தீண்டப்படாதவர்களின் பிரச்சினை ஒரு மாபெரும் பிரச்சினையாகும். உண்மையில் இந்தப் பிரச்சினை குறித்த ஆய்வில் கடந்த சில காலமாகவே ஈடுபட்டு வருகிறேன்; பல நூறு பக்கங்களைக் கொண்ட ஒர் ஆழமான, விரிவான ஆய்வாக இது இருக்கும். இப்போது நான் சமர்ப்பித்திருக்கும் இந்த ஆய்வறிக்கையில் நான் செய்யக் கூடியதெல்லாம் பிரச்சினையின் தன்மையையும், இப்பிரச்சினைக்குத் தீண்டப்படாதோர்களே தெரிவித்துள்ள பரிகாரங்காளையும் சுருக்கமாக எடுத்துக் கூறுவதே ஆகும்.

நாகபுரியில் 1942 ஜீலை 18, 19 தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் (1935 ஆம் வருட அரசாங்கச் சட்டத்தின்படி தீண்டப்படாதவர்கள் ஷெட்யூல்டு வகுப்பினர் என்று குறிப்பிடப்பட்டனர்.) மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பின்கண்ட தீர்மானங்களை இங்கு உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் இப்பணியைத் தொடங்குவது உசிதமானதும், உகந்ததும் என்றும் நினைக்கிறேன்;

தீர்மானம் எண் II

அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணக்கம் தேவை

ambedkar 267“பின்கண்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டலொழிய எந்த அரசிலமைப்புச் சட்டமும் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு ஏற்புடையதல்ல என்று இந்த மாநாடு பிரகடனம் செய்கிறது;

i) அது ஷெட்யூல்டு வகுப்பினர்களின் சம்மதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

ii) ஷெட்யூல்டு வகுப்பினர்கள் இந்துக்களிலிருந்து வேறுபட்டவர்கள், தனித்தன்மை வாய்ந்தவர்கள், இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் ஒரு முக்கிய ஆக்கக்கூறாக அமைந்திருப்பவர்கள் என்பதை அது ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும்

iii) புதிய அரசியலமைப்பில் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு உண்மையான பாதுகாப்பு உணர்வை உண்டு பண்ணக்கூடிய சட்டப் பிரிவுகளை அது கொண்டிருக்கவேண்டும். அத்தகைய சட்டப் பாதுகாப்புகள் பின்கண்ட தீர்மானங்களில் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன.”

தீர்மானம் III

புதிய அரசியலமைப்புச்சட்டத்தில் இடம் பெறவேண்டிய அத்தியாவசியமான வழிவகை ஏற்பாடுகள்

1. ஷெட்யூல்டு வகுப்பினரின் குழந்தைகளுக்கு இடையே ஆரம்பக்கல்வியை வளர்ப்பதற்காக ஒவ்வொரு மாகாண அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகையை வருடாந்தரம் ஒதுக்கவேண்டும்; இதேபோன்று அவர்களிடையே உயர்கல்வியை வளர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட தொகையை வருடந்தோறும் ஒதுக்க வேண்டும். மாகாணத்தின் வரவினத்தில் முதல் செலவினமாக் இது இருக்க வேண்டும்.

2. எல்லா மத்திய மற்றும் மாகாண அரசாங்களிலும் ஷெட்யூல்டு வகுப்பினருக்குப் பிரதிநிதித்துவம் கிட்டுவதற்கு சட்ட ரீதியாக வழிவகை செய்யப்பட வேண்டும்; ஷெட்யூல்டு வகுப்பினரின் எண்னிக்கை, அவர்களது தேவைகள், அவர்களின் முக்கியத்துவம் போன்றவற்றைப் பொறுத்து இந்தப் பிரதிநிதித்துவம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

3. அரசுப்பணிகளில் ஷெட்யூல்டு வகுப்பினர்களுக்கு அவர்களது எண்ணிக்கை, தேவைகள், முக்கியத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்ய சட்டரீதியாக வழிவகை செய்யப்பட வேண்டும். நீதித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை போன்றவற்றில் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விகிதச்சாரம் குறைந்தபட்சத் தகுதி விதிக்கு இணங்க பத்தாண்டுகளுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

4. அனைத்துச் சட்டமன்றங்களிலும், ஸ்தல ஸ்தாபன அமைப்புகளிலும் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு அவர்களது எண்ணிக்கைக்கும், தேவைகளுக்கும், முக்கியத்துவத்துக்கும் ஏற்ப பிரதிநிதித்துவம் கிட்டச் செய்வதற்கு சட்டரீதியாக வழிவகை செய்யப்பட வேண்டும்.

5. எல்லா சட்டமன்றங்களுக்கும் ஸ்தல ஸ்தாபன அமைப்புகளுக்கு ஷெட்யூல்டு வகுப்பினரின் பிரதிநிதிகள் தனி வாக்காளர் தொகுதிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சட்ட ரீதியாக வழிவகை செய்யப்பட வேண்டும்

6. அனைத்து மத்திய, மாகாண பொதுப்பணித்துறை ஆணையங்களிலும் ஷெட்யூல்டு வகுப்பினர் உரிய பிரதிநிதித்துவம் பெறுவதற்கு சட்டரீதியாக வழிவகை செய்யப்பட வேண்டும்.

தீர்மானம் IV - தனிக்குடியேற்றங்கள்

“பின்வருபவை இந்த மாநாட்டின் ஆழ்ந்து ஆராய்ந்து கருத்தாகும்;

“அ) பிழைப்புக்குப் போதிய ஆதாரமின்றியும், இந்துக்களுடன் ஒப்பிடும்போது சிறு எண்ணிக்கையிலும் ஒர் இந்து கிராமத்தின் புறச்சேரிகளில் ஷெட்யூல்டு வகுப்பினர் தொடர்ந்து வாழ்ந்து வரும்வரை, அவர்கள் தீண்டப்படாதவர்களாவே இருந்து வருவார்கள், இந்துக்களின் கொடிய அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகிவருவார்கள், அவர்களால் சுதந்திரமான, முழுநிறைவான வாழ்க்கை வாழமுடியாது.

ஆ) இத்தகைய நிலைமையில், சுயராஜ்யம் என்பது நடைமுறையில் ஒர் இந்து ராஜ்யமாகவே இருக்கும். அத்தகைய கொடுங்கோலாட்சியில் சாதி இந்துக்களின் வல்லாட்சியிலிருந்து, அக்கிரம அடக்குமுறையிலிருந்தும் ஷெட்யூல்டு வகுப்பினரைச் சிறந்த முறையில் பாதுகாக்கும் பொருட்டும்

இ) அவர்கள் தங்களது மனித ஆளுமையை முழு அளவுக்கு வளர்த்துக்கொள்ளும் பொருட்டும், அவர்களுக்குப் பொருளாதார, சமூகப் பாதுகாப்பு அளிப்பது அவசியம்; அதோடு தீண்டாமையை வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்டுவதும் முக்கியம்.

நூற்றாண்டு நூற்றாண்டு காலமாக ஷெட்யூல்டு வகுப்பினர் இந்துக்களிடம் அனுபவித்துவரும் எல்லாவிதமான தீங்குகளுக்கும், கோரக் கொடுமைகளுக்கும், அல்லல்களுக்கும் அவதிகளுக்கும் ஆணிவேர், ஊற்றுக்கண் இப்போதைய கிராம அமைப்பு முறையேயாகும். எனவே, இந்தக் கிராம அமைப்புமுறையில் ஒரு தீவிர மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பது இந்த மாநாட் டின் தீர்க்கமான முடிவாகும். இத்தகைய மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ள இம்மாநாடு ஆட்சிமுறையில் அரசியல் சட்டமாற்றங்களைக் கொண்டுவருவதோடு, தற்போதுள்ள கிராம அமைப்பு முறையிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கருதுகிறது. இந்த மாற்றங்களைப் பின்கண்டவாறு செய்யலாம் என்றும் அது பரிந்திரைக்கிறது.

1. ஷெட்யூல்டு வகுப்பினரை இன்றைய அவர்களது உறைவிடங்களிலிருந்து மாற்றுவதற்கும், இந்துக் கிராமத்திலிருந்து விலகி தனியே ஷெட்யூல்டு வகுப்பினர் தங்களது சொந்த கிராமங்களை உருவாக்கிக் கொள்வதற்கு அரசியல் சட்டம் வகை செய்ய வேண்டும்.

2. ஷெட்யூல்டு வகுப்பினரை புதிய கிராமங்களில் குடி அமர்த்துவதற்கு துணைபுரிய ஒரு குடியமர்வு ஆணையத்தை அமைக்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட வேண்டும்

3. பண்படுத்தப்பட்டவையும், எவரும் கைவசப்படுத்திக் கொள்ளாதவையுமான எல்லா அரசுநிலமும் ஷெட்யூல்டு வகுப்பினரைப் புதிதாகக் குடியமர்த்துவதற்காக குடியமர்வு ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

4. ஷெட்யூல்டு வகுப்பினரைப் புதிதாகக் குடியமர்த்தும் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு, நில ஆர்ஜிதச் சட்டத்தின்படி தனி நபர்களிடமிருந்து புதிதாக நிலம் வாங்கும் அதிகாரம் ஆணையத்துக்கு அளிக்கப்பட வேண்டும்.

5. ஆணையம் தனது பணியை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசாங்கம் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ஐந்துகோடி ரூபாய் ஆணையத்துக்கு மானியமாக வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்.

(திரு. காந்தியும் தீண்டப்படாதோரின் விடுதலையும், தொகுதி 17, இயல் 3)