தீர்வுகளைத் தேடி ஒரு பயணம்

நம் சோழ மண்டலமும், வங்கக்கடலும் ஊழிக் காற்றுக்கும் புயலுக்கும் பெயர் பெற்றவை என்பது ஓர் வரலாற்று உண்மை. ஆனால் இவையெல்லாம் ஜூலை முதல் நவம்பர் மாதங்களுக்கு இடையே மழைக்காலத்தில் நடைபெறும் பேரிடர்கள். ஆனால், கடந்த பத்தாண்டுகளாக ஏப்ரலில் அய்லா புயல், சனவரியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் என தாறுமாறாக நிகழ்வது மழை-நீரியல் சுழற்சியில் நடைபெறும் காலநிலை மாற்றத்தின் மற்றொரு தாக்கமாக கருதப்படுகிறது. இதனால் விவசாய பயிரிழப்பு, அதிக அளவு நீர் தேங்குவது, புதிய நோய்கள் நமது சமூகத்தையும் பொருளாதாரத்தையும் தகர்த்து வருகின்றன என்பது கண்கூடு.

உலகின் மின்சாரத் தேவைகளுக்காகவும் தொழிற்சாலைகளுக்காகவும் புதை படிவ எரிபொருட்கள் அதிகமாகப் பயன்படுத்துவதாலும், மரங்களை வெட்டி எரிப்பதாலும் வெளியாகும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுக்கள் ஏற்படுத்தும் சங்கிலி தொடர் விளைவால் ஏற்படும் "பசுமை இல்ல விளைவு" புவி வெப்பமடைய மூலகாரணமாகும். புவி வெப்பமடைவதால் 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட இருக்கும் வானிலை மாற்றங்களும் சுற்றுச்சூழல் தாக்கங்களும் குறித்து இருபது ஆண்டுகளுக்கு முன் சூழலியல் அறிவியல் அறிஞர்கள் எதிர்பார்த்ததைவிட, 2000-ஆம் ஆண்டு வரை பாதிப்புகள் அதிகமாகவே நிகழ்ந்துள்ளன.

2007 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றம் 2020 ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் 3,00,000 மக்கள் ஆண்டுதோறும் பலியாகக் காரணமாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது. இந்தக் கணிப்புக்கு முன்கூட்டியே 2000 ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் காலநிலை மாற்றத்தால் 1,50,000-க்கும் அதிகமானோர் உயிழந்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் திடீர் மழை, புயல், வெள்ளம் மற்றும் கடல்மட்ட உயர்வால் ஏற்படும் கடலரிப்பு என பன்முக தாக்கங்களை தெற்காசிய, தென்கிழக்காசிய, ஆப்ரிக்க, தென் அமெரிக்க வளரும் நாடுகள் பெருமளவு சந்தித்து வருகின்றன. இதிலும் குறிப்பாக மலைவாழ் மக்கள், நதிக்கரையோர மக்கள், கடலோர மக்கள் மற்றும் நிலமற்ற உழைக்கும் மக்கள் என விளிம்புநிலை மக்கள்தான் அதிக அளவில் உயிரிழக்கின்றனர்.

திடீர் மழை, வெள்ளப் பெருக்கில் தோன்றும் மலேரியா மற்றும் கொசு சார்ந்த இதர நோய்கள், வயிற்றுப்போக்கு, பறவை காய்ச்சல், கால்நடைகள் (மாடு, ஆடுகள், கோழிகள்) மூலம் பரவும் நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து இன்மை (போதிய உணவில்லாதாலும் பயிர்கள் நாசமாவதாலும் உணவு பாதுகாப்பு தகர்வதாலும்) மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இந்த இறப்புகள் நேரிடுகி்ன்றன. இவை தவிர பருவம் தவறி கடுமையாக வீசும் அனல்காற்று, வெப்பம் சார்ந்த நோய்களும் இந்த மனிதப் பேரழிவுக்கு மற்றொரு காரணமாகும். உலகில் ஒரே நாளில் ஒரே இடத்தில் கூட்டாக மக்கள் இறந்தால் அது மிகப் பெரிய அவலச் செய்தியாக பேசப்படுகிறது. அரசு, ஊடகம், ஆட்சியாளர்கள், பல்கலைக்கழக அறிஞர்கள், "வளர்ச்சி” அறிவியலாளர்கள் பேசுவார்கள். உலகம் தீவிரமாக அது பற்றி விவாதிக்கும். ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளில் மலை முகடுகளிலும், ஆற்றங்கரை பள்ளங்களிலும், ஆள் அரவற்ற கடலோர கிராமங்களிலும், தொலைதூர பாலைவனத்தின் ஓரத்திலுள்ள சிற்றூர்களிலும் தனித்தனியாக மக்கள் இறக்கும்போது அது வெறும் புள்ளிவிவரமாக போய்விடுகிறது.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது உலக பொருளாதாரத்தை, உலகமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக "உலக வர்த்தக அமைப்பு" என்ற ஒரே குடையின் கீழ் இணைக்கப்பட்டது. இது மூன்றாம் உலக நாடுகளில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளியை பல மடங்கு அதிகரித்துள்ளது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும் ஏழைகள் மேன்மேலும் ஏழைகளாவதும், நடுத்தர வர்க்கம் இரண்டாகப் பிரிந்து ஒரு சாரார் மேல் நோக்கியும், மற்றொரு சாரார் கீழ் நோக்கி நகர்கிறார்கள். இந்த பொருளாதாரச் சூழ்நிலை, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில்கூட, அதிக ஏழைகள் இறக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. உலகமயமாக்கத்தால் காலநிலை மாற்றம் தூண்டப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, உலக சந்தையின் கடல்வழி சரக்குப் போக்குவரத்து, பெருகி வரும் தொழில்மயமாக்கம், ஏழை நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பலமடங்கு அதிகரித்துள்ளது (எடுத்துக்காட்டாக, இந்தோனேசியா, பபுவா நியூ கினியா, பிரேசில் போன்ற நாடுகளின் பசுமைமாறாக் காடுகளிலிருந்து மரம் (டிம்பர்) வெட்டியெடுத்து மேலைநாடுகளுக்கு அனுப்பும் பணி மிகவேகமாக நடைபெறுகிறது).

காலநிலை மாற்றத்தால் உடல்நல பாதிப்புகள், நோய் நொடிகளின் பெருக்கம், இயற்கை சார்ந்து உணவு உற்பத்தியாளர்கள் சந்திக்கும் அழிவு, காடு அழிப்பு, உலக மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாத உணவுப் பற்றாக்குறை, புதை படிவ எரிபொருளின் வேகமான பயன்பாடு, அதிகப்படியான கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு வெளிப்பாடு, வளிமண்டல மாற்றம், பனிப ்பாறைகள் உருகுதல், கடல் மட்டம் உயருதல், வழமைக்கு முரணான இயற்கையின் சீற்றங்கள் போன்ற பன்முகத் தாக்கங்கள் அதிகாரித்துள்ள வேளையில், இப்பூவுலகை காக்கும் நமது செயல்பாடுகள் இன்னும் வேகமாக நடைபெற வேண்டும்.

நமது பூவுலகை காக்க 1992 ஜூனில் பிரேசிலுள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ரியோ புவி உச்சி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல்திட்டம் 21 முழுமையாக நடைமுறைப் படுத்தாதன் விளைவுதான் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் நிலைத்த தன்மையற்ற பொருளாதார வளர்ச்சிக்குத் தள்ளியுள்ளது. இன்று மிக மோசமான பன்முக விளைவுகளை நேரடியாக சந்தித்து வருகிறோம். 21-ஆம் நூற்றாண்டில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும், அடுத்து எதிர்கொள்ள இருக்கும் காலநிலை மாற்றத்தின் பன்முக தாக்கங்களைத் தடுக்க, எந்த முன்முயற்சியும் தற்போது வெற்றிகரமாக நடைபெறவில்லை என்பது சோகமான உண்மை. பூவுலகின் எதிர்காலத்தை பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் ரீதியாக நிலைத்த வளர்ச்சியை உருவாக்கும் கருதுகோள்கள்தான் செயல் திட்டம் 21. இன்று கொள்கை வகுப்பாளர்களும், அரசுகளும், பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களும் மறந்து போன திட்டமாகவே இது இருக்கிறது.

புவி வெப்பமடைந்து வரும் இந்தக் காலக் கட்டத்தின் செயல்திட்டம் 21 நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். அதன் முக்கிய கருதுகோள்கள்:

•     வளி மண்டலத்தை பாதுகாக்க காலநிலை மாற்றத்தையும் அதன் விளைவான புவி வெப்பமடைவதையும் தடுத்தல்

•     மானுட நுகர்வு பழக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தி உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வது.

•     வறுமை ஒழிப்பு மற்றும் கொடும் பஞ்சத்தையும், பாலைவனமாதலையும் சூழலியல் பாதுகாப்பு செயல்கள் மூலம் எதிர்கொள்ளுதல்

•     நிலைத்த வளர்ச்சியில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் பழங்குடிமக்களின் பங்கை வலுப்படுத்துதல்

•     மாசற்ற நிலைத்த தன்மையுடைய நன்னீர் வள மேலாண்மை, ஆலை மற்றும் குடிமை திடக்கழிவுகள் (நகர மற்றும் ஊரக), கழிவுநீர் மேலாண்மை மற்றும் நச்சுக் கழிவு மேலாண்மை

•     சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மையை வளர்ப்பதில் உழவர்கள் மற்றும் அரசுகளின் பங்கு. நிலைத்த வேளாண்மையும் மற்றும் ஊரக வளர்ச்சியின் மூலம் அடித்தள மக்களுக்கு உணவு பாதுகாப்பு மூலம் இடப்பெயர்ச்சியை தடுத்தல்.

•     நிலைத்த நில மேலாண்மை. அதாவது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு இடையிலான முரண்பாடுகளை களைந்து நிலைத்த தன்மையுடைய நில மேலாண்மையை கடைப்பிடிப்பது.

•     மக்கள்தொகை பெருக்கத்தை குறைப்பது மற்றும் பரந்து விரியாமல் நிலைத்திருக்கும் மனிதக் குடியிருப்புகளை ஏற்படுத்துவது, கிராமப்புற கட்டமைப்பு வசதிகளை பெருக்கி, மாநகர் நோக்கிய இடப்பெயர்ச்சியை குறைத்தல் மற்றும் வேளாண் நிலங்கள் குடியிருப்புகளாக மாறுவதை தடுத்தல்

•     பல்லுயிர் வேறுபாடுகளை பேணிக் காத்தல், காடு அழிப்பை கட்டுப்படுத்துதல் மற்றும் நிலைத்த மலைப்பகுதி வளர்ச்சித் திட்டம்

•     கடலின் இயற்கை வளங்களை பாதுகாத்தல். மேலும் அதன்மூலம் நீரியல் சுழற்சியை சமன் செய்தல் மற்றும் கடல் பல்லுயிர் வேறுபாட்டை பராமரித்தல்.

•     மாசற்ற தொழில்நுட்ப பாரிமாற்றம் மூலம் உலகெங்கும் சீரான சுற்றுச்சூழல் பாதுகாத்து, நிலைத்த வளர்ச்சியை ஏற்படுத்துதல் மற்றும் அதற்குத் தேவையான அறிவு வளத்தை உருவாக்குதல்

இப்படி பல்வேறு தொலைநோக்கு பார்வைகளைக் கொண்டது செயல்திட்டம் 21.

இன்றைய சூழலுடன் ஒப்பிடும்போது, இச்செயல்திட்டத்தில் சில குறைபாடுகள்தான் உள்ளன என்று புலப்படுகிறது. ஆனால், காலநிலை மாற்றத்தின் பன்முக விளைவுகளை தவிர்ப்பதற்கு ஏற்ற பரிந்துரைகள் மற்றும் திட்டங்கள் இதில் இருக்கின்றன. மனித உரிமை பாதுகாப்புக்கு வழிகாட்டும் 1948 ஆம் ஆண்டின் ஐ.நா. உலகளாவிய மனித உரிமை பிரகடனம் போல், சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்த வளர்ச்சிக்கு 1992 ஆம் ஆண்டின் ரியோ புவி உச்சி மாநாட்டு செயல்திட்டம் 21 இருக்கிறது. சுற்றுச்சூழல் போராளிகளின் அறிவாயுதமாக ஏந்த வேண்டிய பிரகடனம் இது. அதன்மூலம் மக்களிடையே விழிப்புணர்வு, கொள்கை வகுப்பாளர்களிடம் மற்றும் ஆட்சியாளர்களிடம் கொள்கை மற்றும் செயலதிட்ட மாற்றம் கொண்டு வர பாடுபட வேண்டும். காலநிலை மாற்ற பாதிப்புகளில் இருந்து உலகை காக்கும் சக்தி இதற்கு உண்டு.

குறிப்புதவி:

1.     மைக்கேல் கீட்டிங் - மாற்றத்திற்கான செயல் திட்டம் 21

2.     சாரா டி வீர்ட் - உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் எழுத்தாளர், வேர்ல்ட் வாட்ச் அமைப்பு.

- சி.மா. பிரிதிவிராஜ், பூவுலகின் நண்பர்கள்

 

Pin It