Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகள் அவர்கள் 15-07-1876 அன்று நாகையில் சொக்கநாதப் பிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். நாகையில் கிறித்துவப் பள்ளியில் ஆங்கில வழியில் பயின்ற அவர், தமிழ்மொழியை கற்கும் ஆவலில் நாகயில் புத்தகக் கடை நடத்திவந்த தமிழ் அறிஞர் வே. நாராயணசாமி பிள்ளை அவர்களிடம் முறையாகத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.

maraimalai periyarஅடிகள் தமது குழந்தைப் பருவம் முதலே ஆழ்ந்த சமயப் பற்றும் இறைநாட்டமும் உடையவர். அவருடைய பதினாறாவது வயதில் நாகையில் இந்து சமயப் பரப்புரைக்காக இந்து மதாபிமான சங்கம் எனும் அமைப்பைத் தோற்றுவித்து இந்து சமயம் பற்றிய சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார் (கு. நம்பி ஆருரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்கம் 443).

சைவ சித்தாந்தச் சண்டமாருதம் சென்னைச் சூளை சோமசுந்தரநாயகர் அடிக்கடி நாகைக்கு வருகைத் தந்து சைவ சித்தாந்தம் குறித்து சொற்பொழிவுகளை நிகழ்த்துவார். அவரது சொற்பொழிவுகளைக் கவனத்தோடு கேட்டுவந்த அடிகள் சைவ சித்தாந்தத்தின் மீது ஈடுபாடு கொண்டார். அதுவரை மாயாவாத வேதாந்தமான அத்வைத தத்துவத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார் (மே.க.நூல்.444).

அடிகள் கிறித்துவக் கல்லூரிப் பணியில் அமர்த்தப் பெற்றதக்குச் சோமசுந்தரநாயகரின் தொடர்பே காரணமாகும். இச்சமயத்தில் அடிகள் சோமசுந்தர நாயகரிடத்தில் சைவ சித்தாந்தம் பற்றிய சிறப்புப் பாடங்களையும் கற்றறிந்தார் (மே.க.நூல், பக்.447).

சென்னையில் மாணவர்களுக்கு அடிகள் கற்பிக்கத் தொடங்கிய காலத்திலேயே ஓர் இதழைத் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. அந்த இதழின் வழி தமிழ்மொழியின் மறுமலர்ச்சி, இலக்கியம், மதம் ஆகியன பற்றி வெளியிடலாம் எனக் கருதினார். அடிகளின் சொந்த மாத இதழ் ‘ஞான சாகரம்’ 1902ஆம் ஆண்டு வெளிவந்தது. அவர் வெற்றிகரமாக அவ்விதழை நாற்பது ஆண்டுகள் நடத்தினார். பெரும்பாலும் அவரது எல்லா நூல்களும் இவ்விதழில்தான் தொடராக எழுதப்பட்டன (மே.க.நூல் பக்.448).

அடிகள் தென்னார்க்காடு மாவட்டம், கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் 1905ஆம் ஆண்டு ஞானியாரடிகள் முன்னிலையில் ‘சைவ சித்தாந்த மகா சமாஜத்தை’ தோற்றுவித்தார் (மே.க.நூல் பக்.450).

மறைமலை அடிகள் 1916இல் பார்ப்பனரல்லாதார் இயக்கமான தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்ட அதே ஆண்டில் தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கினார். ஆனாலும் 1920இல் தான் சமஸ்கிருத சொற்களை தன்னுடைய இதழில் நீக்கி தமிழ்சொற்களை அறிமுகப்படுத்தியதாக ஆய்வாளர் கு. நம்பி ஆருரன் தெரிவிக்கிறார் (மே.க.நூல் பக்கம் 485).

தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்தமை குறித்து அடிகள் தமிழ்மொழியின் இலக்கிய வரலாற்றை ஆறு காலகட்டங்களாகப் பிரித்துக் கூறுகிறார்.

1. தூய தனித்தமிழ் இயங்கிய கால கட்டம் (கி.பி.1-ஆம் நூற்றாண்டு வரை).

2. புத்த சமயக் காலம் (கி.பி.1 முதல் 4ஆம் நூற்றாண்டு வரை).

3. சமண சமயக் காலம் (கி.பி.4 முதல் 7ஆம் நூற்றாண்டு வரை).

4. சைவ, வைணவ சமயக் காலக்கட்டம் (கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை).

5. பார்ப்பனீயக் காலக்கட்டம் (கி.பி.14 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை).

6. ஆங்கில ஆட்சியினர் காலக்கட்டம் (கி.பி.18ஆம் நூற்றாண்டு முதல் அதற்கு பிந்தைய காலம் வரை) (மே.க.நூல் பக்கம் 477).

அடிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள துய தனித்தமிழ் இயங்கிய சங்க காலத்திலும் தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்து உள்ளன. சமணர், பௌத்தர், வைணவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சமஸ்கிருதச் சொற்களை அடிகள் வேறுபடுத்திக் காட்டினார். தமிழில் உருது, ஆங்கிலச் சொற்களின் கலப்பு பின்னாளில் ஏற்பட்டவை ஆகும். வைணவர்கள் மணிப்பிரவாள நடையை வளப்படுத்தியதற்கு அடிகள் அவர்களைக் குற்றம் சாட்டினார்.

வைணவர்களும் மாயாவாதக் கொள்கையாளர்களும் தாங்களே சமஸ்கிருதத்தின் உண்மையான காவலர்கள் என எண்ணிக் கொண்டார்கள். பார்ப்பனர்கள் சமஸ்கிருதச் சொற்களை அதிகம் பயன்படுத்துவது சமூகத்தில் அவர்களுக்குள்ள உயரிய நிலையை எதிரொலிப்பதாகக் கருதினார்கள். தமிழைப் பயன்படுத்துவது தாழ்நிலை என்று கூறாமல் கூறினார்கள்.

ஆகையினாலே அவர்கள் தமிழில் எழுதுவதில் சற்றொப்ப 75 விழுக்காடு சமஸ்கிருத சொற்கள் கலந்து இருந்தன (மே.க. நூல் பக்கம் 478).

தனித்தமிழ் இயக்கத்தினுடைய மய்யக் கொள்கையே பிறமொழிகளிலிருந்து தமிழில் சொற்கள் கலந்து தமிழ் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதை தவிர்த்தலாகும்.

பல்வேறு காலகட்டங்களில் மறைமலை அடிகளின் நூல்களில் உள்ள சமஸ்கிருதச் சொற்களின் விழுக்காட்டினைக் காட்டும் அட்டவணை :

ஆண்டு            பொதுக்            இலக்கியக்   மதம் சார்ந்த               விழுக்காடு

                கட்டுரைகள்                கட்டுரைகள்       கட்டுரைகள்

1902       21%     7%       22%     16%

1911       28%     10%     16%     15%

1921       9%      3%       8%       7%

1931       6%       5%       5%       5%

1941       10%     9%       9%       9%      

(மே.க.நூல் பக்.486).

1920களில் அடிகளின் பொதுவாக அமைந்த கட்டுரைகளில் சமஸ்கிருதச் சொற்களின் பயன்பாட்டு விழுக்காடு பெருமளவில் சரிந்தது. பார்ப்பனரல்லாதார் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு படித்த தமிழரிடையே ஏற்பட்ட பொதுவான மனமாற்றமே இதற்குக் காரணம் எனலாம் (மே.க.நூல் பக்.487-88).

தமிழ்மொழி மட்டுமே இந்தியா முழுமைக்குமான பொது மொழியாகத் தெரிவு செய்வதற்குத் தகுதியும், உரிமையும் கொண்டது என்று அடிகள் கருதினார் (மே.க.நூல் பக்.500).

ஆனாலும் தமிழ் போதுமான வளர்ச்சியை அடையவில்லை என்று கருதினார். இந்தியாவின் பொது மொழியாக எல்லாத் தகுதிகளும் இருந்தும் இந்த நிலையிலுள்ள தமிழை எப்படி நாம் ஆயத்தப்படுத்துவது என்று வருந்தினார். இந்தியையும், தமிழையும் இந்தியாவின் பொது மொழியாக ஏற்பதை அடிகள் மறுத்துரைத்தார்.

தற்போதைய நிலையில் ஆங்கிலமே இந்தியாவின் பொது மொழியாக இருப்பதற்குத் தகுதியானது என்கிற முடிவுக்கு வந்தார். இந்தியைப் போன்றே ஆங்கிலமும் அந்நிய மொழியே. ஆனால் பல தகுதியான காரணங்களுக்காக ஆங்கிலத்தைப் பொது மொழியாக்க வேண்டும் என அடிகள் விரும்பினார். (மே.க. நூல் பக்.502).

மறைமலையடிகள் 1902 முதல் 1929 வரை மும்மொழிக் கொள்கையை ஆதரித்தார். பல்கலைக்கழக பாடங்களில் தாய்மொழி சமஸ்கிருதம், ஆங்கிலம் மூன்று மொழிகளும் கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று பலமாக ஆதரித்தார் (மே.க.நூல் பக்.503).

சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டு தந்தை பெரியார் 1926இல் குடிஅரசு ஏட்டில் இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை எதிர்த்த பிறகே மறைமலை அடிகள் தன் மும்மொழிக் கொள்கைகளை மாற்றிக் கொண்டார்.

1929க்குப் பிறகு அவர் இறுதிக்காலம் வரையில் ஆங்கிலம், தாய்மொழி என்ற இருமொழிக் கொள்கையை ஆதரித்து வந்தார் (மே.க.நூல் பக்.503).

தமிழ்நாட்டு கோவில்களில் வழிபாடு செய்வதற்கு கூட தமிழில் கட்டாயம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தவில்லை. சமஸ்கிருதத்தில் வழிபாடு நடத்த கோருவோருக்கு அம்மொழியில் நடத்த வேண்டும் என்றார்.

சுயமரியாதை இயக்கம் வடமொழியை சமஸ்கிருதத்தை எதிர்த்தது போல் மறைமலையடிகள் எதிர்க்கவில்லை. அதற்குக் காரணம் அவருடைய சமய உணர்வேயாகும். கோவில்களில் வடமொழியில் ஓதுவதை அவர் தடுக்க விரும்பவில்லை.

“நம் அடிகள், சிறப்பு வகையில் சைவ சமயத் துறவி; பொது வகையில் இந்து சமயி என்று தன்னைப் பெருமையுடன் கூறிக்கொள்பவர். திருக்கோவில்கள், தெய்வத் திருவுருவச் சிலைகள், சமய அடையாளங்கள், கோவில் விழாக்கள், திருநாட்கள், அறிவுக்கொத்த சமய சடங்குகள், இந்து சமயத்தின் பொதுக் கருத்துகளான மறுபிறப்பு, இருவினை, கொல்லாமை, மோட்சம், நரகம் இவற்றில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர். கோயில்களில் வழிபாடு செய்வோர் ஆதிசைவ பார்ப்பனரல்லாதவராதலின், அவர்களை அப்பணியிலிருந்து நீக்கல் வேண்டாம் என்ற கருத்துடையவர், கோயில் சடங்குகளும், வழிபாடுகளும் தமிழில் நடக்க வேண்டும் என்பவர். ஆனால், வடமொழியில் நடத்துவோரைத் தடுத்தல் கூடாது எனக் கருதுபவர். இந்து சமயம் என்ற பொதுப்பான்மையில் வடமொழியும் மறுக்கற்பாலதன்று என்னும் எண்ணமுடையவர். இந்தியா, இந்தியர், இந்துக்கள் என்ற ஒருமைப்பாட்டில் - சிவபெருமானைப் போற்றுகின்றதென்ற மதிப்பில் வடமொழியையும் ஏற்றுக் கொண்டவர்” (மறை திருநாவுக்கரசு, தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் வரலாறு, பக்.545).

வடஇந்தியா சென்று திரும்பிய மறைமலையடிகளுக்கு 20-7-1913 அன்று வரவேற்புக் கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. அங்கு உரையாற்றிய மறைமலையடிகள் “இந்து சமய உணர்ச்சியால் இந்தியா ஒரு நாடாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இந்து சமயமே நம் உயிர். நம் சைவ வைணவ சமயங்கள் அவற்றின் உணர்ச்சிகள் அங்கு வெள்ளமாகப் பரவிக் கிடக்கின்றன. காசுமீரம் முதல் கன்னியாகுமரி வரையில் இந்தியா ஒரே நாடு. இதை சைவ, வைணவ சமயிகளும், தமிழர்களும் மறக்கலாகாது. வடநாட்டில் நம் சிவ வழிபாடு மாண்புடன் போற்றப்படுவது நமக்குப் பெருமையும், வலிமையும் தருவதாகும். நம் சமயங்கட்குப் பிற நாட்டவரால் தமிழ்நாட்டில் ஊறுநேர்ந்தால் வடவரும் உயிர்கொடுத்து போராடி நம் சமயங்களையும் கோயில்களையும் பாதுகாப்பர். சைவம் என்று நாம் கருதுகையில் தமிழ்நாட்டை மட்டும் கருதலாகாது; இந்தியா முழுவதையுமே கருத வேண்டும்” (மே.க. நூல் பக்.206).

அடிகள் தம் இறுதிக்காலம் வரையில் தாம் எழுதிய நூல்கள் அனைத்திலும் ‘நம் இந்திய நாடு’, ‘நம் இந்திய மக்கள்’, ‘நம் இந்து மக்கள்’, ‘நம் இந்து சமயம்’ என்றே நம் நாட்டின் பொதுமையை பற்றி எழுதுமிடங்களில் எழுதியிருக்கிறார். 16-9-1943 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையில் அவர் உரையாற்றிய போது எழுத்து வழியாக ஒருவர் திராவிட நாடு பற்றி தங்கள் கருத்து யாது? என ஒரு கேள்வி கேட்டார்.

அதற்கு அடிகள் விடையளிக்கையில், “இந்தியா முழுவதுமே திராவிட நாடு தான்” என்று கூறினார். இந்தியை எதிர்த்துத் தமிழ் முழக்கஞ் செய்த அடிகள் சிறப்பு முறையில் தமிழ்நாடு; தமிழ் மக்கள் என்றார்களேயன்றி இந்திய ஒருமைப்பாட்டை அவர் தம் பேச்சிலோ எழுத்திலோ என்றும் எங்கும் எதிர்த்ததில்லை (மே.க.நூல் பக்.686-87) என்று அவருடைய மகன் மறை திருநாவுக்கரசு எழுதிய தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் என்ற நூலிலே குறித்துள்ளார்.

அடிகளார், இன்றைய தமிழர்களை ஆரியர் என்றும் தமிழர் என்றும் பிரித்துப் பார்த்து வேறுபடுத்த இயலாது என்று எண்ணினார். அதேபோல மொழி அடிப்படையில் மக்களை வேறுபடுத்தி அடையாளங் காண்பதும் நடைமுறைக்கு ஒத்துவராது என்று அவர் கருதினார். மேலும் ஆரியர்கள் வடமேற்கு ஆசியா பகுதியிலிருந்து இந்தியாவுக்கு வந்து, இங்கு வாழ்ந்து வந்த ஆதிக்குடிகளுடன் கலந்துவிட்டார்கள் என்பதை அப்படியே முழுமையாக ஒப்புக் கொண்டாலுங்கூட, பல நூற்றாண்டுகளாக அவர்களிடையே ஏற்பட்ட இரத்தக் கலப்பினால் திராவிட - ஆரிய வேறுபாட்டை அடையாளங் காண்பது இயலாதது என்றும் அவர் நினைத்தார் (கு. நம்பி ஆருரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.527).

இந்தச் சமூக அமைப்பில் கட்டுப்பாடற்ற இனக்கலப்பு ஏற்பட்டுவிட்ட பின்னணியில், மனித இயல் ஆய்வு முடிவுகளுக்கு மாறாக ஐயம் திரிபுஅற ஒருவரை ‘ஆரியன்’ என்று குறிப்பிடுவது உண்மையும் நியாயமும் ஆகுமா? எனவே இந்தியாவின் வடமேற்கு மூலையில் தனித்து ஒதுங்கி வாழ்கிற ஒரு சில மக்களைத் தவிர, மற்ற அனைவரின் இரத்த நாளங்களிலும் ஓடுவது, நினைவுக்கெட்டாத காலம் முதல் இன்றுவரை திராவிட இரத்தமே என்ற திடமான முடிவுக்கு வந்தார் அடிகளார் (மே.க.நூல் பக்.530).

1926ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க முயற்சி செய்யப்பட்டது. பெரியார் அதை ஆதரித்தார். பார்ப்பனரல்லா தமிழறிஞர்கள் அதன் ஆட்சி மன்ற குழுவில் இடம்பெற வேண்டும் என்றும் குடிஅரசு ஏட்டில் எழுதினார்.

மறைமலையடிகள் தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் தேவையில்லை என்று 14.8.1926இல் ‘மெட்ராஸ் மெயில்’ ஆங்கில ஏட்டிற்கு நீண்ட கடிதம் எழுதினார். 03.09.1926இல் அக்கடிதம் வெளியிடப்பட்டது.

தமிழுக்காக ஒரு பல்கலைக்கழகம் தேவையில்லை :

தற்கால ஆய்வு நெறிகளுக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் ஏற்ப, தமிழ்மொழியின் மூலக்கூறுகளைச் செழுமைப்படுத்தி மீண்டும் ஆர்வத்துடன் தமிழ் கற்கச் செய்யும் முயற்சி பாராட்டுக்குரியதுதான். ஊக்கந்தந்து உற்சாகப்படுத்த வேண்டியதுதான். ஆனால் இன்றைய நிலையில் தமிழுக்கென தனிப் பல்கலைக்கழகம் அமைப்பதால் நல்ல பலன் விளையும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இதனை எல்லாக் கோணங்களிலிருந்தும் அலசி ஆராய்ந்தேன். இறுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்போது அமைக்க வேண்டாம் என்ற முடிவுக்கே வர முடிநத்து.

....எக்காரணம் கொண்டும் தமிழோடு ஆங்கிலத்தையும் இணைத்துக் கற்பிப்பதைத் தவிர்த்துவிடாதீர்கள்...

தமிழ் கற்றலில் இருந்து ஆங்கிலம் கற்றலைப் பிரித்துவிடாதீர்கள் என்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மக்கள் வாழ்க்கைக்கு அளப்பரிய வகைகளில் பயன்படுகிற எல்லா அறிவியல் செய்திகளும் ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டிருக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழகமே எளிதாக மிகத் திறமையுடன் செய்யக்கூடிய நிலையில் தமிழுக்கென ஒரு தனிப் பல்கலைக்கழகம் தேவையற்றது. தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்று தங்கள் பொன்னான நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்கிக் கொண்டிருக்கும் பெருமக்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நடைமுறைகளை மாற்றி அமைத்தாலே போதும் என்றார் (மே.க.நூல் பக்.569-574).

இதே கருத்தை பெரியார் சொல்லி இருந்தால், பெரியார் கன்னடியர் தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைவதை பொறாமைக் கொண்டு எதிர்க்கிறார் என்று பல தமிழ்த் தேசியவாதிகள் எழுதி இருப்பார்கள். மறைமலையடிகள் சொல்லியதால் வாய்த் திறக்காமல் உள்ளனர்.

மறைமலையடிகள் தம் பெயரை மாற்றிக் கொண்டார் என்பதும் உண்மையல்ல. மற்றவர்கள் தான் அவரை மறைமலையடிகள் என்று அழைத்து வந்தனர். ஆனால் அவர் தம் பெயரை கடைசி வரை சாமி வேதாச்சலம் என்ற எழுதிவந்தார். கையொப்பமும் சாமி வேதாச்சலம் என்றே போட்டு வந்தார். மறைமலையடிகள் 1935-38-இல் வெளியிட்டு வந்த மாதமிருமுறை ஆங்கில ஏட்டின் (“The Ocean of Wisdom”) ஆசிரியர் மற்றும் வெளியிடுபவர் சாமி வேதாச்சலம் என்றே குறிப்பிட்டுள்ளார்.

1948-இல் பன்மொழிப் புலவர் க. அப்பா துரையார் எழுதிய இந்தியாவின் மொழிச் சிக்கல்கள் என்ற நூலுக்கு அணிந்துரை வழங்கிய மறைமலையடிகள் சாமி வேதாச்சலம் என்றே கையெழுத்திட்டுள்ளார் (மே.க. நூல் பக்.516).

அவர் நடத்திய ஞானசாகரம் ஏடு 1902 முதல் 1942 வரையில் வெளிவந்தது. 1930க்குப் பிறகு அறிவுக்கடல் என்பது 12 புள்ளி எழுத்திலும் ஞானசாகரம் என்பது 24 புள்ளி எழுத்திலும் மறைமலையடிகள் என்பது 12 புள்ளி எழுத்திலும் ஸ்ரீலஸ்ரீ சாமி வேதாச்சலம் என்பது 24 புள்ளி எழுத்திலும் அவரே வெளியிட்டுள்ளார்.

மறைமலையடிகள் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களிலும் ஆங்கிலத்தில் சாமி வேதாச்சலம் என்றே குறிப்பிட்டள்ளார் (மே.க.நூல் பக்.485).

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையும், மாபெரும் தமிழ் அறிஞருமான மறைமலையடிகள் மிகச் சிறந்த மொழியில் அறிஞர் ஆவார். அவருடைய இறைப்பற்று காரணமாக, தன்னை இந்து சைவன் என்றே கூறிக்கொண்டவர். இந்து, இந்தியா என்பதை ஏற்றுக் கொண்டவர். சில தமிழ்த் தேசியவாதிகள் மறைமலையடிகள் தான் முதன்முதலில் தமிழ்நாடு கோரினார்; அதைப் பார்த்து பெரியார் காப்பியடித்தார் என்று எழுதுவது வரலாற்றுப் பிழையாகும்.

பெரியாரை வெறுக்கும் சில தமிழ்த் தேசியவாதிகள் மறைமலையடிகளை தமிழ்த் தேசியத் தலைவராக காட்ட முயல்வதும், அறியாமையே ஆகும். 1938 முதல் தான் மறையும் வரை இந்தியக் கட்டமைப்பை ஏற்க மறுத்த பெரியாரை ஏற்க மறுப்பதும், இந்தியக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அரசியல் பேசவோ எழுதவோ (இந்தி எதிர்ப்பை தவிர) விரும்பாத துறவறம் பூண்ட மறைமலையடிகள் தான் தமிழ்த் தேசியத்தின் வித்து என்பதும் ஏற்புடையதன்று.

- வாலசா வல்லவன்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Ravi 2016-01-20 14:39
Good thought.
Report to administrator
0 #2 ulaganathan.maa 2016-03-10 20:06
மறைமலையடிகள் தானே பெயர் மாற்றம் செய்து கொண்டார் என்று தான் அறிந்திருக்கிறோ ம்.ஆனால்,அவர் கடைசி வரை வேதாச்சலமாகவே வாழ்ந்து சென்றார் என்ற உண்மையை உங்கள் கட்டுரை தான் தெளிவாக்குகிறது .
"தம் தமிழ் நடை பற்றி தாமே சீர்தூக்கிப் பார்த்ததை பின்வருமாறு குறிப்பிடுகிறார ்."ஏகினான் என்பதை போயினான் என்றும்.வம்மின் என்பதை வாருங்கள் என்றும் எழுதக்கற்றுக்கொ ண்டேன் கற்றவர் கல்லாதவர் ஆகியவருக்கும் புரியவேண்டுமென் று அப்படி எழுதினேன்"(15.5 .49-ல்சைதைச் சொற்பொழிவு.)
Report to administrator
0 #3 நா.வீரபாண்டியன் 2016-11-14 10:50
நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட வரலாற்று செய்திகளே முன்னுக்குப்பின ் முரணாக உள்ளன. மறைமலையார் பற்றிய உயர்வு நவிற்சி தேவையற்ற ஒன்றெனத்தோன்றுக ிறது.
Report to administrator

Add comment


Security code
Refresh