சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே பாராட்டிய திரைப்படம் என்றதுமே சிடி/டிவிடி யில் வந்தால் இரவல் வாங்கி பார்த்துக்கொள்ளலாம் என்று நான் உஷாராக இருந்திருக்க வேண்டும். சுற்றி இருப்பவர்களில் சிலர் ஆகா ஓகோ என்று புளகாங்கிதப்பட்டதால் போனேன். பாலாவின் படம் என்பதால் கொஞ்சம் பயத்துடன் தான் போனேன். இந்த படத்தின் யோக்கியதையை அதில் வரும் ஒரே ஒரு வசனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

naan_kadavul " கேரளாக்காரன் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டாலும் மூளை நல்லா தான் வேலை செய்யுது"

உடல் ஊனமுற்றவர்களை விலைக்கு வாங்கி அவர்களை பிச்சை எடுக்க வைத்து கொடூரமாகச்சுரண்டி வாழ்கிறது ஒரு கும்பல். அந்தக்கும்பல் தம்மிடம் இருக்கும் மனித சரக்குகளை இன்னொரு கும்பலிடம் பரிவர்த்தனை செய்து கொள்ள பேரத்தில் ஈடுபடுகிறது. இந்த இரண்டு கும்பல்களின் தலைவர்களையும் ஒரு இளம் சாமியார் ஒழித்துக்கட்டுகிறார். கூடவே இந்தக்கும்பலில் இருக்கும் ஒரு கண் தெரியாத பெண்ணுக்கு அவள் செத்த பின்னர் (?) மோட்சம் வேறு கொடுக்கிறார். இந்த சாமியார் வயிற்றுப்பிழைப்புக்காக சாமியார் ஆகும் வழக்கமான தமிழ் நாட்டுச்சாமியார் இல்லையாக்கும். ஹை ஸ்டாண்ட்ர்ட் பெர்சன். அசல் அக்மார்க்/ஐ.எஸ்.ஐ தரம். வட நாட்டிலே அதுவும் புனித கங்கை தூய்மையாக புரண்டோடும் பனாரஸ் நகரத்திலே பிணங்களை எரிக்கும் சுடுகாட்டிலே உருவானவராக்கும் (என்ன பைத்தியக்காரத்தனம்). இந்த சாமியார் தமிழில் பேசுவதை விட இந்தியில் தான் அதிகம் பேசுகிறார் (இந்தியில் டப் செய்தால் வேலை கொஞ்சம் மிச்சமாகலாம். ஒரு வேளை அதற்காகத்தான் இப்படி எடுத்திருக்கிறார்களோ என்னவோ? ). சுற்றி இருப்பவர்கள் புருவத்தை உயர்த்தி வியக்கும் படி அடிக்கடி வட மொழியில் ஸ்லோகம் சொல்கிறார் (பன்ச் டயலாக்). முகத்தில் சாம்பலைப்பூசிக்கொண்டு உடம்பைக்காட்டியபடி தலைக்கீழாக தியானம் செய்கிறார். உலக பந்தத்திலிருந்து விடுபடுவதற்காக அடிக்கடி கஞ்சா வேறு அடிக்கிறார் (கொடுமையடா சாமி). இனி மேல் கஞ்சா முதலிய போதை வஸ்துகளை பயன்படுத்தும் நபர்கள் காவியை அணிந்து சாமியார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். ரொம்ப வசதி. சட்டமும் போலிசும் ஒன்றும் செய்யாது. மரியாதை வேறு கிடைக்கும்.

இந்தப்படத்தில் பாலாவோடு இணைந்து செயல்பட்டவர் ஜெயமோகன் என்கிற முன்னாள் ஆர்.எஸ்.எஸ் காரர். நினைத்தாலே புல்லரிக்கிறது. இவர் தான் படத்தின் கதைக்கு அடித்தளம் என்றால் இவர் மூளையைக்கொண்டு போய் நிச்சயம் சூளையில் தான் வைக்க வேண்டும். ஜெயமோகன் இதுகாறும் இலக்கியத்துறையில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இப்போது திரைப்படத்துறையில் குதித்துள்ளார். இப்படிப்பட்ட சீடனை பெற்றதற்கு இவருடைய குருநாதர் சு.ராமசாமி நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனி மேல் ஜெயமோகன் வழிகாட்டுதலில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் வட இந்தியாவில் கஞ்சா அடித்து திரியும் நாக சன்னியாசி/ சன்னியாசினிகளை வைத்து யாராவது ஒரு படம் தயாரிக்கலாம். ஒரு நாக சன்னியாசி தமிழ் நாட்டிற்கு வந்து வில்லனை பின்னிப்பெடலடுக்கும்படி கதையையும் காட்சியையும் வைக்கலாம் (அகத்தியர் தென்பொதிகை வந்து தமிழ் வளர்த்த கப்சா இருக்கவே இருக்கிறது). என்ன அம்மணப்படம் என்று சென்சாரில் பிரச்சினை வரக்கூடும். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் எதற்கும் தயாராகவே இருக்கிறது. இந்தப்படத்தின் இடையில் ஒரு கிறுஸ்த்தவ கன்னியாஸ்திரியைக்காட்டி பைபிள் வேறு படித்திருக்கிறார்கள். இது யாரை திருப்திப்படுத்துவதற்காக என்று தெரியவில்லை. அப்புறம் அளவு கடந்த வன்முறை.

இந்தப்படத்தில் நல்ல அம்சம் என்கிற ஒன்று இருந்தால் அது உடல் ஊனமுற்றவர்கள் மீது கரிசனையை ஏற்படுத்தியது தான். நாம் நம் தினப்படி வாழ்க்கையில் இம்மாதிரியான ஆட்கள் பிச்சை எடுக்கும் நிலையில் காண்கிறோம். இம்மக்களின் பின்புலத்தில் எத்தகைய வேதனை இருக்கிறது, சோகம் இருக்கிறது, கொடூரமான சுரண்டல் இருக்கிறது, அநியாயம் இருக்கிறது என்பதை நாம் நம்முடைய பரபரப்பான வாழ்க்கைச்சூழ்நிலையை தாண்டி உற்று நோக்கி ஆராய்வதில்லை. கண்டும் காணாமல் கடந்து செல்கிறோம். இனிமேல் நாம் கொஞ்சம் நின்று யோசிக்கக்கூடும். இருந்தும் இந்தப்பிரச்சினையை காட்சிப்படுத்தியதில் குறைகள் உண்டு. இம்மக்கள் மனிதர்கள் என்கிற நிலையில் காண்பிக்கப்படாமல் காட்சிப்பொருளாக காண்பிக்கப்பட்டிருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. மேலும் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி காலத்துப்பாடல்களை அங்கங்கே வைத்து தமாஷ் பண்ணியதால் படம் துவண்டு விடுகிறது. மொத்தத்தில் இந்தப்படம் சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களின் பிரச்சினைக்கு தீர்வாக தேசளாவிய இந்து மதவெறித்தனம் அதிகாரம் ஏறுவதை மறைமுகமாக முன் வைக்கிறது. ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு ஒரு நல்ல பிரச்சாரப் படம் கிடைத்திருக்கிறது. மூன்றாண்டு காலம் யோசித்து இத்தனை செலவு செய்து உழைப்பை கொட்டி இப்படி ஒரு படத்தை இயக்குனர் பாலா எடுத்திருப்பதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

- தமிழ்நெஞ்சம்

முதலாளித்துவ யுகம் மனிதனை அவன் உற்பத்தி செய்யும் பொருட்களில் இருந்தும் அவன் வாழும் சமூகத்திலிருந்தும் அந்நியப்படுத்துகிறது என்று கூறினார் மாமேதை மார்க்ஸ். அந்தக் கருத்தை பிரதிபலிக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ள படமே பிரியதர்சனின் காஞ்சிவரம்.

இக்கதையில் ஒரு பட்டு நெசவாளனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களோடு கூட அந்நெசவாளனுக்கு ஒரு தொடர்பும் இருப்பதில்லை; பலரும் பகட்டாக உடுத்துவதற்காகப் பட்டாடைகள் நெய்யும் அந்நெசவாளிகள் நேர்த்தியாகத் தாங்கள் நெய்த பட்டாடைகளைப் பார்க்கக் கூடப் பல காத தூரம் நடக்க வேண்டியுள்ளது என்ற அவலநிலை தெளிவாக்கப் பட்டுள்ளது. இக்கதையின் பின்புலம் வெள்ளையர் ஆட்சியின் இறுதி காலம். அது படம் பிடிக்கும் சமூகம், காஞ்சிவரம் பட்டு நெசவாளிகளின் வாழ்க்கை.

சுப்ரமணியபுரம் திரைப்படம் அப்படம் எடுக்கப்பட்ட 80-களில் மதுரை இருந்த நிலைக்கு எவ்வாறு நம்மைக் கொண்டு சென்றதோ அதைப்போலவே விடுதலைக்கு முன்பு காஞ்சிவரமும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களும் பேருந்துகள், போலீஸ்இலாகா உட்பட அனைத்துமே தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

பட்டு நெசவாளர்கள் பட்டு நூல் விநியோகிக்கும் உரிமையாளர்களிடம் அனுபவித்த சுரண்டலும் ஒடுக்கு முறையும் கண்முன் கலைநுணுக்கத்துடன் நிறுத்தப்படுகிறது. நெசவாளர்களை ஒடுக்க, அடித்துத்துன்புறுத்த அடியாள் பட்டாளம் பட்டாலை அதிபர்களால் பராமரிக்கப்பட்டவிதம், பட்டாலை அதிபர்களின் செல்வச் செழிப்பிற்காக உழைத்துக் கொடுத்த நெசவாளிகள் தேய்ந்து போன ஓடாய்த்திரிகையில் இந்த அடியாட்கள் மட்டும் எவ்வாறு கொழுத்த கன்றுகள் போல் திரிந்தார்கள் போன்றவை அனைத்தும் நெஞ்சக் கொதிப்பினை ஏற்படுத்தும் விதத்தில் சித்தரிக்கப்படுகிறது.

தனது முதலாளி மகளின் திருமணத்திற்காக தான் நெய்து கொடுத்த பட்டுசேலையை அதாவது தனக்கு முதலாளியிடமிருந்து மட்டுமல்ல வெள்ளை அதிகாரியிடம் இருந்தும் பாராட்டு பெற்றுத்தந்த அந்த பட்டுச் சேலையை தன் மனைவியிடம் காட்டுவதற்காக முதலாளியின் வீடு வரை அவளை கூட்டிச் செல்லும் அவலநிலை எவ்வாறு நெசவாளிகளைப் பொறுத்தவரையில் ஒரு இயல்பான விசயமாக இருந்தது என்பதை சித்தரித்துள்ள விதம் பார்ப்பவர்களை நெகிழவைக்கிறது.

ஒரு நல்ல திரைப்படத்தின் தகுதியும் அதுதானே. படத்தில் வரும் சோகமான சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ள வேதனையை உணர்ந்து அவர்களே அழுது அங்கலாய்த்தால் அது பார்ப்பவர் மனதில் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது; மிதமிஞ்சிய கஷ்டத்தில் இருக்கும் படத்தின் கதாநாயகன் வேதனை தலைக்குமேல் போய்விட்டநிலையில் தனது வருத்தத்தை விரக்தி கலந்த ஒரு சிரிப்பின் மூலம் வெளிப்படுத்தினால் அதை பார்ப்பவர்கள் அழுவர். பார்ப்பவர்களை படம் பார்ப்பதோடன்றி அதில் ஈடுபடுத்தவும் வேண்டும். அத்தகையதே ஒரு நல்ல திரைப்படம் இப்படம் பல இடங்களில் அதனைச் செவ்வனே செய்துள்ளது.

விடுதலைப் போராட்ட காலத்தில் கம்யூனிஸ்டுகளின் செயல்முறை எவ்வாறு இருந்தது என்பதையும் படம் நன்கு பிரதிபலித்துள்ளது. ஒரு எழுத்தாளரைப்போல் ஊருக்குள் நுழைந்து தொழிலாளர்களில் புரிதல் உள்ள ஒரு பகுதியினரை தேர்ந்தெடுத்து அவர்களை தயார் செய்து பிற தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு தெரு நாடகம் போன்ற கலை வடிவத்தைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் அவர்கள் ஆட்பட்டுள்ள சுரண்டலின் அவலத்தை நேர்த்தியாக அவர்களுக்கு உணர்த்தி இச்சுரண்டல் சாஸ்வதமானது இதிலிருந்து மீளவே முடியாது என்ற விதத்தில் அவர்கள் மனதில் ஆழப் பதிக்கப்பட்டிருந்த பதிவுகளை அகற்றி நாம் ஒருங்கிணைந்தால் இந்த நிலைமையையும் மாற்ற முடியும்-குறைந்த பட்சம் உடனடியாக தங்களது சம்பளம் மற்றும் வேலை சூழ்நிலைகளிலாவது மாற்றத்தினை கொண்டுவர முடியும் என்று அவர்களை உணர வைப்பது சுருங்க கூறி நேர்த்தியாக விசயத்தை விளங்க வைக்கிறது. இதனை வடிவமைத்துள்ள இயக்குநரின் திறமையையும் நன்கு வெளிப்படுத்துகிறது.

ஆனால் அதில் உள்ள ஒரே குறை தெரு நாடகத்தில் முதலாளியை வெட்டிக் கொலை செய்வது போன்ற முடிவினைக் காட்டியிருப்பதாகும். அது கம்யூனிஸ்டுகளைப் பற்றி ஒரு தவறான சித்திரத்தை ஏற்படுத்துகிறது. கம்யூனிஸ்ட் என்பவன் சமூக மேம்பாட்டிற்காக அடிப்படையில் தன் உயிரைக் கொடுக்க தயாராய் இருப்பவனே தவிர உயிர்களை எடுப்பதில் ஆர்வம் உள்ளவன் அல்ல. வன்முறை அனைத்து சமயங்களிலும் அவன் மேல் திணிக்கப்படுகிறதே அன்றி அவனாகவே சுயவிருப்பின் அடிப்படையில் அவன் அதை கையிலெடுப்பதில்லை.

இப்படத்தின் சூழ்நிலையில் எழுத்தாளர் என்ற பெயரில் வரும் கம்யூனிஸ்டின் வழிகாட்டுதலில் மிகப் பெரும்பாலான தொழிலாளர்களை திரட்டுவதில் முன்னணித் தோழர்கள் வெற்றி பெற்றுவிடுகின்றனர் அந்நிலையில் முதலாளியைக் கொலை செய்வது போன்ற ஒரு தீர்வினை இப்பிரச்னையில் காட்டியிருக்க வேண்டியதில்லை. ஏனெனில் ஒன்று திரண்டுள்ள தொழிலாளர் சக்தியே-அதன் மூலமாக அவர்களால் மேற்கொள்ளப்பட முடியும் பல அமைப்பு ரீதியான நடவடிக்கைகளே படத்தில் காட்டப்படுவது போன்ற முதலாளிகளின் தாக்குதல்களை சமாளிக்கப் போதுமானவை.

தமிழ்த் திரைப்படங்களை மிக அதிகம் பார்த்துப் பார்த்து ஆண் பெண் இருபாலரின் பாலுணர்வு ரீதியான காதலே இவ்வுலகின் மிகப்பெரிய விசயம் என்ற எண்ணம் மனதில் ஆழப்பதிந்துள்ள ரசிகர்களுக்கு ஒரு வேறுபட்ட நாயகனும் நாயகியும் இப்படத்தில் காட்டப்படுகின்றனர். எப்போதும் தனியாகவே சந்தித்து பேசிக்கொள்ளாத, டூயட் பாடிக் கொள்ளாத மலரும் மணமும் போன்ற ஒரு யதார்த்தமான காதல் காணக் கிடைத்திருக்கிறது.

இது தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கிடையே பள்ளிச் சிறுவர்களாய் இருந்த காலந்தொட்டு இருந்த நட்பு ஆழமாக வேரூன்றி வாலிபப்பருவத்தில் ஆண் மகன் இராணுவவீரன் என்ற அரசு வேலையில் சென்றபின் தன் தாய் தந்தையருக்கு எழுதும் கடிதம் மூலம் வெளிப்படுத்தும் நடைமுறைக் காதல்.

தன் மகள் அவளது இளம்பருவ நண்பனான சக தொழிலாளியின் மகனிடம் மனதை பறிகொடுத்திருக்கிறாள் என்பதை அவன் இராணுவப் பணியில் சேர செல்லும் போது அவள் சிந்தும் சில கண்ணீர் துளிகள் மூலம் அறிந்து கொள்ளும் தந்தை; நான் மாப்பிள்ளை பையனின் தந்தை என்ற பிகு இல்லாத பையனின் தந்தை; நான் பெண்ணை கொடுக்கப் போகிறவன், எனவே சற்று பணிந்துதான் போக வேண்டும் என்ற எண்ணமில்லாத பெண்ணின் தந்தை; இருவரும் இயல்பாக ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டு ஒருவருக்கொருவர் தெரிவிக்கும் திருமணத்திற்கான சம்மதம் இவை நிலவவேண்டிய தொழிலாளிவர்க்க கலாச்சாரத்தின் அற்புதமான வெளிப்பாடுகள்.

காவல்துறை ஆளும் வர்க்கங்களின் ஏவல் துறையே என்பதை படம் தெளிவாக விளக்கியுள்ளது. சட்ட விரோதம் என்று வர்ணிக்கக்கூடிய எந்த ஒரு காரியத்தையும் செய்யாதிருந்த நிலையிலும் கூட எழுத்தாளராக அக்கிராமத்தில் வந்து தங்கும் கம்யூனிஸ்டை சுட்டுத் தள்ளுவது; அவரது முதன்மை சீடரை சிறையில் அடைத்து அடித்து நொறுக்கி நான்கு பேர் தலைச்சுமையாக அள்ளிக்கொண்டு வருவது போன்ற காட்சிகள் தெளிவுபடுத்துகின்றன. ஒரு சிந்தாந்தத்தை கொண்டிருப்பதே, அதனை பிறரிடம் பிரச்சாரம் செய்து அணி திரட்டுவதே ஒருவரை சுட்டுக் கொள்ளும் அளவிற்கு கொடுங்குற்றம் என்று நடைமுறையில் கருதும் போக்கு முதலாளித்துவ சட்ட நீதி நெறிமுறைகளின் போலித்தனத்தையும் வர்க்க சார்பினையும் செவ்வனே வெளிப்படுத்துகிறது.

பட்டு நெசவாளியின் குடும்பத்தில் ஒருவன் இறந்தால் குறைந்தபட்சம் ஒரு பட்டு நூலையாவது இறந்தவரின் உடலில் கட்டிச் சிதையிலிடவேண்டும். அவர்களால் அனுதினமும் வேலை செய்யும் ஒரு பொருளினை அந்த அளவிற்கே அவர்கள் நுகரமுடியும். ஆனால் கதையின் நாயகனுக்கோ ஒரு பேராசை. அவன் திருமணம் செய்து அழைத்து வரும் மணமகள் பட்டு உடுத்தி வரவேண்டும் என்று விரும்புகிறான். அது நிறைவேறவில்லை.

தன் மகளுக்கு பேர் வைக்கும் வேளை அவள் காதில் அவளுக்கு தான் என்ன சேர்த்து வைக்கப் போகிறேன் என்பதைக் கூறும் வகையில் அவன் சொல்வதும் அதேதான். அதாவது பட்டுடுத்தி அவளை மணமகள் ஆக்குவேன் என்று கூறுகிறான். அன்று நிலவிய நிலவரப்படி அதுவும் நிறைவேற்றப்படவே முடியாத ஆசையே. அதனை அவன் மனைவி உட்பட அனைவரும் ஆதங்கத்துடன் உணர்கிறார்கள். இருந்தாலும் அவன் அதனைச் செய்தே தீருவதென்பதில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறான்.

பட்டுச்சேலை வாங்குவதற்காக தான் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்தப் பணத்தை மனைவிக்கு காட்டி அவளது அவநம்பிக்கையைப் போக்க முயல்கிறான். ஆனால் தங்கையின் வாழ்க்கைக்காக அவன் சேமித்தப் பணத்தை மைத்துனனிடம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதன் பின்னரும் அவனது அந்த ஆசை அவனைத் தீவிரமாக பற்றியிருப்பதால் பட்டுநூலை திருடத் தொடங்குகிறான். பட்டு நூலை வேறெங்குவைத்து கொண்டு வந்தாலும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று அவன் வாயில் உதக்கி வெளியில் தெரியாமல் திருடிச் சேர்த்து அதை வீட்டில் இருக்கும் தறியில் இரவில் நெய்து இறக்கும் தருவாயில் உள்ள தன் மனைவியிடம் தான் தன் பெண்ணுக்குப் பேர்வைக்கும் போது கூறியவாக்கை நிறைவேற்றுவதில் எத்தனை உறுதியாக இருக்கிறேன் என்பதைக் காட்டுகிறான். கடைசியில் தன் மகளுக்கு திருமணம் பேசி நிச்சயிக்கும் சூழ்நிலையில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கையிலும் பட்டுடுத்தி அனுப்புவேன் என்று கூறுகிறான்.

வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் பட்டுநூல் திருடவேண்டியுள்ளதால் போராட்ட காலகட்டத்தில் மிதவாத நிலை எடுக்கிறான். வேலை நிறுத்தத்தில் இருக்கும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப வழிவகுக்கிறான். அந்நிலையில் அவனுக்கு சம்பந்தியாகவுள்ள- கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறாமல் வேலைக்கு செல்வதில்லை என்ற உறுதியான தீவிரவாத நிலை எடுத்த-சக தொழிலாளியுடன் ஏற்படும் சச்சரவில் அவன் செய்யும் திருட்டு வெளிப்பட்டு அடித்து உதைக்கப்பட்டு கைதாகிறான்; இத்துயரம் அவனது மகளின் தற்கொலை முயற்சியில் சென்று முடிகிறது.

பேச்சு மூச்சற்று இருக்கும் அவளைப் பார்க்கப் பரோலில் வந்த அவனுக்கு தான் மீண்டும் சிறை சென்றபின் அவனது மகளை யார் பார்ப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. திருடனின் மகள் என்ற பெயர் வரும் என்ற சாக்கில் தன் மைத்துனனும் அவளைப் பார்க்க தயாராக இல்லாத சூழ்நிலையை அறிந்துகொண்டு அவன் அவளை விசம் கொடுத்துக் கொல்கிறான். அவன் அத்தனைப் பாடுபட்டு பலகாலம் நெய்த பட்டுத்துணி அவளது உடம்பை முழுமையாக போர்த்தக்கூட போதுமானதாக இல்லை. கதை இத்துடன் நிறைவுபெறுகிறது.

மற்ற அரசியல் தத்துவங்களைப் போல் அல்லாது கம்யூனிஸம் வெறும் அரசியல். பொருளாதாரம் அல்லது சமூகம் குறித்த தத்துவம் மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கைத் தத்துவம். உண்மையிலேயே கம்யூனிஸ சித்தாந்தத்தின் அரவணைப்பின் கீழ் ஒருவன் வந்த பின் அவனது வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் பெரிய மாற்றம் என்பது ஏற்பட வேண்டும்.

அது ஏற்படாத கம்யூனிஸ்டுகளின் புரிதல் ஆழமானதல்ல 'அறிவு ஜீவிகளைப் பொறுத்தவரை அது சாத்தியம். சாதாரண தொழிலாளர்களைப் பொறுத்தவரை அது சாத்தியமா' என்ற கேள்வி எழுலாம். ஆனால் தொழிலாளி வர்க்கம் அதனை வாழ்க்கைத் தத்துவமாக ஏற்றுக் கொள்வதில் அதற்கு மிகப்பெரும் சிரமம் இருப்பதில்லை. ஏனெனில் பலரையும் ஆட்டிபடைக்கும் குட்டி முதலாளித்துவ குணங்கள் தொழிலாளி வர்க்க வாழ்க்கை முறையில் இயல்பாகவே இருப்பதில்லை.

இதைத்தான் வேறு வார்த்தைகளில் ஏழைகளைப் பொறுத்த வரை அவன் எதையும் பொருட்படுத்துவதில்லை. பணக்காரர்கள் தங்கள் பணத்தால் எதையும் தூக்கி எறிந்துவிடுவர். நடுத்தர மக்கள் தான் இவ்விரண்டையும் செய்ய முடியாமல் தவிப்பவர்கள் என அனுபவசாலிகள் உலக வழக்காகக் கூறுவர். இந்நிலையில் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அரவணைப்பின் கீழ் வந்துவிட்ட நிலையிலும் கூட அவ்வியக்கத்தின் முன்னணி ஊழியர்களாக ஆகிவிட்ட வேளையிலும் மணமகளுக்கு சீர்தனமாக கதாநாயகன் என்ன செய்யப்போகிறான் என்று கேட்கும் நிலையில்தான் கதாநாயகனின் சகதோழனாகிய சம்பந்தியாகப்போகும் தொழிலாளி இருக்கிறான் என்பதும் அதனை எப்படியேனும் செய்துவிடவேண்டும் என்ற அடிப்படையில் கதாநாயகன் இருந்து அதற்காக நூல்திருடும் தனது போக்கை தொடர்கிறான் என்பதும் உணர்வு பூர்வமாக படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு நெருடலாக உள்ளது. கம்யூனிசம் அவர்களது குணாம்ச ரீதியான அகவாழ்வில் வேதனை தரும்விதத்தில் ஒரு பங்கினையும் ஆற்றவில்லை என்பதையே அது கோடிட்டுக் காட்டுகிறது.

'இது சமகாலத்துக் கதையல்ல; வெள்ளையன் ஆட்சி செய்த காலத்துக் கதை; மேலும் சில உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தீட்டப்பட்ட சித்திரமே இது. எனவே இது போன்ற எதிர்பார்ப்புகளை எவ்வாறு இந்த விசயத்தில் நாம் கொண்டிருக்க முடியும்' என்ற கேள்வி எழுப்பப்படலாம்.

ஒரு கதை எந்தக் காலத்தில் நடந்ததாகக் கூறப்பட்டாலும் தற்காலத்து யதார்த்தங்களோடு பொருத்தமுடையதாக அது அதிகளவு இருந்தால் மட்டுமே தற்கால ரசிகர்களால் பார்க்கவும், ரசிக்கவும் முடிந்ததாக இருக்கும். மேலும் உண்மை நிகழ்வுகளை அப்படியே முன்வைப்பது சமூக நிகழ்வுகளின் முன்பு கண்ணாடியை வைத்துக் காட்டுவது போல நயமற்றதாக ஆகிவிடும். அதனால் தான் மணிரத்னத்தின் 'இருவர்' திரைப்படமும் அது பிரதிபலித்த அரசியல் காலகட்டத்தில் உண்மையில் நடந்த சில அபத்தமான நிகழ்வுகளின் குறுக்கீடு இல்லாதிருந்தால், கதை இவ்வாறு தான் முடிந்திருக்கும் என்ற மாதிரித் தன்மையை படம்பிடித்தது.

அதைப்போல் கம்யூனிஸத்தை ஒரு வாழ்க்கைத் தத்துவம் என இயக்குனர் பார்த்திருந்தால் இத்தகைய ஜீரணிக்கமுடியாத, சமூக ஆர்வலர்களுக்கு உற்சாகம் தராத முடிவினை கதையில் கொண்டு வந்திருக்கமாட்டார்.

ஒரு வகையில் அன்று முதல் இன்றுவரை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நிலவும் மிக அடிப்படையான கோளாறும் இதுதான். அது வாழ்க்கைத் தத்துவமாக கடைப்பிடிக்கப்படாமல் இருந்ததன் காரணமாகவே எத்தனையோ தியாகங்களை இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் அறியப்பட்டவர்கள் செய்திருந்தும் இன்று கோட்பாடற்று, சமூதாய மாற்றம் எனும் இலக்கினை இழந்து முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகளாக ஆகும் நிலைக்கு அக்கட்சிகள் தரம் தாழ்ந்து போயுள்ளன.

இந்த அம்சமே காஞ்சிவரம் படம்பார்த்து முடிக்கையில் ஒருவகையான கையாலாகாத அவலமனநிலையை பார்ப்பவர் மனதில் ஏற்படுத்துகிறது. ஒரு திரைப்படத்தில் எத்தனையோ சோக நிகழ்வுகள் வரலாம் ஆனால் அந்த சோக நிகழ்வுகள் சகப்புணர்வையும் கையாலாகாத நிலையையும் ஏற்படுத்துவையாக இருக்கக்கூடாது.

எல்லா கலை வடிவங்களுமே பல தரப்பட்ட சமூக மக்களின் அக - புற வாழ்க்கைகளில் நிலவும் சமூகத்தின் மையமான வேதனையை ஏதாவதொரு வகையில் பிரதிபலிப்பவையே. அதனால் தான் எந்த உயர்ந்த கலைப் படைப்பும் அது படைக்கப்பட்ட சமூகத்தின் மையமான வேதனை சார்ந்த சமூக அவலங்களின் மூலகாரணத்திற்கு எதிராக கோபத்தையும் துடிப்பையும் ஏற்படுத்துவதாகவே அமைகின்றது. அவ்விசயத்தில் மட்டும் இத்திரைப்படம் தோல்வியடைந்திருக்கிறது. அதற்கான காரணம் இப்படம் யதார்த்தவாதத்தை மட்டுமே பிரதிபலித்திருப்பதே.

அதாவது எல்லா கலை இலக்கியங்களுமே பிரச்சாரங்கள் தான். ஆனால் எல்லா பிரச்சாரங்களும் கலை இலக்கியங்கள் ஆகிவிடுவதில்லை என்ற கூற்றின் அடிப்படையில் இப்படமும் அது எத்தனையோ அற்புதமான விதங்களில் பட்டு நெசவாளிகளின் ஒரு கால வாழ்நிலையை, அக்காலகட்டத்தின் சமூகப் பின்னணியை, அதன் மையமான வேதனையை பிரதிபலித்திருந்தாலும் அது இறுதியில் ஏற்படுத்தும் சோர்வின் மூலமாக இச்சமூகம் என்றென்றும் இப்படியே இருந்து இது போன்ற சோகங்களை உருவாக்கக் கூடியதே என்பதைத் தழுவிய ஒரு பிரச்சாரத்தையே செய்வதாகப்படுகிறது.

பிரச்சாரம் என்ற வார்த்தை படைப்பாளிகளை பெரிதும் பாதிக்கக்கூடியது தான் ஒரு பிரச்சாரகன் என்று கூறிக்கொள்ள எந்தப் படைப்பாளியும் விரும்பமாட்டான். தனது படைப்புகள் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒன்றுக்கு தனது புலனறிவிற்கு புலப்படாமல் ஒரு பிரச்சாரத்தையே செய்துகொண்டிருக்கிறது என்பதை அவன் ஒப்புக்கொள்ளமாட்டான். எவ்வாறு கூலியடிமைத்தனத்தில் இந்த அமைப்பில் இருக்கும் ஒருவன் தான் கூலியடிமை என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்குவானோ அதைப்போல.

படைப்பாளிகளை வெறும் யதார்த்த வாதம் மட்டும் வழிநடத்தினால் அதன் விளைவு எப்படிப்பட்ட படைப்பாக உருவாகுமோ அப்படிப்பட்ட படைப்பாக காஞ்சிவரம் வெளிவந்துள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் படைப்பாளிகளை வழிநடத்தவேண்டியது வெறும் யதார்த்தவாதத்திற்கு பதில் சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கவல்ல சோசலிச யதார்த்தவாதமே.

அந்த அடிப்படையில் படத்தின் இறுதியில் பிரதிபலிக்கப்படும் கையாலாகாத் தனமும் சோர்வும் ஏற்படாதவாறு சமூக மாற்றப் போரில் ஈடுபடத்தூண்டும் ஒரு உற்சாகத்தைத் தரவல்ல உயர்ந்த யதார்த்தவாதத்தை பிரதிபலித்திருக்குமானால் காஞ்சிவரம் ஒரு உன்னதமான படைப்பாக இருந்திருக்கும்.

 - தோழர் ஆனந்தன்

ஏ.ஆர் ரகுமானுக்கு கோல்டன் குளோப் விருதை பெற்றுக் கொடுத்த படமான “குப்பத்து நாய் லட்சாதிபதி” என்ற படம் இந்திய குப்பத்து சிறுவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டது. சர்வதேச ரீதியாக பல விருதுகளை பெற்றுக் கொண்ட இப் படம் ஒஸ்காரிலும் சில விருதுகைளப் பெறுலாம் என கருதப்படுகின்றது. ரொரண்ரோ திரைப்படவிழாவில் பலரது பாராட்டைப் பெற்ற படம். அத்துடன் சிறந்த மக்கள் தெரிவு விருதையும் பெற்றுக் கொண்ட படம்.

ஓஸ்காரில் பத்து விருதுகளுக்காக இப் படம் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் இசைக்கு ஏ.ஆர்.ரகுமானுக்கும், பாடல்களுக்காக இரு பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்றை (ஓ..சாயா...சாயா...) பாடியவர் மாயா- M.I.A எனப்படும் மாதங்கி அருட்பிரகாசம். இவர் லண்டனில் பிறந்து, இலங்கை, இந்தியாவில் சிறிது காலம் வாழ்ந்து இப்பொழுது லண்டனில் வாழ்கின்றார். இவரது தந்தை “அருளர்” என அழைக்கப்படும் ஈரோஸ் இயக்க ஸ்தாபகர்களில் ஒருவர். M.I.A - Missing in Action and Missing in Acton.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களில் சுமார் 33 வீதமானோர் இந்தியாவில் தான் வாழ்கின்றனர். மும்பையில் மாத்திரம் சுமார் 2.6 மில்லியன் சிறுவர்கள் சேரியில் வாழ்கின்றனர். இதில் 400,000 சிறுவர்கள் பாலியல் தொழில் புரிகின்றனர். அங்கு வாழும் ஒருவனைப் பற்றிய படமே இது.

விகாஸ் சுவாரப்பின் கேள்வியும், பதிலும் என்ற நாவலை மையமாகக் கொண்டு சிமன் பியுபோய் திரைக்கதை அமைத்துள்ளார். எ.ஆர். ரகுமானின் இசையமைத்துள்ளார். இயக்கம் டான் பொயில்; Danny Boyle (இங்கிலாந்து).

மும்பை தெரு வீதிகளில் வாழும் 18 வயது ஜமால் மாலிக் Who Wants To Be A Millionaire? என்ற லட்சாதிபதி போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறுகின்றார். இன்னும் ஒரேயொரு கேள்வி, பதில் கூறினால் 20 மில்லியன் ரூபா பரிசு. அன்றைய நிகழ்ச்சியை அத்துடன் முடித்துக் கொள்கின்றார் நிகழ்ச்சி அறிவிப்பாளர் பிரேம் குமார் (அனில் கபர்);. நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்ட அரங்கத்தை விட்டு வெளியே காலடிவைத்த ஜமால் பொலிஸால் கைது செய்யப்படுகின்றான். மோசடி செய்து பதில்கள் கூறியதாக இன்ஸ்பெக்டர் காரணம் கூறுகின்றார். அடி, உதை எப்படி பதில்களை பெற்றுக் கொண்டாய்? கேள்விகளுக்கான பதில்களை எப்படி ஜமால் தெரிந்து கொண்டார் என்பதுடன் விரிகின்றது. வாழ்வின் அவலங்களை, வறுமையின் நிறங்களையும், அவனது காதலின் தூய அன்பையும் கூறுகின்றான். ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவன் அளித்த பதில்கள் எங்கிருந்து பெற்றுள்ளான். பார்வையாளர்களுக்கு வெளிச்சமாகின்றது. மறு நாள் இறுதிக் கேள்விக்கான பதிலை நோக்கி இன்ஸ்பெக்டரும் அன்றைய இரவும் நகருகின்றது.

கேள்விகளுக்கான பதிலை எப்படி பெற்றுக் கொண்டான்?

இந்து, முஸ்லீம் கலவரத்தில் தாய் இறந்து விட, ஊரைவிட்டு தனது அண்ணன் சலீமுடன் ஓடி வருகின்றான் ஜமால். வந்து சேர்ந்த இடம் மிகவும் மோசமான பம்பாயின் தாதா உலகத்தில். சேரி வாழ்வு. இவர்களுடன் அநாதரவற்று நின்ற லத்திக்காவையும் சேர்த்துக் கொள்கின்றான் ஜமால். சிறுவர்களுக்கு வாழ்வு தருவதாக கூறி அழைத்துச் சென்ற கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனர். நன்றாக பாட்டு பாடுபவர்களது கண்களை குருடாக்கி, பணம் பிச்சை எடுக்க அனுப்புகின்றது இந்தக் கும்பல். ஜமாலும் நன்றாக பாடுவான். இந்தக் கும்பலின் நம்பிக்கையை சம்பாதிக்கும் சலீமிடமே, ஜமாலின் கண்களை கொதி எண்ணெயை ஊத்தி குருடாக்கும்படி கூறுகின்றனர். அமிலத்தை எடுத்து அருகில் நின்ற கும்பல் உறுப்பினக்கு ஊத்திவிட்டு தப்பி ஓடுகின்றனர். காலங்கள் கரைகின்றன. ஜமால் உணவு விடுதியில் வேலை பார்க்கின்றான். சலீம் தாதா குழுவில் உறுப்பினராகி விடுகின்றான்.

ஜமால் லத்திகாவை தேடித்திரிகின்றான். ஒருவாறு லத்திகாவை கண்டுபிடித்து சலீமின் உதவியுடன் மீட்டுக் கொள்கின்றான். சலீம் துப்பாக்கி முனையில் ஜமாலை துரத்திவிட்டு லத்திகாவை தனதாக்கிக் கொள்கின்றான். பின்னர் லத்திகா, சலீமின் தாதா குழு தலைவரின் சொத்தாக்கப்படுகின்றாள். ஜமால் தொடாந்து லத்திகாவை தேடுகின்றான். அவள் இருப்பிடத்தை அறிந்து, அங்கு சென்று தன்னுடன் வரும்படி கூறுகின்றான். இதற்கிடையில் இப் போட்டியில் கலந்து கொள்கின்றான். போலிஸ், அடி உதையின் பின்னர், மறு நாள் காலை ஜமால் பற்றிய விபரங்கள், பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் அலங்கரிக்கின்றன. சலீம் லத்திகாவிடம், தனது முதலாளியின் கார் திறப்பையும் தனது கைத் தொலைபேசியையும் கொடுத்து தப்பி ஓடி விடுமாறு கூறுகின்றான். தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு கூறுகின்றான்.

இறுதிக் கேள்வி இவர்கள் பள்ளியில் படித்த Three Musketeers கதையை மையமாகக் கொண்டது. இதற்கான விடைக்கு உதவி பெற தனது அண்ணன் சலீமின் கைத்தொலைபேசிக்கு அழைக்க்கின்றான். நீண்ட நேரத்தின் பின்னர் லத்திகா குரல் கொடுக்கின்றாள். அப்பாவியாக விடை தெரியாது எனக் கூறுகின்றாள். சலீம் தனது முதலாளியை சுட்டுக் கொல்கின்றான். சலீமும் இறக்கின்றான். இறுதிக் கேள்விக்கான விடையை அதிர்ஸ்டமாக “ஏ” எனக் கூறுகின்றான். அதுவே சரியன விடை. 20 மில்லியன் ரூபாய்கள் பரிசாக பெற்றுக் கொள்கின்றான். ஜமாலும், லத்திகாவும் இணைகின்றனர்.

படத்தில் வரும் சிறுவர்களுக்கு இந் நிகழ்ச்சி பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் இந் நிகழ்ச்சியையோ, இப் படத்தையோ பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை. பாத்திரங்கள், பார்வையாளர்கள் என அந்நியப்பட்ட சூழ்நிலையில் தான் இது உள்ளது. படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் தமது மனச் சாட்சி மீதான விசாரணைகளை மேற்கொள்ளக் கூடாது. இது படத்தின் ஆரம்பத்தில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. படத்தின் ஆரம்பத்தில் ஜமால் இறுதிக் கேள்வி பதில் கூறி 20 மில்லியன் ரூபாயை பெறுவாரா? என்ற கேள்வியுடனேயே படம் தொடங்குகின்றது. மத்திய மேல் தட்டு வர்க்க பார்வையாளர்கள் சேரி சிறுவனுக்கு 20 மில்லியனா? என்ற கேள்வியுடனே படத்தை பார்க்க ஆரம்பிப்பார்கள். படம் பார்வையாளர்களை சேரி வாழ் மக்களது வாழ்வியலில் இருந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மேலும் அந்நியப்படுத்துகின்றது. ஜமாலை ஒரு கதாநாயக, காவியனாகவே காட்டுகின்றார்கள். இப் படத்தைப் பார்க்கும் பொழுது, ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் படத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது. இறுதிக் காட்சி மேலும் இதற்கு சான்று.

உலகமயமாக்கலின் கட்டாயம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளை எதுவுமற்றவர்களாக காட்டுவதுடன், இங்கு சமூகரீதயான ஒடுக்கு முறைகள் உள்ளன என்பதனை வெளிப்படுத்தி இந்திய பார்வையாளர்களையும், அவர்கள் நாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையினையும் தகர்ப்பது மிக முக்கியம்.

காதல் பற்றிய மத்திய தர வர்க்க கோட்பாடுகளில் இருந்து மாறி, கற்பு போன்ற கற்பிதங்களை மீறி ஜமாலின் தூய காதல் வெளிப்படுகின்றது. இது வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் மத்தியேலே தான் சாத்தியம்.

தாதாக்கள் அவர்களது மனோ நிலைகள், கதாநாயகத் தன்மைகள் சலீமிடம் சென்றடைகின்றன. அதன் வெளிப்பாடு தம்பியின் காதலியையே துப்பாக்கி முனையில் தனதாக்கிக் கொள்கின்றான். இது “துப்பாக்கியிலான” அதிகாரத்து வெளிப்பாடு. இது எமக்குப் புதிதல்ல.

சலீம் பாத்திரத்தின் படிப்படியான வளர்ச்சி இயல்பாகவுள்ளது. ஜமாலின் வளர்ச்சி இயல்பற்றுள்ளது. தாஜ்மகால் உல்லாசப்பயணிகளிடம் ஆங்கிலம் பேசுவது போன்றவை நம்பமுடியாமல் உள்ளது. அதுவும் ஒரு சிறுவனை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் உல்லாசப் பயணி, “இது ஓர் 5 நட்சத்திர கோட்டல், இராணி விபத்தில் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டார்” போன்றவற்றை நம்பும் உல்லாசப்பயணி. இதில் யார் முட்டாள், பார்வையாளர்களா? பாத்திரங்களா?

படத்தில் வரும் ஜமாலும், சலீமும் முஸ்லீம்கள். ஏன் இவர்களை இந்துக்களாக காட்டவில்லை என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே. மூலக் கதையில் இப் பாத்திரத்தின் பெயர் “ராம் மொகமட் தோமஸ்” என உள்ளது. நாவலாசிரியர் இப் பாத்திரம் ஓர் இந்தியன் எனக் காட்டுவதற்காகவே அவ்வாறான பெயர் சூட்டப்பட்டதாக தெரிவித்தார். புடத்திற்கான வியாபாரமும், மேற்குலகு முஸ்லீம்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிக்கு மனோரீதியான வடிகாலாக இது அமையும். அறிவிப்பாளர் இறுதிவரை ஜமாலை போட்டியில் இருந்து விலக்கி விட தீவிரம் காட்டுகின்றார். மலசல கூடத்தில் கண்ணாடியில் “B” என எழுதி விட்டுச் செல்கின்றார். ஜமால் அதற்கெதிரான விடையை D எனக் கூறுகின்றான்.

அறிவிப்பாளர் ஜமாலை அடிக்கடி “சாய் வாலா” எனக் கூறி கேலி செய்கின்றார். ஒவ்வொரு முறை கூறும்பொழுதும் பின்னணியில் சிரிப்பொலி கேட்கின்றது. இவ்வாறான சிரிப்பொலிகள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களால் செயற்கையாக ஒலிபரப்படுவது வழமை. இப் படத்தில் இந் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியாக காட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் சிரிப்பொலியாக காட்டப்படுகின்றது. பார்வையாளர்கள் பெரும் பாலோனோர் மத்திய மேல் தட்டு வர்க்கத்தினரே. படத்தின் பார்வையாளர்களும், நுகர்வோர்களும் அவர்களே. படத்தின் கருவின்படி சேரி வாழ்வியலால் அனைத்து பதில்களை கூறும் ஜமாலால் ஏன் இறுதிக் கேள்விக்கு மாத்திரம் அதிர்ஸடத்தை நம்ப வேண்டி வந்தது? அதுவும் தான் படித்த புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விக்கே விடை தெரியாமல் அதிர்ஸ்டத்தை அழைக்கின்றான். அனைத்து கேள்விகளுக்கும், அனுபவத்தில், பொதுப் புத்தியில் பதில் கூறும் ஜமால், இறுதிக் கேள்விக்கு, அவனது கல்வியறிவே உதவவில்லை. இயக்குனர் ஜமாலையும், அவன் சார்ந்த சேரி மக்களையும், நன்றாகவே கேலி செய்துள்ளார். இது கூட வர்த்தகரீதியான வெற்றிக்கான வழியமைப்பும், மேல் தட்டு வர்க்க மனோபாவத்தின் எதிரொலியாகவுமே வெளிப்படுகின்றது.


slumdog சேரி வாழ் மக்கள் பற்றிய பதிவின் காவியாக ஏன் இப் போட்டி நிகழ்ச்சி பயன்படுத்தப்பட்டது? ஓர் சேரி வாழ் நாயகனால் இப் போட்டியில் இலகுவாக பங்கு பற்ற முடியுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன. இப் படக்கதையின் மூல ஆசிரியரான விகாஸ் சுவாரப்பின் பேட்டி ஒன்றின் போது “இங்கிலாந்தில் ஒரு இராணுவ அதிகாரி ஒருவர் இப் போட்டியில் தவறான வழியில் விடைகளை பெற்றதற்காக சட்டத்தின் பிடியில் சிக்கினார்” அதைப் பற்றி யோசிக்கும் பொழுது ஒரு சேரி வாழ் சிறுவன் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றாலும்; இது போன்ற சட்ட நடவடிக்கைக்குட்படலாம். அதுவே கதையாயிற்று என்றார். சேரி வாழ் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அணுகும் கதாசிரியரின் சமூக அக்கறையை நிச்சயம் பாரட்டத்தான் வேண்டும். ஆசிரியர் மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர். இவரது மூதாதையர் வழக்கறிஞர்கள். தாத்தா இந்திய முன்னால் சட்டமா அதிபர்.

ஓர் ஒடுக்கப்பட்ட, பல துன்பங்களை சந்திக்கும், அனைத்து அரசுகளாலும் கைவிடப்பட்ட சமூகத்தின் பதிவு, அதன் அகச் சூழலை வெளிப்படுத்தியுள்ளதா? கவர்ச்சியான கரு. இக் கருவின் ஊடாக வெளிப்படுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
புடத்தில் பல தவறுகள் உள்ளதாக பல இணையத்தளங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. கவி சுரதாஸ் எழுதியதாக விடை கூறப்பட்ட பாடல், உண்மையில் நர்சி பகட்டால் எழுதப்பட்டது. டொன் பட இசைக்கு, யுவா பட காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மும்பை பாடத்திட்டத்தில் மூன்று நுளம்புகள் கதை பாடத்திட்டத்தில் இல்லை.

போட்டி நிகழ்ச்சி படத்தில் நேரடி ஒளிபரப்பாகவே காட்டப்படுகின்றது. வழமையில் இது முன்னரே ஒளிப்பதிவு செய்யப்பட்ட பின்னர் பிரதியே ஒளிபரப்படும். இது திரைக்கதையாசிரிருக்கோ, இயக்குனருக்கோ உள்ள அக்கறையின்மையை வெளிப்படுத்துகின்றது. சினிமாத்தனம் என்பது இவர்களுக்கு நன்கு பொருந்தும். பல இடங்களில் காட்சி சட்டகங்களில் தொடர்ச்சி தவறானதாக காணப்படுகின்றது. ஜமாலின் காயமடைந்த கண் முதலில் இடதாகவும், பின்னர் வலதாகவும் வெளிப்படுகின்றது.

இந்திய வறுமையை மையமாகக் கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளன. மீரா நாயரின் சலாம் பம்பாய், சத்தியஜித்ரேயின் படங்கள் போன்ற பல படங்கள். இவையாவும் வெளி நாட்டுச் சந்தையை நோக்கியும், திரைப்பட விழாக்களையும் நோக்கியே நகர்கின்றன. மாதுர் மன்டகாரின் டிரபிக் சிக்னல் என்ற இந்திப் படம் ஒரு சந்தியைச் சுற்றியுள்ள சேரி மக்களை பதிவு செய்துள்ளது. இப் படம் பதிவு செய்த பல தீவிர கருத்துக்களை சிலம் டோக் பதிவு செய்யவில்லை. டிரபிக் சிக்னல் இந்திய சந்தையிலேயே விற்கப்பட்டது. அண்மையில் இந்தியாவின் தெய்வீக கதாநாயகன் அமிதாப்பச்சன் “சிலம் டோக்”; இந்திய வறுமையை கேலி செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். (Amitabh Bachchan: Slumdog Millionaire Shows India as Third World's Dirty Underbelly)

சேரி வாழ்மக்கள் பற்றிய பல படங்கள் உலகலாவிய ரீதியில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அண்மைக் காலங்களில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள வீதிச் சிறுவர்களைப் பற்றிய பல பதிவுகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக City of God மற்றும் Kite Runner(Afgan) போன்ற படங்கள் பரவலாக அறியப்பட்ட படங்கள். 1958ல் லண்டனில் வெளியான A cry from the streets என்ற படம் லண்டன் வாழ் சேரி சிறுவர்களைப் பதிவு செய்துள்ளது. இவை கூட பெரும் வரவேற்பு பெறவில்லை. இவற்றில் வெளிப்பட்ட யதார்த்தமும், இம் மக்கள் மீதான அக்கறையும் இப் படத்தில் வெளிப்படவில்லை. ஆனால் மேற்கூறிய படங்களுக்குக் கிடைத்த கவன ஈர்ப்பை விட அதிகளவில் இப்படம் பெற்றுள்ளது. இது அமிதாப்பின் கூற்றில் உள்ள உண்மையை உணர்த்துகின்றது. அதற்காக அமிதாப்பிற்கு இவர்கள் மேல் அக்கறையோ, அனுதாபமோ எனக் கூறமுடியாது. இதுவும் ஒரு சுய வியாபாரமே. இவரது படங்களில் எதிலும் சேரி வாழ் மக்கள் நலன்கள் கருதி கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

உலகெங்கும் சேரிகளில் மக்கள் வாழ்கின்றனர். இதற்கு அபிவிருத்தியடைந்த நாடுகள் விதி விலக்கல்ல. அமெரிக்காவில் பெரும் நகரங்களிலேயே இதனைக் காணலாம். டிற்றொய்ட், அற்லான்ரா, மியாமி, சென் லூயிஸ், கூஸ்ரன், சிக்காகோ, நியு ஒலியன்ஸ், மில்வாக்கி போன்ற நகரங்களில் சேரிகளை காணலாம். இவற்றில் வாழ்பவர்களில் பெரும்பாலானோர் (49 வீதம்) கறுப்பின மக்களே. வெள்ளை இனத்தவர்கள் வெறும் 5 வீதத்திற்கும் குறைவானவர்கள். இது உலகின் பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களிலும் காணப்படுகின்றது. நவீன நகரமயமாக்கல் என்பதன் பெயரில் குடியிருப்போரை எழுப்பி வீடற்றவர்கள் ஆக்கும் முயற்சியும் வளர்ச்சியடைந்த நகரங்களிலேதான் நடைபெறுகின்றன.

நியு யோர்க் நகரில் புறுக்களின் பாலத்தை சுற்றியுள்ள நகர மக்கள், ரொரண்ரோவின் றிஞன்ற் Park மக்கள் இவ்வாறு நவீன மயமாக்கலில் பாதிக்கப்பட்டோர். இவர்கள் மீதான வன்முறையையும், ஒடுக்குமுறையையும் மறைக்கும் முயற்சியே, இப் படம் மீதான அதீத விளம்பரத்திற்கான காரணம். இப் படம் சிறந்த மக்கள் தெரிவு விருதை ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் பெற்றுக் கொண்டது. ரொரண்ரோ விழா கேந்திர முக்கியத்துவமுடையது. உலகின் இரண்டாவது பெரிய திரைப் பட விழா, அத்துடன் வட அமெரிக்க சந்தையையும் தீர்மானிக்கின்றது. பல வெகுசனத் தொடர்பாளர்கள் சங்கமிக்கும் விழா. இப்பொழுது தங்க உலகம் (Golden Globe), ஒஸ்கார் எனத் தொடர்கின்றது.

ஒன்றை மட்டும் கூறலாம் யதார்த்தை மீறி வெளிப்பட்டுள்ள இப் படத்தை பார்க்கச் செல்ல முன்னர், மூளையைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். பொதுப் புத்தி என்பது பார்வையாளனுக்கு இல்லை என்பதையே இப் படம் வெளிப்படுத்துகின்றது. இன்றைய மேற்கத்திய வெகுசனத் தொடர்பு சாதனங்கள் இப படம் செய்ததைத்தான் செய்கின்றன.

- ரதன்

அன்புடன்
ஆபிதீன்.....

arrahman மிகுந்த மனநிறைவுடன் எழுதுகிறேன். வாழ்வின் சந்தோசமோ..... தொழிலின் வெற்றியோ.... இந்த மனநிறைவின் மையம் அல்ல. அது என்றைக்கு வாய்த்தது? சொல்லிக் கொள்ள? இது வேறு... வழக்க மாதிரியே இன்னும் நம்மை.... சாகடித்துக் கொண்டிருக்கும் கலையின் ஊடானது! "சாவுதான் சந்தோஷமா?" கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். சொல்லிக் கொடுத்த வாத்தியார் மாணவர்களிடம் கேட்பது மாதிரி!

கொஞ்ச நாட்களாய் இல்லை... தப்பு.... மாதங்களாய் வியாபாரம் என்ற பெயரில் காரைக்காலில் கரைந்துக் கொண்டிருக்கிறேன்.

'நான் கடவுள்' இசை பற்றிய செய்திகள் வெளிவந்தபோது.... நாக்குத் தொங்க அதை அங்கே தேடித் திரிந்து வாங்கிவந்து கேட்டால்... இளையராஜா தன் பெத்தப் பெயரையே திரும்பத் திரும்ப ஒரே நேர்கோணத்தில் பதிவு செய்து களைத்து வேறு தெரிகிறார்! விளம்பரம் வெளிச்சம் போட்ட அந்த ஆடியோ CDயை தூக்கி வீச நினைத்தும்.... இன்னும் இல்லை. அது படம் பார்த்த பிறகு செய்ய வேண்டிய காரியமென விட்டுவிட்டபோது.... ரஹ்மான்... 'Slumdog millionaire'க்காக 'கோல்டன் க்ளோப்' பரிசு வாங்கிய செய்தி அடுத்து! அதோடும் முடியவில்லை அடுத்தடுத்த நாட்களில்.... இந்தப் படத்தின் இசைக்காக நான்கு வெவ்வேறு தளத்தில் ஆஸ்கர் பரிசுக்கும் பரிந்துரை!!! 'சரி அதையும் கேட்டுவிடலாம்'யென அதே காரைக்காலில் மீண்டும் இசைத் தேடல்....

Slumdog millionaire / இசை / ரஹ்மான்.... என்றெல்லாம் சொல்லி கேட்டது அந்த ஆடியோ & வீடியோ கடைக்கார்களுக்கு புரிந்ததா என்றே தெரியவில்லை. விழிகள் பிதுங்க அவர்கள் கையசைத்தது அப்படித்தான் இருந்தது! மூன்றாம் நாள் விஜயத்தில் ஒரு கடைக்காரன்....."சார் அந்தப் படத்தின் பாடல் இல்லை... ஆனால், DVD இருக்கிறது!" என்று சொல்லி வெறும் இருபத்தி ஐந்துக்கு மனதில் பால் வார்த்தான்!

கலைத்தாகத்திற்கான அன்றைய செலவு போதாதென்று பஸ்டாண்டில் வைத்து 'உயிர்மை' வாங்கியதில்... 'Mozart of Madras' 'அல்லா ரக்கா ரஹ்மான்' என்று 'Slumdog millionaire' பற்றி தி கிரேட்... சாரு 'ரஹ்மானின் பிரதாபம்' செய்திருந்தார். விஸ்வநாதன் ராமமூர்த்தி என்கிற ஆரம்ப பீடிகையோடு... தொடங்கி ஆராதனா, ஆவோ ஜாவோ யென வளர்ந்து.... "இந்தப் படத்தைப் பற்றிச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் படத்தைப் பார்த்த அடுத்த நாளே இதை எழுதுவதால் இப்போதைக்கு இவ்வளவு..." என்று ஏழு பக்கத்திற்குப் பிறகு குறிப்பு எழுதியிருந்தார்! பஸ்ஸில் வைத்து படித்து சுருட்டி விட்டதை வீடு வந்து பிரிக்க மனமில்லை. படம் இருக்க, காய் எதற்கு?

படத்தைப் பார்க்கலாம் என்றால்.... இரவு பதினொன்னுக்குப் மேல்தான் டி.வி. யின் பக்கம் போகவே முடியும்! காலையில் தொடங்கும் அதன் சீரியல் ஜால சங்கதி அதுவரைக்கும் நீள்கிறது! விடிய விடிய ராமாயணக் கூத்தும் தோத்தது போங்கள்! சீரியலைப் பார்த்து நம் வீட்டுப் பெண்கள் கண்களை கசக்குவதைக் கண்டு பொறுக்காது... மனிதாபிமானம் பொருட்டும் ஆறுதல் என்று சொல்லக்கூட அருகில் போய்விட முடியாது! (இந்தக் கொடுமைக்கு மனித உரிமை கமிஷனில் யாராவது தீர்வு காணுங்கப்பா! தாங்கல.)

குடும்பத் தலைவர்களுக்கான ஒதுக்கீட்டின் நேரத்தில் அரைத் தூக்கத்தில் போய் அமர்ந்து பாடத்தை ஓடவிட்டால் எதிர்பாராத அளவில் DVDயின் கிளாரிட்டி என்னை அசத்தியது! மாஸ்டர் பிரிண்டை தூக்கி கொடுத்து விட்டானோ! ரஹ்மானுக்கு நன்றி சொன்னேன்.

பொதுவில் நாம் தேடிப் பார்க்கும் கலைப் படங்களிலிருந்து ஆஸ்கர் தேர்வு செய்யும் கலைப்படம் என்பது வித்தியாசமானப் பாதையில் பயணப்படுவதாகவே இருக்கும். பல முறை அனுபவித்தாகிவிட்டது. இசை ஓர் விதிவிலக்கு. யதார்த்தப் பின்னணி இசை ஏங்கினாலும் கிட்டாது. அதற்காக.... 'killing fields' 'Rain Man' படங்களின் பின்னணி இசையை ரசிக்காமலா போனோம்?

பாடத்தைப் பார்க்க ஆரம்பித்ததுமே மனம் படத்தோடு நெருங்கத் துவங்கியது. ஆனாலும்... பத்து நிமிடத்தில் காட்சியாகும் ஒரு காட்சியைப் பார்க்க மட்டும் மனம் முரண்டு பிடித்தது. சிறுவர்களைக் கடத்திவந்து... அவர்களிடம் ஆசை வார்த்தைகள் பேசி... பிச்சை எடுக்க வைக்க அவர்களின் கண்களை கொதிக்கும் எண்ணெய் விட்டு குருடாக்கும் அராஜகத்தை கோணாமல் அரக்கர்களால்தான் பார்க்க முடியும்! ஹோம் தியோட்டரை அணைத்துவிட்டு படுக்கைக்குப் போய்விட்டேன். தூக்கம் வரவில்லை என்பது வேறு செய்தி. 'நாளைக்கு கடன்காரன் வரலாம்!'

மூன்று நாளைக்குப் பிறகு.... ஞாயிறு... இன்று! சரியான முகூர்த்த நாள்! தமிழீழத் தமிழர்களுக்காக எங்கள் ஊரிலும் ஒருவர் தீக்குளிப்பு! காங்கிரஸ்காரர்!!! இறந்து விட்டார்! தலைவர்கள் எல்லாம் வருகை... கட்டாய கடைவடைப்பு கலாட்டா! என் 'Tajwin'க்கு ஏற்கனவே விடுமுறை! பாஸ் டயோடோ டயேட்! இடைப்பட்ட பொழுதில் நல்ல நேரம் பார்த்து மீண்டும்... 'Slumdog millionaire'!

சிகரெட்டைத் தவிர என்னை, என் இருப்பை, சுற்றி சுழலும் உலத்தை, இஷ்டத்துக்கு என்னில் சுதந்திரம் கொண்டு வாழும் கஷ்டங்களையெல்லாம் மறக்கடித்தபடி... என்னை உள்வாங்கி ஜீரணித்துக் கொண்டிருந்தது படம்! விழுது விழுதாகக் கரைவது எனக்கே தெரிகிறது! வியந்தேன்... வியந்தேன்... அளவேயில்லை!!

பம்பாயின் லேண்ட்ஸ்கேப்பை காட்டத் தொடங்கும் அதன் ஆரம்பக் காட்சிகள் விசேசமாகத் தெரிந்தது என்றால்.......படத்தின் ஒவ்வொரு ப்ரேமுக்காகவும் கேமிரா நிறுத்தப்பட்டிருக்கும் கோணம் மனதில் கண்டு மலைத்துபோனேன். ஒவ்வொரு காட்சியும் கவிதை... V.T.ஸ்டேஷன்தான் அழகென்றால் தாராவி சேரிகளுமா அப்படி? சரி, அதுதான் போகட்டுமென்றால்... பொது கழிப்பிடத்தையும் கூடவா ஒரு கேமிரா கவிதையாக்கும்?

காட்சிகளை 'இன்ஞ்' சுத்தமாக பிசிரே இல்லாமல் வியூசுவலாக்கிய படத்தின் எடிட்டிங் இன்னொரு அழகு!

சாதாரண ஒரு கதையை இத்தனைத் தூரம் விறுவிறுப்பாக சொல்ல முடியுமா? சொல்லி இருக்கிறார்களே என்று மனக் கண்ணைத் திறந்து டைரக்டரின் பக்கம் ஆச்சரியமாகப் பார்த்தேன்! இந்தியா வந்து இப்படி எல்லாம் இயக்கி நம்ம இயக்குனர்களை சுயம் உறுத்த விட்டுவிட்டாரே! Directer 'Danny Boyle!' உறுத்துமா? நம்மவர்களுக்கா? 'நிஜமாகவா?'

படம் தொடக்கம் தொட்டு கேமராவுடன் சிறகுகட்டிப் பறக்கும் இசை படம் முடிந்தும் கண்ணுக்கே தெரியாத எழுத்துக்கள் ஓடித் தீர்கிறவரை காதினிக்க மூக்கின்மேல் விரல்வைக்கும்படி நீடிக்கிறது இசை! அல்லா ரக்கா ரஹ்மான்! 'எங்கள் இந்தியா'வின் இன்னொரு அதிசயம்தான் அவர்!

இசைக்காகவும்... பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் இசையைப் பற்றி இசை அறிந்த வித்தகரும் ரஹ்மானின் இசையைத் தூக்கிப் நிறுப்பவருமான 'ஷாஜி' சொல்வதை கொஞ்சம் கேட்போம்... "ரஹ்மான் இதுவரை தந்திருப்பதிலேயே மிகச் சிறந்த இசை என்று ஸ்லம் டாக் மில்லியனரை சொல்ல முடியாது. இந்தியர்களாகிய நாம், ரஹ்மான் திறமை மிக நுணுக்கமாக வெளிப்பட்ட பல திரைப்பாடல்களை கேட்டிருக்கிறோம். ஆனால் முதல் முறையாக ரஹ்மானின் இசையைக் கேட்கும் சர்வதேச சினிமா இசை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு புதுப் புது ஒலிகளுடன் சினிமாவின் சித்தரிப்பில் மிக நயமாக சங்கமிக்கும் ரஹ்மானின் இந்த இசை அற்புதமாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை." ஷாஜியின் இந்தக் கூற்று பெருமளவில் துல்லியம்தான் இல்லையா? 'Slumdog millionaire'ல் ரஹ்மான் உயரத்தைத் தொட்டு இருந்தாலும்.... அவர் தொட்ட பல உயரங்கள் நமக்குத் தெரியும்தானே!

இந்தப் படத்தில்... கதாநாயகி 'விலைமாதர்கள் வீட்டில் நடக்கும் நடனத்தில் அறிமுகம் ஆகிறாள். ரஹ்மானின் இந்திய இசை அந்தக் காட்சியில் தூக்கலாக எழுந்து விரிந்து வசீகரம் செய்கிறது. என்னுடைய... 'நாடகமே உலகம்' கதையில் நாயகி சுகுணாவை நான் அறிமுகம் செய்தபோதும் அப்படிதான் இசைக் குறிப்பு செய்திருந்தேன்! நினைவில் அது எழுந்து ரஹ்மானின் இசையோடு இன்னும் இன்னும் நெருக்கமாகிப் போனேன்.

'Slumdog millionaire' படத்தின் கதை மையம் பேசும் நுட்பம் பற்றி எழுத தனியொரு ஆய்வு தேவையாக இருக்கும்! அத்தனைக்கு கதையோட்டத்தில் பின்னல் காண கிடக்கிறது.

மதக்கலவரத்தின் கோரம்/ பம்பாய் சேரிகளின் அநாதைக் குழந்தைகள்/ அவர்களின் சிதைவு/ சிதைவு கொண்டவர்களின் வாழ்வு/ சிதைவு கொண்டவர்களின் அன்பு/ சூப்பர் ஸ்டார்கள் மீது குழந்தைகள் கொள்ளும் மோகம்/ போலீசின் மாமுல் அராஜகம்/ பெரிய மனிதர்களின் கோணல் மனம்/ யதார்த்ததில் மதங்களைக் கடந்து மனிதர்களை நேசிக்கும் பெருவாரியான மக்கள்/ மதங்களைக் கடந்து துணையைத் தேடும் உள்ளங்கள்/ கற்பு சிதைவுக்குப் பின்னும் தேடியடையும் நிஜக்காதல்/ சமூக அவலங்களைச் சொல்ல கையில் எடுத்துக் கொண்டிருக்கும் டி.வி.யின் மில்லியனர் நிகழ்ச்சியின் நேர்த்தி/ படத்தின் இறுதியில் கதாநாயகனின் நண்பனால் சொல்லப்படும்... 'God is Great' என்கிற மூன்றே மூன்று வார்த்தைகள் படத்தை, தொடக்கம் தொட்டே காட்சி காட்சியாக திரும்ப யோசிக்க வைத்துவிடுகிறது இந்தப் படத்தின் திரைக்கதையில் எத்தனை அழகுப் பின்னல்கள்!

நம்ம ஊர்... 'வியாபாரப் படம் எடுக்கிறேன் பேர்வழிகள்' இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். கட்டாயமாக. அதற்கு முன்னால் தங்களது படங்களை வெவித்தெடுத்த இயக்குனர் தனத்திற்காக கக்கூசில் உட்காரும் போதாகிலும் பாவமன்னிப்பு தேடிவிட்டு படத்தைப் பார்க்கச் செல்வது நேர்மையாக இருக்கும். தொடர்ந்து அந்தப் படத்தில் சிறுவர்கள் நடித்திருக்கும்... அவர்களின் முதல் நடிப்பும் கூட என்னை வியப்பில் ஆழ்த்தியது. மிகுந்த மன நிறைவில் நான் திக்குக்காடிப் போனபோது அந்த பளுவை உங்களுக்கு கடிதத்தில் இறக்கிவைத்தால் தேவலாமென தோணிய நாழிக்கு....

அப்பாடா....!!
ஆனது!

- தாஜ்

மாரி, தங்கராசு, சீனியம்மாள் எல்லோரும் நமக்குக் கூடப் பிறந்தவர்கள் மாதிரி. ஒன்றாக விளையாடினவர்கள் மாதிரி. அசோகவனம், வெயிலோடுபோய் கதைகளைத் தூக்கத்தில் எழும்பிக்கேட்டாலும் நிறையப் பேருக்கு வரிவரியாய்ச் சொல்ல முடியும்.

இயக்குநர் சசி செல்லுலாயிடில் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். 'பூ' திரைப்படமும் தமிழ்ச்செல்வன் கதையும் இரட்டைப் பிள்ளைகள் போல இருக்கின்றன. ஒரு சிறுகதையை இங்கங்கு விலகாமல், இவ்வளவு நெருக்கமாகப் படமாக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

'பூ' என்று சசி சும்மா அழகுக்காகப் பெயர் வைக்கவில்லை. அசோகவனம் கதையை அவர் படித்துக் கொண்டே போயிருக்கிறார். மாரியின் மனதுக்குள் 'சினிமா கணக்கா' ஓடிக் கொண்டேயிருக்கிறது. 'இப்படி பூ விரியறமாதிரி மனசுக்குள் எத்தனை கனா' என்று ஒருவரி வருகிறது. உடனே சசிக்குப் படத்தின் பெயர் தோன்றிவிடுகிறது. நமக்கு முன் விரிகிறது 'பூ'. திரையில் முதலில் ஒரு நிப். பேனா எதுவும் இல்லாமல் நிப்புமட்டும் வந்து நிற்கிறது. அப்புறம் 'நேசகி சினிமாஸ்' என்று. நிஜமாகவே அப்புறம் எழுதப்படுவது நேசமிக்க ஒரு சினிமாதான்.

வெயிலோடு போய் முதல்வரி எப்படித் துவங்குகிறதோ அப்படியே 'பூ' துவங்குகிறது. "மாரியம்மாளின் ஆத்தாவுக்குத் திகைப்பாக இருந்தது. இந்த வேகாத வெயில்ல இந்தக் கழுத ஏன் இப்படித் தவிச்சுப்போயி ஓடியாந்திருக்கு என்று புரியவில்லை.

'ஒம் மாப்பிள்ளை வரலியாடி?'

ஜானகியம்மா இந்த வரிகளிலிருந்து கிளம்பிவந்து கேட்க, அந்தப் பிள்ளை பார்வதி 'விறு விறுண்ணு உள்ளே போயி ரெண்டு செம்புத் தண்ணியைக் கடக்குக் கடக்குண்ணு குடித்துவிட்டு 'யெஸ். ஆத்தாடி என்று மாரியாக உட்கார்கிறது மாரியாக உசிரோடு நடமாட இயக்குநர் சசி பார்வதியை அடையாளம் கண்டதில் இருந்தே 'பூ' திரைப்படத்தின் முழுமை தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

பார்வதியால் கண்ணாடியில் தன்னை மாரியாகப் பார்த்துக் கொள்ள முடிந்திருக்கிறது. படப்பிடிப்பு தினங்களில் பார்வதியின் வியர்வையில் நிச்சயம் வெடியாபீஸ் வீச்சம் இருந்திருக்கும். பார்வதியின் கைகள் சீனியம்மாவின் கைகளை, அதன் மூலம் தங்கராசுவின் கைகளைத் தேடிக் கொண்டிருக்கும். தங்கராசுவின் செல் நம்பரை அவருடைய விரல் அழுத்திக் கொண்டிருக்கவும் கூடும். கள்ளிப்பழச்சாறு பூசுவதற்கு சிநேகிதியின் கன்னங்களைத் தேடுகிற ஒரு பண்டிகை அவருக்குவரும். அந்தக் கடைசிக்காட்சி அழுகையை இப்போது கூட அவரால் நிறுத்தியிருக்க முடியாது. சில சமயம் சொல்லி வைத்தது மாதிரி எல்லாம் அமைந்து போகும்.

மாரியம்மாள் பாத்திரத்துக்கு மட்டுமில்லை. மாரியின் மாப்பிள்ளை, அம்மா, அண்ணன், சீனியம்மா, பேனாக்காரர், வெடியாபீஸ் ஃபோர்மேன், ஆயில்மில் முதலாளி, அலோ எல்லாம் அச்சு அசலாக நடமாடும்படி இனிகோ, ஜானகியம்மா, வீரசமர், இன்பநிலா, ராமு, லட்சுமணப்பெருமாள், கண்ணன், கந்தசாமி எல்லோரும் செய்திருக்கிறார்கள். இதைத்தவிர பள்ளிக்கூட வாத்தியார், பலசரக்குக் கடையில் சாமான் வாங்குகிற அந்தப் பெண், "இப்பதான் வர்ரியா மாரி" என்று வீட்டுவாசலில் விளக்கு விளக்கிக் கொண்டு இருக்கிறவர் மாரி நாண்டுக்கிட்டு நிற்கிற காட்சியில் வந்து போகிற ஐந்தாறு பேர், டீக்கடை அலோவின் மனைவி, எஸ்.ட்டி.டி பூத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்காமல் மாரியை ஏசிவிட்டுப் போகிறவரும் பின்சீட்காரரும்... இப்படி எல்லோர் விடுகிற மூச்சினாலும் காட்சிகள் வெதுவெதுப்பாகியுள்ளன.

மாரி வீடு, தங்கராசு வீட்டுப் புறவாசல், டீக்கடை, வெடியாபீஸ், பிள்ளைகளின் தூக்கத்தை விழுங்கி ஏப்பம்விடுகிறமாதிரி ஹாரன் அடித்துக் கொண்டு வருகிற பஸ், உலையில் இருக்கிற திருநீறு குங்குமம் பூசின பித்தளைத் தவலை, திரையின் இடது கீழ்மூலையில் அசைகிற எருக்கலஞ்செடி இலையும் பூவும், ஒட்டாங்காளைகளுக்குத் தவிடும் புண்ணாக்கும் கலக்குகிற சிமென்ட் தொட்டி, கோடாங்கி அடித்துக் கொண்டு வருகிற இரவுத் தெரு என நிறைய நிறைவுகள்.

வசனமும் அப்படித்தான். ஏற்கெனவே தமிழ்ச்செல்வன் எழுதினது போக, மீதி உள்ளவை எல்லாம் அந்தந்த ஆட்கள், அந்தந்தக் கட்டத்தில் என்ன பேசுவார்களோ அப்படி மட்டும் இருக்கிறது. மாரியின் அம்மா, மாரியின் அண்ணா பேசுகிறது எல்லாம் சினிமா பேச்சு இல்லை. காலம் காலமாகக் கரிசல்காட்டில் புழங்கித் தேய்ந்த சொற்களும் சாணைபிடித்த உணர்ச்சிகளும் நிரம்பியவை. எச்சலில் நனைந்தவை.

இந்த பி.ஜி. முத்தையாவையும் எஸ்.எஸ்.குமரனையும், வீரசமரையும் எங்கேயிருந்து சசி பிடித்தார். சில பேர் உட்கார்ந்திருக்கும்போது தெற்குவாசல்படிகூட அழகாகிவிடுகிறது. பாறைமேல் சாய்ந்துகொண்டு நிற்கிற உல்லாசப் பயணப்புகைப்படச் சிநேகிதர்கள் எவ்வளவு நேர்த்தியாகச் சிரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஒளிப்பதிவும் இசையமைப்பும் கலை இயக்கமும் அப்படித்தான் இருக்கிறது. நிறையக் காட்சிகளின் ஓவியத்தை இந்த மூன்றுபேரும் சேர்ந்து வரைந்திருக்கிறார்கள். பி.ஜி.முத்தையாவின் படப்பிடிப்பில் ஒரு இசையமைப்பு இருக்கிறது. எஸ்.எஸ்.குமரனின் இசையில் ஒரு படப்பிடிப்பு இருக்கிறது. வீர சமருக்கு எதன்எதன்மேல் காமரா நகரும், யார் யார் மேல் வெயில் உருமிமேளம் வாசிக்கும் என்று தெரிந்திருக்கிறது.

இந்த அரைப்பரீட்சை லீவில் எல்லாப் பிள்ளைகளும் 'சூ. சூ. மாரி' பாடிக் கொண்டிருக்கிறார்கள். நா.முத்துக்குமாரின் வரிகளில் பாலிய காலம் விளையாடுகிறது (கொல்லைப்பக்கம் போகாதே கொட்டிக்கிடக்குது ஜாங்கிரி). கதையின் மையத்திலிருந்து விளம்புவரை தொட முத்துக்குமாருக்கு முடிகிறது. கயத்தாற்றுக் காத்தாடி, சங்கரன்கோவில் சுந்தரி, ஆலைச் சங்குச் சத்தம், உள்ளே வெடிக்கும் ஊசிவெடி, வெயில், மயில், ஆக்காட்டி, ஆவாரம் பூ எல்லாம் அதனதன் இடங்களில்.

சிறு பிள்ளைகள் உலகத்தின் விடுதலையும், குதூகலமும், மாயமும், கலகலப்பும் சூ சூ மாரியில் பதிவாகியுள்ளன. நார்ப்பெட்டி முகமூடிகள், பனை ஓலை ஆடை, அலையலையாய்ப் புரண்டு பின்வாங்கும் மக்காச்சோளத் தோகைகள் என்று முருகபூபதியின் அற்புத உலகம் விரிகிறது. அடிக்கடி காமராவுக்கு மிக அருகில் வந்து போகிற ஐஸ்குச்சி வேண்டுமா என்று கேட்டு விலகுகிற பையனில் நம் ஒவ்வொருவரின் சிறுவயதும் இருக்கிறது. சிறுவயதுதான் நம் கையைப் பிடித்துப் பெரிய வயதுக்குள் கூட்டிப்போகிறது. நம்முடன் காடுமேடெல்லாம் பால்ய காலம் ஒருநிழல்மாதிரி இழுபடுகிறது.. தங்கராசுவைப் பார்க்க, வேனா வெயிலில் மாரியை ஓடிவரச் சொல்கிறது. பிரியம் பொங்குகிற குரலில், ரகசியமாக அந்த அக்காவிடம் 'மாசமா இருக்கீகளா' என்று கேட்கச் சொல்கிறது. வேலை செய்யாமல் ஏதோ யோசனையாக உட்கார்ந்திருக்கிற மாரியை, ரொம்ப ஆதரவாக, இருக்கட்டும் இருக்கட்டும் என்று சைகையில் சீனியம்மாவிடம் காட்டிவிட்டு வெடியாபீஸ் ஃபோர்மேனை நகரச் சொல்கிறது. ஏக்கமும் வெடிப்பும் நடுக்கமுமாய் அழுகிற மாரியைப் பதற்றத்துடன் தேற்றச் சொல்கிறது.

ஒரு வேளை, தமிழ்ச்செல்வன் வெயிலோடு போய் கதையை எழுதியதற்கும் சசி 'பூ' படத்தை இயக்கியதற்கும், நாம் இப்படி அந்தப்படத்தைப் பற்றித் திரும்பத்திரும்ப பேசிக்கொண்டு இருப்பதற்கும் காரணம் அவரவரின் கள்ளம் கபடமற்ற பால்யமாக இருக்கும்.

நாம் மாரி அல்லது தங்கராசு. மாரியின் கணவனாகவும் தங்கராசுவின் மனைவியாகவும் நாம் இருப்பதைக் கூடத் தவிர்க்க முடியாது. நாம் யாராக இருந்தாலும், இது நம்முடைய வெயில். இது நம்முடைய பூ. நம்முடைய சினிமா. சசியையும் சசியின் பூவையும் கொண்டாடுவோம். அது நம் வாழ்வைக் கொண்டாடுவது போல.

(செம்மலர்)