நன்னீருக்கான கொள்கை வகுப்பதின் சில அம்சங்கள் நவீன எதார்த்தத்துடன் ஒத்துவருவதில்லை. நீர்ப் பற்றாக் குறையின் அறிகுறிகளும், சூழலியல் இடையூறுகளும், வேகமாகப் பரவியும் வருகிறது. இருந்தபோதிலும் நமது கொள்கைகளும் தொடர்ந்து. திறனற்ற பயனற்ற, சூழலியலைப் பாதிக்கக் கூடிய செயல் களையே தொடர்கின்றன. பாசன நீருக்கான அபரிமிதமான மான்யங்கள் உற்பத்தி ஆற்றலை வளர்ப்பதற்குப் பதிலாக நீர் வீணாவதற்கு வழிவகுப்பதாக இருக்கிறது. நிலத்தடி நீரை முறையில்லாமல் உறிஞ்சுவது, நில நீர் மட்டம் குறைவதற்கும், நீரடுக்குகளின் வறட்சிக்கு மட்டுமே வழி வகுக்கின்றன. பெரும் அணைகளும், திசை மாற்றுதல்களும், ஆறுகளின் ஓட்டத்தில் குறுக்கீடு செய்வது ஈரநிலங்களை வறண்டு போகச்செய்கிறது. ஆறுகளின் கடைப்பகுதியில் வாழும் மக்களுக்கும், நீர் சூழலியலுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. இதுவரை நாம் பெற்றுவந்த பலன்களை இயற்கை நமக்கு அளிக்க மறுக்கிறது. பூமியின் நீர்ச்சொத்து மக்களுக்கானது, அது சேமிக்கப்பட வேண்டியது என்ற கொள்கையிலிருந்து விலகி வணிகத்திற்கான கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன.

பெருவிகிதத்தில் வாழும் விரிந்த மக்கட் தொகைக்கான நீர், பாசனம், மின்சாரம் வெள்ளத் தடுப்பு என்பதை மையமாகக் கொண்டு இருபதாம் நூற்றாண்டில் வகுக்கப்பட்டது நீர்கொள்கைகள். ஆனால் அது பலன்களை சமமாகப் பங்கிட்டு அளிக்கத்தவறி விட்டது. அதில் பெரிய அளவில் நீர்ச்சுழற்சி முறைப் பாதுகாப்பும், நன்னீர் வழங்கிய அளவில்லாத பொருள் மற்றும் சேவை மதிப்பையும் பழைய நீர்க்கொள்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. சந்தையில் விலை இல்லாத எதுவுமே மதிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற வியாபார உலகத்தின் தாரக மந்திரமே இதற்குக் காரணம். இந்நூலின் முந்தைய அத்தியாயங்களின் பக்கங்கள் இதற்கான உதாரணங்களைச் சொல்லும். ஈரநிலங்களின், மேட்டுநிலங்களின், டெல்டாப்பகுதிகளின், நீர்ப் பிடிப்புப் பகுதிகளின் மதிப்பு, அவை எந்தச் செயல்பாட்டுக்காக தியாகம் செய்யப்பட்டனவோ அவற்றை விடப் பன்மடங்கு அதிக மதிப்பு உடையவை என்பதையும் அவை சொல்லும். அத்துடன் குடிநீரைச் சுத்திகரிக்கவும், பசியப் போக்கவும், வெள்ளத்தைச் சமாளிக்கவும், இன்னும் பிற இலக்குகளை அடையவும், பாரம்பரிய தொழில்நுட்ப வழிகளைக் கையாளும் செலவினத்தில் பத்தில் ஒரு பங்கு முதல் பாதிப் பங்கு வரையான செலவுக்குள்ளே இயற்கையின் சேவையைப் பயன்படுத்தி செய்து முடிக்க முடியும்.

இந்த உண்மைகள் அனைத்தும் ஒட்டு மொத்த நீர்க்கொள்கையை மறு சீராய்வு செய்வதை யும் கொள்கை முடிவு வகுப்பதற்கு புதிய சட்டகத்தையும் வலியுறுத்துகிறது. தேக்கித் திருப்பும், பழைய சிந்தனை நன்னீர் குறித்த தூய சிந்தனைகளுடன் நீர்கொள்கையை அணுக வேண்டி உள்ளது. நீரைத் தேக்கித் திருப்பும் பழைய நீர்க்கொள்கை என்பது இயற்கை நீராதாரங்களை பொறியியல் திட்டங்கள் மூலம் உறிஞ்சும்போதுதான் அவற்றை மதிப்புடையதாகக் கருதியது. நவீன ஞானத்துடனும் காலத்திற்கு ஏற்றதாகவும், சூழலியல் மதிப்பு உணர்ந்ததாக சமூகத்திற்கு இயற்கை அளிக்கும் உழைப்பைப் போற்றுவதாக, உலகத்து உயிர்களை நேசிப்பதாக அனைத்திற்கும் இசைவான நீர்க்கொள்கைகள் வகுக்கப்படவேண்டும். சூழலியலைச் சிதைக்கும் எந்த முடிவும் வெள்ளக்கட்டுப்பாடு பன்ம உயிர்ப் பெருக்கம். இயற்கை வழங்கும் பொருள் மற்றும் சேவையின் இழப்புக்கே வழிவகுக்கும். அத்தகு புதிய மனமே புத்திப்பூர்வமான தேர்வுகளுக்கும் லாபநஷ்டங்களைச் சரியாக அளவிடுவதற்கும் அவசியமானது ஆகும்.

இந்தக் கொள்கை மாற்றத்தில் மறுஉறுதி காணும் இதயம் மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்க வேண்டும். அந்த அங்கீகாரத்தின் குறிப்பிட்ட சில துறையின் உரிமைகளை மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற அரசின் பிடியில் வைத்திருக்க வேண்டும். நம்மைப் பாதுகாக்கும் பொது நன்மைக்காக இந்தக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் ஏற்கும் விதத்தில் அமைய வேண்டும். உலகமயம், தனியார் மயம் என்ற புயல்கள் ஒவ்வொரு கதவையும் பலமாக மோதும் இன்றைய சூழலில், அரசுகள் எந்த வணிக நிறுவனத்தையும் விட நீரின் மீது அதிக உரிமையுடடையது என்பதை பலமாக உறுதி செய்திட வேண்டும். மரபார்ந்த சந்தையினால் மதிப்பளிக்கப்படாத அதனால் பாதிக்கப்படாத நீரின் மீதான இந்த உரிமை சமூகத்திற்கு பலன் தருவதாக இருக்கும். நீரின் மீதான தம் உரிமையை அரசுகள் அதிக விலைக்கு விற்றால், அவை மக்களின் நம்பிக்கை இழக்கும். அரசுகள் வைப்புரிமையின் குறைந்த பட்ச விலையிலும் கூட குறைத்து விற்கலாம் மக்கள் நம்பிக்கையைப் பெறுவதற்காக.

நீர் நிர்வாகத்தில் மக்கள் நலன் என்பதைக் கொள்கையாகவும் நடைமுறையாகவும் மாற்றும் ஒரு தலைமை, நாம் எதிர்பாராத ஓரிடத்திலிருந்து எழுந்தது & அது தென் ஆப்பிரிக்கா. நிறவெறிக்குப் பிந்தைய நெல்சன் மண்டேலாவின் அரசு 1994ல் பதவிக்கு வந்த பின்னர் தேசத்தின் விதிகளைத் திருத்தி எழுவதுவதில் முனைப்பாய் இருந்தது. அந்த வகையில் நாட்டின் புதிய நீர்ச் சட்டம் 1998ல் நிறைவேற்றியது. மக்களின் நலன் காக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் உறுதியாக இருந்த அந்தச் சட்டம் இரண்டு பகுதிகளாக விதங்களில் நீர் சேமிப்பு முறைகளை அறிமுகப்படுத்தியது. முதலாவது விவாதங்களுக்கு இடமற்ற வகையில் நீர் ஒதுக்கீடு செய்து அதன் மூலம் குடிநீர், சமைக்க, சுகாதாரத் தேவைஎன தென்னாப்பிரிக்க மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளை ஈடுசெய்வது. (தென்னாப்பிரிக்க நிறவெறி சக்திகள் அதிகாரத்தைக் கைமாற்றித் தருவதற்கு முன்னர் 14 மில்லியன் ஏழைமக்களுக்கு இந்த அடிப்படைத் தேவைகள் அளிக்கப்படாதிருந்தது) இரண்டாவது பகுதி நீர் சேமிப்பு ஒதுக்கீடு தென்னாப்பிரிக்க மக்களுக்கு மதிப்பு மிகுந்த சூழலியல் சேவையை உறுதிப் படுத்துவதற்கானது. அந்தச்சட்டம் குறிப்பிட்டுச் சொல்வது சூழலியல் செயல்பாட்டிற்கு பொருத்தமான தரத்தில், அளவில், காலத்தில் நீர் வழங்கலை சட்டம் உறுதிப்படுத்தும். எந்த மனிதர்களும்தான் சார்ந்துள்ள நீரைச் சேமித்துக் கொள்ள உரிமை உண்டு. மனிதப்பயன்பாட்டிற்கான நீரைத் தரும் சூழலியலில் தனிப்பட்ட ஒருவரோ அல்லது கூட்டாகவோ இணைந்து நீண்ட காலத்திற்கு இடையூறு செய்யக்கூடாது. இந்த இரண்டு வகையான பயன்பாட்டிற்கும் சேமிக்கப்பட்ட நீர் வழங்கப்பட்ட உரிமத்தின் அடிப்படையில் பாசனத்திற்கு முன்னுரிமை உத்திரவாதப்படுத்தப்பட்டது.

தென்னாப்பிரிக்கா காட்டிய இந்தச் சட்ட வடிவிலான முன்னுதாரணத்தை பல்வேறு மாநாடுகள், திட்டங்கள், சட்ட ஆணையகங்கள் இதே போன்ற அணுகுமுறையைப் பின்பற்றுமாறு அறைகூவல் விடுத்தன. ஜெர்மனியின் போன் நகரில் 2001 டிசம்பரில் 118 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட நன்னீருக்கான சர்வதேச மாநாட்டில் உலக அளவில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அது அடுத்து வரும் ஆண்டுகளில் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டது. மதிப்புமை மிகுந்த சூழலியலில் நிலைத்த வளர்ச்சியைக் காண்பதற்கு ஆற்று நீர் நிர்வாகம் மற்றும் நீர் ஒதுக்கீட்டில் ஆற்றில் குறைந்த பட்சம் ஓடுவதற்கான நீர் ஒதுக்கப்பட வேண்டும். சூழலியல் இயைபுத் தன்மையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். நூற்றாண்டு சூழலியல் ஆய்வின் நான்காண்டு முயற்சி 2005ல் முடிவுற்றது. ஐக்கிய நாடுகளின் சபையைச்சேர்ந்த 1300 விஞ்ஞானிகளின் பார்வையில் இந்த ஆய்வு இடம்பெற்றது. அவர்களது விருப்பத்தின்படியே சிலஅம்சங்களுக்கு முன்னுரிமைகளும் அளிக்கப்பட்டது. அதன் பின்னணியில் நன்னீர்ச் சூழலியலைப் பாதுகாப்பதற்குரிய முறையில் நீர்க்கொள்கையை மாற்றி அமைக்குமாறு உலக நாடுகளின் அரசாங்கங்கள் அறைகூவி அழைக்கப்பட்டன.

அரசுகளுக்கு முதல் சிக்கலான கட்டம் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மனிதர்கள் இயற்கைக்கு ஊறுசெய்யாதிருக்க வேலிகள் நிறுவுவது. ஆறுகளை, நிலத்தடி நீரைப்பயன்படுத்துவதற்கு எல்லை நிர்ணயிப்பது. ஆறுகளை அணையில் தேக்கி வணிக நோக்கத்திற்காக ஆண்டு முழுதும் இயற்கையாக ஓடுவதுபோல் பாவனை செய்யப்படுகிறது. ஆற்று நீரை அதிகமாக எடுத்து விடும் போது கடல் நீர் உட்புகுந்து விடுகிறது. அதிகமாக நீரெடுக்கப்படும் ஆறுகளைப் பொறுத்தவரை அது நீரெடுப்புக்கு எல்லை வரையறுத்து ஆற்றுக்கு நீரைத் திருப்பி அளிப்பது. நீரெடுப்புத் தடுப்புவிதி என்பது வளர்ச்சிக்கு எதிரானதல்ல: மாறாக நிலைத்த வளர்ச்சிக்கு சாதகமானது. சிறந்த அறிவியல் ஞானத்துடன் செய்யப்படுமானால் அது சூழலியல் செயல்பாட்டை உயிர்ப்புடன் வைத்திருந்து பொருளாதார வளர்ச்சிக்கு மைய ஆதாரமாக விளங்கும். நீர் சேமிப்புத் திறனை அதிகரித்து சக்தியை மிச்சப் படுத்தி, ஆற்றலை, சந்தையை உயர்த்த வழிவிடும்.

தடுப்பு விதிகள் பலவடிவங்களில் உருவாக்கப் படலாம், பலபெயர்களில் வரலாம் ஆனால் அவை இன்று முக்கியமாக பலசமயங்களில் விடுபட்டுவிடக் கூடிய நீர் மேலாண்மையின் அத்தியாவசியப் பகுதியாகும். உதாரணமாக ஆஸ்திரேலியாவில் முர்ரேடார்லிங் ஆற்றின் படுகையில் இருந்து எடுக்கப்படும் பெருமளவு நீர் தேசியப் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் அந்த மிகை நீர்ப்பயன்பாடு ஆற்றின் நலத்திற்கு கேடாக மாறியது. முர்ரேடார்லிங் ஆற்றுநீர்ப் பயன்பாடு 1944க்கும்1994க்கும் இடையில் மூன்று மடங்கானதால் ஆற்றின் ஓட்டம் குறைந்து சூழலியல் ஆபத்தான கட்டத்திற்குப் போனது. ஈரநிலத்தின் அளவும், மீன் தொகையின் அளவும் குறைந்தது. நீர்ப் பாசிகளின் எண்ணிக்கை பெருகியது. இயற்கையாக 5 சதவீதம் நீர்வரத்து நின்று போவதுடன் ஒப்பிடும் போது, மொத்தமாக ஆற்றின் நீர் ஓட்டம் குறைந்ததால் 60 சதவீத ஆண்டுகளில் முர்ரேடார்லிங் முகப்பகுதிக்கு நீர் வரத்தே இருப்பதில்லை. வறட்சி ஆண்டான 2003ல் முர்ரே ஆற்றின் ஓட்டம் ஆகக் குறைந்த அளவிற்குப் போய் முகத்துவாரம் மணல் திட்டுகளால் மூடப் பட்டது.

முர்ரே ஆற்றின் ஈரப்படுகை நியூசவுத் வேல்ஸ், க்யூன்ஸ் லேண்ட், சவுத் ஆஸ்ட்ரியா, விக்டோரியா ஆகிய நான்கு மாநிலங்களுக்குப் பரவி ஆஸ்திரேலியாவின் முக்கியமான பிரதேசமாக உள்ளது. அரசியல் ரீதியான பிணைப்புடன் உருவாக்கப்பட்ட முர்ரேடார்லிங் பேசின் கமிஷன் (MDBC) எனும் அமைப்பு ஆற்றை நிர்வகித்து வருகிறது. ஆறு அதன் சிறப்புகளை சூழல் ரீதியாக இழந்து வருவதை கவனத்தில் கொண்டு நான்கு மாநில இயற்கை வள அமைச்சர்களும், காமன் வெல்த்தும் இணைந்து 1997ல் ஆற்றுப்படுகை பிரதேசத்திற்கான கொள்கை ஒன்றை உருவாக்கினார்கள்.

அந்தக்கொள்கை உருவாக்கப்பட்ட பின்னர் முர்ரேடார்லிங் ஆற்றின் படுகையில் எழுகிற புதிய நீர்த்தேவைகளில் நீர்சேமிப்பிற்கும், ஆற்றல் வளர்ச்சிக்கும் நீர் வணிகத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அக்கொள்கை உருவாக்கத்திற்கு முன்னர் நடந்த நீர்பரிவர்த்தனைகள் அனைத்தும் அந்தந்த மாநில அதிகாரத்திற்குள்ளேயே முடித்துக் கொள்ளப்பட்டன. ஆனால் கமிஷன் அமைக்கப்பட்ட பின்னர் திட்டங்களை கமிஷனே வழி நடத்தியது. நான்கு மாநில எல்லைகளைக் கடந்து ஆற்றுப் படுகையின் தெற்குப் பகுதியில் நிரந்தர நீர் வணிகத்திற்கு கமிஷனால் அனுமதி வழங்கப்பட்டது. முதல் இரண்டாண்டுகளில் இத்திட்டத்தைப் பரிசீலனை செய்த போது 51 நீர்வர்த்தகர்கள் கூட்டாக 10மில்லியன் ஆஸ் டாலர் வர்த்தகம் செய்திருந்தது தெரிய வந்தது. மாநிலங்களுக்கு இடையில் 10மில்லியன் கண சதுர மீட்டர் நீர் மாற்றிக் கொள்ளப்பட்டிருந்தது. வர்த்தகத்தின் ஜீவன் அதிகபட்ச மதிப்பு மிக்கதாக இருந்தது. நீர்ச் சந்தை ஆற்றுப்படுகைப் பொருளாதாரத்திற்கு ஊக்கமளித்தது. நீர்கொள்கையில் சீர்திருத்தம் மேற்கொண்ட பிறகு 1999ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி கடந்த 25 ஆண்டுகளில் இருந்து இரண்டு மடங்கு ஆகி இருந்தது.

ஆற்றின நலனை பாதிப்படையச் செய்யக்கூடிய அளவிற்கு நீரை எடுப்பதற்கான சாத்தியங்கள் மேற்படி நீர்க்கொள்கையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த சறுக்கல் அதில் இருந்த போதும் ஆற்றின் தரம் இக்கொள்கை உருவாக்கப்பட்ட பின்னர் மேலும் மோசமாகாமல் இருந்தது. அந்நீர்க்கொள்கை ஆற்றைப் புத்துயிரூட்டுவதற்கும் போதிய அளவு கடுமையானதாக இல்லை. ‘வாழும் முர்ரே’ (Living Murray) என்ற திட்டத்தின் மூலம் மிகச்சமீபத்தில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பெரும் முயற்சிக்குப் பின்னர் ஆற்றின் ஓட்டம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரின் தரம் குறையாமல் காப்பாற்றுவ தற்கு முன்னுரிமை அளித்து நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கான கட்டுப்பாடுகள் இதேபோல் கொண்டு வரப்பட்டது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் எட்வர்ட்ஸ் அகுபையர் என்ற பாசன நீராதாரத்தால் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடு இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது மத்திய தெற்கு டெக்ஸாஸ் பகுதி விவசாயத்திற்கும் சான் அண்டானியோ நகரின் குடிநீருக்கும் இப்பகுதியின் நிலத்தடி நீர்தான் முக்கிய ஆதாரமாக உள்ளது. 1990களின் துவக்கத்தில் குடிநீருக்காக பெருமளவு நீர் சான்மார்கோஸ் மற்றும் கோமல் ஸ்பிரிங்கஸ்ல் இருந்து உறிஞ்சப்பட்டதால் அவற்றின் ஓட்டம் வேகமாகக் குறைந்தது. மைய அரசின் அழிந்துவரும் உயிரிகளுக்கான சட்டத்தின் கீழ் இப்பகுதியில் இருந்த டெக்ஸாஸ் ப்ளைண்ட் சாலமாண்டர் மற்றும் பவுண்டன் டார்ட்டர் போன்ற அரிய ஏழு உயிரினங்கள் கொண்டு வரப்பட்டன. சியாரா கிளப் போன்ற மற்ற சில அமைப்புகள் நீர் எடுப்பதை சட்டரீதியாகக் கட்டுப்படுத்த வேண்டும், என்றும், வசந்த காலத்தில் ஆற்றில் நீர்ஓடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தன. வழக்கின் அடிப்படையில் டெக்ஸாஸ் சட்டமன்றத்தில் 1993ல் எட்வர்ட் அக்குபையர் ஆணையத்திற்கு அளவு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அது 2007ல் நன்னீரை ஆண்டிற்கு 555.3 கணசதுர மீட்டர் மட்டுமே எடுக்க வேண்டும், என்று கட்டுப்பாடு கொண்டு வந்தது. 2008ல் மேலும் கட்டுப்படுத்தி அது 493.6 மாற்றப்பட்டது. கூடுதலாக ஆற்றின் ஓட்டம் நின்றுவிடாமல் 2012 வரை வருடத்திற்கு இரண்டு வசந்தத்திற்கு குறைந்த பட்ச ஓட்டத்தை ஆணையம் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

முர்ரே ஆற்றுப்படுகை நீர் எடுப்பிற்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதில் இருந்து எட்வர்ட்ஸ் அக்குபையர் நீர்ச்சந்தையில் முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருந்தது. நிரந்தர விற்பனையிலும், தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலும் பெரும்பாலான வர்த்தகம் நடந்து வந்தது. பாசனதாரர்கள் சான்அந்தோனியாவிற்கு நீரை விற்று வந்த னர். இன்றைய தேதிக்கு பாசனதாரர்கள் ஆண்டிற்கு 185.1 மில்லியன் சதுர கணமீட்டரை நகரபயன்பாட்டாளர்களுக்கு விற்கின்றனர். நீர் வாரியம் சான் அந்தோனியா நீர் சேமிப்பை ஊக்குவிக்கிறது. வீட்டு உபயோகத்தில் டெக்ஸாஸின் மற்ற நகரங்களைவிட சான் அந்தோனியா மிகவும் குறைவான அளவே பயன்படுத்துகிறது.

விவசாயத்தில், தொழிற்சாலையில் வீட்டு உபயோகத்தில் நீரைச்சிக்கனமாக பயன்படுத்துவதற்கு உதவிகரமாக நீரின் விலை நிர்ணயம் எனும் கருவி சரிவர பயன்படுத்தப்படவில்லை. பல பயனீட்டு வாரியமும், பாசன ஆணையமும் ஒரே குத்து மதிப்பான விலைதான் நிர்ணயித்துள்ளனர். அதற்கான அளவீடு ஒன்றும் இல்லாததால் நுகர்வோர் பயன்படுத்தும் அளவை விட குறைவான கட்டணமே பல இடங்களில் வசூலிக்கப்படுகிறது. மறுபுறத்தில் பல மட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இடங் களில் அளவு கூடக்கூட கட்டணம் கூடிக் கொண்டே போகும் எனவே அங்கே நீர் செலவினத்தில் இயல்பாகவே கட்டுப்பாடு பராமரிக்கப்படுகிறது. நீர் வழங்குனர் முதல் மட்டத்தில் ஆதாரக் கட்டணம் மிகக் குறைவாக நிர்ணயித்திருப்பார். அந்த வகையில் மிக வறிய நிலையில் இருப்போர் தங்களது குடும்பத்தின் அடிப்படைத் தேவையை குறைவான கட்டணத்திலேயே நிறைவேற்றிக்கொள்ள முடியும். பெருவீதப் பயனாளிகளிடம்¬ அதிகப்படியான கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் விற்போரின் ஆதார அளவிற்கான மானியத் தொகை வசூலிக்கப்பட்டு விடுகிறது. எனவே கட்டணம் அனைவருக்கும் சமமான அளவிலே பராமரிக்கப்படுகிறது. இந்த நிர்ணயம் ஒருபுறம் நீர் சேமிப்புக் கண்ணோட்டத்திலும், மறுபுறம் ஏழைகளுக்குக் கட்டுபடியான வகையிலும் ஏழை, பணக்கார நாடுகள் ஒரே விதமான பயன்பாட்டில் இருக்கும்படியும் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 300 நகரங்களில் மேற்கொண்ட ஆய்வில் பலமட்ட விலை நிர்ணயத்தை 13 சதவீத நகரங்கள் மட்டுமே பயன்படுத்துவதாகத் தெரியவருகிறது.

இத்தகைய ஊக்க விலை நிர்ணயம் பாசன தாரர்களுக்கு நெருக்கடியைத் தருகிறது. அவர்களுக்கு உத்தேசமான மான்யம் வழங்கப்படுகிற போதிலும் அவர்களுக்கு நெருக்கடி தருவதாகத் தான் இருக்கிறது. உதாரணத்திற்கு கலிபோர்னியாவில் ஒரு திட்டம் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பாசன மாவட்டங்களில் அவர்கள் முன்னர் செலுத்தும் அதே கட்டணத்திற்குள் மூன்று கட்ட நிலை உருவாக்கப்பட்டது. அவர்களது பயன்பாட்டு அளவில் 80 சதவீதத்திற்கு மேல் கட்டணத்துடன் நிர்ணயிக்கப்பட்டது. பாசனதாரர்களின் ஒப்பந்த அளவில் 80லிருந்து 90 சதவீதம் பயன்படுத்தினால், உபரி பயன்பாட்டிற்கு ஒரு கண சதுர மீட்டருக்கு கூடுதலாக பத்து சதவீதம் செலுத்தினால் போதும். ஆனால் ஒப்பந்த அளவில் 90லிருந்து 100 சதவீதத்திற்கு மேலே போனால் இன்னும ஒரு பத்து சதவீதம் கட்டணம் உயரும். அந்த வகையில் சிலர் தங்களது அடிப்படைக் கட்டணத்தைப்போல மூன்று மடங்கு செலுத்த வேண்டி வந்துவிடுகிறது. பாசனதாரர்கள் 10&20 சதவீதப் பயன்பாட்டிற்குக் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் நீரைச்சேமிக்க ஊக்கப்படுத்தப்படுகின்றனர். இந்தத் திட்டம் 1980களின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சில வருடங்களிலேயே சராசரிப்பயன்பாடு 19 சதவீதம் குறைந்தது.

நாம் முன்னர் விவாதித்த அல்லது பிற பல அளவுகளின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட நீர்க்கொள்கையில் 12 அம்சங்கள் முக்கியமாக கவனத்தில்கொள்ளப்படுகின்றன. ஆகவே நன்னீர்ச்சுழல் தரங்கெடாமல், பாதுகாக்கப்படும். அந்த வகையில் ஆற்று ஓட்டத்தின், நிலத்தடி நீரின், ஈரநில ஆரோக்கியத்தின் நிலைத்தன்மை உயர்த்தப்படவும், கண்காணிக்கப்படவும் வேண்டு கோள் விடப்படுகிறது. ஆற்றின் உற்பத்திக்கான அளவீடும், நீரியல் கண்காணிப்பு அமைப்புகளும் உலக அளவில் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்குள் வருகிறது. நல்ல கண்காணிப்பு முறையும், நீரியல் தகவல் முறைகளும் போதிய அளவில் வழங்கப்பட்டால் இந்த நீரியல் மாற்றங்களுக்கு உடன்பட சமூகம் தயாராகவே உள்ளது. உதாரணத்திற்கு ஆறுகள் தன் இயற்கையான ஓட்டத்தில் பராமரிக்கப்பட வேண்டும், அறிவியலாளர்கள் ஆற்றுநீரை எந்த அளவிற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதற்குப் போதுமான தகவல்கள் கொடுத்தால், ஆறுகளின் வெள்ள மட்டம் எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதைக் கூறினால் ஈரப்படுகை முதற்கொண்டு சூழலியல் ஓட்டத்தை மீட்க வேண்டியதை சுட்டிக்காட்ட வேண்டும்.

எத்தனை புதிய வெற்றிகரமான திட்டங்கள் கொண்டுவந்தாலும், கொள்கைச் சீர்திருத்தம் செய்தாலும் தலைமை, கடப்பாடு, மக்களின் பங்கேற்பு இவைகள்தான் நீர்ச்சூழலியல் காப்பில் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக இருக்கிறது. நீர்ப்பாதுகாப்பில் முயற்சிகள் பெரும்பாலும் சிறிய எண்ணிக்கையிலான தனிப்பட்ட நபர்களிடமிருந்து, அமைப்புகளிடமிருந்து, நீர் மேலாளர்கள், தங்களை மாற்று சிந்தனைக்கு மாற்று அணுகுமுறைக்குத் தங்களை ஒப்புக் கொடுத்த அரசியல் தலைவர்களிடமிருந்துதான் துவங்குகிறது. மற்றவர்களும் தமது ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள தயாராக வேண்டும். பழைய அணுகுமுறைகளும் சேதமுற்ற வழிகளும் ஒழிந்து வருகின்றன. ஆனால் இயற்கை நீர்ச்சுற்றின் இணைந்து நாம் செய்யும் ஆக்கப்பூர்வமான பணி களின் பலன்கள் இடையூறு செய்யாத நிராகரிக்க முடியாத இடத்தில் நின்று தம்மைக் கவனிக்குமாறு நம்மை வற்பறுத்திக் கொண்டு இருக்கின்றன.

தமிழில்: போப்பு

பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட நன்னீர்ச் செல்வம்’ புத்தகத்தின் இறுதிப் பகுதி, விலை ரூ.50