கேள்வி

நூறா யிரக்கணக் காகச் செலவிட்டு
நூற்றுக் கணக்காய்த் திரைப்படம் ஆக்கினர்
மாறான எண்ணத்தை மட்டக் கதைகளை
மக்களுக் கீந்தனர் அண்ணே - அது
தக்கதுவோபுகல் அண்ணே

விடை

கூறும் தொகைக்காகக் கூட்டுத் தொழில்வைப்பர்
கூட்டுத் தொழில்முறை நாட்டுக்கு நல்லது!
ஏறாக் கருத்தைஇங் கில்லாக் கதைகளை
ஏற்றினரோஅவர் தம்பி? - இது
மாறாதிருக்குமோ தம்பி?

கேள்வி

தன்னருந் தொண்டினில் தக்கதோர் நம்பிக்கை,
தாங்கருந் தீங்கினில் நீங்கிடும் நல்லாற்றல்,
என்னும் இவைகள் திரைப்படத் தேயில்லை
என்றைக்கு வந்திடும் அண்ணே? இங்
கெழுததாளரேஇல்லை அண்ணே.

விடை

சென்னையைக் காட்டிவை குந்தமென் பார்ஒரு
செக்கினைக் காட்டிச் சிவன்பிள்ளை என்பார்கள்
நன்னெறி காணாத மூதேவி தன்னையும்
நான்முகன் பெண்டென்பர் தம்பி - தொலைந்
தேன்என்னும் பொய்க்கதை தம்பி

கேள்வி

செந்தமிழ் நாட்டில் தெலுங்குப் படங்கள்!
தெலுஙகருக்கிங்கு நடிப்பெதற்காக?
வந்திடு கேரளர் வாத்திமை பெற்றார்
வளர்ந்திடுமோ கலை அண்ணே? - இங்கு
மாயும் படக்கலை அண்ணே

விடை

அந்தத் தெலுங்கு மலையாளம் கன்னடம்
அத்தனை யும்தமிழ் என்று விளங்கிட
வந்திடும் ஓர்நிலை, இப்படத் தாலன்றோ
வாழ்த்துகநீ யிதைத் தம்பி - இதைத்
தாழ்த்துதல் தீயது தம்பி

கேள்வி

அங்கங் கிருந்திடும் நாகரி கப்படி
அங்கங் கிருப்பவர் பேசும் மொழிப்படி
செங்கைத் திறத்தால் திரைப்படம் ஆக்கிடில்
தீமை ஒழிந்திடும் அண்ணே - நம்
செந்தமிழ் நேருறும் அண்ணே

விடை

கங்குல், பகல், அதி காலையும் மாலையும்
காலத்தின் பேராய் விளங்குதல் போலே
இங்குத் தமிழ்மலை யாளம் தெலுங்கெனல்
எல்லாம் திராவிடம் தம்பி - இதில்
பொல்லாங்கொன்றில்லையே தம்பி!

Pin It

பார்த்ததைப் பார்ப்பதும், கேட்டதைக் கேட்பதும்
படத்தின் நோக்கமெனில்
போர்த்த அழுக்குடை மாற்றமும், வேறு
புதுக்கலும் தீதாமோ?
காத்தது முன்னைப் பழங்கதை தான்எனில்,
கற்பனை தோற்றதுவோ?
மாத்தமிழ் நாட்டினர் எந்தப் புதுக்கதை
பார்க்க மறுத்தார்கள்?

பாமர மக்கள் மகிழ்ந்திட வைத்தல்
படங்களின் நோக்கமெனில்,
நாமம் குழைத்திட வோஅறி வாளர்கள்
புற்கலை கண்டார்கள்?
தூய்மைத் தமிழ்ப்படம் செந்தமிழ் நாட்டில்
தொடங்கையில் செல்வரெலாம்
தாமறிந்துள்ள செல்வரெலாம்
தாமறிந்துள்ள தமிழ்ப்புல வோர்களைச்
சந்திப்ப தேனும் உண்டோ?

நேர்மைஇ லாவகை இத்தகை நாளும்
நிகழ்ந்த படங்களெல்லாம்
சீர்மிகு செந்தமிழ்ச் செல்வர்கள் பார்வைத்
திறத்திற் பிறந்திருந்தால்,
ஓர்தமிழ் நாட்டில் உருசிய நாட்டையும்
உண்டாக்கித் தீர்த்திடலாம்
ஆர்செய்யும் பூச்சாண்டி இங்குப் பலித்திடும்?
அடிமையும் தீர்த்திடலாம்!

Pin It

கூட்டின் சிட்டுக் குருவிக் குஞ்சு
வீட்டின் கூடத்தில் விழுந்து விட்டது!
யாழ்நரம்பு தெறித்த இன்னிசை போலக்
கீச்சுக் கிச்சென்று கூச்சலிட்டது.

கடுகு விழியால் தடவிற்றுத் தாயை
தீனிக்குச் சென்றதாய் திரும்ப வில்லையே!

தும்பைப் பூவின் துளிமுனை போன்ற
சிற்றடி தத்தித் திரிந்து சிறிய
இறக்கையால் அதற்கு பறக்கவோ முடியாது!

மின்இ யக்க விசிறி இறக்கையால்
சரேலென விரைந்து தாய்க்குருவி வந்தது
கல்வி சிறிதும் இல்லாத் தனது
செல்வத் தின்நிலை தெரிந்து வருந்தி
"இப்படி வா" என இச்இச் என்றதே!
அப்படிப் போவதை அறிந்து துடித்ததே!

காக்கையும் கழுகும் ஆக்கம் பெற்றன!
தாக்கலும் கொலையும் தலைவிரித்தாடின
அல்லல் உலகியல் அணுவளவேனும்
கல்லாக் குழந்தையே கடிதுவா இப்புறம்
என்றது! துடித்த தெங்கணும் பார்த்தது!
மேலிருந்து காக்கை விழிசாய்த்து நோக்கிப்
பஞ்சுபோற் குஞ்சைப் பறித்துச் சென்றதே!
எழுந்துலாவும் இளங்குழந்தைகளை
இழந்து போக நேரும்
குழந்தைப் பள்ளிக் கூடங்கள் தேவையே!

Pin It

ஏலாது படுக்கும் எண்சாண் உடம்பை
நாலுசாண் அகன்ற ஓலைக் குடிசையில்
முழங்கால் மூட்டு முகம்வரச் சுருட்டி,
வழங்கு தமிழரசு வளைத்த வில்லெனக்
'கிடப்பவன்', பகலெல்லாம் கடுக்க 'உழைப்பவன்'
'குடியானவன்' எனக் கூறு கின்றனர்
முடிபுனை அரசரும், மிடிஇலாச் செல்வரும்!

அக்குடியானவன், அரசர் செல்வரோடு
இக்கொடு நாட்டில் இருப்பதும் உண்மை!
அழகிய நகரை அவன்அறிந்ததில்லை
அறுசுவை உணவுக்கு -அவன் வாழ்ந்த தில்லை!
அழகிய நகருக்கு - அறுசுவை உணவை
வழங்குதல் அவனது வழக்கம்; அதனை
விழுங்குதல் மற்றவர் மேன்மை ஒழுக்கம்!

'சமைத்தல்' உழைத்தல்' சாற்றும் இவற்றிடை
இமைக்கும் நேரமும் இல்லை ஓய்வு - எனும்
குடியா னவனின் குறுகிய காதில்
நெடிய ஓர் செய்தி நேராய் வந்ததும்
உலகிற் பெரும்போர் உலகைப் பெனும்போர்!
உலகின் உரிமை உறிஞ்சும் கொடும்போர்
மூண்டது மூண்டது மூண்டது - ஆகையால்
ஆண்தகை மக்கள் அனைவரும் எழுக -
அந்த ஏழையும் ஆண்தகை தானாம்!

ஒருவன் ஆண்தகையை உற்றறியத்தகும்
திருநாள் வாழ்க - எனச் செப்பினான் அவனும்!

அருமை மகளுக்கு - ஒருதாய் சேர்த்தல் போல்,
பெருங்கடல் அளக்கும் பெரும்போர்க் கப்பல்,
குண்டுகள், கொடிய வண்டிகள், சாப்புகை,
வண்டெனப் பறக்கும் வான ஊர்திகள்,
அனைய அனைத்தும் அடுக்கடுக் காக
மறைவினில் சேர்த்து வைத்த இட்லர்,
இறைமுதல் குடிகள் யார்க்கும் போர்வெறி
முடுக முடுக்கித் திடீரென எழுந்தான்!

பெல்ஜியம் போலந்துமுதல் நல்ல நாடுகள்
பலவும் அழித்துப் பல்பொருள் பெற்றான்
முடியரசு நாடு, குடியரசு கொள்ள
முடியும் என்பதை முடித்த பிரான்சை
வஞ்சம், சூழ்ச்சியால் மடக்கி ஏறி
அஞ்சாது செல்வம் அடியொடு பறித்தான்
இத்தாலி சேர்த்தே இன்னல் சூழ்ந்தவன்
கொத்தாய் ஆசியாக் கொள்கையை நாடும்
ஜாப்பான் போக்கையும் தட்டிக் கொடுத்தான்
ஆங்கில நாட்டையும் அமெரிக்காவையும்
எரிக்க நினைத்த இட்லர் என்னுங்
'குருவி' நெருப்புக் குழியில் வீழ்ந்தது!

எத்தனை நாட்டின் சொத்துக் குவியல்!
எத்தனை நாட்டில் இருந்த படைகள்!
எத்தனை நாட்டில் இருந்தகாலாட்கள்!
அத்தனையும் சேர்த்து - அலைஅலையாக
உருசிய நாட்டை அழிக்கச் செலுத்தினான்!
உலகின் உயிரை ஒழிக்கச் செலுத்தினான்!
பெரிதினும் மிகவும் பெருநிலை கண்ட
உருசிய நாட்டை ஒழிக்கச் செலுத்தினான்!
மக்கள் வாழ்வின் மதிப்பு - இன்னதென
ஒக்க வாழும் உறுதி இதுவென,
முதிய பெரிய முழுநிலத் திற்கும்
புதியதாகப் புகட்டிய நாட்டில்
செலுத்தினான் இட்லர்; தீர்ந்தான்; முற்றிற்று!

உருசிய நாட்டின் உடைமையைக் கடமையை
மக்கள் தொகையால் வகுத்தே, வகுத்ததை
உடலில் வைத்தே உயிரினால் காக்கும்
உருசியத்தை இட்லர் உணர்கிலான்!

ஜப்பான் காரன் தன்கொடி நாட்ட
இப்பெரு நாட்டின் எழில்நக ரங்களில்
குண்டெறி கின்றான்; கொலையைத் தொடங்கினான்
பண்டை நாள்மறத் தொண்டுகற் கண்டென
நாய்க்குட்டி நாடுகள் நன்று காணக்
காட்டிய தமிழகம் கைகட்டி நிற்குமா?
ஊட்டத் தோளை ஓலைத்தோளென்னுமா?

இந்த நாட்டின் இருப்பையும் மூச்சையும்,
வந்துள பகையை வாட்டும் படையாய்
மாற்றி அமைத்து வைத்தனர் அன்றோ!
முகத்தைப் பின்னும் முன்னும் திருப்பாது
விடியுமுன் எருதின்வால் அடிபற்றிப்,பகல்
முடிவினில் எருதின் முதுகிற் சாய்ந்து
வருங்குடி யானவன் அருகில்இச் செய்தி
வலியச் சென்று வாயைத் திறந்தது-!

எழும்அரசர் செல்வர், எதிரிஇம் மூன்றுக்கு-
உழைக்க வேண்டும்அவ் வோலைக் குடிசை,
உச்சியி னின்றும் ஓராயிரம் அடிக்கீழ்
வைச்ச கனலும் மலைமேல் வழிதல்போல்,
அந்த நெஞ்சத்தில் ஆயிரம் ஆண்டுமுன்
குவியப் புதைந்த அவியா மறக்கனல்,
அக்குடி யானவன் அழகிய தோளிலும்,
விழியிலும் எழுந்து மின்ன, அவ் வேழை
எழுந்தான்; அவனுக்கு - இதற்குமுன் வைத்த
இழிநிலை; அதன்பயன் என்றும் வறுமை
இவை, அவன் காலை இழுந்தன கடித்து!

மெத்தை வீடு, மென்மை ஆப்பிள்
முத்தரிசி பாலில் முழுங்கிய சோறு,
விலைதந்து தன்புகழ் விதைக்கும் ஆட்கள்
இவற்றினின்றுதான் இன்பமும் அறமும்
துவங்கும் என்று சொல்லல் பொய்ம்மை!

இதைஅவன் கண்டதில்லை; ஆயினும்
அக்குடி யானவன் எழுந்தான்
நிற்க வில்லை; நிறைந்தான் போரிலே!

{ வையப் போரில் ரஷ்யாவை ஜெர்மனி
தாக்கத் துவங்கியபோது எழுதியது }

Pin It

தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ!
எழிலை உலகம் தழுவும் வண்ணம்
ஒழியா வளர்ச்சியில் உயரும் பல்வகைத்
தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ!

இந்தவான், மண், கனல், எரி, வளி, உருப்படா
அந்தநாள் எழுந்தஓர் "அசைவினால்" வானொடு
வெண்ணி லாவும் விரிகதிர் தானும்,
எண்ணிலா தனவும் எழுந்தன வாகும்
அணுத்தொறும் இயங்கும்அவ் வசைவியக் கத்தைத்
துணிப்பிலா இயற்கையின் தொழிலெனச் சொல்வார்.
அழியா தியங்கும்அவ் வசைவே மக்களின்
தொழிலுக்கு வேரெனச் சொல்லினும் பொருந்தும்,
ஆயினும் உன்னினும் அதுசிறந்த தன்று
தாயினும் வேண்டுவது தந்திடுந் தொழிலே!

மக்களின் தேவை வளர்ந்திடும் அளவுக்குத்
தக்க வாறு தளிர்த்திடு கின்ற
அறிவிலே தோன்றுவை; அறத்தோள் தழுவுவை!
மறுவிலாக் கருவியில் வாய்விட்டுச் சிரிப்பைந
பொருள்பல நல்கிஅப் பொருள்தொறும் கலைத்திறம்
அருள்புரிந்து குறைபா டகற்றுவை தொழிலே!
பசித்தவன் புசித்திடப் பறப்பது போன்றஓர்
அசைப்பிலா ஆவலும், அசைப்பிலா ஊக்கமும்
அடந்தோர் உனைத்தம், ஆயிரம் ஆயிரம்
தடந்தோள் தழுவியே கடந்தனர் வறுமை!

தொழிலே காதுகொடு! சொல்வேன், எங்கள்
அதிர்தோள் உன்றன் அழகிய மேனி
முழுவதும் தழுவ முனைந்தன பார்நீ
அழகிய நாட்டில் அந்நாள் இல்லாத
சாதியும் மதமும் தடைசெயும் வலிவிலே
மோதுதோள் அனைத்தும் மொய்த்தன ஒன்றாய்!
கெண்டை விழியாற் கண்டுகொள் தொழிலே
வாராய் எம்மிடை வாராய் உயிரே
வாராய் உணர்வே வாராய் திறலே!

அலுப்பிலோம் இருப்புக் கலப்பை துடைத்தோம்
மலையெனச் செந்நெல் வழங்கஎம் தோளில்வா!
கரும்பா லைக்குக் கண்ணெலாம் நெய்யிட்
டிரும்பா லைக்கும் வரும்பழு தகற்றினோம்
பண்டம்இந்நாட்டிற் பல்க மகிழ்ந்துவா!

சூட்டி ரும்பும் துளியும் போலஎம்
தோட்கூட் டத்தில் தொழிலுன் வல்லமை
சேர்வது நாங்கள் விடுதலை சேர்வதாம்!
யாமும் நீயும் இரண்டறக் கலப்பின்
தூய்மை மிக்க தொழிலா ளிகள்யாம்;
சுப்பல் முடைவோம் கப்பல் கட்டுவோம்
பூநாறு தித்திப்புத் தேனாறு சேர்ப்போம்
வானூர்தியால்இவ் வையம் ஆள்வோம்

ஐயப் படாதே! அறிவு புகட்டும்
வையநூல் பலஎம் மனத்தில் அடுக்கினோம்ந
மாசு தவிர்ந்தோம்; மாசிலா மணியே
பேசு; நெருங்கு; பிணைதோ ளொடுதோள்;
இன்பம்! இன்பம்! இதோபார் கிடந்த
துன்பம் தொலைந்தது! தொலைந்தது மிடிமை!
வாழிய தொழிலே! செந்தமிழ்
வாழிய! வாழிய வண்டமிழ் நாடே!

Pin It