மொபைல் இன்டர்நெட் வந்தாலும் வந்தது – இருந்த இடத்தில் இருந்து கொண்டே பஸ் டிக்கெட் முன்பதிவதில் தொடங்கிப் படம் பார்ப்பது வரை எல்லா வேலைகளையும் பார்க்கலாம் என்ற நிலை உருவாகி விட்டது.  இப்படி எல்லாமும் ஆகிவிட்ட இன்டர்நெட் மூலம் நினைத்ததைப் படிக்க முடியாதா?  தாராளமாகப் படிக்கலாம் – ஏராளமான தலைப்புகளில் படிக்கலாம் – அதுவும் முழுக்க முழுக்க இலவசமாக!  

coursera

கோர்சரா.ஆர்க்

கொலம்பியா பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், என்று உலகம் முழுவதும் உள்ள பெரிய பல்கலைக்கழக ஆசிரியர்களிடம் படிக்க வேண்டுமா?  கோர்சரா.ஆர்க் (www.coursera.org/) தளத்தைப் பாருங்கள்.  ஏறத்தாழ 2000 படிப்புகளைக் கொண்டிருக்கும் இந்தத் தளத்தில் இல்லாத படிப்புகளே இல்லை எனலாம்.  ஆங்கிலம், சீன மொழி படிப்பதில் தொடங்கி, போட்டோகிராபி, கிராபிக்ஸ், புத்த மதம், பைத்தான் மொழி, நிதி மேலாண்மை என்று எக்கச்சக்க படிப்புகளைப் பெரிய பெரிய பேராசிரியர்கள் நடத்துகிறார்கள்.  பல படிப்புகளுக்குக் குறைந்த கட்டணத்தை வைத்திருக்கும் கோர்சராவில், ஏழை மாணவர் என்றால் இலவசம் என்பதும் கூடுதல் சிறப்பு உங்கள் மொபைலில் இருந்து படிப்பதற்கு வசதியாகச் செயலி இருக்கிறது என்பதும் கூடுதல் சிறப்புகள்.  

இடிஎக்ஸ்

ஓபன் சோர்ஸ் எனப்படும் கட்டற்ற மென்பொருளில் செயல்படும் இலவசக் கல்வி வழங்குநர் தான் இடிஎக்ஸ்  (www.edx.org).  சோலார் சிஸ்டம்ஸ் பற்றிப் படிக்க வேண்டுமா?  மனித குலம் தோன்றிய வரலாறு பற்றிப் படிக்க வேண்டுமா?  சமூகவியல் படிக்க வேண்டுமா?  அக்கவுண்டன்சி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?  நிறைய பேர் இப்போது படிக்கத் தொடங்கியிருக்கும் ரூபி கணினி மொழி படிக்க வேண்டுமா?  இப்படிப் பல படிப்புகளைத் தருகிறது இடிஎக்ஸ்.  ஹார்வர்டு, பாஸ்டன், ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் எனப் பல பல்கலைக்கழகங்கள் இடிஎக்சுடன் இணைந்து இலவசப் படிப்புகளைக் கொடுக்கின்றன.  இலவசப் படிப்பு லாபம் என்றால், இடிஎக்சில் படிப்பதில் இருக்கும் இன்னொரு லாபம் – ‘யூனிவர்சிட்டி கிரெடிட்’ படிப்புகள்!  இந்தப் படிப்புகளை இங்குப் படித்து முடித்து விட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சேரும் போது இந்தப் படிப்புகளுக்கு விலக்கும் வாங்கிக் கொள்ளலாம்.  பணமும் செலுத்தத் தேவையில்லை.  

கான் அகாடமி

எல்லோருக்கும் எப்போதும் எல்லாமும் இலவசம் – இது தான் கான் அகாடமி(www.khanacademy.org) யின் தாரக மந்திரம்.  அமெரிக்க இந்தியரான சல்மான் கானால்  நடத்தப்படும் இந்தத் தளத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதில் இருந்து இயற்பியல், வேதியியல், கணிதம், இசை, பொருளாதாரம், தொழில்முனைவோர்க்கான படிப்பு என்று எக்கச்சக்க படிப்புகள் இருக்கின்றன.  குழந்தைகளுக்காகப் பெற்றோர் உறுப்பினர் ஆகிக் கொள்ளலாம்.  மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குத் தொடங்கி, ஐஐடி நுழைவுத் தேர்வு வரை இங்கு இலவசமாகப் படிக்கலாம்.  

(கட்டுரை – புதிய வாழ்வியல் மலர் 2016 ஜூலை 1-15 இதழில் வெளியானது)  

- முத்துக்குட்டி

Pin It

லக்னோவில் செயல்பட்டுவரும் பீா்பால் சானியின் தொல்தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (Birbal Sahni Institute of Palaeobotany) இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்திலிருந்து “பாறையின் தாவரவியல்” ("Botany of rock") என்ற கருத்தினடிப்படையில் தன் ஆராய்ச்சியை நிகழ்த்தி வருகிறது. இது ஒரு இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின்கீழ் செயல்பட்டுவரும் ஒரு தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். மண் பாறையாகி அந்த மண்ணோடு புதைபட்ட தாவரங்கள் தொல்பொருளாகி தான் வாழ்ந்த காலத்தின் தட்பவெப்ப நிலையை தன்னகத்தே அடக்கி வைத்திருக்கும். தற்கால ஆராய்ச்சியாளா்கள் இவற்றை கவனமாக எடுத்து அந்த காலத்தைய தட்பவெப்ப நிலையை கணிப்பது மட்டுமல்லாது அவற்றின் வடிவத்தையும் அது காணக் கிடைக்கப் பெற்ற காலகட்டத்தையும் கணித்து தாவரங்கள் கால காலமாக எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்ற ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த வருடம் வரைக்கும் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பெரும்பாலும் புவிஆராய்ச்சியாளர்களும் தாவரவியலாளா்களுமே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனா்.

காலச்சூழலுக்கு ஏற்ப கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயர் மாற்றம் பெற்றது. இப்போது இது பீா்பால் சானியின் தொல்லறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (Birbal Sahni Institute of Palaeosciences) என்று மாற்றம் பெற்றிருக்கிறது. இதன்மூலம் கடந்தகால வரலாறுகளை அறிவியல் முறையில் மீள்கட்டமைக்கும் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் இங்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்தத் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்பும் நம் யாவரையும் கீழ்க்காணும் விளம்பரத்தின் தகுதிநிலைக்கேற்ப விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறேன். அநேக பதவிகள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கே!

http://www.bsip.res.in/pdf/advt/Draft%20advertisement%2018%20Scientific%20Posts%20_2_.pdf

- பா.மொர்தெகாய்

குறிப்பு: நான் வெப்ப மற்றும் ஒளியால் தூண்டப்பட்ட ஒளிஉமிழ்வின் (Thermo- and optically stimulated luminescence; TL/OSL) மூலம் காலக்கணக்கீடு சோதனைச்சாலையின் பொறுப்பாளராக பணிபுரிகிறேன்.

Pin It

திருநெல்வேலியைச் சேர்ந்த 12 வயது நிரம்பிய விசாலினியைத் தெரியுமா?. எனக்கு நடிகர் விசாலைதான் தெரியும், யார் இந்த விசாலினி என்பவர்களுக்கு! விசாலினி உலகின் மிக அறிவுத்திறன் மிகுந்த பெண். I.Q எனப்படும் அறிவுத்திறனில் கின்னஸ் சாதனை படைத்தவர். இவரின் திறன் அறிவியல் அறிஞர் ஐய்ன்ஸ்டீனை விட மிகவும் அதிகம்.

vishaliniஒருவரின் புத்திக்கூர்மை அல்லது அறிவுத்திறனை I.Q என்று அளவிட்டுச் சொல்ல முடியும். ஆனால் இதற்கு மேலயும் ஒருவரின் அறிவுத்திறனை அளக்கும் அளவுகோல்கள் உண்டு. அது “Emotional Intelligence” என சொல்லப்படும் “EIQ/EQ” ”உணர் அறிவுத்திறன்” என்பதாகும். I.Q ஐ விட 3 மடங்கு பெரியது. அது என்ன என்பதைக் காண்போம்.

”உணர் திறனறிவு” என்பது நாம் எவ்வாறு நம்முடைய உணர்வுகளையும், மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு இறுதிவரை அவர்களுடனான உறவுகளைப் பேணுவதாகும். டானியல் கோல்மேன் என்ற அமெரிக்க உளவியல் நிபுணர் இதனை 5 கூறுகளாக பிரித்துள்ளார். அதையாவன,

1. தன்னையறிதல் (self-awareness)
2. சுயகட்டுப்பாடு (self-regulation)
3. ஊக்கமுடமை (motivation)
4. சமூக அறிவு (social skills)
5. பச்சாதாபம். (Empathy)

தன்னையறிதல் (self-awareness)

தன்னையறிதல் என்பது ஒர் கலை. பிறரை அறிந்தவன் புத்திசாலி, தன்னை அறிந்தவன் ஞானி என்பது சீனத்து ஞானி ஒருவரின் வாக்கு. சரி, நான் என்னை அறிந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு புத்தரைப் போல போதிமரத்தடியை தேடிச் செல்ல வேண்டியதில்லை. போதிமரத்தை தேடிச்செல்ல நாம் ஒன்றும் புத்தனும் அல்ல. பிறகு எப்படி ..

தன்னையறிதல் என்பது நாம் நம்முடைய உணர்வுகள், விருப்பங்கள், வெறுப்புகள், வாழும் முறை, ஆளுமைத் திறன், பலம், பலவீனம் போன்றவற்றை தெரிந்தும், புரிந்தும் வைத்திருப்பது ஆகும். சில வழிமுறைகள் மூலம் இதனை புரிந்து கொள்ளலாம்.

 நாம் நம்மிடமும், பிறரிடமும் நேர்மையாக இருக்க வேண்டும். நேர்மையாக இருத்தல் என்பது தன்னை அறிந்து கொள்ள நாம் எடுக்கும் முதல் செயல்.

 பிறர் நம்மைப் பற்றி ஏன் இப்படி நினைக்கிறார்கள் என்பதை அவர்கள் இடத்தில் இருந்து தெரிந்து கொள்ளுதல். ஒருவேளை அவர்கள் சொல்வது சரியென்றால் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும், தவறு என்றால் புரிய வைக்க வேண்டும்.

 கடந்த கால நிகழ்வுகளின் மூலம் நாம் செய்த தவறுகளை அறிந்து கொண்டு, வருங்காலத்தில் அதே தவறை செய்யாமல் தடுக்க வேண்டும்.

 எந்த நிகழ்வில் எப்படி நடந்து கொண்டோம், ஏன் அது போல நடந்த்து, போன்ற வற்றை குறிப்பு எடுத்துக் கொள்வதன் மூலம், நம்மை பற்றி தெரிந்து கொள்ளாலாம்.

சுயகட்டுப்பாடு

சுயகட்டுப்பாடு என்பது, நாம் எவ்வாறு நம் உணர்வுகளை சரியான முறையில் வழிநடத்துவது மட்டும் அல்லாமல் சரியான மற்றும் எற்றுக் கொள்ளத்தக்க முறையில் வெளிப்படுத்துவதும் ஆகும். உதாரணதிற்கு, நீங்கள் மேலாளராக இருக்கும் வங்கியில், உங்களிடம் மிகவும் திறைமையான ஊழியர் ஒருவர் நெடுநாளக வேலை செய்கிறார். ஒரு நாள் ஒர் கலந்துரையாடலில் அவர் தெரியாமல் செய்த சிறு பிழைக்காக , பொது இடம் என்றும் பார்க்காமல் அவரை திட்டி விடுகிறீர்கள். அவரும், இதை மிகப்பெரிய அவமானமாக கருதி வேலையை விட்டுவிடுகிறார். அவரைப்போல இன்னொருவர் கிடைக்க உங்களுக்கு பல வருடங்கள் தேவைப் படலாம். உங்களுக்கும் இழப்பு, அவருக்கும் இழப்பு. இதையே நீங்கள், அவரை தனிமையில் அழைத்து, இந்தத் தவறை சுட்டிக்காட்டி இருந்தால், அவரும் வேலையில் நீடித்திருப்பார். உங்களுக்கும் இழப்பு கிடையாது. எனவே உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்துவது மிகவும் அவசியம். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி, அதனை, சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். இதோ சில சுயக்கட்டுப்பாட்டு வழிமுறைகள்.

 வேண்டும் என்றே சிலவற்றைச் செய்தல். உங்களை மருத்துவர் தினமும் நடக்கச் சொல்லியிருக்கிறார். அனால், உங்களுக்கு சோம்பேறிதனத்தின் காரணமாக விருப்பமே இல்லை, அனாலும் நடந்தே ஆக வேண்டும். இப்படிப் பட்ட நிலையில், கடைகளுக்க்குச் செல்லும் போது வேண்டும் என்றே வண்டிச்சாவியை வீட்டிலேயே வைத்துவிட்டு வரவேண்டும். இவ்வாறு திட்டமிட்டுச் செய்வதன் மூலம் உங்களை கட்டுப்படுத்தலாம்.

 நீங்கள் எந்த நேரங்களில் அல்லது இடங்களில் உங்களை அறியாமல் நடந்து கொள்கிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டு அதனை தவிர்த்தல் அல்லது அதனை விட்டு விலகிப்போதல் அல்லது வேறு ஒர் வேலையில் கவனத்தை செலுத்துதல்.

 எப்போதெல்லம் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது என்பதை குறிப்பெடுத்துக் கொண்டு, மறுமுறை அதே போல நடந்தால் முன்செய்த தவறை எப்படி திருத்திக் கொள்வது என்பதை திட்டமிடுதல்.

 தன்னை கட்டுப்படுத்த முடியாத நேரங்களில், ஆழ்மூச்சுப் பயிற்ச்சி, பத்திலிருந்து கீழாக எண்ணுதல், தியானம், ஒர் நிமிட மவுனம், பிடித்த பாடலை அசைபோடுதல் போன்றவற்றைச் செய்வத்ன் மூலம், நம்மைக் கட்டுப்படுத்த முடியும்.

ஊக்கமுடைமை

ஊக்கமிருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான் என்பது நம்மிடம் இருக்கும் பழமொழி. அடுத்தவர் நம்மை ஊக்குவிக்காவிட்டாலும் , நம்மை நாமே ஊக்கப்ப்டுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நம்மிடம் எதிர்ம்றை எண்ணங்கள் வலுப்பெற்றுவிடும். தூக்கமின்மை, உடல் மற்றும் மனச்சோர்வு, உணவை அறவே வெறுப்பது, மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல், சிந்தணைக் குறைபாடு என்பன எதிர்மறை எண்ணங்களால் வரும் கடும் விளைவுகள். எவ்வாறு இந்த்த திறனை வளர்த்துக் கொள்வது?

 இயல்பு நிலையை விட்டு வெளியே வரவேண்டும். புதியனவற்றை செய்ய விளைவுகளைப் பற்றி கவலை கொள்ளாமல் இருக்க வேண்டும்.

 தவறு செய்யாமல் எவராலும் இருக்க முடியாது,மேலும், செய்த தவறை நினைத்து மனம் ஒடிந்து போய்விட வேண்டாம். மாறாக அந்த தவறு எதனால் நடந்தது,அதை எவ்வாறு சரி செய்வது, வருங்காலத்தில் எவ்வாறு தவிர்ப்பது என்பதைக் குறித்து திட்டமிடுதல்.

 பிரச்சனைகள் இல்லதா மனிதர்கள் இல்லை, எனவே, இதனைக் கண்டு மனம் துவளாமல், எதையும் ஒரு எதிர்கொள்ளும் மன உறுதியையும், நேர்மறை என்ணங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 துவங்கிய செயலை முடிக்க வேண்டும், எந்தச் சூழலிலும் நிறுத்தக் கூடாது.

 நம்முடைய அறிவையும், திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் .உதாரணம்: புத்தங்கள் படிப்பது.

 உங்கள் குறிக்கோள்களை சித்திரங்களாகவும், படமாகவும், வரைந்தும், எழுதியும் வைத்துக் கொள்ளுதல், உங்களை சிந்தணையை தூண்டும். உங்கள் அறையின் சுவற்றில் வைத்திருப்பது, உங்கள் குறிக்கோளை நோக்கி உங்களை உந்தித் தள்ளும். (இதனைப் பற்றி பின்னர் விரிவாக காணலாம்)

 உங்கள் கனவுகளை பல பகுதிகளாக பிரித்து , ஒவ்வொன்றிக்கும் ஒர் காலக்கெடுவை முடிவு செய்து, அதற்குத் தேவையானவற்றைச் செய்யவும்.

 உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கனவுகளை உங்காளால் நிறைவேற்ற முடியும், யாராலும் தடுக்க முடியாது.

சமூக அறிவு :

மனிதன் என்பவன் ஒர் சமூக விலங்கு. அவனால் தனியாக எதும் செய்ய முடியாது. சமூகத்தைச் சார்ந்த்துதான் இருக்க் வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல், நம் வாழ்நாளில் பாதியை நாம் வெளியிடங்களிலும், நண்பர்களோடும், அலுவலகத்திலும் கழிக்கின்றோம். புது இடங்களுக்கும், நாடுகளுக்கும் செல்லும் போது எவ்வாறு நண்பர்களை சேர்த்துக் கொள்வது, எப்படி பழகுவது என தெரிந்து வைதிருப்பது அவசியம். ஆகவே, நமக்கு சமூக அறிவு மிகவும் தேவையான ஒன்று.

சமூக அறிவு என்பது, நாம் எவ்வாறு பிறரின் உணர்வுகளை நிர்வாகம் செய்கிறோம் என்பதாகும். நம்முடைய சமூக அறிவை வளத்துக்கொள்ள சில வழிமுறைகள்.

 பிறர் சொல்வதை கவனமுடன் கேட்கவும். கேட்பதைப் போல நடிக்காமல் உண்மையான விருப்பத்துடன் கேட்கவும்.
 நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதே போல, பிறரையும் நடத்துங்கள்.
 எந்தச் சூழலிலும் நேர்மறையான எண்ணங்களோடு இருத்தல்.
 நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுதல். ஒருவரை காயப்படுத்துவது நகை உணர்வாகாது.
 புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுதல்.

பச்சாதாபம்

children 600
பச்சாதாபம் என்பது, நாம் எவ்வாறு மற்றவர்களின் உணர்வுகளையும், நம்முடைய செயல்கள் எவ்வாறு அடுத்தவரை பாதிக்கும் என்பதை அறிவதாகும். உதாரணதிற்கு. இரண்டு பேர் அடங்கிய உங்களது குழுவில் பணிபுரியும் உங்கள் தோழியின் கணவருக்கு திடீரேன நெஞ்சு வலி, அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவரால் இரண்டு நாட்களுக்கு வரமுடியாது. அனால், நீங்களோ நாளைக்குள் உங்கள் திட்டத்தை முடிக்க வேண்டும். மற்ற ஊழியர்களும் அவரவர் வேலையில் இருக்கிறார்கள், உங்களுக்கு உதவ முடியாது. இப்போது , நீஙக்ள் உங்கள் தோழியின் வேலையையும் சேர்த்து செய்து கொடுக்கப்பட்ட காலகெடுவுக்கு திட்டத்தை முடித்து விடுகீர்கள். இதுவே பச்சாதாபம் (empathy). அதாவது, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வது. இத்திறனை வளர்க்க இதோ வழிமுறைகள்.

 பிறரிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்கள் சொல்வதை முழுதாகவும், முழு விருப்பத்துடனும் கேளுங்கள்.
 ஒருவர் பேசுவதற்கு முன் , குறுக்கே பேச வேண்டாம். எதேனும் கேள்விகள் இருப்பின், அவர் பேசியபின் கேட்கவும்.
 நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்ளுதல்.
 பிறரின் நிலையையும் அவர்கள் இடத்திலிருந்து புரிந்து கொள்ளுதல்.
 வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல்.
 கேட்டால் மட்டும் அறிவுரை வழங்கவும்.

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில், அலுவலகத்தையும், இல்லத்தையும், நண்பர்களையும் நிர்வகிக்க EQ- எனப்படும், ”உணர் திறனறிவு” மிகவும் தேவையான ஒன்று. மேலும், இது பிறந்தவுடனே இருக்கும் தனித் திறைமைகள் அல்ல. சித்திரமும் கைபழக்கம் என்பதைப் போல, பயிற்ச்சி செய்தால் போதும். நாமும் வளர்த்துக் கொள்ளலாம். என்ன தயாரா?

தகவல் /படங்கள் : இணையம்.

- ஜே.எம்.வெற்றிச்செல்வன்

Pin It

MH370

கடந்த 2014 ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருத்து Flight MH370, 239 பயணிகளுடன் பீஜிங் செல்லும் போது நடுவானில் திடீரென மாயமானது. அந்த விமானம் குறித்து இதுவரை எவ்வித தெளிவான தீர்வும் கிடைக்கவில்லை.

இதுவரை இந்த விமானத்தைத் தேடுவதற்காக 133 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தேடல் நடந்துள்ளது.

பிப்ரவரி 28, 2016 ல் Mozambique கடற்கரை பகுதியில் ஒரு விமானத்தின் உடைந்த வால் பகுதி கண்டறியப்பட்டது. அந்த வால் பகுதி MH370 ரக விமானத்தின் வால் பகுதியை ஒத்திருந்தது.

அதே போல் ஜூலை 29, 2015ல் ஆப்பிரிக்காவிற்கு அருகில் Saint-Andre, Reunion தீவு பகுதியில் அதே MH370 ரக விமானத்தின் உடைந்த இறக்கை பகுதி கண்டறியப்பட்டுள்ளது.

இவை இரண்டும் தான் இந்த இரண்டு ஆண்டுகளில் நமக்குக் கிடைத்த தடயம். அதுவும் யூகத்தின் அடிப்படையில் தான் உள்ளதே தவிர அதில் இருந்த 239 பயணிகளின் கதி என்னவென்று தெரியவில்லை.

மேலும் Boeing 777-200ER ரக ஜெட்கள் தரமானவை, எனவே இயந்திர கோளாறு ஏற்பட்டிருக்க வாய்பில்லை எனக் கூறுகிறது ஆய்வறிக்கை.

தற்போது இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவில் இருந்து 1,000 மைல் மேற்கே அதாவது சென்ற வாரம் வால் பகுதி கிடைத்த இடத்தைச் சுற்றி Sonar ஆய்வு நடைபெறுகிறது.

அதேபோல் இறக்கைப் பகுதி கிடைத்த Reunion தீவுப்பகுதியில் இதுவரை 33,000 சதுர மைல்கள் தேடுதல் வேட்டை நடத்தியும் பயனில்லை. எனவே இன்னும் 13,000 சதுர மைல்கள் விரிவுபடுத்த உள்ளனர்.

இவை அனைத்துமே வெறும் யூகத்தின் அடிப்படையிலேயே உள்ளது. 08/03/2014 ல் MH370 விமானத்திற்கு என்ன நடந்தது, அதிலிருந்த 239 பயணிகளின் கதி என்ன என்ற கேள்விக்கான விடை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

- ஷேக் அப்துல் காதர்

Pin It

அனைத்து நாடுகளிலும், தங்கத்திற்குத் தனி தரமுத்திரை இடப்படுகிறது. இந்த முறை 14 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் பொற்கொல்லர்கள் சபையில் அறிமுகம் செய்தனர்.

gold jewelsஇந்திய தர நிர்ணய அமைவனம் தங்கத்திற்கு ஹால்மார்க்கிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தங்கத்திற்கு தரத்தை நிர்ணயிப்பதற்காக 2000 ஆம் ஆண்டில் இம்முறை கொண்டு வரப்பட்டது. இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு காரணம், தங்கம், வணிகச் சந்தையில் தரக்குறைவாக மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததுதான். இதனை ஒழுங்குபடுத்தவே பி.ஐ.எஸ். என்பதாகும். இத்திட்டத்தை அறிமுகம் செய்த இந்திய அரசாங்கம், இந்திய தர நிர்ணய அமைவனம் ஒன்றுக்கே இந்திய தங்க சந்தையில், தங்கத்தின் தரத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது.

1972 ஆம் ஆண்டு வியன்னா சிறப்ப கூட்டத்தில் எடுத்த முடிவுப்படி, இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் நகை வியாபாரிகளுக்கு லைசன்ஸ் வழங்கப்படுகிறது. இது தங்கப் பொருள் சான்றிதழ் திட்டம் ஆகும். இந்த நகை வியாபாரிகள் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் அங்கீகாரம் பெற்ற தங்க பகுப்புச் சோதனை மையங்களிலும் தனி அடையாளம், முத்திரை குத்தும் சோதனை மையங்களிலும் ஹால்மார்க் சென்டர் தங்கள் நகைகளை பகுப்பு சோதனைக்கு உட்படுத்தி தனி அடையாள முத்திரை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சோதனை மையங்கள், அகில உலகத்தரம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன. தங்க நகைளில் ஹால்மார்க்கின் டிசைன் பி.ஐ.எஸ், கார்ப்பரேட் லோகோ ஆகும். இதன்படி 1000 என்பது 23 கேரட்டிற்கு இணையானது என்றும், 958 23 கேரட்டிற்கு இணையானது என்றும், 875 என்பது 21 கேரட்டிற்கு இணையானது என்றும், 750 என்பது 18 கேரட்டிற்கு இணையானது என்றும், 585 14 கேரட்டிற்கு இணையானது என்றும், 375 9 கேரட்டிற்கு இணையானது என்றும் அடையாளப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பி.ஐ.எஸ். அங்கீகாரம் பெற்றதற்கான அடையாளம் இடமிடப்படுகிறது. இதில் பி.ஐ.எஸ். அங்கீகாரம் பெற்ற பகுப்பு, தனி அடையாளச் சோதனைச் சாலையின் சின்னம், வருடத்தின் முத்திரை, கோடு, லெட்டர் ஆகியவை கட்டிடத்திற்குள் இடப்பட்டிருக்கும். இந்த கட்டத்திற்குள் எந்த வருடம் தங்கம் பகுப்பு செய்யபப்ட்டது என்று குறிக்கப்படும். உதாரணமாக ஏ என்ற எழுத்து கி.பி.200 ஆண்டைக் குறிக்கும். பி என்பது 2001 ஆண்டையும் சி, டி என்பது அந்தந்த வருடங்களைக் குறிப்பதாகும். அதன் பின்னர் நகைகடையாளர்களின் முத்திரை, நகை விற்பனையாளர் சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும். இத்திட்டத்தின்படி நகை விற்பனையாளர்கள் பி.ஐ.எஸ். உடன் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவிற்கு பின்னால் பி.ஐ.எஸ். நகைவிற்பனையாளரின் தங்க உற்பத்தி சாலைக்கு சென்று, மதிப்பீடு செய்து, அவர்களிடமிருந்து மாதிரிகளை வாங்கி சோதனை செய்யும். பின்னர் தகுதியானவர்களுக்கு அங்கீகாரம் அதாவது லைசன்ஸ் வழங்கப்படும்.

பின்னர் நகைவிற்பனையாளர்கள் பி.ஐ.எஸ். அங்கீகாரம் பெற்ற தங்க பகுப்பு, தனி அடையாளச் சோதனைச் சாலைகளில் தங்கள் நகைகளைக் கொடுத்து, சோதனைக்குரிய கட்டணங்களைக் கட்டி, ஹால்மார்க் முத்திரை பெறலாம். ஆனால் நகை விற்பனையாளர்கள் தங்கத்தின் தரம் குறைந்தால் அவர்களது லைசன்ஸ் ரத்து செய்யப்படும்.

ஹால்மார்க்கில் 5 முத்திரைகள் உண்டு.

1.பி.ஐ.எஸ்.மார்க்
2.அடையாள எண்
3.பகுப்பு, தனி அடையாள சோதனைச்சாலை எண்
4.நகை விற்பனையாளர் சின்னம்
5.முத்திரை பெற்ற வருடம்

இதனை நகை வாங்குபவர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

- வைகை அனிஷ்

Pin It