ஆனைகட்டியில், பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும், கல்லாறில், சச்சிதானந்தம் சாமி, இண்டர் நேசனல் பள்ளியையும். மதுக்கரையில் ஏசிசி சிமெண்டு கம்பனியும், சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் காரிடார்களை மறைத்து எழுப்பி வைத்திருப்பதை இந்தபடம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும், வட்டங்களும் , சதுரங்களும் ஏற்றிவிட்ட பில்டப்பையும் கேட்டுட்டு போயி கிருத்திகாவில் சீட் போட்டா... இந்த அரசியல் மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது

ஏன் கும்கி வருகிறது? என்பதில் நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன் ஏன் கொம்பன் வருகிறது?என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வெச்சிருப்பது உறுத்தலாகத்தான் இருக்கிறது

அப்பன் மல்லூரியை ஒரு பண்ணையாராகவே மாற்றி விட்டிருக்கிறார் இயக்குநர் . ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ உணர்வுமொழியோ அவருக்கு கைகூடி வந்ததாக தெரியவில்லை, பாவம் அவர் என்ன செய்வார்... மேலும் அவருக்கு முன்னால நிக்கற போதும் நடக்கற போதும் மற்றவர்களின் நடவடிக்கைகள் மல்லூரியை கெட்டிதட்டிப்போன லோக்கல் பஞ்சாயத்து தலைவராக்கிவிடுகிறது. அவருடைய வீடென்று காட்டப்படும் இடம், அநேகமாக சூட்டிங் ஆட்கள் தங்குவதற்காக போடப்பட்ட செட்டாக இருக்கலாம் ஆனால் அது ஒருபோதும் அவரின் வீடாக முடியாது. கூட சிலம்பம் சுழல்வதும் பறையுயலிப்பதும் இன்னும் அந்நியப்படுத்திவிடுகிறது.

பழங்குடிகளை பொறுத்தவரை மூப்பனுக்கோ வண்டாரிக்கோ மரியாதை என்பது சடங்குகளின் போதுமட்டுமே, மற்றநேரம் அவனுக்கும் ஊரில் உள்ள மற்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது சொல்லப்போனால் பெரும்பாலான நேரங்களில் அவன் வெறும் சிக்குமாதாதான்.

பலர் சொல்வதுபோல் அந்த அறுவடை நடனம் கூட பழங்குடிகளுடையது அல்ல, ஆனால் அது அவர்களின் ஒரு கால்வைப்பில்தான் தொடங்குகிறது பிறகு வெகு சில விநாடிகளில் ஒரு சாதரண ரெக்கார்டு டான்ஸாக அதுவும் மாறிப்போய்விடுகிறது

காட்டையழிக்கும் பன்றியை கொல்ல மூன்று இளைஞர்கள் கம்பையும் வேலையும் தூக்கிக்கொண்டு ஓடுவது சிரிப்பையே வரவழைக்கிறது சற்றே சில ஆண்டுகளுக்கு முன்வரை, இப்போது கூட பழங்குடிகள், “யானை தின்னதுபோக, பண்ணி தின்னதுபோக கண்டவர் தின்னதுபோக, காடை தின்னதுபோக எனக்கும் கொஞ்சம் கொடு கடவுளே” என்று சொல்லித்தான் விதைபோடத் தொடங்குவார்கள் அப்படியே மேய்ந்தாலும் அவர்கள் இருக்கும்போதுதான் விரட்டுவார்களே அல்லாமல் ஒரு கிலோமீட்டர் மூச்சிரைக்க ஓடிவந்து கொல்வது அவர்களின் பண்பல்ல சாலமன்.

அப்புறம்..., கொல்வது என்பது வேறு, விரட்டுவது என்பது வேறு, எப்போது கொல்ல வேண்டும், எப்போது விரட்ட வேண்டும் என்பதற்கு அவர்களிடத்தில் ஒரு கணக்கு இருக்கிறது சாலமன்

‘‘திந்தா திந்துட்டுபோகுது ராஜா, அச்சா பெல்லா வகுத்துக்கு அது ஏங்க போகும்”. முயல் வந்தால் கூட குலைக்கிற, துரத்துகிற அவர்களின் நாய்கள் அருகாமையில் யானைவந்தால் அமைதியாக இருந்துவிட பழகியிருக்கிறது. யானை தனது காட்டுக்குள் நுழைந்து விட்டது தெரிந்தால் ‘‘போனாவருசமு எமக்கு ஒந்தும்ங் கெடாய்கல இந்த வருசமாவது நேம் பொழைக்கே.... சாமி போயிறு” என்று அது இருக்கும் திசையில் குனிந்து மண்ணை தொட்டு எழுந்து வணங்குவதை அவர்கள் இன்னும் கடைபிடித்துதான் வருகிறார்கள். அவர்களுக்கும் அதுக்கும் நடக்கும் சண்டையானது வெறும் உள்முரண்பாடுதான். பல நேரம் அவைகள் இவர்களோடு விளையாட்டாக செயல்படுவதை நேரடியாக பார்த்திருக்கிறேன் ஆனால் உங்களின் படம் காட்டு யானைகளை கொடூரமான வில்லனாக பார்க்கவைப்பதில் வெற்றிபெற்றுவிடுகிறது

காட்டானை யாரையாவது அடித்துவிட்டால் அது கிடு கிடுவென நடுங்க ஆரம்பித்துவிடும். அப்புறம் அது ஓர் ஆளை அடித்துவிட்டு அடித்த இடத்திலேயே ஒருபோதும் நிற்காது. அதானால் அப்படி நிற்கவும் முடியாது. இங்கோ ஒரே நேரத்தில் 5 பேரை சதக் சதக் என்று போட்டுத்தள்ளிவிட்டு, மேனனையும் துரத்துவது அது ஏதோ தமிழ் ‘ஆக்சன்’ படம் பார்த்துவிட்டு நேராக காட்டுக்குள் வந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது

யானை ஒருவரை தாக்குவது என்பது அதற்கு இருக்கிற பயத்தினால்தானே ஒழிய, அது தன்னை பெரிய தாதாவாக நினைத்துக்கொள்வதால் அல்ல....

இந்த சம்பவத்தை உங்களுக்கு கட்டாயமாக சொல்லியே ஆகவேண்டும். மேற்குதொடர்ச்சிமலையில் அட்டப்பாடிக்கு அருகில் கல்மொக்கே என்றொரு பழங்குடியின் பதியிருக்கிறது. அங்கே நாகன் என்ற இருளர் தனது கூரையில் இரண்டு வாழைமரக்கன்று வைத்து வளர்த்துவந்தார் அது இரண்டும் குலைவிட்டிருந்தது. வனத்துக்கும் அவர் வீட்டுக்கும் ஒரு கிலோமீட்டர்தான் இருக்கும். ஒரு நாள் மதியம் மூன்று மணியிருக்கும் பதினாறு வயதான ஒரு காட்டானை அருகில் இருந்த வனத்திலிருந்து எட்டிப் பார்த்தது. அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு யானையும் வந்து அதனோடு சேர்ந்துகொண்டது.

அவர் கூப்பிட்டுக் காட்டினார் ‘பாத்துட்டே இருங்க அவனுக ரெண்டுபேரும் எங்கூட வெளையாடறதஞ்.இப்ப நான் மறஞ்சுக்கறேன் என்ன பண்ரான்னு மட்டும் பாருங்க’ அவர் கூரை மறைவில் போய் நின்றுகொண்டார்

ஒரு யானைமட்டும் அங்கிருந்து வேகமாக வாழைமரத்தை நோக்கி வரத்தொடங்கியது நாகன், மாட்டை பிடிப்பதுபோல் வீட்டிலிருந்து வெளியேறி வாழைமரத்தை தாண்டிப்போனார். வந்த யானை அப்படியே நின்று அவரை பார்த்துவிட்டு, தலையை ஆட்டி ஆட்டிதன் திசையை மாற்றிக்கொண்டு மேய்வது போல் நடித்தது....

 அவர் மாடு கட்டிய இடத்தை விட்டு கூரைக்குள் வந்து நின்றுகொண்டார்

திரும்பிப்பார்த்ததுஞ் நாகனைகாணோம்..... மீண்டும் மரத்தை நோக்கி வேகமாக வரத் தொடங்கியாயிற்று.

திரும்பவும் அவர் இறங்கி ஆட்டுக்குதழை கொடுக்கபோவதுபோல் வாழைமரத்தை கடந்து போனார்.

 ஏர் பிரேக் போட்டது போல் சறுக்கி நின்றது யானை.

திரும்பவும் வீட்டுக்குள் போனார்.

குறுகுறுவென்று பார்த்தது. யாரும் இல்லை நகனையும் வெளியே காணோம் அவன் வருவதற்கான அறிகுறிகள் இல்லை ஆனாலும் வந்துவிட்டால்...... ‘வருவதற்க்குள் அபேஸ் பண்ணிட்டு எஸ்கேப் ஆயிரனும்’

அவ்வளவுதான் ...குடுகுடுவென ஓட்டமாக வந்து ஒரே ஒரு தாரை மட்டும் பிடிங்கிக்கொண்டு சவாரியெடுத்தது..... பாதி தூரம் போய் வாழைத்தாரை கீழே வைத்துவிட்டு திரும்பிப்பார்த்தது......,மெல்லமாய் நாகன் வெளியே வந்து எட்டிப்பார்த்தார்

அவர்முகத்தை கண்டதும் மறுபடியும் வாழைத்தாரை தூக்கிக்கொண்டு தலை தெரிக்கஓடி வனத்துக்கு அருகில்போய் நின்றுகொண்டு திரும்பிப்பார்த்தது

“பயத்தப்பாரு ஞ்..போ போ அது உனக்குன்னுதா விட்டிருந்தே” நாகன் குலுங்கிக்குலுங்கி சிரித்தார் அவரின்அட்டகாசமான சிரிப்பில், என்னால் சகோதரத் துவத்தைதான் பார்க்கமுடிந்தது.

 இப்படியான விளையாட்டை நீங்களும் நானும், ஒருக்காலும் நிகழ்த்தமுடியாது..... யானையோடு மட்டுமல்ல இன்னபிற விலங்குகளோடும் காட்டோடு மான அவர்களின் உறவு உயிரோட்டமானது சாலமன்.

கும்கியை அழைப்பதென்பது ஆதிவாசிகளிடத்தில் பெரும்பாலும் நடந்ததில்லை... அரசாங்கம் அனுப்ப எத்தனித்த கும்கியை முகாமுக்கே திருப்பியனுப்பிய ஆதிவாசிகளை நான் அறிந்திருக்கிறேன். அந்த வல்லமைதான் அவர்களின் வலிமை சாலமன்

கடைசிக்காட்சியில் கொம்பன். மலையிடுக்குகளில் மாணிக்கத்தால்(கும்கி) முட்டி தள்ளிவிட்டபின் பழங்குடிகள் மகிழ்ச்சி ஆரவாரம் எழும்புவதாக காட்டியிருக்கிறீர்கள் ஆனால் உண்மை அப்படியானதாக ஒருபோதும் இருந்திருக்கமுடியாதுசாலமன்.அதற்கு பதிலாக அவர்கள் கொம்பனுக்காக கண்ணீர்தான் வடித்திருப்பார்கள் . தன் சொந்த மகன் கொம்பனால் மிதிபட்டு இறந்தபோதுகூட கண்ணீர் விடாத இருளர் கள் அதே கொம்பன் உயரழுத்த மின் வேலியில் சிக்கி இறந்த போது சகலமரியாதையும் செய்து கண்ணீர் வெள்ளத்தில்தான் அடக்கம் செய்தார்கள் சாலமன்

சாலமன்...., அவர்களின் பண்பாடுகள், ஆழமான..... அருவியைவிடவும், உயரமான மலைகளை..... விடவும் அகலமான காடுகளைவிடவும் மேலானது.

கொம்பனும் கும்கியும் சந்தித்துவிடக்கூடாது என்ற உங்களின் பிடிவாதமான முடிவுதான் தமிழுலகம் கண்டிருக்கவேண்டிய அற்புதமான காவியத்தை எங்கேயோ இழுத்துபோய் நிறுத்தியிருக்கிறது...சாலமன்.

இதே நகரத்தின் வடமேற்கு பகுதியில் நடந்த இன்னொரு சம்பவம் இது.

விதவிதமான உருவங்களை கக்கிக்கொண்டிருக்கிற உயர்ந்த புகைப்போக்கிகளுக்கு நடுவில் இயங்கிக் கொண்டிருக்கும் அந்த சேம்பர் இங்கே பிரபலமானது.

அதன் ஓரத்தில் கல்லை வேகவைக்க வெட்டி வரப்பட்ட மரங்கள் மலையாக குவித்து வைக்கப்பட்டிருக் கிறது அந்த குவியலில் பனைமரங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு இருந்தது.

பனை வாசத்தால் ஈர்க்கப்பட்டு, அடிக்கடி காட்டு யானைகள் உள்ளே வருவதும், வந்தவை கிடைத்தவற்றை தின்றுவிட்டு வந்த வழியே திரும்பிவிடுவதும், சில நேரங்களில் பணியாளர்கள் கூச்சல் போட்டும் நெருப்பை முழக்கியும் விரட்டிவிடுவதும், கோபம் வந்த அவைகள் இவர்களை விரட்டுவதும் இந்த இடத்தில் வாடிக்கையான ஒன்று. வாடிககையான இரண்டு மூன்று என்று நிறையவும் இருக்கிறது.

அப்படி இந்தமுறை வந்தவை காடுதிரும்பாமல் இரண்டு நாட்கள் அந்த சேம்பரிலேயே ‘டேரா’ போட்டு குடும்பம் நடத்த தொடங்கிவிட்டது அதை விரட்ட சூளைஉரிமையாளர்கள் வனத்துறையை அணு கினார்கள். ‘கிராப்ரெய்டர்கள்’ பற்றிய புகார் ஏற்கனவே பெருத்த தலைவலியை ஏற்படுத்தியிருப்பதால் உடனடியாக கும்கியை அழைத்துவிட்டது வனத்துறை.

ஓர் சனிக்கிழமை நாளில் இரண்டு கும்கிகள் வந்திறங்கியது, வழிநடத்துபவர் காட்டுயானைகளின் எண்னிக்கை, வயது அவற்றின் மூடு, நடமாட்டம் ,சூழல் என தனது எல்லா கணிப்பு கணக்கீட்டு ஏற்பாடுகளையும் முடித்துவிட்டார்.

இரண்டு கும்கிகளும் கிளம்பி சென்று , நின்று கொண்டிருந்த யனைகளை நோட்டமிட்டது மனித வாசம் வீசும் கும்கிகளை கண்டதும் ஏதோ சங்கேத ஒலியை பரிமாறிக்கொண்டும் முறைத்துக்கொண்டும் நின்றது.

கும்கிகள்.. துதிக்கையை தூக்கியபடி வேகமாக அவற்றை நோக்கி செல்ல...

லேசாக பின்வாங்கி போனது கொம்பன் குடும்பம்.

மீண்டும் கும்கிகள் ஆவேசத்துடன் முன்னேற...

என்ன நினைத்ததோ சுதாகரித்து எதிர்த்து நிற்கத்தயாராகிவிட்டது தெரிந்தது.

பல அல்லோல கல்லோலங்களுக்கும் சில பகீரபிரயத்தனங்களுக்கும்பிறகும்தான்....

காட்டானைகள் மெல்ல அந்த இடத்தை விட்டுவிட்டு நகரத்தொடங்கியது, பின்வாங்குவது தெரிந்ததும் விடாமல் விரட்டு விரட்டென்று விரட்டி காட்டின் எல்லையில் கொண்டூபோய் சேர்த்ததுவிட்டு

இன்னும்... உள்ளே விரட்ட எத்தனித்த்துக் கொண்டிருந்தன கும்கிகள்.

இதுவரைக்கும் அடக்க ஒடுக்கமாய் பெட்டிப் பாம்பாய் நடந்துகொண்ட அவைகள், காட்டை தொட்டவுடன் ஒன்ரையன்று நெருக்கியடித்துக் கொண்டு திரும்பி நின்று மலை அதிர பிளிரி முன்னங்காலை ஓரடி தூக்கி வைத்து உடலை இழுத்து தும்பிக்கையை மடித்து தூக்கியது.

மெல்லிய அதிர்வின் மூலமாகவே கும்கி தன் நடத் துனனுக்கு ஆபத்தை அவரசமாக உணர்த்திவிட்டது.

காட்டுயானைகள் பிளிறியபடியே கொஞ்சம்

கொஞ்சமாக முன்னால் நகர்வதும் நிற்பதுமாக இருந்தது.

அதன் இலக்கு மிகவும் தெள்ளத்தெளிவாகவே தெரிந்தது .. அந்த நகர்தல் சில நிமிடங்களில் மித வேகமாய் மாறியது, மிதவேகம் சில நிமிடங்களில் அதிவேகமாகமாறிவிட்டிருந்தது.

அதன் முட்டலில் ஒரு கும்கி குப்புற விழுந்து எழுந்து ஓடிவந்துகொண்டிருந்தது.

கும்கியின் பின்வாங்கலை கண்ட காட்டுயானைகள் தன் விரட்டலை சட்டென நிறுத்திவிட்டது.

 மீண்டும் கும்கிகள் தயார் நிலைக்கு வருவதற்கு சின்ன ஓய்வு தேவைப்பட்டது.

இப்போது கும்கி தனது இலக்கை நோக்கி திரும்பிவிட்டது ஆனால் திருப்பியும் காட்டுயானைகள் விரட்டத்தொடங்கிவிட்டது.

கும்கிகள் ஒரு முடிவோடு மிகப்பாதுகாப்பான எல்லையை நோக்கி ஓடத்தொடங்கியது துரத்திவிட்ட பெருமிதத்துடனும் கம்பீரத்துடனும் சாவகாசமாக நடந்துபோய் எதுவுமே நடக்காதாது மாதிரி தன் காட்டில் போய் நின்றுகொண்டு செடிபொறுக்க ஆரம்பித்துவிட்டன

விவசாயிகள் மன்றாடியும் சூளையாளர்கள் கெஞ்சியும் , நடத்துனன் எவ்வளவோ முயன்றுபார்த்த பிறகும் காட்டான்களை விரட்டுவதற்கு ஏனோ கும்கி அதற்குப் பிறகு ஒத்துழைக்கவேயில்லை, அதன் ஒத்துழையாமை இயக்கம் நிச்சயம் பயத்தினால்மட்டுமல்ல சாலமன்.

‘அச்சா என்னாக்கு செய்கா. ராஜாக்குந்து ஒரு சத்தியம் கெடாக்குலாமி’ இரண்டு பழங்குடிப் பெண்கள் அந்த இடத்தில் பேசிக்கொண்டது வெறுமனே இருவருக்கான உரையாடல் மாதிரி தெரியவில்லை.

சூளைஉரிமையாளர்களிடம் காணமுடியாத நேர்மையை.... எல்லைக்குள் திரும்பிய யானைகளிடமும், பின்வாங்கிய கும்கிகளிடமும், அந்த பழங்குடி பெண்களிடமும் தான் என்னால் கண்டெடுக்க முடிந்தது சாலமன்.

இதோ சம்பவம் 1

இங்கே முதலில் யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க அகழி தோண்டியிருந்தார்கள் ஆரம்பத்தில் அது, சில அடி அகல அளவில்தான் அமைந்திருந்தது.

பலமுறை முயற்சித்து முயற்சித்து ஏமாந்த அவைகள் தனக்கான பாதையில் வெட்டப்பட்டிருந்த குழியை கடக்க தீர்வை ஒருவாறு எட்டியிருந்தது.

ஒரு நாள் அகழிக்கருகில் நின்றுகொண்டு யானைக் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கால்களாலும் துதிக்கையாலும் தட்டி தட்டி மண்ணை குழிக்குள் தள்ளி அதன் உறுதித்ன்மையை சோதித்தபின் வழி ஏற்படுத்தி செல்வதை பார்க்கமுடிந்தது.

சம்பவம் 2

இங்கே பழங்குடியல்லாத வசதியான ஒர் விவசாயி கரும்பு நட்ட தனது தோட்டத்தை சுற்றிலும் குறைவழுத்த மின்வேலிகளை போட்டிருந்தார் பேட்டரியில் இயங்கும் அதன் மின் அதிர்வு சுழற்சி முறையில் தோட்டத்தை கம்பிகள் வழியாக சிறிய கால இடைவெளியில் சுற்றி சுற்றி வரும், அதை தொட்டால் ஷாக்கடிக்கும் யானை உறைந்து போய் நிற்க்கும்.

அடிவாங்கி அடிவாங்கி அனுபவஸ்தர்கள் ஆகியிருந்த கொம்பன்களுக்கோ கரும்பை தின்றாகவேண்டிய கட்டாயம் இருந்தது.

நிறைய மின் அதிர்வு அடியால் பாதிக்கப்பட்ட அனுபவத்தை தொகுத்து வைத்திருந்த அவைகள் ஒரு நாள் தன் வாயில் வைத்திருந்த புளியங்கிளையை மின்வேலியின் மேல் வீசி எரிந்தது.

சடீரென்ர சத்தத்தால் ..... உஷாராகி நின்றுகொண்டது.

கொஞ்ச நேரம் உத்துப்பார்த்ததுகொண்டே நின்றிருந்த ஒன்று முறிந்துகிடந்த கொம்பை தூக்கி கம்பியை ஓங்கி அடித்தது, பட் பட் படாரென் கம்பிகள் அறுந்து மின்சாரம் தடைபட்டுபோனது அதறக்காகவே காத்திருந்த இன்னொன்று வலதுகாலை எடுத்துவைத்து சாவுகாசமாக உள்ளே நுழைந்து 4 ஏக்கர் கரும்பையும் தின்று தீர்த்துவிட்டுதான் திரும்பியது.

இப்படி காட்டான்களின் கூர்மையை பிரதிபலிக்கும் உண்மையான சம்பவங்களை எல்லா மலைகளிலும் கொட்டிக்கிடக்கிறது. அவற்றை சில நிமிடங்கள் கோர்த்திருந்தாலே வேறு பிம்பத்தை கொம்பனுக்கு வழங்கியிருக்கமுடியும் சாலமன்.

அப்புறம் வானளாவிய அதிகாரம் படைத்த வனத்துறையின் அத்துமீறல்கள் சொற்ப இடங்களில் மின்னலாக வந்துபோய்விடுகிறது காட்டுக்குள்ளேயே களமிருக்கும்போது அப்படி இலகுவானதா அந்த அதிகாரம்.

“மூன்று தலைமுறையாக வனத்துக்குள் இருக்கின்ற பழங்குடிகளுக்கும் வனம்சார்ந்த பிற குடிகளுக்கும் பட்டாவை கொடுத்துவிடு இனியும் அவர்களை வஞ்சிக்காதே” என்று காலரைப் பிடித்து உலுக்கும் 2006 வனச்சட்டத்தை கண்டதுண்டமாக்க, புலிகள் காப்பகங்களை கையிலெடுத்து தாண்டவமாடும் அதிகாரிகளுக்கும், அக்மார்க் கன்சர்வேசனிஸ்டுகளுக்கும் எதிராக ஏதாவது ஒரு இடத்தில் சாட்டைவேண்டாம், லஷ்மி மேனனின் அந்த ’அடையாளச் ஜடை’யாவது சுழன்றிருந்தால் சந்தோசமாக இருந்திருக்கும்.

ஆனாலும் காடுகாடுதான் அதற்குள் புலிகள் இருக்கலாம் நரி ஊளையிடலாம் தேயிலை தோட்டங்கள் இருக்கலாம் ஆனால் பழங்குடிகள் மட்டும் இருக்கவே கூடாது என்ற கொடூரமானரமான பன்னாட்டு சூழல்வாதிகளின்தந்திர அரசியலுக்குள் சிக்கிக்கொள்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்காகவே உச்சி மோந்து உங்களை தலைக்குமேல் வைத்துக் கொண்டாடவேண்டும் போல்தான் இருக்கிறது சாலமன்.

கடைசியாய் ஒன்று, அகமணமுறைக்கு இருக்கிற பாராம்பரியதைவிட காதலுக்கு அவர்களிடத்தில் கூடுதலான பாராம்பரியமிருக்கிறது.

கும்கியாக வெற்றிபெற்று கொம்பனாக தோல்வியுற்றிருக்கும் உங்களுக்கு இன்னொன்றையும் சொல்ல முடியும்.

கொம்பன் குமுளியில் இருந்தாலும் கொத்தல்லி சோளகர்தொட்டியை காட்டிக் கெடுத்து விடுகிறான்.

கொசுறு:

இந்த ஜென்மத்தில் இன்னார் ஊரில் மாணிக்கமாய் பிறக்கவேண்டும் என்று சாபம் செவன் சாமுராய்களுக்கு இருந்திருப்பதை சொன்னதற்கும், கும்கிகளை ‘பிரைவேட்டைஸ்’ பண்ணுவதற்கான ஒரு முன்மொழிவை தைரியமாக வைத்தமைக்கும், ரத்தசோகையில்லாத ஒரே பழங்குடிப் பெண்ணாக லட்சுமி மேனனை மிளிர வைத்தமைக்கும் ஒரு சல்யூட்.

மீட்டர் கொடுத்த இமானையையும்..விட்டுவிடலாம், நீங்களாவது பாடல்களில் பழங்குடிகளின் ஸ்லேங் களை பயன்படுத்தியிருக்கலாமே யுகபாரதி....

கரும்புச்சாறில் யூரியா போட்டுவத்தால் அதை குடிக்கும் யானைகள் வயிற்றில் குடல் வெந்து சாகும் என்கிற ஓங்காமல் ஒரு அடிவைத்தாலே சிதறிவிடும் வீடுகளில்தான் அவர்கள் வாழ்கிறார்கள் இத்தனைக்கும் அவைகள் ஒரு விருந்தாளியை போல் வீட்டிற்க்கே வந்து சாகவாசமாக தண்னீர் தொட்டியை திறந்து தண்ணீர் குடித்துவிட்டுப் போவதையும் அவை குடிக்கும்வரை பழங்குடிகள் பொறுத்திருப்பதையும் நான் எப்படி இனி தேநீர்க்கடையில் உரையாடிக்கொண்டிருந்த மானவர்களுக்கு சொல்ல முடியும்.