ஃபுகோகாவின் புத்தகம் தந்த புத்துயிர்

தூரத்திலிருந்து பார்க்கும்போது திம்பக்ட்டு கானல்நீரைப் போலவே தோற்றமளிக்கிறது. அந்த மலைப்பாங்கான பகுதியைச் சுற்றி புதர்க்காடு, கோபத்தின் நிறத்தில் இருக்கும் சிவந்த மண், முட்புதர்கள்... தண்ணீருக்கான எந்தத் தடயமும் அங்கில்லை. இந்தச் சூழ்நிலைக்கு மத்தியில் 400 வகை மரங்கள், புதர்கள், செடிகொடிகள் நிறைந்த பசுமையான காடு நம்மை வரவேற்கிறது. அதுதான் திம்பக்ட்டு.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சென்னகோத்தப்பள்ளி கிராமத்தின் விளிம்பில் திம்பக்ட்டு வீற்றிருக்கிறது. அனந்தபூர் மாவட்டம் இந்தியாவின் மோசமான வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று. இங்குள்ள விவசாயிகள் ஒவ்வோர் ஆண்டும் நிலக்கடலை, சூரியகாந்தி, சோளம் போன்ற ஏதாவது ஒரு பயிரை பயிரிடுவதற்காக உலர்ந்து கிடக்கும் தங்கள் வயலுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மிக மோசமான தட்பவெப்ப சூழ்நிலை, காடழிப்பு, மோசமான விவசாய முறைகள் போன்றவை நீண்ட காலத்துக்குத் தொடர்ந்ததால், ஒருபுறம் விவசாயிகளும் மறுபுறம் நிலமும் தரிசாகக் காட்சி அளிக்கின்றன.

15 ஆண்டுகளுக்கு முன் பப்லு கங்குலியும் மேரி வட்டமட்டமும் இந்த இடத்தில் திம்பக்ட்டுவை ஆரம்பித்தபோது, இந்த வறட்சிச் சூறாவளியில் அவர்களும் சிக்கிக் கொள்வார்கள் என்றே தோன்றியது. இந்தத் தம்பதி, அவர்களது நண்பர் ஜான் டிசோசாவுடன் இணைந்து சென்னகோத்தப்பள்ளியில் 32 ஏக்கர் தரிசு நிலத்தை வாங்கியபோது, “இந்த புதிய முயற்சி வெற்றி பெறுவதற்குச் சாத்தியமில்லை” என்று அவநம்பிக்கை யுடன் நண்பர்கள் மறுத்தனர். ஆனால் பப்லுவுக்கும் மேரிக்கும் தங்கள் கனவைப் பின்தொடரும் நம்பிக்கை இருந்தது. ஜப்பானிய இயற்கை வேளாண் அறிஞர் மசனாபு ஃபுகோகாவின் “ஒற்றை வைக்கோல் புரட்சி” என்ற புத்தகத்தை அவர்கள் ஆயுதமாகக் கொண்டனர். “எங்களது சேமிப்பில் இருந்த பணம் முழுவதையும் செலவழித்து 7,000 மரக்கன்றுகளை வாங்கி, அவற்றை நட்டுவிட்டு, காத்திருந்தோம். எந்தச் சந்தேகமும் வேண் டாம், எதுவும் நடக்கவில்லை. நாங்கள் ஃபுகோகாவின் “எதுவும் செய்யாமலிருக்கும் வேளாண்மை” என்ற கொள்கைப்படி, நாங்கள் எதையுமே செய்யத் தேவையில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் உண்மையில் அவர் சொன்னது எதையென்றால், மண்ணில் உரத்தையோ, பூச்சிக்கொல்லிகளையோ இடக்கூடாது என்பதைத் தான்,” என்று கூறிச் சிரிக்கிறார் பப்லு.

நிலத்தைச் சுற்றி மரங்கள், நீர்நிலைகள் போன்ற வற்றைப் பாதுகாத்தால்தான் மட்டுமே மண் பலனைத் தரும் என்பதை சீக்கிரத்திலேயே அவர்கள் புரிந்து கொண்டார்கள். மண்வளத்தை மீட்டு உயிர்தருவது என்ற திட்டத்துக்காக, இந்தத் தம்பதி அருகிலுள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தனர். காட்டுத்தீ கட்டுப்பாடு, மேய்ச்சல் கட்டுப்பாடு, விதைப்பு முறையில் மாற்றம், விறகுக்காக மரத்தின் கிளைகளை மட்டுமே வெட்டுவது, தண்ணீர் சேகரிப்பு, மண் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி பாடத்திட்டங்களை உருவாக்கினனர். மண் அணைகள், சிறிய தடுப்பணைகளைக் கட்டினர். உள்ளூர் தாவரமான போதா புல் விதைகளைப் பரப்பி, அவற்றிலிருந்து கிடைத்த வைக்கோலை தீவனமாகப் பயன்படுத்தினர். “வளங்குன்றா வளர்ச்சிப் பார்வை யுடன் விவசாயம், வேளாண் காடு வளர்ப்பு ஆகிய வேலைகளைத் தொடங்கினோம். எங்களைச் சுற்றி இருந்த விவசாயிகள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் புரிந்துகொண்டனர். ஆனால் காடுகளுக்கு புத்துயிர் கொடுப்பதற்கு எல்லோரையும் அதில் ஈடுபடச் செய்ய வேண்டி இருந்தது,” என்று திம்பக்ட்டுவின் உருவாக்கத்துக்கு பின்னணியில் இருக்கும் கடுமையான உழைப்பை விளக்குகிறார் பப்லு.

அவர்களுடைய முயற்சிகளுக்கான முதல் பலன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது. மண் மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்தது. பப்லுவும் மேரியும் உள்ளூரில் கிடைக்கும் விதைகளைச் சேகரித்து, ஒரு சேகரிப்பு மையத்தை உருவாக்கினர். சில முன் னோடி மர வகைகள், அதாவது மிகவும் கடுமையான சூழ்நிலைகளில் முதலில் வளர்ந்து, கூடுதல் பசுமை பரவுவதற்குத் தேவையான நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தும் மர வகைகள் புத்துயிர் ஊட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டன. திம்பக்ட்டுவில் பயிர் சுழற்சி முறை பின்பற்றப்பட்டது. இதன் மூலம் வளமற்ற மண், மீட்சியடைவதற்கு நேரம் கிடைத்தது. நிலக்கடலை, நெல், சோளம், சிறுதானியங்கள், பருப்பு உள்ளிட்ட தானியங்கள், கத்தரி, தக்காளி, பீர்க்கங்காய், மிளகாய் போன்ற காய்கறிகள், சப்போட்டா, மா போன்ற பழ மரங்கள் ஆகியவை வளர்க்கப்பட்டன. வேளாண்மை, முழுக்கமுழுக்க இயற்கை விவசாயம்தான். வேதி உரங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டன. மேலும் திம்பக்ட்டு தனது மின்சாரத் தேவைக்கு சூரிய சக்தியையே பயன்படுத்திக் கொள்கிறது.

பழமையான மண் வீடுகளைச் சூழ்ந்து நிற்கும் வேம்பு, புங்கம், ஆச்சா மரங்கள் நமது காதுகளில் கிசுகிசுப்பதைப் போல காற்றை ஊதும் திம்பக்ட்டுவை, இயற்கையை நாடிச் செல்பவர்களுக்கான முதல் தேர்வு என்று சொல்லலாம். உண்மையில், அந்த நிலத்தின் உரிமையாளர்கள் வேளாண் முறையை அடி முதல் நுனி வரை மாற்றியதன் காரணமாகவே நிலம் புத்துயிர் பெற்றிருக்கிறது. “தனக்குத் தானே புத்துயிர் ஊட்டிக் கொள்ளும் திறன் இயற்கைக்குப் பெருமளவு உண்டு. அதற்கான இடத்தை நாம் கொடுக்க வேண்டும், அவ்வளவுதான்,” என்று மென்மையாகச் சொல்கிறார் மேரி. திம்பக்ட்டுவில் கிடைத்த வெற்றி எங்களை பெரிதும் உற்சாகமடையச் செய்துவிட்டதால், இப்போது எங்களுடைய இந்த அறிவை பரவலாக்குவதற்கு முயற்சித்து வருகிறோம். “அருகிலுள்ள கிராமங்களில் எங்களது பரிசோதனைகளை ஆரம்பித்திருக்கிறோம்,” என்கிறார். பப்லுவும் மேரியும் வேளாண் காடு வளர்ப்பு, இயற்கை வேளாண்மை, பூச்சிக்கொல்லி தவிர்ப்பு மேலாண்மை ஆகியவை தரும் நன்மைகள் பற்றி சுமார் 100க்கும் குறையாத கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

கல்பவல்லி என்ற ஒன்பது கிராமங்கள் அடங்கிய பகுதி அருகே இருந்த 7,000 ஏக்கர் தரிசுநிலத்தில் அவர்கள் செய்த பணி காரணமாக மற்றொரு “பசுமை சொர்க்கம்“ உருவாகியுள்ளது. அவர்கள் இப்போது காடுகள் மற்றும் அவற்றின் உற்பத்திப் பொருள்களுக்கு கிராம கூட்டு உரிமை அளிப்பது குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர். இப்போது மண், காடுகள், தீவனம், விலங்குகள் ஆகிய அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதை விவசாயிகள் உள்ளுணர்வால் உணர்ந்து கொண்டு வருகின்றனர். மிகுந்த ஊட்டம் நிரம்பியதாகக் கருதப்படும் 1,100 ஹோல்கர் மாடுகள் இவர்களது தரிசுநிலத்தில் மேயவிடப்பட்டு, கோமயமும் சாணமும் இடப்படுகின்றன. கிட்டத்தட்ட 250 நீர்நிலைகள், சுனைகள் மறுவாழ்வு பெற்றுள்ளன. “இந்தியா விடுதலை பெற்ற பிறகு, நம் நாட்டில் கண்மூடித்தனமாக நிலச் சீரழிவு நடந்துள்ளது. அதிகப்படியான தண்ணீரும் அதிகப்படியான வேதி விவசாயமும் மிகவும் வளமான மண்ணைக்கூட முழுமையாகச் சீரழித்துவிடும். பஞ்சாப்பை பாருங்கள். அங்கிருக்கும் நிலத்தடி நீர் முழுவதும் நஞ்சாக்கப்பட்டுவிட்டது. அதே நவீனத் தொழில்நுட்பங்களை வறண்ட நிலப்பகுதிகளிலும் பயன்படுத்தும்போது, அது தற்கொலையில் போய் முடிகிறது” என்கிறார் பப்லு.

நிலைத்த வேளாண்மையின் முக்கிய பாகம் சமூகத்தை அதில் ஈடுபடச் செய்வதுதான். இவர்கள் மிகச் சிறிய அளவில் ஒரு விஷயத்தைத் தொடங்கி அதை பெரிய அளவுக்கு பரவலாக்கி இருக்கிறார்கள். இடையிடையே தொடர்ச்சியான மறுஆய்வுகளும் உண்டு. கிராமங்களில் வேதி உரங்கள், புவி வெப்பமடை தலின் தீமைகள் பற்றி மேரி பேசும்போது, விவசாயிகள் தெளிவாகப் புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு இது முற்றிலும் அந்நியமான விஷயமாகத் தோன்ற வில்லை. தங்களது அனுபவத்தின் அடிப்படையில், ஒரு கிராமத்தை முழுமையாக இயற்கை வேளாண் முறைக்கு மாற்ற மூன்று ஆண்டுகள் ஆகும் என்கிறது இந்தத் தம்பதி. வேதி உரங்கள் உடனடிப் பலன்களைக் கொடுக்கும் நிலையில், அவற்றைக் கைவிட வேண்டும் என்று விவசாயிகளிடம் எப்படி இவர்களால் வலியுறுத்த முடிகிறது. திம்பக்ட்டுவின் முறைகளுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? “நாங்கள் மாற்றத்துக்குத் தயாராக இருக்கிறோம். தங்களுக்கு லாபம் தருவதாகவும் பொருத்தமாகவும் இருக்கும் தொழில்நுட்பங்களை மட்டுமே விவசாயிகள் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் அவர்கள் அதைக் கைவிட்டு விடுவார்கள். இந்த வரையறையை எங்களது வேளாண் முறைகள் பூர்த்தி செய்கின்றன”

நிலைத்த வேளாண் முறைகள், காடு வளர்ப்பு ஆகியவற்றை சமூகத்திடம், குறிப்பாக இளைஞர்களிடம் நேரடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று திம்பக்ட்டு கருதுகிறது. இதற்காக அருகிலுள்ள கிராமங் களைச் சேர்ந்த விவசாயிகளின் குழந்தைகளுக்காக இந்த அமைப்பின் வளாகத்துக்குள் பள்ளி ஒன்று நடத்தப்படுகிறது. மரங்கள், பறவைகள் என இயற்கை புடைசூழ அமைந்துள்ள இந்தப் பள்ளி, சுமார் 100 குழந்தைகளுக்கு முறைசார்ந்த கல்வியைத் தருவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உணவையும் தந்து வருகிறது. மேரியும் பப்லுவும் இந்த மாற்று முன்மாதிரியின் ஒவ்வொரு அம்சத்திலும் நுணுக்கமாக கவனத்தைச் செலுத்தி செதுக்கியுள்ளதை பார்க்க முடிகிறது. “இது என்ன மரம் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று ஒரு மரத்தைத் தழுவியபடி கேட்கிறார் பப்லு. “எங்களது பள்ளியின் முதலாண்டு மாணவர் ஒருவர் நட்ட மரம். இது எவ்வளவு உயரமாக வளர்ந்திருக்கிறது, பாருங்கள்,” என்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் குழந்தைகள், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கட்டாயம் புரிந்துகொள்வார்கள் என்பது எளிதாகப் புரிகிறது.

“உண்மையில் நாங்கள் இந்த சமூகத்தை காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்குத் தயார்படுத்தி வருகிறோம்“ என்கிறார் பப்லு. அவருடைய மார்க்சிய ஈடுபாட்டின் காரணமாக இந்தப் பகுதிக்கு அவர் வந்த காலத்தில் நிலத்தை மறுபங்கீடு செய்து கொடுத்துள்ளார். அவரும் மேரியும் ஆந்திராவிலேயே வாழ்ந்து பல்வேறு சமூகத் திட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளாகப் பணி புரிந்துள்ளனர். ஆனால் திம்பக்ட்டுதான், அவர்களது பணிகளில் ஆத்மார்த்தமான பிடிப்பை ஏற்படுத்தியது. பப்லு மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவராகவும் மேரி கேரளாவைச் சேர்ந்தவராகவும் இருந்தபோதிலும், அவர்கள் தங்களையும் தங்கள் மூன்று குழந்தைகளையும் தெலுங்கர்களாகவே கருதுகின்றனர். அவர்களது மண் வீட்டின் கதவின் மீது பூசப்பட்டுள்ள சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களே, அவர்களது அதிகபட்ச பகட்டுத்தனம் என்று சொல்லலாம். மற்ற இடங்களில் எல்லாம் எளிமை குடிகொண்டிருக்கிறது. இந்தத் தம்பதி பல்வேறு காலநிலை மாற்றம், வேளாண்மை அமைப்புகளிலும் இணைந்திருக்கின்றனர். ஃபேர் கிளைமேட் நெட்வொர்க் எனப்படும் காலநிலை நியாய வலைப்பணியகத்தின் ஒரு பகுதியாக திம்பக்ட்டு இருக்கிறது. ராயலசீமா, தெலுங்கானா, வடக்கு கர்நாடகத்தில் இயற்கை வேளாண்மை மூலம் கார்பன் வெளியீட்டை குறைப்பது தொடர்பாக இந்த அமைப்பின் கீழ் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம், வாயு வெளியீட்டு கண்காணிப்புக் கருவிகள் மூலம் வழக்கமான வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண் முறை ஆகியவற்றுக்கு இடையே கார்பன் வெளியீடு ஒப்பிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

ஃபுகோகா புரட்சியை திம்பக்ட்டு நடைமுறைப் படுத்திய கிராமங்களில் வித்தியாசத்தை தெளிவாக உணர முடிகிறது. வழக்கமான வேதி உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டு வெள்ளையான சுண்ணாம்புப் படிவுகளுடன் இருக்கும் நிலக்கடலை வயல்களை இங்கு பார்க்க முடியவில்லை. இந்த வருடம் (2011) மழை தாமதமானாலும்கூட, காடு காப்பு, தண்ணீர் சேகரிப்பு பின்பற்றப்பட்ட இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் ஈரப் பதம் இன்னமும் மீதமிருக்கிறது. இயற்கை உரங்களே பயன்படுத்தப்படுவதால் இவர்களது நிலங்களில் நுண்ணுயிர்களின் செயல்பாடு மீண்டும் துளிர்த்துள்ளது. மேலும் இந்த விவசாயிகள் அடிக்கடி விவாதிக்கும் விஷயம் பயிர் சுழற்சி முறை பற்றியதாகவே இருக்கிறது. ஏனென்றால், தங்களது பணத்துக்கு உத்தரவாதம் தராத ஒற்றைப் பயிரை நம்பி சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு இந்த விவசாயிகள் விரும்பவில்லை. “என்ன வளர்க்க வேண்டும் என்பது பற்றி தொழில்முறை விவசாயம் இடும் கட்டளைகளுக்கு அடிபணியாமல், தங்களது விருப்பத்துக்கு ஏற்ப எதை வளர்க்க வேண்டும் என்பதற்கான சுதந்திரம், இந்த விவசாயி களுக்குத் தற்போது கிடைத்துள்ளது. பணப் பயிர்களில் அவர்கள் கவனம் செலுத்தியபோது வீரிய விதைகள், உரங்கள், கடன்கள், வளம்குன்றிய நிலங்கள் என்ற கொடிய சுழற்சிக்குள் அவர்கள் தள்ளப்பட்டார்கள். அதற்கு பதிலாக எதை வளர்க்க வேண்டும் என்ற சுதந்திரத்தை இயற்கை வேளாண்மை அவர்களுக்கு வழங்கியுள்ளது,” என்று பப்லு நம்புகிறார்.

இதற்கெல்லாம் மேலாக, திம்பக்ட்டுவில் ஒரு காலத்தில் சில கழுகுகளும், இரைகொல்லிப் பறவை களுமே சுற்றிக் கொண்டிருந்தன. ஆனால் இன்றைக்கோ, அந்த அடர்த்தியான காட்டுக்குள் நடந்து செல்லும்போது காட்டுப்பன்றி, வெளிமான், நரி, முள்ளம்பன்றி, ஏன் சில நேரம் சிறுத்தையைக்கூட உங்களால் பார்க்க முடியும். மேலும் மயில்கள், தையல்சிட்டுகள், கொண்டைக்குருவிகள் (புல்புல்), தேன்சிட்டுகள், கருஞ்சிட்டு (ராபின்), வானம்பாடி (லார்க்) போன்றவற்றை இங்கே சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. பறவைகளின் கூக்குரல்களுடன் அந்தக் காடு உயிர்ப்புடன் உள்ளது. “ஒற்றை வைக்கோல் புரட்சி” புத்தகத்தைப் படித்ததன் மூலம், “மண்ணை மீட்டெடுத்தல்” என்ற சிறிய சிந்தனை இவர்களுக்குக் கிடைத்திருக்கலாம். அதன்காரணமாக திம்பக்ட்டு என்ற அவர்களது பெருங்கனவு இன்றைக்கு நிஜமாகவும் உயிர்ப்புடனும் இருக்கிறது. அது வெறும் கானல்நீரல்ல. உண்மையில், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் வளமான எதிர்காலத்தைத் தரும் வரைபடத்தை, அது தனக்குள் பொதிந்து வைத்திருக் கிறது.

தமிழில்: ஆதி வள்ளியப்பன்