"பூவுலகு" முதல் இதழுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் அளித்த ஏகோபித்த வரவேற்பு, பக்கத்தில் இருந்து தோள்களை தட்டிப் பாராட்டும் உணர்வைத் தந்தது. பாராட்டுகளைப் போலவே நிறைய விமர்சனங்களும் வந்துள்ளன. இது ஒரு கூட்டு முயற்சிதான். இதழை அச்சிட்டு விநியோகித்த பின், உங்கள் மூலமாக அது வேறு புதிய வடிவங்களை எடுத்துப் பயணிக்கிறது. சூழல் சார்ந்த இந்த அக்கறை நமது பாரம்பரியத்தின் தொடர்ச்சி. 

வாழ்க்கையை அகம், புறம் என்று பிரித்ததோடு மட்டுமல்லாமல், அறிவியல் சார்ந்து சூழல் உணர்வுமிக்க பண்பாட்டைக் கொண்டிருந்தது நமது பாரம்பரியம். இன்றைக்கு பெருமளவு அடித்தட்டு, மத்தியதர வர்க்க மக்கள் தாய்மொழியில் பிரச்னைகளைத் தெரிந்து கொண்டு, எதிர்வினையாற்றவும், மாற்றங்களை உருவாக்க அரசை நிர்பந்திக்கவும் தயாராக இருக்கின்றனர். சமீபகாலமாக வாசிக்கும் பழக்கம், சமூக அக்கறை வெளிப்பாடு, மாற்றங்களை பற்றிய விவாதங்கள் நமது சமூகத்தில் குறிப்பிடத்தக்க அளவு நிகழ்ந்து வருகின்றன. இவற்றின் பலனாகவே "பூவுலகு" இதழுக்குக் கிடைத்த வரவேற்பும் அமைந்திருக்கிறது என்று நாங்கள் எண்ணுகிறோம்.  

சூழல் சார்ந்த அக்கறை, செயல்பாடுகள், களப்பணிகள், எழுத்து என அனைத்தையும் "பூவுலகு" இதழ் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் சூழல் சார்ந்த தனிநபர்கள், குழுக்களால் எண்ணற்ற செயல்பாடுகள் நாள்தோறும் நடந்து வருகின்றன. அவற்றை மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதே, அந்தப் பணிகளில் இருக்கும் அர்த்தத்தை மேம்படுத்தும். மேலும் பலரை அது போலச் செயல்படத் தூண்டும். இந்த முயற்சியில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் சூழல் இயக்கங்கள் "பூவுலகு" உடன் கைகோர்க்க வேண்டும். சூழல் சார்ந்த அனைத்து செயல்பாடுகளிலும் "பூவுலகின் நண்பர்கள்" இயக்கம் இணைந்து பங்காற்றத் தயாராக இருக்கிறது. 

விமர்சனங்கள் என்று நோக்கும்போது, கட்டுரைகளில் தொணிக்கும் எதிர்மறை அம்சத்தை பெரும்பாலானவை சுட்டிக்காட்டியுள்ளன. உண்மைதான், கட்டுரைகள் கவனப்படுத்திய பல விஷயங்கள் நமது சூழலின் சீரழிவைப் பற்றி அமைந்துள்ளன. நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளது ஒரு சோறு பதம் மட்டுமே. நாங்கள் தொடாமல் விட்டிருக்கும் விஷயங்கள் ஏராளம். இந்த அவல நிலைக்கு காரணம் எதையும் கட்டுப்படுத்தாத, கட்டுப்படுத்த விரும்பாத அரசு (அரசியல்வாதிகள், நிர்வாகம்), மக்களையும் இயற்கையையும் சுரண்டிக் கொழுக்க நினைக்கும் முதலாளிகள் ஆகிய இரண்டு தரப்பினரே காரணம். தவறுகளைச் சுட்டிக்காட்ட முயற்சிக்கும்போது, இயல்பிலேயே அவை எதிர்மறையாகத்தான் இருக்கின்றன. நாம் சீரமைக்க வேண்டியது எண்ணற்ற அந்தச் சூழல் சீரழிவுகளைத்தான் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். 

தட்டுங்கள், தடுக்கப்படும் 

"மக்களுக்கான அரசு" என்பது தூரக்கனவாகிவிட்ட சூழலில், இன்றைக்கு இயற்கைவளத்தை சுரண்டி பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் வேலைகளிலேயே நமது சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்றங்களும் சட்டப்பேரவைகளும் செயலாற்றி வருகின்றன. நமது பிரதிநிதிகளாக இந்த அவைகளுக்குச் சென்று ஆட்சியைப் பிடிக்கும் அரசியல்வாதிகள் தரகு வேலையையே செய்து வருகின்றனர். இதற்கு சரியான உதாரணம், மத்திய அரசு கடந்த ஆண்டு உருவாக்கிய "கடலோர மேலாண்மை மண்டலம்" என்ற மசோதா மற்றும் தற்போது தமிழக அரசு உருவாக்கியுள்ள "தமிழக மாநில விவசாயிகள் கவுன்சில் சட்டம், 2009". 

கடலோர மேலாண்மை மண்டல மசோதா பற்றிய அறிவிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த மசோதாவை உருவாக்கிக் கொடுத்தவர் "பசுமைப் புரட்சி(!)"யின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன். இந்த அறிவிக்கை தொடர்பாக களத்தில் நேரடியாக பாதிக்கப்படும் மீனவர்கள், கடலோர மக்கள் தெரிவித்த மிகக் கடுமையான எதிர்ப்பை அடுத்து, இந்த மசோதாவை திரும்பப் பெறுவது என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்கு களத்தில் போராடிய மீனவர்கள், சூழலியலாளர்கள், இயக்கங்களே முக்கிய காரணம். 

முன்னதாக 1991 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட "கடலோர ஒழுங்காற்று மண்டலச் சட்டம்", கடலோரப் பகுதிகளை பாதுகாக்கவும் அந்தப் பகுதிகளில் வளர்ச்சி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும் உருவாக்கப்பட்டது. ஆனால் இதை உருவாக்கிய அரசே, முதலாளிகளின் நெருக்கடி காரணமாக 18 ஆண்டுகளில் 25 திருத்தங்களைச் செய்து, அதை நீர்த்துப் போகச் செய்தது. அதைவிட முக்கியமாக இந்தச் சட்டத்தை முறைப்படி அமல்படுத்துவதில் அரசு அக்கறை காட்டவில்லை, கண்காணிக்கவும் இல்லை. ஏதோ பெயருக்கு அந்தச் சட்டம் புத்தகத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. சூழல் போராளிகள் நீதிமன்றம் மூலமாக சில தீர்ப்புகளைப் பெற மட்டும் உதவியது. 

நீர்த்துப் போன அந்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வகையில்தான் "கடலோர மேலாண்மை மண்டலம்" என்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவில் பாரம்பரியமாக கடலோரங்களில் வாழ்ந்து வரும் மீனவர்கள் வெளியேற்றப்பட்டு, கடலோரங்களை முதலாளிகளுக்கு தாரைவார்க்க முயற்சிக்கப்பட்டது. குறிப்பாக தற்போது நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோயான சிறப்புப் பொருளாதார மண்டலங்களை, கடலோரங்களில் சௌகரியமாக அமர்த்த இந்த மசோதா முயற்சித்தது. மீனவர்களின் உரிமைகளைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.  

தற்போது இந்த மசோதா கைவிடப்பட்ட நிலையில், "மீனவர்கள் உரிமைச் சட்டம்" என்ற புதிய சட்டத்தை உருவாக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. புதிய கடலோர மேலாண்மை சட்டம் துல்லியமாகவும், திட்டவட்டமாகவும், சந்தேகத்துக்கு இடமில்லாததாகவும் இருக்க வேண்டும். இந்த சட்ட நடைமுறை உருவாக்கப்பட்ட பிறகு முறையான கண்காணிப்பு, கண்டிப்பான நடைமுறைப்படுத்துதல் இருக்க வேண்டும். 

கடலோரத்தில் ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டுமானங்களை இடிக்காமல் தடுக்க சட்டங்களை வளைக்கும் முயற்சிகளை அரசு இனிமேல் கைவிட வேண்டும். புதிய சட்டம் உருவாக்கப்பட்ட பின் எந்த வகையிலும் அதை மீறுவதற்கு அனுமதிக்கக் கூடாது. இல்லையென்றால், புதிய சட்டத்துக்கும் எந்த அர்த்தமும் இருக்காது.

- பூவுலகு ஆசிரியர் குழு

Pin It