இரண்டு ரூபாய்க்குக் கிடைக்கும் புளிப்பு மிட்டாய்களை நியாயமாகப் பங்கிட்டுக் கொள்வதன் மூலம், 10 பேரின் பசியை போக்கிக் கொள்ளும் கலையில் இந்தப் பெண்கள் கைதேர்ந்த நிபுணர்களாகி விட்டார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் வெங்கிடங்கால் பஞ்சாயத்தில் உள்ள வெங்கிடங்கால், செம்பியநேரி கிராமங்களைச் சேர்ந்த இந்தப் பெண்கள், சுற்றியுள்ள பஞ்சாயத்துகளில் வயல் வேலை செய்த பிறகு தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருவாயை, நியாயமாகப் பகிர்ந்து கொள்ளும் முறை இது.

கீழ்வேளூர் பஞ்சாயத்து யூனியனின் கீழ் வரும் வெங்கிடங்கால் கிராம பஞ்சாயத்தில் கண்மூடித்தனமான மணல் கொள்ளை மற்றும் சாகுபடி பரப்பு குறைந்து வருவதால் வயல்வெளிகள் வேகமாக அழிந்து வரும் நிலையில், பெருமளவு உழைக்கும் பெண்கள் மேற்கண்ட முறையில்தான் தங்களுடைய வேலையிழப்பை சமாளிக்கிறார்கள்.   

ஒரு காலத்தில் பச்சைப் பசேல் என்றிருந்த வயல்வெளிகளுக்குப் பதிலாக பச்சைக் குன்றுகளும், வெற்றுக் குழிகளும்தான் இப்போது காணக் கிடைக்கின்றன. இந்தப் பஞ்சாயத்தில் பெருமளவில் உள்ள ஆதிதிராவிட இன மக்கள், நஷ்டத்தைச் சந்தித்ததால் விவசாயத்தை கைவிட்டு, விவசாயக் கூலிகளாக மாறி வருகிறார்கள். சாகுபடி செய்வதால் எந்தப் பலனும் கிடைப்பதில்லை என்பதால், இப்போது நிலங்களை வைத்திருக்கும் பெரும்பாலான உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை தரிசாகவே விட்டிருக்கிறார்கள்.   

மூன்று ஆண்டுகளுக்கு முன் தரிசாக விடப் பட்ட நிலங்கள் தனித்தனித் தீவுகளாக இருந்த போது, அவற்றை பயன்படுத்திக் கொள்ள மணல் எடுக்கும் தொழில் உள்ளே நுழைந்தபோது, தரிசு நில உரிமையாளர்கள் அதை லாபகரமான நடவடிக்கையாகவே பார்த்தார்கள். தங்களது நிலங்களை மணல் எடுப்பவர்களுக்கு விற்றனர். இன்றைக்கு இந்தப் பகுதி முழுவதும், 18 அடி ஆழத்துக்கு நிலம் வெட்டியெடுக்கப்பட்டு, அருகில் உள்ள வயல்கள் கனவிலும் சாகுபடி செய்வது பற்றி நினைக்க முடியாத வண்ணம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மேலும், ஒரு மின்சார உற்பத்தி நிலையத்துக்காக 300 ஹெக்டேர் நிலப்பரப்பு இப்பகுதியில் கையகப்படுத்தப்பட்டது, இங்குள்ள நீர்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி நிலைமையை மோசமாக்கியுள்ளது.   

சாதாரணமாக ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பு, ஒரு சாகுபடிப் பருவத்தில் 140 பேருக்கு வேலை வழங்கும். இதில் பெருமளவு பெண் கூலித் தொழிலாளர்களே பயனடைகிறார்கள். ஆனால், பெருமளவு நிலம் சாகுபடி செய்வதை கைவிட்டு விட்டதால், குறைந்த பெண் வேலையாள்களே தேவைப்படும் சூழலில், அதிகமான பெண்கள் வேலை தேடிச் செல்கிறார்கள். இதனால் வேலையை அவர்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதுவே, அவர்களது வறுமைக்கும் காரணமாகிறது. “வெறும் 10 பெண்கள் வேலை செய்ய வேண்டிய வயலில், நாங்கள் 70 பேர் வேலை பார்க்கிறோம். அதனால் சம்பளமும் பகிர்ந்தே தரப்படுகிறது. இந்தச் சம்பளம் எதற்கும் போதவில்லை,” என்கிறார் கணவனை இழந்த சகுந்தலை.   

அரசு சட்டப்படி பார்த்தால், வயல்வெளிகளில் மணல் எடுப்பதைத் தடுப்பதற்கு எந்த விதிமுறையும் இல்லை. பக்கத்தில் உள்ள நிலங்களில் இருந்து சம்பந்தப்பட்ட நிலங்கள் எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதைப் பொறுத்து, மணல் அள்ளுவதற்கு உரிமம் வழங்கப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் அதே நிலத்தில் மண் நிரப்பப்பட்டு, சாகுபடிக்கு உரியதாக மாற்றப்பட வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளும் இருக்கின்றன. சட்டப்படி, 2 மீட்டர் ஆழத்துக்கு அதிகமாக மேல் மண்ணை எடுப்பதற்கு உரிமையில்லை.   

அரசு பதிவுகளின்படி 3.38 ஹெக்டேர் பரப்புள்ள நீர்நிலைகளில்தான் மணல் எடுக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 12 ஹெக்டர் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் உள்ளூர் மக்கள். நிலப்பதிவுகளில் சாகுபடி நிலத்தை தரிசு நிலம் என்று பெயர் மாற்றி உரிமம் வழங்கப்படுகிறது என்று கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.    

ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் நிறுவனத்தின் வளர்ச்சி இதழியல் துறை பேராசிரியர் கே.நாகராஜ் கூறுவதன்படி, “இது காடழிப்பில் குறிப்பிடப்படும் தேன்கூடு வட்டம் என்ற கொள்கையை பிரதிபலிக்கிறது. முதலில் காட்டின் சிறிய பகுதி அழிக்கப்படும்போது,அது ஒரு தேன்கூட்டில் உள்ள தேனை வெளிச்ச மிட்டுக் காட்டும் திறப்பு போன்ற தோற்றத்தைத் தரும். தொடர்ந்து அந்தத் திறப்பு மூலம் தேன்கூடு அழிவதைப் போல, ஒட்டு மொத்த காட்டின் மேல்மண்ணும் அரிக்கப்படும்.ஒட்டுமொத்த காடும் அழிவதற்கான தொடக்கப்புள்ளியாக இது அமையும். அதேபோலத்தான், இந்த நீர்நிலைகள் அழிவும் நிகழ்கிறது,” என்கிறார்.   

2011ஆம் ஆண்டில் வயல்களில் வேலை செய்ய கூலித் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை என்ற புகாரால், நடவுக் காலத்தில் ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் கிராம மக்கள் வேலை செய்வதற்கு மாநில அரசு தடை விதித்தது. ஆனால், மேற்குறிப்பிட்ட கிராமங்களில் இதுபோன்று தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் காலகட்டங்கள்கூட மிக அரிதாகவே தோன்றுகின்றன.   

இந்தப் பெண் கூலித் தொழிலாளர்களுக்கு பெரும்பாலான நேரம் நிலைமை மோசமாகவே இருந்தாலும், எப்போதாவது ஒரு சில நாள்கள் நன்றாக இருப்பதும் உண்டு. என்றைக்காவது ஒரு நாள் ரூ. 25 கூலியாகக் கிடைக்கலாம். “ஆனால், எப்போதும் விவசாயக் கூலியாக ரூ.2தான் கிடைக்கிறது. அதை வைத்து ஒரு டீ கூட குடிக்க முடியாது. அந்தக் காசுக்கு வெத்திலையோ, புளிப்பு மிட்டாயோ வாங்கி எங்களுக்குள் பிரிச்சுச் சாப்பிடுவோம்” என்கிறார் சௌந்தரவல்லி. இது மட்டுமில்லாமல், வேலை செய்வதற்காக அக்கம்பக்கத்து பஞ்சாயத்துகளுக்கு 8 முதல் 10 கிலோ மீட்டர்கள் கால்நடையாக நடந்தே செல்கிறோம் என்கிறார் ஜெயம்.   

விவசாய நிலங்களில் மணல் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த கிராம மக்கள் பொது நலன் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். உள்ளூர் மக்களின் எதிர்ப்பால், இந்த பஞ்சாயத்தில் கடந்த ஓராண்டில் மணல் எடுப்பது நடக்கவில்லை. ஆனால், ஏற்கெனவே குறிப்பிடத்தக்க அளவு நிலங்கள் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், சொற்ப சம்பளம் தரும் வேலையாவது கிடைக்குமா, கிடைக்காதா என்ற அவநம்பிக்கையுடன் இந்தப் பெண்கள் நீண்ட தொலைவு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.   

விஷச் சுழலில் சிக்கித் திணறும் விவசாயமும் பெண் உழைப்பும்   

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடிகளால், பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறைந்த அளவு நிலங்களை வைத்துள்ள விவசாயிகள் விளைச்சல் இல்லாததால், வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தத் தற்கொலைகள் காரணமாக, சம்பந்தப்பட்ட விவசாயி வாங்கிய கடனை அடைக்க வேண்டிய பொறுப்பு, அவர்களது விதவை மனைவிகளின் தலையில்தான் விழுகிறது.   

காவிரி நீர் பங்கீட்டுச் சிக்கலால் விவசாயம் சந்தித்து வரும் நெருக்கடிகளை ஒட்டுமொத்த மாகப் பார்க்கும்போது, விவசாயத்தில் முக்கிய உழைக்கும்சக்தியாக இருக்கும் பெண்களின் அவலநிலை கவனத்துக்கு வராமலேயே போய் விட்டது. விவசாயப் பொருளாதாரத்தில் பெண்களுக்கு உள்ள பங்கை இந்த உரையாடல் அங்கீகரிக்கத் தவறிவிட்டதன் அடையாளம் இது.   

விவசாயத் தொழிலாளர்களில் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். நிஜத்தில் இவர்களது வாழும் நிலைமைகள் வெவ்வேறானவை. 2012ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 விவசாய நெருக்கடி தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. மொத்தமுள்ள 55,598 ஹெக்டேர் பரப்பில் 1.39 லட்சம் குறு விவசாயிகளும், 38,789 ஹெக்டேர் பரப்பில் 27,759 சிறு விவசாயிகளும் பயிரிட்டு வருகிறார்கள். இதில் இரு மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பங்கீட்டுச் சிக்கல் காரணமாக,ரூ. 1.77 கோடி மதிப்புள்ள உழைப்பு நாள்கள் வீணாகியுள்ளதாக கணிக்கப் பட்டுள்ளது. இதில் 70 சதவிகித உழைக்கும் சக்தி பெண்கள்தான்.   

நெற்பயிர், பெருமளவு பெண்களின் உழைக்கும் சக்தியை நம்பியே உள்ளது. ஒரு ஏக்கர் நெல் பயிரிடுவது என்பது, ஒரு சாகுபடி காலம் முழுவதும் 130 பெண்களுக்கு வேலை தரக்கூடியது. வயல்களில் நடவு செய்தல், களை பறித்தல் போன்ற கடுமையான வேலைகளை பெண்களே செய்கிறார்கள். இந்த முறைகள் காரணமாகவே விவசாயிகளுக்கு உற்பத்தி அதிகமாகக் கிடைக்கிறது.   

மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பங்கீட்டுச் சிக்கலால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், திருச்சியை மையமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடைப் பகுதி வரை தங்கள் கபளீகரக் கையை விரிக்க ஆரம்பித்துவிட்டன.

இன்னும் நடவு செய்யக்கூடிய வயல்கள், இந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கைகளில் சிக்கி பிளாட்களாக மாறுவதால், லாபகரமான உழைப்பை தரக்கூடிய பெண்களும், அவர்களுக்குக் கிடைக்கும் வேலையும் விரட்டி அடிக்கப் பட்டுவிட்டன.   

இது மட்டுமில்லாமல், நாகப்பட்டினம் மாவட்டக் கடற்கரை முழுவதும் பல்வேறு அனல் மின் நிலையங்களுக்காக தரிசு நிலங்களுக்கு அருகில் உள்ள நல்ல நிலங்களையும் சேர்த்து உள்ளூர் பஞ்சாயத்துகள் தாரை வார்த்து வருவதால், விவசாய நெருக்கடி மோசமாகியுள்ளது. இந்த அனல் மின் நிலையங்கள் பல்வேறு கட்டங்களில் அனுமதி பெறுவதற்காக தற்போது காத்திருக்கின்றன.   

இவை தவிர விவசாய நிலங்களிலும், நதிப்படுகைகளிலும் மணல் அள்ளுவதற்கு அளிக்கப் பட்டுள்ள அனுமதி, சமூக வளங்களை பயன்படுத்துவதற்குப் பெண்களுக்கு உள்ள உரிமையைப் பறித்து வருகிறது. வேதாரண்யம் பகுதியில் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சிலிகேட் மணல் அள்ளுவதற்கு அளிக்கப்பட்டுள்ள உரிமம், நிலத்தடி நீரை பாதித்துள்ளது. இதனால் பெண்கள் குடிநீரைத் தேடி நீண்ட தொலைவு அலைய வேண்டியுள்ளது.   

சமீபத்தில், ஊரக வேலை உறுதிச் சட்டம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் செயல்திறனை கொண்டிருக்கிறதா என்பது பற்றி நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கிராம பொதுச் சொத்தை நிர்வகிப்பதில், தங்களுக்கு உள்ள அறிவு பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்று பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதற்கு அமைப்புரீதியிலான குறைபாடுகளே காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். விவசாயக் குளங்கள், வாய்க்கால்கள், சமூக நீர்நிலைகள் ஆகியவைதான் சிறு, குறு விவசாயிகளுக்கு அடிப்படை ஆதாரம். இந்த நீர்நிலைகளை தூர்வாருவதில் பொதுப்பணித் துறை ஈடுபடாத நிலையில், ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் பெண்களை வேலைக்கு அமர்த்தலாம். ஆனால், இதுவும்கூட சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையைச் சார்ந்தே அமைகிறது.   

தமிழில்: அமிதா

நன்றி: தி இந்து நாளிதழ், March 19, 2012