தற்காப்புக்கு எதுவுமில்லாத, மனிதர்களை எதிர்த்து போராட முடியாத உயிரினங்களின் அவலக் கதை 

அப்பொழுது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அரையாண்டு தேர்வு முடிந்து பெரம்பூர் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறு கூட்டம் வேலி ஓரமாக எதையே தேடிக் கொண்டிருந்தது. நான் அருகே சென்று பார்த்தபோது, அவர்கள் ஒரு பாம்பைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் அப்பாம்பையும் கண்டோம். அது ஒரு பச்சைப் பாம்பு. கொடியில் படர்ந்து நின்ற அது, ஒரு வேலியின் மீது கொடியோடு கொடியாக வித்தியாசம் தெரியாமல், தன் பச்சை நிற உடலை நீட்டி ஒரு செடியின் மீது செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தது.

அது ஒரு "கண் கொத்திப் பாம்பு" என்றும், அதை அடித்துக் கொல்வதே நல்லது என்றும் அக்கும்பல் பாம்பைக் கொல்ல முயற்சித்தது. அவர்களை சமாதானப்படுத்தி, அப்பாம்பை காப்பாற்றுவது அன்று எனக்குச் சாதாரணமான காரியமாக இல்லை. இச்சம்பவத்துக்குப் பின்னர் பல முறை பல வகையான பாம்புகளை காப்பாற்றி, மனித நடமாட்டம் இல்லாத செடிகொடிகள் செழித்த பகுதிகளில் விடுவது எனக்கு வழக்கான ஒன்றாக மாறியது. ஆனால் மக்களிடம் இருந்து பாம்புகளைப் பற்றிய பயம், மூடநம்பிக்கைகளை மாற்றுவது எனக்கு எளிதானதாக இல்லை. 

இந்த பச்சைப் பாம்பை கண்கொத்திப் பாம்பு (வைன் ஸ்னேக்) என்று அழைப்பதற்கு, அதன் கூரிய. நீண்ட முகமே காரணம். இந்த வகை பாம்புகள் கண்ணைக் கொத்துவதாகக் கூறுவது முழுக்க முழுக்க கற்பனையே. ஆனால் யாரும் இதை ஏற்றுக் கொள்வதில்லை. அதேநேரம் இந்தப் பாம்பின் கூரிய முனையைத் தொட்டுப் பார்த்தால், அது எவ்வளவு மென்மையானது என்று மக்களுக்குப் புரியும். ஆனால் நாம் எதையும் அறிவியல் பூர்மாகப் புரிந்து கொள்ளாமல், விஷமற்ற இந்தப் பாம்பை கண்கொத்திப் பாம்பாக்கி, அதைக் கொன்றும் விடுகிறோம். 

இது பச்சைப் பாம்புக்கு மட்டுமல்ல, எல்லா பாம்பு வகைகளுக்கும் பொருந்தும். உலகில் வாழும் உயிரினங்களில் பல்வேறு தவறான நம்பிக்கைகள், உண்மையற்ற கட்டுக்கதைகளால் மோசமாக பாதிக்கப்படும் உயிரினம் என்று பாம்பைக் கூறலாம். இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். 

கொம்பேறி மூக்கன் (பிரான்ஸ் பேக் டிரீ ஸ்னேக்) ஒரு விஷமற்ற பாம்பு. இது உயரமான மரக்கிளைகளில் மீது ஏறிச் சொல்லும் இயல்புடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இந்த வகைப் பாம்பு ஒருவரைக் கடித்தபின், இறந்தவரது இறுதி ஊர்வலத்தைப் பார்க்கவே உயரமான கிளைகளின் மீது ஏறுகிறது என்று எந்த ஆதாரமும் இன்றி நம்பப்படுகிறது. அதனாலேயே இப்பாம்பு கொல்லப்படுகிறது. 

சாரைப் பாம்பும் ஒரு விஷமற்ற பாம்பே. விவசாய நாடான நம் நாட்டில் உற்பத்தியாகும் தானியங்களை ஏராளமாக வீணடிப்பவை எலிகள். அப்படிப்பட்ட எலிகளை அதிகம் உணவாகக் கொள்ளும் பாம்பு இது. ஆனால் இது தன் வாலில் உள்ள விஷமுள்ளைக் கொண்டு தாக்கும் என்பது ஒரு தவறான நம்பிக்கை. இதன் வாலில் எந்த முள்ளும் கிடையாது. சாரைப் பாம்பு நல்ல பாம்போடு சேர்ந்து நடனமாடும், இனப்பெருக்கம் செய்யும் என்பதும் கட்டுக்கதையே. 

மன்னுள்ளிப்பாம்பு (காமன் சாண்ட் போவா) மற்றுமொரு வித்தியாசமான பாம்பு. இதன் தலையும் வாலும் அதிக வித்தியாசம் இல்லாமல், ஒரே அளவுக்கு பருத்து காணப்படுவதால் ஆறுமாதங்களுக்கு ஒரு முறை இதன் தலையும் வாலும் மாறிமாறி இருக்கும் என்று கூறப்படுவது உண்மைற்ற செய்தி. இப்பாம்பு தீண்டினால் தொழு நோய் வரும் என்பது மிகப் பெரிய மூடநம்பிக்கை. 

இப்படி பாம்புகளைப் பற்றி பல கட்டுக்கதைகளும் தவறான தகவல்களும் மூடநம்பிக்கைகளும் உலவி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானது மதம், பண்பாடு சார்ந்த சம்பிரதாயமும் சடங்குகளும். இவற்றை பிரதிபலிப்பது போல் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் தவறான கருத்துகளைப் பதிய வைக்கின்றன. 

சடங்கு சம்பிரதாயங்கள் ஏதோ ஒரு நோக்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கால ஓட்டத்தில் அவற்றை எதற்காகச் செய்கிறோம் என்பதை முற்றிலும் மறந்து, வெறும் செயலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுகிறது. உதாரணமாக, முன்பு நாட்டார் தெய்வங்களாக இருந்து இந்துக் கடவுள்களாக மாற்றப்பட்ட பல தெய்வங்களுக்கு வாகனங்களாக விலங்குகள், பறவைகள் வைக்கப்பட்டிருப்பது, அவற்றைப் பற்றி மனிதர்கள் மனதில் அந்நிய மனப்பான்மையை உதறி, நெருக்க மனப்பான்மையை உருவாக்கி காப்பாற்றவே. சிவனின் கழுத்தில் பாம்பும், அம்மனின் மற்றொரு வடிவமாக பாம்பும் இருப்பது இந்தக் கூற்றுக்கு சில உதாரணங்கள்.  

ஆனால் ஒரு பக்கம் பாம்புப் புற்றுக்கு பாலும் முட்டையும் ஊற்றும் நம்மில் பலர், அவற்றை அடித்துக் கொல்வதையும் நிறுத்தவில்லை. மேலும் பாம்புகளால் பாலையும் முட்டையையும் சாப்பிட முடியாது என்பது பலரும் உணராத அறிவியல் உண்மை. உடைத்த முட்டையை பாம்பு எந்தக் காலத்திலும் சாப்பிடுவது கிடையாது. இயற்கையாக பறவைக் கூடுகளில் இருந்து முட்டையை சில நேரம் பாம்புகள் விழுங்குவது உண்டு. கரையான் புற்றில் வந்து தஞ்சமடையும் பாம்புகள் முட்டை, பாலை ஊற்றுவதால் அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடும். 

திரைப்படங்களில் அடிக்கடி தோன்றும் மற்றொரு காட்சி. ஒருவன் பாம்பைக் கொன்றால், அந்தப் பாம்பின் துணை அம்மனிதனை தேடி வந்து கொல்வது போல காட்டுவது. இதை வைத்து "நீயா?" என்ற கமல்ஹாசன் நடித்த முழுநீளப் படம் எடுக்கப்பட்டது. அனைத்து இந்திய மொழிகளிலும் படம் எடுத்துள்ள, 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள ராமநாராயணின் பல படங்களில் இக்காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த மூடநம்பிக்கை முற்றிலும் தவறு. ஒரு பாம்பை அடித்துக் கொல்லும்போது, அதன் உள்பாகங்கள் வெளியே வருகின்றன. இதில் பாம்பு தன் துணையைக் கவர்வதற்காக பயன்படுத்தும் சில ஹார்மோன்களும் வெளியேறும். இதனால் கவரப்பட்டு, அந்த இடத்துக்கு மற்ற பாம்புகள் வரக்கூடும். பாம்பைக் கொன்றவரை கொல்வதற்காகவோ, அடையாளம் பார்த்து வைத்துக் கொண்டு பழி வாங்குவதற்காகவோ அவை அப்படிச் செயல்படுவதில்லை. 

பாம்பு வித்தியாசமான ஒரு உயிரியாக இருப்பதாலும், சரசரவென சருகுகள் இடையே ஊர்ந்து செல்வதாலும், திடீரென தோன்றுவதாலும் நிறைய பயம் ஏற்படுகிறது. இது எல்லாவற்றையும்விட பெரிய பயம் எல்லா பாம்புகளும் விஷமுள்ளவை என்று தவறாக நம்புவது. ஆனால் பொதுவாகக் காணப்படும் பாம்பு வகைகளில் நான்கைத் தவிர மற்ற அனைத்தும் விஷமற்றவையே. விஷமுள்ள பாம்புகள் நல்ல பாம்பு (கோப்ரா), கட்டுவிரியன் (கிரெய்ட்), கண்ணாடி விரியன் (ரஸ்ஸல்ஸ் வைபர்), சுருட்டைப்பாம்பு (சா ஸ்கேல்ட் வைபர்). மற்ற அனைத்தும் விஷமற்றவை. விஷமற்ற-விஷமில்லாத பாம்புகள் இடையே வேறுபாடு கண்டறிய தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா பாம்புகளும் ஒன்று என்று குருட்டுத்தனமாக நம்பி கொல்லக்கூடாது. 

மற்ற உயிரினங்களைப் போலவே மனிதர்களைக் கண்டால் பாம்புகளும் ஒதுங்கியே செல்கின்றன. இயற்கை-விலங்குகள் உணவுச் சங்கிலியில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பாம்புகள் குறைந்தால், நமக்குத் தேவையான தானியங்களை அழிக்கும் எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, பாம்புகளால் நமக்கு இயற்கையாகவே நிறைய நன்மைதான் ஏற்படுகிறது. 

ஆறு அறிவு கொண்ட மனிதர்களான நாம், இதை உணர்ந்து அவற்றை தேடித்தேடி பாதுகாக்க வேண்டியதுகூட இல்லை. அவற்றை தொந்தரவு செய்யாமல், கொல்லாமல், இயல்பாக வாழ விட்டாலே போதும், நமக்கு நிறைய நன்மை கிடைக்கும். 

****

(பேராசிரியர் முருகவேள், ஒரு தீவிர இயற்கை விரும்பி. பறவைகள் பற்றி மட்டுமில்லாது காட்டுயிர்கள் மீது ஆர்வம் கொண்ட இவர், அவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இ.எம்.ஏ.ஐ என்ற அமைப்பை நடத்தி வருகிறார்)

Pin It