(தமிழ் மொழி, இலக்கியங்கள் குறித்த தந்தை பெரியாரின் கருத்துகளுக்கு திடீர்த் தமிழ்ப் பற்றாளர்களும், அதைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் பார்ப்பனியமும் காட்டும் எதிர்ப்புகளுக்கு அன்றே மிகத் தெளிவாக பதில் அறைந்திருக்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். )

bharathidasan and periyar

குயில் இதழ்களிலிருந்து புரட்சிக் கவிஞரின் கேட்டலும் கிளத்தலும்.....

கே: சிலப்பதிகாரம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது ஆரியத்தைத் தமிழரிடம் புகுத்தும் நோக்கமுடையது என்று பெரியார் சொல்லலாமா?

கி: கதையமைப்பு நன்று. தமிழர் வாழ்க்கை முறைகள் சில நல்லன. பொருந்தாதவை பகுத்தறிவுக் கொவ்வாதவையாய் இருக்கின்றன. பாடம் சொல்லும் புலவர்கள் இவைகளை மாணவர்கட்கு எடுத்து விளக்குவதில்லை.

அதனால் ஆரியம் தமிழகத்தில் வலியுறுகின்றது. தமிழர் ஒழுக்கம், கலை, நாகரிகம், பண்பாடுகள் குறைவுபடுத்தப்படுகின்றன. புதியதொரு சிலப்பதிகாரம் எழுதிக் கொள்ளலாமன்றோ!

கே: தொல்காப்பியம் ஒரு தமிழனால் செய்யப்படவில்லை. தமிழர் ஒழுக்கம், கலை, நாகரிகம் அதில் மறுக்கப்படுகின்றன என்று கூறலாமா பெரியார்?

கி: ஆயிரம் முறை கூறலாம். வெள்ளை வாரணனாரும் பிறரும், தொல்காப்பியத்தில் பார்ப்பனரைப் பற்றிய செய்யுட்களை இடைச் செருகல் செய்துள்ளார்கள் என்று கூறினார்கள்.

இடைச் செருகல்களை நீக்கிப் பதிப்பிக்கலாமன்றோ புலவர்கள்! செய்யட்டும் செய்த பிறகு பெரியார் அவ்வாறு கூற மாட்டார்.
(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - குயில் 16.2.1960)

* * *


கே: தமிழரசர்கள் முட்டாள்கள்; காட்டுமிராண்டிகள் என்று பெரியார் சொல்லலாமா?

கி: ஏன் சொல்லக் கூடாது? தெருவில் கிடக்கும் நாய் விட்டையில் சிவனைக் கண்டான். கண்டவன் சும்மாவா இருந்தான். கோவில் கட்டி அதில் நிறுவிக் கும்பிடவும் வைத்தான். இப்படி ஒரு தமிழரசன்.

வடநாட்டினின்று ஆரியப் பார்ப்பனர்களை அழைத்து தமிழர் மேல் ஏறிச் சவாரி செய்யச் சொல்லுகிறான். இப்படி ஒரு தமிழரசன்! இப்படிப்பட்டவர்கள் எல்லாம் பிற்கால மன்னர் தாமே அதற்கு முற்காலத்தில் இருந்தவர்கள் நாகரிகம் உள்ளவர்களல்லவா என்று கூறலாம்.

நாகரிகம் உள்ளவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள் ஆகிய இருவகையாரில் கொள்கையில் வெற்றி பெற்றவர்கள் எவர்?

நாகரிகம் இல்லாதவரல்லவா? அவர் கட்டிய கோவில், அவர் காட்டிய நாய் விட்டைகள் தாமே இன்று ஆட்சி நடத்துகின்றன?

தமிழகத்தில் பற்றுள்ள புலவர்கள், நாகரிகமில்லாதவர் கண்ட கோவில் நாய் விட்டைகளை ஒதுக்கியும், நாகரிகம் கொண்டிருந்த மன்னரின் நாட்டுத் தொண்டைப் போற்றியும் நூற்கள் செய்ததுண்டா? செய்ய வேண்டுமல்லவா! அவ்வாறு அவர்களைச் செய்யத் தூண்டுவதுதான் பெரியாரின் பேச்சு!

கே: தமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்?

கி: இராமாயணத்தையும் பாரதத்தையும் ஆரியரின் காட்டுமிராண்டித்தனத்தைப் பின்பற்றி எழுந்த புராணம் முதலியவற்றையும் நம் இலக்கியம் நம் இலக்கியம் என்று கூறுவதன்றி தமிழர் இலக்கியங்கள் இன்னின்னவை என்று எடுத்துக் காட்டும் வலி இருந்ததா புலவர்களிடம்? அமைச்சர்களிடம்?

தமிழிலக்கியத்தை முன்னுக்குக் கொண்டு வாருங்கள், அவைகளைப் பின்பற்றி இலக்கியத்தைக் குவியுங்கள். சீர்திருத்தக்காரர்களை எதிர்ப்பதன் மூலம் வயிறு வளர்க்க எண்ணாதீர்கள் என்பதுதான் பெரியார் சொல்வதன் பொருள்.

(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - குயில் 23.2.1960)

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

Pin It

நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி, மிகப் பழமை வாய்ந்தது. அம்மொழி பல மொழிகளுக்குப் பெற்ற தாயாகவும், பல மொழிகளுக்கு வளர்ப்புத் தாயாகவும் இருந்து வந்துள்ளது. தமிழ்மொழி இங்கு வந்து புகுந்த எதிரிகள் பலரால் சாகடிக்கப் பட்டதோ என்ற நிலையிலும் சாகாத மொழி. மறைக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணிய நிலையிலும் மறையாது வாழும் மொழி.

bharathidasanஆயினும், தமிழை ஒழிப்பதன் மூல மாகத் தான் தமிழரை ஒழிக்க முடியும் என்ற முடிவோடு அதன் வளர்ச்சியில் எதிரிகள் தலையிட்டதில் அதன் வளர்ச்சி குன்றிற்று என்பது மறுக்க முடியாது.

தமிழ்மொழி எண்ணிலாத நல்ல இலக்கிய வளமுடைய மொழி. அவ்வி லக்கிய விளக்குகள், உலகை மூடியிருந்த இருளை ஓட்டியது என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. நடு நிலை உலகமே சொல்லும்.

தமிழிலக்கியங்கள் தம் வேலையை மன நிறைவு உண்டாகும்படி முடித்த பின்னரே அது எதிரிகளால் குன்றும் நிலையை அடைந்தது என்பது கருதிநாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

தமிழ் மொழியில் - தமிழ் இலக்கியங் களில் அயலார் புகுந்தனர் என்பதும், புகுந்து கை வைக்கவும் அவர்கட்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதும் துன்புறத் தக்கதேயாகும்.

நம் தாய்மொழி இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது என்பதை நாம் நினைக்கும் தோறும் அந்நினைப்பு நம் நெஞ்சுக்கு நெருப்பாகி விடுகின்றது.

தமிழை ஒழிக்கும் நோக்கமுடைய வர்க்கு இத்தமிழ் நாட்டில் சலுகை மிகுதி, அவர்கள் தமிழரின் அண்டை யிலேயே குடித்தனம் பண்ணுகின் றார்கள். தமிழ்த் தாயை ஒழிக்கச் சொல் லித் தமிழரையே பிடிக்க அவர்கட்குச் செல்வாக்கு உண்டு.

தாய்மொழியை எதிர்க்கும், அதைக் கொல்ல நினைக்கும், கொல்ல நாடோ றும் ஆவன செய்து வரும் ஒரு கூட் டத்தை நம் தமிழரிற் சிலரே நடத்து கிறார்கள். அவர்கள் சொன்னபடி இவர்கள் ஆடுகின்றார்கள். மானத்தை விடுகின்றார்கள். வயிறு வளர்ப்பதே நோக்கம் என்கிறார்கள்.

எதிரிகளைக் கொண்டே எதிரிகளின் கண்ணைக் குத்த வேண்டும் என்று எண்ணும் நம் இன எதிரிகளுக்கு ஆளாகி விடுகின்றார்கள். அன்னை நாடோறும் பட்டுவரும் பாடுஇது. கன்னல் தோறும் கண்டு வரும் இன்னல் இது. என் அன்புத் தமிழர்கள் தம் நெஞ்சு அரங்கிற்குத் திருப்புக முகத்தை, அழ வேண்டாம் எழுக!

அந்தத் தீயர்களை வாழ்த்த வேண் டும் அவர்கள் தீச்செயலுக்கு நன்றி கூற வேண்டும். தமிழுக்குத் தமிழர்க்கு இந் நாள் வரை அவர் செய்த தீமையால் தான் நம் இன்றைய எழுச்சி உணர்ச்சி ஏற்பட்டது.

நல்ல வேளையாக அவர்கள் தம் போக்கினின்று திருந்த மாட்டார்கள் அவர்கள் தீமை வளர்க தமிழர்கள் எழுக. உணர்ச்சி பெறுக.

தமிழ்

தமிழிலக்கியங்களில் - _ இன்று உள்ள தமிழிலக்கியங்களில் ஒன்றேனும் தனித் தமிழில் இல்லையாம். தமிழ்க் கோட்டையிற் புகுந்து கன்னம் வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கை வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கைவைத்த கன்னக்கோல்காரர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.

வளர்ந்துவரும் தனித்தமிழையும் கலந்து வரும் தமிழாக்கிக் கொண்டே இருப்பவர்களாகிய பேடிகள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.

இழிந்த கருத்துள்ள செய்யுட்களை உயர்ந்த கருத்துள்ள செய்யுட்களிடையே புகுத்திய மனச்சான்றில்லாத கயவர்கள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.

தமிழர்களே நம் கடமை என்ன? நாம் இந்நாள் அன்னைக்குச் செய்ய வேண்டிய அருந்தொண்டு என்ன?

தமிழை எதிர்க்கும் நிறுவனங்கள் எதுவா இருந்தாலும் நாம் எதிர்த்து ஒழிக்க வேண்டும். தமிழை எதிர்ப்பவன். தமிழைக் கெடுப்பவன் எவனானாலும் அவனைத் தலை தூக்க ஒட்டாமல் செய்ய வேண்டும்.

தமிழர்கள் அரசியல் கட்சிகளில் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். விட்டு விலக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்ப் பற்றுக் காவிரிப் பெருக்காகி விட்டது. தமிழர்களைத் தாழ்வாகக் கணக்கிடக் கூடாது எவரும்!

சென்னைத் தமிழ் அமைச்சர்களிற் சிலர் தமக்கு ஆட்களைச் சேர்க்க இப்போதே தமிழின் பகைவர்களின் காலை நக்கத் தொடங்கி விட்டார்கள் அந்த நொள்ளைகளுக்கு இப்போதே சொல்லியனுப்பி விட வேண்டும்.

ஐயா நீவிர் எந்தத் தொகுதியில் நின்றாலும் நீவிர் ஏந்தும் கப்பறையில் கல்லே விழும் என்று. இந்த அமைச்சரவை, இந்தக் கட்சி. இந்த ஆள், நல்ல அவை. நல்ல கட்சி. நல்ல ஆள் என்று தமிழர்கள் மதிப்பிடுவது தமிழுக்கு அவர்கள் செய்த நன்மையை எடை போட்டே.

அவன் எனக்கு வேண்டியவன் என்பதல்ல இப்போது தமிழர்களின் எண்ணம். அவன் தமிழுக்கு வேண்டி யவனா என்பது ஒன்றுதான்.

தமிழர்களின் மதிப்புப் பெற்றவன் இன்று பெற்ற தாயல்லள். தந்தையல் லன். உறவினன் அல்லன். தமிழரின் மதிப்பைப் பெற்றுத் திகழ்வது தமிழரின் தாயாகிய தமிழ்மொழி ஒன்று தான். நீ ஒரு மதத்தவனா? நீ ஒரு சாதியினனா? நீ வேறு இனத்தவனா? இரு!

அந்தப் பற்றுக்களையெல்லாம் விடுவது நல்லது. விடவில்லை. இரு. ஆனால் தமிழ்ப் பற்றுள்ளவனாயிரு., தமிழின் நலன் கருதிப் போராடுகின் றவனாயிரு! அந்தப் போரில் தலை போவதாயினும் அஞ்சாதிரு!

நீ ஒரு அரசியல் அலுவல்காரன்! இரு! ஆனால் தமிழுக்குப் போராட அஞ்சாதே. வயிறு ஒன்றையே கருதித் தமிழைக் காட்டிக் கொடுப்பாரின் தெருவில் திரிவாரின் நண்பரையும் அணுகாதே!

போர்! தமிழ்ப் போர். தமிழ்த் தாய்க்காக! அவள் படும் இன்னலைத் தீர்ப்பதற்காக - தமிழர் தமிழராக மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக போர்!

தமிழ்த் தாய் வெல்க!

தமிழர்கள் விடுதலை எய்துக!

குயில் 23.2.1960

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It

periyar 221குமரி நாட்டின் தமிழ்நான் மறைகள்
அமிழ்ந்தன! வடவர் மறைகள் நிமிர்ந்தன!
தமிழன் முதலில் உலகினுக் களித்த
அமிழ்துநேர் தத்துவம் ஆன எண்ணூல்
அமிழ்ந்தது! வடவரின் அறிவுக் கொவ்வாப்
பொய்ம்மைகள் மெய்ம்மைகள் ஆகிப் பொலிந்தன!
அகத்தியன் தொல்காப் பியன்முத லானவர்
தகுதிறம் தமிழிற் பெறுதிறம் அருளிய
எண்ணருங் கண்ணிகர் தமிழ்பாடும் ஏடுகள்
மறைந்தன! வடவர் தீயொழக்க நூற்கள்
நிறைந்தன! இந்த நெடும்புகழ் நாட்டில் தீது செய்யற்க செய்யில் வருந்துக
ஏதும் இனியும் செய்யற்க வெனும்
விழுமிய தமிழர் மேன்மை நெஞ்செலாம்
கழுவாய் எனுமொரு வழுவே நிறைந்தது.
நல்குதல் வேள்வி என்பது நலியக் -
கொல்வது வேள்வி எனும்நிலை குவிந்ததே!
ஒருவனுக் கொருத்தி எனும் அகம் ஒழிய
ஐவருக் கொருத்தி எனும் அயல் நாட்டுக்
குச்சிக் காரிக்குக் கோயிலும் கட்டி
மெச்சிக் கும்பிடும் நிலையும் மேவிற்று.
மக்கள் நிகர்எனும் மாத்தமிழ் நாட்டில்
மக்களில் வேற்றுமை வாய்க்கவும் ஆனதே!
உயர்ந்தவன் நான்என் றுரைத்தான் பார்ப்பான்
அயர்ந்தவன் நான்என் றுரைத்தான் தமிழன்
இப்படி ஒருநிலை காணுகின் றோமே
இப்படி எங்குண் டிந்த உலகில்?
இறந்த காலத் தொடக்கத் திருந்து
சிறந்த வாழ்வுகொள் செந்தமிழ் நாடு
இழிநிலை நோக்கி இறங்குந் தோறும்
பழிநீக் கிடஎவன் பறந்தான் இதுவரை?
இதுவரை எந்தத் தமிழன் இதற்கெலாம்
பரிந்துபோ ராடினான்? எண்ணிப் பார்ப்பீர்!
தமிழன் மானம் தவிடுபொடி ஆகையில்
வாழாது வாழ்ந்தவன் வடுச்சுமந்து சாகையில்
ஆ என்று துள்ளி மார்பு தட்டிச்
சாவொன்று வாழ்வொன்று பார்ப்பேன் என்று
பார்ப்பனக் கோட்டையை நோக்கிப் பாயும்இவ்
அருஞ்செயல் செய்வார் அல்லால்
பெரியார் எவர்? - நம் பெரியார் வாழ்கவே!

- பாரதிதாசன் (8.6.1958, 6)

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It

தமிழன் தமிழக கோயிற் கடவுளுக்கு அருச்சனை செய்விக்கச் செல்லுகின்றான். கருவறைக்கு இப்புறமே நிற் கின்றான். அருச்சகன் அருச்சனைக்குக் கூலி கேட்கின்றான். தமிழ் பெரியார் ஒருவர் குறுக்கிட்டுத் தமிழனுக்கு அறிவுறுத்துகிறார்.

bharathidasan 350பெரியார்:

சிவனாரை வழிபடத் திருக்கோயி லிற்புகுந்ததால்
இவன் வழிமறித்து நில்லென்றான் நில்லென்றான்

தமிழன்: இவனே கருவறைக்குள் இருக்கத் தகுந்தவனாம்
எட்டி இருந்துசேதி சொல்லென்றான் சொல்லென்றான்

பெரியார்:
கருவறைக்குள் இவன்தான் கால் வைக்க வேண்டும்
என்றால் சரியான காரணமும் வேண்டுமே வேண்டுமே?

தமிழன்:
சுரர்களில் பூசுரனாம் நாமெல்லாம் சூத்திரராம்
சூத்திரன் தாழ்ந்தவனாம் யாண்டுமே! யாண்டுமே!!

பெரியார்: தேவனும் இவனானால் தேவருல கிருக்கப்
பூவுல கைச்சுரண்டல் ஆகுமா? ஆகுமா?

தமிழன்:
பூவுல கைக்காக்கப் புறப்பட்ட பேர்வழிகள்
சுரண்டாவிட்டால் பொழுதுபோகுமா? போகுமா?

பெரியார்: அப்பனுக் கருச்சனை அவன்தானே செய்ய வேண்டும்?
அருச்சனை நீபுரிந்தால் தீமையா? தீமையா?

தமிழன்: அருச்சனை தமிழாலே அய்யய்யோ நடத்தினால்
அப்பன் கதை முடிந்து போமையா! போமையா!!

பெரியார்:
தமிழ்ஒலி யால்செவித் தகடுகிழியும் சிவம்
நமக்கெதற் காந்தம்பி இவ்விடம்? இவ்விடம்?

தமிழன்: சமக்ருதம் செத்தும் அதன் பேரையும் சாகடித்தால்
நமக்கெல்லாம் வாழ்விடம் எவ்விடம்? எவ்விடம்?

பெரியார்:
தமிழைக் கெடுக்க வந்த வடமொழி மறைவதால்
நமக்கொரு கேடுமில்லை நல்லதே நல்லதே.

தமிழன்:
சமக்ருதம் தேவமொழி தமிழுக்கும் தாய்மொழி
தமிழரைக் காத்திடவும் வல்லதே! வல்லதே!

பெரியார்: தாய்மொழி தனிமொழி உலகத்தின் தாய்மொழி
சமக்ருதம் கலப்பட நஞ்சப்பா! நஞ்சப்பா!
சுமந்தபொய் மூட்டையும் சும்மாடும் பறந்திடத்
தூயோர் பறக்கடித்த பஞ்சப்பா! பஞ்சப்பா!

குயில் 9.8.1960 (தமிழுக்கும் அமுதென்று பேர், பக்கம் 103 -104)

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

திங்கட்கிழமை பட்டினிக் கிடந்தால் சிவபெருமானே நேரில் வந்து கை கொடுப்பார் என்று சொன்னாலும் நீ, தீனிப்பையை வெறுமையாய் வைக்காதே. பசித்தீ குடலை தின்றுவிடும்.

சனிக்கிழமை பட்டினிக்கு மகிழ்ந்து கோவிந்தப் படையாட்சி கழுகேறி வருவார் என்று எவன் புளுகினாலும் கேட்காதே. நேரத்தோடு உணவு கொள்- தீனிப்பையில் எப்போதும் உணவு தளதளவென்று இருக்கட்டும்.

இதைக் கேள்: நடலை அறுந்
தாள் அருணை
நம்பனுக்கு அன்பில்லா
உடலை ஒறுத்தால்
ஆவதுண்டோ -
அடலைநூல்
ஓதினால் பாசம் பொழியுமோ புற்றிலே
மோதினாற்
பாம்பு சாமோ.

இச்செய்யுட் கருத்து: நல்லவனாயிரு. உடலைத் தண்டிக்காதே என்பதாம். உண்மை மருத்துவர் இதைத்தான் வற்புறுத்தினார்கள்.

- புரட்சிக்கவிஞர்
குயில் 4-10-1960

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It