தமிழ் சினிமாவின் தலைகீழ் வீழ்ச்சி

ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே அதுகுறித்த கிசுகிசுப்புகளும் வியாபாரப் படிமங்களும், வரலாறுகளும், முற்போக்குக் கருத்துகளும் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்டு விதவிதமான பாணிகளில் ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் கொண்டே இருக்கும். ‘நான் கடவுள்’ படம் பற்றிய ‘உலகத்தரமான’ செய்திகளும் ஓயாமல் வந்து கொண்டேதானிருந்தன.

படம் வெளியானதும் எளிய வாசக மன நிலையுடனும், உத்வேகத்துடனும் ஆர்வமாய் படத்தை எதிர் கொண்டேன். பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள், அற்புதமான பின்னணி இசை, ஒரு பாத்திரமாகவே மாறியிருக்கும் ஒளிப்பதிவு எல்லாவற்றையும் மீறி படத்தின் அடிநாதமாக இயங்கும் ஒரு குரல் இந்துத்துவாவின் குரலாக ஒலித்துக் கொண்டேயிருந்ததைக் கண்டு நான் முதலில் பெரும் வியப்படைந்தேன்.

Naan Kadavul இதற்குக் கதை கொடுத்து வசனம் எழுதிய ஜெயமோகன், (வெறும் வசனம் மட்டுமல்ல கதையும் இவருடையதுதான். இது குறித்து விரிவாக பின்னர்...) ஒரு இந்துத்துவா ஆசாமி என்று பல்வேறு விமர்சனங்கள் நவீன தமிழ் இலக்கிய தளத்தையே ஒரு காலத்தில் நாறடித்திருக்கின்றன. இப்பொழுது ‘ஜெயமோகன் ஒரு இந்துத்துவா ஆசாமி’ என்றால் நம்மை அறுதப் பழசாகப் பார்ப்பார்கள். அது ஒரு Cliche விமர்சனம். சரி. அவர் அதிலிருந்தெல்லாம் விலகி சீரிய படைப்பாளியாக, தமிழ் கூறு நல்லுலகை நல்வழிப்படுத்தும் சிந்தனைகளைத்தான் தந்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் உள்மடிப்புகளாக வைத்திருக்கும் சில வசனங்களையும், காட்சியமைப்புகளையும் பார்த்தால் வியப்பாயிருக்கிறது. ஏனெனில், நவீன இலக்கிய தளத்தில் ஒரு சீரிய படைப்பாளி என்பவன் முற்போக்கான அம்சங்களில் கவனம் செலுத்துபவனாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒலிக்கச் செய்பவனாகவும் இந்துத்துவா போன்ற மத மாச்சரியங்களுக்கு எதிரான சமூகப் போராளியாகவும் இருப்பவன் என்று தானே நினைக்கிறீர்கள்?

ஜெயமோகன் இது குறித்து கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. இந்தப் படத்தைப் பார்க்கும் எளிய வாசகனுக்குக் கூட இதிலுள்ள இந்துத்துவா தன்மை தெரியுமே, முற்போக்கு தளத்தில், இலக்கிய தளத்தில் உள்ள வாசகன் புரிந்து கொள்வானே என்றெல்லாம் பதறிப் போகவில்லை. மிகத் தெளிவாக, நிதானமாக, ஆணித்தரமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார். நிச்சயமாக அவரைப் பாராட்டவேண்டும். ஏனெனில், ஒரு போராளி என்பவன் எந்தத் தருணத்திலும் தான் சார்ந்த கருத்துக்களை செயல்படுத்துவதிலேயே முதன்மையாக இருப்பான் என்பது போராளிகள் பற்றிய பிம்பம். ஜெயமோகன் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனது கருத்துக்களை செயல்படுத்தியிருக்கும் போராளி.

வெறுமனே இது ஒரு இந்துத்துவா படம் என்று மேலோட்டமாய் சொல்லாமல் காட்சி ரீதியாகவே பார்க்கலாம்:

காசி என்கிற அந்த நகரத்தைப் படமாக்கியிருக்கும் காட்சி ரூபங்கள் பார்வையாளனை வியக்க வைக்கின்றன. காசி பற்றிய படிமம் பிரம்மாண்டமாக நம்முடைய மனதுக்குள் கட்டமைக்கப்படுகிறது. திரும்பிய புறமெங்கும் காவி உடை தரித்த ஸ்வாமிகள், ஞானிகள், துறவிகள், பிராமணர்கள் என்று காசியின் ஜிகினா உலகம் விரிகிறது. திரும்பிய புறமெங்கும் சமஸ்கிருத ஸ்லோகங்களும், மந்திர உச்சாடனங்களும் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.

பிணங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. அது குறித்து விரிவான விளக்கம் வருகிறது. ‘‘இந்த அகோரிகள் தன்னை சாமின்னு சொல்வாங்க. எரியும் பிணத்துக்கு முன்னாடி நின்னு இவர்கள் ஆசீர்வதிச்சா அடுத்த பிறவி கிடையாது. (அந்த ஆன்மா முக்கியடைந்து விடும்) ஆண்டவன் நமக்கு இந்தப் பிறவியைக் கொடுத்திருக்கலாம் ஆனா அடுத்த பிறவியைத் தடுத்து நிறுத்தற சக்தி இவங்களுக்கு இருக்குது. யாருக்கு அடுத்த பிறவியைக் கொடுக்கணும், யாருக்குக் கொடுக்கக் கூடாதுன்னு இவங்களுக்கு நல்லாத் தெரியும்.’’ என்றெல்லாம் அறிமுகப்படுத்துகிறார்.

‘‘உனக்கு இந்தப் பிறவியிலிருந்து மோட்சமும் அடுத்த பிறவியிலிருந்து விடுதலையும் கிடைக்கட்டும்’’ என்ற சமஸ்கிருத ஸ்லோகத்துடன் ஒரு பிணத்துக்கு ஆசீர்வாதம் செய்கிறார் நாயகன் ருத்ரன். அவன் ஒரு அகோரி, சாதாரணமானவன் கிடையாது போன்ற பிரமிப்பூட்டும் காட்சியமைப்புகளுடன் அறிமுகமாகிறார்.

‘‘நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு இவங்களுக்கு நல்லாவே தெரியும். காலமுகன், கபாலிகன், உக்கிரன், ஊர்த்துவன்னு 108 கூட்டம் இருக்குது இவர்கள் காசிக்கு காவல் தெய்வமா இருக்கிற காலபைரவனோட வாரிசுகள்னு ஐதீகம். துஷ்டர்களோ துர்க்குணம் கொண்டவர்களோ இவங்க கண்களுக்குத் தட்டுப்பட்டா அந்தக் கால பைரவராகவே மாறிடுவாங்க...’’ என்று அந்தக் காசி பண்டிதர் ருத்ரனை முன்வைத்து இவர்களைப் பற்றிச் சொல்கிறார்.

அப்படியானால் காசி மிகவும் புனிதமான நகரமா? அங்கு துஷ்டர்களோ துர்க்குணம் கொண்டவர்களோ இல்லையா? எவ்வளவு அழகாக காசியின் புனிதத்துவத்தைக் கட்டமைத்திருக்கிறார். புனிதங்கள் உடைபடும் பிரதிகளை பின்நவீனத்துவப் பிரதி எனச் சொல்வார்கள். காசி என்கிற புனிதத்தை உடைப்பதற்குப் பதிலாக அது ஒரு மாபெரும் புனிதஸ்தலமாக கட்டமைப்பதன் மூலம் இது இந்துத்துவா பிரதியாக உருமாறுகிறது.

படம் தென் தமிழ்நாட்டுக்கு வரும்போது அங்கே இருக்கும் பிச்சைக்காரர்களை வைத்துத்தான் படம் நகர்கிறது. ஆனால் காசியைக் காட்டும்போது அங்கு ஒரு பிச்சைக்காரர் கூட காட்டப்படாததின் அரசியல் கவனிக்கத்தக்கது.

இந்த இடத்தில் வங்காளப் படமான கௌதம் கோஷின் ‘அந்தர்வாலி யாத்ரா’ ஞாபகம் வருகிறது. (மறுபடியும் சமீபத்தில் பார்த்தேன்)

‘கங்கை நதிக்கரையில் இறந்து போனால் மோட்சம் பெறுவார்கள்’ என்கிற ஐதீகத்தில் ஏராளமான குடும்பங்கள் தங்களது இறுதிக் காலத்தில் கங்கைக்கு வந்து சேருவார்கள். இந்தப் புனிதத்துவம் கொண்ட படிமத்தை முன்னிறுத்தி எவ்வளவு அற்புதமான ஒரு பின்நவீனத்துவப் படைப்பை (அந்தக் காலகட்டத்தில் கலகத் தன்மை கொண்ட இந்த வார்த்தையே புழக்கத்தில் இல்லை) உருவாக்கியிருக்கிறார்.

அந்திமத்தின் இறுதிப் பிடியில் இருக்கிற 90 வயதைத் தாண்டிய ஒரு தொண்டு கிழத்திற்கு உயிர் போகமாட்டேன் என்கிறது. சோதிட சாஸ்திரிகள் வரவழைக்கப்பட்டு கிரகச் சூழ்நிலைகளைக் கணித்து, ‘‘அவருக்கு திருமணம் செய்து வைத்தால்தான் சாவு வரும் அவரால் தனியாகப் போகமுடியாது’’ என்று கூறுகிறார்கள். உடனே ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த இளம்பெண், கிழவன், அந்த கங்கைக் கரையில் இருக்கும் ஒரு வெட்டியான் (கதாநாயகன்) மூவரைச் சுற்றியும் படர்ந்திருக்கிற கங்கை நதி என்று நீள்கிற இக்கதையின் அடியோட்டம் கங்கை நதியின் அழுக்கையும், ஆபாசத்தையும் முன்னிறுத்துகிறது. கங்கையின் இந்துத்துவ அரசியலை சுக்கு நூறாய் உடைக்கிறது.

தீபா மேத்தா போன்ற ஒரு வணிகத்தன்மை கொண்ட கலைப்பட இயக்குனர் கூட வாட்டர் படத்தில் காசியின் பிம்பத்தை உடைக்க முயற்சிக்கிறார். இவர் இந்தியத் தன்மைகளில் பற்று கொண்டவர். இவருடைய காமசூத்ரா படம் இங்கு நினைவு கூறத்தக்கது. நான் கடவுள் இந்தப் போக்குக்கு எதிராக நிற்கிறது. சிறு தெய்வங்களான நாட்டார் தெய்வங்களின் மாற்று வழிபாட்டு முறைகளுக்கும், அவைகளுக்குள் கட்டமைக்கப் பட்டிருக்கும் பிம்பங்களுக்கும் எதிராக ஒரு உணர்வோட்டத்தை ஓடவிட்டுக் கொண்டேயிருப்பது இன்னொரு போக்கு.

ஏழை எளியவர்களும், விளிம்பு நிலையாளர்களும் தங்களது துயரங்களைச் சொல்லியழும் ஒரு இடமாக ‘மாங்காட்டுச் சாமி’ இருக்கிறார். அவர் உடல் ஊனமுற்றவர். இழிந்த சனங்கள் என்று மேல் மட்டத்தில் அன்புடன் வர்ணிக்கப்படும் மக்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பவர். கண் திறந்தும் பார்க்க மாட்டார். வாய் திறந்தும் பேசமாட்டார். இவரை தனது உறுமுகின்ற குரலால் ‘‘அப்புறம் என்னடா இவன் சாமி?’’ என்று எள்ளி நகையாடுகிறான் ருத்ரன். ‘‘நான் கடவுள்’’ என்று கர்ஜிக்கிறான்.

ஒவ்வொரு ஊரிலும் சின்ன அளவில் மக்களின் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்பதற்கும், அவரால் முடிந்த தீர்வுகளைச் சொல்வதற்கும் ஒரு சாமியாடியோ, பூசாரியோ, குறி சொல்லியோ இருப்பார்கள். தங்களுக்கு வேத சாஸ்திரம் பற்றியெல்லாம் தெரியாத அப்புராணிகளாக இருப்பார்கள். (நான் இந்த இடத்தில் அடையாளப்படுத்துவது போலிச்சாமியர்களை அல்ல) இவர்களைத்தான் எள்ளி நகையாடுகிறான் ருத்ரன். பெருந்தெய்வங்களை முன் வைத்து நாட்டார் தெய்வங்களின் ஆற்றலை அழித்தொழிக்கும் (அல்லது பெருந்தெய்வங்களுக்குள் வசப்படுத்திக் கொள்ளும்) பிராமணத்துவக் குரல் மாங்காட்டுச் சாமிகளை ஊனமுற்றவனாக்குகிறது.

தன்னைக் கொண்டுபோக வரும் வில்லனிடமிருந்து காப்பாற்றச் சொல்லி, அந்த மாங்காட்டுச் சாமியிடம் நாயகி அம்சவல்லி கதறியழும்போது, பாலா அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கலாம்:

மாங்காட்டுச் சாமியின் பார்வையின் அமானுஷ்யம் தாங்காமல் வில்லன் பின்வாங்குவது போல. (மசாலாத் தன்மையில் அல்ல; பென்ஹர் படத்தில் ஜீசஸின் பார்வையை எதிர்கொள்வதுபோல)

அப்படிச் செய்திருந்தால் ‘Hero worshipஐ உடைப்பது’ என்கிற பாலாவின் பாணியாவது வந்திருக்கும். ஆனால், ‘‘நான் சாமியில்லே.. என்னால் காப்பாத்த முடியாது... மேலே ஒருத்தன் இருக்கான். ஈஸ்வரனா... மனுஷ ரூபத்தில... சாமியா இருக்கான்.. அவனாலதான் காப்பாத்த முடியும்.’’ என்று நிராதரவாய் நாயகனிடம் விரட்டுகிறார்.

படத்தின் இறுதியில் நாயகன் ருத்ர தாண்டவமாடியவாறு, காசிக்குப் போகும்போது எல்லாரும் மரியாதை கலந்த பயத்துடன் நிற்பார்கள். மாங்காட்டுச் சாமி மாத்திரம் குற்றவுணர்வுடன் தலை குனிவதுபோல ஒரு காட்சி கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சிக்கான அர்த்தம் என்ன?

இறுதிக் காட்சியில் குருட்டுப் பிச்சைக்காரியான அம்சவல்லி, நாயகனிடம் எல்லா மதங்களைப் பற்றியும் அலசி ஆராய்ந்து பேசுவாள்:

‘‘எல்லாப் பாவத்தையும் கழுவுகிறார் ஏசு சாமின்னாங்க... ஆனா ஒரு பாவமும் பண்ணாத என்னை ரட்சிக்கலையே...

எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு சொல்றாங்களே.. என்னை இப்படிப் படைச்சது கூட அந்த அல்லா சாமிக்குப் பெருமையா சாமி...

தெருவுக்குத் தெரு இருக்கற புள்ளையாரு, முருகன், மாரியாத்தா, காளியாத்தா எந்த சாமியும் என்னை ஏறெடுத்தும் பார்க்கலையே சாமி...”

என்று அழுது புலம்புகிறாள். இதுதான் ஜெயமோகனின் இந்துத்துவா குசும்பு.

கிறிஸ்தவ ஏசு சாமியும் மோசம், இஸ்லாமிய அல்லா சாமியும் மோசம், ஆனால் இந்து கடவுள்களைத் திட்டும் போது மாத்திரம் ராமனையோ, கிருஷ்ணனையோ, எல்லாம் வல்ல சிவனையோ, விஷ்ணுவையோ, பிரம்மாவையோ திட்டவில்லை. மாறாக, ஏழை எளிய ஜனங்கள் கும்பிடுகிற தெருவுக்குத் தெரு இருக்கிற புள்ளையாரு, முருகன், மாரியாத்தா, காளியாத்தா மோசம். ‘எல்லாரையும் படைத்த பிரம்மா ஏன் என்னை மட்டும் இப்படிக் கொடுமையாகப் படைத்தான்...’ என்று அவளால் ஏன் கேட்க முடியாமல் போய்விட்டது? அவள் பேசுவதற்கு கவித்துவமாகவும் காவியசோகமாகவும் இருக்கும் வசனம் இதுதானே?

இது போன்ற காட்சியமைப்புகளுக்கும் வசன வியாஜ்ஜியங்களுக்கும் பெயர் என்ன சுவாமிகளே?

24.2.2009 தேதியிட்ட ஜெயமோகன் வலைப்பதிவில், நான் கடவுள் சில கேள்விகள் 2 என்ற பகுதியில் 7வது கேள்வியைக் கவனியுங்கள்.

கே: நான் கடவுளில் ஒரு தொடர்ச்சியின்மை உள்ளதே?

ப: ஆம் உள்ளது. மூன்று காரணங்கள். ஒன்று நெடுங்காலம் எடுத்து நிறைய சேர்ந்து அவற்றில் சிறந்த பகுதிகளை மட்டுமே தொகுத்து உருவாக்கியமையால் உருவானது. அது ஒரு சரியான வழியா என்பது வேறு விஷயம். அது பாலாவின் வழி.

இன்னொன்று சில காட்சிகள் வெட்டுப்பட்டுள்ளன: அம்சவல்லி மதமாற்றம் செய்யப்படுகிறாள். அடுத்த காட்சி வலுவானது. தாண்டவன் அவளைக் கொடுக்கும்படிக்கோர, ‘முப்பது வெள்ளிக்காசுக்குக் காட்டிக் கொடுக்க நாங்கள் ஒன்றும் யூதாஸ் கூட்டம் இல்லை’ என்று கன்யாஸ்திரீ சொல்ல, ‘அப்படியானால் முப்பதாயிரம் வெள்ளிக்காசு?’ என்பான் தாண்டவன். அடுத்த காட்சி, அவன் இடத்தில் இருக்கும் அம்சவல்லி. அது படத்தில் இல்லை.

வசனத்தில் ஜெயமோகனுக்கு நிகர் ஜெயமோகன்தான்.

Naan Kadavul ‘படத்தில் இடம் பெறாத காட்சிகள் குறித்தெல்லாம் விமர்சனம் செய்பவன்’ என்று கிண்டலடிக்க வேண்டாம். தனது வலைப்பதிவில் இது ஏதோ உலகிலேயே மிகப்பெரிய விஷயமாகப் போட்டு தனது பிம்பத்தை ஊதிப் பெருக்கும் அவல நிலையில் அவரையுமறியாது பின்தொடரும் நிழலின் குரல் வெளிவந்து விட்டது.

‘நான் கடவுள்’ என்கிற தலைப்புப் பற்றிப் பார்க்கலாம்:

10.2.09ல் வந்த ஜெயமோகன் வலைப்பகுதியில் நான் (கிட்டத்தட்ட) கடவுள் என்ற கட்டுரையில் ‘மிக விரிவாகவே’ எழுதியிருக்கிறார்.

நான் கடவுள் என்ற அந்த மந்திரம் தமிழர்களுக்குப் புரியாத ஒன்று என்பது படிப்படியாக பிடி கிடைத்தபின் அதன் மூலவரியை இரண்டாவது தலைப்பாகக் கொடுத்தோம். அப்போதும் அந்த ஐயமே நீடித்தது, மூலமந்திரமே இங்குள்ளவர்களுக்கு புரிந்ததாக இல்லை.

நான் கடவுள் என்பது வேதாந்தத்தின் அடிப்படை மந்திரங்களில் ஒன்று. ரிக்வேதத்தின் பத்தாம் மண்டிலத்தில் குறிப்பாக அதில் உள்ள சிருஷ்டி கீதத்தில் மானுட இருப்பு பிரபஞ்ச சாரம் ஆகியவற்றைப் பற்றிய அடிப்படை வினாக்கள் எழுப்பப் பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து எழுந்த மேலதிக தத்துவ விவாதங்களே உபநிடதங்கள் ஆயின. அவற்றை வேதாந்தங்களின் முடிவு என்ற அர்த்தத்தில் வேதாந்தம் என்று சொன்னார்கள். வேதாந்தம் என்பது அடிப்படையில் பிரம்மத்தைப் பற்றிய ஞானம். பிரம்மம் என்று வேதங்கள் முழுக்க அறிந்துவிட முடியாத- வகுத்துரைக்க முடியாத முழுமுதலான பிரபஞ்ச சாரத்தை குறிப்பிடுகின்றன. அதைப் பற்றிய உள்ளுணர்வுகளும் தத்துவங்களும்தான் வேதாந்தம்.

வேதாந்தத்தின் அடிப்படை சூத்திரங்களை இவ்வாறு வகுத்துக் கூறலாம் (நேதி நேதி நேதி) ‘இதுவல்ல இதுவல்ல இதுவல்ல’ நம் முன் நாம் அறியும் இவையெல்லாம் உண்மையானவை அல்லது முழுமுற்றானவை அல்ல என்ற தரிசனமே முதலானது. (பிரக்ஞானம் பிரம்மாஸ்மி) ‘பிரக்ஞையே பிரம்மம்’ என்ற அறிதல் அடுத்தது. இவையனைத்தையும் அறியும் நம் பிரக்ஞையே பிரபஞ்ச சாரமாக உள்ள பிரம்மம். அதில் இருந்து அடுத்த நிலை ‘அஹம் பிரம்மாஸ்மி’ நானே பிரம்மம். நானும் பிரம்மமே என்ற உணர்வின் முதிர்நிலை இது. கடல்மீன் கடலேதான் என உணர்வதைப்போன்ற ஒரு பிரம்மாண்டமான தன்னுணர்வு இது.

அதன் அடுத்த நிலை என ‘ஈúஸô வாஸ்யம் இதம் சர்வம்’ என்ற ஆப்த வாக்கியத்தைச் சொல்லலாம். ‘இவையனைத்திலும் ஈசா உறைகிறது ’ நான் கடவுள் என உணர்ந்ததுமே இவையெல்லாமே கடவுள் என்றாகிவிடுகிறது. கடவுளே பிரபஞ்சம், கடவுளன்றி எதுவுமே இல்லை என்ற நிலை. அந்நிலையின் உச்சமே ‘தத்வமஸி’ ‘அது நீதான்’ அது ஒரு இறுதித்தன்னிலை.

இந்து மெய்ஞான மரபின் அடிப்படையான ஆப்த வாக்கியங்களில் ஒன்று ‘அகம் பிரம்மாஸ்மி’ எனும் ‘நான் கடவுள்’. அந்த வாசகம் இந்து நம்பிக்கை கொண்டவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவே இல்லை என்கிறார். ஆனால் இதைத் தெரிந்து கொள்வதினால் மட்டுமே ஒருவன் ஞானியாகி விட முடியாது. இந்த ஞான வாக்கியங்களைப் பிடித்துக்கொண்டு கரையேற முடியாது என்பதைக்கூட ஞானிகள் தான் கூறியிருக்கிறார்கள். ஆகவே ஆப்த வாக்கியங்கள் யாருக்கும் தெரியவில்லை என்று இவ்வளவு தூரம் ஜெயமோகன் கவலைப்படத் தேவையில்லை.

இதுபோன்ற போதகர்களைத்தான்

சட்டையிட்டு மணிதுலக்கும் சாத்திரச் சழக்கரே
பொஸ்தகத்தை மெத்தவைத்து போதமோதும் பொய்யரே
நிட்டை ஏது ஞானமேது நீரிருந்த அக்ஷரம்
பட்டை ஏது சொல்லிரே பாதகக் கபடரே

என்கிறான் சித்தன் சிவவாக்கியன்.

இவர் சித்தர் பாடல்களையும் விட்டு வைக்க வில்லை. ருத்ரனைத் தேடி வரும் தனது அம்மாவிடம்,

ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு ஆனது,
உடம்பாவது ஏதடி உயிராவது ஏதடி,
உடம்பிலே உயிரெடுத்த உண்மை தெய்வம் நானடி

என்கிறான். படத்தில் பார்க்கும்போது இது ஒரு சிவவாக்கியர் பாடல் என்று சாதாரணமாகத் தோன்றும். ஆனால் இதன் இறுதி வரிகள் திரிக்கப்பட்டுள்ளன.

உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா

என்பது தான் அசல் அக்மார்க் சிவவாக்கியன். இந்த இந்துத்துவா கூத்திற்கு சிவவாக்கியனும் உடந்தை என்பது போல கடைசிவரியைத் திரித்திருக்கிறார்.

எந்த சித்தனும் ‘உண்மை ஞானி நான்’ என்று சொன்னதில்லை. அவர்கள் சொன்னதெல்லாம் ‘கடவுளின் இருப்பை உனக்குள்ளே தேடிப்பார்’ என்பதுதான். இதே ரீதியில் ‘தூமை’ குறித்தும் கட்டுடைத்துப் பார்க்கலாம்.

இந்தப் படத்திலேயே உச்சபட்ச இந்துத்துவாக் கூத்து நீதிமன்றக் காட்சிகள்தான். ஏற்கனவே காவல் நிலைய உயர் அதிகாரியிடத்தில், தன்னைப் ‘பகவான்’ என்றும் ஒருவனைக் கொலை செய்தது குறித்து ‘பகவான் ஆசீர்வாதம் செய்துவிட்டார்’ என்றும் தெரிவித்திருக்கிறான் ருத்ரன். ஒரு கொலைக் குற்றவாளியான ருத்ரன் நீதி மன்றத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு கம்பீரமாக ஆர்தர் வில்சனின் கேமரா உபயத்திலும் இளையராஜாவின் இசைத்துணுக்குகள் வழிய ஒரு அமானுஷ்யமான தோற்றத்தில் உட்கார்ந்திருக்கிறான். சுற்றிலும் காவல் துறை அதிகாரிகள் பயபக்தியுடன் நிற்கிறார்கள்.

நீதிபதி (பிராமணத் தோற்றத்துடன்) உள்ளே நுழைகிறார். எல்லோரும் எழுந்து நிற்க ருத்ரன் மட்டும் கால் மேல் கால் போட்டபடி. பக்கத்திலிருக்கும் காவலர் ‘ஜட்ஜ் வந்திருக்கிறார் எழுந்து நில்லுங்கள்’ என்று மிகவும் பவ்வியமாக ருத்ரன் காதருகில் சொல்கிறார். ருத்ரன் உறுமலுடன் அதை அலட்சியப்படுத்துகிறான். நீதிபதி இந்தச் செய்கைகளையும் அவனது தோற்றத்தையும் பார்த்துக் கை கூப்பித் தொழுகிறார்.

(சூத்திரத் தோற்றத்துடன் உள்ள) உயர் காவல் அதிகாரியை அந்த வழக்கு குறித்து விசாரிக்கிறார். காவல் அதிகாரி மிகச்சரியான ஆங்கில மொழியில் பேசமுடியாமல் தப்பும் தவறுமாகத் திணறுகிறார்.

அவரை ‘‘கழிசடை...கழிசடை... உனக்கெல்லாம் யாருய்யா வேலை குடுத்தது...?’’ என்று ஆவேசமாகத் திட்டுகிறார் நீதிபதி.

பிறகு, ருத்ரனைப் பார்த்து, ‘‘எந்த ஊரு தம்பி?’’ என்ற கேட்க, இந்தியில் கம்பீரமான குரலில் உறுமுகிறான். ‘‘எனக்கு எல்லைகளே கிடையாது.’’ என்று தமிழிலும் பகர்கிறான்.

‘‘இதோ பாருங்கோ... உங்களுக்கு ஊரு தேசம்னு எதுவும் இல்லாம இருக்கலாம்... ஆனா சட்டம்னு ஒண்ணு இருக்கோல்லியோ... என்னை மதிக்காட்டாலும் அதை மதிச்சித்தானே ஆகணும்...’’ என்கிறார் நீதிபதி.

‘‘உங்க நீதி நியாயம் சர்க்கார் இதெல்லாம் என்னைக் கட்டுப்படுத்த முடியாது... நீங்கள்லாம் என்னை வணங்க வேண்டியவங்க... நான் சாதாரண மனுஷனில்ல. காவல் தெய்வம். வாழக் கூடாதவங்களுக்கு நான் கொடுக்கற தண்டணை மரணம். வாழவே முடியாதவங்களுக்கு நான் கொடுக்கிற மரணம் வரம்...’’ என்று ஆசீர்வாதம் செய்கிறான். ‘‘மிருத்யுதேவ்...(மரணதேவன்) அகம் பிரம்மாஸ்மி.. நானே கடவுள்...’’ என்று உறுமுகிறான்.

இதில் உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய விஷயம்: ருத்ரன் கடைசி வரைக்கும் நீதிமன்றக் கூண்டில் ஏறவேயில்லை. கால்மேல் கால் போட்டபடி விதவிதமான காட்சியமைப்புகளில் உட்கார்ந்து ‘போஸ்’ தருகிறான். அவனது அலட்சியமான உறுமலைக் கண்டு பயந்துபோகும் நீதிபதி வழக்குக் கோப்புகளை எடுத்து உயர் காவல் அதிகாரியின் முகத்தில் வீசி எறிகிறார்.

‘‘உண்மையான குற்றவாளியைப் பிடிக்க முடியாம யாரையோ புடிச்சிக் கொண்டாந்து நிறுத்திட்டே...’’ என்று திட்டுகிறார்.

‘‘இவன் மாதிரி ஒரு பரதேசி எங்கேயோ உட்கார்ந்துகிட்டு ஒரு சீப் மினிஸ்டரோட தலையைக் கொண்டு வாடான்னு ரவுடித்தனம் பண்ணதுக்கு இந்த கவர்மெண்டும் கோர்ட்டும் என்ன செய்ய முடிஞ்சது...?’’

இந்தப் படத்தை இயக்கிய பாலா பெரியாரின் பாசறையிலிருந்து வந்தவர் என்று கேள்வி. கலைஞர் கருணாநிதிக்கும் ஒரு வடநாட்டு சாமியாருக்கும் நிகழ்ந்த ஒரு நிழல் யுத்தத்தை இங்கு முன் வைத்து அந்த சாமியாரை எதுவும் செய்ய முடியாத சூழலை ‘தோற்றுப் போன திராவிட அரசியலின் பரிதாபமாய்’ எள்ளி நகையாடுகிறார். ஆனால் அதே சமயத்தில் நடந்த ‘இந்துத்துவ அரசியலின் பரிதாபத்தை’ப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை.

ஜெயேந்திரரின் நீதிமன்றப் பிரவேசங்கள் குறித்து ஏன் விவாதிக்கவில்லை? ஒரு தர்க்கத்துக்குரிய ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அதன் எதிர் பார்வையையும் கவுண்டர் பாயிண்ட் ஆக முன் வைக்க வேண்டும். தர்க்கத்தின் அடிப்படை பற்றிப் பேசுபவர் தானே இவர்? அந்த நிகழ்வையும் ஒரு நபர் பேசுகிற வசனமாக வைத்தால் என்ன?

ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல் மாறாக, அந்த வரலாற்று நிகழ்வை அப்படியே தலைகீழாக மாற்றி அப்படியெல்லாம் நடக்கவில்லை. நடந்தது இதுதான் என்பது போன்ற கட்டமைப்பையும் சிருஷ்டித்திருக்கிறார் ஜெயமோகன். இது தமிழ் சினிமாவின் தலைகீழ் வீழ்ச்சி.

ஒரு சின்ன திருப்புக் காட்சி மூலம் நாம் இதை வேறு தளத்தில் அவதானிக்கலாம்.

தமிழின் அனைத்து ஊடகங்களிலும் ஜெயேந்திரரின் நீதிமன்ற வழக்குகளையும், வியாஜ்ஜியங்களையும் அப்பட்டமாக வெளியிட்டும், வாதிட்டும், அது குறித்த பிரச்னைகளை எள்ளி நகையாடியும் நடந்த நிகழ்வுகளை திரிக்கப்படாத வரலாறு சொல்லும்.

எல்லாம் வல்ல சர்வேஸ்வரனின் மறுபிறப்பு என்றும் கடவுளின் அவதாரம் என்றும் பெரும்பான்மையான உயர்வர்க்கத்தினரின் பூஜையறையில் வைத்து பூஜிக்கப்பட்ட ஜெயேந்திரருக்கு நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பாருங்கள். ‘‘சுப்பிரமணி... சுப்பிரமணி... சுப்பிரமணி...’’ என்று நீதிமன்ற டவாலி சத்தம் போட்டதும் ஜெயேந்திரர் பதறியடித்துக் கொண்டு போய் நீதிமன்றக் கூண்டில் நின்றது, காவல் அதிகாரிகள் ‘அன்பான’ வார்த்தைகளால் விசாரித்தது, கோர்ட் அலுவலர்கள் கேலியும் கிண்டலுமாய் எதிர் கொண்டது, சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ள இருண்ட கூடங்கள் எள்ளி நகையாடியது என்று இந்துமதத்தின் மாபெரும் பீடாதிபதியை நடத்திய விஷயங்கள் எல்லோருமே அறிந்த ஒன்றுதான். இந்த ஆரிய அரசியலின் பரிதாபத்தை அப்படியே தலைகீழாகத் திருப்பிப் போட்டிருக்கிறார் ஜெயமோகன்.

பல வருடங்கள் கழித்து வருகிற ஒரு வாசகனுக்கு, ‘ஒன்றும் பெரியளவில் நடக்கவில்லை. நடந்தது இதுதான்...’ என்று ஆவணப்படுத்தும் காரியம்தான் இது என்பதை வரலாற்றை அவதானிக்கும் எவரொருவரும் உணர்ந்து கொள்ளலாம். ஏனெனில், தாழ்த்தப்பட்ட அருந்ததிய குலத்தில் பிறந்த மாபெரும் வீரராகிய மதுரை வீரன், உயர்சாதி நாயக்கப் பெண்ணை சிறையெடுத்து விட்ட காரணத்தால், அவரை இது போன்ற மேட்டுக் குடிக் கலைகள்தான் அரச குல வாரிசு என்று மாற்றின. அதுவும் பட்டிதொட்டியெல்லாம் இந்தப் படிமத்தை ஆழமாக விதைத்தது இது போன்ற ஒரு சினிமாதான். ஜெயமோகனின் தன்னம்பிக்கையும் துணிச்சலும் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவை.

இப்படி ஒவ்வொரு காட்சியாக எடுத்துவைத்துக் கொண்டு விவரித்துக்கொண்டே போகலாம். ஒரே ஆயாசமாக இருக்கிறது. பிச்சைக்காரர்களை உருவாக்கும் சமூகத்தின் மூல வேர்களைத் தேடிப் போயிருக்கவேண்டும். பிச்சைக்காரர்கள் உருவாவதற்கான சூழல் - அதன் அரசியல் - குறித்து விளக்கியிருக்கவேண்டும். மொக்கையாகத் தாண்டவன் மட்டும்தான் காரணம் என்று சொல்வது இரண்டாந்தர மூன்றாந்தரப் பார்வை. அதுமட்டுமல்லாது, அவர்களின் மீட்சிக்கான பாதை எது என்பதை கோடி காட்டாமல் அவர்களைக் கொன்றொழிப்பதுதான் ஒரே தீர்வு என்று சொல்லியிருப்பது மகா அபத்தம். ஒரு உயிரை எடுப்பதற்கான அனுமதியை இந்த சாமியார்ப் பயல்களுக்குக் கொடுத்தது யார்? இப்படியெல்லாம் விமர்சித்தால் ‘உன் கதையை நீ எழுது’ என்று குருநாதர் சுந்தரராமசாமி பாணியில் வக்கணை பேசக்கூடும்.

சரி. இதுபோன்ற விஷயங்களையெல்லாம் கதையின் உள்மடிப்புகளாய் வைத்திருப்பதை இயக்குனர் பாலா அவதானிக்கவில்லையா? என்ற பிரம்மாண்டமான கேள்வி நம்முன் எழுகிறது. ஏனெனில் பாலா பெரியார் பாசறையிலிருந்து வந்தவர். எனக்குத் தெரிந்து, நம் தமிழ் மஹா இயக்குனர்கள் பெரும்பாலோனோர் தங்களைப் பற்றித் தங்களது வீரதீரப் பிரதாபங்களைப் பற்றி வானளாவ இறுமாந்திருக்கிறார்கள். எனக்குக் கதையைப் பற்றிக் கவலையில்லை. எப்பேர்ப்பட்ட விஷயமாக இருந்தாலும் நான் கை வைத்தால் அது காவியம் என்கிற போக்குதான் அனைவரிடமும் உருவாகியிருக்கிறது. பர்மா பஜார்களில் விற்கிற உலக சினிமா டிவிடிக்களை வாங்கி வந்து அதில் வருகிற மாதிரி காட்சியமைப்புகளுக்குத்தான் மெனக்கெடுவார்களேயொழிய, உள்ளடக்கம் என்ன, கதையின் வேர்கள் எந்த திசையில் கடிவாளமில்லாமல் ஓடுகின்றன. கதையின் உள்மடிப்புகளாக சொருகி வைத்திருக்கும் திரைக்கதையின் அரசியல் என்ன? என்பது குறித்தெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை.

ஆனால், கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்கிற அடைமொழிக்காக கூச்சமேயில்லாமல் சிற்சில நிழல் காரியங்களைச் செய்து கொள்கிறார்கள்.

இந்த நான் கடவுள் கதை ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ என்ற நாவலின் கதையென்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் டைட்டிலில் கதை: பாலா என்ற பெயரில் தான் வருகிறது. வசனம்தான் ஜெயமோகன். இது குறித்து எந்த வணிக இதழ்களும், இலக்கிய இதழ்களும் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில், இயக்குனர் திலகங்கள் கதாசிரியனிடம் கதையை வாங்கிக் கொண்டு வசனம் என்று மட்டுமே டைட்டில் போடுவதென்பது உலக இலக்கியம் பேசுகின்ற மேதாவிகளாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்கள். தன்னை மாபெரும் படைப்பாளி- படைப்புக் கர்வம் கொண்டவன் என்றெல்லாம் தற்புகழ்ச்சி செய்து கொள்ளும் ஜெயமோகன் ஒரு திரைப்பட வாய்ப்பு வந்த அடுத்த நிமிடம் படைப்பாவது கர்வமாவது என்று அந்தர் பல்டியடித்திருக்கிறார்.

இது ஏழாம் உலகத்தின் பாதிப்புதான். கதையின் உள்நாதம் பாலாதான் என்று தப்பிக்கக் கூடும். அப்படியல்ல புதுமைப்பித்தனின் சிற்றன்னைக்கும் உதிரிப்பூக்களுக்கும் சம்பந்தமேயில்லை. ஆனால், கதை: புதுமைப்பித்தன் என்று மகேந்திரன் போட்டார். இதையெல்லாவற்றையும் விட பல படிகள் மேலாக பூ இயக்குனர் சசி. கதை: ச. தமிழ்ச்செல்வன் என்று போட்டது மட்டுமில்லாமல் ஒரு சில காட்சியமைப்புக்காக தனுஷ்கோடி ராமசாமிக்கும் சீன இயக்குனர் ஷாங் யிமுவுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். காலம் மாறிக் கொண்டிருக்கிறது பாலா...

கதை வசனத்தைத் தவிர்த்து இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கின்ற சில நல்ல அம்சங்களையும் கவனப்படுத்த வேண்டும். பாலாவின் இயக்கம் பற்றிய செயல்பாடுகள் நுட்பமாகவும் அதே சமயத்தில் ஆழ்ந்த கலையுணர்வை அடிமனசில் மீட்டும் விதத்திலும் அமைந்திருக்கின்றன. முக்கியமாக அரசியல் கிண்டல்கள், சினிமா பற்றிய கிண்டல்கள் மிக அழகாகவும் பாராட்டும்படியாகவும் வந்திருக்கின்றன. மிகப் பெரிய துணிச்சலுடன் பல்வேறு காட்சிகளை முன்வைத்துப் பார்வையாளனின் முகத்தில் அறைந்து தள்ளுகிறார் பாலா.

காவல் நிலையத்தில் எம்ஜியார், சிவாஜி, ரஜினி போன்ற வேடமிட்ட மூன்று பிச்சைக்காரர்களும் ஆடிப்பாடுகிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் வழிபாட்டு உருவங்களை பிச்சைக்காரப் பயலுகளாகச் சித்தரிப்பதற்கு ஒரு தெளிவான அரசியல் பார்வையும் அலட்சியமான துணிச்சலும் வேண்டும். அடுத்து சிம்புவின் பாடலுக்கு ஆட்டம் போடும் நயன்தாரா என்னும் பிச்சைக்காரக் கிழவன், அவர்களது குத்தாட்டமும் கோமாளியாட்டமும் எல்லாமே கிண்டலடிக்கப்படுகிறது. ‘மடையர்களே இந்த பிச்சைக்காரப்பயல்களிடம்தான் நாட்டை ஆள்கிற பொறுப்பை ஒப்படைக்கிறீர்களா?’ என்று தமிழ் மகா ஜனங்களை எள்ளி நகையாடுகிறார் பாலா. இதுவரையிலான எந்த ஒரு படத்திலும் வராத - எடுக்க முடியாத - இக்காட்சிகள் ஒரு தீவிரமான அரசியல் படத்துக்குள் நம்மை இழுத்துக் கொண்டு போவதான உணர்வு அந்தக் கணங்களில் நம்மைப் பற்றிக் கொள்கிறது. பாலாவின் துணிச்சலைக் கண்டு நான் வியந்து கொண்டிருந்த என் வியப்பு அடுத்த இரண்டு நாட்களில் காணாமல் போய்விட்டது. இந்தப் படத்தை ரஜினிகாந்த் மிக அற்புதமான படம் என்று பாராட்டுகிறார். அந்தப் பாராட்டையும் அவருடன் சேர்ந்து நின்று இயக்குனர் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட படங்களையும் சுவரொட்டிகளாக அடித்து தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒட்டப்படுகிறது.

மெயின் ஸ்ட்ரீமில் எல்லாமே சாதாரணமான விஷயங்கள் அல்லது காமெடியான விஷயங்கள். இதுதான் கொடுமை. தன்னைக் கிண்டல் செய்யும்போது அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அது வேறு யாரோ மூன்றாவது நபரை என்பதுபோல சம்மந்தப்பட்ட நபரும் சேர்ந்து அதில் பங்கெடுத்துக்கொள்ளும்போது அந்தப் பகடி வடிவேலு காமெடியாக மாறிப்போய் விடுகிறது.

‘புதுப்பேட்டை’ படத்தின் இறுதியில், ‘ஒரு கொடூரமான ரவுடியும் கொலைகாரனுமான மிகப்பெரிய சமூக விரோதி, கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்கிறான். 15 கல்வி நிறுவனங்களை உருவாக்கி கல்வித் தந்தையாகிறான்’ என்று படத்தை முடித்திருப்பது தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே காணக்கிடைக்காத காட்சி. ‘தீயவனுக்குத் தண்டனை’ என்ற தமிழ் சினிமா சென்டிமெண்ட் ஐ உடைத்திருக்கிறார். இந்த மிகப் பெரிய அரசியல் விமர்சனம், வடிவேலு காமெடிகளால் சூழப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் பெரிய காமெடியாகப் போனதுதான் துயரம்.

எலி என்கிற பிச்சைக்காரச் சிறுவன், ‘தனது சகாவை ஒரு பெரிய தொழிலதிபராக்கி ஒரு நடிகையைக் கட்டி வச்சிரலாம்னு பாக்கிறேன்’ என்கிறான்.

அரசியலில் குதித்தால் யார் யாரெல்லாம் என்னென்ன மந்திரி என்று இலாகா பிரிக்கும் காட்சிகள் என்று அரசியல் அங்கதங்கள் பாலாவுக்கு மிகச் சாதுர்யமாக வருகின்றன.

இது போன்ற காட்சிகளுக்காக பாலாவை நிரம்பப் பாராட்டலாம். இசை இந்தப் படத்துக்கு மேலும் அழகூட்டுகிறது. காட்சிகளுக்கேற்பவும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளின் தொனியின் மாறுபாடுகளுக்கேற்பவும் விரிவாக விவாதிக்கும் அளவுக்கு ஆழமாகவும் உணர்வு பூர்வமாகவும் அமைத்திருக்கிறார் இளையராஜா.

கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தியின் பங்களிப்பு இந்தப் படத்தை எந்தவிதமான பாசாங்குமில்லாத யதார்த்தமான புறத்தோற்றத்தை நம்முன் ஏற்படுத்துகிற அதே சமயம் காட்சி அமைப்புகளுக்குப் பின்னால் இருக்கிற ஆளுமைகளின் அகத் தோற்றத்தையும் முன் வைக்கிறது.

ஆர்தர் ஏ. வில்சனின் கேமரா இந்தப் படத்தில் ஒரு பாத்திரமாகவே பங்காற்றுகிறது. காசியின் சனாதனமான சலனங்களை ஒரு கதாபாத்திரமாக மாற்றியிருக்கிறார்.

ஆஸ்காரையெல்லாம் வைத்து அளவிட முடியாத நடிகன் என்று ஆர்யாவைப் பற்றிச் சொல்லலாம். அவரது உடல்மொழியைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்புக் கோட்பாட்டை கண்முன்னால் நிகழ்த்தும் மாமிசபட்சிணி.

விளிம்பு நிலையாளர்களின் வாழ்வுநலன்களில் ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்தி வருபவர் பாலா. இதில் அவரையுமறியாமல் அவர்களுக்கு எதிராக மாறியிருக்கிறார்.

இந்த விளிம்பு நிலை மக்களைக் கொல்வதுதான் இதற்கான தீர்வு என்பது முழுக்க முழுக்க இந்துத்வா கோட்பாடு. போன ஜென்மத்தில் இவர்கள் செய்த பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் இவர்களுக்குக் கிடைத்த தண்டனை இது. இந்தப் பிறவிப் பயனை இவர்கள் அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்பதுபோன்ற இந்துத்துவப் புனிதங்களை முன்வைத்து இந்தக் கொலைகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போக்கு ஆபத்தானது.

- கௌதம சித்தார்த்தன்

Pin It

 

Nan Kadavul உளறலும், திமிரும் சரிவிகிதத்தில் கலந்து வந்தால் தமிழ்ச் சினிமாவில் அதற்குப் பெயர் ‘பஞ்ச் டயலாக்’. சூப்பர் ஸ்டார் ஆரம்பித்து வைத்த இந்தக் கிறுக்குத்தனம் நம்ம இலக்கிய ‘மாமேதை’ ஜெய மோகன் வரைக்கும் வந்தே விட்டது.

வெண்டக்காயை வெளக்கெண்ணெயில் குழப்பி எடுத்த கதையா வளவளா எழுத்துக்களை வார்த்தைகளாக வடிக்கும் அண்ணன் ‘ஜெ.மோ’ சினிமா என்றதும் சொந்தச் சரக்கு வேலைக்காகாது என்று மணிரத்னம் ஸ்டைலில் வார்த்தைகளை இடம் வலமாக, வலம் இடமாக ஒடித்து, கடித்து, சப்பித் துப்பியிருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது. இடத்துக்கு ஏத்த வேஷம் கட்டுவதில் கில்லாடிதான் நம்மாளு. ஆனால் நான் கடவுளில் ‘ஜெ.மோ’வின் உரை வீச்சு இருக்கிறதே... ‘என்னமோ உளறிக்கிட்டுப் போறான்’ என்று சும்ம விட்டுவிட முடியாத விஷமத்தனம் தோய்ந்தவை.

சாம்பிளுக்கு ரெண்டு வரிகளைப் பார்ப்போம்:

‘வாழக் கூடாதவர்களுக்கு நான் தரும் தண்டனை மரணம்’.

‘வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் வரம் மரணம்’.

வாழக் கூடாதவர்கள் என்றால் யாரு?

ராஜபக்சே, சோனியா, சுப்பிரமணியம் சாமி வகையறா என நினைத்தால், அது நினைத்தவர்களோட கேணத்தனம். கை, கால் முடமானவர்களை, குருடர்களை வைத்துப் பிச்சையெடுத்துத் தின்கிறானே... அவன்!

அஞ்சு பைசா திருடியவனை எண்ணெய்க் கொப்பறைக்குள் தூக்கிப் போட்ட ‘அந்நியன்’ உங்க ஞாபகத்திற்கு வருகிறானா? நிச்சயம் வருவான். அவனுடன் நாகர்கோவில் நகர தெரு வீதி ஒன்றில் தள்ளுவண்டியில் நவாப்பழம் விற்றவனை சர்வதேச அளவுக்குச் சுரண்டல்காரனாகச் சித்தரித்து எழுதிய ஜெயமோகனும் நினைவுக்கு வர வேண்டும்.

ஆக, சரக்கு நம்மாளோட சொந்தச் சரக்குதான். கண்டிப்பாக ஷங்கர் - சுஜாதா கூட்டணியிடமிருந்து சுட்டதில்லை. அந்நியனுக்கு கருட புராணம். கடவுளுக்கு ஏழாவது உலகம்.

முடவனை, குருடனை வைத்துப் பிச்சையெடுப்பவன் சந்தேகமின்றி சமூகக் குற்றமிழைப்பவன்தான். அவனுக்கே ‘இம்மாம் பெரிய...’ தண்டனை நியாயம்தான் என்றால் கை, காலை முடமாக்கி பிச்சையெடுக்கத் துரத்துபவனுக்கு? நல்லாயிருந்த உடம்பை சர்க்கசில் காட்டும் ஒரு வினோதப் பிராணி போலாக்கி இப்போது மட்டுமல்ல, இனி வரும் தலைமுறைக்கும் பிச்சையெடுக்க வைத்தவனுக்கு...?

1984 டிசம்பர் மூன்று இரவில் விஷ வாயுவை திறந்துவிட்டு பல்லாயிரம் பேரைக் கொன்றதோடு சில லட்சம் பேரை ஊனமாக்கி போபால் நகரத் தெருக்களில் பிச்சையெடுக்க வைத்தானே... யூனியன் கார்பைடு ஆன்டர்சன்! அவனைத்தான் சொல்கிறேன். அவனுக்கு என்ன தண்டனை?

போபால் காசிக்கு ரொம்பப் பக்கம்தான். தண்டனையை முடித்து விட்டு, பொழுது சாய்வதற்குள் சுடுகாட்டு ‘டூட்டி’க்குத் திரும்பி விடும் தூரம்தான். ‘ஆன்டர்சன் தப்பியோடிவிட்டான்... என்ன பண்ண முடியும்?’ என்று கையைப் பிசைய வேணாம். அவனிடம் பொறுக்கித் தின்ற கும்பல் இப்போதும் அங்குதான் இருக்கிறது! அகோரி ருத்ரனை அங்கே அனுப்பி வைக்கலாமே!

அவன் மட்டுமா... நூறு கோடி இந்தியர்களையும் காட்டி உலக வங்கியில் தொடர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறாரே மன்மோகன்! டெல்லிக்குப் போய் ஒரு ‘ருத்ர தாண்டவம்’ ஆடிப் பார்த்திருக்கலாமே பாலா?

ஆடினால் டவுசர் கிழிஞ்சி தொங்கிடும்.

வாழக் கூடாதவர்களை வகைப்படுத்திய லெட்சணம்தான் இப்படி...! வாழ முடியாதவர்களையாவது சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்களா என்று பார்த்தால்... ரெண்டு கண்ணும் தெரியாத குருட்டு பிச்சைக்காரி - அல்லது அவளைப் போன்றவர்கள் வாழக் கூடாதவர்களாம்! அதாவது, உழைக்க வலுவற்றவர்களை, ஊனமுற்றவர்களை கருணைக் கொலை செய்துவிடப் பரிந்துரைக்கிறார்கள் இந்தக் காந்தி தேசத்துப் புத்திரர்கள்.

அதிர்ச்சியான செய்திகளை காட்சிப்படுத்துவதன் மூலமே தங்களை வித்தியாசமான படைப்பாளிகளாகக் காட்டிக்கொண்டு வரும் இலக்கியவாதி ஜெயமோகனையும், இயக்குனர் பாலாவையும் பார்த்து நெஞ்சில் ஈரமுள்ளவர் யாரும் ‘அடப் பாவிகளா’ என கத்தாமல் இருக்க முடியாது.

அறுபது லட்சம் யூதர்களைக் கொன்று குவித்த ஜெர்மன் நாஜிகள், அத்துடன் நிற்காமல் ஒரு லட்சம் உடல் ஊனமுற்றவர்களையும், மனநோயாளிகளையும் - அவர்கள் ஜெர்மானியராகவே இருந்த போதும் விஷ வாயுவைச் செலுத்திச் சாகடித்தார்கள் இரண்டாம் உலகப் போரில்! ‘இனத்தூய்மை’ இதற்கு காரணமாகச் சொல்லப்பட்டாலும், வேண்டாத சுமை ஒன்று இறக்கி வைக்கப்பட்டது என்றே அவர்கள் நிம்மதி அடைந்தார்கள்.

‘வலுத்தவன் மட்டுமே வாழ வேண்டும்’ என்ற இந்த ஆரிய வக்கிரத்தைத்தான் ‘நான் கடவுள்’ வழியாக நம்மிடம் இப்போது சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள். அய்யா படைப்பாளிகளே, இந்த வலுத்தவன் தியரியை நடைமுறைப்படுத்தியிருந்தால் - ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்... நீங்க ரெண்டு பேரும் புதைக்கப்பட்ட இடத்தில் இந்நேரம் புல்லு முளைத்து, பெரிய விருட்சமே வளர்ந்திருக்குமய்யா!

“என்னடா படம் எடுத்திருக்கான்?” என காறித் துப்பியவர்களும் வியக்கும் விசயமொன்று படத்தில் இருக்கு.

- ‘இதுவரை நாம் பார்த்தறியாத, பார்க்க மறுத்த பிச்சைக்காரர்களின் இன்னொரு பக்கத்தை நம்ம செவுளில் அறைந்தது போல் சொல்லியிருக்கிறார் பாலா’. உண்மைதானா இது?

ஏ.எஸ். பிரகாசத்தின் ‘எச்சில் இரவுகள்’, துரையின் ‘பசி’, இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ படங்களில் கவுண்டமணி - செந்தில் சித்தரித்த பிச்சைக்காரர்களிலிருந்து பாலாவின் உலகம் எப்படி, எங்கே வேறுபடுகின்றது?

வேறுபாடு கண்டறிய இந்தக் கருமத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துத் தொலைக்க வேண்டியதில்லை. இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை வழிமறித்து “ஐயா, சாமீ...’ என்று தட்டை நம் முகத்திற்கு நேராக நீட்டுகிறார்களே... நகரங்களின் முக்கியச் சாலை சந்திப்புகளில்... பாவத்தை தொலைத்து பரகதி சேர்ப்பதற்காகவே இருக்கும் நமது அத்தனை திவ்விய ஷேத்திரங்கள் ஒவ்வொன்றின் வழிநெடுகிலும் ஒரு ஓரமாக அமர்ந்து நமது கருணையின் அளவைப் பரிசோதிக்க அபயக் குரல் எழுப்புகிறார்களே... பிச்சைக்காரர்கள்!

‘வேண்டாம்பா இந்தப் பொழப்பு! என்னோட வந்தா நல்ல ஒரு வேலையில் சேர்த்து விடுறேன்’ என்று காசுக்குப் பதில் கனிவை நீட்டி அவர்களிடம் உரையாடிப் பாருங்கள்!

கையை நோக்கி நீண்ட பிச்சைப் பாத்திரம் அப்படியே ஓங்கி உங்கள் மண்டையில் ‘ணங்’ என்று அடிக்கும். ஆம், அவர்கள் பிச்சையெடுக்க மட்டுமல்ல, பொறுக்கித்தனத்திற்கும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பேச்சில் வந்து விழும் வக்கிரமும், வசவும் பாலா காட்டிய உலகத்தைவிட பல மடங்கு அதிர்ச்சியை உங்களுக்கு அளிக்கும். உதிரித் தொழிலாளிகள், பண்ணை அடிமைகளிடமிருந்து பகடியாக வெளிப்படும் குமுறலை இவர்களிடம் கேட்க முடியாது. அது பாலா - ஜெ.மோ கற்பனையில் மட்டும்தான் சாத்தியம்.

சுருக்கமாகச் சொன்னால் செய்யும் ‘தொழிலில்’ இவர்கள் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகள்.

இந்த ‘அனுபவம்’ உங்களுக்குக் கிடைத்தால் பாலா-ஜெ.மோ கூட்டு சேர்ந்து உருவாக்கி உலவவிட்டிருக்கும் கடவுளை விட, ஏனையோரின் முந்தையப் படங்கள் எதார்த்தத்தை நோக்கி கொஞ்சம் நெருங்கிச் சென்றிருப்பது புரியும்.

பாலா - ஜெயமோகன் கும்பல் கட்டமைத்த பிச்சைக்கார உலகிற்குள் நுழைந்து மயிர் சிலிர்த்து, மேனி நடுங்கிய ரசிக சிகாமணிகளுக்கு மேலுமொரு கேள்வி.

பிச்சைக்காரர்களின் மறுபக்கம் ஒருபுறம் கிடக்கட்டும். கங்கை நதிக்கரை ஓரத்து காசி நகரின் ‘அகோரிகள்’ எனப்படும் சுடுகாட்டுச் சாமிகளின் பக்கத்தையாவது சரியாக காட்டியிருக்கிறார்களா?

கங்கை நதி நீரில் மிதந்து வரும் மனித உடலை இழுத்தெடுத்து அதை ‘சகல மரியாதைகளுடன்’ கிடத்தி, பிணத்தின் மேலேறி ஆசனம் போட்டு ‘ஓம் சிவாய நமஹ’ என்று தியானம் (அது என்ன எளவோ) செய்பவர்களாக... புஷ்டியான பிணமென்றால் கைகளை வெட்டி சிக்கன் லெக் பீசைக் கடிப்பதுபோல் நரமாமிசம் தின்பவர்களாக... பிணம் பெண்ணாக இருந்துவிட்டால் அதோடு புணர்ச்சி செய்யக்கூடியவர்களாக... அகோரிகளின் மறுபக்கம் அல்ல, மொத்தப் பக்கமும் இதுதான்.

இதில் எதை உங்களுக்குக் காட்டினார் பாலா?

நல்ல படைப்பாளி அவன் அளித்த படைப்புகளால் மட்டுமல்ல, எடுக்க மறுத்த, மறந்தவைகளாலும்தான் அறியப்பட வேண்டும். சமூக அக்கறை கொண்ட படைப்பாளிகளுள் பலரும் அகோரிகள் என்கிற இந்த மனநோயாளிகளின் காட்டுமிராண்டித்தனத்தை அப்பட்டமாகத் தோலுரிக்கும் குறும்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்கள். ஆனால், பாலா என்ன செய்திருக்கிறார்?

திகார் சிறையின் செல்களுக்குள் தனித்தனியே கொண்டுபோய் அடைக்கப்பட வேண்டிய அகோரிகளை, கலியை வேரறுக்க வந்த கிருஷ்ண பரமாத்மாவாக தமிழகத்திற்கு கூட்டி வந்திருக்கிறார். “ஓடிப் போங்கடா காட்டுமிராண்டிப் பயலுவளா?” என கல்லெடுத்து வீசி விரட்டப்பட வேண்டியவர்களை கைதட்டி ரசிக்க வைத்திருக்கிறார்.

சமூகம் குறித்து சரியான புரிதலுள்ளவர்கள் என நம்பப்படும் சில அறிவுஜீவிகள்கூட இந்த ரசனைக் கெட்ட கும்பலுக்குள் சிக்கியிருப்பது வேடிக்கையல்ல, வினோதமே.

தீபா மேத்தா என்று ஒரு சினிமா படைப்பாளி. எல்லோருக்கும் தெரிந்தவர்தான். அவரும் கேமராவோடு இதே காசிக்குதான் போனார். எடுத்ததும் இதே வணிக சினிமாதான். அவர் கண்ணில் மட்டும் கைவிடப்பட்டு, அபலைகளாக துரத்தப்பட்ட விதவைப் பெண்கள் பட்டது எப்படி?

வங்கத்திலிருந்தும் ஒருத்தர் காசிக்குப் போனார். படமெடுக்க அல்ல, பாவம் தொலைக்க! ‘புனித ஜலம்’ என்று வாய்க்குள் ஊற்றும் கங்கைத் தண்ணி எவ்வளவு அசுத்தமானது, கேடு கெட்டது என்பதை அங்கே கண்டவர், சென்ற வேலையை போட்டு விட்டு ஒரு குறும்படம் எடுத்து, புனிதத்தின் யோக்கியதையை ஊர் ஊராகக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இப்போது சொல்லுங்கள்... உண்மையான படைப்பாளி இவர்களில் யார்?

‘கடவுளை’ கேமராவுக்குள் அடக்க மூணு வருசம் ஆச்சுதாம்.

சிலை வடிக்க மூணு வருசம் எடுத்துக் கொள்ளலாம். தப்பில்லை. வெறும் அம்மி கொத்த எதுக்கு மூணு வருசம்?

விடுபட்ட சில கேள்விகளும், பாலா & ஜெ.மோ. சொல்லாத பதில்களும்

‘அஹம் பிரம்மாஸ்மி’ என்றால் என்ன?

‘நான் கடவுள்’ அல்லது ‘நானே கடவுள்’ என்று அர்த்தமாம். சமஸ்கிருதத்தில் சப் - டைட்டில் போட்டு பார்ப்பனர்களை கொட்டகைக்கு இழுத்த புண்ணியவான்கள் ஏனைய இந்திய மொழிகளிலும் ரூபாய் நோட்டில் போட்டிருப்பது போல் தெலுங்கு, கன்னடம் என வரிசையாகப் போட்டு விளக்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்த்து தயாரிப்பாளரின் தலையில் துண்டு விழுவதை தடுத்திருக்கலாம்.

‘தேவடியா மகன் புளுத்துவான்’ என வசனம் எழுதும் ஜெயமோகன் எப்படி ஒரு கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ். காரனாக இருக்க முடியும்?

சம்சாரம் செத்துப் போனதால் அதிர்ச்சிக்குள்ளான பால் தாக்கரே வீட்டுக்குள்ளாற இருந்த அத்தனை சாமி படங்களையும் அடித்து உடைத்தாராம். அவர் இப்ப கறுப்பு சட்டை மாட்டிக்கிட்டு தெருத் தெருவா பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்னு நெனச்சா அது நம்ம அறியாமை.

‘மருதமலை முருகன் அருளால் எல்லாமே வெற்றி’ என படத்தைத் தொடங்கும் ஒரு சினிமா தயாரிப்பாளர், படம் டப்பாவுக்குள் சுருண்டு விட்டால், தான் கையெடுத்து கும்பிட்ட முருகனையே செருப்பாலடித்து, அவன் ஆத்தா பார்வதி தொடங்கி, சம்சாரம் வள்ளி வரைக்கும் வசவு விடுவாராம். அவரும் நாத்திகராகி விடவில்லை.

ஒருவரி வசனத்திலோ, குறிப்பிட்ட ஒரு சம்பவத்தின் போது மட்டுமோ வெளிப்படும் கடவுள் மறுப்பு அற்ப ஆயுள் கொண்டது. பகலில் அடித்து ராவில் கூடிக் கொள்ளும் வெட்கங்கெட்ட புருஷன் - பொஞ்சாதி உறவு போல பழைய கதைக்கே திரும்பி விடும் வாய்ப்புள்ளது. ஜெயமோகனின் கடவுள் எதிர்ப்பு லெட்சணமும் அதுதான்.

‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளி மூளையோடத்தான் இருக்கிறான்’. இந்த வசனத்தில் ஜெயமோகன் மலையாளிகளை பாராட்டுகிறாரா - இழிவுபடுத்துகிறாரா?

சுய விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். தலித் மக்களும், பாய்களும் திங்குற ஒரு கறியை தன் இனத்தானாகிய மலையாளி சப்புக் கொட்டித் தின்பதை ஒரு சுயம் சேவக்கால் எப்படிச் சகிக்க முடியும்? அதனால்தான் மலையாளியின் மூளைக்குள் இருப்பதை பாராட்டும்போதே, இரைப்பைக்குள் போய் விழுவதையும் நோண்டி ஒரு பிடி பிடிக்கிறார்.

‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளிகள் மேன்மக்களே!’ ஜெயமோகன் தமிழர்களுக்குச் சொல்ல விரும்பும் சேதி அதுவே.

நான் கடவுளில் வரும் பிச்சைக்காரச் சிறுவன் அம்பானியைப் பற்றி எப்படி அறிவான்?

அறிய மாட்டான். மட்டுமல்ல, வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மடை மாற்றி 1200 கோடி சுருட்டி, வெறும் 500 கோடிகளை மட்டுமே தண்டம் கட்டிய கதையையும் அவன் அறிய மாட்டான். ஆனால், கதை எழுதிய ஜெயமோகன் அனைத்தும் அறிவார். அனைத்தையும் அறிந்தும் ‘அவரு செல்லு விக்கிறவரு’ என சாதாரண ஒரு புதுப்பேட்டை காயலாங்கடை வியாபாரியைப் போல் அம்பானிக்கு முகம் கொடுப்பதில்தான் ஜெயமோகன் என்ற இலக்கியவாதியின் சாமர்த்தியம் விளங்குகிறது.

முதல் தேதி சம்பளம் வாங்குவது அரசிடம்; முப்பது நாளும் சேவகம் செய்வது அம்பானியிடம்! அரசு வேலையிலிருக்கும் இலக்கிய கர்த்தாக்கள் நல்லாதான் பொழைக்கிறாங்க.

Pin It

முதலாளித்துவ யுகம் மனிதனை அவன் உற்பத்தி செய்யும் பொருட்களில் இருந்தும் அவன் வாழும் சமூகத்திலிருந்தும் அந்நியப்படுத்துகிறது என்று கூறினார் மாமேதை மார்க்ஸ். அந்தக் கருத்தை பிரதிபலிக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ள படமே பிரியதர்சனின் காஞ்சிவரம்.

இக்கதையில் ஒரு பட்டு நெசவாளனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களோடு கூட அந்நெசவாளனுக்கு ஒரு தொடர்பும் இருப்பதில்லை; பலரும் பகட்டாக உடுத்துவதற்காகப் பட்டாடைகள் நெய்யும் அந்நெசவாளிகள் நேர்த்தியாகத் தாங்கள் நெய்த பட்டாடைகளைப் பார்க்கக் கூடப் பல காத தூரம் நடக்க வேண்டியுள்ளது என்ற அவலநிலை தெளிவாக்கப் பட்டுள்ளது. இக்கதையின் பின்புலம் வெள்ளையர் ஆட்சியின் இறுதி காலம். அது படம் பிடிக்கும் சமூகம், காஞ்சிவரம் பட்டு நெசவாளிகளின் வாழ்க்கை.

சுப்ரமணியபுரம் திரைப்படம் அப்படம் எடுக்கப்பட்ட 80-களில் மதுரை இருந்த நிலைக்கு எவ்வாறு நம்மைக் கொண்டு சென்றதோ அதைப்போலவே விடுதலைக்கு முன்பு காஞ்சிவரமும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களும் பேருந்துகள், போலீஸ்இலாகா உட்பட அனைத்துமே தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

பட்டு நெசவாளர்கள் பட்டு நூல் விநியோகிக்கும் உரிமையாளர்களிடம் அனுபவித்த சுரண்டலும் ஒடுக்கு முறையும் கண்முன் கலைநுணுக்கத்துடன் நிறுத்தப்படுகிறது. நெசவாளர்களை ஒடுக்க, அடித்துத்துன்புறுத்த அடியாள் பட்டாளம் பட்டாலை அதிபர்களால் பராமரிக்கப்பட்டவிதம், பட்டாலை அதிபர்களின் செல்வச் செழிப்பிற்காக உழைத்துக் கொடுத்த நெசவாளிகள் தேய்ந்து போன ஓடாய்த்திரிகையில் இந்த அடியாட்கள் மட்டும் எவ்வாறு கொழுத்த கன்றுகள் போல் திரிந்தார்கள் போன்றவை அனைத்தும் நெஞ்சக் கொதிப்பினை ஏற்படுத்தும் விதத்தில் சித்தரிக்கப்படுகிறது.

தனது முதலாளி மகளின் திருமணத்திற்காக தான் நெய்து கொடுத்த பட்டுசேலையை அதாவது தனக்கு முதலாளியிடமிருந்து மட்டுமல்ல வெள்ளை அதிகாரியிடம் இருந்தும் பாராட்டு பெற்றுத்தந்த அந்த பட்டுச் சேலையை தன் மனைவியிடம் காட்டுவதற்காக முதலாளியின் வீடு வரை அவளை கூட்டிச் செல்லும் அவலநிலை எவ்வாறு நெசவாளிகளைப் பொறுத்தவரையில் ஒரு இயல்பான விசயமாக இருந்தது என்பதை சித்தரித்துள்ள விதம் பார்ப்பவர்களை நெகிழவைக்கிறது.

ஒரு நல்ல திரைப்படத்தின் தகுதியும் அதுதானே. படத்தில் வரும் சோகமான சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ள வேதனையை உணர்ந்து அவர்களே அழுது அங்கலாய்த்தால் அது பார்ப்பவர் மனதில் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது; மிதமிஞ்சிய கஷ்டத்தில் இருக்கும் படத்தின் கதாநாயகன் வேதனை தலைக்குமேல் போய்விட்டநிலையில் தனது வருத்தத்தை விரக்தி கலந்த ஒரு சிரிப்பின் மூலம் வெளிப்படுத்தினால் அதை பார்ப்பவர்கள் அழுவர். பார்ப்பவர்களை படம் பார்ப்பதோடன்றி அதில் ஈடுபடுத்தவும் வேண்டும். அத்தகையதே ஒரு நல்ல திரைப்படம் இப்படம் பல இடங்களில் அதனைச் செவ்வனே செய்துள்ளது.

விடுதலைப் போராட்ட காலத்தில் கம்யூனிஸ்டுகளின் செயல்முறை எவ்வாறு இருந்தது என்பதையும் படம் நன்கு பிரதிபலித்துள்ளது. ஒரு எழுத்தாளரைப்போல் ஊருக்குள் நுழைந்து தொழிலாளர்களில் புரிதல் உள்ள ஒரு பகுதியினரை தேர்ந்தெடுத்து அவர்களை தயார் செய்து பிற தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு தெரு நாடகம் போன்ற கலை வடிவத்தைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் அவர்கள் ஆட்பட்டுள்ள சுரண்டலின் அவலத்தை நேர்த்தியாக அவர்களுக்கு உணர்த்தி இச்சுரண்டல் சாஸ்வதமானது இதிலிருந்து மீளவே முடியாது என்ற விதத்தில் அவர்கள் மனதில் ஆழப் பதிக்கப்பட்டிருந்த பதிவுகளை அகற்றி நாம் ஒருங்கிணைந்தால் இந்த நிலைமையையும் மாற்ற முடியும்-குறைந்த பட்சம் உடனடியாக தங்களது சம்பளம் மற்றும் வேலை சூழ்நிலைகளிலாவது மாற்றத்தினை கொண்டுவர முடியும் என்று அவர்களை உணர வைப்பது சுருங்க கூறி நேர்த்தியாக விசயத்தை விளங்க வைக்கிறது. இதனை வடிவமைத்துள்ள இயக்குநரின் திறமையையும் நன்கு வெளிப்படுத்துகிறது.

ஆனால் அதில் உள்ள ஒரே குறை தெரு நாடகத்தில் முதலாளியை வெட்டிக் கொலை செய்வது போன்ற முடிவினைக் காட்டியிருப்பதாகும். அது கம்யூனிஸ்டுகளைப் பற்றி ஒரு தவறான சித்திரத்தை ஏற்படுத்துகிறது. கம்யூனிஸ்ட் என்பவன் சமூக மேம்பாட்டிற்காக அடிப்படையில் தன் உயிரைக் கொடுக்க தயாராய் இருப்பவனே தவிர உயிர்களை எடுப்பதில் ஆர்வம் உள்ளவன் அல்ல. வன்முறை அனைத்து சமயங்களிலும் அவன் மேல் திணிக்கப்படுகிறதே அன்றி அவனாகவே சுயவிருப்பின் அடிப்படையில் அவன் அதை கையிலெடுப்பதில்லை.

இப்படத்தின் சூழ்நிலையில் எழுத்தாளர் என்ற பெயரில் வரும் கம்யூனிஸ்டின் வழிகாட்டுதலில் மிகப் பெரும்பாலான தொழிலாளர்களை திரட்டுவதில் முன்னணித் தோழர்கள் வெற்றி பெற்றுவிடுகின்றனர் அந்நிலையில் முதலாளியைக் கொலை செய்வது போன்ற ஒரு தீர்வினை இப்பிரச்னையில் காட்டியிருக்க வேண்டியதில்லை. ஏனெனில் ஒன்று திரண்டுள்ள தொழிலாளர் சக்தியே-அதன் மூலமாக அவர்களால் மேற்கொள்ளப்பட முடியும் பல அமைப்பு ரீதியான நடவடிக்கைகளே படத்தில் காட்டப்படுவது போன்ற முதலாளிகளின் தாக்குதல்களை சமாளிக்கப் போதுமானவை.

தமிழ்த் திரைப்படங்களை மிக அதிகம் பார்த்துப் பார்த்து ஆண் பெண் இருபாலரின் பாலுணர்வு ரீதியான காதலே இவ்வுலகின் மிகப்பெரிய விசயம் என்ற எண்ணம் மனதில் ஆழப்பதிந்துள்ள ரசிகர்களுக்கு ஒரு வேறுபட்ட நாயகனும் நாயகியும் இப்படத்தில் காட்டப்படுகின்றனர். எப்போதும் தனியாகவே சந்தித்து பேசிக்கொள்ளாத, டூயட் பாடிக் கொள்ளாத மலரும் மணமும் போன்ற ஒரு யதார்த்தமான காதல் காணக் கிடைத்திருக்கிறது.

இது தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கிடையே பள்ளிச் சிறுவர்களாய் இருந்த காலந்தொட்டு இருந்த நட்பு ஆழமாக வேரூன்றி வாலிபப்பருவத்தில் ஆண் மகன் இராணுவவீரன் என்ற அரசு வேலையில் சென்றபின் தன் தாய் தந்தையருக்கு எழுதும் கடிதம் மூலம் வெளிப்படுத்தும் நடைமுறைக் காதல்.

தன் மகள் அவளது இளம்பருவ நண்பனான சக தொழிலாளியின் மகனிடம் மனதை பறிகொடுத்திருக்கிறாள் என்பதை அவன் இராணுவப் பணியில் சேர செல்லும் போது அவள் சிந்தும் சில கண்ணீர் துளிகள் மூலம் அறிந்து கொள்ளும் தந்தை; நான் மாப்பிள்ளை பையனின் தந்தை என்ற பிகு இல்லாத பையனின் தந்தை; நான் பெண்ணை கொடுக்கப் போகிறவன், எனவே சற்று பணிந்துதான் போக வேண்டும் என்ற எண்ணமில்லாத பெண்ணின் தந்தை; இருவரும் இயல்பாக ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டு ஒருவருக்கொருவர் தெரிவிக்கும் திருமணத்திற்கான சம்மதம் இவை நிலவவேண்டிய தொழிலாளிவர்க்க கலாச்சாரத்தின் அற்புதமான வெளிப்பாடுகள்.

காவல்துறை ஆளும் வர்க்கங்களின் ஏவல் துறையே என்பதை படம் தெளிவாக விளக்கியுள்ளது. சட்ட விரோதம் என்று வர்ணிக்கக்கூடிய எந்த ஒரு காரியத்தையும் செய்யாதிருந்த நிலையிலும் கூட எழுத்தாளராக அக்கிராமத்தில் வந்து தங்கும் கம்யூனிஸ்டை சுட்டுத் தள்ளுவது; அவரது முதன்மை சீடரை சிறையில் அடைத்து அடித்து நொறுக்கி நான்கு பேர் தலைச்சுமையாக அள்ளிக்கொண்டு வருவது போன்ற காட்சிகள் தெளிவுபடுத்துகின்றன. ஒரு சிந்தாந்தத்தை கொண்டிருப்பதே, அதனை பிறரிடம் பிரச்சாரம் செய்து அணி திரட்டுவதே ஒருவரை சுட்டுக் கொள்ளும் அளவிற்கு கொடுங்குற்றம் என்று நடைமுறையில் கருதும் போக்கு முதலாளித்துவ சட்ட நீதி நெறிமுறைகளின் போலித்தனத்தையும் வர்க்க சார்பினையும் செவ்வனே வெளிப்படுத்துகிறது.

பட்டு நெசவாளியின் குடும்பத்தில் ஒருவன் இறந்தால் குறைந்தபட்சம் ஒரு பட்டு நூலையாவது இறந்தவரின் உடலில் கட்டிச் சிதையிலிடவேண்டும். அவர்களால் அனுதினமும் வேலை செய்யும் ஒரு பொருளினை அந்த அளவிற்கே அவர்கள் நுகரமுடியும். ஆனால் கதையின் நாயகனுக்கோ ஒரு பேராசை. அவன் திருமணம் செய்து அழைத்து வரும் மணமகள் பட்டு உடுத்தி வரவேண்டும் என்று விரும்புகிறான். அது நிறைவேறவில்லை.

தன் மகளுக்கு பேர் வைக்கும் வேளை அவள் காதில் அவளுக்கு தான் என்ன சேர்த்து வைக்கப் போகிறேன் என்பதைக் கூறும் வகையில் அவன் சொல்வதும் அதேதான். அதாவது பட்டுடுத்தி அவளை மணமகள் ஆக்குவேன் என்று கூறுகிறான். அன்று நிலவிய நிலவரப்படி அதுவும் நிறைவேற்றப்படவே முடியாத ஆசையே. அதனை அவன் மனைவி உட்பட அனைவரும் ஆதங்கத்துடன் உணர்கிறார்கள். இருந்தாலும் அவன் அதனைச் செய்தே தீருவதென்பதில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறான்.

பட்டுச்சேலை வாங்குவதற்காக தான் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்தப் பணத்தை மனைவிக்கு காட்டி அவளது அவநம்பிக்கையைப் போக்க முயல்கிறான். ஆனால் தங்கையின் வாழ்க்கைக்காக அவன் சேமித்தப் பணத்தை மைத்துனனிடம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதன் பின்னரும் அவனது அந்த ஆசை அவனைத் தீவிரமாக பற்றியிருப்பதால் பட்டுநூலை திருடத் தொடங்குகிறான். பட்டு நூலை வேறெங்குவைத்து கொண்டு வந்தாலும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று அவன் வாயில் உதக்கி வெளியில் தெரியாமல் திருடிச் சேர்த்து அதை வீட்டில் இருக்கும் தறியில் இரவில் நெய்து இறக்கும் தருவாயில் உள்ள தன் மனைவியிடம் தான் தன் பெண்ணுக்குப் பேர்வைக்கும் போது கூறியவாக்கை நிறைவேற்றுவதில் எத்தனை உறுதியாக இருக்கிறேன் என்பதைக் காட்டுகிறான். கடைசியில் தன் மகளுக்கு திருமணம் பேசி நிச்சயிக்கும் சூழ்நிலையில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கையிலும் பட்டுடுத்தி அனுப்புவேன் என்று கூறுகிறான்.

வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் பட்டுநூல் திருடவேண்டியுள்ளதால் போராட்ட காலகட்டத்தில் மிதவாத நிலை எடுக்கிறான். வேலை நிறுத்தத்தில் இருக்கும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப வழிவகுக்கிறான். அந்நிலையில் அவனுக்கு சம்பந்தியாகவுள்ள- கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறாமல் வேலைக்கு செல்வதில்லை என்ற உறுதியான தீவிரவாத நிலை எடுத்த-சக தொழிலாளியுடன் ஏற்படும் சச்சரவில் அவன் செய்யும் திருட்டு வெளிப்பட்டு அடித்து உதைக்கப்பட்டு கைதாகிறான்; இத்துயரம் அவனது மகளின் தற்கொலை முயற்சியில் சென்று முடிகிறது.

பேச்சு மூச்சற்று இருக்கும் அவளைப் பார்க்கப் பரோலில் வந்த அவனுக்கு தான் மீண்டும் சிறை சென்றபின் அவனது மகளை யார் பார்ப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. திருடனின் மகள் என்ற பெயர் வரும் என்ற சாக்கில் தன் மைத்துனனும் அவளைப் பார்க்க தயாராக இல்லாத சூழ்நிலையை அறிந்துகொண்டு அவன் அவளை விசம் கொடுத்துக் கொல்கிறான். அவன் அத்தனைப் பாடுபட்டு பலகாலம் நெய்த பட்டுத்துணி அவளது உடம்பை முழுமையாக போர்த்தக்கூட போதுமானதாக இல்லை. கதை இத்துடன் நிறைவுபெறுகிறது.

மற்ற அரசியல் தத்துவங்களைப் போல் அல்லாது கம்யூனிஸம் வெறும் அரசியல். பொருளாதாரம் அல்லது சமூகம் குறித்த தத்துவம் மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கைத் தத்துவம். உண்மையிலேயே கம்யூனிஸ சித்தாந்தத்தின் அரவணைப்பின் கீழ் ஒருவன் வந்த பின் அவனது வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் பெரிய மாற்றம் என்பது ஏற்பட வேண்டும்.

அது ஏற்படாத கம்யூனிஸ்டுகளின் புரிதல் ஆழமானதல்ல 'அறிவு ஜீவிகளைப் பொறுத்தவரை அது சாத்தியம். சாதாரண தொழிலாளர்களைப் பொறுத்தவரை அது சாத்தியமா' என்ற கேள்வி எழுலாம். ஆனால் தொழிலாளி வர்க்கம் அதனை வாழ்க்கைத் தத்துவமாக ஏற்றுக் கொள்வதில் அதற்கு மிகப்பெரும் சிரமம் இருப்பதில்லை. ஏனெனில் பலரையும் ஆட்டிபடைக்கும் குட்டி முதலாளித்துவ குணங்கள் தொழிலாளி வர்க்க வாழ்க்கை முறையில் இயல்பாகவே இருப்பதில்லை.

இதைத்தான் வேறு வார்த்தைகளில் ஏழைகளைப் பொறுத்த வரை அவன் எதையும் பொருட்படுத்துவதில்லை. பணக்காரர்கள் தங்கள் பணத்தால் எதையும் தூக்கி எறிந்துவிடுவர். நடுத்தர மக்கள் தான் இவ்விரண்டையும் செய்ய முடியாமல் தவிப்பவர்கள் என அனுபவசாலிகள் உலக வழக்காகக் கூறுவர். இந்நிலையில் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அரவணைப்பின் கீழ் வந்துவிட்ட நிலையிலும் கூட அவ்வியக்கத்தின் முன்னணி ஊழியர்களாக ஆகிவிட்ட வேளையிலும் மணமகளுக்கு சீர்தனமாக கதாநாயகன் என்ன செய்யப்போகிறான் என்று கேட்கும் நிலையில்தான் கதாநாயகனின் சகதோழனாகிய சம்பந்தியாகப்போகும் தொழிலாளி இருக்கிறான் என்பதும் அதனை எப்படியேனும் செய்துவிடவேண்டும் என்ற அடிப்படையில் கதாநாயகன் இருந்து அதற்காக நூல்திருடும் தனது போக்கை தொடர்கிறான் என்பதும் உணர்வு பூர்வமாக படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு நெருடலாக உள்ளது. கம்யூனிசம் அவர்களது குணாம்ச ரீதியான அகவாழ்வில் வேதனை தரும்விதத்தில் ஒரு பங்கினையும் ஆற்றவில்லை என்பதையே அது கோடிட்டுக் காட்டுகிறது.

'இது சமகாலத்துக் கதையல்ல; வெள்ளையன் ஆட்சி செய்த காலத்துக் கதை; மேலும் சில உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தீட்டப்பட்ட சித்திரமே இது. எனவே இது போன்ற எதிர்பார்ப்புகளை எவ்வாறு இந்த விசயத்தில் நாம் கொண்டிருக்க முடியும்' என்ற கேள்வி எழுப்பப்படலாம்.

ஒரு கதை எந்தக் காலத்தில் நடந்ததாகக் கூறப்பட்டாலும் தற்காலத்து யதார்த்தங்களோடு பொருத்தமுடையதாக அது அதிகளவு இருந்தால் மட்டுமே தற்கால ரசிகர்களால் பார்க்கவும், ரசிக்கவும் முடிந்ததாக இருக்கும். மேலும் உண்மை நிகழ்வுகளை அப்படியே முன்வைப்பது சமூக நிகழ்வுகளின் முன்பு கண்ணாடியை வைத்துக் காட்டுவது போல நயமற்றதாக ஆகிவிடும். அதனால் தான் மணிரத்னத்தின் 'இருவர்' திரைப்படமும் அது பிரதிபலித்த அரசியல் காலகட்டத்தில் உண்மையில் நடந்த சில அபத்தமான நிகழ்வுகளின் குறுக்கீடு இல்லாதிருந்தால், கதை இவ்வாறு தான் முடிந்திருக்கும் என்ற மாதிரித் தன்மையை படம்பிடித்தது.

அதைப்போல் கம்யூனிஸத்தை ஒரு வாழ்க்கைத் தத்துவம் என இயக்குனர் பார்த்திருந்தால் இத்தகைய ஜீரணிக்கமுடியாத, சமூக ஆர்வலர்களுக்கு உற்சாகம் தராத முடிவினை கதையில் கொண்டு வந்திருக்கமாட்டார்.

ஒரு வகையில் அன்று முதல் இன்றுவரை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நிலவும் மிக அடிப்படையான கோளாறும் இதுதான். அது வாழ்க்கைத் தத்துவமாக கடைப்பிடிக்கப்படாமல் இருந்ததன் காரணமாகவே எத்தனையோ தியாகங்களை இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் அறியப்பட்டவர்கள் செய்திருந்தும் இன்று கோட்பாடற்று, சமூதாய மாற்றம் எனும் இலக்கினை இழந்து முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகளாக ஆகும் நிலைக்கு அக்கட்சிகள் தரம் தாழ்ந்து போயுள்ளன.

இந்த அம்சமே காஞ்சிவரம் படம்பார்த்து முடிக்கையில் ஒருவகையான கையாலாகாத அவலமனநிலையை பார்ப்பவர் மனதில் ஏற்படுத்துகிறது. ஒரு திரைப்படத்தில் எத்தனையோ சோக நிகழ்வுகள் வரலாம் ஆனால் அந்த சோக நிகழ்வுகள் சகப்புணர்வையும் கையாலாகாத நிலையையும் ஏற்படுத்துவையாக இருக்கக்கூடாது.

எல்லா கலை வடிவங்களுமே பல தரப்பட்ட சமூக மக்களின் அக - புற வாழ்க்கைகளில் நிலவும் சமூகத்தின் மையமான வேதனையை ஏதாவதொரு வகையில் பிரதிபலிப்பவையே. அதனால் தான் எந்த உயர்ந்த கலைப் படைப்பும் அது படைக்கப்பட்ட சமூகத்தின் மையமான வேதனை சார்ந்த சமூக அவலங்களின் மூலகாரணத்திற்கு எதிராக கோபத்தையும் துடிப்பையும் ஏற்படுத்துவதாகவே அமைகின்றது. அவ்விசயத்தில் மட்டும் இத்திரைப்படம் தோல்வியடைந்திருக்கிறது. அதற்கான காரணம் இப்படம் யதார்த்தவாதத்தை மட்டுமே பிரதிபலித்திருப்பதே.

அதாவது எல்லா கலை இலக்கியங்களுமே பிரச்சாரங்கள் தான். ஆனால் எல்லா பிரச்சாரங்களும் கலை இலக்கியங்கள் ஆகிவிடுவதில்லை என்ற கூற்றின் அடிப்படையில் இப்படமும் அது எத்தனையோ அற்புதமான விதங்களில் பட்டு நெசவாளிகளின் ஒரு கால வாழ்நிலையை, அக்காலகட்டத்தின் சமூகப் பின்னணியை, அதன் மையமான வேதனையை பிரதிபலித்திருந்தாலும் அது இறுதியில் ஏற்படுத்தும் சோர்வின் மூலமாக இச்சமூகம் என்றென்றும் இப்படியே இருந்து இது போன்ற சோகங்களை உருவாக்கக் கூடியதே என்பதைத் தழுவிய ஒரு பிரச்சாரத்தையே செய்வதாகப்படுகிறது.

பிரச்சாரம் என்ற வார்த்தை படைப்பாளிகளை பெரிதும் பாதிக்கக்கூடியது தான் ஒரு பிரச்சாரகன் என்று கூறிக்கொள்ள எந்தப் படைப்பாளியும் விரும்பமாட்டான். தனது படைப்புகள் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒன்றுக்கு தனது புலனறிவிற்கு புலப்படாமல் ஒரு பிரச்சாரத்தையே செய்துகொண்டிருக்கிறது என்பதை அவன் ஒப்புக்கொள்ளமாட்டான். எவ்வாறு கூலியடிமைத்தனத்தில் இந்த அமைப்பில் இருக்கும் ஒருவன் தான் கூலியடிமை என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்குவானோ அதைப்போல.

படைப்பாளிகளை வெறும் யதார்த்த வாதம் மட்டும் வழிநடத்தினால் அதன் விளைவு எப்படிப்பட்ட படைப்பாக உருவாகுமோ அப்படிப்பட்ட படைப்பாக காஞ்சிவரம் வெளிவந்துள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் படைப்பாளிகளை வழிநடத்தவேண்டியது வெறும் யதார்த்தவாதத்திற்கு பதில் சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கவல்ல சோசலிச யதார்த்தவாதமே.

அந்த அடிப்படையில் படத்தின் இறுதியில் பிரதிபலிக்கப்படும் கையாலாகாத் தனமும் சோர்வும் ஏற்படாதவாறு சமூக மாற்றப் போரில் ஈடுபடத்தூண்டும் ஒரு உற்சாகத்தைத் தரவல்ல உயர்ந்த யதார்த்தவாதத்தை பிரதிபலித்திருக்குமானால் காஞ்சிவரம் ஒரு உன்னதமான படைப்பாக இருந்திருக்கும்.

 - தோழர் ஆனந்தன்

Pin It

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே பாராட்டிய திரைப்படம் என்றதுமே சிடி/டிவிடி யில் வந்தால் இரவல் வாங்கி பார்த்துக்கொள்ளலாம் என்று நான் உஷாராக இருந்திருக்க வேண்டும். சுற்றி இருப்பவர்களில் சிலர் ஆகா ஓகோ என்று புளகாங்கிதப்பட்டதால் போனேன். பாலாவின் படம் என்பதால் கொஞ்சம் பயத்துடன் தான் போனேன். இந்த படத்தின் யோக்கியதையை அதில் வரும் ஒரே ஒரு வசனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

naan_kadavul " கேரளாக்காரன் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டாலும் மூளை நல்லா தான் வேலை செய்யுது"

உடல் ஊனமுற்றவர்களை விலைக்கு வாங்கி அவர்களை பிச்சை எடுக்க வைத்து கொடூரமாகச்சுரண்டி வாழ்கிறது ஒரு கும்பல். அந்தக்கும்பல் தம்மிடம் இருக்கும் மனித சரக்குகளை இன்னொரு கும்பலிடம் பரிவர்த்தனை செய்து கொள்ள பேரத்தில் ஈடுபடுகிறது. இந்த இரண்டு கும்பல்களின் தலைவர்களையும் ஒரு இளம் சாமியார் ஒழித்துக்கட்டுகிறார். கூடவே இந்தக்கும்பலில் இருக்கும் ஒரு கண் தெரியாத பெண்ணுக்கு அவள் செத்த பின்னர் (?) மோட்சம் வேறு கொடுக்கிறார். இந்த சாமியார் வயிற்றுப்பிழைப்புக்காக சாமியார் ஆகும் வழக்கமான தமிழ் நாட்டுச்சாமியார் இல்லையாக்கும். ஹை ஸ்டாண்ட்ர்ட் பெர்சன். அசல் அக்மார்க்/ஐ.எஸ்.ஐ தரம். வட நாட்டிலே அதுவும் புனித கங்கை தூய்மையாக புரண்டோடும் பனாரஸ் நகரத்திலே பிணங்களை எரிக்கும் சுடுகாட்டிலே உருவானவராக்கும் (என்ன பைத்தியக்காரத்தனம்). இந்த சாமியார் தமிழில் பேசுவதை விட இந்தியில் தான் அதிகம் பேசுகிறார் (இந்தியில் டப் செய்தால் வேலை கொஞ்சம் மிச்சமாகலாம். ஒரு வேளை அதற்காகத்தான் இப்படி எடுத்திருக்கிறார்களோ என்னவோ? ). சுற்றி இருப்பவர்கள் புருவத்தை உயர்த்தி வியக்கும் படி அடிக்கடி வட மொழியில் ஸ்லோகம் சொல்கிறார் (பன்ச் டயலாக்). முகத்தில் சாம்பலைப்பூசிக்கொண்டு உடம்பைக்காட்டியபடி தலைக்கீழாக தியானம் செய்கிறார். உலக பந்தத்திலிருந்து விடுபடுவதற்காக அடிக்கடி கஞ்சா வேறு அடிக்கிறார் (கொடுமையடா சாமி). இனி மேல் கஞ்சா முதலிய போதை வஸ்துகளை பயன்படுத்தும் நபர்கள் காவியை அணிந்து சாமியார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். ரொம்ப வசதி. சட்டமும் போலிசும் ஒன்றும் செய்யாது. மரியாதை வேறு கிடைக்கும்.

இந்தப்படத்தில் பாலாவோடு இணைந்து செயல்பட்டவர் ஜெயமோகன் என்கிற முன்னாள் ஆர்.எஸ்.எஸ் காரர். நினைத்தாலே புல்லரிக்கிறது. இவர் தான் படத்தின் கதைக்கு அடித்தளம் என்றால் இவர் மூளையைக்கொண்டு போய் நிச்சயம் சூளையில் தான் வைக்க வேண்டும். ஜெயமோகன் இதுகாறும் இலக்கியத்துறையில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இப்போது திரைப்படத்துறையில் குதித்துள்ளார். இப்படிப்பட்ட சீடனை பெற்றதற்கு இவருடைய குருநாதர் சு.ராமசாமி நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனி மேல் ஜெயமோகன் வழிகாட்டுதலில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் வட இந்தியாவில் கஞ்சா அடித்து திரியும் நாக சன்னியாசி/ சன்னியாசினிகளை வைத்து யாராவது ஒரு படம் தயாரிக்கலாம். ஒரு நாக சன்னியாசி தமிழ் நாட்டிற்கு வந்து வில்லனை பின்னிப்பெடலடுக்கும்படி கதையையும் காட்சியையும் வைக்கலாம் (அகத்தியர் தென்பொதிகை வந்து தமிழ் வளர்த்த கப்சா இருக்கவே இருக்கிறது). என்ன அம்மணப்படம் என்று சென்சாரில் பிரச்சினை வரக்கூடும். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் எதற்கும் தயாராகவே இருக்கிறது. இந்தப்படத்தின் இடையில் ஒரு கிறுஸ்த்தவ கன்னியாஸ்திரியைக்காட்டி பைபிள் வேறு படித்திருக்கிறார்கள். இது யாரை திருப்திப்படுத்துவதற்காக என்று தெரியவில்லை. அப்புறம் அளவு கடந்த வன்முறை.

இந்தப்படத்தில் நல்ல அம்சம் என்கிற ஒன்று இருந்தால் அது உடல் ஊனமுற்றவர்கள் மீது கரிசனையை ஏற்படுத்தியது தான். நாம் நம் தினப்படி வாழ்க்கையில் இம்மாதிரியான ஆட்கள் பிச்சை எடுக்கும் நிலையில் காண்கிறோம். இம்மக்களின் பின்புலத்தில் எத்தகைய வேதனை இருக்கிறது, சோகம் இருக்கிறது, கொடூரமான சுரண்டல் இருக்கிறது, அநியாயம் இருக்கிறது என்பதை நாம் நம்முடைய பரபரப்பான வாழ்க்கைச்சூழ்நிலையை தாண்டி உற்று நோக்கி ஆராய்வதில்லை. கண்டும் காணாமல் கடந்து செல்கிறோம். இனிமேல் நாம் கொஞ்சம் நின்று யோசிக்கக்கூடும். இருந்தும் இந்தப்பிரச்சினையை காட்சிப்படுத்தியதில் குறைகள் உண்டு. இம்மக்கள் மனிதர்கள் என்கிற நிலையில் காண்பிக்கப்படாமல் காட்சிப்பொருளாக காண்பிக்கப்பட்டிருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. மேலும் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி காலத்துப்பாடல்களை அங்கங்கே வைத்து தமாஷ் பண்ணியதால் படம் துவண்டு விடுகிறது. மொத்தத்தில் இந்தப்படம் சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களின் பிரச்சினைக்கு தீர்வாக தேசளாவிய இந்து மதவெறித்தனம் அதிகாரம் ஏறுவதை மறைமுகமாக முன் வைக்கிறது. ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு ஒரு நல்ல பிரச்சாரப் படம் கிடைத்திருக்கிறது. மூன்றாண்டு காலம் யோசித்து இத்தனை செலவு செய்து உழைப்பை கொட்டி இப்படி ஒரு படத்தை இயக்குனர் பாலா எடுத்திருப்பதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

- தமிழ்நெஞ்சம்

Pin It

அன்புடன்
ஆபிதீன்.....

arrahman மிகுந்த மனநிறைவுடன் எழுதுகிறேன். வாழ்வின் சந்தோசமோ..... தொழிலின் வெற்றியோ.... இந்த மனநிறைவின் மையம் அல்ல. அது என்றைக்கு வாய்த்தது? சொல்லிக் கொள்ள? இது வேறு... வழக்க மாதிரியே இன்னும் நம்மை.... சாகடித்துக் கொண்டிருக்கும் கலையின் ஊடானது! "சாவுதான் சந்தோஷமா?" கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். சொல்லிக் கொடுத்த வாத்தியார் மாணவர்களிடம் கேட்பது மாதிரி!

கொஞ்ச நாட்களாய் இல்லை... தப்பு.... மாதங்களாய் வியாபாரம் என்ற பெயரில் காரைக்காலில் கரைந்துக் கொண்டிருக்கிறேன்.

'நான் கடவுள்' இசை பற்றிய செய்திகள் வெளிவந்தபோது.... நாக்குத் தொங்க அதை அங்கே தேடித் திரிந்து வாங்கிவந்து கேட்டால்... இளையராஜா தன் பெத்தப் பெயரையே திரும்பத் திரும்ப ஒரே நேர்கோணத்தில் பதிவு செய்து களைத்து வேறு தெரிகிறார்! விளம்பரம் வெளிச்சம் போட்ட அந்த ஆடியோ CDயை தூக்கி வீச நினைத்தும்.... இன்னும் இல்லை. அது படம் பார்த்த பிறகு செய்ய வேண்டிய காரியமென விட்டுவிட்டபோது.... ரஹ்மான்... 'Slumdog millionaire'க்காக 'கோல்டன் க்ளோப்' பரிசு வாங்கிய செய்தி அடுத்து! அதோடும் முடியவில்லை அடுத்தடுத்த நாட்களில்.... இந்தப் படத்தின் இசைக்காக நான்கு வெவ்வேறு தளத்தில் ஆஸ்கர் பரிசுக்கும் பரிந்துரை!!! 'சரி அதையும் கேட்டுவிடலாம்'யென அதே காரைக்காலில் மீண்டும் இசைத் தேடல்....

Slumdog millionaire / இசை / ரஹ்மான்.... என்றெல்லாம் சொல்லி கேட்டது அந்த ஆடியோ & வீடியோ கடைக்கார்களுக்கு புரிந்ததா என்றே தெரியவில்லை. விழிகள் பிதுங்க அவர்கள் கையசைத்தது அப்படித்தான் இருந்தது! மூன்றாம் நாள் விஜயத்தில் ஒரு கடைக்காரன்....."சார் அந்தப் படத்தின் பாடல் இல்லை... ஆனால், DVD இருக்கிறது!" என்று சொல்லி வெறும் இருபத்தி ஐந்துக்கு மனதில் பால் வார்த்தான்!

கலைத்தாகத்திற்கான அன்றைய செலவு போதாதென்று பஸ்டாண்டில் வைத்து 'உயிர்மை' வாங்கியதில்... 'Mozart of Madras' 'அல்லா ரக்கா ரஹ்மான்' என்று 'Slumdog millionaire' பற்றி தி கிரேட்... சாரு 'ரஹ்மானின் பிரதாபம்' செய்திருந்தார். விஸ்வநாதன் ராமமூர்த்தி என்கிற ஆரம்ப பீடிகையோடு... தொடங்கி ஆராதனா, ஆவோ ஜாவோ யென வளர்ந்து.... "இந்தப் படத்தைப் பற்றிச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் படத்தைப் பார்த்த அடுத்த நாளே இதை எழுதுவதால் இப்போதைக்கு இவ்வளவு..." என்று ஏழு பக்கத்திற்குப் பிறகு குறிப்பு எழுதியிருந்தார்! பஸ்ஸில் வைத்து படித்து சுருட்டி விட்டதை வீடு வந்து பிரிக்க மனமில்லை. படம் இருக்க, காய் எதற்கு?

படத்தைப் பார்க்கலாம் என்றால்.... இரவு பதினொன்னுக்குப் மேல்தான் டி.வி. யின் பக்கம் போகவே முடியும்! காலையில் தொடங்கும் அதன் சீரியல் ஜால சங்கதி அதுவரைக்கும் நீள்கிறது! விடிய விடிய ராமாயணக் கூத்தும் தோத்தது போங்கள்! சீரியலைப் பார்த்து நம் வீட்டுப் பெண்கள் கண்களை கசக்குவதைக் கண்டு பொறுக்காது... மனிதாபிமானம் பொருட்டும் ஆறுதல் என்று சொல்லக்கூட அருகில் போய்விட முடியாது! (இந்தக் கொடுமைக்கு மனித உரிமை கமிஷனில் யாராவது தீர்வு காணுங்கப்பா! தாங்கல.)

குடும்பத் தலைவர்களுக்கான ஒதுக்கீட்டின் நேரத்தில் அரைத் தூக்கத்தில் போய் அமர்ந்து பாடத்தை ஓடவிட்டால் எதிர்பாராத அளவில் DVDயின் கிளாரிட்டி என்னை அசத்தியது! மாஸ்டர் பிரிண்டை தூக்கி கொடுத்து விட்டானோ! ரஹ்மானுக்கு நன்றி சொன்னேன்.

பொதுவில் நாம் தேடிப் பார்க்கும் கலைப் படங்களிலிருந்து ஆஸ்கர் தேர்வு செய்யும் கலைப்படம் என்பது வித்தியாசமானப் பாதையில் பயணப்படுவதாகவே இருக்கும். பல முறை அனுபவித்தாகிவிட்டது. இசை ஓர் விதிவிலக்கு. யதார்த்தப் பின்னணி இசை ஏங்கினாலும் கிட்டாது. அதற்காக.... 'killing fields' 'Rain Man' படங்களின் பின்னணி இசையை ரசிக்காமலா போனோம்?

பாடத்தைப் பார்க்க ஆரம்பித்ததுமே மனம் படத்தோடு நெருங்கத் துவங்கியது. ஆனாலும்... பத்து நிமிடத்தில் காட்சியாகும் ஒரு காட்சியைப் பார்க்க மட்டும் மனம் முரண்டு பிடித்தது. சிறுவர்களைக் கடத்திவந்து... அவர்களிடம் ஆசை வார்த்தைகள் பேசி... பிச்சை எடுக்க வைக்க அவர்களின் கண்களை கொதிக்கும் எண்ணெய் விட்டு குருடாக்கும் அராஜகத்தை கோணாமல் அரக்கர்களால்தான் பார்க்க முடியும்! ஹோம் தியோட்டரை அணைத்துவிட்டு படுக்கைக்குப் போய்விட்டேன். தூக்கம் வரவில்லை என்பது வேறு செய்தி. 'நாளைக்கு கடன்காரன் வரலாம்!'

மூன்று நாளைக்குப் பிறகு.... ஞாயிறு... இன்று! சரியான முகூர்த்த நாள்! தமிழீழத் தமிழர்களுக்காக எங்கள் ஊரிலும் ஒருவர் தீக்குளிப்பு! காங்கிரஸ்காரர்!!! இறந்து விட்டார்! தலைவர்கள் எல்லாம் வருகை... கட்டாய கடைவடைப்பு கலாட்டா! என் 'Tajwin'க்கு ஏற்கனவே விடுமுறை! பாஸ் டயோடோ டயேட்! இடைப்பட்ட பொழுதில் நல்ல நேரம் பார்த்து மீண்டும்... 'Slumdog millionaire'!

சிகரெட்டைத் தவிர என்னை, என் இருப்பை, சுற்றி சுழலும் உலத்தை, இஷ்டத்துக்கு என்னில் சுதந்திரம் கொண்டு வாழும் கஷ்டங்களையெல்லாம் மறக்கடித்தபடி... என்னை உள்வாங்கி ஜீரணித்துக் கொண்டிருந்தது படம்! விழுது விழுதாகக் கரைவது எனக்கே தெரிகிறது! வியந்தேன்... வியந்தேன்... அளவேயில்லை!!

பம்பாயின் லேண்ட்ஸ்கேப்பை காட்டத் தொடங்கும் அதன் ஆரம்பக் காட்சிகள் விசேசமாகத் தெரிந்தது என்றால்.......படத்தின் ஒவ்வொரு ப்ரேமுக்காகவும் கேமிரா நிறுத்தப்பட்டிருக்கும் கோணம் மனதில் கண்டு மலைத்துபோனேன். ஒவ்வொரு காட்சியும் கவிதை... V.T.ஸ்டேஷன்தான் அழகென்றால் தாராவி சேரிகளுமா அப்படி? சரி, அதுதான் போகட்டுமென்றால்... பொது கழிப்பிடத்தையும் கூடவா ஒரு கேமிரா கவிதையாக்கும்?

காட்சிகளை 'இன்ஞ்' சுத்தமாக பிசிரே இல்லாமல் வியூசுவலாக்கிய படத்தின் எடிட்டிங் இன்னொரு அழகு!

சாதாரண ஒரு கதையை இத்தனைத் தூரம் விறுவிறுப்பாக சொல்ல முடியுமா? சொல்லி இருக்கிறார்களே என்று மனக் கண்ணைத் திறந்து டைரக்டரின் பக்கம் ஆச்சரியமாகப் பார்த்தேன்! இந்தியா வந்து இப்படி எல்லாம் இயக்கி நம்ம இயக்குனர்களை சுயம் உறுத்த விட்டுவிட்டாரே! Directer 'Danny Boyle!' உறுத்துமா? நம்மவர்களுக்கா? 'நிஜமாகவா?'

படம் தொடக்கம் தொட்டு கேமராவுடன் சிறகுகட்டிப் பறக்கும் இசை படம் முடிந்தும் கண்ணுக்கே தெரியாத எழுத்துக்கள் ஓடித் தீர்கிறவரை காதினிக்க மூக்கின்மேல் விரல்வைக்கும்படி நீடிக்கிறது இசை! அல்லா ரக்கா ரஹ்மான்! 'எங்கள் இந்தியா'வின் இன்னொரு அதிசயம்தான் அவர்!

இசைக்காகவும்... பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் இசையைப் பற்றி இசை அறிந்த வித்தகரும் ரஹ்மானின் இசையைத் தூக்கிப் நிறுப்பவருமான 'ஷாஜி' சொல்வதை கொஞ்சம் கேட்போம்... "ரஹ்மான் இதுவரை தந்திருப்பதிலேயே மிகச் சிறந்த இசை என்று ஸ்லம் டாக் மில்லியனரை சொல்ல முடியாது. இந்தியர்களாகிய நாம், ரஹ்மான் திறமை மிக நுணுக்கமாக வெளிப்பட்ட பல திரைப்பாடல்களை கேட்டிருக்கிறோம். ஆனால் முதல் முறையாக ரஹ்மானின் இசையைக் கேட்கும் சர்வதேச சினிமா இசை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு புதுப் புது ஒலிகளுடன் சினிமாவின் சித்தரிப்பில் மிக நயமாக சங்கமிக்கும் ரஹ்மானின் இந்த இசை அற்புதமாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை." ஷாஜியின் இந்தக் கூற்று பெருமளவில் துல்லியம்தான் இல்லையா? 'Slumdog millionaire'ல் ரஹ்மான் உயரத்தைத் தொட்டு இருந்தாலும்.... அவர் தொட்ட பல உயரங்கள் நமக்குத் தெரியும்தானே!

இந்தப் படத்தில்... கதாநாயகி 'விலைமாதர்கள் வீட்டில் நடக்கும் நடனத்தில் அறிமுகம் ஆகிறாள். ரஹ்மானின் இந்திய இசை அந்தக் காட்சியில் தூக்கலாக எழுந்து விரிந்து வசீகரம் செய்கிறது. என்னுடைய... 'நாடகமே உலகம்' கதையில் நாயகி சுகுணாவை நான் அறிமுகம் செய்தபோதும் அப்படிதான் இசைக் குறிப்பு செய்திருந்தேன்! நினைவில் அது எழுந்து ரஹ்மானின் இசையோடு இன்னும் இன்னும் நெருக்கமாகிப் போனேன்.

'Slumdog millionaire' படத்தின் கதை மையம் பேசும் நுட்பம் பற்றி எழுத தனியொரு ஆய்வு தேவையாக இருக்கும்! அத்தனைக்கு கதையோட்டத்தில் பின்னல் காண கிடக்கிறது.

மதக்கலவரத்தின் கோரம்/ பம்பாய் சேரிகளின் அநாதைக் குழந்தைகள்/ அவர்களின் சிதைவு/ சிதைவு கொண்டவர்களின் வாழ்வு/ சிதைவு கொண்டவர்களின் அன்பு/ சூப்பர் ஸ்டார்கள் மீது குழந்தைகள் கொள்ளும் மோகம்/ போலீசின் மாமுல் அராஜகம்/ பெரிய மனிதர்களின் கோணல் மனம்/ யதார்த்ததில் மதங்களைக் கடந்து மனிதர்களை நேசிக்கும் பெருவாரியான மக்கள்/ மதங்களைக் கடந்து துணையைத் தேடும் உள்ளங்கள்/ கற்பு சிதைவுக்குப் பின்னும் தேடியடையும் நிஜக்காதல்/ சமூக அவலங்களைச் சொல்ல கையில் எடுத்துக் கொண்டிருக்கும் டி.வி.யின் மில்லியனர் நிகழ்ச்சியின் நேர்த்தி/ படத்தின் இறுதியில் கதாநாயகனின் நண்பனால் சொல்லப்படும்... 'God is Great' என்கிற மூன்றே மூன்று வார்த்தைகள் படத்தை, தொடக்கம் தொட்டே காட்சி காட்சியாக திரும்ப யோசிக்க வைத்துவிடுகிறது இந்தப் படத்தின் திரைக்கதையில் எத்தனை அழகுப் பின்னல்கள்!

நம்ம ஊர்... 'வியாபாரப் படம் எடுக்கிறேன் பேர்வழிகள்' இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். கட்டாயமாக. அதற்கு முன்னால் தங்களது படங்களை வெவித்தெடுத்த இயக்குனர் தனத்திற்காக கக்கூசில் உட்காரும் போதாகிலும் பாவமன்னிப்பு தேடிவிட்டு படத்தைப் பார்க்கச் செல்வது நேர்மையாக இருக்கும். தொடர்ந்து அந்தப் படத்தில் சிறுவர்கள் நடித்திருக்கும்... அவர்களின் முதல் நடிப்பும் கூட என்னை வியப்பில் ஆழ்த்தியது. மிகுந்த மன நிறைவில் நான் திக்குக்காடிப் போனபோது அந்த பளுவை உங்களுக்கு கடிதத்தில் இறக்கிவைத்தால் தேவலாமென தோணிய நாழிக்கு....

அப்பாடா....!!
ஆனது!

- தாஜ்

Pin It