பாட்டிகளும் அம்மாக்களும் அத்தைகளும் சுற்றியிருந்த பெண்களும் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் சுதந்திரமாகச் செயல்பட்ட சமூகக் குழுவில் பிறந்து வளர்ந்தேன். அப்பொழுது வரதட்சணை என்பது இல்லை. உடன் போக்கு, நடுவீட்டுத் தாலி, கோயில் பூசாரிகள் நடத்தி வைக்கும் திருமணங்களென மிக எளிதாக ஆடம்பரச் சடங்கின்றி மீனவர்கள் தங்கள் புது வாழ்க்கையைத் தொடங்கிவிடுவார்கள். பெண்களின் மறுமணங்கள் இயல்பாக நடைபெற்றன. திருமணமான பெண்கள் கணவனுடன் பிறந்த வீட்டிலும் வாழலாம், புகுந்த வீட்டிலும் வாழலாம். இவை பெரும்பாலும் குடும்பச் சூழல் தொழில் சூழல்களைப் பொறுத்து அமைந்தது.

காலங்காலமாக பட்டினங்களிலும் அதனை ஒட்டியிருந்த கிராமங்களிலும் வாழ்ந்த மீனவர்கள் துறைமுகங்களை நிறுவி ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வணிகர்களாக இருந்திருக்கின்றனர் என்றாலும் அவர்களுக்குச் சொத்தாக இருந்தவை பாய்மரக் கப்பல்களும் தோணிகளும்தான். பெரும்பான்மையான நெய்தல் மக்களுக்கு உடமைகளாகயிருந்தவை பரந்த கடலும் கடற்கரையும் குடிசையும் கட்டுமரமும் வலைகளுமே. ஆயிரமாண்டுகளாக நெய்தல் நிலத்தில் வாழ்ந்துவரும் தமக்கு கடலும் கடற்கரையையும் பூர்வீகக் சொத்து என்ற நம்பிக்கையில் வாழ்ந்தவர்கள் அவர்கள். சொத்துரிமைக்கான நிலப்பட்டா பதிந்து வைத்திராத சமூகம் என்பதால் பெண்களுக்குத் தனியே சொத்துரிமை என்ற கேள்வி அங்கு இல்லை.

மீன்பிடித் தொழிலில் பெண்கள் ஆண்களுடன் சம பங்காளிகளாக செயல்பட்டனர். மீன்பிடிக் கருவிகளை உருவாக்குவது, ஆண்களால் பிடித்துவரப்பட்ட மீனை சந்தைப்படுத்துவது, அந்த வருமானத்தைக் கொண்டு குடும்பத்தையும் சமூக உறவுகளையும் பேணுவது, தொழிற் கருவிகள் வாங்க சேமிப்பது, முதலீடு செய்வது, தேவைகளுக்காக கடன் வாங்குவது, அக்கடனை திரும்பச் செலுத்துவது போன்றவை பெண்களின் கடமைகளாக இருந்தன. பணத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பு ஆண்களுக்குத் தரப்படவில்லை. குழந்தை வளர்ப்பு, சமையல் போன்ற வேலைகளில் ஆண்களுக்கும் பங்கிருந்தது. பெண்கள் வீடு திரும்பும்வரை குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, மனைவி வர நேரமாகிவிட்டால் சமைப்பது, உணவூட்டுவது ஆண்களின் பொறுப்பாயிருந்தது. ஊர்ப் பஞ்சாயத்து,

கோயில் நிர்வாகம் போன்றவற்றில் பெண்கள் முற்றிலும் விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். தாய்வழிச் சமூகத்தின் பல செழுமையான பண்பாட்டுக் கூறுகள் அச்சமூகத்தில் புழக்கத்தில் இருந்தன.

பருத்தி நூல் வாங்கி ராட்டினத்தில் மாட்டி சிக்கெடுத்து பலகையில் சுற்றி, சுற்றியதை நூல் முறுக்கியில் போட்டு நன்றாக முறுக்கியெடுத்த பின் மூங்கில் ஊசிகளில் கோர்த்து மால் நெய்து தருவார்கள் பெண்கள். வலைகளின் வகைக்கு ஏற்றவாறு கண்ணிகளை அளவெடுத்து மால் முடிவார்கள். முடிக்கப்பட்ட மால்களைத் தட்டுத் தட்டாக இணைத்து ஆண்கள் வலைகளை உருவாக்குவார்கள். உருவாக்கப்பட்ட வலைகளை வடிகஞ்சி நீரில் ஊறவைத்து கெட்டிப்படுத்துவதும் புளியங்கொட்டைத் தோலை ஊறவைத்து துவர்ப்புச் சாயம் காய்ச்சி நிறமேற்றுவதும் பெண்களின் வேலை. இவை பருத்தி வலைகளுக் கான வேலை.

இழுவலை போன்ற பெரிய வலைகளுக்கு (கடற்கரைகளில் குன்றுபோல் காட்சியளிக்கும் வலைகள்) தென்னை மட்டையை ஊறவைத்து அடித்து நாறெடுத்து கயிறு திரித்து தருவார்கள், அதைக்கொண்டு ஆண்கள் வலைகளை உருவாக்குவார்கள். ஆண்கள் பிடித்து வரும் மீன்களைப் பக்கத்து கிராமங்களுக்கோ அல்லது மீன் சந்தைகளுக்கோ எடுத்துச் சென்று விற்பனை செய்வது, மீந்த மீனை கருவாடாக பதப்படுத்துவதெல்லாம் பெண்கள் தான். எல்லா பெண்களுக்கும் சந்தைகளில் மீன் விற்க இடம் கிடைப்பதில்லை. பெண்கள் தலைச்சுமையாகப் பல மைல்கள் நடந்து உள்ளுர் கிராமங்களுக்குச் சென்று மீன்களை விற்றுவிட்டு காலம் கடந்து வீடு திரும்புவார்கள். இந்தத் துணிவு மீனவப் பெண்களிடம் மட்டுமே இருந்தது. எந்தக் கிராமத்து ஆதிக்கச்சாதி ஆண்களும் அவர் களிடம் முறைதவறி நடந்துவிட முடியாது.

அறுத்து கையில் கொடுத்துவிடுவார்கள் என்ற பயம் ஆண்களுக்கிருந்தது. பிறகு ‘வசை’ அவர்களின் இன்னொரு ஆயுதம். வசை பொழிய ஆரம்பித்தால் எவனும் அவர்கள் முன் நிற்க முடியாது. அதுபோல் தங்கள் கண்ணெதிரில் மற்ற பெண்கள் பாதிக்கப்பட்டால் எதிர்த்துக் குரல் கொடுப்பார்கள். மீனவப் பெண்கள் பிறரால் அவமானப்படுத்தப்பட்டால் மீனவர்கள் ஒன்றுகூடி தவறுசெய்தவர்களைத் தாக்குவது வழக்கமாக இருந்தது. ஆதிக்கச்சாதிகளுடனான இதுபோன்ற மோதல்களில் மீனவச் சமூகம் அதிகமான பாதிப்புக்கும் இழப்புக்கும் உள்ளான போதும் எதிர்த்து நிற்க மீனவர்கள் தயங்கிய தில்லை.

காலங்காலமாக மீனவச் சமூகங்களின் மீது ஆதிக்கச்சாதிகள் சில இடங்களில் வெளிப் படையான தீண்டாமையையும் பல இடங்களில் மறைமுகமான தீண்டாமையையும் கடைப் பிடித்து வருகின்றன. மீனவர்கள் மீது செயல்படுத்தப்படும் தீண்டாமை முறைகளால் இரு ஊர்களுக்கு இடையில் அவ்வப்போது மோதல்கள் எழுவ துண்டு. இன்றும் கடற்கரையை ஒட்டியுள்ள பல ஆதிக்கச்சாதி கிராமங்களில் பொதுச் சொத்தை பயன்படுத்துவதில் சில தீண்டாமை கட்டுப்பாடு களும் ஒடுக்குமுறைகளும் உள்ளன. பள்ளிகளில் குழந்தைகளைச் சாதிப்பெயர் சொல்லி அவமானப்படுத்துவதும் நடக்கிறது. சில ஆதிக்கச்சாதி கிராமங்களில் நுழைய மீனவ ஆண்களுக்குத் தடையிருக்கிறது. சில ஊர்களில் பொது நிகழ்ச்சிகளின் போது ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் வீதிகளைப் பயன்படுத்தத் தடை இன்றும் இருக்கின்றது.

கடற்கரையில் நிறையக் குடும்பங்கள் பெண் தலைமைக் குடும்பங்களாக இயல்பிலேயே மாறிவிடுகின்றன. கடலில் நேரும் உயிரிழப்பு களில் ஆண்களை இழந்த குடும்பம், தொழில் முறை மோதல்கள், அடிதடிகள், கட்டுமரம் அடிப்பது, வலைகளில் சிக்குவது போன்றவற்றால் ஊனமானவர்களின் குடும்பம், குடிநோய்க்கு அடிமையானவர்களைக் கொண்ட குடும்பங்களில் பெண்கள் குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் இயல்பிலேயே தன்னிச்சையாக செயல்படுபவர்களாகவும் முடிவெடுப்பவர்களாகவும் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். இப்பெண் கள் அக்குடும்ப ஆண்களுக்கோ அல்லது அச்சமூக ஆண்களுக்கோ கட்டுப்பட்டுப் பயந்து நடந்ததில்லை. இச்சமூகத்தில் உழைக்கும் பெண் களுக்கு அதிக மதிப்பளிக்கப்பட்டது. பிறச் சமூகங்களுடன் ஒப்பிடும்போது ஆணாதிக்கம் குறைந்த சமூகமாக மீனவச்சமூகம் இருந்துள்ளது. இதற்கு மீன்பிடித் தொழில்முறை காரணமாக இருந்திருக்கலாம்.

 கடல் தொழிலில் தினமும் மரணத்துடன் போராடி வெற்றி பெற்றுத் திரும்புவது ஆண் களுக்குப் பழகியுள்ளது. மரணம் எப்போதும் நிகழலாம் என்பதை ஏற்றுக் கொண்ட இச்சமூகத்தில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவது குறைவாக இருந்துள்ளது. ஆண்கள் பெண் களிடம்தான் குடும்பத்தையும் குழந்தைகளையும் காக்க வேண்டிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டியிருந்தது.

மேலும் தன் வாரிசை சுமக்கும் பெண் தன் இறப்புக்குப் பிறகு தன் குழந்தையை முறையாக வளர்தெடுத்து கடைத்தேற்றவேண்டும். உயிருடன் இருக்கும் வரை மனைவியை அதிகாரம் செலுத்தி அடிமையாக வைத்திருந்தால் தான் இறந்த பிறகு தன் சந்ததியைக் கைவிட்டு விடுவாளோ என்ற அச்சமும் காரணமாக இருந்திருக்கலாம். மீனவப்பெண்கள் தம்மைப் பிறர் காப்பாற்ற வேண்டும் என்பதைவிடப் பிறரைத் தான் காப்பாற்றும் பொறுப்பை கையிலெடுத்துக் கொள்ளுவது வழக்கம். மரபான வகையில் மீனவக்குடும்பங்களில் ஆண்-பெண் சமத்துவம் இயல்பாக இருந்து வந்தது.

1980களுக்கு முன்பு வரை இதுபோன்ற சமூக, தொழில், பொருளாதார மற்றும் பண்பாட்டு வாழ்வியல் முறை ஒவ்வொரு மீனவக் கிராமத் திலும் இருந்துள்ளது. மீன்பிடித் தொழிலில் கூலி என்ற முறை இருந்ததில்லை. பொதுவுடமைச் சமூகத்தின் கனவாக இருக்கும் ‘கூட்டு உழைப்பு, கூட்டு உற்பத்தி, பொதுப்பங்கு’ என்பதைத் தமது தொழில் நியதியாகப் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் வைத்திருந்த வர்கள் மீனவர்கள்.

தமிழகத்தில் 60-70களில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீலப்புரட்சி, இயந்திர மயமான கடல்தொழில் முறைகளின் பெருக்கத் தால் பல அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக 80-களில் மீனவச் சமூக வாழ்வியல் தலைகீழாக மாறத் தொடங்கியது. இச்சமூகத்தை ஆண்தலைமைச் சமூகமாக மாற்றியது. ‘அதிக மீன் உற்பத்தி, மீனவர் பொரு ளாதார மேம்பாடு’ என்ற பொய் கோஷத்தை முன்வைத்து நைலான் வலைகள் மற்றும் விசைப்படகுகளை வாங்குமாறு மீன் வளத்துறை மீனவர்களை நிர்பந்தித்தது.

உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளால் உற்பத்திச் செய்யப் பட்ட மீன்பிடிச் சாதனங்களை வாங்க அதிக முதலீடு தேவைப்பட்டதால் மீனவர்கள் கடனாளி யாக்கப்பட்டனர். பாரம்பரிய, இயற்கையான, நீடித்த நிலையான மீன்பிடி முறைகள் அழிக்கப் பட்டு நவீன தொழில் நுட்பத்தைப் அறிமுகப் படுத்தியதால் மரபாக மீன்பிடி தொழிலின் சமபங்கு வகித்த மீனவப் பெண்கள் வெளியேற்றப் பட்டனர். இந்திய அரசு பெண்களின் கைத்தொழி லாக இருந்த வலை உற்பத்தியைப் பிடுங்கி இயந்திர முதலாளிகளிடம் கொடுத்துவிட்டு மீனவப் பெண்களை வெறும் சோறாக்கிப் போடும் வேலைக்காரர்களாக மாற்றிவிட்டது. சுதந்திர இந்தியாவில் அரசின் ‘உமன் எம்ப்பவர்மென்ட்’ திட்டம் இப்படித்தான் இருக்கிறது.

 சுனாமிக்குப் பிறகு தொண்டு நிறுவனங்கள் பெண்களுக்கு சுயத்தொழில் பயிற்சி என்ற பெயரில் ‘விஷ கடற்பாசி’ வளர்ப்பது, மெழுகு வர்த்தி செய்வது, ஊறுகாய் தயாரிப்பது, சொகுசு விடுதியில் எச்சில்தட்டு கழுவுவது போன்ற வேலைகளுக்குப் பயிற்சி அளித்தனர். இதற்கான முகாம்களில் மீனவப் பெண்களுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்புகளை குறித்து ஆதிக்கச்சாதி சமூக சேவகர்கள் இதுபோன்ற ஆலோசனை களைத்தான் தந்தார்கள்.

கட்டுமரங்கள், பாய்மரப்படகுகள், நாட்டுப் படகுகளைத் தங்கள் கைத்தொழில் நுட்பத்தால் உருவாக்கிய மீனவக் கலைஞர்களையும் கைவினை யாளர்களையும் நீலப்புரட்சி அழித்தது. ‘கோடீஸ் வர முதலாளிகள்’ உருவாக்கும் கண்ணாடியிழைப் படகுகளையும், பிளாஸ்டிக் கட்டுமரங்களையும், ஸ்டீல் படகுகளையும், இயந்திர மோட்டர் களையும் வாங்குங்கள் ஒரே ஆண்டில் நீங்களும் கோடீஸ்வரர்களாவீர்கள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. லட்சம் லட்சமாக கடன் வாங்கிய மீனவர்கள் நிரந்தர கடனாளியாக்கப்பட் டார்கள். அதிக முதலீடு செய்து இயந்திரப்படகு வாங்கி, ஆயிரமாயிரமாக டீசல் ஊற்றி பிடிக்கப் பட்ட மீன்களுக்கு உரிய விலையில்லை. விசைப் படகினால் பிடிக்கப் பட்ட அதிகமான மீன்களை எடுத்துச் சென்று விற்க பெண்களால் முடிய வில்லை. மீன்களை விற்பதற்கு இந்திய அரசும் மீன்வளத்துறையும் புதிய சந்தைகளை கட்டித் தரவில்லை. அம்மீன்களைப் பாதுகாக்கவும் பதப்படுத்தி வைக்கவும் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லவும் தேவையான கட்டுமான வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் போன்ற வற்றை உரிய அதிகாரிகளும் ஆட்சியாளர் களும் உண்டாக்கித் தரவில்லை. இதனால் மீனவர்கள் பிடித்த மீனின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

படகு வாங்கக் கடன் கொடுத்த ஆதிக்கச்சாதி முதலாளி லாரியுடன் நிற்கிறான், அந்த முதலாளி கேட்ட விலைக்கு மீனை விற்கிறான் மீனவன். அன்றைக்கான கடன் தவணைபோக மிஞ்சிய சொற்பத் தொகையை வேலையிழந்து வீட்டுக்குள் முடங்கிப்போன மனைவியிடம் தர கணவன் கூசினான். அவன் ஏமாற்றப்பட்டதன் வலியிலி ருந்து விடுபட மனைவியிடம் அதிகாரம் செலுத்தத் தொடங்கினான். அன்றன்றைய குடும்பச் செலவுக்குப் பணம் கொடுப்பான். அந்த வருமானம் சாப்பாட்டுக்குப் போதாது, பள்ளிக்குப் போகும் குழந்தைகளுக்கு போதாது, அன்றைக்குத் தேவையான டீசல் வாங்கப் போதாது, கிழிந்த வலைக்கு மாற்றுவலை வாங்கப் போதாது, சேத முற்ற படகை சரிசெய்ய போதாது. இப்படித்தான் நீலப்புரட்சி ஒவ்வொரு மீனவக் குடும்பத்தையும் கடனாளியாக்கி குடும்பப் பொருளாதாரத்தில் பங்கெடுக்க முடியாத மன அழுத்தத்தைப் பெண் களுக்குக் கொடுத்தது. பண நிர்வாகம் மொத்தமும் ஆண்களின் கைக்குச் சென்றது. ஆணைச் சார்ந்து வாழ வேண்டிய அடிமையாக மீனவப் பெண்ணை மாற்றியது தான் ‘நீலபுரட்சி’ யின் சாதனை.

கடன் சுமை மீனவர்களின் வாழ்வியலை அதிகமாகப் பாதித்துள்ளது. நிலவுடமைச் சமூகங் களில் வழக்கத்திலிருந்த ஆண்களுக்கு ‘வரதட் சணை, சீர்’ கொடுத்து திருமணம் செய்யும் முறையை மீனவர்கள் கடைபிடிக்கத் தொடங்கி னர். மீன்பிடி கருவிகள் வாங்க பணம் திரட்டு வதுடன் பெண்ணின் திருமணத்திற்கு நகையும் பணமும் சேர்த்தாக வேண்டும் என்ற நிலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏற்பட்டது. மீன்பிடித் தொழில் உற்பத்தியிலிருந்து துரத்தப்பட்ட பெண் குடும்பத்திற்குள்ளும் மதிப்பிழந்து போனாள். இன்று கடற்கரையில் வாழ்ந்தாலும் பல பெண் கள் கடற்கரைக்குச் செல்வதில்லை.

திருவிழா அல் லது விஷேச காலங்களில் மட்டுமே பெண்கள் கடற்கரைக்கு போகும் நிலை பல கிராமங்களில் உருவாகி விட்டது. கடற்கரையை முழுமையான ஆண் உழைப்புக்கான இடமாக நீலப்புரட்சி மாற்றிவிட்டது. காலத்தையும் வெளியையும் கைப்பற்றினால்தான் பெண்கள் சுதந்திரமடைய முடியும் என்று பெண்ணிய வாதிகள் போராடிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் மீனவப் பெண்களின் ஆளுகையில் இருந்த இரண்டையும் உலகமயமாதல், நவீனமய மாதல், பன்னாட்டு முதலீட்டியம் போன்றவை அவர்களிடமிருந்து அந்நியமாக்கி ஒரு சமூகக் கீழிறக்கத்தை வெற்றி கரமாக நிகழ்த்தி முடித்திருக்கிறது நீலப்புரட்சி.

இப்போது நிறைய மீனவப் பெண்கள் மீன் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் களே என்று கேள்வி எழலாம். மீனவச் சமூகத்தில் ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு மிகப் பெரிய அளவில் தெரியாமல் இருந்த நிலை மாறி, ஏது மற்ற கூலிகள் என்ற ஒரு வர்க்கத்தை நீலப்புரட்சி உருவாக்கித் தந்தது. தொழிற்புரட்சியால் ஆறுகளும் கடலும் கழிவுநீர் சாக்கடைகளாக உருமாறியபின் ஆறு மற்றும் தரைக்கடல் மீன்வளம் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டது.

பல லட்சங்களை முதலீடு செய்து மீன்பிடிக் கருவிகளை வாங்க முடியாக மீனவர்கள் வேலை அற்றவர் களாக்கப்பட்டார்கள். சுயதொழில் முதலாளிகள் இன்று கூலிகளாக்கப்பட்டுள்ளனர். பெண்களின் சொத்தான வலைகளும் கட்டுமரங்களும் இன்றில்லை. கணவன் பிடித்த மீனை விற்ற வியாபாரி என்ற நிலை போய்விட்டபின் மீன் பிடித்துறைமுகங்களுக்குச் சென்று மீன்வாங்கி விற்கும் ‘சில்லறை விற்பனையாளர்களாக’ பெண்கள் மாற்றப்பட்டுள்ளார்கள். உதிரிகளாக ஆக்கப்பட்ட பின்னும் இந்தப் பெண்கள் இரட்டைச்சுமையைத் தாங்கியபடி தலைமைப் பண்புடன் இருக்கிறார்கள்.

ஆனால் தாய்வழிச் சமூகம் அளித்துவந்த பழைய பலம் அவர்களிடம் இல்லை. ‘கடலைக் கைப்பற்றுவோம் கடற் கரையைக் கைப்பற்றுவோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து கடந்த முப்பது ஆண்டுகளாக மீனவ மக்கள் தொடர்ந்து தங்கள் வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். கூடங்குளம் அணுவுலை களுக்கெதிரான போராட்டங்கள் மற்றும் மீனவர் உரிமைகளுக்கான பல போராட்டக்களங்களில் பெண்கள் முன்னின்று தலைமையேற்று நடத்திச் செல்வதற்கு பாரம்பரியமாக தொடரும் தாய்வழிச் சமூகம் அளித்து வந்த துணிவும் தலைமைப் பண்பும் தான் காரணம்.

தமிழகத்தில் 1970-களில் பரவலாக்கப்பட்ட ‘தொழிற்புரட்சி’ கடற்கரை நிலங்களைக் கைப்பற்றி முதலாளிகளுக்குக் கொடுத்தது. தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கும் பிரமாண்ட சாக்கடைகளாகச் சமுத்திரங்கள் மாற்றப்பட்டன. இதே காலக்கட்டத்தில் கடல் வளத்தை பன்னாட்டு, உள்நாட்டு மீன்பிடிக் கப்பல்கள் வரைமுறையற்று சூறையாட அனுமதி அளிக்கப்பட்டது.

இயந்திரத் தொழில் நுட்பத்தை மீனவர்களிடம் திணித்த அரசே மீனவர்கள் மீன்வளத்தை அழிக்கிறார்கள் என்று கூறி ‘கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா 2009’ ஒன்றைக் கொண்டு வந்தது. அதில் இயந்திரப்படகு கொண்டு மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு பல வித கட்டுப்பாடுகளும் தண்டணை முறைகளையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயந்திரப் படகுகள் 12 கடல் மைல்களுக்குள் தான் மீன் பிடிக்க வேண்டும். 10,000 ரூபாய் மதிப்புள்ள மீன்கள்தான் பிடிக்க வேண்டும்.

இந்த எல்லையைத் தாண்டி மீன்பிடித்தால் 9 லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். இப்படி மீனவர்களின் வாழ்வுரிமைக்கு எதிரான பல சட்டங்கள் அதில் உள்ளன. இந்தச் சட்டவிதிகள் அந்நிய, உள்நாட்டு முதலாளிகளின் பிரம்மாண்ட மீன்பிடிக் கப்பல்களைக் கட்டுப் படுத்தாது என்பது கூடுதல் அம்சம். காட்டை அழித்து மரங்களைக் கடத்தும் கொள்ளை யர்களை கைது செய்யாமல் அடுப்புக்கு விறகு எடுக்கும் ஆதிவாசிகளைக் கைது செய்வது போன்றது இது.

பாரம்பரியமாக தம் மண்ணில் வாழ்ந்து வந்த மீனவர்கள் ‘தொழில் வளர்ச்சி, தேச வளர்ச்சி’ என்ற பெயரில் நிலவுரிமை அற்றவர் களாக்கப்பட்டு கிராமம் கிராமமாக துரத்தப் பட்டார்கள். பெரிய வணிகத்துறை முகங்களுக்காக வும், துறைமுக விரிவாக்கத்துக்காகவும் அணு உலைத் திட்டங்களுக்காகவும் அனல்மின் நிலையங்களுக்காகவும் தொழிற்சாலைகளுக்காக வும் சுற்றுலாதளங்களுக்காகவும் பண்ணை வீடுகளுக்காகவும் கேளிக்கை பூங்காக்களுக்காகவும் மணல் குவாரிகளுக்காகவும் மத்திய, மாநில அரசுகள் மீனவர் களை வெளியேற்றியதுடன் வெளியேறுவதற்கான நிர்ப்பந்தங்களைச் செய்து வருகின்றன.

மீனவர்களின் மீன் உற்பத்தி பெற்றுத்தரும் அந்நியச் செலாவணி, உள்நாட்டு வருவாய் போன்றவற்றை தேசிய வளர்ச்சிக் குறியீட்டு எண் வரை படத்துக்குள் கொண்டு வராமல் அரசுகள் திட்டமிட்டு மறைத்தன. சில கோடிகளையே வருவாய் ஈட்டித் தரும் தகவல்தொழில்நுட்பத் துறைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆயிரமாயிரம் கோடி வருவாய் ஈட்டிதரும் மீன்பிடித்துறைக்கும் மீனவர்களுக்கும் ஒரு முக்கியத்துவமும் அளிப்பதில்லை.

மீனவர் களின் எதிர்ப்புகள் ஆட்சியாளர்களின் நாற்காலி களைப் பாதிப்பதில்லை என்பதால் மீனவர்களின் போராட்டங்கள் எளிதாக ஒடுக்கப்பட்டு கோரிக் கைகள் வழக்கமாக குப்பைத் தொட்டிகளில் போடப்படுகின்றன. 2004 சுனாமிக்குப் பிறகு தமிழ்நாட்டுக் கடற்கரையில் தொழில் வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில் மீனவ கிராமங்களை அழிக்கும் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.

2004 டிசம்பரில் தமிழகக் கடற்கரையை தாக்கிய சுனாமிக்கு நிவாரணமளிக்க பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் மீனவ கிராமங்களை நோக்கிப் படையெடுத்தன. பல தொண்டு நிறுவனங்கள், அறிவுஜீவிகள், ஆய்வாளர்கள், விமான நிறுவனங்கள், தனியார் வாகன உரிமை யாளர்கள், கட்டுமானப் பொருள் உற்பத்தி யாளர்கள், விற்பனையாளர்கள், ஓட்டல் முதலாளிகள், மீன்பிடிக் கருவி வியாபாரிகள், நில வணிகர்கள், தரகர்கள் அனைவரும் இதில் கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.

மீனவர்களின் சமூகப் பொருளாதார நிலை ‘அகதி வாழ்க்கை’ நிலைக்குத் தள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினருக்கு நிவாரணமாக 325 சதுரஅடி அளவுடைய தரமற்ற வீடுகளும், தரமற்ற படகுகளும் கொடுத்துவிட்டு கடற்கரை மக்களின் நிலவுரிமையை, வாழ்வுரிமையை பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிக்கு தாரைவார்க்க தொடங்கியது மத்திய, மாநில அரசுகள். சுனா மிக்குப் பிறகு கடற்கரையையும் கடல்வளத்தையும் கொள்ளையிட வந்த பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு முகவர்களாக பன்னாட்டு, உள்நாட்டு தொண்டு நிறுவனங்கள் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர்கள் செயல் பட்டார்கள். சுனாமியையட்டி கடற்

கரைக்குள் நுழைந்த தொண்டு நிறுவனங்கள் குடும்பம், வருமானம், பண்பாடு, கல்வி, பொதுச்சுகாதாரம், கிராம மக்கள்தொகை என்பதுடன் கிராம வரைபடம், நிலவுரிமை, ஊர்ச்சொத்து, பொதுச்சொத்து, புறம்போக்கு, மணற்குன்று, நீர்நிலைகள், கழிமுகங்கள், முகத்துவாரங்கள், ஆறுகள், இயற்கை வளங்கள் என அனைத்தைப் பற்றியும் விபரங்களைச் சேகரித்தனர்.

கடற்கரையையும் கடல்வளத்தையும் மீனவர் வாழ்வாதாரத்தை ஓரளவுக்குக் காப்பாற்ற 1991-இல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை (சிஸிஞீ) விலக்கிக் கொள்ளப்பட்டு கடற்கையை கொள்ளையிட முதலாளிகளுக்கு உரிமை வழங்கும் கடற்கரை மேலாண்மை மண்டல அறிவிப் பாணை (சிவிஞீ) 2005-ல் எம்.எஸ். சுவாமி நாதனால் தயாரிக்கப்பட்டு வரைவாணையாக வெளியிடப்பட்டது. மீனவர்களின் எதிர்ப்பை மீறி மீனவர் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் சேது சமுத்திரத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அவசர அவசரமாகச் செயல் படுத்தத் தொடங்கின. அரசும், அரசியல் தலைவர்களும் கைவிட்ட மீனவர்களை ‘ராமர்’ சேது திட்டத்தை நிறுத்திக் காப்பாற்றினார்!

கிழக்குக் கடற்கரைச்சாலை நில மதிப்பு சுனாமிக்குப் பின் பல லட்சங்களாகவும் கோடி களாகவும் விலையேறியது. அரசியல்வாதிகள் பினாமிகள் பெயரில் 400 ஏக்கர் 500 ஏக்கரென கடற்கரையில் நிலங்களை வாங்கிக் குவித்தனர். மீனவர்கள் குடியிருப்புகள் சுற்றி வளைக்கப்பட்டு அனைத்து நிலங்களும் தொழிலதிபர்கள் பெயர் களில் பட்டாவாக மாற்றப்பட்டன.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்ட ஆறு மாதத்துக்குள் நிலங்களை அரசால் கையகப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து சுனாமி ஆபத்து இருப்பதால் கடற்கரையில் மீனவர்களுக்குப் பாதுகாப்பில்லை கடற்கரையை விட்டு வெளி யேறுங்கள் என்று சொன்ன எம்.எஸ். சுவாமி நாதனும் அரசும் அந்தப் பாதுகாப்பில்லா கடற்கரை நிலங்கள் சுனாமிக்குப் பிறகு பல கோடிகளாக விலையேறியது எப்படி என்று விளக்கவேயில்லை.

2004-க்குப் பிறகு நூறுக்கும் மேற்பட்ட தனியார் அனல்மின் திட்டங்களுக்கும் பத்துக்கும் மேற்பட்ட பெரு வணிக துறைமுகங் களுக்கும். சிப்காட்களுக்கும், நூறுக்கும் மேற்பட்ட கடற்கரை தனியார் ரிசார்ட்களுக்கும் தமிழகக் கடற்கரைகளில் அனுமதி வழங்கப்பட்டன. இன்று மீனவர்கள் இறந்தால் புதைக்கக்கூட அவர்களுக்கு நிலமில்லை. தங்கள் வாரிசுகளின் புதிய குடும் பத்துக்கு ஒரு சென்ட் வாங்க மீனவர்களிடம் இன்று கோடிகள் இல்லை.

மீனவர்களின் தொடர் போராட்டத்தினால் கடலோர மேலாண்மை மண்டல அறிவிப்பானை மட்டும் விலக்கிக் கொள்ளப்பட்டது. மீனவர்கள் கடற்கரையில் வாழலாம். ஆனால் அவர்களுக்கு நிலவுரிமை யில்லை. தமிழகத்தில் சமூக அரசியல் அதிகார நிறுவனங்களில் அனாதைகள் ஆக்கப்பட்ட மீனவச் சமூகத்தை பெரிய நகரங்களை ஒட்டிய குப்பங்களை விட்டு வெளியேற்றிக் கொண்டி ருக்கிறது அரசு.

பழவேற்காடு தொடங்கி குளச்சல் வரை 500க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இக்காலங் களில் களப்பணிகளுக்காக சென்றிருக்கிறேன். கடலூர் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் 2005 முழுவதும் வேலை செய்துகொண்டிருந்தேன். எல்லா கிராமங்களிலும் படித்து முடித்த முதல் தலைமுறை இளஞைர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் மீன்பிடித் தொழிலுமில்லை அரசு வேலைவாய்ப்புமில்லை.

27 சதவீதம் இட ஒடுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலிலிருக்கும் மீனவர்களில் இன்னும் ஒரு சதவீதத்தினர் கூட அரசுவேலை வாய்ப்பை பெற்றிருக்கவில்லை. ராமேஸ்வரம், திருவள்ளுர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங் களைச் சேர்ந்த மீனவர்களின் கல்வி, வருவாய் மற்றும் வாழ்க்கை தரம் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. பொதுவாகக் கிராமங்களில் இருந்து 10 சதவீதம் இளைஞர்கள் கப்பல் நிறுவனங்களில் கூலிகளாக இருக்கிறார்கள். சென்னை, திருவள்ளூர் மாவட்ட பழைமையான மீனவக் குப் பங்கள் சுவடில்லாமல் அழிக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் தங்கள் சிறுநீரகங்களை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆதிக்கச் சாதியினரின் கடத்தல் வியாபாரம் போன்ற முறையற்ற தொழிலில் ஆண்கள் கூலிகளாக மாறினர். இனி இம்மக்களுக்கு அரசு வழங்கப் போவது கண்ணகிநகர் போன்ற திறந்தவெளிச் சிறை முகாம்களையே.

1076 கி.மீ. நீளமுள்ள தமிழகக் கடற்கரையில் 13 மாவட்டங்களில் 600 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் பாரம்பரிய மீனவர்கள் பல நூற்றாண்டுகளாக ஊதியமின்றி அனைத்து சமூகத்தினரையும் அந்நியர்களிடமிருந்து காவல் காக்கும் எல்லைக் காவல் தெய்வங்களாக விளங் கினர். இயற்கையோடு இயைந்து சுற்றுச் சூழலை மாசுப்படுத்தாமல், கடல் வளத்தை அழிக்காமல் அன்றன்றைய தேவைக்கு மட்டும் மீன்பிடித்து ஆண்களும் பெண்களுமாக இணைந்து சுதந்திர மாகப் பாடுபட்டு வாழ்ந்து வந்தவர்கள் இந்த மீனவர்கள். கடலும் கடல் வளமும் நிலமும் சுற்றுச்சூழலும் மீனவச் சமூகத்தால் பாதுக்காக்கப் பட்டு வந்தது.

எப்போது அரசுகள் தொழில் வளர்ச்சி, தேச வளர்ச்சி என்ற போர்வையில் கடற்கரைகளைக் கைப்பற்றி விற்கத் தொடங் கியதோ அன்றிலிருந்து கடல் மாசடைந்து கடல் வாழ் உயிரினங்களின் இறுதி நாட்கள் தொடங்கி விட்டன. நெய்தலின் வீழ்ச்சி இன அழிவுக்கு அழைத்து செல்லும், வான் பொய்த்து, காடுகள் அழிந்து, ஆறுகள் பாலையாகின்றன. கடலின்றி அமையாது உலகு.