மக்களின் வாழ்வாதாரத்திற்க்கான, இயற்கை வளங்களைப் பாதுகாக்க, கடலைக் காக்க நடக்கும் இந்த போராட்டம் 500 நாட்களை கடந்தும் இன்றும் வீரியமாக, எழுச்சியாக எளிய மக்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த போராட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என கடுமையான பொய்வழக்கு களை செப்படம்பர் 11 & 2011 முதலே இம்மக்கள் மீது போட ஆரம்பித்த அரசு இன்றுவரை 350 வழக்குகளை சுமார் 1,20,000 போராடும் மக்கள் மீது பதிவு செய்து தனது கோர முகத்தை வெளிக்காட்டியுள்ளது.

மக்களின் கேள்விகளுக்கு நேர்மையான முறையில் பதில் தந்து தீர்க்க வக்கற்ற அரசு நமது நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 8,450 பேர் மீது தேச துரோக வழக்கும் (124யு ) 13,350 பேர் மீது அரசுக்கு எதிரான யுத்தம் (124,4121யு) என்ற வழக்கும், 18,143 பேர் மீது கொலைமுயற்சி (307) வழக்கும், 15,565 பேர் மீது அரசின் பொதுச்சொத்தை சேதாரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்தும் போராடும் மக்களை மிரட்டி அச்சுறுத்தி வருகிறது.

அணுஉலைக்கு எதிராக நடக்கும் போராட் டத்தை முறியடிக்க, நசுக்க காவல்துறை மூலம் அரசு கையாண்ட வழிமுறைகள் மிகக்கேவல மானது, அசிங்கமானது, அருவருப்பானது.

ஒரு பக்கம் தமிழக அரசு அணுஉலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக அமைச் சரவையில் “மக்களின் அச்சம் தீரும்வரை அணுஉலையை இயக்கக் கூடாது” என தீர்மானம் போட்டுக் கொண்டிருந்த செப்படம்பர் 22,2011 அன்று கூட அமைதியாக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த 2000 மக்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது.

தூத்துக்குடி, நெல்லை தேர்தல் பொதுக் கூட்டத்தில் “போராடும் மக்களுடன் தான் நான் இருப்பேன்” எனத் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கூறிய அக்டோபர் 15, 2011 அன்று 2000 மக்கள் மீது தேச துரோக வழக்கு (124யு) அரசுக்கு எதிரான யுத்தம் (121) உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தனது கொடூரத்தை காட்டியிருந்தது காவல்துறை.

தமிழக அரசு மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து அமைச்சரவையில் தீர்மானம் போட்டும், பொது நிகழ்வில் போராடும் மக்க ளுடன் உள்ளேன் என தமிழக முதல்வர் ஆதரவு போல சில வேடங்களை போட்டிருந்தாலும் “பாலுக்கும் காவல் பூனைக்கு தோழன்” என்பது போல் காட்டிக் கொண்டே மக்களை கருவறுக்க வேண்டும் என தொடர்ந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட பொய்வழக்குகளை ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மீது மார்ச் 18, 2012 வரை போட்டிருந்தது.

மார்ச் 19, 2012 அன்று பத்தாயிரக்கணக்கான காவல்துறையினரை கூடன்குளம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குவித்து வைத்துக் கொண்டு, தமிழக அரசு அணுஉலைக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தது. போராடும் மக்களை மிரட்டி ஒடுக்குவதற்காக 42 பெண்கள், 22 இளைஞர்கள் உட்பட 199 பேரை அரசுக்கு எதிரான யுத்தம், தேசத் துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது.

ஊருக்குள் வந்து கொண்டிருந்த பேருந்துகள் மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டது. மக்கள் ஊருக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. குழந்தை களுக்கு தேவையான பால் மற்றும் குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான தண்ணீர் வண்டிகள் மூலம் ஊருக்குள் கொண்டு வர அனுமதி மறுத்தது காவல்துறை. ஊருக்குள் உணவுப் பொருட்கள் கூட கொண்டு வர முடியாமல் தவித்தனர் மக்கள். பாசிச கொடூர மனம் படைத்த ஆட்சியாளர்களால் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லாமல் வேர்வை சிந்தி உழைத்து உலகுக்கு உணவு படைக்கும் மீனவர்களும், விவசாயிகளும் வதைக்கப்பட்டனர். இம் என்றால் சிறைவாசம்! ஏன் என்றால் வனவாசம்!! என்ற அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இடிந்தகரையில் நிலவியது.

அரசின் அச்சுறுத்தலுக்கு மிரளாமல் மக்களின் எழுச்சிகரமான தொடர் போராட்டத்தின் விளைவாய்; 23 நாட்களுக்குள் 197 பேரை பிணையில் விடுவித்தது தமிழக அரசு. போராட்டக் குழுவைச் சேர்ந்த தோழர். முகிலன், சென்னையைச் சேர்ந்த தோழர். சதீஷ்குமார் ஆகியோர் மீது மட்டும் பயங்கரவாதிகள், தீவிரசாதிகள் என பொய்யான குற்றச்சாட்டை சிறையில் அடைத்தும், 3மாதத்திற்கு அலைக்கழித்தது காவல்துறை.

மார்ச் 19, 2012 முதல் தற்போது தொடர்ந்து 144 தடை உத்தரவு போட்டு கூடங்குளம் பகுதிக்கு போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் வருவதைத் தடுக்க முயற்சித்து வருகிறது தமிழக அரசு.

பொய்வழக்குகள், கைதுகள், அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள் எவையும் மக்களின் போராட்ட உணர்வை மழுங்கச் செய்ய முடியவில்லை.

தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு மக்கள் மீது பொய்வழக்கு போட்டு வதைத்தாலும் போராட்ட நெருப்பை சிறிது கூட அரசால் அணைக்க முடியவில்லை.

 மக்களின் போராட்ட வேகம் மேலும் வலுத்து வந்தது. எங்களது மண்ணை, இயற்கை வளத்தை, கடலை, எங்கள் நாட்டை பன்னாட்டுக் கம்பெனியின் இந்திய அரசின் கொடூர சுரண்டலுக்கு அனுமதிக்க மாட்டோம் என்ற மக்களின் கோபத்தை போராட்டக் குழு நெறிப்படுத்தியதன் விளைவாய் ஒரு பெருங்காற்றாய் உருவெடுத்தது.

அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அநீதி யான தீர்ப்பை வழங்கியது. மக்களின் கேள்விகளுக்கு விடை கொடுக்க வக்கற்ற அரசு அணுஉலையை திறக்கப் போகிறோம் என ஆணவமாக கொக்கரித்தது.

இனிமேலும் பொறுப்பதற்கில்லை என போராட்டக் குழு முடிவுசெய்து பெண்கள், குழந்தைகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் முற்றுகைப் போராட்டம் என அறிவித்து அரசின் கண்ணில் மண்ணை தூவி அணுஉலையின் பின்பக்க பகுதியில் செப்டம்பர் 9, 2012 அன்று முற்றுகையிட்டனர். ஆயிரக்கணக்கான காவல்துறையை குவித்த வைத்தும், மக்கள் அச்சப்பட்டாமல் தனது உத்தியை மாற்றி போராடியது கண்டு பதறிப் போனது காவல்துறை.

செப்டம்பர் 10 பாசிச கொடூரம் அரங்கேறிய நாம் கடற்கரையில் எவ்வித ஆயுதமும் இன்றி அமைதியாக பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் மீது எவ்வித முன்னறிவுப்பும் இன்றி தீடீரென கண்ணீர்ப்புகை குண்டை வீசி தடியடி நடத்தியது காவல்துறை. அரச பயங்கரவாதத்தை மக்கள் தாங்கள் நின்று கொண்டு போராடிக் கொண்டே பின் வாங்கி உயிர் தப்பினர். காட்சி ஊடகங்கள் வழியாக உலகம் முழுக்க காவல் துறையின் அட்டூழியத்தை மக்கள் பார்த்தனர்.

போராட்டக் களத்திலிருந்து மக்களை விரட்டியடித்த காவல்துறையினர் மக்களின் சொத்துகளை சூறையாடத் தொடங்கினர். வேர்வை சிந்தி உழைத்து மக்கள் வாங்கி யிருந்த இரு சக்கர வாகனங்கள், படகு என்ஜின்கள் ஆகியவற்றை கல், அரிவாள் கொண்டு உடைத்து. வீட்டினில் புகுந்து பொருட்களை சூறையாடுவது, பணம் நகைகளை எடுத்துச் செல்வது, ஜன்னல்களை உடைப்பது என ஒரு காட்டுத் தர்பாரை நடத்திக் காட்டியது ஜெயலலிதாவின் காவல்துறை.

“பழக இனிமை, பணியில் நேர்மை, இதுவே நமக்கு பெருமை” என காவல்நிலையத்தில் மட்டும் எழுதி வைத்துள்ள காவல்துறை இடிந்தகரை மாதாகோவிலில் மாதா சிலையை உடைத்தும், வைராவிக்கிணற்றில் வினாயகர் சிலையை தூக்கி போட்டு உடைத்தும் கடமை ஆற்றியது. இடிந்தகரை ஊரை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது காவல்துறை.

 காவல்துறையின் அட்டூழியத்தை, அராஜகத்தை காட்சி ஊடகம் வழியாக பார்த்த கூடன்குளம், வைராவிக்கிணறு மக்கள் காவல்துறைக்கு எதிராக தெருவில் வந்து போராடத் தொடங்கினர். மக்கள் நெஞ்சுரத்தோடு நேருக்கு நேர் நின்றனர் காவல்துறையினர் பின்வாங்கி கூடன்குளத்தை நாசமாக்க தொடங்கினர். செப்படம்பர் 10, 11 ஆகிய இரு நாட்களிலும் இவ்வூர் களில் காவல்துறையினர் பேயாட்டம் போட்டனர்.

சட்டத்தைப் பாதுகாக்கிறோம் என சொல்லிக் கொண்டுள்ள காவல்துறையினர் கூடங்குளம், இடிந்த கரையில் நடத்திய கொடூரங்கள் எண்ணிலடங்காதவை. துப்பாக்கி சூட்டில் மணப்பாட்டில் மீனவர் அந் தோணி ஜாண் கொல்லப்பட்டார். மீது விமானத்தை தாழப் பறக்கச் செய்து மீனவர் சகாயம் படுகொலை செய்யப்பட்டார். காவல்துறையால் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டு போதிய மருத்துவ வசதி செய்யாததால் இடிந்தகரை ரோசலின் மதுரை யில் நிபந்தனை பிணையில் கையெழுத்து போடும் போது இறந்தார். காவல்துறையால் கைது செய்யப் பட்டு சிறையில் நோய்வாய்பட்ட கூடன்குளம் ராஜசேகர் தற்போது மரணத்தோடு போராடி வருகிறார்.

சட்டப்பூர்வ கிரிமினல் கும்பல் என நீதியரசர் சின்னப்பா ரெட்டியால் அழைக்கப்பட்ட காவல் துறை, வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 60க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து உடைத்து தூக்கி சென்றனர். காவல்துறை தாக்குதலில் 200 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டு அங்கிருந்த பொருட்கள், நகைகள், பணம், காவல்துறையால் எடுத்துச் செல்லப்பட்டது. கூடன்குளத்தில் பெரும்பாலான வீடுகள் காவல் துறையால் அடித்து உடைக்கப்பட்டது. கண்ணில் தென்பட்ட ஆண்கள், இளைஞர்கள், அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட வர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம், செல்போன் அனைத்தும் கூடங்குளம் உதவி ஆய்வாளர் திருஞானசம்பந்தத்தால் கொள்ளையடிக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராம மக்கள் ஒரு மாத காலம் தொழிலுக்கு செல்லாமல் அரசின் அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

செப்டம்பர் 10ம் தேதி 7 பெண்கள் 4 சிறுவர்கள் 1மனநிலை பாதித்தவர் உட்பட 66பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் தேச துரோக வழக்கு, அரசுக்கு எதிரான யுத்தம், கொலை முயற்சி, பொதுச் சொத்தை சேதப்படுத்துவது என பல்வேறு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது. ஒரு வழக்கில் கைது செய்த அனைவர் மீதும் சிறையில் இருக்கும் போதே மீண்டும் றி.ஜி வாரண்ட் மூலம் 2 வழக்கு புதிதாக போடப்பட்டு மீண்டும் கைது செய்தனர். 2 மாதம் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் நீண்ட சட்டப் போராட்டத்தின் மூலமாக வெளியே வந்து மதுரையில் தங்கியிருந்து 60 நாட்களாக கையெழுத்து போட்டு வருகின்றனர். இவர்களுக்கு மதுரைக்கு தெற்கே நிபந்தனை பிணையை தளர்த்தி அனுமதிக்க முடியாது என இயற்கை வளத்தை பல்லா யிரம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கிரானைட் கொள்ளையர்களுக்கு பிணை கொடுத்த நீதியரசர் செல்வம் கூறி நிபந்தனையினைத் தளர்த்த மறுத்து வருகிறார். நீதித்துறையின் இலட்சணம் இப்படித்தான் உள்ளது.

பேயாட்சி நடத்தும் ‘ஜெ’ அரசு போராட்டத்தின் முன்னனியில் நின்ற தோழர். சுந்தரி மீது 16 வழக்கும், தோழர் சேவியர் அம்மாள், செல்வி ஆகியோர் மீது 6 வழக்கும் போட்டு சுந்தரி அவர்களை 96 நாட் களுக்கும் மற்ற இருவரை 85 நாட்கள் சிறையில் அடைத்து வைத்ததன் மூலம் இடிந்தகரையில் போராடும் பெண்களை மிரட்டியது. 68 வயது கடல் பாசியை குண்டர் சட்டத்தை ஏவி உள்ளது தமிழக அரசு. உத்தரவாதமில்லை.

 இன்றும் கூட இடிந்தகரை, கூத்தன்குழி ஊரை சேர்ந்த மக்கள் ஊரை விட்டு வெளியே சென்றால் ஊருக்கு திரும்பி வரும் உத்தரவாதமில்லை. மக்களும் கூடன்குளம் கிராமத்திற்கு எந்த தேவைக்கும் செல்வ தில்லை.

தொடர்ந்து கைது செய்வது, குண்டர் சட்டம் போடுவது, பெண்களை 100 நாட்களாக சிறையில் அடைத்து வைப்பது, மதுரையில் நிபந்தனை பிணையில் 2மாதம் கையெழுத்து போடுபவர்களுக்கு நிபந்தனை தளர்வு செய்யாமல் இருப்பது, மக்களின் சொத்துகளை சூறையாடுவது, பொருட்களை திருடுவது என எண்ணற்ற கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டாலும் மக்கள் அரசின் அடக்குமுறையை எதிர்கொண்டு இம்மண்ணை, இயற்கை வளத்தை பாதுகாப்பதில் உறுதியுடன் நிற்கிள்றனர்.

தமிழக அரசு மக்கள் மீது போட்டுள்ள வழக்குகளை கொடுத்துப் பார்த்தால் மிகவும் அறுவறுப்பாக உள்ளது. அரசு போட்டுள்ள 350 வழக்கில்

1.            20 வழக்குகள் மட்டுமே தனிநபர் கொடுத்தது 330 வழக்குகள் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கொடுத்தது.

2. 300க்கும் மேற்பட்ட வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை எண், குற்றவாளியின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதே தவிர வழக்கின் வாசகம் அனைத்தும் ஒன்றாகவே உள்ளது.

3. கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட சுமார் 10 முதல் தகவல் அறிக்கை மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டு 20மணி நேரத்திற்குள் நீதிமன்றம் அனுப்பப்பட்டுள்ளது.

மற்ற அனைத்து முதல் தகவல் அறிக்கையும் ஐந்து நாட்கள் முதல் 60 நாட்கள் வரை காலந்தாழ்வு செய்தே நீதிமன்றம் அனுப்பப்பட்டுள்ளது.

4. P.T. வாரண்டில் கைது செய்யப்பட்ட அனைவரின் மீதும் அந்த வழக்கின் 161(3) கு.மு.வி.ச வாக்குமூலம் அவர்கள் சிறைக்கு சென்ற பிறகே நீதிமன்றம் அனுப்பப் பட்டு அதைக் காட்டியே கைது செய்யப்பட்டுள்ளனர்.

5. செப்டம்பர் 10 ல் கைது செய்யப்பட்ட திருமணி (337/12) என்பவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர் பரிசோதித்து 20 நாட்களில் விடுதலை செய்யப்பட்டார்.

மார்ச் 19ல் கைது செய்யப்பட்ட கூட்டப்புளி எவலெடட் என்பவர் 80 % மனநிலை பாதிக்கப்பட்டவர்.

6. மார்ச் 19ல் கைது செய்யப்பட்ட 3 பேர் றி.ஜி வாரண்ட் அனுப்பிய வழக்கின் தேதியில் வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டு இருந்தனர்.

7. 161(3) கு.மு.வி.ச வாக்குமூலம் 300ஃ12 வழக்கிற்கு வழங்கிய எழிலரசு த/பெ பால்ராசு, மாதா தெரு, கூடன்குளம் மற்றும் 350/12 வழக்கிற்கு வழங்கிய பால்துரை தஃபெ பொன்பாண்டி நாடார், சங்கத் தெரு, கூடங்குளம் என்ற இரு முகவரியிலும் மேற்குறிப் பிட்ட நபர்கள் யாரும் இல்லை. இந்த பொய்யான வாக்குமூலத்தை காட்டித்தான் றி.ஜி. வாரண்ட் 60 பேரை மீண்டும் கைது செய்தனர். லூர்து சாமி, நசரேன், சிந்துபாரத் ஆகியோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

8. 9 பெண்கள் லூர்து சாமி, நசரேன் உட்பட 11 பேரை இடிந்தகரையில் அணுஉலைக்கு தென்பகுதியில் வைத்து செப்பம்பர் 10 அன்று கைது செய்த 349/12 வழக்கின் முதல் தகவல் அறிக்கையில்

“நான் 18.15மணிக்கு பணியில் இருந்த போது 19.30 மணிக்கு கைது செய்யப்பட்ட மேற்கண்ட எதிரிகளை என்னிடம் ஒப்படைத்தனர்” என உள்ளது.

9. அணுஉலை தொடர்பாக வழக்கில் 161(3) வாக்கு மூலம் கொடுத்த அனைவரும் பல்வேறு வழக்குகளுக்கு இவர்கள் 161 (3) கு.மு.வி.ச வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் காவல்நிலைய கையிருப்பு சாட்சிகள் ஆவர்.

முழுப்பூசணியை சோற்றில் மறைத்து வைக்க முடியுமா? காவல்துறையின் பொய்வழக்குகள் முழுப்பூசணியை சோற்றில் மறைக்க முயற்சிப்பது போல் அதன்பொய்த்தன்மை அப்பட்டமாக வெளியே தெரிந்து நாறுகிறது.

ஏரிமலைகளை எச்சில் துப்பி அணைக்க முடியாது. நீதிக்காக போராடும் மக்களை அடக்குமுறை, அச்சுறுத்தல்களால் பணிய வைக்க முடியாது.

மக்களின் போராட்டத்தை நசுக்க போடப்பட்ட வழக்குகள் கைது மற்றும் காவல்துறையின் வெறியாட் டம் மூலம் சட்டம், வழக்கு, காவல்துறை, நீதிமன்றம், அரசு, அரசியல் கட்சிகள் ஆகிய அனைத்தின் மீதான மக்களுக்கு இருந்த நம்பகத்தன்மை, மாயை அகன்று விட்டது.

இயற்கையை, மண்ணை, கடலை, நாட்டை காக்கும் உன்னத போராட்டத்தில் அடக்குமுறையை முறியடித்து மக்கள் புதிய வரலாறு படைப்பார்கள். இது நிச்சயம்.