english android'இங்கிலீஷ் பேச வராது, என்ன பண்றது?', 'இவ்ளோ நாள் கழிச்சு எங்கே போய் இங்கிலீஷ் படிக்கிறது? ஆயிரத்த குடு, ரெண்டாயிரத்த குடு' னு பணம் தான் வீணாகும்' இப்படி நினைப்பவரா நீங்கள்?  உங்கள் இங்கிலீஷ் வாத்தியார் உங்க கூடவே இருந்தா எப்படி இருக்கும்?  அதுவும் நீங்கள் விரும்பும் நேரத்தில் தமிழ் வழியாகவே உங்களுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்தால்? அந்த வேலையைத் தான் செய்கிறது கல்ச்சர் அல்லீயின் 'ஹலோ இங்கிலீஷ்' (Hello English) ஆண்டிராய்டு செயலி, அதுவும் இலவசமாக.  

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம், அதுவும் அடிப்படை இலக்கணத்தில் இருந்து.  இலக்கணம் என்றவுடன் பயந்து விடாதபடிக்கு, அன்றாடம் நாம் பேசும் வாக்கியங்களில் இருந்தே ஆங்கில இலக்கணம்.  அதுவும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் பல எடுத்துக்காட்டுகள் கொடுத்து நமக்கும் சின்னச்சின்ன தேர்வுகள் வைத்து என்று ஆங்கிலம் பேசும் நம்பிக்கையை விதைக்கிறது 'ஹலோ இங்கிலீஷ்'  நீங்கள் பதில் சொல்லும் ஒவ்வொரு கேள்விக்கும் மார்க் உண்டு.  அந்த மார்க்கை வைத்து - உலக அளவில், உள்ளூர் அளவில் நீங்கள் எத்தனையாவது ரேங்கில் இருக்கிறீர்கள் என்றும் பார்த்துக் கொள்ளலாம்.  இலக்கணம் தானே கற்றுக்கொள்ள முடியும் - பேசுவதற்கு என்ன செய்வது என்று யோசிக்க வேண்டிய தேவையே இல்லை. உங்களுடன் உரையாடி, நீங்கள் சரியாக உச்சரிக்கிறீர்களா என்று பார்க்கும் தேர்வுகளும் இதில் உண்டு.  

சரியான ஸ்பெல்லிங் எழுதுகிறீர்களா என்று பார்ப்பதற்குத் தனித் தேர்வு, தினமும் செய்தித்தாளில் வரும் செய்தியில் இருந்து ஓர் ஆங்கில வார்த்தை, சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள தேநீர்க் கோப்பை தேர்வுகள், திருமணத்திற்கு எப்படி வாழ்த்து சொல்ல வேண்டும், வேலைக்கு வர நேரமாகி விட்டது என்பதை எத்தனை வழிகளில் சொல்லலாம், பூண்டை நசுக்குவதை எப்படிச் சொல்வது, தேங்காய் துருவுவதற்கு ஆங்கிலத்தில் என்ன போன்ற பல்வேறு தினசரி டிப்ஸ் என்று முழுமையான ஆங்கில வழிகாட்டியாகவே இயங்குகிறது ஹலோ இங்கிலீஷ்.  இவை தவிர்த்து, ஆடியோ, வீடியோ, விளையாட்டுகள், புத்தகங்கள் என்று பல வழிகளிலும் உங்கள் ஆங்கிலத் திறமையை வளர்க்கும் வேலையைச் செய்கிறது ஹலோ இங்கிலீஷ்.  இவ்வளவு நல்ல இந்தச் செயலியை இணையம் இல்லாமல் ஆப்லைனிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் இன்னொரு சிறப்பு.  இதைத் தரவிறக்க http://tinyurl.com/l7yufem

(புதிய வாழ்வியல் மலர் – 2016 ஜூலை 16-31 இதழில் வெளியான கட்டுரை)