கிரீஸ் நாட்டில் உள்ள மாரத்தான் என்ற இடத்திலிருந்து தொடங்கியதால் இந்த ஓட்டத்திற்கு இப்பெயர் வந்தது. மாரத்தானின் தொடக்க வரலாறு சுவாரசியமானது. கி.மு.490ல் இது தொடங்கியது. பெர்சிய சக்ரவர்த்தி டேரியசின் படையெடுப்பைத் தோற்கடிக்க, ராணுவ உதவியை வேண்டி, 48 மணி நேரம் இடைவிடாது, ஏதென்ஸ் நகரிலிருந்து ஸ்பார்ட்டா நகருக்கு - மூச்சுப் பிடிக்க ஓரே ஓட்டமாக ஓடினான் - பிடிபிடிஸ் என்ற கிரேக்க வீரன். காடு, மலை, நதியெல்லாம் கடந்து ஓடினான் இவன்.

மாரத்தான் என்ற இடத்தில் பின்பு டேரியஸை எதிர்த்து சண்டையும் போட்டு, மீண்டும் ஏதென்சுக்கே ஓடினான் - வெற்றிச் செய்தியைக் கூற. இது 24 மைல் தூரம். ஓட்டமாக ஓடி, “மகிழ்ச்சியான செய்தி, தோழர்களே! நாம் வென்றோம்!” என்று கூறி, மயங்கி விழுந்து, உயிர் துறந்தான். அவனது நினைவாகத்தான் மாரத்தான் ஓட்டம் நடைபெற ஆரம்பித்தது.

இப்போதைய ஒலிம்பிக்ஸ் எப்போது தொடங்கியது தெரியுமா? கி.பி.1896ல். கிரீஸ் நாட்டு ஏதென்சில், முதல் முதலாக தொடங்கியது இது. அப்போது மாரத்தான் ஓட்டம் ஓடிய பிடிபிடிஸின் நினைவாக மாரத்தான் ஓட்டமொன்று நடத்த ஏற்பாடாயிற்று. லூயிஸ் என்ற கிரேக்க விவசாயிதான் இதை ஓடி பரிசு பெற்றார். கிரேக்கர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பெண்கள் அவரது காலடியில் தமது நகைகளை வீசி எறிந்தார்கள். ஒரு ஓட்டல்காரர் ஒரு வருட காலத்துக்கு இலவச உணவை அவனுக்கு அளிக்க முன்வந்தார். ஒரு சிறுவன் அவனது காலணிகளுக்கு இலவசமாக ஆயுள் முழுதும் பாலிஷ் போட முன் வந்தான். ஒலிம்பிக் மாரத்தானின் தூரம் தற்போது 26 மைல்கள், 385 அடிகள்!

(ஆர்.எஸ்.ராவ் எழுதிய ‘உங்களுக்குத் தெரியுமா?’ நூலிலிருந்து)