நேற்று வரை சோதனைக்குழாய், எலி, முயல், பசுமாடு என சோதிக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பி.டி. கத்தரி இன்னும் சில நாட்களில் உங்கள் சோற்றுத் தட்டில் வந்து உட்கார்ந்து கொள்ளப் போகிறது. 

கத்தரிக்காய், சாமனியனின் அன்றாட மரக்கறி உணவுகளில் தலையாயது.எளிதில் எங்கும் கிடைப்பதாலும், மலிவான விலையாலும், செட்டிநாட்டுச் சமையல் முதல் கஷ்மீர் கிச்சன் வரை இந்தியா முழுவதும் இதன் பயன்பாடு உண்டு. குறுகிய நாளில் விளைச்சல் தரக் கூடியதால், சிறு விவசாயிகளின் பணப் பயிரும் கூட. ஆனால் இவ்வளவு பாரம்பரியப் புகழும் கொண்ட கத்தரிக்காய் இப்படியே இருக்குமா என்ற கேள்வி எழுந்துவிட்டது.

இந்தியாவில் வணிக ரீதியில் பயிரிட அனுமதிக்கப்பட உள்ள மரபணு மாற்றப்பட்ட முதல் உணவுப் பயிர் கத்தரிக்காய். இதற்கு முன்னர் இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட உணவல்லாத பயிரான பி.டி. (பேசிலஸ் துரிஞ்சியன்ஸ் பாக்டீரியா) பருத்தி, பெருந்தோல்வியைச் சந்தித்தது. விவசாயிகளை தற்கொலை வரை தள்ளியது. அதைக் கொண்டு வந்த அதே மான்சான்டோ நிறுவனம்தான் இதையும் கொண்டு வர இருக்கிறது. 

எந்த வேறுபாடும் இல்லை என GEAC (இந்திய மரபணு மாற்று பொறியியல் அங்கீகாரக் குழு) வரிந்து கட்டிக் கொண்டு இந்த பன்னாட்டு கம்பெனிகளின் - மரபீனி (மரபணு மாற்றப்பட்ட) பயிரின் வணிகத்துக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறது. அவர்களது 750 பக்க அவசர அறிக்கையைப் படித்த பிரெஞ்சு விஞ்ஞானி பேராசிரியர் செரலினி, பல கேள்விகளை எழுப்பி, "மொத்தமும் அபத்தம்.ஏனிந்த அவசரம்..?" என கேட்கிறார்.

புழு, பூச்சி, ஓட்டை... எதுவுமே இல்லாமல் புது பொலிவுடன் "மேஹோ" ஆதரவில் படைக்கப்பட்ட இந்த பி.டி.கத்தரியில் "1000 மடங்கு பி.டி. தெளிப்பான்களை விட அதிகமான பி.டி. நஞ்சை இது கொண்டிருக்கக்கூடும்" என்கிறார் அமெரிக்க சால்க் இன்ஸ்டிடியுட் விஞ்ஞானி டேவ் ஷுபெர்ட்.

என்ன நடந்தது?

பூச்சி துளைக்காத கத்தரியை உருவாக்க, இந்திய பாரம்பரிய கத்தரி விதைகளுக்குள் மேஹோவின் பி.டி. நஞ்சு, கோவை மற்றும் தார்வாட் வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் நுழைக்கப்பட்டு CO2, MDU 1, KKM1, PLR1 என கிட்டத்தட்ட 10 புதிய பி.டி. கத்தரி வகைகள் படைக்கப்பட்டுள்ளன.

GEAC எனும் இந்திய அரசு அமைப்பு, புதிய ரகத்தை ஆராய்ந்து (?), பாரம்பரிய கத்தரிக்கும் இதற்கும் ஒரு வேறுபாடும் இல்லை..என்று சான்றிதழ் கொடுத்து வருகிறது.

இந்திய விவசாயத்தின் மண்வளம், பல்லுயிர் பாதுகாப்பு, இறையாண்மை, விவசாயிகளின் கட்டுப்பாடற்ற தேர்வு,விதையின் குறைந்த விலை, அருகாமை பயிர்களின் நலம் என அத்தனை விஷயங்களையும் சிதைக்க உள்ளது பி.டி. எனும் மரபீனிப் பயிர். அதற்கு அரசே காவலாளியாக நின்று கொண்டிருக்கிறது.

கத்தரி உணவுப் பயிர் மட்டுமல்ல.சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் மருந்தாகவும் பயன்படுத்தும் மூலிகை. சொலானின் எனும் அதன் மூலப்பொருள் அளவு பி.டி கத்தரியில் மாறுபட்டிருப்பதை, அதை படைத்த பிரம்மாகளே குறித்திருந்தும், விளைவை மட்டும் மூடி மறைத்திருக்கின்றனர்.

சாதாரண அரிப்பு, கண் எரிச்சல், மூச்சுத் திணறல், சிறுநீர் தடை என திடீர் ஒவ்வாமை விளைவுகளில் எதை வேண்டுமானாலும் இந்த பி.டி. கத்தரி தட்டி எழுப்பலாம் என்கின்றனர் அறிஞர்கள். ராமயணமும், பௌத்தமும், சமணமும் உதித்த காலம் தொட்டு இருந்த நம் கத்தரி அழிவின் விளிம்பில்...நாம் என்ன செய்யப் போகிறோம்?

 

Pin It