மான்சான்டோ உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய விதைக் கம்பெனிகள் உலக விவசாயத்தை தங்களின் கைக்குள் கொண்டுவர அதி வேகமாக ஆய்வுகளைச் செய்து வருகின்றன. பி.ட்டி கத்திரிக்கு தடை விதிக்கப்ட்ட பிறகு சுமார் 12 மாநிலங்கள் மரபணு மாற்று பயிர்களின் களப் பரிசோதணை தடை செய்யப்பட்ட பிறகு கையறு நிலையில் உள்ளன. தனக்காக குரல் கொடுப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை சமாதானப்படுத்தவும் பல காரியங்களை மான்சான்டோவும் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தில் உள்ளவர்களும் செய்து வருகின்றனர். அந்த வகையில் மான்சான்டோவின் இந்திய அலுவலகம் விவசாய அமைப்புகள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், விதைக் கம்பெனிக்காரர்கள், அரசியல் கட்சிக்காரர்கள் உள்ளிட்ட குழுவொன்றை அமெரிக்காவில் உள்ள எங்களது ஆய்வகங்களைப் பாருங்கள் எவ்வளவு சிறப்பான ஆய்வுகளை நடத்துகிறோம் என்றும், எங்களது விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி உங்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று கூறி அழைத்துச் சென்றது.

தெலுங்கு தேசக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான கேசவ், ஆந்திர காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கொண்டா ரெட்டி, குஜராத் கோ சாலை தலைவரும், பா.ஜ.கவின் முன்னாள் மத்திய இணையமைச்சர் கத்திரியா, பஞ்சாப் விவசாயத் துறை இயக்குனர் மங்கள் சிங் சாந்து, ஆங்கூர் விதை நிறுவனத்தின் இயக்குனர், தென்னிந்திய நூற்பாலைகளின் சங்கமான ‘சைமா’ வின் தலைமை நிர்வாகி செலுவராஜ், தில்லியிலிருந்து வரும் அக்ரிகல்சர் டுடே பத்திரிக்கையின் ஆசிரியர் எம்.ஜே.கான், ரவி எனர்ஜி என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்திரா பட்டேல், நூற்பாலை அதிபர் அருண் மோகன், மற்றும் சிலருடன் நானுமாக இருந்த குழுவை அழைத்துச் சென்றது மான்சான்டோ.

முகம், கை தவிர உடலின் எந்த பாகமும் தெரியக்கூடாது, கேமரா, செல்போன்களை எடுத்துவரக் கூடாது, எந்த வகையிலும் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது என்கிற எச்சரிக்கைகளுடன் கண்ணுக்கு பெரிய கண்ணாடி அணிவித்து அயோவா மாநிலத்திலுள்ள மான்சான்டோ அமைத்துள்ள மான்சான்டோ மூலக்கூறு இனப்பெருக்க ஆய்வகத்திற்கு (Monsanto Molecular Breeding Center) தங்களின் ஆய்வகத்திற்குள் அழைத்துச் சென்று கண்ணாடிச் சன்னல்கள் வழியே உள்ளே இயந்திரங்களைக் காட்டி விளக்கினர் மான்சான்டோவின் கிம் ஷாஃப் (Kim Schaaf). நடைபாதியில் பொறுத்தியிருந்த கம்ப்யூட்டர் திரையில் எப்படி தங்களின் புதிய ஆய்வுகள் நடக்கிறது என்று படமாகக் காட்டினர். மரபணு மாற்றங்கள் எப்படி நடக்கிறது, அறிவியல் ரீதியில் அதிலுள்ள ஓட்டைகள் பற்றி விவாதிக்கலாம் என்றால் அவர்கள் அடுத்த கட்டத்திற்குச் சென்றதை அந்த ஆய்வகத்தில் நடப்பது காட்டியது. மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தால் உள்ள பாதிப்புகளைக் காட்டி உலகமெங்கும் எதிர்ப்பு இருப்பதை ஆதன் மூலம் விதைகளை தனதாக்கிக் கொள்வது சாத்தியமானதல்ல என்பதால் அடுத்த வழியை நோக்கி நகர்ந்த விட்டது புரிந்தது. மரபணு மாற்றம் அளவிற்கு பாதிப்புகள் ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிற ஜீன் மார்க்கர் என்கிற தொழில் நுட்பத்தில் மிக வேகமாக ஆய்வுகளை எடுத்துச் சென்று வருகிறார்கள். எம். ஆர்.என்.ஏ தெளிப்பு என்ற தொழில் நுட்பத்திற்கு நகர்கிறார்கள்.

இந்தத் தொழில் நுட்பமானது மரபணுக்களின் ஆதாரமாக அமைந்துள்ள டி.என்.ஏ (DNA)மூலக் கூறுகளை அலசி ஆராய்ந்து, தேவையான இணைப்பை மட்டும் உடுத்து தங்களின் விருப்பமான விதைக்குள் புகுத்துவதே இந்தத் தொழில் நுட்பம். முதற்கட்டமாக மக்காச்சோளம் மற்றும் சோயா மொச்சையில் இந்த ஆய்வுகளை மான்சான்டோ கையில் எடுத்துள்ளது. இதற்காக அந்த ஆய்வுக்கூடம் தினமும் பல்லாயிர விதைகளை 3 ஷிப்ட் ஆய்வை நடத்துகிறது. விதையின் முளைப்பிற்கு பாதிப்பு வராத வண்ணம் விதையின் ஒரு பகுதியை நவீன ரம்பம் மூலம் எடுத்து அதற்கும் அந்த விதைக்கும் பார் கோடு (Bar Code கம்யூட்டர் மூலம் இடப்படும் அடையாள எண்) கொடுகிறது ஒரு சாதனம். இது போல் நூற்றுக்கணக்கான விதைகளில் இருந்து ராவி எடுத்த விதைப் பொடியை சின்னச் சின்ன டிரேகளில் (Tray) இட்டு கம்யூட்டர் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட இயந்திர மனிதர்கள் (ரோபோக்கள்) அதை பல்வேறு ஆய்வு நிலைகளுக்கு உட்படுத்தி, அதிலுள்ள டி.என்.ஏ மூலக்கூறுகளை பிரித்தெடுத்து ஆதன் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. கம்ப்யூட்டரில் பதிவாகியுள்ள டி.என்.ஏ பற்றிய விவரங்களைப் படித்து தேவையான டி.என்.ஏ உள்ள விதையை மட்டும் எடுத்து வளர்த்து விதைப்பெருக்கம் செய்து கூடுதல் ஆய்வுகளுக்கு உட்படுத்துகிறது. சுமார் 40,000 சதுர அடி அளவிள் அமைந்துள்ள அந்த ஆய்வகத்தில் மொத்தம் மூன்று ஷிப்டிற்குமாக 1520 விஞ்ஞானிகள் வேலை செய்கிறார்கள். அந்த அளவிற்கு அதி நவின இயந்திரமயப்படுத்தப்பட்ட ஆய்வகம். ஆண்டொன்றிற்கு ஆய்வு செலவு 1 பில்லியன் டாலர்கள்.

இத்தகு ஆய்வை மான்சான்டோ மட்டும் நடத்தவில்லை. மரபணு மாற்று விதைகளை தயாரிக்கும் விதை நிறுவனங்கள் அனைத்தும் இத்தகு ஆய்வில் உள்ளன. அத்தகு விதை நிறுவனங்களில் ஒன்றான பயனீர் டூபான்ட் (Pioneer DuPont) தங்களின் ஆய்வகத்திற்குளேயே பார்வையிட அனுமதித்தார்கள். அங்கும் இதே போலவே அதி நவீன முறையில் ரோபோக்கள் உதவியில் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. பயிர்களை சோதிக்க அமைத்துள்ள கண்ணாடிக் கூண்டு அறைகளும் மிகப் பிரமாண்ட மானவைகள். ஒவ்வொன்றும் பெரிய திருமண மண்டபம் அளவில். இராட்சத காற்றாடிகள் சுழன்று கொண்டிருக்கின்றன. மனிதர்கள் உள்ள சென்று தொட்டியில் வளரும் செடிகளை ஆராய முடியாது. முழுமையாக அதி நவீன காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் அந்தப் பல இலட்சம் செடிகளில் தேவைப்படும் செடியுள்ள தொட்டியின் எண்ணைக் குறிப்பிட்டால் கணினி மூலம் இயங்கும் கருவி அந்தத் தொட்டியியை மட்டும் எடுத்து வந்து தரும். வெளி அறையிலுள்ள விஞ்ஞானிகள் அந்தச் செடியில் தேவையான ஆய்வுகளைச் செய்ததும் அதே கருவிகள் அந்தத் தொட்டியை இருந்த இடத்தில் வைக்கும். இவ்வளவு அதி நவீனக் கருவிகள் எதற்கென்றால் மனிதர்கள் சென்று எடுத்துவந்தால் அதிக கால தாமதம் ஆகிவிடுமாம். ஒவ்வொரு நிமிடமும் அதி முக்கியமாம் அவர்களுக்கு. அதற்கு ஒரே காரணம், கொஞ்சம் தாமதித்தாலும் அடுத்த கம்பெனி காப்புரிமை பெறுவதில் முந்திக் கொள்ளுமாம். அதற்காகத் தான் கம்ப்யூட்டர் மயமான, இயந்திர மனிதர்கள் உள்ள அந்த ஆய்வகங்கள். மான்சான்டோ ஆய்வகத்தில் நடக்கும் ஆய்வுகளுக்கு அது செய்யும் செலவு ஆண்டொன்றிற்கு 1 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 550 கோடி ரூபாய்.

இந்த வகை ஆய்வின் அவர்களுக்கு ஏன் முக்கியம்?

பன்னாட்டு விதை நிறுவனங்கள் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தின் குறைபாடுகளை உணர்ந்துள்ளன. அதனால் தான் குறைந்த பாதிப்புகளை உடைய மரபணுக்களுக்கு அடையாளமிட்டு, தேவைப்படும் மரபணுவில் உள்ள குறிப்பிட்ட டி.என.ஏ க்களை (மரபணுக்கள் டி.என்.ஏ என்ற இரசாயனத் தொகுப்பால் ஆனவை) மட்டும் பிரித்தெடுத்து அதை மட்டும் தேவைப்படும் தனக்கு வேண்டிய பயிரில் நுழைக்கும் தொழில் நுட்பம் இது. வழக்கமான பயிர் இனப்பெருக்க முறையும் அதி நவீன மரபணு அடையாளமிடும் முறையும் கலந்த ஒன்று இது. மரபணு மாற்றம் சரியானதல்ல, பல பாதிப்புகளை உருவாக்கக் கூடியது, மனிதர்களுக்கு, விலங்கினங்களுக்கு, இயற்கை சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது, காப்புரிமை மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் கம்பெனியின் தனிச் சொத்தாக மாற்றப்பட்டு விடுவதால் விவசாயி களின் விதை உரிமை பாதிக்கப்படுகிறது போன்ற காரணங்களில் அவை எதிர்க்கப்பட்டு வருகிறது.

மரபணுக்கள் அடையாளமிடும் தொழில் நுட்பத்தில் மரபணுக்கள் திணிப்பு இல்லாததால் பாதிப்புகள் இல்லை. ஆனால் அண்மைக் காலமாக காப்புரிமைச் சட்டங்களில் இந்த வகை மரபணுக்கள் அடையாளத்தின் மூலம் உருவாக்கப்படும் கலப்பின வகைகளுக்கும் காப்புரிமை வழங்கலாம் என்றும் தாவரங்கள் உயிரினங் களையும் காப்புரிமை செய்து கொள்ளலாம் என்றும் காப்புரிமைச் சட்டங்கள் பல நாடுகளில் மாற்றப்பட்டு வருகிறது. இப்புதியக் காப்புரிமைகள் விதையுடன் நிற்பதில்லை அதன் மூலம் பெறப்படும் விளைச்சல், விளைந்ததைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் அத்தனை மீதும் இந்தக் காப்புரிமை செல்லும். மரபணு அடையாளம் மூலம் மாற்றம் செய்யப்பட்ட நெல் விதை அது தரும் விளைச்சல், அதிலிருந்து தயாரிக்கப்படும் சோறு, இட்லி, தோசை எல்லாமே இந்தப் புதிய காப்புரிமைக்குள் வரும்.

ஆகவே எல்லா வகை விதைகளையும் அதன் மூலம் அணைத்து வகை உணவுப் பண்டங்களையும் காப்புரிமைக்குள் கொண்டு வர இந்த நிறுவனங்கள் முன்புடன் இயங்குகின்றன.

பயனீர் தனது வயல் வெளி ஆய்வகத்திற்கும் அழைத்துச் சென்றது. பல நூறு ஆய்வுத்திடல்களில். மக்காச்சோளம் மற்றும் சோயா மொச்சை தான் அதிக திடல்களில். அவற்றில் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. களைகளைக் கட்டுப்படுத்த ஓர் ஆய்வுத்திடலில் பூசணிச் செடியை உயிர் மூடாக்கைப் பயன்படுத்தி யிருந்தனர். விளக்கிக் காட்டிய பயனீரின் மக்கள் தொடர்பு விஞ்ஞானி மிகப் பெருமையுடன் இதற்கு அடியில் பாருங்கள் ஒரு களை கூட வளரவில்லை என்று. ‘ஆமாம், மூடாக்குச் செடியே களைகளைக் கட்டுப்படுத்தும் போது இனி எதற்கு களைக் கொல்லிகள். அவைகள் இனி தேவையிருக்காதா எனக் கேட்டதும் திரும்பிப் பார்த்துவிட்டு தோளை உயர்த்தி, உதட்டைப் பிதுக்கிவிட்டு ஒன்றும் சொல்லாமல் நகர்ந்து விட்டார். அவர் பார்த்த பார்வை அடப்பாவி மகனே அடி மடியாலேயே கை வைக்கிறாயே என்பது போல இருந்தது.

இந்த இரு ஆய்வுக் கூடங்களும் ஒரே மாதிரியான ஆய்வுகளில் பல்லாயிரம் கோடி டாலர்களைக் கொட்டியுள்ளன, உலக விதைகளை தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டுவர. அதற்கு அவர்கள் கூறும் காரணம் அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க வேண்டும். அதிக விளைச்சல் எடுக்க வேண்டும் என்பதே. அதற்கு புதிய விதைகள் வேண்டும் அதிகம் விளையும் விதைகள் வேண்டும் என்கின்றன. ஆனால் அங்கு நடக்கும் ஆய்வுகள் அதிக விளைச்சலைப் பெறுவதற்கான ஆய்வுகள் அல்ல. அவர்களுக்குத் தெரியும் விளைச்சல் என்பது பல்வேறு காரணங்களால் நடப்பது என்று. பழைய விதைகளை விவசாயிகள் கைவிட்டு விட்டனர். ஆனால் அந்த கம்பெனிகள் கைவிடவில்லை. பூச்சிகளுக்கும், நோய்களுக்கும் எதிர்ப்பு சக்தி பெற்றிருந்த, குவாஷ் பழக் கொடியுடனும் பீன்ஸ் செடிகளுடனும் கிழக்கு அயோவாவில் 1000 ஆண்டுகளுக்கு முன் பயிரிடப்பட்டு வந்த பிளட் பட்சர் என்று பெயரிடப்பட்ட மக்காச் சோளத்தையும் வேறு பலவற்றையும் அது இன்னமும் விதைத்துள்ளதைக் கண்டோம்.

அயாவோ மாநிலத்தின் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாபெரும் விவசாயக் கண்காட்சியில் மான்சான்டோ 3 அரங்குகள் அமைத்திருந்தது. ஒரு அரங்கில் மான்சான்டோவின் தொழில் நுட்பப் பிரிவு அதிகாரிக்காகக் காத்திருந்தனர். அவர் வரும் வரையில் கண்காட்சியைச் சுற்றி வாருங்கள் எனத் தெரிவிக்கப்பட சுற்றினோம்.

கண்காட்சியை சுற்றிவர சுற்றிவர. இந்த வகை விவசாயத்தை நிலை நிறுத்த அமெரிக்கா ஈராக்கிற்குள் மட்டுல்ல, ஈரானிற்குள்ளும் நுழைந்து அங்குள்ள எண்ணை வயல்களைக் கைப்பற்றியாக வேண்டும் என்பது புரிந்தது. அவ்வளவு பிரம்மான்டமான இயந்திரங்கள். கூட வந்திருந்த அருண் நம்ம ஊரில் இயந்த இயந்திரங்களை நிறுத்த ஒரு வயல் பற்றாது என்று கிண்டலடித்தார். உண்மையில் அவை பிரமாண் டமானவைகள் தான். மிகப் பெரிய டிராக்டருடன் இணைக்கப்பட்டது போல் உள்ள விதைக்கும் இயந்திரத்தின் ஒருபக்க கை மட்டும் 25 மீட்டர் நீளம். அது போலவே களை அகற்றும் இயந்திரம், உரமிடும் இயந்திரம், அறுவடை செய்யும் இயந்திரம். பூச்சிக்கொல்லி தெளிக்கும் இயந்திரமும்

அது போலவே. அங்கு காட்சிக்கு பூச்சிக் கொல்லி தெளிக்கப் பயன்படும் சிறு இரக விமானங்களும் வைக்கப்பட்டிருந்தது. அறுவடை செய்த விளைச்சளை பெற்றுக் கொள்ளும் டிரெய்லர் மீதுள்ள கலனின் கொள்ளளவு 25 டன்கள். அதை அப்படியே எடுத்துச் சென்று பெரும்பெரும் இரும்புக் குதிருக்குள் கொட்டும் அது. விவசாயத்தை எப்படி செய்வது என்று தெரிந்திருப்பதை விட இந்த இயந்திரங்களைக் கையாளத்தெரிந்திரா விட்டால் விவசாயம் செய்ய இயலாது. அங்கு பார்த்ததில் கவர்ந்த ஒரேயரு அம்சம் அங்குள்ள இயந்திர தயாரிப்பாளர்கள் ஒரு விவசாயியின் சிறப்புத் தேவைக்கேற்ப, பண்ணையின் தேவைக்கேற்ப கருவிகளை வடிவமைத்திருப்பதுதான். அது மட்டுமன்றி ஒரு தேவைகளை ஒட்டி விதவிதமான சிறு சிறு கருவிகள், அது பண்ணைக்குள் பார்வை இடச் செல்வதற்காயினும், வேறு பணிக்கானதாக இருப்பினும் தேவைக்கேற்ப வடிவமைத்திருக்கிறார்கள்.

இவ்வளவு பிரமாண்டங்களால் அந்த கண்காட்சி நிரப்பப்பட்டிருப்பினும் அங்குள்ள மிகச் சிறு குடும்ப விவசாயிகளின் தேவைகளுக்கான அரங்குகளும் நிறைந்திருந்தன. ஓர் அரங்கில் அறுவடை செய்த பின் நிலத்தை அப்படியே போடாமல் ரை புல் (Rye) விதையுங்கள், அடுத்த விதைப்பின்போது மடக்கி உழுதால் நிலத்தில் நிறைய மக்குப் பொருட்கள் சேரும் என்றும், பல இயற்கை விவசாய அரங்குகளும் இருந்தன. அவைகளிலும் கூட்டம் நிறைந்தே உள்ளது.

வாடகைக்கு இருந்த சிறு வாகனங்களில் ஏறி பலரும் உலா வந்தனர். வந்திருந்த பலரும் அநியாயத்திற்கு உடல் பருத்திருந்தனர். சிறுவயதினரும் உடல் பருமனில் இருப்பதை பார்த்ததும், மிச்சய்ல் ஒபாமா வெள்ளை மாளிகையில் இயற்கை வழிக் காய்கறுத் தோட்டமிட்ட போது அமெரிக்க குழந்தைகள் உடல் பருமன் நோயால் பாதிக்கப்படுள்ளனர் என்று கூறியது தான் நினைவிற்கு வந்தது. மூன்றில் ஓர் அமெரிக்கன் உடல் பருமன் நோயில் உள்ள நோயாளிகள் நிறைந்த நாடு அது என்பது கண்கூடாகத் தெரிந்தது.

மான்சான்டோவின் எக்சிகியூட்டிவ் துணைத் தலைவரும் தலைமை தொழில் நுட்ப ஆதிகாரியுமான ராப் ப்ராளே கண்காட்சியில் அவர்கள் அமைத்துள்ள திடலில் பல நாடுகளிலிலும் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தவர்களிடம், ‘ மான்சான்டோ பெருகி வரும் உலக மக்கள் தொகைக்கு உணவளிக்கும் வகையில் பல புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடித்து வருகிறது. அதில் ஒன்று தான் மார்கர் தொழில் (Gene Marker Technology) நுட்பத்தின் உதவியால் டி.என்.ஏ க்களைப் படித்தறிவது. இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் மரபணுக்களை கத்தரித்து புகுத்தவது தேவை யில்லாமல் போகும். இதைப் போலவே நமக்குத் தேவையான புரத்திற்குறிய குறியீட்டை நகலெடுக்கும் எம்.ஆர்.என்.ஏ (mRNA)க்களை கண்டறிந்து ஆய்வுக் கூடங்களில் பெருக்கி தரவுள்ளது. அதனை விவசாயிகள் தங்களின் பயிர் மீது தெளித்தால் போதும் அதிகம் விளையும், பயிர்களில் உள்ள பிரச்சனைகள் விலகும் என்று சொர்க்க லோகமே வந்துவிடும் என்பது போல உரை நிகழ்த்தினார்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள் என்றதும் ஒரு தாளில் இந்தியாவில் பி.ட்டி பருத்தியில் பி.ட்டி மரபணுவால் தான் நிறைய விளைந்தது என்று கூறிக் கொண்டுள்ளார்களே உண்மையில் பி.ட்டி மரபணு விளைச்சளை அதிகப்படுத்தியதா? என்றும் அமெரிக்க விவசாயத்தில் இன்று பெரும் பிரச்சணையாக வளர்ந்துவரும் களைக் கொல்லிகளுக்கு எதிர்ப்பு சக்தியை களைகள் பெற்று வருவது பற்றியும் பதிலளிக்கக் கேட்டேன். என் வாழ்நாளில் நான் கேட்டிராத மிக வளவள, கொழகொழா பதிலை பி.ட்டி பருத்தி கேள்விக்குச் சொல்லிவிட்டு கேள்வி நேரம் முடிந்தது என்று முடித்துக் கொண்டார்.

அந்தக் கண்காட்சியில் அவர்கள் அமைத்திருந்த தொழில் நுட்ப விளக்கத்திடலில் இந்தியாவில் இருந்து வந்திருந்தவர்களுக்கான தனி விளக்குனராக ராஷ்மி நாயர் களைக்கொல்லிகளைத் தாங்கி வளரும் பயிர்கள் பற்றி விளக்கினார். இந்தியாவில் மான்சான்டோ உள்ளிட்ட கம்பெனிகளின் அடுத்து நுழைக்கவிருக்கும் மரபணு மாற்று விதைகள். எவ்வளவு களைக் கொல்லியைத் தெளித்தாலும் பயிர் சாகாத வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரகங்கள் இவை. அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகை பயிர்களில் தற்போது களைகள் களைக் கொல்லிகளுக்கு எதிர்ப்பு சக்தியைப் பெற்றுக் கொண்டதால் அதை எப்படி சமாளிக்கிறோம் என்று விளக்கினார் ராஸ்மி. இளம் பருவத்தில் ஒரு கைக் கொல்லி, வளர் பருவத்தில் ஒரு களைக் கொல்லி பின் தங்களது ரவுண்டப் களைக் கொல்லிகளைத் தெளிக்கவேண்டும். அந்தப் பயிர் ரவுண்டப் ஐ மட்டும் தாங்கிக் கொல்லும் சக்தியுள்ளதால் ஆரம்ப கட்டங்களில் பயிர் மேல் படாமல் பிற கம்பெனிகளில் களைக்கொல்லியை தெளிக்க வேண்டுமாம். பிற கம்பெனிகளின் களைக் கொல்லி வாங்க மானியமும் தருகிறதாம். கடப்பாரையை முழுங்கி விட்டு சுக்குக் கசாயம் குடிக்க காசு தருகிறது மான்சான்டோ.

இவ்வளவு களைக் கொல்லிகள் நிலத்தில் மீது தெளித்தால் நில வளம் பாதிப்படையாதா என்று கேட்டதும் அதை சரி செய்ய தொழில் நுட்பங்கள் உருவாக்கி வருகிறோம். ஆகவே அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றார். திருப்தியான பதிலாக இல்லை என்று என் முகம் காட்டியதைக் கண்டு நிலத்தில் உள்ள கரிமப் பொருட்கள் குறைந்தாலும் இரசாயனங்கள் மூலம் விளைச்சல் பாதிப்பில்லாமல் செய்து கொள்ளலாம் என்று எனக்கு கூடுதல் விளக்கம் தந்து விட்டு ஒருங்கிணைந்த விவசாய முறைகள் என்றார் அடுத்த திடலைக் காட்டினார். ஆகா இவர்களும் ஒருங்கிணைந்த பயிர் சாகுபடியைப் பற்றி பேசுகிறார்களே என்று பார்த்தால் அங்கு சுமார் 2025 நாட்கள் வயதுள்ள மக்காச்சோளம் வளர்க்கப்பட்டி ருந்தது, சில இடத்தில் நெருக்கமாக சில இடத்தில் அதிக இடைவெளிவிட்டு. அங்கிருந்தவர் விளக்கினார், ‘வயலில் (வயல் என்று அங்கு எதுவுமே கிடையாது. 100500 ஏக்கர் பரப்பு ஒரு வயல்) நில வளம் ஒரேமாதிரி இருப்பதில்லை. மண்ணின் தன்மையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆகவே விளைச்சல் எல்லா இடத்திலுத் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில இடங்களில் அதிகமும் சில இடங்களில் மிகக் குறைவாகவும் உள்ளது. குறைவாக விளையும் இடங்களைக் கண்டறிந்து அதற்கேற்ப விதைக்கச் சொல்கிறது. இதற்காக மண் வளத்தை செயற்கைக் கோள்கள் மூலமும், மண் பரிசோதணைகள் மூலமும், பல ஆண்டுகளாக எடுத்து வைத்துள்ள மண்பரிசோதணைகள் முடிவுகளையும் கணனியில் செலுத்தி வெவ்வேறு இடங்களில் உள்ள மண்வகை வேறுபாடுகளுக்கு ஏற்ப பயிர்களின் இடை வெளியை மாற்றி விதைப்பதையும் அவ்வவ்விடங்களுக்கு ஏற்ப இயந்திரங்கள் மூலமே உரமிடுவதையும் அது பரிந்துரைக்கிறது. அதற்காக கணினி மூலம் திட்டமிட்டு விதைக்கும் கருவி, உரமிடும் கருவி களைக் கொல்லி தெளிப்பது ஆகிய வேலைகளை அதாவது பல வகைத் தொழில் நுட்பங்களை ஒருங்கிணைப்பதையே, மான்சான்டோ ஒருங்கிணைந்த விவசாயம் எனகிறது.

இதற்கு ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் வாகனங்கள் தான் சரியாக உள்ளது என்று அதைப் பயன்படுத்துங்கள் என்று அதைப் பரிந்துரைத்தார் அந்த விளக்குனர். ஐயோ என்று அலற வேண்டும் போலிருந்தது அவர்களின் ஒருங்கிணைந்த விவசாயம் பற்றி கேட்டது. அருகில் இருந்த இந்தியக் கூட்டாளி விதைகளைக் காப்புரிமை செய்வது போலவே பல துறை தொழில் நுட்பங்களை ஒன்று சேர்த்து அமைக்கப்படுள்ள இந்த சாகுபடி முறையையும் மான்சான்டோ இதையும் காப்புரிமை செய்திருக்கும். இப்படி விவசாயிகள் பல துறை அறிவைப் பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்துவது நல்லதல்ல என்று காதருகில் முணுமுணுத்தார்.

களைக் கொல்லிகளுக்கு எதிர்ப்பு சக்தி பெறும் களைகள் பற்றிய கேள்விக்கு இன்னமும் சரியான பதில் கிடைக்கவில்லை அவர்களிடமிருந்து. இந்தக் கேள்வி மிக முக்கியமானதாக எனக்குப்பட்டது. களைக்கொல்லிகளைத் தாங்கி வளரும் பருத்தியை உருவாக்கி வருகிறது மான்சான்டோ இந்தியாவில். முதலில் அறிமுகம் செய்யப்பட்ட அமெரிக்காவின் பல மாநிலங்கிள் அது மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. அமெரிக்க விவசாயத் துறையே எதிர்ப்பு சக்தி பெற்றுக் கொண்ட களைகள் பெரும் பிரச்சனையாக மாறி வருவதை விவசாயிகளுக்கு எச்சரித்துள்ளது. ஆகவே தான் மான்சான்டோவின் பார்வை என்ன என்பதை அறிய இக்கேள்வியை விடாமல் கேட்டு வந்தேன் விளக்கம் சொல்ல வந்த எல்லோரிடமும் சால்சாப்பு மட்டுமே வந்துள்ளது, ஒருவர் தவிர. அவரும் மான்சான்டோவின் விஞ்ஞானி தான். மிசிசிப்பி மாநிலத்தில் உள்ள மான்சான்டோவின் கற்கும் மையத்தில் உள்ள ஜே ப்ரேயர் மட்டுமே, ‘ஆமாம் இது இங்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. ஆனாலும் சமாளிக்க முடியும் அளவில் தான் உள்ளது,’ என்றார். எப்படி சமாளிக்கிறீர்கள் என்றதற்கு, ‘மான்சான்டோவின் ரவுண்டப் தெளித்து சாகாத களைகள் இருந்தால் பிற களைக் கொல்லிகளை தெளிக்க பரிந்துரைத்துள்ளோம்,’ என்றார். ‘அப்படியெனில் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டோமே,’ என்றேன். ‘புரியவில்லை,’ என்றார். ‘வேறு களைக் கொல்லியெனில் அது பயிர் மீது படாமல் தானே தெளிக்க வேண்டும் இல்லையா,’ என்றதும் புரிந்து கொண்டு, ‘உண்மை தான். ஆனால் இதை அப்படிப் பார்க்கக்கூடாது,’ என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

‘அமெரிக்கா விவசாயம் மனாவாரி விவசாயம் தான். ஆனால் இந்த ஆண்டு அமெரிக்கா வறட்சியில் தவிக்கிறது. ஆகவே இந்த ஆண்டு அமெரிக்க விவசாயிகள் சென்ற ஆண்டில் பெற்றதில் பாதி கூட அறுவடை செய்யமாட்டார்கள்,’ என்றார். ‘இருப்பினும் இன்சுரன்ஸ் உள்ளதால் விவசாயிகள் பொருளாதார வகையில் பாதிக்கப்படமாட்டார்கள்,’ என்றார் அவர்.

நிறைய விளக்கங்கள் கிடைக்கும், மரபணு மாற்றுப் பயிர்கள் பற்றிய புதிய தெளிவு கிடைக்கும் அங்குள்ள விஞ்ஞானிகளிடம் பேசிய பின் எதிர்க்க மாட்டீர்கள் அவ்வளவு விளக்கங்கள் கிடைக்கும் என்று கூறி அழைத்துச் செல்லப்பட்ட இந்தப் பயணம் உண்மையில் நம்ம ஊரில் 45 நாட்களில் 10&15 ஊர்களில் உள்ள கோவில்களுக்குச் சென்றுவிட்டு இறுதியில் சென்னைக்கு வந்து வாகனத்தில் இருந்தபடியே அதோ அது தான் எல்.ஐ.சி, இது தான் அண்ணா சமாதி என்று காட்டுவார்களே அது போலிருந்தது. அதன் நோக்கம் உண்மையில் விளக்கம் கொடுப்பதல்ல. தனக்காக குரல் கொடுப்பவர்களை உருவாக்குவதே அதன் நோக்கம்.

இந்தியாவிலிருந்து வந்தவர்களில் அருசு மட்டத்தில் உள்ளவர்களையும், அரசின் கொள்கைகள் மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடிய சக்தியுள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு வாஷிங்டனில் அமெரிக்க விவசாயத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றும் நடந்தது. இந்த குழுவை இந்தியத் திட்டமிடுவோர் குழு என்று அது கூறியது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவில் மரபணு மாற்று விதைகள் மீது கடுமையான சோதனை கள் நடத்தப்பட்ட பிறகே அனுமதிக்கிறது. இந்தியாவில் உள்ளவர்கள் ஆகவே மரபணு மாற்றுப் பயிர் பற்றி பயப்படத் தேவையில்லை, அமெரிக்கர்கள் நீண்டகால/மாகவே மரபணு மாற்று விளைபொருட்களை உண்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஏதும் நடக்கவில்லை என்/றெல்லாம் அவர்களிடம் விளக்கப்பட்டதாம். அவர்கள் கலிபோர்னியாவில் மரபணு மாற்று பண்டங்கள் உள்ள தின்பண்டங்களில் அவை கலந்துள்ளது என்று லேபிள் ஒட்டப்படவேண்டும் என்ற சட்டம் விவாதத்தில் உள்ளதை அவர்கள் தெரிவிக்கவேயில்லையாம்.

அமெரிக்கவில் இந்திய விவசாயம் பற்றி அதிகம் கவலைப்படுபவர்கள் உள்ளார்கள் என்பதை இந்தப் பயணம் காட்டியது. அவர்கள் தங்களின் நலனுக்காக இந்திய விவசாயத்தைப் பற்றிக் கவலைப்படுவதும் வெளிப்படையாகவே தெரிந்தது. அவர்கள் தரும் தொழில் நுட்பங்கள் பாதுகாப்பானவை. அவைகளை எதிர்ப்பது இந்திய விவசாயத்தை, விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கும், இப்படியெல்லாம் கூறி இந்தியாவில் தன் குரலை ஒலிக்கச் செய்யவதற்கான வேலைகள் வேகமாக நடந்து கொண்டுள்ளன, சி.சுப்பிரமணியம் காலம் தொடங்கி. விதையைக் கையகப்படுத்த விதைக் கம்பெனிகள் அதிதீவிரமாக உள்ளன. விவசாயிகளும், நுகர்வோர்களிடம் விழித்துக் கொண்டால் மட்டுமே அவர்கள் தத்தமது நலன்களைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும்.