அனைத்து நாடுகளிலும், தங்கத்திற்குத் தனி தரமுத்திரை இடப்படுகிறது. இந்த முறை 14 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் பொற்கொல்லர்கள் சபையில் அறிமுகம் செய்தனர்.

gold jewelsஇந்திய தர நிர்ணய அமைவனம் தங்கத்திற்கு ஹால்மார்க்கிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தங்கத்திற்கு தரத்தை நிர்ணயிப்பதற்காக 2000 ஆம் ஆண்டில் இம்முறை கொண்டு வரப்பட்டது. இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு காரணம், தங்கம், வணிகச் சந்தையில் தரக்குறைவாக மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததுதான். இதனை ஒழுங்குபடுத்தவே பி.ஐ.எஸ். என்பதாகும். இத்திட்டத்தை அறிமுகம் செய்த இந்திய அரசாங்கம், இந்திய தர நிர்ணய அமைவனம் ஒன்றுக்கே இந்திய தங்க சந்தையில், தங்கத்தின் தரத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது.

1972 ஆம் ஆண்டு வியன்னா சிறப்ப கூட்டத்தில் எடுத்த முடிவுப்படி, இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் நகை வியாபாரிகளுக்கு லைசன்ஸ் வழங்கப்படுகிறது. இது தங்கப் பொருள் சான்றிதழ் திட்டம் ஆகும். இந்த நகை வியாபாரிகள் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் அங்கீகாரம் பெற்ற தங்க பகுப்புச் சோதனை மையங்களிலும் தனி அடையாளம், முத்திரை குத்தும் சோதனை மையங்களிலும் ஹால்மார்க் சென்டர் தங்கள் நகைகளை பகுப்பு சோதனைக்கு உட்படுத்தி தனி அடையாள முத்திரை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சோதனை மையங்கள், அகில உலகத்தரம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன. தங்க நகைளில் ஹால்மார்க்கின் டிசைன் பி.ஐ.எஸ், கார்ப்பரேட் லோகோ ஆகும். இதன்படி 1000 என்பது 23 கேரட்டிற்கு இணையானது என்றும், 958 23 கேரட்டிற்கு இணையானது என்றும், 875 என்பது 21 கேரட்டிற்கு இணையானது என்றும், 750 என்பது 18 கேரட்டிற்கு இணையானது என்றும், 585 14 கேரட்டிற்கு இணையானது என்றும், 375 9 கேரட்டிற்கு இணையானது என்றும் அடையாளப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பி.ஐ.எஸ். அங்கீகாரம் பெற்றதற்கான அடையாளம் இடமிடப்படுகிறது. இதில் பி.ஐ.எஸ். அங்கீகாரம் பெற்ற பகுப்பு, தனி அடையாளச் சோதனைச் சாலையின் சின்னம், வருடத்தின் முத்திரை, கோடு, லெட்டர் ஆகியவை கட்டிடத்திற்குள் இடப்பட்டிருக்கும். இந்த கட்டத்திற்குள் எந்த வருடம் தங்கம் பகுப்பு செய்யபப்ட்டது என்று குறிக்கப்படும். உதாரணமாக ஏ என்ற எழுத்து கி.பி.200 ஆண்டைக் குறிக்கும். பி என்பது 2001 ஆண்டையும் சி, டி என்பது அந்தந்த வருடங்களைக் குறிப்பதாகும். அதன் பின்னர் நகைகடையாளர்களின் முத்திரை, நகை விற்பனையாளர் சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும். இத்திட்டத்தின்படி நகை விற்பனையாளர்கள் பி.ஐ.எஸ். உடன் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவிற்கு பின்னால் பி.ஐ.எஸ். நகைவிற்பனையாளரின் தங்க உற்பத்தி சாலைக்கு சென்று, மதிப்பீடு செய்து, அவர்களிடமிருந்து மாதிரிகளை வாங்கி சோதனை செய்யும். பின்னர் தகுதியானவர்களுக்கு அங்கீகாரம் அதாவது லைசன்ஸ் வழங்கப்படும்.

பின்னர் நகைவிற்பனையாளர்கள் பி.ஐ.எஸ். அங்கீகாரம் பெற்ற தங்க பகுப்பு, தனி அடையாளச் சோதனைச் சாலைகளில் தங்கள் நகைகளைக் கொடுத்து, சோதனைக்குரிய கட்டணங்களைக் கட்டி, ஹால்மார்க் முத்திரை பெறலாம். ஆனால் நகை விற்பனையாளர்கள் தங்கத்தின் தரம் குறைந்தால் அவர்களது லைசன்ஸ் ரத்து செய்யப்படும்.

ஹால்மார்க்கில் 5 முத்திரைகள் உண்டு.

1.பி.ஐ.எஸ்.மார்க்
2.அடையாள எண்
3.பகுப்பு, தனி அடையாள சோதனைச்சாலை எண்
4.நகை விற்பனையாளர் சின்னம்
5.முத்திரை பெற்ற வருடம்

இதனை நகை வாங்குபவர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

- வைகை அனிஷ்

interviewநேர்காணல்களின் போது வந்திருப்பவர் நம்முடைய நிறுவனத்தில் நீண்ட காலம் வேலை பார்ப்பாரா? என்பதை உறுதி செய்வதற்காகப் பெரும்பாலான நிறுவனங்களில் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒன்றை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நேரடியாகக் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் நேரடியாகவே பதில் சொல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பல நேரங்களில் நேர்க்கேள்விகளுக்கு நேராகப் பதில் சொல்ல முடியாது. அப்படிப் பட்ட கேள்விகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

 • நீங்கள் எத்தனை ஆண்டுகள் எங்கள் நிறுவனத்தில் இருப்பீர்கள்? 

இந்தக் கேள்விக்கு எத்தனை ஆண்டுகள் நீங்கள் சொன்னாலும் மாட்டிக்கொள்வீர்கள். எடுத்துக்காட்டாக, ‘நான் ஐந்து வருடம் உங்களுடன் இருப்பேன்’ என்று சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே, ‘ஏன் ஐந்து வருடம் தானா? அதற்கு மேல் இருக்க மாட்டீர்களா?’ என்று கேட்பார்கள். அப்போது நாம் திகைத்துப் போவோம். எனவே இந்தக் கேள்விக்கு ஆண்டு எண்ணிக்கையை விடையாகச் சொல்ல முடியாது. அப்படியானால் என்ன சொல்வது? உண்மையைச் சொல்லுங்கள்.

­எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, வேலை செய்யும் சூழல் சரியாக இருந்தால் மட்டுமே நம்மால் மன நிம்மதியுடன் வேலை செய்ய முடியும். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் வேலை பிடிக்கவில்லை என்றால் ஊழியர்கள் இருக்க மாட்டார்கள். வேலை செய்யும் சூழல் நன்றாக இல்லாவிட்டாலும் இருக்க மாட்டார்கள். எனவே, இந்தக் கேள்விக்கு, ‘நான் கற்றுக்கொள்ளும் அளவில், நல்ல வேலைவாய்ப்புச் சூழல் நிலவும் வரை நான் வேறு நிறுவனத்தைத் தேட மாட்டேன்’ என்று பதில் சொல்லலாம்.

 • வேறொரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தால் அங்கு போய் விடுவீர்களா? 

சிறிய நிறுவனங்களின் நேர்காணல்களில் இது போன்ற கேள்வி பரவலாகக் கேட்கப்படுவது உண்டு. ‘கட்டாயம் உங்கள் நிறுவனத்தை விட்டுப் போக மாட்டேன்’ என்று இதற்குப் பதில் சொன்னால் அது வெளிப்படையாகவே பொய் என்று தெரியும். எனவே அதைச் சொல்வதில் அர்த்தமில்லை.

அதற்குப் பதிலாகக் கீழ்க்காணும் பதில்களில் உங்களுக்கு எது பொருந்துமோ அதைச் சொல்லலாம்.

 1. ‘பெரிய நிறுவனங்களில் நாம் செய்யும் வேலை என்பது கடலில் கரைத்த காயத்தைப் போல; இலட்சத்தில் ஒருவராகத் தான் நாம் இருப்போம். அதே வேளை, உங்களுடைய நிறுவனத்தைப் போல சின்ன நிறுவனத்தில் வேலைக்கு வந்தால், நிறைய கற்றுக்கொள்ளலாம். நம்முடைய வேலை பலராலும் பாராட்டப்படும். எனவே பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தால் போக மாட்டேன்.
 2. பெரிய நிறுவனம், சிறிய நிறுவனம் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. என்னுடைய திறமைக்கு எங்கு வேலை கிடைக்கிறதோ அங்குத் தான் நான் இருப்பேன். என்னுடைய பயோடேட்டாவும் உங்களுடைய வேலை தேவையும் பொருந்துவதாக நான் நினைத்தேன். அதற்காகத் தான் இங்கு வந்தேன்.
 • எங்களை விட அதிக சம்பளத்தை இன்னொரு நிறுவனம் கொடுத்தால் அங்கு போய் விடுவீர்களா?

யோசித்துப் பாருங்கள். நீங்கள் கம்ப்யூட்டர் துறையில் சேர ஆசைப்படுகிறீர்கள். உங்கள் நண்பர் ‘மருத்துவம் படி; கோடி கோடியாகச் சம்பாதிக்கலாம்’ என்கிறார். மருத்துவம் படிக்கச் சென்று விடுவீர்களா? இல்லை தானே! ‘இல்லை நண்பா! எனக்கு கம்ப்யூட்டர் படிக்க ஆர்வம் இருக்கிறது! நான் அதில் கட்டாயம் முன்னேறி விடுவேன்’ என்று தானே பேசுவீர்கள். அதே பதிலை இங்கும் சொல்லுங்கள்.

சம்பளம் என்பது முக்கியம் தான். ஆனால் அது மட்டுமே முக்கியம் இல்லை. என்னுடைய திறமைகளும் உங்களுடைய வேலை தேவைகளும் பொருந்துவதாக நான் நினைக்கிறேன். எனவே சம்பளத்திற்காக மட்டும் வேறு நிறுவனத்திற்குப் போக மாட்டேன்.

 • இங்கு உங்களைச் சக்கையாகப் பிழிந்து விடுவார்கள். பரவாயில்லையா?

நீங்கள் சுறுசுறுப்பானவரா?  சோம்பேறியா? என்பதைத் தெரிந்து கொள்ள நிறுவனங்கள் கேட்கும் கேள்வி இது! இந்தக் கேள்வி கேட்கப்பட்டவுடன், நீங்கள் ஒரு நிமிடம் யோசித்து பதில் சொன்னால் போதும் – நீங்கள் சோம்பேறி தான் என்பதை உறுதிப்படுத்திவிடுவார்கள். இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது உடல் மொழியும் ரொம்ப முக்கியம்.  மலர்ந்த முகத்துடன், ‘ என்ன சார்! என்னைப் பார்த்தால் என்ன வயதானவர் மாதிரியா தெரிகிறது! அதெல்லாம் பரவாயில்லை சார்!’ என்னும் பதில் பொருத்தமாக இருக்கும்.

 • எங்களிடம் இரண்டாண்டு காலம் ஒப்பந்தம் ('பாண்டு') இருக்கிறது. அதற்கு ஒத்துக்கொள்கிறீர்களா?

முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். இரண்டாண்டு / மூன்றாண்டு என ஒப்பந்தம் போடுவது சட்டப்படிக் குற்றம். அதை நேர்மையான நிறுவனங்கள் செய்யவே மாட்டார்கள். பிறகு ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்கிறீர்களா? நீங்கள் எத்தனை ஆண்டுகள் இருப்பீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் கேள்வி இது! அதனால் தான் கேட்கிறார்கள். எனவே நல்ல நிறுவனமாக இருந்தால் துணிச்சலாகச் ‘சரி’ என்று சொல்லி விடலாம்.

சில நிறுவனங்கள் சட்டத்திற்குப் புறம்பாக இப்படிப்பட்ட ஒப்பந்தங்களை வைத்திருக்கின்றன. நீங்கள் நேர்காணலுக்குப் போவதற்கு முன்பே நண்பர்கள் மூலமோ இணையம் மூலமோ நிறுவனங்களைப் பற்றிய விமர்சனங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அப்படி ஒப்பந்தம் உண்மையில் இருந்தாலும் துணிச்சலாகச் ‘சரி’ என்று சொல்லிவிடுங்கள். ‘ஐயோ! சரி என்று சொல்லிவிட்டால் என்ன ஆவது? ஒத்துக்கொண்ட வருடங்கள் வேலை செய்ய வேண்டி வருமே!’ என்கிறீர்களா?

‘இல்லை! என்னால் நீங்கள் சொல்லும் வருடங்கள் இங்கு இருக்க முடியாது’ என்று நீங்கள் நேரடியாகச் சொன்னால் கட்டாயம் உங்களை வேலைக்கு எடுக்கப் போவதில்லை. ‘சரி’ என்று ஒத்துக்கொண்டால் வேலைவாய்ப்பாவது கிடைக்கும். வாய்ப்பு கிடைத்த பிறகு, சேரலாமா? வேண்டாமா? எனப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம். அதனால் நட்டம் ஒன்றும் இல்லையே!

 • எலெக்டிரிக்கல் / மெக்கானிக்கல் / வேறு படிப்புகள் படித்துள்ள நீங்கள், உங்கள் துறையிலேயே வேலை தேடலாமே! ஏன் ஐ.டி. துறைக்கு வருகிறீர்கள்?

வேறு துறைப் படிப்பு படித்து விட்டு, மென்பொருள் துறையில் வேலை தேடும் பலரும் எதிர்கொள்ளும் கேள்வி இது. இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? என்று பல நேரம் நாம் குழம்பிப் போயிருப்போம். ‘ஐ.டி. யில் நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதால் தான் வந்தேன்’ என்று வெளிப்படையாகவும் சொல்ல முடியாது. இது போன்ற கேள்விக்கு விடை சொல்வதற்கு முன் ‘ஐ.டி.க்குப் போகலாம்’ என்று எப்போது நீங்கள் முடிவெடுத்தீர்கள் என்று நன்றாக யோசித்துப் பாருங்கள். அதிலேயே பாதி பதில் ஒளிந்திருக்கும்.

  • என்னுடைய அண்ணன் / உறவினர் ஒருஅர் ஐ.டி. படித்து விட்டு அமெரிக்காவில் இருக்கிறார். அவர் ஐ.டி. துறைக்கு வந்துவிடச் சொன்னார். அவருடைய முடிவை யோசித்துப் பார்த்தேன். நானும் கல்லூரி நாட்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தேன். எனவே ஐ.டி வேலைக்கு ஏன் போகக் கூடாது என்று தோன்றியது.
  • நான் படித்த எலக்டிரிகல் / இன்ஸ்டிருமென்டேஷன் ஆகிய படிப்புகளுக்குத் தென்னிந்தியாவில் அவ்வளவாக வேலை வாய்ப்பு இல்லை. (நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால்), பெண் பிள்ளையை ஒளரங்காபாத், கோல்கத்தா என்று வேலைக்கு அனுப்ப என் வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நான் கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும் என்று நினைத்தேன். எனவே ஐ.டி. யில் வேலை தேடத் தொடங்கினேன்.
  • பிளஸ் டூவில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால், எனக்குப் பிடித்த கம்ப்யூட்டர் படிப்பைப் படிக்க முடியவில்லை. வேறு வழியின்றி வேறொரு துறைப் படிப்பை எடுத்துப் படித்தேன். (இந்த பதிலைச் சொல்வதாக இருந்தால், பிளஸ் டூவில் உண்மையில் நீங்கள் குறைய மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்!)
  • நான் வேறு துறைப் படிப்பு படித்தாலும் சிறு வயது முதலே எனக்குக் கம்ப்யூட்டர் மீது ஆர்வம் அதிகம்.  பிளஸ் 2 படித்து முடித்த போது அவ்வளவாக விவரம் தெரியாது. வீட்டில் பெரியவர்கள் சொன்ன படிப்பில் சேர்ந்து படித்தேன். பின்னர் தான் நமக்குப் பிடித்த துறையிலேயே ஏன் வேலை தேடக் கூடாது என்று தோன்றியது.

இந்த பதிலுக்கு உறுதி சேர்க்கும் விதமாக, நீங்கள் ஏதாவது கணிப்பொறிப் பயிற்சி மையத்திலோ கல்லூரியிலோ கணிப்பொறி தொடர்பாகப் பெற்ற சான்றிதழ் படிப்புகளை ஆதாரமாகக் காட்டலாம். அது கேள்வி கேட்பவர் மன நிறைவு பெற உதவும்.

 • உங்களுடைய பிளஸ் என்ன? மைனஸ் என்ன?

இதுவும் பெரும்பாலான நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்வி! இது போன்ற கேள்விக்கு உண்மை என்னவோ அதைத் தயங்காமல் சொல்லுங்கள். ஆனால் பிளசையும் மைனசையும் முடிவு செய்யும் போது உண்மையிலேயே அது உங்களுடைய பிளஸ், மைனஸ் தானா? என மனத்திற்குள் கேட்டுக்கொள்ளுங்கள். அந்த பிளசையும் மைனசையும் நீங்கள் வாழ்க்கையின் எந்தத் தருணத்தில் உணர்ந்தீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். அந்த நிகழ்வையும் சேர்த்து இந்தக் கேள்விக்குப் பதிலாகச் சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

அதை விடுத்து, மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதற்காகத் தவறான பதிலைச் சொன்னீர்கள் என்றால் அடுத்தடுத்த கேள்விகளில் மாட்டிக் கொள்வீர்கள்.

சில பிளஸ்கள்:

 • எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓய மாட்டேன்.
 • நண்பர்கள் என்றால் உயிரையும் கொடுப்பேன்.
 • என்னுடைய தவறுகளைப் பிறர் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளப் பார்ப்பேன்.

ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய பிளஸ் என்பதற்கு இதில் எது பொருந்துமோ அது தான் சிறந்த பதிலே தவிர, நீங்கள் மேல் உள்ளவற்றுள் தேர்ந்தெடுக்கும் பதில் இல்லை.

மைனஸ்:

மைனசை வெளியே சொல்லும் போது நாம் நினைவில் கொள்ள வேண்டியது – நான் என்னுடைய நண்பனிடத்தில் மைனசைச் சொல்லவில்லை. நண்பர்களிடமோ பெற்றோரிடமோ மைனசைச் சொல்வதாக இருந்தால், உள்ளது உள்ளபடி அப்படியே சொல்லலாம்; தப்பில்லை. அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்கள். வேலை பார்க்கப் போகும் இடத்தில் மைனசைச் சொல்லும் போது மிகுந்த கவனம் தேவை.

மைனசே இல்லை என்று சொல்ல முடியாது; அப்படிச் சொன்னால், நம்மைப் பற்றியே நமக்குத் தெரியவில்லை என்னும் முடிவுக்கு வந்து விடுவார்கள். அதே சமயம், உள்ளது உள்ளபடியும் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது உளறிக் கொட்டுவது போல் ஆகிவிடும்.

சில உளறல்கள்:

 • நான் ஒரு மகாச் சோம்பேறி; எவ்வளவு நாள் கொடுத்தாலும் கடைசி நாளில் தான் வேலையை முடிப்பேன்.

இப்படிச் சொல்வது, ‘ஓகோ, இவரை வேலைக்கு எடுத்தால், வேலை வாங்குவது ரொம்ப சிரமம்’ என நிறுவன அதிகாரி நினைக்கத் தொடங்கி விடுவார். கடைசியில் வேலை கிடைப்பதையே கெடுத்து விடும்.

 • நான் யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன். பணம் தான் முக்கியம் என்று நினைக்கிறேன்.

இப்படிச் சொல்வது, ‘வேறு ஏதாவது நிறுவனத்தில் அதிக சம்பளத்திற்கு இவரைக் கூப்பிட்டால் போய் விடுவார்’ என்னும் எண்ணத்தை விதைத்து விடும். இந்தப் பதிலுக்குப் பிறகு வேலை கிடைப்பது குதிரைக் கொம்புதான்!

எனவே, மைனசை சொல்லும் போது ரொம்ப கவனமாகச் சொல்ல வேண்டும். மைனசுடன் சேர்த்து அதை மாற்ற நீங்கள் எடுக்கும் முயற்சிகளையும் சேர்த்துச் சொல்வது கூடுதல் பலம்.

சில மைனஸ்:

 • எனக்கு ஆங்கிலம் பேச அவ்வளவாக வராது. அதை முன்னேற்ற, கொஞ்சம் காலமாக, வானொலியில் ஆங்கிலச் செய்திகள் கேட்டு வருகிறேன்.

(ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் – ஆங்கிலச் செய்தி கேட்பதாக நீங்கள் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ‘அப்படியா? வானொலியில் எத்தனை மணிக்குச் செய்திகள் வாசிக்கிறார்கள்? எந்த நிலையத்தில் வாசிக்கிறார்கள்? நேற்றைய தலைப்புச் செய்தி என்ன?’ என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டால் மாட்டிக்கொள்வீர்கள். எனவே எப்போதும் உண்மையை மட்டும் சொல்லுங்கள்.)

 • முன்பு அதிகம் கோபப்படுவேன். இப்போது தியானம், ஆசனங்கள் ஆகியன செய்து கோபத்தைக் குறைக்க முயன்று வருகிறேன்.

(மீண்டும் கேள்விகள் – என்ன முறை தியானம்? என்ன ஆசனங்கள் செய்கிறீர்கள் என்னும் கேள்விகள் வரும்; ஆயத்தமாக இருங்கள்.)

 • முன்பு வீட்டில் வேலை எதுவும் செய்ய மாட்டேன். இப்போது தாய் தந்தைக்கு உதவ ஆரம்பித்து இருக்கிறேன்.

பிளசையே மைனசாக!

மைனசை சொல்வதில் இன்னொரு முறை இருக்கிறது. உங்கள் பிளசையே மைனஸ் போலச் சொல்வது! பழம்பெரும் அரசியல் தலைவர் ஒருவரிடம் நேர்காணலின் போது, ‘உங்களுடைய மைனஸ் என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இவ்வளவு காலம் நான் அரசியலில் இருந்தாலும், பிற தலைவர்களைப் போல எனக்கு முதுகில் குத்தத் தெரியாது’ என்று பதில் சொன்னார். எப்படி நயமாக பிளசையே மைனஸ் போலச் சொல்கிறார் பார்த்தீர்களா? இதே போல் நாமும் பதில் சொல்லலாம்.

 • வேலை என்று வந்து விட்டால் சாப்பாடு, தூக்கம் எல்லாம் பார்க்க மாட்டேன் சார். எப்படியாவது முடித்து விட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன்.
 • நண்பர்கள் எவ்வளவு தவறு செய்தாலும் மன்னித்து ஏற்றுக்கொள்வேன். அப்படிச் செய்வதால் சில நேரங்களில் துன்பப்பட்டாலும் என்னுடைய குணத்தை மாற்ற முடியவில்லை.

இந்தக் கேள்விகளுக்கும் ஒரு பொது விதி உண்டு. நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்கள் தாம் பொறுப்பாளி! எனவே தகுந்த காரணங்கள் இன்றி எந்த பதிலும் சொல்லாதீர்கள். பதில் சொல்லிவிட்டுக் காரணங்கள் தேடாதீர்கள். அது மொத்த நேர்காணலையும் சிதைத்து விடும்.

இக்கேள்விகளுக்கும் சரி, இவை போன்ற வேறு கேள்விகளுக்கும் சரி – இது தான் சரியான பதில் என்று எந்த வரையறையும் கிடையாது. நீங்கள் யார், உங்களுடைய நிலை என்ன என்பதைப் பொருத்து பதிலைத் தேர்ந்தெடுங்கள். முடிந்த வரை, கேள்விகளை வரிசைப்படத் தொகுத்து, நண்பர்களுடன் உட்கார்ந்து விவாதியுங்கள். பல புதிய கேள்விகள் கிடைக்கும்; புதிய கோணங்களில் பதில்கள் கிடைக்கும். கிடைக்கும் பதில்களில் சிறந்த பதில் எது என்று தேடுவதை விட, நமக்குச் சரியான பதில் எது என்று தேடுங்கள். அப்படித் தேடி உங்களுக்குப் பொருந்தும் பதில்களை எடுத்துக்கொள்ளுங்கள். பொய் சொல்லக்கூடாது என்பதை ஆழப் பதிய வைத்துக்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்! 

- முத்துக்குட்டி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Cypress Tree 400

அதிக இலைகள் கொண்ட மரம்

உலகிலேயே அதிக இலைகள் கொண்ட மரம் சைப்ரஸ் மரம். இதில் 4-5 கோடி இலைகள் இருக்கும்.

சிறை வாழ்க்கை

மகாத்மா காந்தி தம் வாழ்நாளில் 2338 நாட்கள் சிறையில் இருந்தார்.

இல்லை

குளிர்காலத்தில் குயில் கூவுவதில்லை.

அண்டார்டிகாவில் மரமே இல்லை.

சௌதி அரேபியா, ஆப்கானிஸ்தானில் நதி இல்லை.

யானையின் துதிக்கையில் எலும்பு இல்லை

உலகில் உள்ள 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை

தொகுப்பு - வைகை அனிஷ்

படித்து முடித்த பின் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தால் போதும்! வேறென்ன வேண்டும்? இது தான் நாம் நினைப்பது! ஆனால் வேலை கிடைப்பதற்கு, நாம் படித்திருக்கும் பட்டப்படிப்போ பட்டயப்படிப்போ போதுமா? என்றால் இல்லை! போதாது! அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

எல்லா நிறுவனங்களிலும் பல கட்டத் தேர்வுகள் நடத்துகிறார்கள். அந்தத் தேர்வுகளுக்குச் சிறந்த முறையில் நம்மை நாமே ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மை நாமே ஆயத்தப்படுத்துவது என்றால் எப்படி? கொஞ்சம் பார்க்கலாம்.

1. தன் விவரக் குறிப்பு (பயோ டேட்டா) தயாரித்தல்

interviewநீங்கள் யார், உங்களுடைய வாழ்க்கைக் குறிக்கோள் என்ன, நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள், உங்களுடைய தனித்திறமைகள் என்னென்ன, விருப்பங்கள் என்னென்ன? தொடர்பு முகவரி ஆகியவற்றையெல்லாம் சேர்த்து பயோ டேட்டா தயாரியுங்கள். இந்த பயோ டேட்டா தான் உங்களுடைய முகம்! எனவே இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விசயம் - உங்களுக்குத் தெரியாத ஒன்றைத் தெரியும் எனப் பொய் சொல்லாதீர்கள். பலரும் செய்யும் தவறு - எப்படியாவது வேலை கிடைத்து விட வேண்டும் என்பதற்காக, தெரிந்தது, தெரியாதது என எல்லாவற்றையும் தெரிந்ததாகப் போட்டிருப்பார்கள். அப்படிச் செய்பவர்கள் நேர்காணலின் போது எளிதாக வடிகட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு விடுவார்கள். வேலை கிடைப்பதற்கு நாள் ஆகிவிட்டாலும் பரவாயில்லை - தவறான தகவலைக் கொடுத்து வேலை வாங்கி விடலாம் என்று நினைக்காதீர்கள். அந்த முயற்சி பெரும்பாலான நேரங்களில் தோல்வியில் தான் முடிவடையும். எனவே உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லது என்றும் சொல்லுங்கள். பயோடேட்டாவின் முதல் வரியில் இருந்து கடைசி வரி வரை உங்களுடைய சொந்த வரிகளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பிறருடைய பயோடேட்டாவில் இருந்து எடுத்து எழுதுகிறீர்கள் என்றால், ஒரு முறைக்குப் பல முறை நீங்கள் அந்த வரிகளுக்கு உரிய ஆள் தானா? எனத் தனக்குத் தானே கேட்டு முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் நேர்காணலுக்குப் போகும் போது மறக்காமல் பயோடேட்டாவை எடுத்துச் செல்லுங்கள்.

2. ஆப்டிடியூட் தேர்வு

தேவைக்கு அதிகமான அளவில் நேர்காணலுக்கு ஆட்கள் வரும்போது நிறைய நிறுவனங்கள் ஆப்டிடியூட் டெஸ்ட் என்னும் தேர்வை வைக்கின்றன. ஆப்டிடியூட் டெஸ்ட் என்னும் பெயர் தான் நமக்குப் புதியதே தவிர, இதில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் நமக்குப் பழையவை தாம்! ஆமாம்! நாம் பள்ளிக்கூடத்தில் படித்த கணக்குத் தான் பெரும்பாலும்!

 • '4 பேர் சேர்ந்து ஒரு வீட்டை 40 நாட்களில் கட்டினால் 3 பேர் அதே வீட்டைக் கட்ட எத்தனை நாட்கள் ஆகும்?'
 • 'ஒரு தொடர்வண்டி ஒரு கி.மீ நீளமுள்ள பாலத்தை 50 நொடிகளில் கடந்தால், அவ்வண்டியின் எவ்வளவு வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது'
 • 'இரண்டு நாணயங்களைச் சுண்டி விடும் போது தலை கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?'

என்பன போன்ற கேள்விகள் தான் அங்கு கேட்கப்படும். இக்கேள்விகளைத் தயாரிப்பதற்கென்றே பல புத்தகங்கள் கிடைக்கின்றன. நீங்கள் பழைய புத்தகக் கடைகளில் கூட அப்புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம். ஆர். எஸ். அகர்வால் எழுதிய 'குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட்' என்னும் புத்தகம் பலரும் வாங்கும் புத்தகம். அப்புத்தகத்தைப் படித்தாலே போதுமானது.

சில நிறுவனங்களில் இவ்வகைக் கணக்குகளோடு சேர்த்து விடுகதைகளையும் தேர்வில் வைத்திருப்பார்கள். எளிமையான விடுகதைகளாகத் தான் இருக்கும்.

சில எடுத்துக்காட்டுகள்:

 • ஒரு கூடையில் 3 வெள்ளைப் பந்துகள், 3 பச்சைப் பந்துகள், 3 சிவப்புப் பந்துகள் உள்ளன. நீங்கள் இரண்டு பந்துகளை எடுக்கும் போது அவை இரண்டுமே சிவப்பாக இருக்க வாய்ப்புகள் எத்தனை?
 • ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவதாக ஓடி வருபவரை முந்துபவர் எத்தனையாவது இடத்தில் ஓடுவார்?

என்பன போன்ற எளிமையான கேள்விகள் தாம் இருக்கும். வேறு சில நிறுவனங்களில் ‘வெர்பல்’ எனப்படும் ஆங்கிலம் அறி தேர்வு நடத்துவார்கள். ஒரு ஆங்கில வார்த்தையைக் கொடுத்து அதற்கான அர்த்தம் என்ன என்பதற்கு 4 விடைகள் கொடுக்கப் பட்டிருக்கும். அவற்றுள் சரியானதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கும் நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன.

இந்தத் தேர்வில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், தேர்வு மிக எளிதாகத் தான் இருக்கும்; ஆனால் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் நாம் சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 40 கேள்விகளை ஒரு மணிநேரத்தில் முடிக்கச் சொல்வார்கள்.; சில நிறுவனங்களில் 60 கேள்விகளை 1.5 மணிநேரத்தில் எழுதச் சொல்வார்கள். எனவே, எளிமையான கேள்விகள் தானே கேட்கிறார்கள், நாம் பள்ளியில் படித்ததைத் தானே கேட்கிறார்கள் என்று தயாரிக்காமல் வந்து விடக் கூடாது. ஒழுங்கான தயாரிப்பு இல்லை என்றால் நேரப் பற்றாக்குறையில் சிக்கிக்கொள்வீர்கள். எனவே, இந்தத் தேர்வுக்குத் தினமும் ஒரு மணி நேரமோ, இரண்டு மணிநேரமோ ஒதுக்கிப் பயிற்சி எடுக்க வேண்டும்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் - இவ்வகைத் தேர்வுகளில் 'பாஸ் / பெயில்' என்பதெல்லாம் கிடையாது. இந்தத் தேர்வுகள் நடத்துவதன் முக்கிய நோக்கம் - அதிக எண்ணிக்கையில் வந்திருப்போரை வடிகட்டி எண்ணிக்கையைக் குறைப்பது மட்டுமே! எனவே நீங்கள் எவ்வளவு நன்றாகத் தேர்வு எழுதியிருந்தாலும் உங்களுடன் தேர்வு எழுதும் சக போட்டியாளர்கள் உங்களை விட நன்றாக எழுதியிருந்தால் நீங்கள் வடிகட்டப்படலாம். இதை மறந்து விடாதீர்கள். எனவே, ஆப்டிடியூட் தேர்வில் கூடிய வரை அதிக மதிப்பெண் எடுக்க முயலுங்கள்.

ஒரு நிறுவனத்திற்கு உங்களுடைய பயோ டேட்டாவை அனுப்புகிறீர்கள். அவர்கள் அதைத் தேர்ந்தெடுத்து, ஆப்டிடியூட் தேர்வு எழுதக் கூப்பிடுகிறார்கள் என்றால்,

 • அந்த நிறுவனத்தில் உங்களுடைய உறவினர்களோ கல்லூரி சீனியர்களோ வேலை பார்க்கிறார்களா என்று பாருங்கள். அப்படி யாராவது இருந்தால், அவர்களிடம் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆப்டிடியூட் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் ஏதும் கிடைக்குமா? என்று விசாரியுங்கள்.
 • அப்படி யாருமே இல்லாத சூழலில், இணையத்தில் சென்று 'நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு ஆப்டிடியூட் தேர்வுக்கான முந்தைய தாள்களைத் தேடுங்கள்.

இப்படித் தேடி எடுத்து அந்தந்த நிறுவனங்களுக்கு ஏற்பத் தயாராகுங்கள். வெறுமனே கண்மூடித்தனமாக, ஒரே புத்தகத்தையோ ஒரே ஒரு இணையத்தளத்தையோ பின்பற்றாதீர்கள்.

3. நேர்காணல்

இந்தச் சுற்று தான் ரொம்ப முக்கியமான சுற்று. இங்குத் தான் நீங்களும் நிறுவன அதிகாரிகளும் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கப் போகிறீர்கள். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். எனவே நல்ல உடை உடுத்தி நேர்காணலுக்குச் செல்லுங்கள். இங்கு நினைவில் கொள்ள வேண்டியவை:

சரியா நேரத்தில் செல்லுங்கள்:

சரியான நேரத்திலோ முடிந்தால் அதற்கு முன்னதாகவோ நேர்காணலுக்குச் செல்லுங்கள். கடைசி நிமிடத்தில் கிளம்பாதீர்கள்; போக்குவரத்து நெருக்கடி போன்ற ஏதாவது ஒன்றில் மாட்டிக்கொண்டீர்கள் என்றால் அதுவே உங்களுடைய மன நிலையை மாற்றிவிடும். சரியில்லாத மன நிலையுடன் நேர்காணலில் இருப்பதே பாதித் தோல்வியைக் கொடுத்து விடும்.

அலைபேசிகளை அமைதியாக்குங்கள்:

நேர்காணல் அறைக்குள் போவதற்கு முன், உங்கள் செல்போனை அமைதி நிலை ('சைலன்ட்')க்குக் கொண்டு வந்து விடுங்கள். இல்லாவிடில் முக்கியமான தருணத்தின் போது தேவையில்லாத அழைப்புகள் வந்து அதுவே உங்களுக்குத் தொல்லையாக அமையலாம்.

பயோடேட்டா ரொம்ப முக்கியம்

கையோடு உங்கள் பயோடேட்டாவை எடுத்துச் செல்லுங்கள். கையில் இருக்கும் பயோடேட்டாவில் உங்களுடைய லேட்டஸ்ட் தகவல்கள் அனைத்தும் இருக்கின்றனவா என்று ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.

 • நேர்காணலின் முதல் கேள்வி பெரும்பாலும் 'உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்' என்பதாகத் தான் இருக்கும். அக்கேள்விக்குத் தயாராகச் செல்லுங்கள்.
 • நேர்காணல் என்பது தேர்வு இல்லை; நேர்காணல் என்பது ஒரு கலந்துரையாடல் தான். வந்திருப்பவர் - நம்முடைய நிறுவனத்திற்கு ஏற்றவரா, வேலைக்கு ஏற்றவரா, வந்திருப்பவரை வைத்து வேலை வாங்க முடியுமா, நீண்ட காலம் நம்மோடு இருப்பாரா என்பனவற்றையே நிறுவனங்கள் சோதிக்கின்றன. எனவெ, எந்தக் கேள்விக்கும் பொய்யான பதிலைச் சொல்லி விடாதீர்கள். நீங்கள் சொல்வது பொய் என்று தெரிந்து விட்டாலே உங்களைப் பெரும்பாலும் நிராகரித்துவிடுவார்கள்.

ஏன்? ஒரு வேலைக்காகப் பொய் சொல்லத் தயங்காத நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாளை அலுவலகத்திலும் பொய் சொல்லத் தொடங்குவீர்கள். அது அலுவலகத்தின் நிர்வாகத்தையே குலைத்து விடும். தவிர்க்க முடியாத நேரங்களில், உண்மையை மறைக்கலாம்; தப்பில்லை. ஆனால் பொய் சொல்லக்கூடாது.

திரும்பவும் சொல்கிறேன், நேர்காணல் என்பது கேள்விகள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட தேர்வு இல்லை. நீங்கள் சொல்லும் முதல் பதிலில் இருந்து தான் அடுத்த கேள்வியே கேட்பார்கள். எனவே ஒவ்வொரு பதிலையும் கவனமாகச் சொல்லுங்கள். பிறரைக் கவர வேண்டும் என்பதற்காகப் பதில் சொல்லாதீர்கள். நேர்காணலின் போது உங்கள் பொழுதுபோக்கு என்ன என்று கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உண்மையில் உங்களுடைய பொழுது போக்கு என்னவோ அதைச் சொல்லுங்கள். உங்களுடைய பொழுதுபோக்கு படம் பார்ப்பதாக இருக்கலாம். அது அவ்வளவு நல்ல பதில் இல்லை என நினைத்துக் கொண்டு, 'புத்தகம் படிப்பது' என நீங்கள் சொல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நேர்காணல் நடத்துபவர், 'என்னென்ன மாதிரியான புத்தகங்கள் படிப்பீர்கள்? இலக்கியமா? வரலாறா?, தமிழா? ஆங்கிலமா?' என அடுத்துக் கேட்கும் கேள்விகளில் வசமாக மாட்டிக்கொள்வீர்கள். எனவே, எக்காரணம் கொண்டும் தவறான பதில்களைக் கவர்வதற்காகச் சொல்லாதீர்கள்.

உண்மையைச் சொல்லுங்கள்:

நேர்காணல் நடத்துபவர், 'தமிழக அரசியல்' பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? என்று கேட்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அதைச் சொல்லுங்கள். எல்லாம் தெரியும் என்று சொல்லி மாட்டிக்கொள்வதை விட, 'பத்துக்கு நாலு மார்க் போடலாம் சார்' என்று சொல்லும் பதில் மேலானது.

நேர்காணல் நடத்துபவரைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்:

நேர்காணல் நடத்துபவர், அடிப்படையான சில கேள்விகளை உங்களிடம் கேட்டுக் கொண்டே வருகிறார் என்றால், அவருக்கும் அடிப்படை தான் தெரியும் எனத் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள். உங்கள் நிலை அறிந்து கூட, அவர் அடிப்படையான கேள்விகளைக் கேட்டிருக்கலாம்.

விரிவாக்கங்களைப் பதிலாகச் சொல்லாதீர்கள்:

சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் நேர்காணல் நடக்கிறது. 'OOPs' என்றால் என்ன? என்று கேட்கிறார்கள்; அதற்கு 'Object Oriented Programming' என்று விரிவாக்கம் சொல்லக்கூடாது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 'SPB' என்பவர் யார்? என்று ஒருவர் உங்களிடம் கேட்டால் 'S.P. பாலசுப்பிரமணியம்' என்றா சொல்வீர்கள்? அவர் ஒரு பாடகர், பல படங்களில் நடித்திருக்கிறார், இசையமைத்திருக்கிறார் என்று உங்களுக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்வீர்கள் அல்லவா? அதே போல் தான் நேர்காணலும்! விரிவாக்கங்களை மட்டும் பதிலாகச் சொல்லவே கூடாது.

ஒரு வரி / ஒரு வார்த்தை பதில்கள் - கூடவே கூடாது:

முன்னரே சொன்னது போல, நேர்காணல் என்பது ஒரு கலந்துரையாடல். ஒரு வரி பதில்களோ, ஒரு வார்த்தை பதில்களோ அந்தக் கலந்துரையாடலை நீர்த்துப் போக வைத்து விடும். கூடியவரை விரிவான விளக்கங்களைக் கொடுக்க முயலுங்கள்.

நிறுவனம் பற்றித் தெரிய வேண்டும்:

நீங்கள் எந்த நிறுவனத்திற்குப் போகிறீர்களோ, அந்த நிறுவனத்தைப் பற்றிய அடிப்படை விவரங்கள் உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் மதுரைக்குப் போகும் வண்டியில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பக்கத்தில் வந்து உட்கார்பவர், 'தம்பி - எந்த ஊருக்குப் போறீங்க' என்கிறார். மதுரைக்கு என்கிறார்கள். 'என்ன விசயமா?' என்கிறார். தெரியாது; அப்பா போகச் சொன்னார் என்கிறீர்கள். எத்தனை நாள் மதுரையில் இருப்பீர்கள் என்கிறார்; தெரியாது என்கிறீர்கள். கேள்வி கேட்பவர் 'பையனுக்கு விவரம் போதாது' என்று கொஞ்ச நேரத்தில் பேசாமல் ஒதுங்கிக்கொள்வார். இதே போல் தான் நேர்காணலும்! நேர்காணல் எடுப்பவர் 'ஏன் எங்க நிறுவனத்திற்கு வந்திருக்கீங்க', 'எங்க நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்' என்பன போன்ற கேள்விகளைக் கேட்பார். எனவே நிறுவனத்தின் பெயர், அவர்களுடைய முக்கிய தொழில், தலைவர் பெயர், தலைமையிடம், குறிக்கோள் ஆகியவற்றைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இது போன்ற கேள்விகளுக்கு எவ்வளவு புதுமையாகப் பதில் சொல்ல முடியும் என்று யோசித்து வைத்துக்கொள்ளுங்கள்.

கடினமான கேள்விகள் சில:

 • நீங்கள் எத்தனை ஆண்டுகள் எங்கள் நிறுவனத்தில் இருப்பீர்கள்?
 • வேறொரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தால் அங்கு போய் விடுவீர்களா?
 • இங்கு உங்களைச் சக்கையாகப் பிழிந்து விடுவார்கள். பரவாயில்லையா?
 • இன்னும் மூன்று ஆண்டுகளில் என்னவாக விரும்புகிறீர்கள்?
 • எங்களிடம் இரண்டாண்டு காலம் ஒப்பந்தம் ('பாண்டு') இருக்கிறது. அதற்கு ஒத்துக்கொள்கிறீர்களா?

போன்ற கேள்விகள் பல இடங்களில் கேட்கப்படும். நண்பர்களுடன் இணைந்து இக்கேள்விகளை எப்படி எதிர்கொள்ளலாம்? என்று முடிவு செய்யுங்கள். பொய் சொல்லக்கூடாது; ஆனால், உண்மையை மறைக்கலாம் என்னும் விதி இங்கும் பொருந்தும். மறந்து விடாதீர்கள்.

கடைசியாக ஒரு கேள்வி:

நேர்காணலின் முடிவில், 'நீங்கள் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா?' என்று பல இடங்களில் கேட்பார்கள். அதற்கும் தயாராக இருங்கள். நீங்கள் போகும் நிறுவனத்தைப் பற்றித் தெரிந்து அதைப் பற்றிய கேள்வியோ உங்கள் வேலை பற்றிய கேள்வியோ கேட்கலாம். முடிந்தவரை எதிர்மறைக் கேள்விகளைத் தவிர்த்து விடுங்கள்.

 • நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் வேலைக்குச் சேர்வதற்கு முன் ஏதாவது படித்து வர வேண்டுமா?
 • உங்கள் நிறுவனம் பல நாடுகளில் இருக்கின்றதே! பல நாடுகளை நிர்வகிப்பது கஷ்டமான வேலையாக இருக்குமே! எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

என்பன போன்ற கேள்விகளைக் கேட்கலாம்.

நாளும் பயிற்சி - நிறைவில் வெற்றி

இப்போது நாம் பார்த்த அனைத்தையும் தினமும் பார்க்க வேண்டும். அடுத்த வாரம் தானே நேர்காணல் இருக்கிறது; அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மந்தமாக இருந்து விடக்கூடாது. முயற்சியும் பயிற்சியும் மட்டுமே வெற்றியைத் தரும். மறந்து விடாதீர்கள். 

பெரும்பகுதி நீர் கடலிலிருந்தே மேலேழும்புகிறது. ஆறுகளின் பிறப்பிடமாக மலைகள் இருக்கின்றன. எந்த ஆறும் சமவெளிகளில் பிறப்பெடுப்பதில்லை. கடல் மட்டத்திற்கு மேலே ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கும் வெப்பநிலை 10 செல்சியஸ் வீதம் குறைகிறது. மழை மேகங்கள் மலைகளில் மோதி மேலெழும்போது குளிர்ந்து மழையைப் பொழிகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் நீலகிரி மலை, ஆனைமலை, பழனி மலை, கொடைக்கானல் மலை, குற்றாலம் மலை, மகேந்திரகிரி மலை, அகஸ்தியர் மலை, ஏலக்காய் மலை, சிவகிரி மலை மற்றும் வருஷநாடு மலையும்; கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் ஜவ்வாது மலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, பச்சைமலை, கொல்லிமலை, ஏலகிரி மலை மற்றும் செஞ்சி மலை; தொடர்ந்து இரத்தினகிரி மலை, வள்ளி மலை, சென்னி மலை, சிவன் மலை, கஞ்சமலை மற்றும் தீர்த்த மலை என பலவும் இருக்கின்றன.

thalaiyanai dam 620

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலாகப் பொழியும் வடகிழக்குப் பருவக்காற்று மழை சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி, செங்கற்பட்டு, தென்னாற்காடு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 150 செ.மீ முதல் 200 செ.மீ வரையிலான மழைப் பொழிவையும், திருச்சிராப்பள்ளி, சேலம், ஈரோடு, மதுரை, இராமநாதபுரம் மற்றும் வடஆற்காடு மாவட்டங்களில் 100 செ.மீ முதல் 150 செ.மீ வரையிலான மழைப் பொழிவையும் கொடுக்கிறது. ஜுன் முதல் செப்டம்பர் வரையிலாகப் பொழியும் தென்மேற்குப் பருவக்காற்று மழை நீலகிரி, கன்னியாகுமரி, கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகமான மழையைக் கொடுக்கிறது. 2007-2008 மழைப்பொழிவின் படி காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் மிக அதிக மழைப்பொழிவாக 1400 மி.மீ-கு மேல் மழையைப் பெற்றுள்ளன. திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் அதிக மழைப்பொழிவாக 1200 மி.மீ முதல் 1400 மி.மீ வரை மழையைப் பெற்றுள்ளன. புதுக்கோட்டை, விருது நகர், சிவகங்கை, தஞ்சாவூர், சேலம், இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் வேலூர் மாவட்டங்கள் மிதமான மழைப்பொழிவாக 1000 மி.மீ முதல் 1200 மி.மீ வரை மழையைப் பெற்றுள்ளன.

ஆரணியாறு, கூவம் ஆறு, பாலாறு, செய்யாறு, வராகு ஆறு, பெண்ணையாறு, மணிமுத்தாறு, குமுக்கி ஆறு, கொள்ளிடம் ஆறு, காவிரி ஆறு, நொய்யல் ஆறு, அமராவதி ஆறு, வெட்டாறு, வெள்ளாறு, வைகை ஆறு, குண்டாறு, வைப்பாறு, சித்தாறு, தாமிரவருணி ஆறு, கொற்றலையாறு, கெடில ஆறு, குடமுருட்டி, உப்பாறு, பவானி ஆறு, சிறுவானி ஆறு, சுருளியாறு மற்றும் மஞ்சலாறு என ஆறுகளும்; சாத்தனூர் அணை, மேட்டூர் அணை, பவானிசாகர் அணை, வைகை அணை, பூண்டி நீர்த்தேக்கம், பிளவக்கல் அணை, பேச்சிப்பாறை அணை, பைக்காதா அணை, செஞ்சி கல்வராயன் அணை, கல்லணை, பாபநாசம் அணை, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை மற்றும் பரம்பிக்குளம் அணை என அணைகளும்;

பழவேற்காடு ஏரி, பேரிஜம் ஏரி, கொடைக்கானல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, ஊட்டி ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, சிங்காநல்லூர் ஏரி, வாலாங்குளம் ஏரி, வீராணம் ஏரி, வால்பாறை ஏரி, பெருஞ்சாணி ஏரி, பேச்சிப்பாறை ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி, அம்பத்தூர் ஏரி, கழிவேலி ஏரி மற்றும் போரூர் ஏரி என ஏரிகளும்; ஒகேனக்கல் அருவி, குற்றாலம் அருவி, பைக்காரா அருவி, சுருளி அருவி மற்றும் கும்பக்கரை அருவி என அருவிகளுமாக மொத்தத்தில் தமிழக நீர் ஆதாரங்களாக 17 ஆறுகள், 15 ஏரிகள், 71 நீர்த்தேக்கங்கள், 40,319 குளங்கள், 21,205 குட்டைகள், 2,395 கால்வாய்கள், 1,62,11,391 தரைக் கிணறுகள் மற்றும் 2,87,304 ஆழ்குழாய் கிணறுகள் என்று பட்டியல் மிக நீண்டதாக இருக்கிறது.

சொர்ணவாரி - சித்திரையில் நடவு நட்டு புரட்டாசியில் அறுவடை செய்யப்படுவது சித்திரைப் பட்டம். இதற்கு ‘கரீப்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. சம்பா பருவம் - ஆடி மாதத்தில் விதைத்து தையில் அறுவடை செய்யப்படுவது ஆடிப்பட்டம். நவரைப் பருவம் - கார்த்திகையில் விதைத்து சித்திரையில் அறுவடை செய்யப்படுவது கார்த்திகைப் பட்டம். இதற்கு ‘ரபி’ என்று மற்றொரு பெயரும் உண்டு. இப்படியாக எல்லா காலங்களிலும் விவசாயம் செய்ய ஏற்ற சூழல் நிலவும் நாடு இந்தியா அதிலும் குறிப்பாக தமிழகம்.

- மு.நாகேந்திர பிரபு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)