உண்டனன் உலவி னன்பின்
உள்ளறை இட்ட கட்டில்
அண்டையில் நின்ற வண்ணம்
என்வர வறிவா னாகி
மண்டிடும் காதற் கண்ணன்
வாயிலில் நின்றி ருந்தான்!
உண்டேன். என்மாமி என்னை
உறங்கப்போ என்று சொன்னாள்

அறைவாயில் உட்பு குந்தேன்
அத்தான், தன் கையால் அள்ளி
நிறைவாயின் அமுது கேட்டுக்
கனி இதழ் நெடிதுறிஞ்சி
மறைவாக்கிக் கதவை, என்னை
மணிவிளக்கொளியிற் கண்டு
நறுமலர்ப் பஞ்சணைமேல்
நலியாதுட்கார வைத்தான்.

கமழ்தேய்வு பூசி வேண்டிக்
கனிவோடு பாலும் ஊட்டி
அமைவுற என்கால் தொட்டே
அவனுடையால் துடைத்தே
தமிழ், அன்பு சேர்த்துப் பேசித்
தலையணை சாய்த்துச் சாய்ந்தே
இமையாது நோக்கி நோக்கி
எழில்நுதல் வியர்வை போக்கி,

தென்றலும் போதா தென்று
சிவிறி கைக் கொண்டு வீசி
அன்றிராப் பொழுதை இன்பம்
அறாப்பொழு தாக்கி என்னை
நன்றுறத் துயிலிற் சேர்த்தான்
நவிலுவேன் கேட்பாய் தோழி;

கண்மூக்குக் காது வாய்மெய்
இன்பத்திற் கவிழ்ப்பான். மற்றும்
பெண்பெற்ற தாயும் போல்வான்.
பெரும்பணி எனக்கி ழைப்பான்.
வண்மையால் கால்து டைப்பான்
மறுப்பினும் கேட்பா னில்லை.
உண்மையில் நான்அ வன்பால்
உயர்மதிப் புடையேன் தோழி.

மதிப்பிலாள் என்று நெஞ்சம்
அன்புளான் வருந்து வானேல்
மதிகுன்றும் உயிர்போன் றாற்கு
மறம்குன்றும் செங்கோல் ஓச்சும்
அதிராத்தோள் அதிர லாகும்
அன்புறும் குடிகள் வாழ்வின்
நிதிகுன்றும் மன்னன் கையில்
மறைகுன்ற நேரும் அன்றோ?

நிலந்தொழேன் நீர்தொ ழேன்விண்
வளிதொழேன் எரிதொ ழேன்நான்
அலங்கல்சேர் மார்பன் என்றன்
அன்பனைத் தொழுவ தன்றி!
இலங்கிழைத் தோழி கேள்! பின்
இரவுபோ யிற்றே கோழி,
புலர்ந்தது பொழுதென் றோதப்
பூத்ததென் கண்ணரும்பு

உயிர்போன்றான் துயில்க ளைந்தான்
ஒளிமுகம் குறுந கைப்புப்
பயின்றது பரந்த மார்பில்
பன்மலர்த் தாரும் கண்டேன்.
வெயில்மணித் தோடும் காதும்
புதியதோர் வியப்பைச் செய்ய
இயங்கிடும் உயிரன் னோனை
இருகையால் தொழுதெ ழுந்தேன்.
அழைத்தனர் எதிர்கொண் டெம்மை
அணிஇசை பாடி வாழ்த்தி
இழைத்திடு மன்று நோக்கி
ஏகினோம். குடிகள் அங்கே
'அழித்தது வறுமை அன்னாய்
உதவுக' என்று நைந்தார்.
'பிழைத்தது மழைஎன் அத்தான்
பெய்'என்றேன் குடிகட் கெல்லாம்
மழைத்தது மழைக்கை செந்நெல்
வண்டிகள் நடந்த யாண்டும்.

Pin It

பொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின்
புதுமணத்தில் தோய்ந்து, பூந்தாது வாரி,
நதிதழுவி அருவியின்தோள் உந்தித், தெற்கு
நன்முத்துக் கடல்அலையின் உச்சி தோறும்
சதிராடி, மூங்கிலிலே பண்எ ழுப்பித்
தாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து,
முதிர்தெங்கின் இளம்பாளை முகம்சு வைத்து,
முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி.

அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்
அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க, என்றன்
சிந்தைஉடல் அணுஒவ்வொன் றும்சி லிர்க்கச்,
செல்வம்ஒன்று வரும்;அதன்பேர் தென்றற் காற்று!
வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி
விட்டதென என்மனைவி அறைக்குப் போனாள்.
அந்தியிலே கொல்லையில்நான் தனித்தி ருந்தேன்;
அங்கிருந்த விசுப்பலகை தனிற்ப டுத்தேன்.

பக்கத்தில் அமர்ந்திருந்து சிரித்துப் பேசிப்
பழந்தமிழின் சாற்றாலே காதல் சேர்த்து
மிக்கஅவ சரமாகச் சென்ற பெண்ணாள்
விரைவாக என்னிடத்தில் வருதல் வேண்டும்.
அக்காலம் அறைக்குவந்த பூனையின்மேல்
அடங்காத கோபமுற்றேன் பிறநே ரத்தில்
பக்காப்பூ னைநூறு, பொருளை யெல்லாம்
பாழாக்கினாலும்அதில் கவலை கொள்ளேன்.

வாழ்க்கைமலர் சொரிகின்ற இன்பத் தேனை
மனிதனது தனிமையினால் அடைதல் இல்லை; 
சூழ்ந்ததுணை பிரிவதெனில் இரண்டு நெஞ்சும்
தொல்லையுறு வகைஇருத்தல் வேண்டும் அங்கே
வீழ்ந்துகிடந் திட்டஎனைத் "தனிமை", "அந்தி"
இவைஇரண்டும் நச்சுலகில் தூக்கித் தள்ளப்
பாழான அவளுடலின் குளிர்ச்சி, மென்மை, 
மணம்இவற்றைப் பருகுவதே நினைவா யிற்று.

தெரியாமல் பின்புறமாய் வந்த பெண்ணாள்.
சிலிர்த்திடவே எனைநெருங்கிப் படுத்தாள் போலும்.
சரியாத குழல்சரியலானாள் போலும்,
தடவினாள் போலும், எனைத் தன்க ரத்தால்! 
புரியாத இன்பத்தைப் புரிந்தாள் போலும்!
புரியட்டும் எனஇருந்தேன் எதிரில் ஓர்பெண்
பிரிவுக்கு வருந்தினேன் என்றாள் ஓகோ!
பேசுமிவள் மனைவி; மற்றொருத்தி தென்றல்!

Pin It

ஒளியைக் கண்டேன் கடல்மேல் - நல்
உணர்வைக் கண்டேன் நெஞ்சில்!
நெளியக் கண்டேன் பொன்னின் - கதிர்
நிறையக் கண்டேன் உவகை!

துளியைக் கண்டேன் முத்தாய்க் - களி
துள்ளக் கண்டேன் விழியில்!
தெளியக் கண்டேன் வையம் - என்
செயலிற் கண்டேன் அறமே!

Pin It

மறையக் கண்டேன் கதிர்தான் - போய்
மாயக் கண்டேன் சோர்வே!
நிறையக் கண்டேன் விண்மீன் - என்
நினைவிற் கண்டேன் புதுமை!

குறையக் கண்டேன் வெப்பம் - எனைக்
கூடக் கண்டேன் அமைதி!
உறையக் கண்டேன் குளிர்தான் - மேல்
ஓங்கக் கண்டேன் வாழ்வே!

Pin It

{ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் மாலை 4 மணிக்குச் சென் னை, பக்கிங்காம் கால்வாயில் தோணி ஏறி, மறுநாள் காலை 9 மணிக்கு மாவலிபுரம் சேர்ந்தோம், நானும் என் தோழர் பலரும். வழிப்போக்கின் இடைநேரம் இனிமையாய்க் கழிந்தது. எனினும் அப்பெருந்தோணியைக் கரையோரமாக ஒரு கயிறு பற்றி ஒருவன் இழுத்துச் சென்றமையும், மற்றோர் ஆள் பின்புறமாக ஒரு நீளக் கழியால் தள்ளிச் சென்றமையும் இரங்கத் தக்க காட்சி, அதையும், ஆங்குக் கண்ணைக் கவர்ந்த மற்றும் சில காட்சிகளையும் விளக்கி அப்போது எழுதியதாகும் இப்பாட்டு}

சென்னையிலே ஒருவாய்க்கால் - புதுச்
சேரிநகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் - எழில்
அன்னம் மிதப்பது போலே.
என்னருந் தோழரும் நானும் - ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி - பின்பு
தீவிரப் பட்டது வேகம்.

தெற்குத் திசையினை நோக்கி - நாங்கள்
சென்றிடும் போது விசாலச்
சுற்றுப் புறத்தினில் எங்கும் - வெய்யில்
தூவிடும் பொன்னொளி கண்டோம்
நெற்றி வளைத்து முகத்தை - நட்டு
நீரினை நோக்கியே தாங்கள்
அற்புதங் கண்டு மகிழ்ந்தோம் - புனல்
அத்தனையும்ஒளி வானம்.

சஞ்சீவி பர்வதச் சாரல் - என்று
சாற்றும் சுவடி திறந்து
சஞ்சார வானிலும் எங்கள் - செவி
தன்னிலும் நற்றமிழ் ஏற்றி
அஞ்சாறு பக்கம் முடித்தார் - மிக்க
ஆசையினால் ஒரு தோழர்,
செஞ்சுடர் அச்சம யத்தில் - எம்மைச்
செய்தது தான்மிக்க மோசம்

மிக்க முரண்கொண்ட மாடு - தன்
மூக்குக் கயிற்றையும் மீறிப்
பக்க மிருந்திடும் சேற்றில் - ஓடிப்
பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச்
சக்கரம் போலிருள் வானில் - முற்றும்
சாய்ந்தது சூரிய வட்டம்!
புக்க பெருவெளி யெல்லாம் - இருள்
போர்த்தது! போனது தோணி.

வெட்ட வெளியினில் நாங்கள் - எதிர்
வேறொரு காட்சியும் கண்டோம்.
குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில்
கூந்தல் சரிந்ததோர் ஈந்தும்
மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப
வார்த்தைகள் பேசிடும் போது
கட்டுக் கடங்கா நகைப்கைப் - பனை
கலகல வென்றுகொட் டிற்றே.

எட்டிய மட்டும் கிழக்குத் - திசை
ஏற்றிய எங்கள் விழிக்குப்
பட்டது கொஞ்சம் வெளிச்சம் - அன்று
பௌர்ணமி என்பதும் கண்டோம்.
வட்டக்குளிர்மதி எங்கே என்று
வரவு நோக்கி யிருந்தோம்.
ஒட்டக மேல்அர சன்போல் - மதி
ஓர்மரத் தண்டையில் தோன்றும்.

முத்துச் சுடர்முகம் ஏனோ - இன்று
முற்றும் சிவந்தது சொல்வாய்.
இத்தனை கோபம் நிலாவே - உனக்கு
ஏற்றியதார் என்று கேட்டோம்.
உத்தர மாக எம் நெஞ்சில் - மதி
ஒன்று புகன்றது கண்டீர்.
சித்தம் துடித்தது நாங்கள் - பின்னால்
திருப்பிப் பார்த்திட்ட போது,

தோணிக் கயிற்றினை ஓர் ஆள் - இரு
தோள்கொண் டிழுப்பது கண்டோம்.
காணச் சகித்திட வில்லை - அவன்
கரையொடு நடந்திடு கின்றான்.
கோணி முதுகினைக் கையால் - ஒரு
கோல்நுனி யால்மலை போன்ற
தோணியை வேறொரு வன்தான் - தள்ளித்
தொல்லை யுற்றான்பின்புறத்தில்.

இந்த உலகினில் யாரும் - நல்
இன்ப மெனும்கரை யேறல்
சந்தத மும்தொழி லாளர் - புயம்
தரும்து ணையன்றி வேறே
எந்த விதத்திலும் இல்லை - இதை
இருப துதரம் சொன்னோம்.
சிந்தை களித்த நிலாவும் - முத்துண்ச்
சிந்தொளி சிந்தி உயர்ந்தான்.

நீல உடையினைப் போர்த்தே - அங்கு
நின்றிருந் தாள்உயர் விண்ணாள்
வாலிப வெண்மதி கண்டான் - முத்து
மாலையைக் கையி லிழுத்து
நாலு புறத்திலும் சிந்தி - ஒளி
நட்சத்திரக்குப்பை யாக்கிப்
பாலுடல் மறையக் காலை - நாங்கள்
பலிபுரக்கரை சேர்ந்தோம்.

Pin It