இந்தியாவின் கடைக்கோடி தென் முனை, மூன்று கடல்களும் சங்கமிக்கும் கன்னியாகுமரி. கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு எதிர்ப்புறம் நிலப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலைச் சுற்றி நிறைய கடைகள். பெருமளவு சாலையோரக் கடைகள். நடந்து சென்று கொண்டிருக்கும்போதே, நம்மை கவர்ந்திழுத்து வியாபாரம் செய்ய கடைக்காரர்கள் கூவி அழைக்கிறார்கள். வெண்மை பளிச்சென்று ஒளிரும் வெண்சங்குகள் ஒரு வரிசை, வரிச்சங்குகள் ஒரு வரிசை, சிறிய சிப்பிகள், சோழிகள் கொண்டு செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள் ஒரு வரிசை. எல்லாம் சாரிசாரியாக அடுக்கப்பட்டிருக்கின்றன.

"கன்னியாகுமரிக்கு போய் வந்தியே, எனக்கு என்ன வாங்கி வந்த?" என்று அடுத்த சில நாட்களில் எனது காதுகளில் விழும் கேள்விகள் மனதுக்குள் எட்டிப் பார்க்கின்றன. கையைக் கடிக்கக் கூடாது, அதேநேரம் ஊருக்குத் திரும்பிய பின் உறவினர்கள், நண்பர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் சிறிய பரிசைத் தர வேண்டும். இந்த அடிப்படைத் தகுதிகளைக் கொண்டு ஏதாவது ஒரு கைவினைப் பொருளை வாங்கலாம் என்று யோசிக்கிறது மூளை. தேசிய அளவிலான இதழாளர் பயிற்சியின் ஒரு பகுதியாக அங்கு சென்றிருந்தோம். உடன் வந்த குஜராத்தி நண்பருக்கு அவரது பெற்றோருக்கு அளிக்க நல்லதொரு சங்கு தேவை, வங்கத் தோழிக்கோ சங்கு அனைத்து சடங்குகளிலும் இடம்பெறும் புனிதப் பொருள். தமிழகத்தில்கூட இன்னும் சில சமூகங்களில் மங்கல விழாக்களுக்கு சங்கு ஊதும் பழக்கம் இருப்பதை கேட்டும் பார்த்தும் இருக்கிறேன்.

பெரும்பாலான கடல் உயிரினங்கள் இடதுபுறமாக வளரும் தன்மை கொண்டவை. இதனால் இடம்புரிச் சங்குகளே பெரும்பாலும் உருவாகின்றன. கடையில் அவைதான் அடுக்கப்பட்டிருந்தன. வலம்புரிச் சங்கு மிக அரிதாகவே உருவாகிறது. இந்த வலம்புரிச் சங்குகள் கடவுள் நம்பிக்கையுடன் இணைத்து பார்க்கப்படுவதால், இதற்கு மிக அதிக விலை கிடைக்கிறது. மிகப்பெரிய வலம்புரிச் சங்குக்கு ரூ. 1 லட்சம் வரை விலை கிடைக்கும் என்று அங்கிருந்த சில மீனவர்கள் கூறினர்.

சங்குகளை பார்த்துக் கொண்டே வந்த நாங்கள் எல்லோரும் ஒரு கடையை மொய்க்க ஆரம்பித்தோம். பேரம் பேசி எப்படியாவது குறைந்த விலைக்கு சிலவற்றையாவது வாங்கி விட வேண்டும் என்று மனசு உந்தியது. கடற்கரை நகரங்களுக்குச் சென்று வந்த பட்சத்தில் நீங்களும் இதேபோன்ற மனநிலையை பெற்றிருக்கலாம். ஆனால் சங்கு, சிப்பி, சோவிகள், அவற்றால் செய்யப்பட்ட கலைப்பொருட்களை நாம் வாங்கலாமா? இதில் கேள்விக்கு என்ன இடமிருக்கிறது. அந்தப் பொருட்கள் வேறெங்கும் கிடைப்பதில்லை. அவற்றை வாங்குவதால் என்ன வரலாற்று குற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது என்று ஆச்சரியமாக கேட்கலாம்.

ஒரு நிமிடம் நிதானியுங்கள். இன்று நாம் வாங்கும் சங்கு-சிப்பிகளின் உள்ளே எதுவும் இல்லாமல் இருக்கலாம். நேற்றோ, அதற்கு முன்தினமோ அது பிடிக்கப்பட்ட நேரத்தில் அதற்குள் ஓர் உயிர் இருந்திருக்கும். கடலில் இருந்து சேகரிக்கப்படும் இந்த சங்கு-சிப்பி என்பது ஒரு உயிரினத்தின் கூடு. ஒவ்வொரு உயிரினத்தின் உடலுக்கு ஏற்பவே சங்கு, சிப்பி, சோவிகள் வளர்கின்றன. குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அந்த சங்கு, சோவியை சம்பந்தப்பட்ட உயிரினம் துறக்கும்போது, நண்டு உள்ளிட்ட ஓடுகளை உருவாக்க முடியாத எண்ணற்ற கடல்உயிரினங்கள் அந்தக் கூட்டை பயன்படுத்திக் கொள்கின்றன. இயற்கையில்தான் எதுவும் குப்பையாவது கிடையாதே.

நாங்கள் பங்கேற்றிருந்த அந்த கடல் சார்ந்த இதழாளர் பயிலரங்குக்கு சென்னை கிறிஸ்தவக் கல்லூரியைச் சேர்ந்த கடல் உயிரியல் பேராசிரியர் தீபக் சாமுவேல் வந்திருந்தார். கன்னியாகுமரி சூரிய உதய-அஸ்தமனப் புள்ளியில் கடல் உயிரினங்களின் வாழ்க்கையை நேரடி உதாரணங்களைக் கொண்டு அவர் விளக்கினார். அங்கு காலியான ஒரு சங்குக்குள் ஒரு துறவிநண்டு தஞ்சமடைந்திருந்தது. சாதாரணமாகவே கடற்கரையில் ஒதுங்கிக் கிடக்கும் சங்கு சிப்பிகளில் இருந்து ஒருவித துர்நாற்றம் வருவதை பார்த்திருக்கலாம். சில நேரங்களில் இறந்த உயிரினமும் உள்ளே இருக்க வாய்ப்பு உண்டு. இவை உள்ளே உயிரினம் வாழ்ந்ததற்கான சாட்சி.

சங்கு-சிப்பிகளை அதில் வாழும் சிறிய உயிரினமே தனது பாதுகாப்புக்காக உருவாக்குகிறது. நமக்கு எலும்புக்கூடு போல, அவற்றுக்கு இந்தக் கூடு பாதுகாப்பு அளிக்கிறது. கால்சியம் கார்பனேட் என்றழைக்கப்படும் சுண்ணாம்பைக் கொண்டு ஒவ்வொரு உயிரினமும் தனது இனத்துக்கு ஏற்ற வகையில் சங்கு-சிப்பிகளை உருவாக்குகிறது.

உலகிலேயே உயிர்வளம் செழித்த பகுதிகள் கடல்தான். உலகின் 70 சதவீதம் கடல். அங்குள்ள அனைத்து உயிரினங்களும் இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்படவில்லை. நிலத்தில் உள்ளது போலவே கடலிலும் கணக்கற்ற உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்ந்து வருகின்றன. ஒன்று மற்றொன்றுக்கு உணவாகிறது. இந்த கடல் உயிர் சுழற்சி, நாம் சாப்பிடும் மீன்கள் வரை தொடர்கிறது. நாம் சாப்பிடும் மீன்கள் ஆரோக்கியமாக இருக்க இந்த சங்கு-சிப்பிகள் முக்கியம். பிரிக்க முடியாத இந்த பிணைப்பை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் மீனவர்களின் முதன்மைத் தொழில் மீன்பிடித்து வாழ்க்கை நடத்துவதாக இருந்தாலும், வசதி படைத்த மீனவர்கள், பெருந்தொழில் செய்பவர்கள் சங்கு-சிப்பிகளை வலைபோட்டு சேகரித்து விற்கும் தொழிலைச் செய்கிறார்கள். எந்த சங்குகள் அதிகம் விற்பனை ஆகின்றனவோ, அவை அதிகமாக சேகரிக்கப்படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன், இதுபோன்ற சங்கு, சிப்பி, சோவிகள் கடலில் பெருமளவு சேகரிக்கப்பட்டு பெரிய தொழிற்சாலையில் கொன்று அழிக்கப்படுவதை ராமேஸ்வரத்தில் ஒரு முறை நேரடியாக பார்க்க வாய்ப்பு கிடைத்தது. உயிரோடு பிடித்து வரப்படும் இந்த உயிரினங்கள் கொதிக்கும் நீரை ஊற்றி அழிக்கப்படுகின்றன. பிடிக்கப்படும் நேரத்தில் இந்த சங்கு-சிப்பிகள் பெரும்பாலும் சொரசொரப்பாகவே இருக்கும்.  ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஊற்றி சொரசொரப்பு நீக்கப்படுகிறது, உயிரினமும் அழிக்கப்படுகிறது. பிறகு கைவினைப் பொருளாக விற்பனை செய்வதற்காக, அவை பாலிஷ் செய்யப்படுகின்றன. அதற்காக வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களையும் பார்த்தேன். யாருக்கோ நாம் அன்பாக வாங்கிக் கொடுக்கும் பரிசுப் பொருட்கள், இப்படி எண்ணற்ற உயிரினங்களை அழித்து உருவாக்கப்படுவது எனக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்தியாவில் சட்டங்களுக்குக் குறைச்சல் இல்லை. அழிந்து வரும் பல சங்கு-சிப்பி வகைகள் சட்டப்படி பாதுகாக்கப்பட்டுள்ளன. வெறும் 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் விற்கப்படும் பெரிய பெரிய சங்குகள் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட அரிய உயிரினங்கள். இதை விற்பதோ, வைத்திருப்பதோ சட்டப்படி குற்றம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒருவருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம். கன்னியாகுமரி கடைகளில் விற்கப்பட்டுக் கொண்டிருந்த பல வகை சங்கு-சிப்பிகள் 1972 காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டவை.

ஆனால் யாரும் அந்தச் சட்டங்களை சுட்டிக்காட்டி இந்த கடைக்காரர்களை கைது செய்வதில்லை. குறைந்தபட்சம் அச்சுறுத்துவதுகூட இல்லை. காட்டுயிர்களை பாதுகாக்கும் செயல்பாடு நம் நாட்டில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் சாலையோரக் கடைக்காரர்கள் அந்தப் பொருட்களை வாங்கி விற்பவர்கள் மட்டுமே. இவர்களுக்கு பின்னணியில் மிகப் பெரிய தொழில்வலை மறைமுகமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக "சேவை வரியை" செலுத்தி விட்டு, சிறு விற்பனையாளர்கள் மூலம் முதலாளிகள் தங்கள் வியாபாரத்தை அமோகமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முதலீடே இல்லாமல் லாபம் கொட்டும் தொழில் ஆயிற்றே. இயற்கைதானே முதலீட்டாளர்.

"விமான நிலையங்களில், சுங்கத் துறை பரிசோதனை செய்யும் இடங்களில் மட்டும் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டப்படி பரிசோதனை நடத்தப்படுகிறது" என்கிறார்கள் சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பேட்டர்சன் எட்வர்ட் மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவர் திரவியராஜ்.

சட்டங்கள் கிடக்கட்டும் சார், நாம் வாங்கும் ஒரே ஒரு சங்கு, சிப்பியால் என்ன பெரிதாக கெட்டுவிடப் போகிறது என்ற கேள்வி அனைத்துக்கும் மேலாக எழலாம். இந்த சங்கு, சிப்பிகளை நாம் ஒருவர் மட்டும் வாங்குவதில்லை. கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு அதிகமாக வடஇந்தியாவில் இருந்தும், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், கேரளா, தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் வருகின்றனர். ஆண்டுதோறும் இவர்கள் ஒவ்வொருவரும் வாங்கிச் செல்லும் சங்கு-சிப்பிகள் எவ்வளவு இருக்கும்? இவர்களை மயக்கி சொற்ப காசுக்கு விற்பதற்காக பெருமளவு சங்கு-சிப்பிகள் உயிருடன் சேகரிக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. குஞ்சுகள்கூட பிடிக்கப்படுகின்றன. தூத்துக்குடி, ராமேஸ்வரம் கடற்கரைகளில் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதிகளுக்குச் சென்றால், இதுபோன்ற பயன்படுத்தப்படாத சங்கு சிப்பிகளை பெருமளவு பார்க்கலாம்.

பேராசை முதலாளிகள் சிலர்தான் சங்கு-சிப்பிகளை பெருமளவு பிடிக்கிறார்கள். இப்படி பொன் முட்டையிடும் வாத்தை அவர்கள் தினசரி அறுத்து வருகின்றனர். விரைவில் ஒரு நாள் அந்த வாத்து முற்றிலும் இறந்து போகும்போது, சங்கு-சிப்பிகள் மட்டுமல்ல நாம் ஊட்டமாக வாழ்வதற்குக் காரணமாக இருக்கும் எண்ணற்ற மீன் வகைகளும் அழிந்து போயிருக்கும். கடலைச் சார்ந்து வாழும் சிறு மீனவர்கள், சங்கு விற்கும் ஏழை கடைக்காரர்கள் அனைவரது வாழ்க்கையும் நிர்மூலமாகி விடக்கூடும்.

-ஆதி,சுமனா நாராயணன்

 

Pin It