“கபிலர் மலையை சுடுகாடாக்கி வரும் கொலைக்கார ஆலையை மூடு. பசுமைதாயகம் என்று பசப்பி திரியும் ராமதாசே தொகுதிக்குள் வராதே”... இப்படி ஒரு வாசகத்தோடு சாதிக் கட்சி ஒன்றுக்கு எதிராக அவர்களது தொகுதியிலயே போராட்டம் நடத்திய பெண்களின் வலிமை எத்தகையதாக இருக்கும் என்று நினைக்கும் போது போராட்டங்களில் பெண்களின் நிலைப்பாடு நியாத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பது புலப்படுகிறது.

“மண்ணையும் நீரையும் அழிக்கும் காகித ஆலை தேவையில்லை” என்று ஒரு பெண் போராட்டம் நடத்தும் போது.. வேலைவாய்ப்பு தரும் ஒரு தொழிற்சாலை பன்னாட்டு தன்மையோடு இயங்கி நம்மூருக்கு தொழில் வளத்தோடு மக்களும் வளம் பெறுவார்கள் தானே... என்று சொல்லி வேலைக்கு வேட்டு வைக்கிற வேலையை ஏன் செய்யனும் என்று ஆரம்ப காலகட்டத்தில் கிசுகிசுத்தார்கள். இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குடிப் பதற்கு உகந்ததல்ல... நஞ்சு கலந்திருப்பதால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அந்த நீரை குடிக்க தடைசெய்கிறது என்ற அறிவிப்பு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்தில் உள்ள கபிலர் மலை பகுதியை சேர்ந்த மக்களுக்கு இடியாய் இறங்கியதோடு பொன்நிர்மலா என்ற பெண்ணின் போராட்டத்தின் முக்கியதுவம் உணர்ந்தனர் அப்பகுதி மக்கள்.

சுற்றியுள்ள 5 கிராமங்களின் தண்ணீர் மாசு கலந்திருப்பதாக அறிந்த்தும் தமிழ்நாடு விவசாயிகள் ம்ற்றும் விவசாய தொழிலாளர்கள் முன்னணி அமைப்பு சார்பில் நிர்மலா போராட்டத்தை தீவிரப்படுத்தினார். வெளி நாட்டு கழிவுகளை கொண்டு தயாரிக்கும் சரஸ்வதி காகித ஆலைக்கு எதிராக நடைபெற்ற மூன்றரை ஆண்டு போராட்டங்கள் ஊடக வெளிச்சத்தில் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால் இன்று கூடங்குளம் பெண்களுக்கு முன்னுதரணமாய் விளங்குவது இந்த போராட்டம் தான்.. 10ம் வகுப்பு வரை படித்த நிர்மலா கூலி விவசாயியாக தினசரி வாழ்க்கையை நகர்த்தவே பெறும் உழைப்பை கொடுக்க வேண்டியவற்கு இயற்கை, சுற்றுச்சூழல், தான் வளர்ந்த மண் மீதிருந்த ஈடுபாடு அவரை ஒரு போராட்ட பெண்மணியாக மாற்றியது.காகித ஆலையை எதிர்த்து முதலில் தைரியமாக சுவரொட்டிகளை ஒட்டினார் .

திடக்கழிவு ,கழிவு மேலாண்மை உள்ளிட்டவைகள் முறைப்படுத்த வில்லை என்று தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆலைக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆலை நிர்வாகம் எதனையும் கண்டு கொள்ளவில்லை. கபிலர் மலையில் பொதுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு காகித ஆலை முற்றுகையில் ஈடுபட்ட 700 க்கும் மேற்பட்ட வர்கள் அத் தொகுதி பாமக சட்டமன்ற உறுப் பினர் நெடுஞ்செழியனைக் கொண்டு அடக்க முயற் சித்தது ஆலை நிர்வாகம். விவசாயிகளை விரட்டி அடித்தபோதும் தொடர்ந்து அறவழியில் நின்று போராடினார்கள். அடுத்தக்கட்டமாக கபிலர் மலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஆயிரம் விவசாயிகள் உண்ணாநிலை போராட் டத்தை நடத்தினர்.

பரமத்திவேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆயிரம் பேர் கூடி ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தினார்கள்.இப்படி நிர்மலாவின் போராட்டம் மாவட்ட தலைநகர் வரை உலுக்கியது.அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அமைப்பின் பொருளாளர்கள் மீது ஆலைக்கு வேலைக்கு செல்லும் ஆட்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று பொய் வழக்கு போடப்பட்டது.ஆனாலும் தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராகினர் நிர்மலாவும் அவர்களது அமைப்பும்.ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நெடுஞ்செழியன் நலதிட்ட உதவிகளை செய்ய வந்தபோது ஊர் மக்கள் முற்றுகையிட்டனர் .வழக்கம் போல் போலிசார் சமரசம் செய்து அவரை அழைத்துச சென்றார்கள்.

நிர்மலா அடுத்து முன்னின்று ஆலைக்கு எதிராக எடுத்த போராட்டம் தொடர்ந்து 7 நாள் உண்ணாநிலை போராட்டம். போராட்டங்களில் தீவிரம் அக்கம்பக்கம் உள்ள பகுதிகளில் பரவ உடனடியாக முழித்துக் கொண்டு கபிலர் மலை மக்கள் பாதுகாப்பு சங்கம் ஒன்றை ஆரம்பித்து காசுகொடுத்து ஆட்களை கூட்டி வந்து போராட்டக்காரர்களுக்கு எதிராக ஆலைக்கு ஆதரவாக போராட்டத்தை நடத்தினர்.

ஆலை ஆரம்பித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு அதன் கேடுகள் தெரியவந்து போராட்ட்த்தை முன்னெடுத்தார் நிர்மலா ...பெண்கள் மட்டும் பங்கேற்கும் போராட்டம் ,குழந்தைகள் ம்ட்டும் 2010ல் தடையை மீறி போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் மட்டுமல்ல பெண்கள் குழந்தைகள் என்று குடும்பத்துடன் சிறைக்கும் சென்றிருக்கிறார்கள். பரமத்திவேலூர் சிறை கபிலர் மலைப் பகுதி ச் ,குழந்தைகள் சென்ற வரலாறை நாளை தாங்கி நிற்கும். அந்த வரலாறுக்கு பின்னால் இயல்பாக நிர்மலா நிற்பார்.

பசுமைதாயகம் நடத்தி வரும் ராமதாசையும் அவரது மகன் அன்புமணியையும் நேரில் சந்தித்து நெடுஞ்செழியன் சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல் படுகிறார் என்று புகார் கொடுத்தனர்.ஆனால் அதற்கு பாமகவில் இருந்து எந்த பதிலும் இல்லை ..இந்த நிலையில் தான் மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்த வந்த ராமதாசை ஊருக்குள் விடாமல் மேலே சொன்ன வாசகங்களோடு நிர்மலா தலைமையில் பெண்களே வெளியேற்றி னார்கள். 2010 தேர்தலின் போது வாக்கு சேகரிக்க வந்த திமுக மாவட்ட கழக செயலாளர் காந்தி செல்வனை முற்றுகையிட்டு கோரிக்கைகளுக்கு அவரிடம் பதில் இல்லாதது இந்த பிரச்சினையில் ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்கிறது என்பது வெளிச்சமானது.

தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் முன்னணியோடு விடியல் அமைப்பும் இணைந்து தான் இந்த போராட்டத்தை நடத்தியது.ஆடு மாடுகளை ஆலைக்கு முன்னால் நிறுத்தி போராடியதும் கால்நடைகளுடன் கைதாகியதும் கவனத்தில ஈர்க்க மக்களின் போராட்டத்திற்கு அங்கிகாரமாய் 18 நாள் சரஸ்வதி காகித ஆலை மூடப்பட்டது.

ஆனால் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஆலை திறக்கப்பட்ட போது மலை போல் குவிந்திருந்த அந்த கழிவுகள் அப்புறப்படுத் துறோம் என்ற பெயரில் மற்றுமொரு இடத்தில் பாதுகாப்பின்றி கொட்டப்பட்டது.இதற்குபிறகு முழுமையாக ஆலை மூடப்படவில்லை என்றாலும் ஓரளவிற்கு சுற்றுச்சூழலுக்கு எதிரான சில விஷயங்கள் கலையப்பட்டு நெறிப்படுத்தப் பட்டன. கோடி களில் செலவிட்டு சுத்தகிர்ப்பு ஆலை அமைக்கப் பட்டது. சுமார் 31 வகையான போராட்டங்கள் 14 பொய் வழக்குகளை சந்தித்தது. அதில் 4 வழக்குகள் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது மேலும் 10 வழக்குகள் இன்னும் நிலையில் உள்ளன.

3 முறை அந்த தொகுதியில் பாமக வெற்றி பெற்ற தொகுதியில் இந்த பெண்களின் போராட் டம் கொங்கு இளைஞர் பேரவையின் வேட்பாளர் தனிஅரசை வெற்றி பெற வைத்தது. ஆனால் அவரும் ஓட்டுக்கட்சி அரசியல்வாதி என்பதை தேர்தலுக்கு பின் உணர்த்த தவற வில்லை...