட்டு தண்ணீரை உறிஞ்சி வருகின்றனர். அதனால் தண்ணீரின்றி ஒட்டுமொத்த விவசாயமும் பாழ்பட்டு போய்விட்டது” என்று வேதனை தெரிவிக்கின்றார்.

அமெரிக்காவில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளார், டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகள் இவற்றின் மாதிரிகளை, சோதனைச் சாலையில் ஆய்வு செய்து தந்த ஆய்வு அறிக்கையில், ”மண்ணும், நீரும் நச்சுத் தன்மை வாய்ந்த உலோகங்களின் தாக்கம் கொண்டு இருப்பதாகவும், கால்நடைகள் செத்துப்போகும், மனிதர்கள் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப் படுவார்கள், மனிதர்கள் ஆயுட்காலம் இவற்றால் குறையும்” என்று பல்வேறு புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.

தனது கல்லூரிக் காலத்தில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் களமாடி வரும் கிருஷ்ணமூர்த்தி, “தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய்த் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலை தான் உள்ளது.

தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.

ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தாமிரத்தாது ஏற்றி வரும் லாரிகள் துறைமுகத்தில் பட்டாணி, பருப்பு போன்ற சரக்குகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் தமிழகம் முழுவதுமே உணவை நஞ்சாக்கி, பாதிப்புகளை கொண்டு செல்கின்றது ஸ்டெர்லைட்” என்கின்றார்.

பி.தமிழ்மாந்தன் தலைமையிலான ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக ‘தூய சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக் கட்டளை’ என்ற அமைப்பின் வழக்குரைஞர் வி.பிரகாஷ் 07.11.1996 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். கனகராஜ், சி.பி.ஐ.அப்பாத்துரை உள்ளிட்டோர் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.

அந்த வழக்கில் 28.09.2010 இல் உயர்நீதிமன்றம் தீர்பளித்தபோது ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதித்தது. உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு 02.04.2013 அன்று வெளியானது.

அந்த தீர்ப்பில் ”ஸ்டெர்லைட் ஆலை மூலமாக எழும் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுப்பதற்கும் பாதிப்புக்களுக்கு நிவாரணம் வழங்கவும், சுற்று வட்டாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கும் நூறு கோடி ரூபாயை மாவட்ட கலெக்டரிடம் ஆலை நிர்வாகம் வைப்பு நிதியாக மூன்று மாதங்களுக்குள் கொடுத்துவிட வேண்டும். அதிலிருந்து வரும் வட்டி மூலம், பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

“ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டால் ரூ.100 கோடி, கூடங்குளம் அணு உலையை ஏற்றுக் கொண்டால் ரூ.500 கோடி என்று மக்களின் உயிருக்கு விலை பேசுவதை அனுமதிக்க மாட்டோம்” என்கின்றார் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் ம.புஷ்பராயன். இவர் அணு சக்திக்கு எதிரான போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.

ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுவாயுக் கசிவினால் பொதுமக்கள் பாதிப்படைந்தது குறித்து தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் பெரம்பூர் தொகுதியின் சௌந்தரராஜன் (மார்க்சிஸ்ட்), ஓட்டப்பிடாரம் தொகுதியின் டாக்டர்.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), இராமநாதபுரம் தொகுதியின் பேரா.ஜவஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோர் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு சட்டசபையில் பதிலளித்த தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், “மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் கண்காணிப்பு மையத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அதிகளவு கந்தக டை ஆக்சைடு வெளியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவினைத் தொடர்ந்து, அப்பகுதியின் நிலம், நீர், காற்று மாசுபாட்டைத் தடுக்கும் நடவடிக் கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்” என்று உறுதி கொடுத்துள்ளார்.

வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் 12.12.1989இல் அடிக்கல் நாட்டப்பட்டு, அங்கு விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராடியதால் விரட்டியடிக்கப்பட்டது. கோவா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்ட ஸ்டெர்லைட் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 30.10.1994 அன்று காலூன்றியது.

ஆலையை இயங்க விடக் கூடாது என அப்போதே போராட்டங்கள் நடைபெற்றன. தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பல் 20.03.1996 அன்று ஆழ்கடலில் தடுத்து மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டது. துறைமுகத்தின் உள்ளே வந்த எம்.வி.பரங்கவி என்ற கப்பல் 24.10.1996 அன்று துறைமுக முற்றுகையின் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டது.

ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை துவக்கத்தில் ஆண்டொன்றிற்கு 1.50 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்தது. 2003 இல் இருந்து 4 லட்சம் டன் உற்பத்தி செய்கின்றது. துணைப் பொருட்களாக சல்பியூரிக் அமிலம், பாஸ்போரிக் அமிலம், ஜிப்சம், அயர்ன் சிலிகேட் ஆகியவற்றையும் உற்பத்தி செய்தனர். அத்துடன் பிளாட்டினம், பல்லேடியம், தங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆனோடு என்ற பொருளும் உற்பத்தி செய்யப்பட்டது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்கப்பட்ட விதிப்படி ஆண்டுக்கு 1,36,850 டன்னை மட்டுமே இந்த ஆலை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், 2003 டிசம்பரில் வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச் சந்தையில் தனது குழும நிறுவனங்களை பட்டியலிட்டபோது ஆண்டுக்கு 1,80,000 டன் உற்பத்தி செய்வதாக தெரிவித்தனர்.

2004 நவம்பரில் தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் உரிமம் அளிக்கப்பட்டுள்ள 70,000 டன்கள் ஆனோடை விட அதிகமாக, அதாவது 1,64,236 டன்கள் ஆனோடை ஸ்டெர் லைட் ஆலை உற்பத்தி செய்துள்ளது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை.

அனுமதியின்றி கட்டப்பட்ட கந்தக அமிலப் பிரிவு தனது உற்பத்தியை 2005 இல் துவக்கியது. அனுமதி அளிக்கப்பட்ட 3,71,000 டன் கந்தக அமில உற்பத்தியைவிட அதிகமாக 5,46,647 டன் கந்தக அமிலம் 2004 ஏப்ரல்- 2005 மார்ச் வரை உற்பத்தி செய்யப்பட்டது. இது உரிமம் வழங்கப்பட்டதை விட 47% அதிகம்.

தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 2000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தாமிரம் உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுபடுத்துகின்றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை தாமிரம் உள்ளது, ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.

இதுபோன்ற தனது விதிமீறல்களை மறைக்க சமூக வளர்ச்சிக்கான வாழ்வாதார திட்டங்கள் என்ற பெயரில் மக்களை விலை கொடுத்து வாங்குகின்ற வேலைகளையும் செய்து வந்தனர். அரசியல் கட்சிகளையும் தனது வலையில் வீழ்த்தினர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், சத்திஸ்கரில் பால்கோ, ஒரிசாவில் வேதாந்தா அலுமினியம், கோவாவில் சேசா கோவா என்று இந்தியாவையே வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு கடந்த (2010 -2012) மூன்று ஆண்டுகளில் மொத்தம் சுமார் ரூ 28 கோடி நன்கொடையாக கொடுத் திருக்கிறது.