tamil grammer Page 1

tamil grammer Page 2

tamil grammer Page 3

tamil grammer Page 4

(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)

Pin It

tamil grammer example 1

tamil grammer example 2

tamil grammer example 3

tamil grammer example 4

(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)

Pin It

வல்லெழுத்துகள் ஆறனுள் ட, ற என்பன மொழிக்கு முதலில் வாரா. க, ச, த, ப ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும். க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறும் வல்லின மெய்யெழுத்துகள் எனப்படும்.

தமிழில் மெய்யெழுத்துகள் மொழிக்கு முதலில் வாரா. மெய்யெழுத்துகளுள் சில உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய்யெழுத்துகளாக நின்றே மொழிக்கு முதலில் நிற்கும்.

வல்லின மெய்யெழுத்துகள் ஆறனுள் க், ச், த், ப் ஆகிய நான்கு மெய்களும் பன்னிரண்டு உயிரெழுத்துகளுடன் கலந்து, உயிர் மெய்யெழுத்துகளாக நின்று மொழிகளுக்கு முன்னே வரும்.

இவ்வாறு மொழிக்கு முதலில் நிற்கும் வல்லெழுத்துகள் நிலை மொழிகளுடன் புணருங்கால் எவ்வெவ்விடங்களில் மிகும் என்பதற்கான முக்கிய விதிகள் பின்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் நிற்கும் மொழி நிலைமொழியாகும். நிலைமொழியுடன் வந்து புணரும் மொழி வருமொழி எனப்படும்.

விதிகள்

1) அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினா எழுத்தின் பின்னும் க, ச, த, ப வருமொழியின் முதலாக வரின் வலி மிகும். ‘க’ என்றால் ‘க’ முதல் ‘கௌ’ வரையிலுள்ள எழுத்துகளைக் கொள்ளவேண்டும். இவ்வாறே ச, த, ப என்னும் எழுத்துகளுக்கும் கொள்ளுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு

அ + குதிரை = அக்குதிரை

அ + செய்தி = அச்செய்தி

அ + தெரு = அத்தெரு

அ + பொருள் = அப்பொருள்

அ + காளை = அக்காளை

இ + கதவு = இக்கதவு

இ + சிலை = இச்சிலை

இ + தலை = இத்தலை

இ + புகழ் = இப்புகழ்

இ + செய்தி = இச்செய்தி

இ + பருவம் = இப்பருவம்

உ + பக்கம் = உப்பக்கம்

உ + காடு = உக்காடு

உ + பால் = உப்பால்

உ + சோலை = உச்சோலை

எ + கேள்வி = எக்கேள்வி

எ + கடவுள் = எக்கடவுள்

எ + சொல் = எச்சொல்

எ + தலைவர் = எத்தலைவர்

எ + புலவர் = எப்புலவர்

எ + பக்கம் = எப்பக்கம்

2) அந்த, இந்த, எந்த ஆகிய சுட்டு வினாச்சொற்களின் பின் வலி மிகும்.

எ-டு.

அந்த + காலம் = அந்தக் காலம்

அந்த + செய்தி = அந்தச் செய்தி

அந்த + பணம் = அந்தப் பணம்

அந்த + கை = அந்தக் கை

அந்த + தெய்வம் = அந்தத் தெய்வம்

இந்த + தரை = இந்தத் தரை

இந்த + பொருள் = இந்தப் பொருள்

இந்த + கேள்வி = இந்தக் கேள்வி

இந்த + காலம் = இந்தக் காலம்

இந்த + சிறை = இந்தச் சிறை

எந்த + சொல் = எந்தச் சொல்

எந்த + கயவன் = எந்தக் கயவன்

எந்த + தலை = எந்தத் தலை

எந்த + பணம் = எந்தப் பணம்

எந்த + பக்கம் = எந்தப் பக்கம்

3) அங்கு, இங்கு, எங்கு ஆகிய இடப்பொருள் குறிக்கும் சொற்களின் பின் வலி மிகும்.

எ-டு.

அங்கு + கண்டேன் = அங்குக் கண்டேன்

அங்கு + குடியிருந்தாள் = அங்குக் குடியிருந்தாள்

இங்கு + சேர்த்தேன் = இங்குச் சேர்த்தேன்

இங்கு + கண்டேன் = இங்குக் கண்டேன்

எங்கு + போனான் = எங்குப் போனான்

எங்கு + தேடினார் = எங்குத் தேடினார்

4) ஆங்கு, ஈங்கு, யாங்கு ஆகிய இடப்பொருள் குறிக்கும் சொற்களின் பின் வலி மிகும்.

எ-டு.

ஆங்கு + தேடினேன் = ஆங்குத் தேடினேன்

ஆங்கு + கண்டேன் = ஆங்குக் கண்டேன்

ஈங்கு + சாப்பிடு = ஈங்குச் சாப்பிடு

ஈங்கு + பார்த்தேன் = ஈங்குப் பார்த்தேன்

யாங்கு + சென்றீர் = யாங்குச் சென்றீர்

யாங்கு + கண்டீர் = யாங்குக் கண்டீர்?

5) அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வலி மிகும்.

எ-டு.

அப்படி + செய் = அப்படிச் செய்

அப்படி + பேசு = அப்படிப் பேசு

அப்படி + கொடுத்தான் = அப்படிக் கொடுத்தான்

இப்படி + பார் = இப்படிப் பார்

இப்படி + சொல் = இப்படிச் சொல்

இப்படி + சொன்னான் = இப்படிச் சொன்னான்

எப்படி + பாடினர் = எப்படிப் பாடினர்?

எப்படி + கொடுத்தாள் = எப்படிக் கொடுத்தாள்?

எப்படி + பேசினான் = எப்படிப் பேசினான்?

6) ஆண்டு (இடம்), ஈண்டு, யாண்டு என்னும் சொற்களின் பின் வலி மிகும்.

எ-டு.

ஆண்டு + காண் = ஆண்டுக் காண்

ஆண்டு + சென்றேன் = ஆண்டுச் சென்றேன்

ஈண்டு + கேள் = ஈண்டுக் கேள்

ஈண்டு + கொடுத்தேன் = ஈண்டுக் கொடுத்தேன்

யாண்டு + போனாய்? = யாண்டுப் போனாய்?

யாண்டு - கொடுப்பார் = யாண்டுக் கொடுப்பார்

7) அவ்வகை, இவ்வகை, எவ்வகை ஆகிய சொற்களின் பின் வலி மிகும்.

எ-டு.

அவ்வகை + செடி = அவ்வகைச் செடி

அவ்வகை + துணிகள் = அவ்வகைத் துணிகள்

இவ்வகை + பூக்கள் = இவ்வகைப் பூக்கள்

இவ்வகை + காவல் = இவ்வகைக் காவல்

எவ்வகை + கொடி = எவ்வகைக் கொடி

எவ்வகை + பிடிப்பு = எவ்வகைப் பிடிப்பு?

8) அத்துணை, இத்துணை, எத்துணை ஆகிய சொற்களின் பின் வலி மிகும்.

எ-டு.

அத்துணை + பெரிய = அத்துணைப் பெரிய

அத்துணை + பாடல்கள் = அத்துணைப் பாடல்கள்

இத்துணை + சிறிய = இத்துணைச் சிறிய

இத்துணை + காளைகள் = இத்துணைக் காளைகள்

எத்துணை + படங்கள் = எத்துணைப் படங்கள்

எத்துணை + காட்சிகள் = எத்துணைக் காட்சிகள்

9) ‘இனி’ என்னும் இடைச்சொல்லின் பின் வலி மிகும்.

எ-டு.

இனி + காண்போம் = இனிக் காண்போம்

இனி + தருவது = இனித் தருவது

இனி + பாட மாட்டேன் = இனிப் பாட மாட்டேன்

இனி + செய்யாதே = இனிச் செய்யாதே

இனி + செய்வது = இனிச் செய்வது

10) ‘தனி’ என்னும் சொல்லின் பின் வலி மிகும்.

எ-டு.

தனி + சிறப்பு = தனிச்சிறப்பு

தனி + பிறவி = தனிப்பிறவி

தனி + கேள்வி = தனிக் கேள்வி

தனி + குடித்தனம் = தனிக் குடித்தனம்

தனி + பண்பு = தனிப் பண்பு

11) அன்றி, இன்றி என்னும் எச்சச்சொற்களுடன் புணரும் வல்லினம் மிகும்.

அதாவது இந்த இகர ஈற்றுச் சொல்லுருபுகளின் பின் வலி மிகும்.

எ-டு.

அன்றி - செருப்பு அணிந்தோரன்றிப் பிறர் நடக்கக் கூடாது.

அன்றி - கேள்வி கேட்கும் மாணவனன்றிப் பிற மாணவர் பேசக் கூடாது.

இன்றி - வெளியில் தடையின்றிச் செல்லலாம்.

இன்றி - இந்த வீட்டில் வருத்தமின்றித் தங்கலாம்.

இன்றி - பையின்றிப் போக மாட்டான்.

12) மற்று, மற்றை என்னும் இடைச்சொற்களின் பின் வலி மிகும்.

எ-டு.

மற்றை + குழந்தைகள் = மற்றைக் குழந்தைகள்

மற்று + சிலவற்றை = மற்றுச் சிலவற்றை

மற்று + பலவற்றை = மற்றுப் பலவற்றை

மற்றை + பெரியோர் = மற்றைப் பெரியோர்

மற்று + பற்று = மற்றுப் பற்று

மற்றை + செயல் = மற்றைச் செயல்

13) ‘என’ என்னும் இடைச்சொல்லின் (அகர ஈற்றுச் சொல்லுருபின்) பின் வலி மிகும்.

எ-டு.

விவசாயிகளின் வளர்ச்சிக்கெனப் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அங்குப் போகாதே எனச் சொன்னார்.

கோயிலுக்குச் செல்லும் வழி எது எனக் கேட்டேன்.

14) ‘மிக’ என்னும் சொல்லின் பின் வலி மிகும்.

எ-டு.

மிக + பெரிய மகான் = மிகப் பெரிய மகான்

மிக + சிறிய பையன் = மிகச் சிறிய பையன்

15) ‘நடு’ என்னும் முற்றுகரச் சொல்லின் பின் வலி மிகும்.

எ-டு.

நடு + தெரு = நடுத் தெரு

நடு + கடல் = நடுக் கடல்

நடு + பெயர் = நடுப் பெயர்

16) ‘பொது’ என்னும் முற்றுகரச் சொல்லின் பின் வலி மிகும்.

எ-டு.

பொது + கூட்டம் = பொதுக் கூட்டம்

பொது + திண்ணை = பொதுத் திண்ணை

பொது + பந்தல் = பொதுப் பந்தல்

17) ‘முழு’ என்னும் சொல்லின் பின் வலி மிகும்.

எ-டு.

முழு + பக்கம் = முழுப் பக்கம்

முழு + கைச்சட்டை = முழுக் கைச் சட்டை

18) ‘திரு’ என்னும் முற்றுகரச் சொல்லின் பின் வலி மிகும்.

எ-டு.

திரு + கல்யாணம் = திருக் கல்யாணம்

திரு + தலம் = திருத் தலம்

திரு + குளம் = திருக் குளம்

19) ‘புது’ என்னும் முற்றுகரச் சொல்லின் பின் வலி மிகும்.

எ-டு.

புது + கண்ணாடி = புதுக் கண்ணாடி

புது + புடைவை = புதுப் புடைவை

புது + துணி = புதுத் துணி

20) உயிரெழுத்தில் முடியும் ‘அரை’, ‘பாதி’ என்னும் சொற்களின் பின் வலி மிகும்.

எ-டு.

அரை + பங்கு = அரைப் பங்கு

அரை + புள்ளி = அரைப் புள்ளி

அரை + பக்கம் = அரைப் பக்கம்

அரை + சம்பளம் = அரைச் சம்பளம்

அரை + கிணறு = அரைக் கிணறு

பாதி + கிணறு = பாதிக் கிணறு

பாதி + காடு = பாதிக் காடு

பாதி + தோட்டம் = பாதித் தோட்டம்

பாதி + போர்வை = பாதிப் போர்வை

பாதி + செல்வம் = பாதிச் செல்வம்

21) எட்டு, பத்து என்னும் எண்களின் பின் வலி மிகும். ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப் பெயர்களுள் எட்டு, பத்து ஆகிய இரண்டின் பின் மட்டுமே வலி மிகும்.

எ-டு.

எட்டு + தொகை = எட்டுத் தொகை

எட்டு + கேள்விகள் = எட்டுக் கேள்விகள்

பத்து + பாட்டு = பத்துப் பாட்டு

பத்து + செடிகள் = பத்துச் செடிகள்

22) ‘அணு’ எனும் சொல்லின் பின் வலி மிகும்.

எ-டு.

அணு + பார்வை = அணுப் பார்வை

அணு + கோட்டம் = அணுக்கோட்டம்

23) முன்னர், பின்னர் எனும் சொற்களின் பின் வலி மிகும்.

எ-டு.

எனக்கு முன்னர்ப் பேசியவர் சிறப்பாக உரையாற்றினார்.

முன்னர் + கண்டேன் = முன்னர்க் கண்டேன்

முன்னர் + சென்றுள்ளேன் = முன்னர்ச் சென்றுள்ளேன்

பின்னர் + தேற்றினான் = பின்னர்த் தேற்றினான்

பின்னர் + பேசுவேன் = பின்னர்ப் பேசுவேன்

பின்னர் + பார்ப்போம் = பின்னர்ப் பார்ப்போம்

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் கூச்சலுக்குப் பின்னர்ப் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.

24) ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலி மிகும். அதாவது அனைத்து ஓரெழுத்துச் சொற்களின் பின்னும் வலி மிகும். (தனி நெடிலுடன் புணரும்

வல்லினம் உட்பட)

எ-டு.

ஈ + கால் = ஈக்கால்

பூ + பறித்தான் = பூப் பறித்தான்

தீ + குணம் = தீக்குணம்

தீ + செயல் = தீச்செயல்

தீ + தெய்வம் = தீத்தெய்வம்

தீ + பண்பு = தீப்பண்பு

தீ + பிடித்தது = தீப் பிடித்தது

கை + குழந்தை = கைக் குழந்தை

பூ + பந்தல் = பூப் பந்தல்

தை + பொங்கல் = தைப் பொங்கல்

பா + சுவடி = பாச்சுவடி

நா + குழறியது = நாக் குழறியது

25) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும்.

எ-டு.

கூவா + குயில் = கூவாக் குயில்

அறியா + பிள்ளை = அறியாப் பிள்ளை

வேண்டா + தவம் = வேண்டாத் தவம்

காணா + காட்சி = காணாக் காட்சி

சொல்லா + சொல் = சொல்லாச் சொல்

நிலையா + பொருள் = நிலையாப் பொருள்

தீரா + துன்பம் = தீராத் துன்பம்

வாரா + செல்வம் = வாராச் செல்வம்

26) சொற்கள் க்கு, ச்சு, த்து, ட்டு, ப்பு, ற்று என முடிந்திருந்தால், அச்சொற்களை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் என்பர். மக்கு, தச்சு, செத்து, விட்டு, உப்பு, கற்று ஆகிய இவை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள்.

இத்தகைய சொற்கள் நிலைமொழியாக இருந்து வருமொழி முதலில் க, ச, த, ப (முறையே கௌ, சௌ, தௌ, பௌ வரையிலுள்ள எழுத்துகள்) என்னும் எழுத்துகள் வந்தால் வலி மிகும். அதாவது வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுடன் புணரும் வல்லினம் மிகும்.

எ-டு.

மக்கு + பையன் = மக்குப் பையன்

தச்சு + தொழில் = தச்சுத் தொழில்

விட்டு + சென்றார் = விட்டுச் சென்றார்

செத்து + பிழைத்தான் = செத்துப் பிழைத்தான்

உப்பு + கடை = உப்புக் கடை

கற்று + கொடுத்தார் = கற்றுக் கொடுத்தார்

பத்து + பாட்டு = பத்துப் பாட்டு

எட்டு + தொகை = எட்டுத் தொகை

எதிர்த்து + பேசினார் = எதிர்த்துப் பேசினார்

விற்று + சென்றான் = விற்றுச் சென்றான்

கேட்டு + கொண்டான் = கேட்டுக் கொண்டான்

கேட்டு + செய்தான் = கேட்டுச் செய்தான்

மீட்டு + தந்த = மீட்டுத் தந்த

பாட்டு + பாடு = பாட்டுப் பாடு

27) அகர ஈற்று வினையெச்சத்துடன் புணரும் வல்லினம் மிகும்.

எ-டு.

பெய + கண்டும் - பெயக் கண்டும்

வர + செய்து = வரச் செய்து

தர + தகும் = தரத் தகும்

செய + பெற்று = செயப் பெற்று

வர + சொன்னார் = வரச் சொன்னார்

வர + கூறினார் = வரக் கூறினார்

தேட + போனார் = தேடப் போனார்

பார்க்க + தவறினார் = பார்க்கத் தவறினார்

பாட + கேட்டேன் = பாடக் கேட்டேன்

மெல்ல + பேசினர் = மெல்லப் பேசினர்

28) இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலி மிகும். அதாவது இகர விகுதி கொண்டு முடியும் வினையெச்சங்களுடன் புணரும் வல்லினம் மிகும்.

எ-டு.

ஓடி + போனான் = ஓடிப் போனான்

கூறி + சென்றான் = கூறிச் சென்றான்

வாடி + போயிற்று = வாடிப் போயிற்று

பேசி + பார்த்தான் = பேசிப் பார்த்தான்

போற்றி + பாடுவார் = போற்றிப் பாடுவார்

29) ஆய், போய் எனும் எச்சச் சொற்களுடன் புணரும் வல்லினம் மிகும்.

எ-டு.

போய் + சொன்னார் = போய்ச் சொன்னார்

போய் + தேடினார் = போய்த் தேடினார்

சொன்னதாய் + சொல் = சொன்னதாய்ச் சொல்

ஒழுங்காய் + படி = ஒழுங்காய்ப் படி

மெதுவாய் + காட்டு = மெதுவாய்க் காட்டு

வந்ததாய் + கூறு = வந்ததாய்க் கூறு

மகிழ்ச்சியாய் + பேசினர் = மகிழ்ச்சியாய்ப் பேசினர்

30) இரண்டாம் வேற்றுமை விரியில் வலி மிகும். இரண்டாம் வேற்றுமை உருபு- ஐ - நிலைமொழியில் வெளிப்பட்டு (விரிந்து) நிற்கும்.

எ-டு.

கதிரவனை + கண்டேன் = கதிரவனைக் கண்டேன்

பசுவை + கட்டினான் = பசுவைக் கட்டினான்

பொருளை + தந்தான் = பொருளைத் தந்தான்

செய்யுளை + படி = செய்யுளைப் படி

கெட்டதை + செய்யாதே = கெட்டதைச் செய்யாதே

சீதையை + காண்பேன் = சீதையைக் காண்பேன்

தொழிலை + செய்தான் = தொழிலைச் செய்தான்

31) நான்காம் வேற்றுமை விரியில் வலி மிகும். நான்காம் வேற்றுமை உருபு- கு - நிலைமொழியில் வெளிப்பட்டு (விரிந்து) நிற்கும்.

எ-டு.

வீட்டுக்கு + போனான் = வீட்டுக்குப் போனான்

அறிஞருக்கு + பொன்னாடை = அறிஞருக்குப் பொன்னாடை

பெண்ணுக்கு + கொடுத்தான் = பெண்ணுக்குக் கொடுத்தான்

நாட்டுக்கு + சேவை செய் = நாட்டுக்குச் சேவை செய்

கடைக்கு + போ = கடைக்குப் போ

மாட்டுக்கு + பிண்ணாக்கு = மாட்டுக்குப் பிண்ணாக்கு

அவனுக்கு + தெரியும் = அவனுக்குத் தெரியும்

32) அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். இவற்றுள் நான்காம் வேற்றுமை உருபு ‘கு’ நிலைமொழியில் வெளிப்படுகிறது.

எ-டு.

அதற்குக் கொஞ்சமும் குறைந்ததன்று.

இதற்குச் சிறிதும் கவலைப்படத் தேவையில்லை.

எதற்குக் கேட்கிறாய் வரி?

33) வேற்றுமைத் தொகையில் வலி மிகுதல். ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருப்பின் வலி மிகும். ஆறாம் வேற்றுமை உருபு அது.

எ-டு.

புலி + தோல் = புலித்தோல்

புலியினது தோல். ‘அது’ என்னும் ஆறாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது. எனவே ஆறாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகுந்தது.

எ-டு.

குருவி + தலை = குருவித் தலை (குருவியினது தலை)

பூனை + கால் = பூனைக் கால் (பூனையினது கால்)

தேர் + தட்டு = தேர்த்தட்டு (தேரினது தட்டு)

பூனை + கண் = பூனைக் கண் (பூனையினது கண்)

புலி + தலை = புலித் தலை (புலியினது தலை)

குதிரை + சேணம் = குதிரைச் சேணம் (குதிரையினது சேணம்)

தலை + தோற்றம் = தலைத் தோற்றம் (தலையினது தோற்றம்)

கங்கை + கரை = கங்கைக் கரை (கங்கையினது கரை)

ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருந்தால் மட்டுமே வலி மிகும். நிலைமொழி உயர்திணையாக இருந்தால் வலி மிகாது.

எ-டு.

சான்றோர் + பேரவை = சான்றோர் பேரவை

புலவர் + கூட்டம் = புலவர் கூட்டம்

மறவர் + குடில் = மறவர் குடில்

எனவே ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாய் இருப்பின் வலி மிகும். நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகாது.

34) உடன் தொக்க தொகையில் ஒற்று ஆறாம் வேற்றுமையில் உருபும் பயனும் உடன்தொக்க தொகை அமையாது. மற்ற 2, 3, 4, 5, 7 வேற்றுமைகளில் உருபும் பயனும் உடன் தொக்க தொகைகளில் வலி மிகும்.

(அ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலி மிகும்.

எ-டு.

கஞ்சி + தொட்டி = கஞ்சித் தொட்டி (கஞ்சியை ஊற்றி வைத்திருக்கும் தொட்டி.)

வெற்றி + திருமகன் = வெற்றித் திருமகன் (வெற்றியைப் பெற்ற திருமகன்.)

எலி + கூண்டு = எலிக் கூண்டு (எலியை அடைக்கும் கூண்டு.)

அரிசி + பானை = அரிசிப் பானை (அரிசியை வைத்துள்ள பானை.)

தயிர் + குடம் = தயிர்க் குடம் (தயிரை வைத்துள்ள குடம்)

தேர் + பாகன் = தேர்ப்பாகன் (தேரை ஓட்டும் பாகன்.)

(ஆ) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலி மிகும்.

எ-டு.

வெள்ளி + பணம் = வெள்ளிப் பணம் (வெள்ளியால் செய்த பணம்.)

பித்தளை + தட்டு = பித்தளைத் தட்டு (பித்தளையால் செய்த தட்டு.)

பித்தளை + குடம் = பித்தளைக் குடம் (பித்தளையால் செய்த குடம்.)

பருத்தி + புடைவை = பருத்திப் புடைவை (பருத்தியால் நெய்யப்படும் புடைவை.)

பூ + பந்தல் = பூப்பந்தல் (பூவால் அலங்கரிக்கப்பட்ட பந்தல்.)

இரும்பு + பெட்டி = இரும்புப் பெட்டி (இரும்பாற் செய்யப்பட்ட பெட்டி.)

அட்டை + பெட்டி = அட்டைப் பெட்டி (அட்டையால் செய்த பெட்டி.)

காகிதம் + புத்தகம் = காகிதப் புத்தகம் (காகிதத்தால் ஆன புத்தகம்.)

(இ) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலி மிகும்.

எ-டு.

குழந்தை + பால் = குழந்தைப் பால் (குழந்தைக்குக் கொடுக்கும் பால்)

உரிமை + போராட்டம் = உரிமைப் போராட்டம் (உரிமைக்கு நடத்தும் போராட்டம்)

தலைமுடி + சாயம் = தலைமுடிச் சாயம் (தலைமுடிக்குப் பூசும் சாயம்)

பசு + தீவனம் = பசுத் தீவனம் (பசுவுக்குக் கொடுக்கும் தீவனம்)

குறிப்பு : பெயரும் பெயரும் சேர்ந்து அமைவது பெயர்த் தொகை. இப்பெயர்த் தொகைகளில் நிலை மொழி உயர்திணையாக இருப்பின் வலி மிகாது.

(ஈ) ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலி மிகும்.

எ-டு.

நிலம் + கரி = நிலக்கரி (நிலத்தில் இருந்து எடுக்கும் கரி)

ஏரி + தண்ணீர் = ஏரித் தண்ணீர் (ஏரியிலிருந்து கிடைக்கும் தண்ணீர்)

தேங்காய் + பால் = தேங்காய்ப் பால் (தேங்காயிலிருந்து பிழியப்படும் பால்)

(உ) ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலி மிகும்.

எ-டு.

மலை + கள்ளன் = மலைக் கள்ளன் (மலையின்கண் உள்ள கள்ளன்)

சென்னை + பல்கலைக்கழகம் = சென்னைப் பல்கலைக்கழகம் (சென்னையின்கண் உள்ள பல்கலைக்கழகம்)

மதுரை + சங்கம் = மதுரைச் சங்கம் (மதுரையின்கண் உள்ள சங்கம்)

மருதமலை + கோயில் = மருதமலைக் கோயில் (மருத மலையின்கண் உள்ள கோயில்)

சோலை + குயில் = சோலைக் குயில் (சோலையின்கண் உள்ள குயில்)

அன்னை + பால் = அன்னைப் பால் (அன்னையின்கண் உள்ள பால்)

சென்னை + கல்லூரி = சென்னைக் கல்லூரி (சென்னையின்கண் உள்ள கல்லூரி)

குறிப்பு : ஆறாம் வேற்றுமை தவிர, மற்ற வேற்றுமைகளில் அமையும் உருபும் பயனும் உடன் தொக்க தொகைகளில் நிலைமொழி அஃறிணையாய் இருப்பின் வலி மிகும்.

35) ‘ஆக’ என்று முடியும் அனைத்துச் சொல்லுருபுகளின் பின்னும் வலி மிகும்.

எ-டு.

ஆக - முதல்வர் அன்பாகப் பேசினார்.

மெதுவாகப் பாடுகிறாள்.

சிறப்பாகச் செயற்படுகிறார்.

ஏழையாகப் பிறந்தான்.

பணக்காரனாகப் பெரு முயற்சி செய்கிறான்.

பதிலாக - அரிசிக்குப் பதிலாகச் சோறு கொடுக்க மாநகராட்சி முடிவு.

மூலமாக - நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாகக் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார்.

மாறாக - சட்டத்திற்கு மாறாகச் செயற்படுபவர் தண்டிக்கப்படுவர்.

வழியாக - கடல் வழியாகத் தீவிரவாதிகள் நகருக்குள் ஊடுருவ முயற்சி செய்கின்றனர்.

வாயிலாக - நாளிதழ்கள் வாயிலாகச் செய்திகள் வெளியாகின்றன.

ஏதுவாக - கிராமப் பெரியவர் குடும்பத்திற்கு ஏதுவாகப் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

‘ஆக’ என்று முடியும் அனைத்துச் சொற்களின் பின்னும் வலி மிகும்.

36) வைத்து, பொறுத்து, விட்டு, பொருட்டு, முன்னிட்டு, குறித்து – என்னும் வன்தொடர்க் குற்றியலுகர ஈற்றுச் சொல்லுருபுகளின் பின் வலி மிகும்.

எ-டு.

வைத்து - குறிப்பு வைத்துப் பேசினான்.

பொறுத்து - இருக்கும் பணத்தைப் பொறுத்துத் திட்டமிடலாம்.

விட்டு - மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்கிறார்.

பொருட்டு - வாடிக்கையாளர்களின் பொருட்டுச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னிட்டு - தீபாவளியை முன்னிட்டுப் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது.

குறித்து - சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு போதுமான அளவு இல்லை.

37) நோக்க, ஆர, போல - என்னும் அகர ஈற்றுச் சொல்லுருபுகளின் பின் வலி மிகும்.

எ-டு.

நோக்க - அவளை நோக்கத் தயக்கமாக இருந்தது.

ஆர - அவன் வயிறாரச் சாப்பிட்டு நாள்கள் பல ஆயின.

போல - சிங்கம் போலச் சீறினான்.

- புலி போலப் பாய்ந்து சென்றான்.

- தமிழ் மொழி போலப் பெருமை வாய்ந்த மொழி எதுவுமில்லை.

38) சுற்றி, வேண்டி, ஒட்டி - என்னும் இகர ஈற்றுச் சொல்லுருபுகளின் பின் வலி மிகும்.

எ-டு.

சுற்றி - அவனைச் சுற்றிப் பெரிய நண்பர் கூட்டமே உள்ளது.

- கிராமத்தைச் சுற்றிப் பார்ப்பது இனிமையானது.

வேண்டி- தங்களை விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

- உங்களை வேண்டிச் சித்தப்பா வந்துள்ளார்.

ஒட்டி - முதல்வரின் வருகையையொட்டிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

- பொங்கல் பண்டிகையையொட்டிப் புதுத் திரைப் படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

39) இடை, கீழ் என்னும் சொல்லுருபுகளின் பின் வலி மிகும்.

எ-டு.

இடை - இடைப்பட்ட நாள்களில் ஓய்வு எடுத்துக்கொள்.

- புலிகளிடைப் பசு போலத் தவிப்புற்றான்.

கீழ் - இத்திட்டத்தின்கீழ்ப் பயனடைந்தவர்கள் பலர்.

- கீழ்க்காணும் செய்திகள் முக்கியமானவை.

40) நிலைமொழி ஈற்றில் ‘ய், ர், ழ்’ என்னும் மெய்களுள் ஒன்று நின்று, வல்லெழுத்தில் தொடங்கும் பெயர்ச்சொல் வருமொழியாய் வந்தால், இடையில் வருமொழி முதல் வல்லொற்று மிகும். நிலைமொழி அஃறிணையாக இருத்தல் வேண்டும்.

எ-டு.

தமிழ் + பாட்டு = தமிழ்ப் பாட்டு

ஊழ் + பயன் = ஊழ்ப் பயன்

பொய் + சாட்சி = பொய்ச் சாட்சி

வாய் + பேச்சு = வாய்ப் பேச்சு

போர் + தொழில் = போர்த் தொழில்

ஊர் + தலைவர் = ஊர்த் தலைவர்

நாய் + குட்டி = நாய்க் குட்டி

தமிழ் + செய்யுள் = தமிழ்ச் செய்யுள்

தயிர் + குழம்பு = தயிர்க் குழம்பு

41) ஒரே சொல்லில் ய், ர், ழ் இந்த மூன்று மெய்யெழுத்துகளைத் தொடர்ந்து வரும் வல்லினம் மிகும்.

எ-டு.

பாய்ச்சினாள்

வாய்த்தது

பார்க்கிறான்

வேர்ப்பலா, வேர்ப் பிடிப்பு

வாழ்க்கை

வாழ்த்தினார்

42) திசைப் பெயர்களின் பின் வலி மிகும்.

எ-டு.

கிழக்கு + பக்கம் = கிழக்குப் பக்கம்

மேற்கு + திசை = மேற்குத் திசை

வடக்கு + புறம் = வடக்குப் புறம்

தெற்கு + கோட்டம் = தெற்குக் கோட்டம்

43) மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லெழுத்தை முதலாவதாகக் கொண்ட பெயர்ச் சொற்கள் வந்து புணரும்போது வலி மிகும்.

எ-டு.

நண்டு + கூட்டம் = நண்டுக் கூட்டம்

பங்கு + சந்தை = பங்குச் சந்தை

பஞ்சு + கொட்டை = பஞ்சுக் கொட்டை

சாந்து + கயிறு = சாந்துக் கயிறு

44) வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வல்லெழுத்தை முதலாவதாகக் கொண்ட பெயர்ச் சொற்கள் புணரும்போது வலி மிகும்.

எ-டு.

பத்து + பாட்டு = பத்துப் பாட்டு

கொக்கு + கால் = கொக்குக் கால்

கழுத்து + கட்டை = கழுத்துக் கட்டை

அச்சு + பிழை = அச்சுப் பிழை

45) பண்புத் தொகையில் வலி மிகும்.

எ-டு.

கறுப்பு + காளை = கறுப்புக் காளை

வெள்ளை + புடைவை = வெள்ளைப் புடைவை

சிவப்பு + சேலை = சிவப்புச் சேலை

அருமை + பாட்டி = அருமைப் பாட்டி

46) இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

எ-டு.

முல்லை + காடு = முல்லைக் காடு

தாமரை + கொடி = தாமரைக் கொடி

மல்லிகை + பூக்கள் = மல்லிகைப் பூக்கள்

தமிழ் + கவிதை = தமிழ்க் கவிதை

முருங்கை + காய் = முருங்கைக் காய்

மோர் + குழம்பு = மோர்க் குழம்பு

சாரை + பாம்பு = சாரைப் பாம்பு

தை + திங்கள் = தைத் திங்கள்

கோடை + காலம் = கோடைக் காலம்

47) உவமைத் தொகையில் வலி மிகும்.

எ-டு.

தாமரை + திருவடி = தாமரைத் திருவடி

முத்து + பற்கள் = முத்துப் பற்கள்

கழுதை + பயல் = கழுதைப் பயல்

முத்து + புன்னகை = முத்துப் புன்னகை

கமலம் + செங்கண் = கமலச் செங்கண்

48) சால, தட, தவ, குழ ஆகிய உரிச்சொற்களின் பின் வலி மிகும்.

எ-டு.

சால + சில = சாலச் சில

சால + கற்றவர் = சாலக் கற்றவர்

சால + பேசினார் = சாலப் பேசினார்

தட + கை = தடக்கை

தவ + பெரியவர் = தவப் பெரியவர்

தவ + சேய்த்து = தவச் சேய்த்து

குழ + கயிறு = குழக் கயிறு

49) தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகாரத்தின் பின் வலி மிகும்.

எ-டு.

கனா + கண்டேன் தோழி = கனாக் கண்டேன் தோழி

நிலா + பாட்டு = நிலாப் பாட்டு

பலா + பழம் = பலாப் பழம்

வினா + கேட்டு = வினாக் கேட்டு

50) உருவகங்களின் பின் வலி மிகும்.

எ-டு.

வாழ்க்கைப் படகு

கண்ணீர்ப் பூக்கள்

வாழ்க்கைத் தேர்

51) மெல்ல, உரக்க, நிரம்ப, நிறைய என்னும் அகர ஈற்று வினையடைகளின் பின் வலி மிகும்.

எ-டு.

மெல்லப் போ

மெல்லப் பேசு

உரக்கச் சொன்னேன்

உரக்கக் கூவினான்

நிரம்பப் பேசினான்

நிரம்பக் கொடுத்தார்

நிறையச் செய்திகளை அறிந்தோம்

நிறையக் கற்றுக் கொள்

52) எல்லா, அனைத்து என்னும் சொற்களின் பின் வலி மிகும்.

எ-டு.

எல்லாக் குழந்தைகளும் வந்துவிட்டனர்.

எல்லாப் பாடங்களும் கடினமாக உள்ளன.

அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை.

அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூற வேண்டும்.

53) நெடிற்றொடர்க் குற்றியலுகரம் ஒற்று இரட்டித்துப் புணரும்பொழுது வல்லினம் மிகும்.

எ-டு.

ஆடு + தலை = ஆட்டுத் தலை

ஆறு + பெருக்கு = ஆற்றுப் பெருக்கு

நாடு + பற்று = நாட்டுப் பற்று

காடு + பூனை = காட்டுப் பூனை

54) உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் ஒற்று இரட்டித்துப் புணரும்பொழுது வல்லினம் மிகும்.

எ-டு.

வயிறு + பாடு = வயிற்றுப்பாடு

குருடு + கண் = குருட்டுக் கண்

55) ஐகாரச் சாரியைப் பெற்ற குற்றியலுகரச் சொற்களுடன் புணரும் வல்லினம் மிகும்.

எ-டு.

பண்டு + காலம் = பண்டைக் காலம்

இன்று + பொழுது = இற்றைப் பொழுது

நேற்று + கூலி = நேற்றைக் கூலி

56) ஓரெழுத்து ஒரு மொழியின் பின் ‘கள்’ விகுதி சேரும்போது வலி மிகும்.

எ-டு.

ஆ + கள் = ஆக்கள்

பூ + கள் = பூக்கள்

பா + கள் = பாக்கள்

ஈ + கள் = ஈக்கள்

57) ‘குறில் + நெடில்’ இணையாய் வரும் ஆகார ஈற்று நிரையசைச் சொற்களின் பின் ‘கள்’ விகுதி சேரும்போது வலி மிகும்.

எ-டு.

விழா + கள் = விழாக்கள்

கனா + கள் = கனாக்கள்

வினா + கள் = வினாக்கள்

சுறா + கள் = சுறாக்கள்

புறா + கள் = புறாக்கள்

58) உகர ஈற்றில் முடியும் ‘குறில் + குறில்’ இணைந்த நிரையசைச் சொற்களின் பின் ‘கள்’ விகுதி வரும்போது வலி மிகும்.

எ-டு.

வடு + கள் = வடுக்கள்

வழு + கள் = வழுக்கள்

தெரு + கள் = தெருக்கள்

பசு + கள் = பசுக்கள்

59) முற்றியலுகரத்தினை அடுத்துவரும் வலி மிகும்.

தனிக் குறிலை அடுத்து வரும் எல்லா உகரமும், இரண்டு எழுத்துகளை அடுத்து வரும் கு, சு, டு, து, பு, று அல்லாத மற்ற உகரமும் முற்றியல் உகரங்கள் ஆகும். முற்றியலுகரத்தினை அடுத்துவரும் வல்லினம் மிகும்.

எ-டு.

பொது + பார்வை = பொதுப் பார்வை

கணு + கால் = கணுக்கால்

திரு + கோயில் = திருக்கோயில்

அறிவு + கல்லூரி = அறிவுக் கல்லூரி

முழு + தொகை = முழுத் தொகை

60) ன், ல், ண், ள் - விகுதி திரிதல்

(அ) நின்ற சொல்லின் இறுதியில் ‘ன்’ இருந்து, வருஞ்சொல்லின் முதலில் வல்லினம் இருந்தால் ‘ன்’ என்ற எழுத்து ‘ற்’ என்ற எழுத்தாக மாற்றம்

பெறும்.

எ-டு.

பொன் + பாவை = பொற்பாவை

தன் + குறி = தற்குறி

பொன் + செல்வன் = பொற்செல்வன்

 (ஆ) நின்ற சொல்லின் இறுதியில் ‘ல்’ என்ற எழுத்து இருந்து வருஞ்சொல்லின் முதலில் வல்லினம் இருந்தால், ‘ல்’ என்ற எழுத்து, ‘ற்’ என்ற எழுத்தாக மாற்றம் பெறும்.

எ-டு.

கல் + கண்டு = கற்கண்டு

பல் + பொடி = பற்பொடி

சொல் + சிதைவு = சொற் சிதைவு

கால் + சிலம்பு = காற்சிலம்பு

(இ) நின்ற சொல்லின் இறுதியில் ‘ன்’ அல்லது ‘ல்’ இருந்து, வருஞ்சொல்லின் முதலில் ‘த’ இருக்குமானால் நின்ற சொல்லின் இறுதியில் உள்ள ‘ன்’,‘ல்’ ஆகிய இரண்டும் ‘ற்’ ஆக மாறுவதனுடன் ‘த’வையும் ‘ற’வாக மாற்றிவிடும்.

எ-டு.

தொழில் + துறை = தொழிற்றுறை

பொன் + தகடு = பொற்றகடு

(ஈ) நின்ற சொல்லின் இறுதியில் ‘ண்’ இருந்து வருஞ்சொல்லின் முதலில் வல்லினம் இருந்தால், ‘ண்’ என்ற எழுத்து ‘ட்’ எனத் திரியும்.

எ-டு.

மண் + பாண்டம் = மட்பாண்டம்

மண் + பானை = மட்பானை

(உ) நின்ற சொல்லின் இறுதியில் ‘ள்’ இருந்து, வருஞ்சொல்லின் முதலில் வல்லினம் இருந்தால், ‘ள்’ என்ற எழுத்து ‘ட்’-ஆக மாறும்.

எ-டு.

புள் + பறந்தது = புட்பறந்தது

முள் + குத்தியது = முட்குத்தியது

 (ஊ) நின்ற சொல்லின் இறுதியில் ‘ண்’ அல்லது ‘ள்’ இருந்து, வருஞ்சொல்லின் முதலில் ‘த’ எனும் எழுத்து வருமானால், ‘ண்’, ‘ள்’ ஆகியன ‘ட்’ ஆகத் திரிவதனுடன், வரும் சொல்லின் முதலில் உள்ள ‘த’ என்ற எழுத்தையும் ‘ட’வாகத் திரித்துவிடும்.

எ-டு.

கண் + திறந்தது = கட்டிறந்தது

தூண் + தடித்தது = தூட்டடித்தது

61. ‘சின்ன’ என்னும் பெயரடை ஏனைய பெயரடைகள்போல் அல்லாமல் ஒற்று ஏற்று வரும்.

எ-டு.

சின்ன + குடை = சின்னக் குடை

சின்ன + தட்டு = சின்னத் தட்டு

சின்ன + பெண் = சின்னப் பெண்

62. கூட, விட ஆகிய சொற்களின் பின் வலிமிகும்.

எ-டு.

கூட + கொடு = கூடக்கொடு

கூட + கேள் = கூடக்கேள்

(கத்தியை) விட + கூர்மை = (கத்தியை) விடக் கூர்மை

(அவளை) விட + பாசம் = (அவளை) விடப் பாசம்

(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்' நூலிலிருந்து...)

Pin It

1) சுட்டுப் பெயர்களுடன் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

அது காண், இது காண், அது செய், இது செய், அது தா, இது தா, அது பார், இது பார், இவை சிறந்தவை, அவை கடினமானவை,

இவை பார்க்கத் தகுந்தன.

2) வினாப் பெயர்களுடன் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

எது கண்டார்? ஏது கண்டாய்? யாது காண்பாய்?

எது செய்தாய்? ஏது செய்தாய்? யாது செய்வாய்?

எது தந்தாய்? ஏது தருவாய்? யாது தருவாய்?

எது படித்தாய்? ஏது பெற்றாய்? யாது பெற்றாய்?

எவை தவறு? யாவை போயின?

3) முதல் வேற்றுமையில் புணர்ந்து நிற்கும் வல்லின எழுத்துகள் மிகா. (முதல் வேற்றுமை - எழுவாய்; உருபு இல்லை)

எ-டு.

புலி கண்டது, எலி செய்தது,

குதிரை தாண்டியது, கழுதை பார்த்தது,

மாடு பாய்ந்தது, கிளி பேசும்,

அரிசி கொதிக்கிறது, உலகு போற்றும்,

மலர் பூத்தது, கிளி கொஞ்சியது,

வண்டி சென்றது, பேய் திரிந்தது,

பாம்பு சீறிற்று.

4) மூன்றாம் வேற்றுமை விரிகளில் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

என்னொடு + கற்ற = என்னொடு கற்ற

என்னொடு + சிரித்த = என்னொடு சிரித்த

பொன்னொடு + தந்த = பொன்னொடு தந்த

என்னொடு + போந்த = என்னொடு போந்த

சேரனொடு + கண்ணன் வந்தார் = சேரனொடு கண்ணன் வந்தார்.

5) ஆறாம் வேற்றுமை விரிகளில் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

எனது கை, எனது சடை

எனது தலை, எனது பல்

6) விளித் தொடர்களில் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

அண்ணா கேள், மகளே போ

தந்தையே தா, மகனே பார்

பெண்ணே பார், கனவே கலையாதே

கண்ணா தா.

7) பெயரெச்சத்துடன் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

ஓடிய குதிரை, ஓடுகின்ற குதிரை, திரிந்த காலம்

வந்த சிரிப்பு, வருகின்ற சிரிப்பு, பெற்ற செல்வம்

தந்த தெய்வம், தருகிற தெய்வம், படித்த பையன்

பார்த்த பெண், பார்க்கிற பெண், வென்ற தமிழன்.

8) ‘செய்யிய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

உண்ணிய கண்டான்

காணிய சென்றான்

உண்ணிய தந்தான்.

9) ‘செய்பு’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

உண்ணுபு கேட்டாள்

காணுபு சென்றான்

உண்ணுபு தந்தான்

காணுபு போனான்.

10) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

நாடு கண்டான், தண்ணீர் குடித்தான், மோர் குடித்தான்,

காடு சேர்ந்தான், புத்தகம் படித்தான்,

புளி கரைத்தான், வீடு இடித்தான், காது கடித்தான்.

11) ‘படி’ என்று முடியும் வினையெச்சங்களுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

தரும்படி கேட்டான், பேசும்படி சொன்னார்,

வரும்படி சொன்னான், உண்ணும்படி வேண்டினார்,

எழுதும்படி தந்தான், சொல்லும்படி பேசினான்.

12) அகரவீற்று வினைமுற்றுகளுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

சென்றன பசுக்கள்

பறந்தன பறவைகள்

விழுந்தன கதிர்கள்

பொழிந்தன கார்மேகங்கள்

வந்தன கழுதைகள்

நடந்தன கால்கள்

13) வியங்கோள் வினைமுற்றுகளுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

வாழ்க தலைவர், வாழ்க கலை,

வீழ்க கயவர், வாழ்க தலைவி,

வாழ்க தமிழ், வாழ்க பாரதம்,

வாழ்க தமிழகம், வீழ்க பகைவர்,

ஒழிக துரோகம்.

14) வினைத்தொகையில் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

குடி தண்ணீர், பாய் புனல், வளர்பிறை, குடிநீர்,

பழமுதிர் சோலை, இடு பொருள், சொறி சிரங்கு,

வடி தேன், செய் கடன், சுடு சோறு,

உயர் குணம், சுடு காடு, உறை பொருள்,

நிமிர் தலை, அடு களிறு, சுடு சொல்,

ஊறு காய், எறி திரை, குளிர் காலம், தாழ் குழல்,

திருவளர் செல்வி, திருவளர் செல்வன்,

திருநிறை செல்வன், திருநிறை செல்வி.

15) அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்னும் சொற்களுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

அவ்வளவு கண்டேன்

எவ்வளவு கொடுத்தாய்

இவ்வளவு பேசினாய்

எவ்வளவு செய்தாய்.

16) ஆ, ஏ, என்னும் ஈறுகளையுடைய வினாப் பெயர்களுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

அவனா கண்டான், அவனே கண்டான், அவனோ கண்டான்

இவனா செய்தான், இவனே செய்தான், இவனோ செய்தான்

அவனா தந்தான், அவனே தந்தான், அவனோ தந்தான்

இளங்கோவா பார்த்தான், இளங்கோவே பார்த்தான்,

இளங்கோவோ பார்த்தான்.

17) எட்டு, பத்து தவிர எண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

ஒரு புத்தகம், ஒன்று சாப்பிடு, ஒன்று கூடுவோம், ஒன்று செய்,

ஒரு செயல், ஒரு பாடம், ஒரு கோடி

இரண்டு பசுக்கள், இரண்டு கண்கள், இரண்டு காளைகள், இரு கண்கள்

மூன்று காளைகள், மூன்று தமிழ், மூன்று கனிகள்

நான்கு திசைகள், நான்கு பிள்ளைகள், நான்கு படைகள்

ஐந்து கால்கள், ஐந்து பழங்கள், ஐந்து பொறிகள்

அறு தொழில், ஆறுபடை, ஆறு காடுகள், அறுசீர், அறுபதம்

ஏழு கடல்கள், ஏழு பிறப்பு, ஏழு சிறப்பு, ஏழு தினம்

ஒன்பது தானியம், ஒன்பது பறவைகள்.

18) அகரவீற்று அஃறிணைப் பன்மைப் பெயருடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

சில கழுதைகள், சில பன்றிகள், சில பொருள்கள், சில பதர்கள்,

பல பெயர்கள், பல காட்சிகள், பல கேள்விகள், பல சொற்கள், பல தடைகள்

19) வன்தொடர் ஒழிந்த ஏனைய குற்றியலுகரங்களுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

ஆறு தலை, எஃகு சிறிது

விறகு பெரிது, பந்து தந்தான்

செய்து போனான்.

20) நான்காம் வேற்றுமைத் தொகையில் உயர்திணைப் பெயர்களின் பின்வரும் வலி மிகா.

எ-டு.

வள்ளுவர் கோட்டம்

ஆசிரியர் சம்பளம்

தேன்மொழி கணவன்

கண்ணகி கோயில்.

21) உம்மைத் தொகையில் வலி மிகா.

எ-டு.

தாய் தந்தை

இரவு பகல்

செடி கொடி

பொரி கடலை

வெற்றிலை பாக்கு

அக்கா தங்கை

இட்டலி தோசை

பூரி கிழங்கு

(இராப் பகல், ஏற்றத் தாழ்வு - இவற்றில் மட்டும் விதிவிலக்காக வலி மிகும்.)

22) விளித் தொடரில் வலி மிகா.

எ-டு.

அழகா கொடு

செல்வி சொல்

மணி தா

செல்வா பார்

23) நிறுத்தக் குறிகளின் பயன்பாட்டால் கீழ்க்காணும் இடங்களில் வலி மிகாது.

()ஒற்று இட வேண்டிய சொல்லின்பின் கால்புள்ளியைப் பயன்படுத்துவதால் ஒற்று மிகுவது தவிர்க்கப்படுகிறது.

எ-டு.

கேட்பதற்கு, காது கூர்மையாக இருக்கவேண்டும்.

அதைச் செய்வதற்கு, பணம் தேவைப்படும்.

அதற்கு மாற்றாக, பட்டாடை எடுத்தாள்.

()வருமொழி மேற்கோள் குறிக்குள் இருந்தால் வலி மிகாது.

எ-டு.

இரு சொற்கள் இணைவதை ‘புணர்ச்சி’ என்கிறோம்.

அதனை ‘தினமணி’யில் காணலாம்.

நகரின் பெயரை ‘சென்னை’ என அரசு மாற்றியது.

() வருமொழி அடைப்புக் குறியின் உள்ளேயும் வெளியேயும் இருந்தால் வலி மிகாது.

எ-டு.

எனக்கு அவரை (பாடலாசிரியராக) தெரியாது.

எனக்கு அவரை (ஆசிரியராக) தெரியாது.

உடற்கூறியலை (யயேவடிஅல) பற்றிய நூல்.

 () வருமொழி சுருக்கக் குறியீடாக இருந்தால் வலி மிகாது.

எ-டு.

மின்னிணைப்பை தமிவா (தமிழ்நாடு மின்சார வாரியம்) துண்டித்தது.

24) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர இதர பெயரெச்சங்களுக்குப் பின்வரும் வலி மிகா.

எ-டு.

செய்கின்ற பணி பெரிய தந்தை வந்த பையன்

காணாத கண் பெரிய புராணம் ஓடாத குதிரை

பேசாத படம் இனிய பாடல் பறந்த புறா

வாடாத பூ

25) அன்று, இன்று, என்று, ஆவது, போன்று, அடா, அடி என்னும் சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

அன்று கேட்டார்

இன்று சொன்னார்

என்று தருவார்?

அவரைப் போன்று கற்றவர் யாருளர்?

அவராவது கொடுப்பதாவது?

யாரடா செல்வதங்கு?

ஏனடி செல்கிறாய்?

26) அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்னும் சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

அவ்வளவு பெரிய வீடா?

இவ்வளவு சிறிய வீடா?

எவ்வளவு கொடுத்தார்?

27) அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்னும் சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

அவ்வாறு சொன்னார்.

அவ்வாறு செய்திருப்பானோ?

இவ்வாறு போர் நடந்துவிடுமா?

இவ்வாறு கூறினார்.

எவ்வாறு செய்தல் வேண்டும்?

எவ்வாறு கேட்டார்?

28) அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

அத்தனை கேள்விகளா? அத்தனை குரங்குகளா?

இத்தனை பாடல்களா? இத்தனை கோயில்களா?

எத்தனை சிரமங்கள் உள்ளன? எத்தனை பசுக்கள் உள்ளன?

29) அத்தகைய, இத்தகைய, எத்தகைய; அன்றைய, இன்றைய, என்றைய; அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட; அப்போதைய, இப்போதைய, எப்போதைய; பின்னைய, நேற்றைய, நாளைய - - என்னும் சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

அத்தகைய திறமை உள்ளது.

அத்தகைய பேச்சைக் கேட்டதுண்டா?

இத்தகைய செயலை முடிக்க முடியாது.

இத்தகைய தன்மை கொண்டவர்.

எத்தகைய மனிதர்கள் அவர்கள்?

எத்தகைய சால்பு உடையவர்?

அன்றைய செய்தி விரும்பத்தக்கதன்று.

அன்றைய கோட்பாடுகள்

இன்றைய தகவல் என்ன?

இன்றைய கடமைகள்

என்றைய செய்தி இது?

என்றைய பழக்கவழக்கம்?

அப்படிப்பட்ட பெரியவர் இவர்தாமா?

அப்படிப்பட்ட கோவில் இதுவா?

இப்படிப்பட்ட செயலைச் செய்யாதீர்.

இப்படிப்பட்ட காப்பியம் இது.

எப்படிப்பட்ட குடும்பம் அது?

எப்படிப்பட்ட கற்பனை இது?

அப்போதைய பழக்க வழக்கங்கள்

இப்போதைய பண்பாட்டுச் சிறப்புகள்

எப்போதைய கோட்பாடுகள்?

முன்னைய தூற்றுதல்

பின்னைய பாராட்டுகள்

நேற்றைய தடைகள்

நாளைய காட்சிகள்.

30) இரண்டாம் வேற்றுமை உருபாகியஐ’, நான்காம் வேற்றுமை உருபாகிய‘கு’ ஆகிய இவ்விரண்டைத் தவிர, ஏனைய வேற்றுமை உருபுகளின் பின் வலி மிகா.

எ-டு.

என்னோடு சேர்ந்துவிடு. (இங்கு மூன்றாம் வேற்றுமை உருபு ‘ஓடு’ என்பதன் பின் வலி மிகவில்லை)

எங்களது பூமி - ‘அது’ ஆறன் உருபு. வலி மிகவில்லை.

பாலொடு தேன் கலந்தற்றே - ஒடு

மரத்திலிருந்து பறித்தான் - இல்

குரங்கது குட்டி - அது

என்னுடைய புத்தகம் - உடைய

மலையினின்று பாய்ந்தான் - இன்

31) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.

எ-டு.

பறவை பிடித்தான்.

தமிழ் படித்தான்.

32) மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.

எ-டு.

கை தட்டினான் - (கையால் தட்டினான்)

33) நான்காம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.

எ-டு.

சிறை சென்றான் - (சிறைக்குச் சென்றான்)

34) ஐந்தாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.

எ-டு.

வரை பாய்ந்தான் - (வரையிலிருந்து பாய்ந்தான்)

35) ஏழாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.

எ-டு.

ஊர் தங்கினான் - (ஊரின்கண் தங்கினான்)

36) நிலைமொழி உயர்திணையாய் அமையும் எந்தப் பெயர்த்தொகையிலும் வலி மிகா.

எ-டு.

தோழி கூற்று

திருத்தொண்டர் திருக்கோயில்

ஆசிரியர் சம்பளம்

பெரியார் பேரன்

மேற்கண்ட தொடர்களெல்லாம், ஆறாம் வேற்றுமைத் தொகையாகவும், நான்காம் வேற்றுமைத் தொகையாகவும் அமைந்தபோதிலும், நிலைமொழி உயர்திணை ஆதலால், வலி மிகவில்லை.

37) அன்று, பிறகு, முன்பு, உடைய, உள்ள, உரிய, ஆன, வரை, கொண்டு, தக்க, தகுந்த, ஏற்ற - ஆகியன வலி மிகாமல் புணரும் சொல்லுருபுகளாகும்.

எ-டு.

அன்று - திங்களன்று தேர்வு நடைபெறும்.

பிறகு - அடுத்த தலைவர் யாரென்று பிறகு பார்ப்போம்.

முன்பு - வீட்டின் முன்பு செடிகள் வளர்ந்துள்ளன.

உடைய - யாருடைய காசும் தேவையில்லை.

உள்ள - அவருக்குள்ள செல்வாக்கு அளப்பரியது.

உரிய - ஒவ்வொருவர்க்கும் உரிய பங்கு கிடைக்கும்.

ஆன - சிறந்த இயக்குநருக்கான பரிசு ஒரு தமிழருக்குக் கிடைத்தது.

வரை - காடு வரை பிள்ளை

கொண்டு - மனிதன் இறக்கும்போது கொண்டு செல்வது யாதுமில.

தக்க - படிப்புக்குத் தக்க பதவி இன்னும் கிடைக்கவில்லை.

தகுந்த - வேலைக்குத் தகுந்த சம்பளம் தரவில்லை.

ஏற்ற - மனநிலைக்கு ஏற்ற சோகப் பாட்டு காதில் விழுகிறது.

இந்தச் சொல்லுருபுகள் வலி மிகாமல் புணரும்.

38) முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்றுத் தொடர்களில் வலி மிகா.

எ-டு.

நட கோவலா

வா சாத்தா

கொடு தேவா

எறி பூதா

39) எதிர்மறைப் பெயரெச்சங்களில் வலி மிகா.

எ-டு.

செல்லாத பணம்

கறவாத பசு

கேளாத செய்தி

முற்றாத தேங்காய்

40) சிறிய, பெரிய - என்னும் குறிப்புப் பெயரெச்சங்களின் பின் வலி மிகா.

எ-டு.

சிறிய + கண்ணாடி = சிறிய கண்ணாடி

சிறிய + பெண் = சிறிய பெண்

பெரிய + கொட்டாய் = பெரிய கொட்டாய்

பெரிய + பாட்டி = பெரிய பாட்டி

பெரிய + புத்தகம் = பெரிய புத்தகம்

41) மென்தொடர்க் குற்றுகர ஈற்று வினையெச்சத்தில் வலி மிகாது.

எ-டு.

கண்டு களித்தான்

வந்து சேர்ந்தான்

சென்று திரும்பினான்

வந்து போனான்

உண்டு படுத்தான்

வென்று பிடித்தான்

42) இடைத்தொடர்க் குற்றுகர ஈற்று வினையெச்சத்தில் வலி மிகாது.

எ-டு.

பெய்து கெடுத்தது

நெய்து சேர்த்தான்

கொய்து தின்றான்

செய்து பார்த்தான்

43) உயிர்த்தொடர்க் குற்றுகர ஈற்று வினையெச்சத்தில் வலி மிகாது.

எ-டு.

அழுது கலங்கினான்

உழுது களைத்தான்

ஆராயாது செய்தான்

அழுது தீர்த்தான்

(குறிப்பு : வன்தொடர்க் குற்றுகர ஈற்று வினையெச்சங்கள் தவிர, ஏனைய குற்றுகர ஈற்று வினையெச்சங்களின் பின் வலி மிகா.)

44) ஆவது, அம்ம, மன்ற, வாளா, சும்மா - என்னும் இடைச்சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

ஆவது : நானாவது போய்ப் பார்த்திருக்க வேண்டும்.

அவனாவது சென்றானா?

அம்ம : அம்ம கொடிது

மன்ற : மன்ற தெளிந்தார்

வாளா + சென்றான் = வாளா சென்றான்

சும்மா + போனான் = சும்மா போனான்

45) சால, தவ, தட, குழ - என்னும் உரிச்சொற்களின் பின் வலி மிகும்.

ஏனைய உரிச்சொற்களின் பின் (உறு, நனி, கடி, கூர், மா, கழி, மழ - என்னும் உரிச்சொற்களின் பின்) வலி மிகா.

எ-டு.

உறு: உறு பொருள் கொடுத்தும் உதவினான்.

நனி : நனி தின்றான் சோற்றை.

கடி : கடி காவல் நிறைந்த வீடு.

கூர் : கொடுமை கூர் சித்தியின் செயல்களைப்

பொறுக்க முடியவில்லை.

மா : மா பெரும் கூட்டம் நடந்தது இங்கு.

கழி : கழி பேருவகை கொண்டான் காதலன்.

மழ : மழ களிறு இங்கே உள்ளது.

46) அடுக்குத் தொடர்களில் வலி மிகா.

எ-டு.

பார் பார்

பாம்பு பாம்பு

போ போ

தா தா

47) இரட்டைக் கிளவிகளில் வலி மிகா.

எ-டு.

சிலு சிலு, கல கல, பள பள, சல சல, தள தள, குவா குவா, தக தக, பட பட,கிடு கிடு, குடு குடு

சிலுசிலு - சிலுசிலுவெனக் குளிர் அடிக்கிறது.

கலகல - காற்று கலகலவென வீசுகிறது.

பளபள - பளிங்குத் தரை பளபளவெனக் காட்சியளிக்கிறது.

சலசல - தென்னங்கீற்று சலசலவென ஓசையிட்டுக்

காற்றில் அசைகிறது.

தகதக - தங்க நகை தகதகவென மிளிர்ந்தது.

குவா குவா - குழந்தை குவா குவாவென ஓசையிடுகிறது.

தளதள - அப்பெண் தளதளவென அழகுடன் இருந்தாள்.

கிடுகிடு - கிடுகிடு பள்ளம்

படபட - படபடவென்று பேசினான்.

48) ‘கள்’ என்னும் அஃறிணைப் பன்மை விகுதியில் வலி மிகாது.

எ-டு.

எழுத்து + கள் = எழுத்துகள்

தோப்பு + கள் = தோப்புகள்

கருத்து + கள் = கருத்துகள்

வாழ்த்து + கள் = வாழ்த்துகள்

பொருள் + கள் = பொருள்கள்

நாள் + கள் = நாள்கள்

49) வடமொழி, ஆங்கிலம் போன்ற பிற மொழிச் சொற்கள் வருமொழியாக வரும் தொடர்களில் வலி மிகுவதில்லை.

எ-டு.

பாத + காணிக்கை = பாத காணிக்கை

பதி + பக்தி = பதிபக்தி

பாச + தீபம் = பாச தீபம்

பந்த + பாசம் = பந்த பாசம்

தாலி + பாக்கியம் = தாலி பாக்கியம்

தெய்வ + தரிசனம் = தெய்வ தரிசனம்

தேச + பக்தி = தேச பக்தி

50) ஐகார வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஓரெழுத்துச் சொற்களாய் வந்து, அவற்றொடுகள்’ விகுதி சேரும்போது வலி மிகா.

எ-டு.

கை + கள் = கைகள்

பை + கள் = பைகள்

51) ‘நல்ல’, ‘தீய’, ‘அரிய’ எனும் பண்புச் சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகா.

எ-டு.

நல்ல + பாம்பு = நல்ல பாம்பு

நல்ல + கிணறு = நல்ல கிணறு

தீய + பழக்கம் = தீய பழக்கம்

தீய + குணங்கள் = தீய குணங்கள்

அரிய + செயற்பாடுகள் = அரிய செயற்பாடுகள்

அரிய + காட்சி = அரிய காட்சி

52) ‘சார்பாக’, ‘தொடர்பாக’ உயர்திணைப் பெயர்ச்சொல்லுடன்சார்பாக’, ‘தொடர்பாக’ என்னும் ஒட்டுகள் வந்து சேரும்பொழுது வல்லினம் மிகா.

எ-டு.

மாணவர் + சார்பாக = மாணவர் சார்பாக

உறுப்பினர் + தொடர்பாக = உறுப்பினர் தொடர்பாக

53) ‘போது’, ‘படி’, ‘படியால்’பெயரெச்சத் தொடரின் ஒட்டுகள்போது’, ‘படி’, ‘படியால்’ ஆகியன வரும்போது வல்லினம் மிகா.

எ-டு.

அவன் சென்ற + போது = அவன் சென்றபோது

அவன் செய்த + படி = அவன் செய்தபடி

அவன் சொன்ன + படியால் = அவன் சொன்னபடியால்

54) ‘தொறும்’ - ‘தோறும்’பெயர்ச்சொல்லொடுதொறும்’, ‘தோறும்’ என்னும் பின்னொட்டுகள் வந்து புணரும்பொழுது வல்லினம் மிகா.

எ-டு.

நகர் + தோறும் = நகர்தோறும்

மனை + தோறும் = மனைதோறும்

கல்லூரி தோறும் = கல்லூரிதோறும்

நாடு + தொறும் = நாடு தொறும்

பள்ளி + தொறும் = பள்ளி தொறும்

காடு + தொறும் = காடு தொறும்

55) ‘கூட’, ‘பற்றி’, ‘பொருட்டு’, ‘பால்’, ‘குறித்து’, ‘தவிர’எழுவாயாக நிற்கும் பெயர்ச் சொற்களுடன்கூட’, ‘பற்றி’, ‘பொருட்டு’,‘பால்’, ‘குறித்து’, ‘தவிர’ ஆகிய ஒட்டுகள் சேரும்பொழுது வல்லினம் மிகா.

எ-டு.

தலைவர் + கூட = தலைவர்கூட

நாடு + பற்றி = நாடு பற்றி

ஆசிரியர் + பொருட்டு = ஆசிரியர் பொருட்டு

பசு + குறித்து = பசு குறித்து

ஆடு + தவிர = ஆடு தவிர

56) அம்மை, அப்பர், மாமி, அண்ணி, தந்தை, தம்பி, தங்கை உள்ளிட்ட முறைப் பெயர்களையும், அம்மா, அப்பா, மாமா, மாமி, அண்ணா, அண்ணி, தம்பி, அக்கா உள்ளிட்ட முறைவிளிப் பெயர்களையும் அடுத்துவரும் வல்லினம் மிகா.

எ-டு.

முறைப் பெயர்கள்

அம்மை கோயிலுக்குச் சென்றுள்ளார்

அப்பர் சோறு சாப்பிட்டார்

மாமி சென்றாள்

அண்ணி கூப்பிட்டார்

தந்தை தாங்கினார்

தம்பி பார்த்தான்

தங்கை பூச்சூடினாள்

முறைவிளிப் பெயர்கள்

அம்மா பசிக்கிறது

அப்பா செல்லலாம்

மாமா கொடுப்பீர்

மாமி சாப்பிடுவீர்

அண்ணா செல்வீர்

அண்ணி கேட்பீர்

தம்பி படிப்பாய்

தங்கை பாடுவாய்

அக்கா தருவீர்

(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)

Pin It

மொழியைப் பிழையின்றியும், தவறின்றியும் பேசுவதற்கும், எழுதுவதற்கும் கருவியாக இருப்பதுவே இலக்கணம். பிறர் தவறின்றிப் புரிந்து கொள்வதற்கும், பிழையின்றிக் கருத்தைத் தெளிவாக வெளியிடுவதற்கும் துணைபுரிவது இலக்கணம். தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்து பிரிவுகளைக் கொண்டதாகும்.

எழுத்துகளின் எண், பெயர், முறை, பிறப்பு ஆகியவற்றின்தன்மைகளைக் கூறுவது எழுத்து இலக்கணமாகும். சொல் இலக்கணம் என்பது பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றின் தன்மைகளைக் கூறுவதாகும். பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என இரண்டு வகைப்படும்.

அகப்பொருள் பிரிவுகள்

அகப்பொருள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சி : மலையும் மலை சார்ந்த இடமும்

முல்லை : காடும் காடு சார்ந்த இடமும்

மருதம் : வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல் : கடலும் கடல் சார்ந்த இடமும்

பாலை : குறிஞ்சியும், முல்லையும் தம் இயல்பில் திரிந்திருத்தல்.

யாப்பிலக்கணம்

(யாப்பு - செய்யுள்)

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன செய்யுளின் உறுப்புகளாகும்

அணி இலக்கணம்

செய்யுள், உரைநடை ஆகிய இரண்டிலும் காணப்படுகின்ற சொல், பொருள்களின் அழகினை வகைப்படுத்திக் கூறுவது அணி இலக்கணம் எனப்படும்.

தமிழ் எழுத்துகள் முதல் எழுத்துகள், சார்பெழுத்துகள் என இருவகைப்படும். மொத்தம் 247 எழுத்துகள்.

உயிரெழுத்து - 12

மெய்யெழுத்து - 18

உயிர்மெய் எழுத்து - 12 X 18 = 216

ஆய்த எழுத்து - 1

மொத்தம் - 247

மாத்திரை

ஒவ்வோர் எழுத்தையும் ஒலிக்கும் கால அளவிற்கு மாத்திரை என்பது பெயராகும். இயல்பாகக் கண் இமைப்பதும், கை நொடிப்பதும் ஒரு மாத்திரை எனக் கூறுவர்.

உயிர்க் குறில் - 1 மாத்திரை

உயிர்மெய்க் குறில் - 1 மாத்திரை

உயிர் நெடில் - 2 மாத்திரை

உயிர்மெய் நெடில் - 2 மாத்திரை

மெய் எழுத்து - 1/2 மாத்திரை

குற்றியலுகரம் - 1/2 மாத்திரை

குற்றியலிகரம் - 1/2 மாத்திரை

ஆய்த எழுத்து - 1/2 மாத்திரை

உயிரளபெடை - 3 மாத்திரை

ஐகாரக் குறுக்கம் - 1 மாத்திரை

ஒளகாரக் குறுக்கம் - 1 மாத்திரை

ஒற்றளபெடை - 1 மாத்திரை

மகரக் குறுக்கம் - 1/4 மாத்திரை

ஆய்தக் குறுக்கம் - 1/4 மாத்திரை

உயிரெழுத்து

மொழிக்கு உயிராகத் திகழ்பவை. ‘அ’ முதல் ‘ஒள’ முடிய 12 எழுத்துகள். அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறுகி ஒலிப்பதனால் குற்றெழுத்து எனப்படும். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நீண்டு ஒலிப்பதனால் நெட்டெழுத்து எனப்படும்.

சுட்டெழுத்து

அ, இ, உ என்னும் மூன்று எழுத்துகளும் ஒரு பொருளைச் சுட்டிக் காட்டும் வகையில் சொல்லின் முதலில் வந்தால், அவை சுட்டெழுத்துகள் எனப்படும்.

மெய்யெழுத்து

இவை 18 ஆகும். வல்லினம், மெல்லினம், இடையினம் என மெய்யெழுத்து மூன்று வகைப்படும்.

க் ச் ட் த் ப் ற் - வல்லின மெய்

ங் ஞ் ண் ந் ம் ன் - மெல்லின மெய்

ய் ர் ல் வ் ழ் ள் - இடையின மெய்

உயிர்மெய் எழுத்து

உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்து பிறப்பது உயிர்மெய் எழுத்தாகும். இவ்வாறு 18 மெய்யெழுத்துகளும், 12 உயிரெழுத்துகளுடன் சேர்ந்து 216 உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.

குற்றியலுகரம்

வன்தொடர்க் குற்றியலுகரம்

எடுத்துக்காட்டு (எ. கா.) - விளக்கு, தச்சு, பட்டு, முத்து, உப்பு, காற்று ஆகியன வன்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

குரங்கு, மஞ்சு, கூண்டு, மருந்து, இரும்பு, கன்று இவையனைத்தும் மென்தொடர்க் குற்றியலுகரங்களே!

எய்து, சார்பு, சால்பு, போழ்து ஆகியன இடைத்தொடர்க் குற்றியலுகரங்கள்.

முற்றியலுகரம்

குற்றியலுகரங்கள் தவிர்த்த அனைத்தையும் முற்றியலுகரங்கள் என்று கூறிடலாம்.

புணர்ச்சி

ஒரு சொல்லோடு இன்னொரு சொல்லோ உருபோ வந்து சேரும்பொழுது, இடையில் ஏற்படும் மாற்றங்களை ‘புணர்ச்சி’என்கிறோம். முதலில் நிற்கும் சொல்லை ‘நிலைமொழி’ என்றும், வந்து இணையும் சொல்லை ‘வருமொழி’ என்றும் கூறுவர்.

சொல்

ஓர் எழுத்து தனித்து நின்றோ இரண்டு முதலாகத் தொடர்ந்து நின்றோ பொருளை உணர்த்துவது சொல். சொற்களைப் பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்று நான்காகப் பிரிக்கலாம்.

பெயர்ச் சொல்

ஒரு பொருளின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். அது திணை, பால், எண், இடம், காலம், வேற்றுமைகளை ஏற்று வரும்.

திணை : இரண்டு பிரிவுகள் - உயர்திணை, அஃறிணை

பால் : இது 5 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆண்பால், பெண்பால், பலர்பால் (உயர்திணை) ஒன்றன்பால், பலவின்பால் (அஃறிணை)

எண் : இது ஒருமை, பன்மை என இருவகைப்படும்.

இடம் : இது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூன்று வகைப்படும்.

தன்மை - நான், யான், நாங்கள், யாம்

முன்னிலை - நீ, நீர், நீங்கள்

படர்க்கை - அவன், அவள், அவர், அது, அவை

இவை அனைத்துக்கும் பொதுப்பெயர்கள் தான், தாம், எல்லாம்.

காலம் : இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் எனக் காலம் மூன்றாகும்.

வேற்றுமை

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை எனப்படும். வேற்றுமை எட்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் வேற்றுமை - எழுவாய். இதற்கு உருபு இல்லை. பெயரே உருபு.

இரண்டாம் வேற்றுமை - உருபு : ஐ

மூன்றாம் வேற்றுமை - உருபுகள் : ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன், கொண்டு

நான்காம் வேற்றுமை - உருபு : கு

ஐந்தாம் வேற்றுமை - உருபுகள் : இல், இன்.

ஆறாம் வேற்றுமை - உருபுகள் : அது, உடைய

ஏழாம் வேற்றுமை - உருபு : கண்

எட்டாம் வேற்றுமை - விளிப் பொருளில் வருவது. உருபு இல்லை.

வாக்கியங்களில் வேற்றுமை உருபு விரிந்து அல்லது மறைந்து வரும். வேற்றுமை உருபு விரிந்து வருதல் வேற்றுமை விரியாகும். வேற்றுமை உருபு மறைந்து வருதல் வேற்றுமைத் தொகையாகும்.

வேற்றுமை விரி - பாலைக் குடி

வேற்றுமைத் தொகை - பால் குடி

வினைச்சொல்

ஒரு பொருளின் தொழில் நிகழ்ச்சியை உணர்த்தும் சொல்வினைச்சொல் ஆகும். அது காலத்தைக் காட்டும். ஆனால் வேற்றுமை உருபை ஏற்காது. இது தெரிநிலை வினை, குறிப்பு வினை என இருவகைப்படும்.

வினைச்சொல் வகைகள்

வினைச் சொல் முற்றுவினை, எச்சவினை என இருவகைப்படும். பொருள் முற்றி நிற்பது முற்று வினையாகும்.

(எ-டு) மரம் சாய்ந்தது - தெரிநிலை வினைமுற்று

மரம் பெரியது - குறிப்பு வினை முற்று

பொருள் முழுமை பெறாமல் எஞ்சியிருப்பது எச்ச வினையாகும். எச்சம் பெயரெச்சம், வினையெச்சம் என இருவகைப்படும்.

(எ-டு) சென்ற மனிதன் - இதில் ‘சென்ற’ என்பது முற்றுப் பெறாத எச்சச் சொல். மனிதன் என்னும் பெயர்ச்சொல்லைத் தழுவி நிற்பதால் பெயரெச்சம். இவை முக்காலங்களிலும் வரும்.

 (எ-டு) சென்று வந்தேன் - இதில் ‘சென்று’ என்பது எச்சச் சொல். வந்தேன் என்னும் வினைமுற்றைத் தழுவுவதனால் இது வினையெச்சம்.

எதிர்மறைப் பெயரெச்சம்

(எ-டு)

விளையாத பயிர்

வரம் வேண்டாத தவம்

படிக்காத மேதை

வாடாத செடி

இந்தத் தொடர்களிலுள்ள ‘விளையாத, வேண்டாத, படிக்காத, வாடாத’ என்னும் சொற்கள் பெயரெச்சங்கள். இருப்பினும் அவை எதிர்மறைப் பொருளைத் தருவதனால் அவற்றை‘எதிர்மறைப் பெயரெச்சங்கள்’ எனக் கூறுவர்.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

(எ-டு)

விளையாப் பயிர்

வரம் வேண்டாத் தவம்

படிக்கா மேதை

வாடாச் செடி

இங்கு நிலை மொழிகளில் ‘த’ என்ற ஈற்றெழுத்து இன்றி அமைந்துள்ளது. இவ்வாறு ஈற்று எழுத்து ‘த’ இல்லாமல் வரும் எதிர்மறைப் பெயரெச்சங்களை ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்’ என்று வழங்குவர்.

வியங்கோள் வினைமுற்று

மரியாதையுடன் ஏவுதல் வியங்கோள் வினைமுற்று ஆகும்.

(எ-டு) வாழ்க.

இடைச்சொல் தனித்து வராமல் பெயர்ச் சொல், வினைச் சொல் ஆகியவற்றைச் சார்ந்து வருவது இடைச்சொல் ஆகும்.

அவை யாவன :

வேற்றுமை உருபுகள், விகுதிகள், இடைநிலைகள், சாரியைகள், உவம உருபுகள், ஏ, ஓ, என, என்று, உம், மற்று, மற்றை, கொல், மா, யா, கா, பிற, அந்தோ, ஐயோ.

உரிச்சொல்

பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் விட்டு நீங்காமல் செய்யுளுக்கு உரிமை பூண்டு வரும் சொல் உரிச்சொல்லாகும்.

(எ-டு.) சால, நனி, கழி, தவ, கூர் - இவை ‘மிகுதி’ என்னும் ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்கள். இவை அனைத்தும் ‘மிகுதி’என்ற ஒரே பொருளைத்தான் தருகின்றன.

(எ-டு.) சாலவும் நன்று

நனி நாகரிகர்

அருள் கூர்ந்து

கழி நகை

பல குணம் தழுவிய ஓர் உரிச் சொல்

‘கடி’ என்ற ஒரே சொல் இடத்திற்கேற்றவாறு வெவ்வேறு பொருளில் வருவதனால், இது பல குணம் தழுவிய ஓர் உரிச் சொல் எனப் பெயர் பெற்றது.

கடி மலர் - வாசனை உள்ள மலர்

கடி வாள் - கூர்மை உள்ள வாள்

கடி நகர் - காவல் பொருந்திய நகர்

கடி முரசு - ஒலிக்கும் முரசு

கடி மிளகு - காரமான மிளகு

(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய 'தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்' என்ற புத்தகத்திலிருந்து)

Pin It