ஊனமுற்ற பெண்கள் அதிலும் கழிவறை வசதி/யில்லாத பெண்கள் மாதவிடாய் காலத்தில் என்ன செய்வார்கள் ?

தெருவோரம் குடியிருப்பவர்கள் நாப்கின் வாங்க வசதியுள்ளவர்களா, இல்லையெனில் அவர்கள் அந்த நாட்களில் என்ன செய்கிறார்கள்? மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாப்கின் மாற்றுவது எவ்வளவு சிரமம்? கீதா இளங்கோவனின் “மாதவிடாய்” ஆவணப்படம் பார்க்கும் வரை இதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை.

என்னைப் பொறுத்தவரை, மாதவிடாய் என்பது மிகச் சாதாரண ஒரு உடல் நிகழ்வுஞ் அதனால் அதைப்பற்றி பேச ஒன்றுமே இல்லை என்றுதான் எண்ணம் இருந்ததுஞ் மாத விடாய் ஆவணப் படத்தை பார்த்த பிறகு அந்த எண்ணம் மாறியிருக்கிறது. மாதவிடாய் என்பது என்ன, அதுபற்றிய மூடநம்பிக்கைகள், அந்த நாட்களில் பெண்கள் என்னென்ன சிரமங்களை எதிர்க்கொள்கிறார்கள் என அனைத்துத் தரப்பு பெண்களின் உணர்வு களையும் இந்தப் படம் பதிவு செய்கிறதுஞ்

மாதவிடாய் பற்றி வீட்ல என்ன சொல்லிக் கொடுத்தாங்க? என்ற கேள்விக்கு ஒரு பள்ளி மாணவியின் பதில். ‘’அடக்கமா இருக்கணும், வெளிய போய் விளையாடக் கூடாதுன்னு சொல்லிருக்காங்க”

“வீட்ல டாய்லெட் இல்லை, ஒவ்வொரு தடவையும் முள்ளுக்காடு வழியா போயிட்டு வரணும்.. கையெல் லாம் முள்ளுக்குத்தும்” ஒரு ஊனமுற்ற பெண்ணின் மாதவிடாய் நாட்கள் இப்படி நகர்கிறது...

“நாப்கின் எல்லாம் வைக்கிறது இல்லை, துணியும் இல்லை.. குளிக்க, கழுவ தண்ணியும் இல்லை.. எல்லாம் பாவாடயில தான்” தெருவில் வாழும் ஒரு பெண்ணின் வார்த்தைகள் இதுஞ்

தவிர, கழிப்பறை, தண்ணீர் வசதியில்லாத பள்ளிகள், பெண்களைப் பற்றி யோசிக்காமல் கட்டப்படும் பொதுக் கழிப்பறைகள், நாப்கின்கள் சுகாதாரமான முறையில் அகற்றப்பட வழியில்லாதது, இதுபற்றிய தெளிவான சட்டங்களோ, விதிமுறைகளோ இல்லாத அரசு, இந்தப் பிரச்னையை எப்படி சரிசெய்யலாம் எல்லாமே படத்தில் விரிவாக பேசப்பட்டுள்ளது.

படத்தில் மாதவிடாய்னா என்ன? என்கிற கேள்விக்கு, மாணவிகள் வெட்கப்படுகிறார்கள். அல்லது விழிக்கிறார்கள். தன் உடலில் நடக்கும் மாற்றத்தை கூட அறியாமல் இருப்பது எவ்வளவு துயரம்? இன்று மாநகரங்களில் பத்து வயது கடந்தவுடன் குழந்தைகளுக்கு அம்மாக்கள் மாதவிடாய் பற்றி லேசாக சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவும், “இப்படி வந்தா, உடனே அம்மாவுக்கு சொல் லணும், டீச்சர்கிட்ட சொல்ல ணும்.. நாப்கின் வைக்கணும்” என்கிற அளவில்தான்... நகர்ப்புற, கிராமப் பகுதிகளில் இதுவும் இல்லை... யாருமே மாதவிடாய் என்றால் என்ன என்பது பற்றி சொல்லித் தருவதில்லை.. பெரும்பாலும் அம்மாக்களுக்கே அதுபற்றி ஒன்றும் தெரியவில்லை.

கொஞ்சம் பிளாஷ்பேக் ஓட்டிப்பார்த்தால்... நான் படித்தது ஆண், பெண் இருவரும் படிக்கும் பள்ளி... எட்டாவது தாண்டியதுமே, சக மாணவிகள் வயதுக்கு வருவது அடிக்கடி நடக்கும்.. ஏற்கனவே வயதுக்கு வந்தவர்கள் சிரிக்க, வயதுக்கு வராத பெண்களுக்கு ஒன்றும் புரியாது.... இதுபற்றி பாடத்திட்டத்தில் இருந்தாலும் ஆசிரியர்கள் சொல்லித் தந்ததில்லை...

ஒருநாள் ஒரு பெண் கழிப்பறை பயன்படுத்தி விட்டு வெளியே வர, அங்கு தேங்கியிருந்த இரத்தம் பார்த்து அதிர்ந்து விட்டேன்ஞ் உடன் வந்த பெண், சிறுநீரில் இரத்தம் கலந்து போவது ஒருவித நோய் என்று எனக்கு விளக்கம் வேறு சொன்னாள்..

வீட்டில் அக்கா வயதுக்கு வந்தபோது, மூலையில் உட்கார வைக்கப்பட்ட பத்து நாட்களும் அழுது கொண்டே இருந்தாள்... அம்மாவும் உடன் அழுதார்.. அக்கா பயத்தில் அழ, அம்மா “அக்காவுக்கு இன்னும் நகை எதுவும் செய்யவில்லை, அதுக்குள்ள வயசுக்கு வரணுமா” என்று சொல்லி, சொல்லி அழுதார்.

ஒன்பதாவது படிக்கும்போது, நான் வயதுக்கு வந்தபோது எனக்கும் அப்படித்தான் எதோ நோய் வந்து விட்டது என பயமாகி விட்டது... அம்மா அழுவார்கள் என்று சொல்லி, இரண்டு வாரங்கள் அம்மாவிடம் சொல்லவே இல்லைஞ் தயங்கித் தயங்கி சொன்னபோது தலையில் அடித்து மூலையில் உட்கார வைத்தார்கள்... இந்தமுறை அம்மாவின் அழுகை அதிகமாக இருந்தது.. இரண்டு வயசுக்கு வந்த பொண்ணுங்க வீட்ல இருக்கும்போது அழாம வேற என்ன செய்யிறதாம்?

தாமதமான அல்லது, முறையற்ற மாதவிலக்கு மருத்துவ ரீதியான குறைபாடு என்பதெல்லாம் எனக்கோ, குடும்பத்திற்கோ தெரியாது... ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு தாமதமானால் அம்மா கேட்கும் கேள்விகளுக்கு பதிலே சொல்ல முடியாது. கருப்பட்டி, எள் என எதேதோ தருவார்... சில நேரங்களில் கல்லூரியில் இருந்து வீடு திரும்புவதற்கே எரிச்சலாக இருக்கும்ஞ் “இன்னும் ஏன் வரலை?” என்று அம்மா கேட்கும்போது முட்டிக் கொண்டு செத்துப்போய் விடலாமா? எனத் தோன்றிய நாட்களும் உண்டு.

மாதவிலக்கு நாட்களில் நாங்கள் துணிதான் பயன்படுத்துவோம்... அதுவும் ஒவ்வொரு மாதமும் புதிதாக துணி தரமாட்டார்கள்.. பயன்படுத்தியதை துவைத்து, காயவைத்து பயன்படுத்த வேண்டும்.. அதையும் வெயிலில் உலர வைக்கக் கூடாது... வீட்டின் ஆண்கள் பார்க்கும் வகையில் கயிறில் போடக்கூடாது.. அதன் மேல் பல்லி உட்காரக் கூடாது.. கிருஷ்ணப் பருந்து அந்த துணியின் மேலாக (அது எங்கியோ வானத்தில் தான்) பறந்து செல்லக் கூடாது. அந்த நாட்களில் வெறும் பாயில் தான் படுக்க வேண்டும்.. வீட்டில் யாரையும் தொடக்கூடாது.. அடுக்களைக்குள் செல்லவே கூடாது... அந்த நாட்களில் போடுவதற்கென்றே கண்றாவியாக நாலு டிரஸ்... கல்லூரி காலத்தில் பார்ட்டைம் வேலைக்குப் போனபோது, சம்பளம் வாங்கினால் நாப்கின் வாங்கலாம் என்பதே ஆகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

இப்போது இந்த மனத்தடைகள் எல்லாம் எனக்கு இல்லைஞ் சுற்றுலா செல்லும்போது மாதவிலக்கு நாட்களில் ஒரு தயக்கமும் இல்லாமல் கோயிலுக்கும் செல்கிறேன்... ஆனாலும் இதுபற்றி நண்பர்களிடம் கூட பேச முடிந்ததில்லை... கடுமையான வயிற்று வலி, உடல் நடுக்கம், வாந்தி என முதல்நாளின் சில மணி நேரங்கள் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை.. அலுவலகத்தில் இப்படி மாட்டிக் கொள்ளும்போது தலைவலி, த்ரீ அவர்ஸ் பெர்மிஷன் என தயங்கித் தயங்கித் தான் கேட்க முடிகிறதுஞ். வித்தியாசமாக பார்ப்பார்களோ என்கிற அச்சம் இருக்கவே செய்கிறது...

அதுவும் ஆடையை கவனித்து, கவனித்து பதட்டத்தில் வேலையில் கவனம் செலுத்த முடிந்ததே இல்லை... நாப்கின் மாற்ற கழிவறை செல்ல வேண்டுமெனில் கைப்பையோடு செல்ல வேண்டும்.... இல்லையெனில் போதைப் பொருளை கடத்திச் செல்வது போல் நாப்கினை மறைத்து எடுத்துச் செல்ல வேண்டும்... நாப்கின் கையில் எடுத்துப் போக இன்னும் தயக்கம் இருக்கவே செய்கிறது.... ஆவணப் படத்தில் ஒரு பெண் சொல்வது போல... “ஆண்கள் ஷேவிங் க்ரீம், ரேஸர் எல்லாம் இயல்பா வாங்குறாங்க... ஆனா நாப்கின் கேட்டா பேப்பர்ல சுத்தி, கறுப்பு கலர் கவர்ல குடுப்பாங்க”..

உண்மைதான் இயல்பான ஒரு உடல் நிகழ்விற்கு எவ்வளவு குற்ற உணர்வு? உண்மையில் மனதளவில் நான்கூட என்னுடலை ஏற்றுக்கொள்ளவில்லை, அல்லது புரிந்து கொள்ளவில்லை என்பதை இந்த நேரத்தில் நான் உணர்ந்து கொள்கிறேன் ‘’மாதவிடாய்” ஆண்களுக்கான படம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இயக்கம்: கீதா இளங்கோவன்

தொடர்புக்கு: 94439 18808