25 ஆண்டுகளுக்குப் பின்பும் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி அதிக தொலைவில் இருப்பதாகத் தோன்றுகிறது.

"நான் என்னுடைய நாட்டில் அகதியைப் போல் உணர்ந்தேன். உண்மையில், ஜெர்மனியின் யூதனாக உணர்ந்தேன்." நானாவதி விசாரணை ஆணையத்திடம் இதழாளர் குஷ்வந்த் சிங் கூறிய இவ்வார்த்தைகள் 1984 - ன் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட சீக்கியர்களின் பெருந்துயரத்தை வரையறுக்கிறது.

நவம்பர் 7 ம் நாள் புது டெல்லியிலுள்ள கன்ஸ்டிடியூசன் க்ளப்பில் இருந்த கூட்டம், ஜர்னைல் சிங் சீக்கியர் மீதான வன்முறை குறித்த தனது "நான் குற்றம் சாட்டுகிறேன் (I Accuse)" நூல் அறிமுகத்தின் பொழுது கூறியதைக் காட்டுவதாக இருந்தது. அரங்கத்தில் நிரம்பியிருந்தவர்களில் சில நிருபர்களைத் தவிர அனைவரும் சீக்கியர்கள். சில மாதங்களுக்கு முன் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மீது காலணியை எறிந்ததால் அனைவராலும் அறியப்பட்டவரான ஜர்னைல் சிங் நம்பிக்கையிழந்து கேட்டார்: "ஏன் சீக்கியரல்லாத ஒருவரும் 1984 - ன் படுகொலை குறித்து சாட்சியளிக்க முன்வரவில்லை? ஏன் 25 வருடங்களுக்குப் பின்பும் கூட சீக்கிய அமைப்புகள் மட்டுமே நடவடிக்கை எடுக்காத அரசுக்கு எதிராக குரல் எழுப்புகின்றன?"

இவரது குரல் உண்மை நிலவரத்தின் எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, இந்திராகாந்தி அவரது பாதுகாவலரால் 1984, ஒக்டோபர் 31- ல் படுகொலை செய்யப்பட்டபின் மூன்று நாட்கள் நடத்தப்பட்ட வன்முறையில் ஏறக்குறைய 4000 பேர் உயிரிழந்தது இந்திய சனநாயகத்தின் கரும்புள்ளியாக நீடிக்கிறது. இரு நீதி வழங்கும் குழுக்கள் உட்பட, பத்து விசாரணைக் குழுக்கள் இருந்தும் பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்தபாடில்லை. முதன்மைக் குற்றவாளிகள் ஏறக்குறைய அனைவரும் விடுதலையாகி வெளியில் விடப்பட்டு விட்டனர், சிலர் அரசின் உயர் பதவிகளை அனுபவித்தும் உள்ளனர்.

படுகொலை நடந்ததன் 25- ம் ஆண்டு நினைவில் பலர் நம்பிக்கையிழந்து விட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் ஆலோசகரான பூல்கா ஃப்ரண்ட் லைனிடம் கூறினார்: "இது திட்டமிடப்பட்ட படுகொலை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வன்முறைக்குப்பின் விரைவிலேயே குற்றத்திற்கான ஆதாரங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டன. பல வருடங்களுக்குப் பின் அவைகளை நிரூபிப்பது மிகக் கடினமாகும். சாட்சிகள் பலரும் இறந்து விட்டனர். பெயரளவிலான நீதியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் அதற்காகப் போராடுவோம்."

கலவரம் நடந்து 9 ஆண்டுகளுக்குப் பின்னரே படுகொலையின் முதல் கொலைக் குற்றவாளிக்குத் தண்டனை கொடுத்து தீர்ப்பளிக்கப் பட்டது. ஜர்னைல் சிங் 11 வயது சிறுவனாக தான் நிகழ்வின் முதல்தர சாட்சியாக விளங்கியதை நினைவு கூர்ந்தார். அவரைப் பொருத்தவரையில் அந்நூலை எழுத ஆய்ந்ததில், காவலரும், அரசு அதிகாரிகளும், டெல்லியின் குறிப்பிட்ட பகுதியிலுள்ள சீக்கியர்கள் காயமின்றித் தப்பக் கூடாது என்பதற்காக கூட்டாக இணைந்து செயல்பட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. முதன்மைக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் எவ்வாறு பணி உயர்வுகளும், பதக்கங்களும் கொடுக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டார் என்பதையும் ஜர்னைல் சிங் எழுதுகிறார்.

வெவ்வேறு ஆணையங்களின் முன் வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் ஒக்டோபர் 31- ம் நாள் இரவில் பேராயக் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ஒருவரது வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் முழு சீக்கிய சமூகத்திற்கும் பாடம் புகட்ட வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டது என்கிறார் ஜர்னைல் சிங்." சீக்கியர்களையும், அவர்களது வீடுகளையும் எரிக்க தீப்பிடிக்கும் தன்மையுள்ள "வெள்ளைப்பொடி" பல சாக்குப்பைகளில் இராசயன தொழிற்சாலைகளிலிருந்து பெறப்பட்டு டெல்லி முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இந்த "வெள்ளைப்பொடி" பற்றிய குறிப்புகள் கலவரத்தில் உயிர் தப்பிய பலராலும் விசாரணை ஆணையத்திடம் அளிக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. யாருக்கும் அதனுடைய பெயர் தெரியவில்லை, ஆனால் அது தீப்பிடிக்கும் தன்மை மிக்கதாக இருந்ததாகவே அனைவரும் கூறினர். மண்ணெண்ணெய் விற்பனைக் கடைகள் மண்ணெண்ணெய் இருப்பில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன. சீக்கிய இல்லங்கள் வாக்காளர் பட்டியலில் அடையாளங் கண்டு குறிக்கப்பட்டன. காவல் துறை கலவரத்தைக் கண்டு கொள்ளாமல் இருக்குமாறும், அல்லது கலவரக் கும்பலுக்கு உதவி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. கலவரக் கும்பலை கொண்டு வர ஹரியானாவிலிருந்து டெல்லிக்கு ஒரு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதைப் போல டெல்லி போக்குவரத்து கழகப் பேருந்துகள் கலவரக்காரர்களை கொண்டு வரும் பணியில் ஈடுபடுத்தப் பட்டன" என்கிறார்.

நானாவதி விசாரணைக் குழுவின் அறிக்கையில் வன்முறை பற்றி ஒரு பகுதியில் இவ்வாறு சொல்கிறது, "படுகொலை நன்கு திட்டமிட்டு நடத்தி முடிக்கப்பட்டது." 2007 - ம் ஆண்டு அந்த ஆணையம் அளித்த இறுதி அறிக்கையில் சில ஆளும் பேராயக் கட்சியின் உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள சீக்கியர்களைக் கொல்ல கலவரக்காரர்களை வழிநடத்தியதாக குற்றம் சாட்டியும், அதற்கான ஆதாரங்களை விளக்கியும் உள்ளது.

1984 கலவரத்தைப் பற்றி ஆய்வு நடத்திய நிபுணர்கள் பலரும் கொலைகள் நன்கு திட்டமிடப்பட்டதால் இதைக் கலவரம் என்று குறிப்பிட முடியாது என்று நம்புகின்றனர். கலவரம் பற்றி அவர்கள் கூறுகையில், ஆங்காங்கே இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடிப்பதும், இரு வகுப்பினரின் உயிர், உடமைகளுக்கு சேதம் விளைவதாகும், ஆனால் 1984 -ல் சீக்கியர்கள் மட்டும் கொல்லப்பட்டனர், கொள்ளையடிக்கப்பட்டனர்.

பேராயக் கட்சியின் அரசோ, இந்திரா காந்தியின் படுகொலையினால் ஏற்பட்ட மக்களின் துக்கமும், கோபமும் தன்னிச்சையாகவே வெடித்ததன் விளைவுதான் என்று கூறி வந்தது. அவரது மகனும், வாரிசுமான இராஜிவ் காந்தி, இந்திரா காந்தியின் கொலைக்குப் பின்னர் நவம்பர் 19, 1984 ல் போட் க்ளப்பில் நடந்த தனது முதல் பொதுக் கூட்டத்திலேயே இவ்வாறு நியாயப்படுத்தினார்: "இந்திரா அவர்களின் கொலைக்குப் பின்னர் நாட்டில் சில கலவரங்கள் நடந்தன. மக்கள் மிகுந்த சினத்துடன் இருந்ததை நாம் அறிவோம், சில நாட்களுக்கு இந்தியா குலுங்கியது. ஆனால், பெரிய மரம் விழுகையில், தரை சிறிது அதிர்வது இயற்கைதான்." இவைகளைப் போன்றே படுகொலையை மறைக்க இணைக்கப்பட்ட கருத்து யாதெனில் சீக்கியர்கள் வன்முறையைத் தானாகவே வருவித்துக்கொண்டனர், ஏனெனில் முன்னைய வருடங்களில் சீக்கிய தீவிரவாதிகள் பஞ்சாப்பில் ஹிந்துக்களின் மீது நடத்திய கலவரமே இதற்கு காரணமாகியது என்பதாகும்.

கல்வியாளர் விர்ஜினியா வான் டைக் என்பவரின் டெல்லி கலவரம் குறித்த கட்டுரை கூறுவது கொலைகாரர்கள் அரசினால் ஆணையிடப்படவில்லை, மாறாக "அரசினால் உருவாக்கப்பட்ட படைகளால்" அதற்காகவே வழி நடத்தப்பட்டது. மக்களிடம் இருந்த வகுப்பு ரீதியிலான பிரிவைக் குறிப்பிடும் விர்ஜினியா அங்கே எந்நேரமும் கலவரம் நடப்பதற்கு ஏற்ற அமைப்பாகவே விளங்கியதையும், அரசு அதை முழுமையாக பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார். "படுகொலையைத் கலவரம் நடத்தப்பட்ட வேகத்தைப் பார்க்கும் பொழுது இரண்டு மறுக்க முடியாத முடிவுகள் தெரிகின்றன. முன்கூட்டியே ஏற்படுத்தப்பட்டு, முன்னரே திட்டமிடப்பட்டு, ஏற்கெனவே இருந்த கலவரத்திற்கேற்ற சூழல் இருந்ததும், பயங்கரவாதத்திற்கான நுட்பம் ஏற்கெனவே இருந்தது," என்கிறார். ரங்கநாத் மிஸ்ரா செயற்குழுவின் விசாரணை அறிக்கையும் இதைக் குறிப்பிட்டுள்ள போதிலும் யாரையும் குற்றம் சாட்டவில்லை.

கலவரத்தை ஆய்வு செய்த பெரும்பான்மையான மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுவது 'இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து பரவலாக எழுந்த துயரம், கோபம், முட்டாள்தனத்தினால் கலவரம் நடந்தது என்று அதிகாரிகள் கூறி வந்ததற்கு மாறாக பேராயக் கட்சியின் சில முக்கியமான தலைவர்களால் முன்பாகவே நன்கு திட்டமிடப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டது' என்பதாகும். இன்னும் மேலாக 'சனநாயகத்திற்கான குடிமக்கள் அமைப்பு கூறுகிறது, "திட்டமிட்டு நடத்தப் பட்ட இனப்படுகொலையின் முதன்மையான நோக்கம் பெரும்பான்மையினரிடையே வெறியைத் தூண்டுவது - ஹிந்து ஆதிக்கம் - ஹிந்துக்களின் வாக்குகளை வரும் தேர்தலில் (டிசம்பர் 27,1984. இதில் மொத்தம் 404 இடங்களைப் பெற்று முன்னெப்பொழுதும் இல்லாத வெற்றியைப் பெற்றது) மொத்தமாகப் பெற்று விடுவது". வெட்கமின்றி வெளிப்படையாக நடந்த ஊடக நெறிமுறை மீறிய வன்முறையாகப் பார்க்கப்பட்டது என்னவெனில், அன்றைய ஒரே அலைவரிசையான , அரசு தொலைக்காட்சி தூர்தர்ஷன் - அனைத்திந்திய வானொலி ஆகியவை தொடர்ந்து வெளியிட்ட அறிவிப்பு, பிரதமர் அவரது "சீக்கிய" மெய்க்காப்பாளர்களால் கொல்லப்பட்டார், என்பதாகும்.

பெரும்பான்மைத்துவ அரசியல்

அவசர நிலை பிரகடனத்தின் ஆட்சிக்குப் பின் பேராயக்கட்சியின் பெரும்பான்மைத்துவ அரசியலின் விளைவே வன்முறை என்று பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவசர நிலை பிரகடனத்தின் ஆட்சிக்குப் பின் நடந்த தேர்தலில் ஜனதா கட்சியிடம் மிக மோசமாக தோல்வியடைந்தும், இரண்டாவது முறை இந்திரா காந்தி ஆட்சியமைத்த போதிலும் அதிகமாக வெற்றி பெற முடியவில்லை. இக்கால கட்டத்தில் கட்சியை பலப்படுத்த நடந்த முயற்சியாகக் கொள்ளப்பட்டது. 1984 தேர்தலின் முடிவுகள், குறிப்பாக வட இந்தியாவில் பேராயக் கட்சியின் வெற்றிக்குக் காரணமாக ஹிந்துத்துவ பரிமாணம் இருந்ததை வெளிப்படுத்தின. அதிக எணிக்கையிலான் தொகுதியில் RSS அமைப்பு வெளிப்படையாக ஆதரித்தது மிகப் பெரிய அத்தாட்சியாக இருந்தது. இந்நிகழ்வுகள் சீக்கியர் இனப்படுகொலையின் மூல காரணமாக ஹிந்துத்துவ அரசியல் விதைக்கப் பட்டிருந்தது என்பதை எடுத்துக்காட்டியது.

பேராயக்கட்சி இராஜிவ் காந்தியின் ஆட்சியில் இதைப் போன்ற உத்தியைக் கொண்டே அரசியலை முன்னெடுத்து, 1986 - ல் ஹிந்துக்களின் வழிபாட்டுக்காக பாபர் மசூதியின் பூட்டைத் திறந்து விட்டது. இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், ஜன்சட்டா ஆகிய இதழ்கள அன்றைய காலகட்டத்தில் RSS தனது முழு ஆதரவையும் அளித்தது என்று தெரிவித்திருந்தன. 1984 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மொத்தமாக ஓரம் கட்டியதால் 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது பா.ஜ.க. இன்னும் மற்ற சங் பரிவார் அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத் போன்றவை அயோத்தி விவகாரத்தை முன்னிறுத்தியே உக்கிரமான ஹிந்துத்துவா கொள்கை பரப்புரையை பேராயக் கட்சிக்கு சாதகமாக மேற்கொண்டார்கள். இதற்கிடையே கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்களின் நிலை பரிதாபமான நிலையில், அமைதியானார்கள்.

தி டைம்ஸ் ஆஃப் இண்டியா இதழின் தொகுப்பாளரும், "ஒரு மரம் டெல்லியை குலுக்கிய போது (When a Tree Shook Delhi)" என்ற கலவர நிகழ்வினை விளக்கும் நூலின் துணை ஆசிரியருமான மனோஜ் மிட்டாவும், அரசியல் நலன்களுக்காக வன்முறை தூண்டப்பட்டது என்றே நம்புகிறார். இராஜிவ் காந்தி பிரதமரான பின் சீக்கியர் படுகொலையைப் பற்றி பேசாமல், இந்திரா காந்தியின் கொலையை மட்டும் கண்டித்தார். உண்மையில், அவர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் அலட்சியம் காட்டினார். பாராளுமன்றத்தில் இந்திரா காந்தி கொலை, போபால் நச்சுவாயு கசிவினால் இறந்தவர்கள் ஆகியவற்றுக்காக கண்டன உரை வாசிக்கப் பட்டது, தலைநகரில் கலவரத்தில் இறந்தவர்களுக்கு எதுவும் செய்யப் படவில்லை. தேர்தல் சுற்றுப்பயணத்தில் கூட அவர் இந்திரா வகித்த அங்கம் பற்றியும், அவரது மரணம் குறித்தும் பேசி அனுதாபத்தைப் பெற்று, தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்தார். பேராயக் கட்சியோ பஞ்சாப்பில் நிலவிய தீவிரவாதத்தைப் பற்றிப் பேசியது, தேசிய ஒருமைப்பாட்டின் ஒரே காவலனாகத் தன்னை முன்னிறுத்தியது. அந்நாட்களில் ஊடகங்களும் குறிப்பிட்ட அளவில் அரசுக்குக் கீழ்படிந்து சிலவற்றைத் தணிக்கை செய்தன," என்கிறார் மனோஜ் மிட்டா.


அரசின் அணுகுமுறை, 1985 மார்ச் வரை சில முதன்மையான மாநிலங்கள் தேர்தலை நடத்தும் வரையிலும் இரகசியமாகவே இருந்தது. அதுவரையிலும் வன்முறைக்கு எதிராக எந்தவொரு கண்டனமும் தெரிவிக்கப் படவில்லை. இராஜிவ் - லோங்கோவால்(ஹர்சந்த் சிங் லோங்கோவால் அகாலி தல் கட்சியின் தலைவர், 1985 -ல் காலிஸ்தான் இயக்கத்துக்கும், இந்திய அரசுக்கும் சமாதானம் செய்ய முயன்றவர்) ஒப்பந்தம் ஏற்பட்டதன் பின் லோங்கோவாலின் கோரிக்கையான விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கேற்ப இராஜிவ் ஒத்துக் கொண்டதால் ரங்கநாத் மிஸ்ரா செயற்குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையும் பயனற்றதாகவே இருந்ததன. காரணம் முழு விசாரணையுமே நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டதால் அதிகாரிகளும், பாதிக்கப்பட்டவர்களும் உண்மையைக் கூற இயலவில்லை. இந்த நடவடிக்கைகள்(ஒப்பந்தம், விசாரணக் குழு) ஏற்படுத்திய நம்பகத்தன்மையின் விளைவால் 1984 தேர்தலில் குற்றம் சுமத்தப்பட்ட தலைவர்கள் பெரும் வெற்றிகளைப் பெற்றார்கள், முதன்மைக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட ஹச்.கே.எல்.பகத் 5 இலட்சத்திற்கும் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மூன்று ஆணையங்கள்

இனப்படுகொலைகளை விசாரிக்க மூன்று ஆணையங்களும், ஏழு விசாரணைக்குழுக்களும் அமைக்கப்பட்டும், கலவரத்தின் மூலாதாரமாக இருந்தவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்திய நீதி அமைப்பு தன்னிச்சையாகவோ, அல்லது அரசு, பேராயக் கட்சியின் அழுத்தம் காரணமாகவோ அவர்களை தப்பவிட்டது. தொடர்ந்த நீதிமன்ற விசாரணைகளின் விளைவாக 13 பேர் மட்டும் உண்மைக்குற்றவாளிகளுக்கு பதிலாக தண்டிக்கப்பட்டனர். முதன்மைக் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவுமில்லை. 2003 ம் ஆண்டுக்குப் பிறகு மையப் புலனாய்வுத் துறை சஜன் குமார் மீதான 4 வழக்குகளை ஆய்ந்தது. இப்போதோ வழக்குப் பதிவு செய்ய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகக் கூறுகிறது. அவர்கள் 153A பிரிவின் கீழ் இதை இணைத்திருந்தால் அரசின் ஒப்புதலைப் பெற்றிருக்க இயலும். [302 ம் பிரிவில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்ய மையப் புலனாய்வுத்துறைக்கு அரசின் ஒப்புதல் தேவையில்லை] அரசாங்கத்திடம் புலனாய்வுத்துறைக்கு இவ்வழக்கை ஒப்படைத்த பின்னர் 3 வருடங்களாக அரசே நடத்தி வருகிறது. இதற்கிடையில் இவ்வழக்கின் 11 சாட்சியங்கள் இறந்து விட்டார்கள்," என்று ஆலோசகர் பூல்கா ஃப்ரண்ட் லைனிடம் கூறினார்.

கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உள்ளத்தில் காயங்கள் இன்னும் மோசமாகிக் கொண்டே போகின்றது. "நீதி கிடைக்காதது மட்டுமல்ல, நாங்கள் மற்றவர்களின் தன்னலத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதாகவே உணர்கிறோம்," என்கிறார் ஒரு கும்பலின் வன்முறையில் தந்தையை இழந்த நிர்ப்ரீத் கௌர். ஆயத்த ஆடை வணிகம் செய்து வரும் இவர் இன்னும் வழக்கை நடத்துகிறார். அவரது தந்தை கொல்லப்பட்ட பின் காலிஸ்தான் இயக்கத்தில் இணைந்த இவர், ஒரு காலிஸ்தான் போராளியை மணந்தாலும் 12 நாட்களிலேயே விதவையானார். அவரது கணவர் டெல்லி காவல்துறையுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார். நிர்ப்ரீத் கௌரும், அவரது மகனும் காலிஸ்தானுடன் இருந்த தொடர்பு காரணமாக 8 வருடங்கள் சிறையிலிருந்தனர், அதிலிருந்து இயல்பான வாழ்க்கையைத் தொடர கடினமாக உள்ளது.

பப்பி கௌர் தனது குடும்பத்தின் 10 பேரை படுகொலைகளின் விளைவால் இழந்தார். அவரது தாய்க்கு அரசு பணி கிடைக்கும் வரையில் இருவரும் வீட்டு வேலை செய்தனர். அவர்கள் கொடூரமான அனுபவத்திலிருந்து வெளிவர நினைத்தாலும், தலைநகரெங்கும் நிலவிய குருதியால் பூசப்பட்ட நாட்களை மறக்க இயலவில்லை என்கின்றனர். அவர்களைப் பொருத்தவரையில் ஒரு தலைமுறை குழந்தைகள் தங்களின் தந்தையரை இழந்து போதை மருந்துகளால் தங்கள் வாழ்க்கையை இழந்தனர்.

அனைத்திற்கும் மேலாக, நானாவதி விசாரணை ஆணையத்திடம் இதழாளர் குஷ்வந்த் சிங் கூறிய வார்த்தைகள் பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலையை விளக்கும்." நான் என்னுடைய நாட்டில் அகதியைப் போல் உணர்ந்தேன். உண்மையில், ஜெர்மனியின் யூதனாக உணர்ந்தேன்."

1984 நிகழ்வுகளுக்காக பிரதமர் வெளிப்படையாக சீக்கிய சமூகத்திடம் மன்னிப்புக் கேட்டதையும், பரவலான எதிர்ப்பைத் தொடர்ந்து ஜக்திஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் ஆகியோர் தேர்தலில் போட்டியிட முடியாமல் கைவிட்டதையும், இந்நடவடிக்கைகளைக் காட்டி சீக்கிய சமூகத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், வன்முறைக் குற்றவாளிகளை வழக்கை சந்திப்பதிலிருந்து பாதுகாக்கவும் செய்யப்படுகிற நாடகமாகவே பாதிக்கப்பட்டவர்கள் பார்க்கின்றனர்.

- சிவக்குமார்

நன்றி : ஃப்ரண்ட் லைன், டிசம்பர் 4, 2009

http://www.frontlineonnet.com/fl2624/stories/20091204262410000.htm