“தண்ணீரில்லாமல் மனிதன் வாழ இயலாது, அதேவேளையில் விலையில்லாமலும் மக்கள் அனுபவித்து வருகின்றனர். எனவே தண்ணீரை வணிகப்படுத்துவதன் மூலம் அதிக லாபத்தைச் சம்பாதிக்க முடியும்”. இதுவே தண்ணீர் முதலாளிகளின் எண்ணம். ‘சோறும் நீரும் விற்பனைக்கல்ல’. இது தமிழர்களின் அடிப்படைத் தத்துவம். தண்ணீரை ஒரு கணம் பெட்ரோலாகவோ, எண்ணெய்யாகவோ கற்பனைப் பண்ணிப் பாருங்கள். அப்படி ஒரு நிலை வந்தால் நாடு என்னாகும். நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. ஆனால் இந்நிலை வந்து கொண்டிருக்கிறது அல்லது வந்துவிட்டது எனலாம். தண்ணீரைப் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் என்று பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நாம் யூகித்திருக்க முடியாது. விற்பனை என்பது சாதாரண மனித உறவுகளைப் பாதிக்கக் கூடியதாக மாறுகிறது. ஒருவர் விலை கொடுத்து வாங்கிய தண்ணீர் பாட்டிலை, இன்னொருவர் சட்டென்று எடுத்துக் குடித்துவிட முடியாது. குடித்தால் வாங்கியவர் முகத்தைச் சுழிக்கக்கூடும். விற்பனை என்பது தனிமனித உறவுகளை மட்டுமல்ல, இரு நாடுகளுக்கான உறவுகளை, ஏன் இந்தப் பூவுலகே போராட்டக் களமாக மாற வாய்ப்பிருக்கிறது. தண்ணீர் யுத்தம், தன்னுடைய நாளை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது.

உலகின் மொத்த தண்ணீர் அளவில் 97 சதவிகிதம் கடல் நீராகும். மீதி 2.5 சதவிகிதம் பனிக்கட்டியாக உள்ளது. 0.5 சதவிகிதம் மட்டுமே நன்னீராக நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவில் தனி ஒருவனுக்கு 2500 Cu.m. அளவு ஒரு வருடத்திற்குத் தேவைப்படுகிறது. இது வெகுவிரைவில் 1000 சிu.னீ. அளவாக மாறிவிடும். 2025இல் இந்தியா உட்பட 56 நாடுகள் கடுமையான தண்ணீர் நெருக்கடியைச் சந்திக்க இருக்கிறது. இந்தியாவின் தண்ணீர்ச்சந்தை 2000 மில்லியன் டாலராக இருக்கும்பட்சத்தில் மூன்று பன்னாட்டு நிறுவனங்கள் இதனைக் கையிலெடுக்க உள்ளது (Vivendi Environment, France, SuezLyonnaise Des Eaux, France, RWE of Germany). இந்நிறுவனங்கள் மெதுவாக இந்தியாவின் தண்ணீரைத் தனியார் மயமாக்கி கபளீகரம் செய்துவருகின்றன. தடுத்து நிறுத்தாவிட்டால், தண்ணீர் மனித ரத்தத்தைவிட விலைமதிப்பு மிக்கதாக மாறிவிடும்.

பூவுலகின் நண்பர்கள் ஜனவரி 26இல் நடத்த இருக்கும் முந்நீர் விழவில் பங்குபெற அழைக்கிறோம்.

மக்கள் நீர்க்கொள்கை ஒன்றை உருவாக்குவோம்.