பூவுலகின் 2013 மார்ச் இதழ் பெண்கள் சிறப்பிதழாகவும் இடிந்தகரையில் இயற்கை வளம் காக்கப் போராடும் பெண்களின் அடையாள இதழாகவும் உருவாகியுள்ளது.

இயற்கையுடனான பெண்களின் உறவு, காலந்தோறும் பெருமளவில் கொண்டாடப்பட்டிருந்தாலும் அது ஓர் அறிவியல் அறிவாகவும் பெண்களின் மரபுசார் திறமையாகவும் பலமாகவும் பொதுச்சமூகத்தால் பார்க்கப்படுவதில்லை. அவ்வாறே பெண்களின் அத்தகைய உறவினால் உண்டாகும் ஆதாயங் களும் மனித வாழ்வின் பயன்பாடுகளும் கூட பொதுச்சமூகத்தின் ஆணாதிக்க விஞ்ஞான அறிவால் போற்றப்பட்டதில்லை. ஆனால், இடிந்தகரை பெண்களின் இயற்கை வளம் காக்கும் கடந்த இரு வருடப் போராட்டம் பெண்கள் இயற்கை வளங் களுடன் கொண்டிருக்கும் அறிவியல் அறிவையும், உறவையும், கடமையையும் வெளிப்படுத்தும் போராட்டமாக இருந்ததை, அணு உலை வேண்டும் என இயற்கைக்கு எதிராகச் செயல் பட்டோர் கூட ஒத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தியப் போராட்டங்களிலேயே மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய, நினைவில் பதியும் அளவிற்கான பெண்ணுரி மைப் போராட்டமாகவும் அது உருவாக்கம் பெற்றிருப்பதை, 'பூவுலகின் நண்பர்கள்' இயக்கம் இத்தருணத்தில் கொண்டாடு கிறது. பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் வியக்கும் அளவிற்கு வீரியத்தைக் கொண்டிருந்தது, இப்போராட்டம்.

பெரும்பாலும், ஆதிக்க சமூகத்தினரின் உரிமைகளுக்கான போராட்டத்திற்கே அடித்தட்டு மக்களும் பழங்குடி மக்களும் பயன்பட்டு வந்திருக்கின்றனர். முதல்முறையாக அடித்தட்டு மக்கள் தம் உரிமைகளுக்காக தாமே முன்னணியில் நின்று போராடியதை இடிந்தகரை போராட்டத்தில் காணமுடிந்தது. உலக வரைபடத்தில் காணமுடியாத தம் ஊரை நோக்கி, உலகத்தின் கவனத்தையே திசை திருப்பச்செய்த வல்லமை இடிந்தகரை பெண்களின் போராட்டத்தில் இருந்தது.

இடிந்தகரை பெண்களின் அறநெறி வழி நின்ற ஒரு முனைப்பான போராட்டம் பெண்ணியவாதிகள் எப்பொழுதும் நம்பிய ஆதிக்க பெண்ணியக் கோட்பாடுகளை எல்லாம் சந்தேகிக்கச் செய்துள்ளது. பெண்கள் தம் உடலை இயற்கை யின் கூறுகளில் ஒன்றாகக் கருதும்போதே இத்தகைய அறப் போராட்டத்தை நிகழ்த்தமுடியும். எந்த ஆதிக்கச் சிந்தனைக்கும் அடிமைத்தளைக்கும் தம் உடலையும் சிந்தனையையும் ஒப்படைக்காமல் இருக்கும்போதுதான் இத்தகைய போராட்ட மும் சாத்தியம். மனிதனின் உடல் பற்றிய அறிவும் அது இயங்கும் முறை பற்றிய புரிதலும் இயற்கையின் மாற்றங்களால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் புரிந்துகொண்டு, அதற்கேற்ப மருத்துவர்களைப் போல இயங்கும் திறனை பெண்கள் பெற்றிருப்பதுதான் இதற்குக் காரணம்.

இயற்கையைக் காப்பதற்காக தன்னந்தனியாகவும் குழுவாக வும் பல தளங்களில் போராடும் பெண்களை இவ்விதழில் கண்டடைய முயன்றிருக்கிறோம். அத்தகைய பெண்கள் எல்லோரும் தம் உடலின் மதிப்பை உணர்ந்தவர்களாகவும் அது இயற்கையுடன் கொண்டிருக்கும் பெரும் உறவை அறிந்தவர்களாகவும் அதை பொதுச்சமூகத்திற்குப் புரிய வைப்பதில் ஒவ்வொரு மூச்சும் உழைக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய பெண்களை, ‘பூவுலகு’ இதழ் இந்தப் பூமியின் வீராங்கனைகளாகப் பெருமையுடனும் மகிழ்ச்சி யுடனும் கொண்டாடுகிறது. அவர்களிடம் நிரம்பியிருக்கும் தனிப்பெருங்கருணையே இந்தப் பூமியை இன்னும் மனிதர் வாழ்வதற்கான இடமாக வைத்திருக்கிறது என்று நம்புகிறது!