பிரிட்டிஷ் இந்தியாவில் வாழும் ஷெட்யூல்டு வகுப்பினரின் (தாழ்த்தப்பட்ட வகுப்பினரின்) குறைகளை எடுத்துக்கூறி, அவற்றிற்கு தீர்வுகாண அவசியப்படும் நடவடிக்கைகள் பற்றி யோசனைகளை வழங்குகிறது இந்த கோரிக்கை மனு.

ambedkar 600குறைகளைப் பட்டியலிட்டுக் கூறும்போது, மத்திய சர்க்காரால் மட்டுமே தீர்வு காணக்கூடிய குறைகளை மட்டுமே நான் கவனத்தில் கொண்டேன்.

இந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள குறைகள் மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டு தனியாக விவாதிக்கப்பட்டுள்ளன:

(1)அரசியல் ரீதியான குறைகள்

(2) கல்வி சார்ந்த குறைகள்

(3)மற்ற குறைகள்

அரசியல் குறைகளை பகுதி I பரிசீலிக்கிறது; பகுதி II கல்வி சார்ந்த குறைகளையும்: பகுதி III பிற குறைகளையும் எடுத்துரைக்கின்றன. இத்துடன் பகுதி IV ஐயும் சேர்ந்துள்ளேன்; அதில் இடைவிடாத துன்பகரமான வாழ்க்கையில் உழன்று கொண்டிருப்பவர்பால் ஒவ்வொரு சர்க்காரும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய கடமை பற்றி துணிவுடன் பேச முற்பட்டுள்ளேன். இதை இந்திய சர்க்கார் அங்கீகரிப்பர், ஷெட்யூல்டு வகுப்பினர்களுக்கு அவர்கள் ஆற்ற வேண்டியதை ஆற்றுவர் என்ற நம்பிக்கையில் இதைச் செய்திருக்கிறேன்.

சில பகுதிகளைக் கொண்ட ஓர் அட்டவணையைக் கீழே கொடுப்பது உசிதம் என்று கருதினேன். இந்த அட்டவணை இரு நோக்கங்களை நிறைவேற்றுகிறது என்பதைக் காணலாம். அது முதலாவதாக இந்தக் கோரிக்கை மனுவின் உள்ளடக்கத்தை கொடுக்கிறது; இரண்டாவதாக, ஆரம்பத்திலேயே இந்தக் குறையீடுகள் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.

பாகம் - I - அரசியல் குறைகள்

1. மத்தியச் சட்டமன்றத்தில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாதது

இன்று அமைக்கப்பட்டுள்ள மத்தியச் சட்டமன்றத்தில் 141 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 102 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்; 39 பேர் நியமிக்கப்பட்டவர்கள். நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் 19 பேர் அதிகாரிகள் அல்லாதவர்கள்; 20 பேர் அதிகாரிகள்.

இந்த மொத்தம் 141ல் ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்தவர்கள் இருவர் உள்ளனர். இதனை ஷெட்யூல்டு வகுப்பினரின் மக்கட் தொகையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒரு அரசியல் விவகாரமாக ஆகியுள்ளது.

தங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டுவதற்காக இந்துக்களும், முகமதியர்களும், சீக்கியர்களும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் திரித்துப் புரட்ட முயற்சி செய்து வந்துள்ளனர். தீண்டப்படாதவர்களுக்கு பாதகமான முறையில் மிகப் பெரும்பாலும் இது செய்யப்படுகிறது.

எனவே அவர்களின் மக்கள் தொகையில் துல்லியமான எண்ணிக்கையை பெறுவது கஷ்டமாகிறது. மக்கள் தொகை கணிப்பு கொடுக்கும் மதிப்பீடு எதுவாக இருந்தாலும், அது குறைந்த மதிப்பீடாகவே இருக்க முடியும்.

எனினும் 1940 மக்கட் தொகை கணிப்பு கொடுத்துள்ள புள்ளிவிவரப்படி, ஷெட்யூல்டு வகுப்பு மக்கள் தொகை 4 கோடி என்று எடுத்துக் கொண்டாலும், அவர்களுக்கு மத்திய சட்டமன்றத்தில் கேலிக்கூத்தான முறையில் மிகக் குறைந்த அளவுப் பிரதிநிதித்துவமே வழங்கப்பட்டிருக்கிறது.

2. இந்த நிலையைத் தெளிவுபடுத்தி இந்த விஷயம் சம்பந்தப்பட்ட இரு அட்டவணைகளை கீழே கொடுத்துள்ளேன்:

அட்டவணை I - பிரிட்டிஷ் இந்தியாவின் மக்கள் தொகை

சமூகங்கள் 1941ல் ஒவ்வொரு சமூகத்தின் மொத்த மக்கட் தொகை மக்கள் தொகைக்கேற்ப முக்கியத்துவத்தின் படிநிலை மொத்த மக்கள் தொகையில் சதவிகிதம்
மொத்தம் 295,808,722    
இந்துக்கள் 1,50,890,146 1 50,0
முஸ்லீம்கள் 79,398,503 2 23.6
ஷெட்யூல்டு வகுப்பினர் 39,920,807 3 13.5
மலைவாசிகள் 16,713,256 4 5.7
சீக்கியர்கள் 4,165,097 5 1.3
இந்தியக் கிறித்தவர்கள் 3,245,706 6 1.0
ஐரோப்பியர்கள் 122,788 7 -
ஆங்கிலோ – இந்தியர்கள் 113,936 8 -
பார்ஸிகள் 101,968 9 -

குறிப்பு: இந்த மகஜரின் நோக்கத்திற்கு பொருத்தமாக உள்ள சமூகங்களின் மக்கள் தொகை மட்டுமே. இந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை II - மத்திய சட்டமன்றத்தில் சமூகவாரி இயைபு

சமூகம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட அதிகார சார்பற்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட அதிகார சார்புடைய உறுப்பினர்கள் அதிகார சார்புடைய உறுப்பினர்கள் உள்ளிட்டு மொத்தம் அதிகார சார்புடைய உறுப்பினர்களை நீக்கி மொத்தம்
எண்ணிக்கை சதவிகிதம் எண்ணிக்கை சதவிகிதம் எண்ணிக்கை சதவிகிதம் எண்ணிக்கை சதவிகிதம் எண்ணிக்கை சதவிகிதம்
1 2 3 4 5 6
இந்துக்கள் 56 54.9 4 21 8 - 68 48..5 60 49.5
முஸ்லீம்கள் 34 33.5 7 37 3 - 44 31 41 33.8
சீக்கியர்கள் 2 - 2 10.5 - - 4 2.8 4 3.3
பார்ஸிகள் 1 - 2 10.5 1 - 4 2.8 3 2.4
ஐரோப்பியர்கள் 8 7.8 1 - 7 - 16 11.3 9 7.4
இந்தியக் கிறித்தவர்ள் - - 1 - - - 1 - 1 -
ஆங்கிலோ – இந்தியர்கள் - - 1 - - - 1 - 1 -
ஷெட்யூல்டு வகுப்பினர் - - 1 - 1 - 2 1.4 1 -
காலியிடம் 1 - - - - - 1 - 1 -
மொத்தம் 102 - 19 - 20 - 141 - 121 -

3. மத்திய சட்டமன்றத்தில் இப்பொழுது வெவ்வேறு சமூகங்கள் எந்த அளவு பிரதிநிதித்துவம் பெற்றிருக்கின்றன என்பது பற்றி ஏராளமான விவரங்களை இந்த அட்டவணை தருகிறது. பத்தி 5ல் உள்ள புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு சமூகமும் பெற்றுள்ள மொத்த பிரதிநிதித்துவத்தையும் அவற்றில் சிலவற்றின் சதவிகிதத்தையும் காண்பிக்கிறது. எனினும் இவற்றுக்கு முக்கியத்துவம் தர நான் விரும்பவில்லை. நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளும் இந்த புள்ளி விவரத்தில் உட்படுவர். அவர்கள் பிரதானமாக சர்க்காரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டவர்கள்; அவர்கள் சார்ந்த சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. இரண்டாவதாக, நியமிக்கப்பட்ட அதிகாரிகளது சமூக வாரி இயைபு, மாறுபடக்கூடியது, நிலையானதல்ல. ஆனால் மற்ற பத்திகளில் உள்ள புள்ளிவிவரங்கள்பால் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.

பத்தி 6லிருந்து துவங்குகிறேன். வெவ்வேறு சமூகங்கள் தேர்தல் மூலமும் நியமனம் மூலமும் பெற்றுள்ள மொத்த பிரதிநிதித்துவத்தின் அளவை அது எடுத்துக்காட்டுகிறது. அதிலும் பத்தி 3ல் உள்ள புள்ளிவிவரங்கள் இதனை இன்னும் அதிகத் துலாம்பரமாகப் புலப்படுத்துகின்றன. தேர்தல் மூலம் இந்துக்கள் 54.9 சதவீத இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; அதற்கு மேலும், நியமனத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்களுக்கு 21 சதவீதம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் மூலம் முகமதியர்கள் 33.5% பெற்றுள்ளனர். அவர்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் அவர்களுக்கு எவ்வளவு கிடைக்க வேண்டுமோ அதைவிட மிக அதிக அளவு இது.

அதற்கு மேலும், நியமனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 37 சதவீதம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சீக்கியர்கள், பார்ஸிகள் விஷயமும் இதுவே. அவர்களது எண்ணிக்கை அளவுக்கும் மிக அதிகமாக அவர்கள் தேர்தல் மூலம் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். அது மட்டுமல்ல, இவ்விரு சமூகங்களில் ஒவ்வொன்றும் நியமன இடங்களில் 10.5 சதவீதத்தைப் பெற்றுள்ளன. ஆனால் அதேசமயம் 4கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய சமூகமான ஷெட்யூல்டு வகுப்பினர் தேர்தலில் ஓர் இடத்தைக் கூட பெறவில்லை; நியமனத்தின் மூலம் ஒரே ஓர் இடத்தையே பெற்றுள்ளனர். இது அப்பட்டமான உண்மையாகும்.

4. இந்த விவரங்களைக் கொண்டு பார்க்கும்போது இரண்டு விஷயங்கள் தெள்ளத் தெளிவு. முதலாவதாக, சட்டமன்றம் சமசீரற்ற அமைப்பாகவே உள்ளது. சில சமூகங்களுக்கு தேவைக்கு அதிகமான பிரதிநிதித்துவமும், சில சமூகங்களுக்குத் தேவைக்குக் குறைவான பிரதிநிதித்துவமும் அளிக்கும் இரு நோய்களால் அது பீடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் மிகவும் தீவிர வடிவத்தில் உள்ளது. அளவுக்கு அதிகமான பிரதிநிதித்துவம் பெற்றுள்ள சமூகங்கள் அதிக செல்வாக்கும் ஆற்றலுமிக்கவையாக உள்ளன.

ஆனால் அதேசமயம் அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்படாமல் குறைந்த பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ள சமூகத்தினரோ வலிமையற்றவர்களாகவும் வறுமையில் வாடுபவர்களாகவும் உள்ளனர். இங்கு குறிப்பிடப்பட வேண்டிய இரண்டாவது கருத்து நியமனம் செய்யும் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது பற்றியதாகும். பிரதிநிதித்துவத்தின் சமத்துவமற்றத் தன்மையை சீர்செய்வதற்காகவே அரசியல் சட்டத்தில் நியமன அதிகாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேறுவிதமாகக் கூற வேண்டுமெனில் தேர்தல் மூலம் போதுமான பிரதிநிதித்துவம் பெறாத சமூகங்களுக்கு நியமனத்தின் மூலம் போதுமான அளவு பிரதிநிதித்துவம் அளிப்பதே நோக்கமாகும்.

மத்திய சட்டமன்றத்தின் இயைபைப் பொறுத்தவரை, தேர்தல் விஷயத்திலோ அல்லது நியமன விஷயத்திலோ அடிப்படையான கோட்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே ஏதாவது ஒரு கோட்பாடு இருக்கிறதெனில் அது என்ன தெரியுமா? பீட்டருக்கு பாலைவிட அதிகமாகக் கொடுப்பதும், ஏறத்தாழ எல்லாவற்றையும் பெற்றுள்ள பீட்டரை மேலும் வளப்படுத்த, கிட்டதட்ட எதுவும் பெற்றிராத பாலை கொள்ளையடிப்பதும்தான் இந்தக் கோட்பாடு.

5. பிரதிநிதித்துவம் விஷயத்தில், ஷெட்யூல்டு வகுப்பினருக்கு இவ்வளவு கொடுமையான அநீதி இழைக்க எந்த நியாயமும் இல்லை. தங்களின் உரிமைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் முகமதியர்களும் இந்துக்களும் ஒருவரோடு ஒருவர் போராட்டம் நடத்திவரும் ஒரு சட்டமன்றத்தில், மூன்றாவது சமூகமான தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதையும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதில் அவர்கள் ஜாக்கிரதையாக இருக்கும் 141 உறுப்பினர் உள்ள ஓர் அவையில், தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஒரே ஒரு பிரதிநிதி, தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளுக்கான போராட்டத்தில் என்ன ஆதரவு பெற முடியும்?

எந்த சவுத்பரோ குழுவின் சிபாரிசுகளின் படி மத்திய சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளதோ, அதன் கருத்து என்னவெனில், தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்களை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம் என்பதாகும். இந்தக் கருத்தை அப்போதைய இந்திய சர்க்கார் ஏற்றுக் கொள்ள மறுத்தது என்பது போதுமான அக்கறையுடன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும். சவுத்பரோ குழுவின் அறிக்கை மீதான தங்கள் அஞ்சல் விடுக்கையில் இந்திய சர்க்கார் கூறியதாவது:

“எங்கள் கருத்தில் சீர்திருத்தங்கள் பற்றி (மாண்டேகு – மெம்ஸ்போர்டு) அறிக்கையின் நோக்கத்திற்கேற்ப இந்த ஏற்பாடு இல்லை என்பதாகும். தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் சுய – பாதுகாப்பு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்று குழு உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். 60 முதல் 90 வரை சாதி இந்துக்களைக் கொண்டுள்ள மன்றத்தில் அந்த சமூகத்தின் ஒரே ஒரு பிரதிநிதியைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த பலனை எதிர்பார்க்க முடியும் என்று நம்புவது நிச்சயமாக ஒரு கற்பனையே. அறிக்கையின் பத்திகள் 151, 152, 155ன் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த தாழ்த்தப்பட்டவர்களை நாம் அதிக தாராள மனத்துடன் நடத்த வேண்டும்….”

துரதிருஷ்டவசமாக, மத்திய சட்டமன்றத்தின் இயைபு சம்பந்தமாக தனது ஆலோசனையை முன்வைக்கும்போது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இந்திய சர்க்காரால் எந்த தாராளத்தன்மையும் காட்டப்படவில்லை. நியமனத்தின் மூலம் அவர்களுக்கு (சர்க்கார்) ஒரு இடம் அளித்தார்கள்; இந்நிலை 1921லிருந்து தொடர்ந்து வருகிறது.

6. சொற்பமான இந்த பிரதிநிதித்துவத்தின் விளைவு வருந்தத்தக்கதாகும். 141பேர் கொண்ட மன்றத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஒரே ஒரு பிரதிநிதி, தனது முற்றிலுமான இயலாமையை உணராமல் இருக்க முடியாது. மன்றத்தில் இந்துக்கள் தரப்பிலிருந்து தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதிராக எழும் பெருமளவிலான குரோத எண்ணங்களை எதிர்த்து அவர் சமாளிக்க வேண்டியுள்ளது. தங்கள் நலன்களை முன்கொண்டு செல்லுவதற்கான தங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லீம் தரப்பினரின் ஆதரவையும் அவர் நம்பி இருக்க முடியாது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் நியாயமான நலன்களை ஆதரிப்பதைவிட பிரதான இந்து, முஸ்லீம் தரப்பினருடன் தங்களுக்குள்ள நல்லுறவுகளை பாதுகாத்துக் கொள்வதில் அதிக அக்கறை கொண்டுள்ள அதிகாரிகள் தரப்பையும் அவர் நம்பியிருக்க முடியாது.

தாழ்த்தப்பட்ட சாதியினரின் குறைகளை மன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்கவும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஒரே ஒரு பிரதிநிதியால் சாத்தியமாகாது. சட்டமன்றத்தின் தலைவர் வகுத்துள்ள விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களுக்குதான் பேசும் சந்தர்ப்பத்தை முதலில் தலைவர் அனுமதிக்கிறார் என நான் கேள்விப்படுகிறேன். குறைந்தது 10 உறுப்பினர்களையாவது பெற்றிருக்காத ஒரு கட்சியைத் தலைவர் அங்கீகரிப்பதில்லை என்றும் அறிகிறேன்.

தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரதிநிதி, ஒரு கட்சியில் சேரவில்லையெனில், சாதாரணமாக பேசுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்காது என்றாகிறது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஒரு பிரதிநிதி இத்தகைய நிலையை எதிர்கொள்ள வேண்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் அல்ல. ஒரு கட்சியில் சேர்வது என்றால் தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்களை அந்த கட்சி நலன்களுக்கு கீழ்ப்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட சாதியினரின் கோட்பாடுகளுக்கும் நலன்களுக்கும் அது முற்றிலும் முரணானதாக இருக்கக்கூடும்.

மறுபுறத்தில், ஒரு கட்சியில் சேராவிடில், பேசும் உரிமையை முற்றிலுமாக இழக்க வேண்டும். 1942 செப்டம்பரில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் இந்தியாவின் இன்றைய அரசியல் நிலை பற்றிய விவாதத்தின்போது என்ன நடந்தது என்பதை ஒருவர் கவனத்தில் கொண்டால், தாழ்த்தப்பட்ட சாதியினரின் சார்பாகப் பேசுவதற்கு அவர்களின் பிரதிநிதியான மதிப்பிற்குரிய ராவ் பகதூர் என்.சிவராஜ் சந்தர்ப்பத்தைப் பெறுவது மிகவும் கஷ்டமாக இருந்தது; ஆனால் அதே சமயம் முகமதியர்களுக்காக 5,6 முகமதிய உறுப்பினர்கள் சுலபமாகப் பேச முடிந்தது.

7. எனவே, மன்றத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரதிநிதித்துவம் அதிகப்படுத்தப்பட வேண்டியது பெரிதும் அவசியம். அதிகார சார்பற்ற நியமன இடங்களில் காலிகள் ஏற்படும்போதுதான் இதைச் செய்ய முடியும் என்பது உண்மையே. நியாயமாகவே, காலி இடங்கள் ஏற்படும்போது அவை மன்றத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

II. மத்திய நிர்வாக சபையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத நிலை

8. மத்திய நிர்வாக சபையில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குள்ள பிரதிநிதித்துவ உரிமையை அங்கீகரிப்பதில் இந்திய சர்க்கார் அதிக மெத்தனம் காட்டி வருகிறது. தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இது மிகவும் வேதனையளிப்பதாக இருந்து வருகிறது. சென்ற காலத்தில் அவர்களின் அரசியல் அந்தஸ்து எதுவாக இருந்த போதிலும், வட்டமேசை மாநாட்டிற்குப்பின், அவர்களின் அரசியல் அந்தஸ்து முகமதியர்களின் அரசியல் அந்தஸ்துக்கு சமமானதாக ஆகியுள்ளது; மத்திய நிர்வாக சபையில் பிரதிநிதித்துவம் பெற முகமதியர்களுக்கு உரிமை இருக்குமானால் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் அந்த உரிமை உண்டு.

அவர்களின் வாதம் வலுவான அடிப்படையைக் கொண்டது என்பதில் சந்தேகமில்லை. முகமதியர்களுக்கு மட்டுமல்லாமல், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு போதுமான பிரதிநிதித்துவத்திற்கு சட்டப்படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பது வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் கோரிக்கையாக இருந்தது. இந்தக் கோரிக்கைக்கு இந்துக்களின் கருத்து எதிராக இருக்கவில்லை.

இந்துக்கள் கூறியதெல்லாம் இதனை ஒரு சம்பிரதாயமாக்கி விட வேண்டும் என்பதாகும். இறுதியாக ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. முக்கியமான சிறுபான்மைச் சமூகத்தினரின் பிரதிநிதிகளைச் சேர்த்துக் கொள்ள ஆவன செய்வது கட்டாயமாக்கப்படும் ஒரு விசேடப்பிரிவு மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் கவர்னர் – ஜெனரலுக்கும் அனுப்பப்படும் ஆணைப்பத்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த சமூகங்கள்யாவை என்று குறிப்பிடப்படாவிட்டாலும், “முக்கிய சிறுபான்மையினர்” என்ற வாசகம் தாழ்த்தப்பட்ட சாதியினரையும் உட்படுத்தும் என்று கருதப்பட்டது என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. நீண்ட காலத்திற்குப் பின், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டிய கட்டாயத்தை இந்திய சர்க்கார் அங்கீகரித்துள்ளது.

9. என்றாலும், இந்த உரிமையை அங்கீகரிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் தனது சிறப்பை பெரிய அளவு இழந்துவிட்டது மட்டுமல்ல, இந்த குறைபாட்டைக் களையவும் தவறிவிட்டது என்பதைக் கூறியாக வேண்டும்; ஏனென்றால் அமைச்சரவையில் தங்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவானது என்று தாழ்த்தப்பட்ட சாதியினர் நினைகிறார்கள். 15பேர் கொண்ட அமைச்சரவையில் முகமதியர்கள் 3 உறுப்பினர்களைப் பெற்றிருக்கும்போது, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே இருக்கிறார்.

பல்வேறு சமூகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திற்கும், அவர்களின் தேவைகள் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள மகத்தான வேறுபாட்டின் காரணமாகவே எழுந்துள்ளது இந்த மனத்தாங்கல். மக்கள் தொகைதான் அளவுகோலாக இருந்தால் மக்கள் தொகையில், முகமதியர்களுக்கு மிக அருகில் உள்ளனர் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

15பேர் கொண்ட அமைச்சரவையில் முகமதியர்கள் மூன்று பேர்களைப் பெற்றிருந்தால் தாழ்த்தப்பட்ட சாதியினர் இரண்டு பேர்களையாவது பெற வேண்டும். இப்பொழுது, அமைச்சரவையில் சமூகவாரியான பிரதிநிதித்துவம் என்பது எந்தக் கோட்பாடு ரீதியானதாகவும் இல்லை என்று தோன்றுகிறது. சில பத்து லட்சம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட சீக்கியர்களும் 4 கோடி மக்கள் தொகை கொண்ட தீண்டப்படாதவர்களும் ஒரே நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

10. இந்திய அரசியலில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிலை பெருமளவு ஸ்திரப்படுத்த வேண்டிய தேவையுள்ளது; இந்திய அரசியலில் அவர்களின் நிலை ஸ்திரப்படுத்துவதற்கான பயனுள்ள பரிகாரம் அவர்கள் தங்கள் எண்ணிக்கை, தேவைகள் அடிப்படையில் கோருகின்றபடி அமைச்சரவையில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதுதான். இப்பொழுது கூறப்போவதன் மூலம் எந்த இரகசியத்தையும் நான் வெளியிடவில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.

ஸ்டாபோர்டு கிரிப்ஸ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவர் எனக்கு அளித்த பேட்டியில், மாட்சிமை தங்கிய மன்னர்பிரான் அவர்களின் பிரதான நோக்கங்களில் ஒன்று, தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிலையை, மத்திய நிர்வாக சபையில் அவர்களை சேர்ப்பதன் மூலம், ஸ்திரப்படுத்துவது ஆகும் என்று அவர் என்னிடம் கூறினார்; இடைக்காலத்தில் இந்திய மத்திய நிர்வாக சபை அமையக்கூடும் என்றும், அதனால் அவரது ஆலோசனைகளின்படி புதிய அரசியலமைப்புச் சட்டம் தயாரிக்கப்படக்கூடும் என்றும், அரசியல் நிர்ணய சபை அவர்களின் நிலைகளை ஐயத்துக்கிடமற்ற முறையில் ஸ்திரப்படுத்தப்படுவதைக் காணலாம் என்றும் கூறினார். நிர்வாக சபையை இந்திய மயமாக்கும் திசையில் அடுத்த நடவடிக்கை எடுக்கும்போது இந்தக் கொள்கை அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென நான் வேண்டுகிறேன்.

III. அரசுப் பணித்துறைகளில் பிரதிநிதித்துவம் இல்லாமை

11. அரசுப் பணித்துறைகளில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமான விஷயத்தில் இழைக்கப்பட்ட அநீதியைப் போல் அதிக கொடுமையானது வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த மகஜரின் கட்டுக்கோப்பை கணக்கில் கொண்டு, மத்திய சர்க்கார் குறிப்பாக சம்பந்தப்பட்ட அரசுப் பணிகள் பற்றி மட்டுமே, நான் எடுத்துக் கொள்ள முடியும். அவை இரு பிரிவுகளாக உள்ளன:-

(அ) ஐ.சி.எஸ்

(ஆ) மத்திய அரசுப் பணிகள்

12. இந்தப் பணித்துறைகளின் இயைபை ஒருவர் ஆராய்ந்தால், இந்த இரு துறைகளிலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் கடுமையாக விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் பட முடியாது. இந்த பணிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினர் கடுமையாக விலக்கி வைக்கப்பட்டுள்ளது பற்றி படம்பிடித்துக் காட்ட, கீழ்க்கண்ட புள்ளிவிவரங்களை முன்வைக்க விரும்புகிறேன். இப்பொழுது (1942ல்) ஐ.சி.எஸ் பணிகளின் இயைபு பின்வருமாறு உள்ளது:-

ஐ.சி.எஸ் பணிகளின் வகுப்புவாரி இயைபு

சமூகம் ஐ.சி.எஸ்ஸின் எண்ணிக்கை
ஐரோப்பியர்கள் 488
இந்துக்கள் 363
முகமதியர்கள் 109
இந்திய கிறித்தவர்கள் 23
ஆங்கிலோ - இந்தியர்கள் 9
பார்ஸிகள் 9
சீக்கியர்கள் 11
தாழ்த்தப்பட்ட சாதியினர் 1
மற்றவர்கள் 43
மொத்தம் 1,056

ஐ.சி.எஸ் அதிகாரிகளாக உள்ள 1056 ஆண்களில் தாழ்த்தப்பட்ட சாதியினரிலிருந்து ஒருவர் மட்டுமே இருக்கிறார். ஐ.சி.எஸ். அதிகாரிகள் சம்பந்தப்பட்டவரை நிலைமை இதுவே.

மத்தியப் பணிகளுக்கு ஆட்களை சேர்க்கும் விஷயத்திலும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிலை இதே அளவு மோசமாகவே உள்ளது. இது சம்பந்தமாக புள்ளிவிவரங்களை அளிக்க நான் விரும்பவில்லை. இந்த மகஜரை புள்ளிவிவரங்களால் அதிகம் நிரப்புவது தேவையில்லாததாகும். ஏனெனில் இது விஷயத்தில் இந்திய சர்காரின் உள்துறை இலாகாவின் தெளிவான ஒப்புதல் இருக்கிறது:-

“ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் உறுப்பினர்களை பணிகளுக்கு எடுப்பது பற்றி கைவசம் உள்ள தகவல்களின்படி, இவ்வகையில் அநேகமாக முற்றிலுமாக முன்னேற்றம் இல்லாதது பற்றி இலாகா அதிகம் கவலை கொள்கிறது.”

மேற்சொன்ன வாசகம் எந்த அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டப்படுகிறதோ அதன் எண். 4/5/38 Ests(s), தேதி ஜூன்1, 1939; அந்தத் தேதியில் நிலை எவ்வாறு இருந்தது என்பது இது குறிப்பிடுகிறது.

13. இந்திய அரசாங்கத்தின் கீழுள்ள பணிகளில் மற்ற சமூகத்தினர் இடம் பெற்றுள்ளது எவ்வாறு? தாழ்த்தப்பட்ட சாதியினர் விலக்கப்பட்டிருப்பதற்கான காரணங்கள் யாவை? தாழ்த்தப்பட்ட சாதியினர்பாலும் இதர சிறுபான்மை வகுப்பினர் பாலும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில் இந்திய சர்க்காரின் கோட்பாடுகளிலும் உள்ள பாகுபாட்டில் இதன் காரணங்களைக் காணமுடியும்.

14. அரசுப் பணிகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப் பட வேண்டியதன் அவசியம் குறித்து மத்திய சட்டமன்றத்தில் 1923 மார்ச் 10ந்தேதி திரு.நாயர் முன்வைத்த தீர்மானத்தை சர்க்கார் ஏற்றுக்கொண்ட போது, மத்திய அரசுப் பணிகளில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்ற கோட்பாடு 1925ல் நடைமுறைப் படுத்தப்பட்டது. அரசுப் பணிகள் இந்துக்களில் குறிப்பாக பிராமணர்களால் முற்றிலுமாக ஏகபோகமாக்கப்பட்டுள்ளன. மற்ற வகுப்பினர் அவற்றில் இடம்பெறுவது மிகவும் கஷ்டம் என்று மேற்சொன்ன தீர்மானத்தில் திரு.நாயர் புகார் செய்திருந்தார். இந்தத் தீர்மானத்தை பின்பற்றி இந்திய சர்க்கார் மேற்கொண்ட வழிமுறை என்னவெனில், எல்லா நிரந்தரமான காலி இடங்களில் மூன்றில் ஒரு பங்கை வகுப்புவாரி சமத்துவமற்ற தன்மைகளை நிவர்த்தி செய்வதற்கு ஒதுக்கி வைப்பது என்பதாகும்.

15. அரசுப் பணிகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற கொள்கையை அமலுக்குக் கொண்டு வந்த இந்த வழிமுறை இந்துக்களல்லாத சமூகத்தினரை திருப்திபடுத்தவில்லை. இந்த விஷயம் வட்டமேசை மாநாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. குறிக்கோளை அடைவதற்கு மேலும் அதிகம் பயனுள்ள முறையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை இந்திய விவகார அமைச்சராலும் மத்திய சர்க்காராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உள்துறை இலாகாவின் 1934 ஜூலை 4 தீர்மானம் F.14-17-8-33 இன் மூலம் இது அமுல்படுத்தப்பட்டது.

16. இந்தத் தீர்மானங்கள் இப்பொழுது அமலில் உள்ளன. நாட்டின் அரசுப் பணிகளில் எல்லா சமூகத்தினருக்கும் நீதி பெற்றுத் தரும் மாக்ன கார்ட்டா சாசனமாக அது விளங்குகிறது. இந்த தீர்மானத்தின் விதிகளை பற்றிக் குறிப்பிடுவது மிக அவசியமாகும். அரசுப் பணிகளில் மற்ற சிறுபான்மை வகுப்பினர் நன்கு பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளனர் என்பதையும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஏன் எந்தப் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதையும் அது எடுத்துக்காட்டும். அந்தத் தீர்மானத்தில் இரண்டு அடிப்படை விதிகள் உள்ளன; பழைய 1923 தீர்மானத்தோடு ஒப்பிட்டால், அவை புதியவையாகும்:

(1) அரசுப் பணிகளுக்கு ஆட்களை எடுக்கும் நோக்கத்திற்காக எந்த சமூகங்கள் சிறுபான்மையினராகக் கருதப்பட வேண்டுமென்று அது பிரகடனப்படுத்துகிறது;

(2) வருடந்தோறும் காலியாகும் இடங்களில், சிறுபான்மையினர் என்று அறிவிக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஒரு குறிப்பிட்ட விகிதத்தை அது வரையறுத்துக் கூறுகிறது.

17. இவைதான் பல்வேறு சமூகங்கள் பிரதிநிதித்துவம் பெற 1934 ஆம் வருடத் தீர்மானம் வகுத்துத் தந்திருக்கும் ஏற்பாடுகளாகும். விவரங்களை எடுத்துக் கொண்டால், முதலாவதாக தீர்மானம் கீழ்க்கண்ட சமூகங்களை சிறுபான்மையினர் என்று வரையறுக்கிறது;

(1) முகமதியர்கள், (2) ஆங்கிலோ – இந்தியர்கள், (3) இந்தியக் கிறித்தவர்கள், (4) சீக்கியர்கள், (5) பார்ஸிகள்.

இரண்டாவதாக, மேற்சொன்ன சிறுபான்மை சமூகத்தினர் நிரப்ப வேண்டிய வருடாந்திர காலியிடங்களைக் கீழ்க்கண்ட விகிதாச்சாரத்தில் இந்தத் தீர்மானம் நிர்ணயிக்கிறது:

1934 ஜூலை 4ம் தேதி தீர்மானம் நிர்ணயித்த விகிதாச்சாரம்

சிறுபான்மையினர் ஐ.சி.எஸ் மற்றும் அகில இந்திய அடிப்படையில் வேலையில் சேர்க்கப்பட்ட பணிகள் ரயில்வேயும் சுங்க இலாகாவும் தபால் தந்தி மதிப்பீடு செய்யும் இலாகாவும் தடுப்புச் செயல்களுக்கான பணிகளும்
முகமதியர்கள் 25% 25% 25% இது தீர்மானம் அமல் செய்யப்படுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. விசேஷத் தகுதிகள் இதற்குத் தேவைப்படுவதால், இதற்கு ஆட்கள் எடுப்பதை ஆங்கிலோ – இந்திய சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது
ஆங்கிலோ – இந்தியர்கள் - 8% 5%
இந்தியக் கிறித்தவர்கள் *81/3% 6% 31/2%
சீக்கியர்கள் - - -
பார்ஸிகள் - - -

குறிப்பு: தீர்மானத்தின் பத்தி 7 (iii) கூறுவதாவது: ஒதுக்கப்பட்ட விகிதா சாரத்தை விடக் குறைவாக வகுப்புகள் பெற்றால், தேவைப்பட்ட தகுதி வாய்ந்த மனுதாரர்கள் இல்லாவிட்டாலும் எஞ்சிய 81/3 சதவீதம் முகமதியர்களுக்கு கிடைக்கும்.

18. தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிலையைப் பாதுகாக்க இந்தத் தீர்மானம் அளித்துள்ள ஏற்பாடு என்ன? இது சம்பந்தமாக தீர்மானத்தில் செய்யப்பட்டுள்ள இரண்டு ஏற்பாடுகளைக் கீழே தருகிறேன். தீர்மானத்தின் 3வது பத்தி கூறுகிறது:

“இந்துக்களுக்கு மொத்தமாகக் கிட்டும் காலி இடங்களில் அவர்களுக்கு அதாவது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை ஒதுக்குவதால் எந்த பலனும் கிட்டாது; ஆனால், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை வேலைக்கு நியமிக்கும் நியாயமான சந்தர்ப்பங்களை அவர்கள் இழக்காமல் இருக்க உத்தரவாதம் செய்யப்படும் என அவர்கள் நம்புகிறார்கள்.”

அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு நியாயமான பிரதிநிதித்துவத்தை உத்திரவாதம் செய்ய எந்த வழியில் சர்க்கார் நம்பிக்கை வைத்தது என்பதை தீர்மானத்தின் பத்தி 7(1) (vi) விவரிக்கிறது. அது பின்வருமாறு கூறுகிறது:-

“அரசுப் பணிகளுக்கு ஆள் எடுப்பது போட்டி நடத்துவதன் மூலம் நடந்தாலும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் அரசுப் பணிகளில் நியாயமான பிரதிநிதித்துவத்தை அடைவதற்காக, அவர்களில் தகுதிவாய்ந்த உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படலாம்.”

இந்தப் பிரேரணைகளைப் பரிசீலித்தால், அவை இரு உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றன:-

அரசுப் பணிகளில் வேலைக்கு அமர்த்தப்படுவதை உத்திரவாதம் செய்ய தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் மற்ற சிறுபான்மை வகுப்பினருக்குமிடையே இந்திய சர்க்கார் செய்துள்ள வழிவகை ஏற்பாடுகளில் தெளிவான வேறுபாடு இருப்பது சொல்லாமலே விளங்கும். இந்த வேறுபாட்டை ஒரு வாக்கியத்தில் வெளிப்படுத்திக் கூறலாம். தீர்மானத்தின்படி, மற்ற வகுப்பினர் வேலைக்கு அமர்த்தப்படுவது உசிதத்திற்கு விடப்படவில்லை.

அது கட்டாயமான விஷயமாக ஆக்கப்பட்டுள்ளது. ஒரு காலி இடம் எந்த வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறதோ அந்த இடத்தை அந்த வகுப்பினரைக் கொண்டே ஆளெடுக்கும் அதிகாரி நிரப்ப வேண்டும். ஆனால் அதேசமயம், தாழ்த்தப்பட்ட சாதியினர் வேலைக்கு எடுக்கப்படுவது ஒரு வெறும் உசித விஷயமாக மட்டுமே ஆக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்படாத ஒரு காலியிடத்தை வேலைக்கு ஆள் எடுக்கும் அதிகாரி தாழ்த்தப்பட்ட சாதியினரைச் சேர்ந்த ஒருவரை நியமித்து நிரப்பலாம்.

19. கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்பதற்கும் செய்யப்படலாம் என்பதற்குமிடயே உள்ள வித்தியாசத்தின் காரணமாக, அரசு பணிகளில் முகமதியர்களும் மற்ற வகுப்பினரும் மிக நல்ல முறையில் பிரதிநிதித்துவம் பெறுகின்றனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் முற்றிலுமாக விலக்கி வைக்கப்படுகின்றனர். அரசு பணிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினரை சேர்த்து கொள்ளும் விஷயத்தை வேலைக்கு நியமிக்கும் அதிகாரிகளின் உசிதத்திற்கோ நல்லெண்ணத்திற்கோ இந்திய சர்க்கார் விட்டுவைக்கும் வரை எத்தகைய நல்ல பலனும் சாத்தியமல்ல. இந்த அதிகாரிகள் ஐரோப்பியர்களாகவோ, இந்துக்களாகவோ அல்லது முகமதியர்களாகவோ இருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் பற்றி ஐரோப்பியன் சிறிதும் கவலைப்படாமல் ஏனோதானோ என்று இருக்கிறான்.

தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்களைப் பாதுகாப்பதை தனது விசேட அக்கறையாக அவன் ஒருபோதும் கொண்டதில்லை. தனது அதிகாரம் பாதுகாக்கப்படும் வரை, தனக்குக் கீழே பணிபுரியும் இந்து அல்லது முகமதியரின் ஆலோசனையைப் பின்பற்ற அவன் தயாராக இருக்கிறான். தங்களுடைய நிலையை இயல்பாகவே பலப்படுத்திக் கொள்ள முகமதியர்கள் முயலுகிறார்கள். எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு காலி இடங்கள் முகமதியர்களுக்கு கிடைப்பதற்கு உறுதி செய்வதில் அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர். எப்படியாயினும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களையாவது பெற முயலுகிறார்கள்.

அரசு பணிகளில் இதுவரை ஏகபோகத்தைப் பெற்றிருந்த, வாழ்க்கையில் நல்லவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எவ்வாறு என்று ஒருபோதும் அறியாத இந்துக்கள் எஞ்சிய யாவற்றையும் தங்களுக்கே வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். இந்துக்கள் தங்களது சுயநலம் காரணமாகவும், அத்துடன் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதிராக காலம் காலமாக கொண்டுள்ள தப்பெண்ணங்கள் காரணமாகவும் அம்மக்கள்பால் இந்துக்கள் ஒருபொழுதும் நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினரை வேலைக்கு அமர்த்தும் விஷயத்தை இத்தகைய அதிகாரிகள் உசிதத்திற்கு விடுவதும், இதன் மூலம் தாழ்த்தப்பட்ட சாதியினர் நியாயமான பிரதிநிதித்துவத்தை அடைவார்கள் என்று நம்புவதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

20. அரசுப் பணிகளில் இடம்பெறுவது என்னும் பிரச்சினை எல்லாச் சிறுபான்மை சமூகத்தினருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கோ அது ஒரு ஜீவாதாரமான விஷயமாகும். வாழ்வா, சாவா என்ற விஷயமாகும். இதற்கு பல காரணங்கள் உண்டு. முதலாவதாக, தாழ்த்தப்பட்ட சாதியினரைச் சார்ந்த இளைஞர்களுக்கு இது ஜீவனோபாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த அம்சத்தை தாழ்த்தப்பட்ட சாதியினரோ, இந்திய சர்க்காரோ கூட அலட்சியப்படுத்த முடியாது. வேலை வாய்ப்புகளுக்கு வழி திறந்துவிடும் வாணிபமும் தொழிலும் தாழ்த்தப்பட்ட சாதியினை சேர்ந்த இளைஞர்களுக்கு அடைக்கப்படுகின்றன. சர்க்கார் பணிகளில்தான் அவர்கள் ஒரு உத்தியோகத்தை பெற முடியும்.

இது ஒரு முக்கிய அம்சமாக இருந்தபோதிலும் இந்த பிரச்சினையை இவ்வளவு ஜீவாதாரமாக ஆக்குவது இந்த அம்சம் மட்டும் அல்ல. மற்றொரு முக்கிய அம்சமும் இதில் இருக்கிறது. ஒரு சமூகத்தில் கல்வி பெருகுவதை உற்சாகப்படுத்துவதில் சர்க்கார் அளிக்கும் ஆதரவின் சாதகமான விளைவைப் பொறுத்துள்ளது இந்த அம்சம். இந்து சமூகத்தின் விஷயம் இவ்வகையில் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இத்துறையில் இந்து சமூகம் அடைந்துள்ள முன்னேற்றம் மிகவும் பிரமிக்கத்தக்கது. இந்து சமூகத்தில் கல்வி இவ்வளவு ஆழமாக வேரூன்றியிருப்பதற்கான அடிப்படைக் காரணம் சர்க்கார் பணிகளில் நுழைவதற்கான வாய்ப்பை கல்வி உத்திரவாதம் செய்வதேயாகும். இந்த உண்மை மிக அரிதாகவே உணரப்படுகிறது.

கல்வியில் மிகவும் பின்தங்கியிருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் சம்பந்தப்பட்டவருக்கு வேலைக்கான இத்தகைய உத்திரவாதம் முற்றிலும் அவசியம். மேலே குறிப்பிடப்பட்ட இரண்டை விட அதிக வலுவுள்ள மூன்றாவது வாதம் ஒன்று உள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியினரில் கல்வி கற்ற வர்க்கத்தினரின் நலன்களிலிருந்து அதே சாதியினரைச் சேர்ந்த சாமானிய மக்களின் நலன்கள் மாறுபட்டதாக இருப்பது சம்பந்தப்பட்டதே இந்த வாதம். பொதுமக்களின் சுபிட்சநலக் கண்ணோட்டத்தில் பொது நிர்வாகம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று உணரப்பட்டால் இது தெள்ளத் தெளிவாகும். முதலாவதாக, இந்தக் காலத்தில் நிர்வாக அதிகாரம், சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் உட்கொண்டுள்ளது தற்காலத்தில் எந்தச் சட்டமும் முழு நிறைவானதாகவோ திட்டவட்டமானதாகவோ இல்லை.

இவற்றில் பெரும்பாலானவை சட்டத்தின் நோக்கங்களை நடைமுறைக்குக் கொண்டுவர விதிகளை ஆக்கும் சட்டரீதியான உரிமையை நிர்வாகத்திற்கு அளிக்கின்றன. இரண்டாவதாக, அந்தச் சட்டம் பயனுள்ளதாக இருக்கிறதா, இல்லையா என்பது அது எந்த அளவு திறமையாகவும் நியாயமாகவும் நிறைவேற்றப்படுகிறது என்பதைப் பொறுத்துள்ளது. எனவே நல்ல சட்டங்களை விட நல்ல நிர்வாகம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது கண்கூடு. நிர்வாகம் மோசமாக இருந்தால், நல்ல சட்டங்களும் பயனற்றதாகிப் போகும்.

எனவே, நல்ல சட்டங்களை விட நல்ல நிர்வாகத்தில் அதிக அக்கறை கொண்டுள்ள தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு நிர்வாகம் ஒரு ஜீவாதார விஷயமாகும். இன்றைய நிர்வாகம் நல்ல நிர்வாகமா? இன்றைய நிர்வாகம் பற்றி தாழ்த்தப்பட்ட சாதியினர் என்ன நினைக்கிறார்கள்? இன்றைய நிர்வாகம் இந்தியாவெங்கிலும் தாழ்த்தப்பட்ட சாதியினர்பால் கடைப்பிடிக்கும் போக்கு பகைமை உணர்வும், அநீதியும், நெறி தவறியதாகவுமே உள்ளது என்ற கருத்தே எங்கும் நிலவுகிறது என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது.

தாழ்த்தப்பட்ட மக்கள் படும் துன்பங்களும் துயரங்களும், வாதனைகளும் வேதனைகளும், இம்சைகளும் பெரும்பாலும் எதிலிருந்து தோன்றுகின்றன? உசிதம்போல் நடந்து கொள்வதற்கு அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் ஏறத்தாழ எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை அடக்கி ஒடுக்கி வைக்கும் நோக்கத்தோடு அவர்களது நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்ற நிதர்சன உண்மையிலிருந்தே இவை தோன்றுகின்றன என்பது வெள்ளிடைமலை. தாழ்த்தப்பட்ட சாதியினர்பால் இந்து, முகமதிய அதிகாரிகள் கொண்டுள்ள மனப்பான்மையைக் கணக்கில் கொண்டால் இப்படித்தான் இருக்க முடியும்.

தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதிர்ப்பாக உள்ள, அவர்களை ஒடுக்குவதில் முனைப்பாகவுள்ள வர்க்கங்களிலிருந்து நிர்வாக ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, இது தொடர்ந்து நிலவும், அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இடம்பெறுவது தாழ்த்தப்பட்ட சாதியினரைச் சேர்ந்த சாமானிய மக்கள் நற்பயனும் நல்வாழ்வும் பெறுவதற்கு ஜீவாதார முக்கியத்துவம் வாய்ந்ததென்பதை நிலைநாட்ட இதைவிட வலுவான வாதம் ஏதும் இருக்க முடியாது.

21. சில உண்மைகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. தீங்கின் தோற்றுவாய் எது என்பது தெளிவாக உள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் வேலைவாய்ப்பு நலன் எவ்வளவு ஜீவாதாரமானது என்பதும் தெளிவு. தனது 1934 ஜூலை 4 தீர்மானத்தில் மற்ற சமூகத்தினரோடு ஒப்பிடும்போது, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதிராக பாரபட்சமான நிலையை சர்க்கார் எடுத்ததானது இந்த ஜீவதார நலனுக்கு மிகப் பெரும் தீங்கை இழைத்துள்ளது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஐ.சி.எஸ். அதிகாரிகளின் வகுப்புவாரி இயைபு சம்பந்தமாக கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்களிலிருந்து, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எத்தகைய நாசகரமான விளைவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது தெளிவாகும்:-

அட்டவணை III - 1942ல் ஐ.சி.எஸ். பதவிகளில் வகுப்புவாரி விகிதாசாரம்

சமூகம் மொத்தம் ஐரோப்பியர் உட்பட மொத்தம் 1056ல் சதவிகிதம் ஐரோப்பியர் நீங்கலாக மொத்தம் 568ல் சதவிகிதம்
ஐரோப்பியர்கள் 488 42.4 -
இந்துக்கள் 363 34.4 63.2
முகமதியர்கள் 109 10.3 19.2
இந்தியக் கிறித்தவர்கள் 23 2.2 4.0
ஆங்கிலோ-இந்தியர்கள் 9 0.9 1.5
பார்ஸிகள் 9 0.9 1.5
சீக்கியர்கள் 11 1.0 2.0
தாழ்த்தப்பட்ட சாதியினர் 1 இல்லை இல்லை
மற்றவர்கள் 43 3.9 8.0
மொத்தம் 1056    

அட்டவணை IV - போட்டி மூலமும் நியமனம் மூலமும் ஐ.சி.எஸ் பதவிகள்

சமூகம் போட்டி மூலம் நியமனம் மூலம் மொத்தம்
ஐரோப்பியர்கள் 336 152 488
இந்துக்கள் 332 31 363
முகமதியர்கள் 35 74 109
இந்தியக் கிறித்தவர்கள் 19 4 23
ஆங்கிலோ-இந்தியர்கள் 8 1 9
பார்ஸிகள் 8 1 9
சீக்கியர்கள் 5 6 11
தாழ்த்தப்பட்ட சாதியினர் - 1 1
மற்றவர்கள் 28 15 43
மொத்தம் 771 285 1056

அட்டவணை V - ஐ.சி.எஸ். பதவிகளின் விகிதாசாரத்தோடு ஒப்பிடும்போது மக்கள் தொகை விகிதாசாரம்

சமூகம் ஐரோப்பியர்கள் நீங்கலாக ஐ.சி.எஸ்ஸில் உண்மையான விகிதாசாரம் மக்கள் தொகையின் விகிதாசாரம்

மக்கள் தொகையின் விகிதாசாரத்தோடு ஒப்பிட்டால் பணி எண்ணிக்கையின் விகிதாசாரம்

அதிகம்+ குறைவு -

இந்துக்கள் 63.2 50.0 +13.2
முகமதியர்கள் 19.2 23.6 -4.4
இந்தியக் கிறித்தவர்கள் 4.0 1.0 +3.0
ஆங்கிலோ-இந்தியர்கள் 1.5 0.03 +1.47
பார்ஸிகள் 1.5 0.3 +1.47
சீக்கியர்கள் 2.0 1.3 +0.007
தாழ்த்தப்பட்ட சாதியினர் - 13.5 -13.5
மற்றவர்கள் 8.0 - -
 

22. இந்த அட்டவணைகளிலிருந்து கீழ்க்கண்ட முடிவுகள் மறுக்க முடியாதபடித் தெளிவாகத் தெரிகின்றன:-

(1) ஐ.சி.எஸ். பதவிகளில் தங்களுக்கான பிரதிநிதித்துவப் பங்கை பெறுவதில் எல்லா சமூகங்களும் நியாயமான அளவில் முன்னேறியுள்ளன. இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு துரதிருஷ்ட சமூகமான தாழ்த்தப்பட்ட சாதியினரே; இவ்வகையில் அவர்கள் எந்த முன்னேற்றமும் அடையவில்லை.

(2) சில சமூகங்கள் அவர்களின் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு மிக அதிகமாகவே ஐ.சி.எஸ். பதவிகளில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன. இந்துக்களைப் பொறுத்தவரை இது மிக நன்றாக காணத்தக்கது. ஐரோப்பியர்களின் பங்கான 50 சதவீதத்தை நீக்கிவிட்டு – இந்தியர்களின் நிலையை ஒப்புநோக்குவதற்கு இதைச் சேர்க்க கூடாது – பார்த்தால் ஐ.சி.எஸ். உத்தியோக நியமனங்களில் இந்துக்கள் 63 சதவிகிதத்தைப் பெற்றிருப்பது தெரியவரும். இத்தனைக்கும் மொத்த மக்கள் தொகையில் அவர்கள் 50 சதவிகிதத்தினரே ஆவர். இவ்விதம் அவர்கள் 13 சதவிகித அதிக இடங்களை பெற்றுள்ளனர்.

(3) போட்டிகளில் நிலவும் சமத்துவமற்ற நிலைமையைச் சரிப்படுத்தவே நியமனம் உத்தேசிக்கப்பட்டது. எனினும், போட்டிகளில் பெரும் எண்ணிக்கையில் ஐ.சி.எஸ். உத்தியோகங்கள் பெற்றுள்ள, நியமனம் தேவைப்படாத, நியமன அனுகூலங்களுக்கு உரிமை கோர முடியாத சில சமூகங்களுக்கு நியமன அனுகூலங்கள் அளிக்கப்பட்டுள்ளன. சந்தேகமில்லாமல் இந்துக்கள் விஷயம் இதுதான் 1920-42 காலத்தில் போட்டிகளின் மூலம் இந்தியர்களைக் கொண்டு நிரப்பப்பட்ட 435 இடங்களில் இந்துக்கள் 332 இடங்களைப் பெற்றுள்ளனர்.

எனினும் இதற்கு மேலும் நியமனத்தின் மூலம் அவர்களுக்கு 31 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 – 42 காலத்தில் போட்டியின் மூலம் முகமதியர்கள் 35 ஐ.சி.எஸ். இடங்கள் மட்டுமே பெற்றனர். ஆனால் நியமனம் மூலம் 74 இடங்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. போட்டியில் சீக்கியர்கள் 5 இடங்கள் பெற்றனர். மேலும், நியமனத்தின் மூலம் 6 பெற்றனர். போட்டியில் ஒரு இடத்தைக் கூட பெறாத தாழ்த்தப்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிலை எவ்வளவு வருந்தத்தக்கதாக உள்ளது என்பதையும், மற்ற சமுதாயத்தினர்பால் பரிவுடன் நடந்து கொள்ள தீவிரமாக முயன்றுவரும் சர்க்கார் தாழ்த்தப்பட்ட சாதியினர்பால் நேர்மையோடு நடந்து கொள்ளாததே இத்தகைய நிலைமை உருவாவதற்குக் காரணமாகும்.

23. தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிலைமை மிக வருந்தத்தக்கதாக இருப்பது மட்டுமல்ல, அது சகித்துக் கொள்ள முடியாததாகவும் உள்ளது. இந்திய சர்க்காரின் இன்றைய கொள்கையின் விளைவே இது; இதன்படி, அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினரை வேலைக்கு எடுக்கும் எண்ணிக்கை மற்ற சமூகத்தினர் விஷயத்தில் ஒரு விதிமுறைப்படி நிர்ணயிக்கப்படுகிறது போலல்லாமல், வேலைக்கு அமர்த்தும் அதிகாரிகளின் மனம் போனப் போக்குக்கு விடப்படுகிறது. இன்றைய இந்த அமைப்பு முறை நீடிக்கும்வரை, தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்கள் தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படும் என்பதிலும், மற்ற சமூகத்தின் நலன்களுக்காக அவை பலியிடப்படும் என்பதிலும், மற்ற சமூகத்தின் நலன்களுக்காக அவை பலியிடப்படும் என்பதிலும் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை. பின்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிலையை மேலும் காலதாமதம் இல்லாமல் மேம்படுத்த வேண்டும்:-

(1) அரசுப் பணிகளுக்கு மற்ற சமூகத்தினரைப் போல் இவர்களும் சிறுபான்மையினர் என்று அறிவிக்கப்பட வேண்டும்.

ஐ.சி.எஸ் பதவிகளிலும் மத்திய பணிகளிலும் வருடந்தோறும் காலியாகும் இடங்களில் அது அகில இந்திய அளவில் வேலைக்கு எடுப்பதாக இருந்தாலும் ஸ்தல அளவில் வேலைக்கு எடுப்பதாயிருந்தாலும் 131/2 சதவீதம் என்ற விகிதாசாரத்தில் இப்பதவிகள் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். இதற்கு அவர்கள் உரிமை பெற்றுள்ளனர். இது நேர்மையானதும் நியாயமானதுமாகும்.  இவ்வாறு செய்யப்படாவிடில், அரசுப் பணிகளில் தங்களுக்குள்ள பங்கை தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒருபோதும் பெற மாட்டார்கள்.

26. தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒரு சிறுபான்மையினர் என்று அறிவிக்கப்படாததே இந்த சிக்கலுக்கு காரணம். அவர்களின் பாதையில் குறுக்கிடும் இந்தத் தடைக்கற்கள் அகற்றப்பட வேண்டியது அத்தியாவசியமாகும். காரணம் என்னவெனில், 1934 ஜூலை 4-ம் தேதியத் தீர்மானத்தின்படி ஒரு சமூகம் சிறுபான்மையினர் என்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே, அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு பெறும் உரிமையை அது பெறுகிறது. ஒரு சமூகமே இத்தகைய பயனை அடைந்திருக்கவில்லை எனலாம். தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒரு சிறுபான்மை சமூகம் என்று அறிவிப்பதில் எத்தகைய ஆட்சேபனை இருக்க முடியும் என்பதைக் காண்பது கடினமாக இருக்கிறது. சிறுபான்மையினர் என்ற பதம் ஒரு அரசியல்பதம். சட்டப் படியான அதன் பொருள் வரையறை எதுவாக இருந்தாலும் அதன் நடைமுறை ரீதியான பொருள் வரையறை சந்தேகத்தில் இருக்க முடியாது. வகுப்பு தீர்ப்பின் விதிகளின்படி, இந்த விஷயம் தீர்வு காணப்பட்டிருக்கிறது.

எனவே மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் சர்க்காரின் வகுப்புத் தீர்ப்பில் இடம் பெற்றுள்ள எந்த சமூகமும் சிறுபான்மை சமூகம் என்றே கருதப்படும். உண்மையில் இந்த அடிப்படையில்தான் முகமதியர்கள், சீக்கியர்கள், இந்தியக் கிறித்தவர்கள், ஆங்கிலோ – இந்தியர்கள் ஆகியவர்களை இந்தியச் சர்க்கார் சிறுபான்மையினர் என்று அறிவித்திருக்கிறது. இந்த வகுப்பினர்கள் சிறுபான்மை எனக் குறிப்பிடப்படுகின்றனர் என்றால் அவர்கள் வகுப்புத் தீர்ப்பில் இடம்பெற்றிருப்பதே இதற்குக் காரணம். அப்படியாயின், தாழ்த்தப்பட்ட சாதியினரை சிறுபான்மையினர் என்று அறிவிக்கப்படுவது ஏன் மறுக்கப்படுகிறது? அவர்களும் இந்தத் தீர்ப்பில் இடம் பெற்றிருப்பவர்கள்தான்.

அவர்களைச் சிறுபான்மையினர் என்று அறிவிக்கும் கட்டாயத்தில் சர்க்கார் இருந்தால், அதன் இயல்பான விளைவு பணிகளில் அவர்களின் பங்கை நிர்ணயித்து மற்ற சமூகத்தினரின் பங்கு அவர்களுக்கு எந்த வழிமுறைகள் மூலம் பெற்றுத் தரப்பட்டதோ அதேபோல இவர்களுக்கும் உள்ள பங்கை நிர்ணயித்து அதே வழிமுறைகள் மூலம் அதைப் பெற்றுத் தரச் சர்க்கார் கடமைப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் பெறுவதை யாரும் எதிர்க்க முடியாது. பிரிட்டிஷ் இந்தியாவில் அவர்களின் மக்கள் தொகை 13.6% என்று காண்பிக்கப்பட்டுள்ளது. எனவே பணிகளில் தங்களுக்கு 13.6 சதவீதம் பங்கு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள். இது எவ்வகையிலும் இந்துக்களுக்கு தீங்கிழைக்காது. ஏனெனில் அவர்களின் மக்கள் தொகை 50 சதவிகிதம்; ஆனால் அவர்கள் 63 சதவிகிதம் பெற்று வருகின்றனர். அதாவது 13 சதவீதம் அதிகமாக அவர்களுக்குக் கிடைக்கிறது.

25. தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைக்கு விசித்திரமான எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்ப்பு வருகிறது. இந்துக்களிடமிருந்து வந்திருக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமல்ல. ஏனென்றால் 1932ல் செய்து கொள்ளப்பட்ட புனா ஒப்பந்தத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இந்துக்களுக்கும் உள்ள பரஸ்பர உரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தின்படி, தாழ்த்தப்பட்ட சாதியினர் சிறுபான்மையினர் என்றும், நாட்டின் அரசுப் பணிகளில் போதுமான பங்கு பெற அவர்கள் உரிமை பெற்றிருக்கிறார்கள் என்றும் இந்துக்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். ‘போதுமான’ என்ற பதம் எவ்வளவு என்பதை குறிக்கவில்லை என்பது உண்மையே. மரணத்தின் பிடிகளிலிருந்து திரு.காந்தியை காப்பாற்றுவதற்காக அந்த ஒப்பந்தம் அவசர அவசரமாகச் செய்து கொள்ளப்பட்டதே இதற்கு காரணம்.

ஆனால் ‘போதுமான’ என்பது மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு குறைவான எதையும் குறிப்பிடவில்லை என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. எனவே தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளை இந்துக்கள் எதிர்க்க முடியாது. மேலும் உண்மையில் அவர்கள் அவ்வாறு எதிர்க்கவுமில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளை எதிர்ப்பவர்கள் இந்திய சர்க்காரேயன்றி வேறு எவரும் இல்லை. இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் ராவ் பகதூர் என்.சிவராஜ் 1942- மார்ச்சில் மத்திய சட்டமன்றத்தில் ஒரு வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்ட சாதியினரை சிறுபான்மையினர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும், அரசுப் பணிகளில் அவர்களுக்குள்ள பங்கை வரையறுத்துக் கூற வேண்டும் என்பதே அந்த வெட்டுத் தீர்மானத்தின் நோக்கம்.

இது குறித்து நடைபெற்ற வாதத்தின் போது முகமதியர்களும், ஐரோப்பியர்களும், ஆங்கிலோ-இந்தியர்களும், சீக்கியர்களும் இத்தீர்மானத்தை ஆதரித்தனர். ஒரே ஒரு நபர் தவிர, இந்துக்களும் அதை எதிர்க்கவில்லை. எனினும், இந்திய சர்க்காரின் பிரதிநிதியால் அது எதிர்க்கப்பட்டது. கதையின் மிக சோகமான பாகம் இதுதான். தாழ்த்தப்பட்ட சாதியினரின் நல்வாழ்வுக்கு தாங்கள்தான் தர்மகர்த்தாக்கள் என்பதால், மற்ற சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதை விட தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவர்கள் அதிகமாக தயாராக இருக்க வேண்டும்.

அரசுப் பணிகளுக்கு ஆட்கள் எடுக்கப்படுவதில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குள்ள உரிமை மீது இந்துக்கள் தடங்கல் எதுவும் ஏற்படுத்தியிருந்தால், இடம் ஒதுக்குவதில் இந்திய சர்க்காருக்கு உள்ள தயக்கத்திற்கு ஒரு காரணம் இருந்திருக்கலாம். ஆனால் அத்தகைய முகாந்தரம் எதுவும் இல்லை. தாழ்த்தப்பட்ட சாதியினரின் எதிரிகள் இந்துக்களல்ல, அவர்களின் உண்மையான எதிரி இந்திய சர்க்கார் என்று கூறினால் அது தவறாகுமா?

26. தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமையை எதிர்ப்பதற்கு இந்திய சர்க்கார் கூறும் காரணம் யாது? மதிப்பிற்குரிய ராவ் பகதூர் என்.சிவராஜ் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது மாண்புமிகு உள்துறை உறுப்பினர் ஆற்றிய உரையை ஒரு ஆதாரமாகக் கொண்டால், தாழ்த்தப்பட்ட சாதியினரில் கல்வி பெற்ற ஆண்கள் போதுமான அளவில் இல்லை என்பதே அரசு இதற்குக் கூறும் காரணம் எனத் தோன்றுகிறது. ஆனால் இது ஒப்புக்கொள்ளத்தக்க காரணம் இல்லை என்று கூறியாக வேண்டும். முதலாவதாக 1934 தீர்மானம் பத்தி 3ல் கூறப்பட்ட பழைய காரணம் இது. கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அது கணக்கில் கொள்ளவில்லை. இரண்டாவதாக, 1934 ஆம் ஆண்டுக்குக்கூட இந்தக் காரணம் பொருந்தாது. 1942க்கும் இது மிகத் தவறான கருத்தாகும். உண்மையில், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை பற்றி 1939-40 வாக்கில் தனிப்பட்ட முறையில் கணக்கு எடுக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட சாதியினரில் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 400 முதல் 500 வரை என்று தெரியவந்தது. மூன்றாவதாக, உண்மையாக இருந்த போதிலும், தாழ்த்தப்பட்ட சாதியினரை சிறுபான்மையினர் என்று அறிவிக்கவோ அவர்களின் விகிதாசாரத்தை நிர்ணயித்து அறிவிக்கவோ அது தடையாக இருக்க முடியாது. அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வருடாந்தரக் காலியிடங்களுக்கு தேவைப்படும் குறைந்தபட்ச தகுதிபெற்ற தாழ்த்தப்பட்ட சாதி விண்ணப்பதாரர் குறைவாக இருந்தால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

ஏனெனில் பயன்படுத்தப்படாத காலி இடங்கள் இந்துக்களுக்குப் போய்ச் சேரும். உள்துறை உறுப்பினர் எதிர்பார்க்கும் சிக்கல் தாழ்த்தப்பட்ட சாதியினர் விஷயத்தில் மட்டும் எழுகிறது என்று கூற முடியாது. இதர சிறுபான்மையினர் விஷயத்திலும் இத்தகைய சிக்கல் எழாது என்பதல்ல. உண்மையில் 1934ல் தீர்மானத்தை வெளியிட்டபோது, மற்றவர்கள் விஷயத்திலும் இந்த சிக்கல் எழும் என்று அவர்கள் கருதினார்கள்.

ஆனால் சர்க்கார் அவர்களை சிறுபான்மையினர் என்று அறிவிப்பதையோ, அவர்களின் விகிதாசாரத்தை நிர்ணயிப்பதையோ அது தடுத்து நிறுத்தவில்லை. சர்க்கார் அவர்களைச் சிறுபான்மையினர் என்று அறிவித்து அவர்களது விகிதாசாரத்தையும் நிர்ணயித்தது; ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒதுக்கப்பட்ட காலி இடங்களுக்குப் போதுமான தகுதியுள்ள மனுதாரர்கள் குறைவாக இருந்தால் ஏற்படும் சிக்கலைப் போக்க, தீர்மானத்தில் 7(1)(iii) பத்தியில் சர்க்கார் வழிவகுத்தது. அதாவது மீதியுள்ள காலி இடங்கள் முகமதியர்களுக்கு கிடைக்கும் என்று அறிவித்தது.

27. மற்ற சிறுபான்மையினர் விஷயத்தில் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும் கஷ்டங்கள், தாழ்த்தப்பட்ட சாதியினரின் பாதையில் நிச்சயமாக தடையாக இருக்க முடியாது. சர்க்கார் அம்மாதிரி செய்தால் தாழ்த்தப்பட்ட சாதியினரின் நியாயமான உரிமைகளை அநியாயமாக மறுக்கும் அநீதியைச் செய்த குற்றத்திற்கு அது உள்ளாகும். போதிய ஆதாரங்கள் இல்லாமல் வெறும் சாக்குபோக்குகளை கொண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களது கோரிக்கைகளை எதிர்க்கிறது என்றும் அது குற்றம் சாட்டப்படும்.

28. மேலே பரிந்துரைக்கப்பட்ட இரு பரிகாரங்களைத் தவிர, அதாவது (1) அவர்களைச் சிறுபான்மையினர் என்று அறிவிப்பது, (2) வருடாந்திர காலி இடங்களில் அவர்களின் விகிதத்தை நிர்ணயிப்பது ஆகிய பரிகாரங்களை தவிர, அரசுப் பணிகளில் அவர்களுக்குள்ள நியாயமான பங்கைப் பெற்றுத் தர வேறு சில பரிகாரங்களைச் செய்வதும் அவசியம். அவை:

(1) வயது வரம்பை உயர்த்துவது,

(2) தேர்வுக்களுக்கான கட்டணத்தைக் குறைப்பது மற்றும்

(3) இது விஷயத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் நலன்களுக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் எல்லா இலாகாக்களிலும் சரிவர நிறைவேற்றப்படுகிறதா என்று பார்த்துக் கொள்ள ஒரு தாழ்த்தப்பட்ட சாதி அதிகாரியை நியமிப்பது.

(1) வயது வரம்பை உயர்த்துவது

29. ஐ.சி.எஸ். பதவிக்கும் மத்திய அரசுப் பணிகளுக்கும் இன்றைய விதிகளின்படி அதிகப்பட்ச வயது வரம்பு 24 ஆகும். இந்த அதிகபட்ச வயது வரம்பு தாழ்த்தப்பட்ட சாதியினரை பெரிதும் பாதிக்கிறது. பெரும் வறுமையின் காரணமாக, தாழ்த்தப்பட்ட சாதிப்பையன், உயர் சாதியைச் சேர்ந்த வசதியான வகுப்பினரின் மாணவர்களுடன் இந்த வயது வரம்புக்குள் போட்டியிடத் தேவையான கல்வித் தரத்தை அடைவது சாத்தியமல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் குழந்தைகள் தங்கள் கல்வி வாழ்க்கையில் பல குறுக்கீடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. தனியாகப் பாடம் கற்பிப்பவரிடம் கல்வி பயில்வதற்கோ, வீட்டில் படிப்பதற்கோ வசதிகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.

ஆனால் அதேசமயம் உயர் சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளோ வேகமாகவும் தொடர்ந்தும் முன்னேற்றம் அடைய எல்லா வசதிகளும் உள்ளன. இதன் விளைவாக, தாழ்த்தப்பட்ட சாதியினரின் குழந்தைகள் தங்களின் கல்வியின் இறுதிக்கட்டத்தை அடைந்து மற்றவர்களுடன் போட்டிபோடும் நிலைமைக்கு வரும்போது, வயதின் காரணமாக தகுதிபெறாமல் போகின்றனர். எனவே வயது வரம்பை குறைந்தது 3 வருடங்கள் உயர்த்த வேண்டியது அவசியம். இந்தக் கோரிக்கையில் நியாயமற்றது எதுவும் இல்லை.

இந்திய சர்க்கார் இதை ஏற்றுக் கொண்டால் வழக்கம் மீறிய எதுவும் இதில் இருக்காது. அநேகமாக அரசுப் பணிகளில் விகிதாசாரம் நிர்ணயிக்கப்பட்டுள்ள எல்லா மாகாணங்களிலும், இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதைவிட தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பு ஓரளவு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில மாகாணங்களில் இந்த வித்தியாசம் 2 ஆண்டுகளாகவும், வேறு சில மாகாணங்களில் 3 ஆண்டுகளாகவும் உள்ளன. இந்த சலுகையை அளிப்பதன் மூலம் இந்திய சர்க்கார் நன்கு நிலை நாட்டப்பட்ட ஒரு கோட்பாட்டை பின்பற்றுகிறார்கள் எனக் கூற வேண்டும்.

(2) தேர்வு கட்டணங்களில் குறைப்பு

30. ஐ.சி.எஸ். பணிக்கான தேர்வுக்கட்டணம் ரூ.100. தணிக்கை மற்றும் கணக்கு அலுவலர் தேர்வுக்கான கட்டணம் ரூ.82/8; உதவியாளர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.30/-. இந்தக் கட்டணங்கள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மிக அதிகம். இவை உண்மையில் ஒரு பெரிய தடையாகும். தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் பலர், தேர்வுக்கான தகுதிபெற நேரத்தையும் சக்தியையும் செலவழித்தபின், தேர்வுக் கட்டணம்  அவர்களின் பெற்றோர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால், தேர்வுக்கு செல்வது கடினமானது என்பதைக் காண்கின்றனர். இந்தத் தடை அகற்றப்படுவது அவசியம். இந்த தேர்வுகளுக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் தாழ்த்தப்பட்ட சாதி மனுதாரர்களுக்கு விதிக்கக்கூடாது.

(3) தாழ்த்தப்பட்ட சாதி அதிகாரி

31. இந்த இரு சலுகைகளும் அனுமதிக்கப்பட்டால், மற்ற போட்டியாளர்களுடன் அதிக சம நிலைகளில் தாழ்த்தப்பட்ட சாதி வகுப்பினர் போட்டியிட பெரிய அளவில் உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த நடவடிக்கைகளால் கிட்டும் உதவி போதுமானதாகாது. மேலும் ஏதாவது செய்தாக வேண்டும். எடுத்துகாட்டாக, இந்திய சர்க்காரில், உள்துறை அல்லது தொழிலாளர் நல இலாகாவில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதி அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். அரசுப் பணிகளில் நுழைவதற்கு தாழ்த்தப்பட்ட சாதியினருக்குள்ள உரிமைகளை முறைப்படி நடைமுறைப்படுத்துவதைப் பார்த்துக் கொள்வது அவரது கடமையாக இருக்கும்.

அரசுப் பணிகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயத்தில் சர்க்கார் வகுத்துள்ள விதிகள் தவறாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைப் பார்த்துக் கொள்ள இத்தகைய அதிகாரிகள் ஒரு சமயம் இந்திய சர்க்காரால் வேலைக்கு அமர்த்தப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இது எப்படியிருப்பினும் அரசுப் பணிகளில் அமர்த்தப்படுவதில் தாழ்த்தப்பட்ட சாதியினர்களுக்குள்ள உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு தாழ்த்தப்பட்ட சாதி அதிகாரியை வேலைக்கு அமர்த்துவதன் அவசியமும் அவசரமும் கேள்விக்கு அப்பாற்பட்டது. இம்மாதிரி விஷயங்களைக் கையாள அதிகாரம் பெற்ற ஒரு அதிகாரி இல்லையெனில், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதிராக உள்ள குரோதங்கள் காரணமாக, இத்தகைய விதிகள் மீறப்படும் பெரிய அபாயம் உள்ளது. விதிகள் சரிவர நிறைவேற்றப்படுவதைச் சரி பார்க்கும் பொறுப்பு அளிக்கப்பட்ட சுதந்திரமாகச் செயல்படும் ஓர் அதிகாரியை நியமிப்பதுதான் இதற்கு ஒரே பரிகாரமாகும்.

IV. மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையத்தில் பிரதிநிதித்துவம் இல்லாதது

மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையத்தில் இப்பொழுது நான்கு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருவர் ஐரோப்பியர்கள், ஒருவர் இந்து, மற்றொருவர் முகமதியர். இந்த ஆணையத்தின் இயைபு நிர்ணயிக்கப்படும் போது அதில் தாழ்த்தப்பட்ட சாதியினர் விடப்பட்டு விட்டனர். மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையத்தில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவதற்கு காரணம் எதுவும் இல்லை. இந்தியாவில் மூன்று பிரதான மக்கள் பிரிவினர் உள்ளனர். அவர்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் மூன்றாவது முக்கியப் பிரிவினராவர். இவர்களின் மக்கள் தொகை கோடிகளில் கணக்கிடப்படுகிறது. மக்களின் மற்ற இரண்டு முக்கிய பிரிவினர்களின் நலன்கள் போலவே, பணிகள் விஷயத்தில் இவர்கள் நலனும் முக்கியமானது

. மற்ற இரு பிரிவினர்களின் நலன்களை விட இவர்களின் நலனுக்குள்ள ஆபத்து உண்மையில் அப்படி ஒன்றும் குறைந்ததல்ல. மற்ற இரு பிரிவினர்களை விட இந்த அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியம் இவர்களுக்கு மிக அதிகமாகும். மத்திய அரசுப் பணிகள் தேர்வு ஆணையத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதை மறுப்பது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மத்திய அரசு பணிகள் தேர்வு ஆணையம் வகுப்புவாரி அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது நிச்சயம். இதைச் செய்வதற்கு இரண்டு காரணங்களைத் தான் எண்ணிப் பார்க்க முடியும். முதலாவதாக, மக்களின் அதிக அளவிலான பிரிவினர் பிரதிநிதித்துவம் பெறுவது விரும்பத்தக்கதாக இருக்கலாம். கமிஷனுக்கு ஒரு சார்பு வகுப்புவாத பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பதற்கு, இரண்டாவதாக, ஒரு வகுப்பின் வகுப்புவாதத் தன்மையை மற்ற வகுப்பினரின் வகுப்புவாதத் தன்மையைக் கொண்டு சமாளிக்கலாம் என்பதாக இருக்கலாம்.

எப்படிப் பார்த்தாலும், மத்திய அரசுப் பணிகள் தேர்வாணயத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்காமல் விட்டது அப்பட்டமான அநீதியாகும். இந்துக்களுடையவும் முகமதியர்களுடையவும் கண்ணோட்டம் மேலோங்கியுள்ள ஓர் தேர்வாணையத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது. மேற்சொன்ன இரு வகுப்பினடையே என்னதான் சண்டைச் சச்சரவுகள் இருந்தபோதிலும், ஆதாயங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதிலும், தங்களின் நியாயமான பங்கை அடைவதிலிருந்து தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தடுப்பதிலும், அவர்கள் இலகுவாக ஒன்றுபடுவர்.

தாழ்த்தப்பட்ட சாதியினர் விஷயத்தில் தேர்வாணையம் நியாயமற்று நடந்து கொண்டுள்ளது என்பதை நிரூபிப்பது கஷ்டம்; ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியினரில் ஒரு மனுதாரர்கூட தகுதி பெற்றிருப்பதாக இதுவரை ஆணையம் சான்றிதழ் அளிக்கவில்லை என்பதுதான் கண்கண்ட உண்மை. பாரபட்சமாக நடந்து கொண்டதாக, எந்த ஆணையத்தின் மீதும் குற்றம் சாட்ட முடியாது. ஏனெனில் “தகுதியில்லாதவர்” என்ற பதத்திற்கு பின் எந்த ஆணையமும் ஒளிந்து கொள்வது சாத்தியமே. அந்த பதம் சரியான விளக்கம் கொடுப்பதற்கு பதிலாக பலதரப்பட்ட பாவங்களை மூடிமறைக்கும் நோக்கம் கொண்டதாகவே அமைந்துள்ளது. மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் அவசியம் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதே நீதியின் கோரிக்கை.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுதி 19)