"பூமி உருண்டையானது. அது சூரியனைச் சுற்றுகிறது" என்று கண்டுபிடித்து கலிலியோ கூறியபோது, மதவாதிகள் அதை மறுதலித்தனர். அது மட்டுமில்லை அவர் சிறைபிடிக்கப்பட்டு தலையில் தாக்கப்பட்டார். உலகை தலைகீழாக திருப்பிப் போட்ட அது போன்ற மற்றொரு கண்டுபிடிப்புதான், "குரங்கிலிருந்து தோன்றினான் மனிதன்" என்பதும்.

ஆதாம்-ஏவாளில் இருந்தோ அல்லது மற்ற மதங்கள் கூறுவது போல ஏதோ ஒரு ஜோடியில் இருந்தோ மனிதர்கள் தோன்றவில்லை என்பதை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டவர் பிரிட்டனைச் சேர்ந்த இயற்கையாளர்-அறிவியலாளர் சார்லஸ் டார்வின். இது தொடர்பாக பரிணாம வளர்ச்சிக் கொள்கையை அவர் வெளியிட்டபோது, மதவாதிகளும் பழமைவாதிகளும் அதை மறுதலித்தனர். தங்கள் அஸ்திவாரத்தை ஆட்டம் காணவைக்கும் இந்த அறிவியல் கொள்கையை வெளியிட்ட டார்வினை கேலி, கிண்டல் செய்தனர். அவரை குரங்காகச் சித்தரித்து கேலிச்சித்திரங்களும் வெளியிடப்பட்டன.

ஆனால் அறிவியல் துறையிலும், குறிப்பாக உயிரியல் துறையிலும் டார்வினின் கண்டுபிடிப்பு அளப்பரியது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இன்றுவரை அந்த பரிணாமக் கொள்கைதான் உயிரியலின் அடிப்படையாக இருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட காரல் மார்க்ஸ் "மூலதனம்" நூலை எழுதி முடித்த பின், அந்த நூலை டார்வினுக்கு சமர்ப்பிப்பதாக முடிவு செய்திருந்தார். சில காரணங்களால் இது நடைபெறவில்லை.

ஆரம்பத்தில் டார்வின் மருத்துவராகத்தான் விரும்பினார், பின்னர் உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட முடிவு செய்தார். இதற்காக 1831-36 ஆம் ஆண்டு வரை பீகிள் என்ற சிறிய கப்பலில் உலகின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். பல அறிவியல்பூர்வமான ஆதாரங்களை சேகரித்தார்.

பீகிள் கப்பலைத் தாண்டி அவரது ஆராய்ச்சியில் முக்கிய பங்காற்றிய மற்றொரு அம்சம் ஈக்வடார் நாட்டுக்கு அருகேயுள்ள கேலபகோஸ் தீவுகள். பல தீவுகளாக பிரிந்து கிடந்த அந்த தீவுக் கூட்டத்தில், வெவ்வேறு தீவுகளில் வாழ்ந்த ஃபிஞ்ச் பறவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாக இருந்தாலும், மாறுபட்ட சில தனிப்பண்புகளையும் பெற்றிருந்தன. இது பல கேள்விகளை எழுப்பியது.

ஒரு சூழலுக்கு மிக அதிகம் உகந்ததாக தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்கள் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் முடிகிறது. தாங்கள் வாழ அவசியமாக இருந்த குணாம்சங்களை-உடல் ரீதியிலான மாற்றங்களை ஓர் உயிரினம் அடுத்த தலைமுறைக்கும் கடத்துகிறது. காலம் செல்லச்செல்ல அந்த இனம் மாற ஆரம்பிக்கிறது, புதிய உள்ளினமாக பரிணமிக்கிறது. ஓர் உயிரினம் தான் வாழும் நிலப்பகுதி, சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதன் மூலம்தான் தொடர்ந்து சிறப்பாக வாழ முடிகிறது. இப்படித்தான் பரிணாம வளர்ச்சி உருவாகிறது. இயற்கைதான் புதிய உயிரினங்களை உருவாக்குகிறது, அதுவே "இயற்கை தேர்வு" என்றார் டார்வின்.

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் உறவு கொண்டவையே, அவை பொதுவான மூதாதையரில் இருந்துதான் உருவாகி இருக்க வேண்டும். இப்படி பரிணாம வளர்ச்சி குறித்து 20 ஆண்டு ஆராய்ந்த பிறகு, அவரும் சக அறிவியலாளர் ஆல்ப்ரட் ரஸ்ஸல் வாலசும் 1858ஆம் ஆண்டில் "பரிணாமவியல் கொள்கை"யை வெளியிட்டனர். 1859ஆம் ஆண்டில் "உயிரினங்களின் தோற்றம்" புத்தகத்தை டார்வின் எழுதினார். "மனிதனின் தோற்றம்" புத்தகம் 1871ஆம் ஆண்டு வெளியானது. இந்த இரண்டு புத்தகங்களும் இயற்கையையும், அதில் நாம் எங்கிருக்கிறோம் என்ற புரிதலையும் விரிவுபடுத்தின.

தனது கொள்கையின் உண்மைத்தன்மை, அதன் தாக்கங்களை சாகும் வரை அவர் விளக்கிக் கொண்டிருந்தார். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த அவரைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு இந்த உலகில் நேரும் அவலம் இது. டார்வினின் 200வது ஆண்டு விழா, அவரது புத்தகத்தின் 150வது ஆண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

(நன்றி: எம். சின்னப்ப ராஜன், மெயில் டுடே)

Pin It