மேற்கு மலைத்தொடர் பாதுகாப்பு இயக்கத்தின் (SWGM Save Western Ghats Movement) வெள்ளி (25வது) ஆண்டு விழா கோவாவில் குண்டாய் நகரில், அமைதி இயக்கத்தில் (Peaceful Society, Kundai, Goa) கடந்த நவம்பர் மாதம் 17, 18, 2012 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது.

மேற்கு மலைத்தொடர் பாதுகாப்பு இயக்கமானது, 1987 ஆம் ஆண்டு மேற்கு மலைத்தொடர் அமைந்துள்ள மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஸ்டிரா மற்றும் கோவா ஆகியா மாநிலங்களில் இயங்கும் சுற்றுச்சூழல் இயக்கங்களை ஒருங்கிணைத்து பொதுவாக துவங்கப்பட்டது. இவ்வியக்கம் துவங்கப் பட்ட நாளன்று கோவா மற்றும் கன்னியாகுமரி இரண்டு இடங்களிலும் நடைப்பயணம் மேற்கொள்ளப் பட்டது. இயக்கத்தின் முதன்மைக் குறிக்கோளாக, மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள வனங்களையும் மற்றும் அவற்றின் காட்டூயிர்களையும் பாதுகாக்கும் இயக்கங்களை ஒருங்கிணைத்து அவற்றின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு, அரசுக்கு பரிந்துரைப்பதை நோக்க மாகக் கொண்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து, மிகத்தீவிரமாக சட்டத்தில் என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்தி னால் பாதுகாப்பை அதிகரிக்கமுடியும் என்ற பரிந் துரைகளை அரசுக்கு எடுத்துரைத்துக் கொண்டுள்ளது.

வெள்ளி விழா ஆண்டின், கொண்டாட்டமாக நவம்பர் மாதம் 17, 18 ஆகிய இரண்டு நாள் நிகழ்வாக நடந்தது. முதல் நாள் விழாவை ஜெய்தாபூர் அணு இயக்கத்தின் தீவிர உறுப்பினரான நீதிபதி. கோல்ஸே பட்டீல் அவர்கள் துவங்கிவைத்து உரையாற்றினார். 

மேலும், ஜெய்தாபூர் அணுஉலை எதிர்ப்பாளர்கள் இயக்கத்தைச்சார்ந்த வைசாலி பட்டீல் அவர்கள் உரையில் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தையும், அவற்றின் விளைவுகளையும் எடுத்துரைத்தார். பின்னர் நடந்த விவாதத்தில் அமைதி இயக்கத்தைச் சார்ந்த திரு. காலானந்த் மணி அவர்கள் பேசும்போது மேற்கு மலைத்தொடர் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கியதில் இருந்து தற்பொழுது வரை நடந்து வரும் வரலாற்று நிகழ்வுகளை மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார். மேலும், இவ்வியக்கம் இயற்கையுடன் இயந்த சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதையும் வலியுறுத்தினார். இவர் மேற்கு மலைத்தொடர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராவார்.

மேலும், 25 வருடங்களுக்கு முன் (198788) நடந்த நடைப்பயணத்தில் கலந்து கொண்டவர்களில் 7 வயது ஆன அட்டகட்டியைச் (கேரளா) சார்ந்த கொளதம் சாராங் அவர்கள், இந்த கூட்டத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கலந்துகொண்டு, தனது சிறுவயது நடைப்பயணத்தையும், அனுபவத் தையும் பகிர்ந்து கொண்டதும், சிறப்புரை ஆற்றியதும், கலந்துகொண்ட அனைவரையும் வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

முதல் நாள், கடைசி அமர்வில் கோவாவில் நடை பெற்று வரும் சுரங்களுக்கு எதிராக போராடிவரும் அமைப்புகள் கலந்துகொண்டு, தங்களுடைய போராட் டங்களையும், சுரங்கங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவாதித்தனர். இவ்விவாதத்தை கோவாவைச் சார்ந்த தன்னார்வலர் கார்மென் மிராண்டா அவர்கள் முன்னின்று நடத்தினார்.

மற்றும் மேற்கு மலைத்தொடரை பாதுகாப்பதற்காக திரு. மாதாவ் காட்கில் தலைமையில் அரசு அமைத்த குழுவான மேற்கு மலைத்தொடர் வல்லுனர்கள் குழுவின் அறிக்கையைப் பற்றி விவாதிக்கப்பட்டது. இவ்விவாதத்தை அப்பிக்கோ இயக்கத்தின் தலைவர் திரு. பாண்டுரங்க ஹெக்டே அவர்கள் முன்னின்று நடத்தினார்.

இரண்டாம் நாள் நிகழ்வில், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் இயக்கத்திற்காக, திரு. ஆர். ஆர். சீனிவாசன் (பூவுலகின் நண்பர்கள், அமைப்பு, சென்னை) அவர்கள் கலந்து கொண்டார். அவரது உரையில் கூடங்குளத்தில் அமையவிருக்கும்!! அணுஉலையின் பாதிப்புகள் பற்றியும், அவற்றின் தொழில் நுட்பங்களில் உள்ள குறைபாடுகளை பற்றியும் கூறினார். அதன் பிறகு அனைவரும் அவருடன் கூடங்குளம் அணுஉலையைப் பற்றியும், எதிர்பாளர்கள் இயக்கத்தின் போராட்டங்களைப் பற்றியும் விரிவான கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். கூடங்குளம் அணுஉலையைப் பற்றிய விளக்கங்ளும், விவாதங்களும் அதிக மணித்துளிகளை எடுத்து கொண்டது கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் இயக்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். கூடங்குளம் போராட்டங்கள் இந்திய அளவில் பேசப்படுவதற்கு, அப்பகுதி மக்கள் எடுத்துக்கொண்ட கொள்கையின் உறுதியாகும்.

நிகழ்ச்சியில் தன்னார்வலர்களும், தொண்டு நிறுவ னங்களும், சுற்றுசூழல் வாதிகளும், நாடகவியலாளர்களும், கிராம நிர்வாகிகளும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் கலந்து கொண்டார்கள்.

கலந்துகொண்டவர்களில், கார்மென் மிராண்டா, ஹார்ட்மேன் டிசௌஸா, கோவா, பாதுஸா, கேரளா, ஆர். ஆர். சீனிவாசன், மோகன்ராஜ், கோவை, ஜெயச்சந்திரன், ஜனார்த்தனன், மற்றும் கங்காதரன் இவர்களின் உரைகள் குறிப்பிடும்படியாக இருந்தது.

இடையில் செவிக்கு இசைவழியாகவும் உரை யுட்டப்பட்டது திரு. உண்ணிகிருஷ்ணன் பக்கானார் கேரளா, அவர்களின் மூங்கில் இசைக்கருவிகளின் வாயிலாக இசையூட்டப்பட்டது விழாவை மேலும் சிறப்பாக்கியது..

இரண்டாம் நாள் நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட அனைவரும் சிறுசிறுக் குழுக்களாகப் பிரிந்து, வனங்களையும், காடுகளையும் பாதுகாப்பது பற்றி விவாதிக்க ஒரு குழுவும், அடுத்த தலைமுறையிடமும், இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுபற்றி விவாதிக்க ஒரு குழுவும், இயற்கையைப் பாதிக்காத சூழல் சார்ந்த சுற்றுலாவை பற்றி விவாதிக்க ஒரு குழுவும், கோவாவில் உள்ள சுரங்க பாதிப்புகள் குறித்து விவா திக்க ஒரு குழுவும் மற்றும் சூழல் பாதிக்காத மாற்று சக்தி பற்றி விவாதிக்க ஒரு குழுவுமாக பிரிக்கப் பட்டு மேற்கு மலைத்தொடரை பாதுகாப்பதற்க்காக, விவாதிக்கப்பட்டது. பின்னர் அவை அறிக்கைகளாக தயாரிக்கபட்டது. அனைத்து அறிக்கைகளும் குழுவின் தலைவர்களால் வாசிக்கப் பட்டு, அனைவராலும் விவாதிக்கப்பட்டு, அவற்றில் மிக முக்கியமானவையாகக் கருத்தப்பட்டவைகள் அரசின் பரிந்துரைக்காகத் தேர்வுசெய்யப்பட்டது.

அவற்றுள் முக்கியமானது, யுனஸ்கோ நிறுவனம் சமீபத்தில் அறிவித்த உலக பாரம்பரியச் சின்னமாக மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள 39 இடங்களை மட்டும் தேர்வு செய்துள்ளது. இந்த இடங்களை அதிகரிக்கவும், மேலும், உலக பாரம்பரியச் சின்னத்தில் கோவா மாநிலத்தில் உள்ள பகுதியும் இணைக்கப்படவும், மேற்கு மலைத்தொடர் வல்லுனர்கள் குழுவின் அறிக்கைகள் மாநிலமொழிகளில் மொழி பெயர்த்து அனைவரின் ஒப்புதல்களை பெறவழி வகுக்கவும், மற்றும் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் கூடங்குளம் மற்றும் ஜெய்தாபூர் அணுஉலை எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவாகவும், எதிர்காலத்தில் இனி அமைய இருக்கும் அணுஉலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டது..

தமிழகத்தில் இருந்து, தமிழக பசுமை இயக்கம், சத்தியமங்கலம் சுற்றுச் சூழல் மற்றும் கானுயிர் சங்கம், ஓசை மற்றும் பழனிமலைப் பாதுகாப்பு குழு அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்களின் நிகழ்வுகள் அனைத்தையும் சுதிர்ந்தர் சர்மா அவர்கள் தனது சிறப்பானத் தோற்றத்தில் தொகுத்துவழங்கினார்.

அமைதி இயக்கம், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்பாடுசெய்து இருந்தது.

இவ்வனைத்திற்கும் முத்தாய்ப்பாக அமைந்தது, அமைதி இயக்கத்தின், ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சிறப்புமிக்கத் தலைவர்களின் பெயர்களால் அழைக்கப்படுகிறது. அப்படி அழைக்கப்படுகிறப்பகுதியில் ஒன்று பெரியார் பெயர் ஆங்கிலத்திலும், இந்தியிலும் குறிப்பிட்டுள்ளது.

நிகழ்ச்சியினை தமிழக பசுமை இயக்கம், பிரக்கிருத்தி சந்மர்க்ஸானா சமிதீ கேரளா, மேற்கு மலைத்தொடர் பாதுகாப்பு இயக்கம், கர்நாடகம், அமைதி இயக்கம், கோவா, கோவா பாதுகாப்பு அமைப்பு, கோவா, Movements against Mini Hydel Projects in Western Ghats ஆகிய அமைப்புகள் சேர்ந்து ஏற்பாடு செய்து இருந்தார்கள்.