நம்மவர்களைப் போல் தங்கம் என்றால் எல்லா நாட்டிலுமே ஒரு மோகம் உண்டு. 1850 ஆண்டு சான்பிரான்சிஸ்கோவின் ஒரு பகுதியில் தோண்ட தோண்ட தங்கம் கிடைப்பதாக யாரோ புரளி பரப்ப, அதை நம்பிய அந்நகரத்து மக்கள் அங்கு சென்று இரவு பகலாய் தோண்டினார்கள். அங்கு தோண்ட வந்தவர்கள் தங்குவதற்கு கூடாரம் போடுவார்கள் என்று நம்பி ஒருவன் கூடாரத் துணிக் கடை போட்டான். வியாபாரம் சுமார்தான். ஆனால், தோண்டுபவர்கள் அணிந்திருந்த ஆடைகள் தோண்டும்போது அதிகமாக கிழிவதால், நல்ல முரட்டு ரகத்திலான துணி குறித்து மக்கள் யோசிக்கும்போதே, வியாபாரி கூடாரத் துணியில் பேண்ட் தைத்து விற்க தொடங்கிவிட்டான். இது தான் ஜீன்ஸ் பிறந்த கதை.

விருதுநகரில் தேர்தல் சமயம். நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், படிக்காத காமராசரைப் பற்றி படித்த காமராசன் (கவிஞர் நா.காமராசன்) பேசுவார் என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. காமராசரின் மீது மதிப்பு, மரியாதை கொண்ட தந்தை பெரியாரிடம் ஒருவர் சென்று அய்யா.. பெருந்தலைவரை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள் என்று சுவரொட்டியைக் காட்டி கோபப்பட.. பெரியார் அந்த சுவரொட்டியைப் பார்த்து விட்டு சொன்னாராம். “சரியாத்தான் போட்டிருக்கானுங்க.. ஆனா இதுல ஒரு வார்த்தை சேர்த்துக்கிட்டா நல்லாருக்கும்” என்று சொல்லிச் சொன்னாராம்.

“படிக்காத காமராசர் உருவாக்கிய பள்ளிக்கூடத்தில் படித்த காமராசர் பேசுவார் என்று போட்டிருக்கணும்” என்றாராம்.