தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்

தமிழகத்தின் மின்பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000-4500 மெகா வாட்டாக இருக்கிறது. 2013ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000&5500 மெகா வாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகா வாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகா வாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின்நிபுணர்களின் கணிப்பு.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின்உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

மின்உற்பத்தியைத் தொடங்கும்நிலையில் உள்ள மூன்று புதிய மின்உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான கால கட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்யவிடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சை மாவட்டம்), வழுதூர்1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின்நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங் களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கை யாக இருக்கிறது.

குத்தாலம் மின்நிலையம் 101 மெகா வாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின்நிலையங்கள் 95 மற்றும் 92 மெகா வாட்திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின்நிலையங்களுமே முழுமையாக செயல்பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இன்றைய தேதியில் இந்த மின்நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப் படாமல் அவற்றின் மின்உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பலமாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின்உற்பத்தி செய்யப் படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின்வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக் கொண்டிருக்கிறது.

2007 இல் வடசென்னை மற்றும் மேட்டூர் மின்நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின்உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப்பணி 2011 மே மாதத்தில் நிறைவுபெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும்.

வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின்நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகா வாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெறவேண்டும்.

இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.

சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPCயின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் உற்பத்தித்திறனான 1500 மெகா வாட்டில் 1041 மெகாவாட்மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007ஆம் ஆண்டுவரை கிடப்பில் போடப் பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகா வாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முத லாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் மே மாதங்களில் அவை முழுமை யாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன்காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547+288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின்உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப் பட்டுவருகிறது.

நெய்வேலியில் உள்ள முதலாவது மின்நிலையத்தின் விரிவாக்கமான 2X250 மெகாவாட் மின்உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்தமின்உற்பத்திஅலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.

ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின்நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில்ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப்பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.

ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரண மாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835+சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட, இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும்துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

தனக்கு சொந்தமான மின்நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்திசெய்ய முடிகின்ற மின் சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணுமின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்கமுடியாமல்இருப்பதற்கானகாரணம் என்றும் கூறிவருகிறது.

தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.

கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணுஉலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல்நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணுஉலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின்இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxiliary consumption) மேலும்ஒரு 100 மெகாவாட்தேவைப்படும். எனவே, அணுஉலையில் இருந்து கிடைக்கப் போவது என்னவோ 600 மெகாவாட்மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணுஉலையில் இருந்து தமிழகம் பெறமுடியும்.

இந்த 80% உற்பத்தித்திறனை அணுஉலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிறபகுதிகளில் இயங்கிக்கொண்டிருக்கும் அணுஉலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணுமின்நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015ஆம் ஆண்டுவரை, அதன் 30&40% உற்பத்தித்திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணுஉலையில் இருந்தும் சுமார் 138இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத் தான் 2015ஆம் ஆண்டுவரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22%ஐ கழித்துவிட்டால் கிடைக்கப் போவதென்னவோ 108இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணுஉலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும்கூட, தமிழகத்திற்கு வெறும் 216இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது.

எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப் படப் பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின்நிலை யங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்காலரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.

... ....

கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப்பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும்.

“மின்பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத் தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை” மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.

மின்வெட்டு மற்றும் மின்விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட் டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல்படுத்த முடியாது.

2012 மார்ச் ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின் விடுமுறை மற்றும் 40%க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப் பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதிமன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.

அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல்படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.இதன் காரண மாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.

அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்துகொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலை யிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.

பாரபட்சமான மின் வழங்குதல் என்பதைக் கீழ்க் கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்துகொள்ள முடியும்:

1)            சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%க்கும் மேலாக எடுத்துக்கொள்கிறது. தமிழகத்தின் பிறபகுதிகள் 14&16 மணிநேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும்பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணிநேரம் மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது.

2)            மிக உயர்மின் அழுத்த இணைப்புக்களைப் பெற் றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகா வாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது.

3)            31 பன்னாட்டுநிறுவனங்களுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந் தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.

4)            பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத் தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.

5)            உயர் மின்அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின்வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணிவரை உள்ள காலத்தில்10%க்கும் மேல் மின்பளுவை எடுக்கக்கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலைநேரத்தில் மின் பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணிவரை தமிழகத்தில் மின்வெட்டு இருக்கக்கூடாது.

6)            திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

7)            புதிதாக வரும் மிகப் பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின் சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.

சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறுகுறுதொழில்கள் 16 மணிநேர மின்வெட்டால் முடங்கிப்போய்விட்டன. வழங்கப்படும் 8 மணிநேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணிநேரத் திற்கும், ஒரு மணிநேரநேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணிநேர மின் சாரத்தையும் சிறுகுறு தொழில்களாலும், விவசாயத் தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது.

அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை.

இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:

1)            பழுதடைந்த மூன்று எரிவாயு மின்உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின்நிலையங்களையும் எந்தவித சாக்குப்போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.

2)            இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்கு முறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.

பகுதி 2

மின்வெட்டைத் தீர்க்க அரசாலும், ஊடகங்களாலும் முன்வை க்கப்பட்டிருக்கும் முதல் கட்டத் தீர்வுகளில் உள்ள உண்மை

“தமிழகத்தின் மின்வெட்டிற்கான காரணமும் தீர்வும்” கட்டுரையை 9.10.2012இல் கீற்று இணையதளம் மற்றும் முகநூலில் வெளியிட்டி ருந்தோம். இந்தக் கட்டுரையை ஆதாரமாகக் காட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி 15102012 அன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள மின்வெட்டைக் குறைப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளைக் கொண்ட 10 பேர் குழுவினை 17.10.2012 அன்று தமிழக அரசு அமைத்தது.

600 மெகாவாட் திறன்கொண்ட புதிய மேட்டுர் அனல்மின் அலகும், பழுதாகி பலமாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த வழுதூர் எரிவாயு மின்நிலையங்களும் தம் உற்பத்தியைத் தொடங்கியிருப்பதாக ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சென்னையில் ஒரு மணிநேரமாக இருந்த மின்வெட்டை இரண்டு மணி நேரமாகக்கூட்டி, உபரி மின்சாரத்தை மாநிலத்தின் பிறபாகங்களுக்கு 18.10.2012 தேதியில் இருந்து பகிர்ந்தளிக்கப் போவதாகவும் அரசுஅறிவித்துள்ளது.

இந்த செய்திகளின்அடிப்படையில் பார்த்தால் நமக்கு மேட்டூர் புதியமின் அலகில் இருந்து 600 மெகாவாட்டும், வழுதூர் 1 மற்றும் 2 அலகுகளில் இருந்து 187 மெகாவாட்டும், சென்னையில் இருந்து பிரித்தளிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 250 மெகா வாட்டும், ஆக மொத்தம் சுமார் 1037 மெகாவாட் கிடைக்க வேண்டும். அதாவது மாநிலத்தின் பற்றாக்குயான 4000 மெகாவாட்டில் கால்பகுதி இதன்மூலம் சரியாகியிருக்கவேண்டும்.

ஆனால் உண்மைநிலை இதுதானா? இல்லை என்பதையே நமது ஆய்வுகள் தெரிவிக் கின்றன.

மேட்டூர் புதிய அலகானது 608 மெகாவாட் உற்பத்தியை 12.10.2012 அன்று எட்டியது. ஆனால் அதன்பின் அதனால் அந்தஅளவு உற்பத்தியை செய்ய இயலவில்லை. அடுத்துவந்த நாட்களில் 300 – 350 மெகாவாட் மின்சாரத்தை சிலநாட்களில் உற்பத்தி செய்வதாகவும், பிறநாட்களில் உற்பத்தி அடியோடு நிறுத்தப்படுவதாகவும் நிலையற்ற நிலையிலேயே அது இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தநிலை எப்பொழுது சரியாகும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

வழுதூர் எரிவாயு மின்அலகுகளின் பிரச்சினை வேறாக உள்ளது.

2012 ஜூன் மாதம் மோசமாகப் பழுதடைந்த 95 மெகாவாட் திறன் கொண்ட வழுதூர் 1 ஆம் அலகினை சரிசெய்வதற்குத் தேவைப்பட்ட புதிய உபரி பாகங்களை தமிழக அரசு வாங்கவில்லை. மாறாக, பிப்ரவரி 2012 இல் இருந்து பழுதடைந்து நிறுத்த பட்டிருந்த 101 மெகாவாட் திறனுடைய குத்தாலம் எரிவாயு மின்நிலையத்தின் ரோட்டர் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவற்றை அது பிரித்தெடுத்தது. இவற்றைக் கொண்டு வழுதூர் 1 இன் பிரச்சினைகளை அது சரி செய்தது.

101 மெகாவாட் திறனுடய குத்தாலம் எரிவாயு மின்நிலையத்தினை சரி செய்வதை விட்டுவிட்டு வழுதூர் 1ஆம் அலகின் பழுதினை நீக்குவதற்குத் தேவையான உபரிபாகங்களைக் கொடுக்கும் ஒரு இடமாக அதனை தமிழக அரசு மாற்றியது எதற்காக?

இவ்வாறு குத்தாலம் மின் நிலையத்தின் உபரி பாகங்களைக் கொண்டு பழுது நீக்கப்பட்ட வழுதூர் 1 ஆம்அலகு இன்று உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதிலிருந்து 95 மெகாவாட் கிடைக்கக்கூடும்.

வழுதூர் 2 ஆம்அலகின் கதை என்ன?

தமிழக அரசின் எரிவாயு நிலையங்களிலேயே மிக அண்மையில் நிறுவப்பட்ட மின்உற்பத்தி அலகு தான் இது. 17.2.2009ஆம் தேதியன்று உற்பத்தியைத் தொடங்கிய இந்த 92 மெகாவாட் திறன் கொண்ட மின்அலகானது 9.1.2010ஆம் தேதியன்று மிக மோசமாகப்பழுதடைந்தது. அதாவது அதன் கியாரண்டி காலமான ஓராண்டு காலத்திற்குள்ளாகவே பழுதடைந்துபோனது. அதனைப் பழுதுநீக்க 16 மாதகாலம் தேவைப்பட்டது. மீண்டும் 7.5.2011 ஆம் தேதியன்றுதான் அது தன் உற்பத்தியைத் தொடங்கியது. என்றாலும் கூட, அதன் பழுது முற்றாக நீக்கப்பட வில்லை. பழுது நீக்கப்பட்ட பிறகும் அதன் ரோட்டர் கருவியானது மிக மோசமான அதிர்வினை வெளிப் படுத்துவதால் 92 மெகாவாட்டுக்கு பதிலாக 68 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே இந்தமின் அலகால் உற்பத்தி செய்யும் சூழ்நிலை உருவானது. இவ்வாறு குறைந்த திறனில் இயக்கப்பட்டு வந்த இந்த அலகானது அடுத்து வந்த ஓராண்டில் சுமார் 15 முறை பிற பழுதுகளால் (ட்ரிப்பிங்) பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. கடைசியில், ஒரு குறிப்பிட்ட உபரிபாகம் இல்லாத காரணத்தால் ஜூன் 2012 இல் இருந்து 45 நாட்களுக்கு அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்றும் அது 92 மெகாவாட்டுக்குப் பதிலாக 68 மெகாவாட்டைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் இந்த அவலம்?

மின்வாரியத்தின் நான்கு எரிவாயு நிலையங்களில் மூன்று நிலையங்கள் குத்தாலம், கோவில் களப்பால் மற்றும் வழுதூர் 1 பாரத மிகுமின்நிலையத்தின் (BHEL)எந்திரங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த நிறுவனமே இந்த நிலையங்களை நிறுவும் ஒப்பந்த தாரராகவும் இருந்தது.

ஆனால் வழுதூர் 2 ஆம் நிலையத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பி.ஜி.ஆர் (B.G.Raghupathy) என்ற தனியார் நிறுவனத்திற்கு 2006 ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கியது. இதில் விசித்திரம் என்ன வென்றால் இந்த நிறுவனத்திற்கு இதற்கு மின்நிலையங் களைக் கட்டிய அனுபவம் ஏதும் இல்லை என்பதுதான். இதுவே அந்த நிறுவனம் மேற்கொண்ட முதல் மின் நிலைய ஒப்பந்தமாகும்.

இந்த மின்நிலையத்தை நிறுவுவதற்காக அது இத்தாலி நாட்டின் ANSOLDO நிறுவனத்தின் எந்திரங் களைத் தருவித்தது. தமிழ்நாடு மின்வாரியத்தின் மற்ற மின் நிலையங்களின் ஒப்பந்தகார நிறுவனமான பாரதமிகு மின்நிலையம் போல பி.ஜி.ஆர் நிறுவன மானது எந்திரவடிவமைப்பிலோ, எந்திர உற்பத்தியிலோ ஈடுபட்டதில்லை. வழுதூர் 2 ஆம் மின் அலகினை அமைப்பதன் மூலம் அது மின்நிலையம் ஒன்றை எவ்வாறு நிறுவுவது என்பதற்கான பயிற்சியையும் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டது என்றுதான் சொல்ல முடியும். ANSOLDO நிறுவனத்தின் எந்திரங்களை அதனால் சரியாக நிறுவத் தெரியவில்லை.இதன் காரணமாகவே ஒப்பந்தகாலமான 21 மாத காலத்திற்குள் இந்த நிலையத்தினை அதனால் நிறுவ இயலவில்லை. இதற்காக அதுகூடுதலாக 10 மாதங்களை எடுத்துக் கொண்டது. இதற்குப் பிறகும் கூட மின் நிலையத்தின் பணிகளை அது அரைகுறையாகவே முடித்துக் கொடுத்தது.

ஒப்பந்தக் காலமாகிய ஓராண்டு காலம் வரை நிலையத்தில் ஏற்படும் பழுதுகளுக்கு ஒப்பந்தக்கார நிறுவனமே அதாவது பி.ஜி.ஆர் நிறுவனமே பொறுப் பாகும். ஆனால் 9.1.2010 இல் ஏற்பட்ட பழுதிற்கும், அதன் பிறகு 16 மாதகாலம் ஏற்பட்ட உற்பத்தி இழப்பிற்கும் பி.ஜி.ஆர். நிறுவனத்தைத் தமிழக அரசோ, தமிழ்நாடு மின்வாரியமோ பொறுப்பாக்கியதாகத் தெரியவில்லை.இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 43 கோடி ரூபாயாகும்.

மேலும், மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தியையே இந்த நிலையம் இன்றும் தந்து கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் யாரைப் பொறுப்பாளியாக்குவது?

இதனைவிட மிகப் பெரிய சோகம் ஒன்றும் இருக் கிறது. வழுதூர் 2 ஆம் மின் நிலையத்தைச் சரியாக அமைத்துக் கொடுக்கத் தெரியாத இதே பி.ஜி.ஆர் நிறு வனத்திற்குத்தான் இன்று நாம் பெரிதும் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிற மேட்டூர் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் ஒப்பந்தத்தை தமிழக அரசு கொடுத்தது என்பதுதான் அந்தச் சோகம்.

மின்வாரியத்தின் அனைத்து மின்நிலையங்களும் பாரதமிகு மின்நிலையத்தின்எத்திரங்களையே உபயோகிக்கின்றன. அதன் புதிய மின்நிலையங்களும் இந்த மரபைத்தான் பின்பற்றி வருகின்றன.

ஆனால், பி.ஜி.ஆர் நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் மேட்டூர் 600 மெகாவாட் மின்நிலையத்தில் சீன நாட்டின் Tang Fang நிறுவனத்தின் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிலையம் 25.9.2011 இல் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அதனால் நிலையான உற்பத்தியைத் தொடங்க இயலவில்லை.

அனல் மின்நிலையங்களுக்கான சீன நாட்டின் எந்தி ரங்கள் தரம் குறைவானவை என்பதால் அவற்றைக் கொள்முதல் செய்யும்போது கவனமாக இருக்கவேண்டும் என்று நடுவண் மின்துறை அமைச்சகம் கடந்த காலத்தில் அறிவுறுத்தியிருந்ததை இங்குநாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேட்டூர் 600 மெகாவாட் மின்நிலையத்திலும் வழுதூர் 2 ஆம் நிலையத்தைப் போலவே கட்டுப்படுத்த இயலாத அளவு அதிர்வுகள் இருப்பதாகத் தெரிகிறது. வழுதூர் 2 ஆம் நிலையம் போலவே மேட்டூர் புதிய மின்நிலையம் எதிர்காலத்தில் நோயுற்றயானையாக இருந்துவிடுமோ என்று அஞ்சவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

வழுதூர் 2ஆம் நிலையத்தின் பழுதுகளுக்குப் பொறுப்பேற்கவைக்கப்படாத பி.ஜி.ஆர். நிறுவனம் எதிர்காலத்தில் மேட்டூர் புதிய மின்நிலையத்தில் ஏற்படும் இழப்புகளுக்கும் பொறுப்பேற்கவைக்கப்படுமா என்ற அச்சம் எழுகிறது. உற்பத்தியைத் துவங்குவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கு இந்நிறுவனம் தோராயமாக 1000 கோடி ரூபாய் அளவிற்குப் பொறுப்பேற்க வேண்டும். எல்லாவற்றையும் விட மின் உற்பத்தி இழப்பானது இன்று கடுமையான மின்வெட்டிற்கு மாநிலத்தைத் தள்ளியுள்ளது. இது வழுதூர் 2ஐப் போன்று 6 மடங்கு உற்பத்தியைக் கொண்ட மின்நிலையமாதலால், இதில் ஏற்படும் பழுதுகள் மாநிலத்தின் மின்சார வினியோகத்தை மிகமோசமாகப்பாதிக்கும்.

ஆக, அரசும், செய்தி ஊடகங்களும் சொல்வதைப் போல இன்று நடைமுறையில் உள்ள மின் தட்டுப் பாட்டில் பெரியமாற்றங்களேதும் உடனடியாக ஏற்படவாய்ப்பில்லை.

அவ்வாறு ஏற்பட வேண்டுமென்றால்:

1)            பி.ஜி.ஆர் நிறுவனத்திடம் கொண்டிருக்கும் மென்மையான அணுகுமுறையினை அரசு கைவிட வேண்டும். மக்களின் நலன் கருதி ஒப்பந்தகாரப் பொறுப்புகள் அனைத்தையும் அந்த நிறுவனம் உட னடியாக செயல்படுத்தித் தர நிர்ப்பந்திக்கவேண்டும்.

2)            குத்தாலம் மற்றும் வழுதூர் மின்நிலையங்களில் நிகழும் பழுதுகள் யாவும் நீண்ட காலம் நீக்கப் படாமல் இருப்பது இந்நிலையங்களைச் சுற்றி உள்ள 8 தனியார் எரிவாயு மின்நிலையங்களுக்குச் சாதக மானசூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதற்காகத் தானோ என்ற சந்தேகம் உள்ளது. அரசு

மின்நிலையங்கள் பழுதடைந்து கிடப்பதால் அவற்றிற்குக் கிடைக்க வேண்டிய அரிதான இயற்கை எரிவாயு வினை இந்தத் தனியார் மின்நிலையங்கள் தங்கு தடையின்றி பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அருகில் தனியார் மின்நிலையங்கள் ஏதும் இல்லாத கோவில் களப்பால் அரசு எரிவாயு மின்நிலையம் இது போன்ற பழுதுகளை 2004 ஆம் ஆண்டிலிருந்தே சந்திக்கவில்லை என்பது இந்த சந்தேகத்தினை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது.

3)            ஆந்திர மாநிலத்தின் சிம்மத்திரி அனல் மின்நிலையத்தில் இருந்து இன்று வரை நமக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தைக் கேட்காமல் இருக்கும் நிலைப்பாட்டினை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கைவிட வேண்டும். உடனடியாக நமக்குக் கிடைக்க வேண்டிய இந்தப் பங்கினை நாம் கேட்டுப் பெறவேண்டும்.

4)            குத்தாலம் எரிவாயு மின்நிலையத்திலிருந்து வழுதூர் 1 அலகிற்குப் பிரித்து எடுத்துச் செல்லப் பட்ட எந்திரங்களுக்குப் பதிலாக பாரத மிகுமின் நிலையத்திலிருந்து உடனடியாகப் புதிய எந்திரங் களை வாங்கிப் பொறுத்தி இயக்க வேண்டும்.