அண்மைப் படைப்புகள்

கீற்றில் தேட

இந்த தலைப்பில் கற்றளி என்கிற வார்த்தையைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். கோயில் கட்டிடக் கலை குறித்து தெரிந்தவர்களுக்கும், தமிழகத்தில் கோயில்களின் பரிணாம வளர்ச்சி குறித்து தெரிந்தவர்களுக்கும், பல்லவர்களின் வரலாறு தெரிந்தவர்களுக்கும் இந்த வார்த்தை மிகப் பரிச்சயமாண ஒன்று. சதுரமாக அறுத்த கற்களைக் கொண்டு கட்டும் கற்கோயில்களுக்கு கற்றளி என்று பெயர்.

தமிழகத்தின் முதல் கற்றளி கோயிலை - அதாவது முதன் முதலாக பெரிய பெரிய பாறைக் கற்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்துக் கட்டிய கோயில் – குறித்த தெரிந்து கொண்ட நான் அதை தேடிப் போன பயணக் கதையைத்தான் இங்கே பேசலாம் என்று இருக்கிறேன். கதையா அப்ப நல்ல சுவாரசிய சங்கதியெல்லாம் இருக்கும்தானே என்றெல்லாம் பேராசை பட்டுத் தொலைக்காதீர்கள். தமிழக வரலாற்றின் மிக முக்கிய மைல் கல்லான ஒரு வரலாற்றுச் சின்னம் எப்படி நாதியற்றுக் கிடக்கிறது என்பதற்கான சிறந்த உதாரணம் - எனது அதைத் தேடிய பயணம்.

இந்தத் தேடல் பயணம் பத்து, பதிமூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த ஒன்று. பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது, மூன்றாம் ஆண்டு முடிவின்போதான மே மாத விடுமுறையில் அந்தப் பயணத்தை எனது நண்பன் ஒருவனுடன் தொடங்கினேன். பயணம் என்றால் மிக நீண்ட பயணமெல்லாம் இல்லை. தாம்பரத்தில் பேருந்தைப் பிடித்து காஞ்சிபுரத்தில் போய் இறங்கியதைத்தான் அப்படி கொஞ்சம் ‘பில்டப்பாக’ சொன்னேன். என்னுடன் வந்த நண்பனுக்கு வரலாறு, கோயில் கட்டிடக் கலை குறித்த சங்கதியெல்லாம் தெரியாத விசயங்கள். நான் கூப்பிட்டதற்காக என்னுடன் வந்தான். அன்றைய தினம் முழுவதும் என்னுடன் மே மாத வெயிலில் மனித கருவாடாக வேண்டும் என்பது அன்றைய அவனுடைய இராசி பலனாக இருந்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் முதல் கற்றளி, கூரம் என்கிற ஊரில் இருக்கிறது என்பதையும் அது காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் போகும் பிரதான சாலையில் கொஞ்சம் உள் வாங்கி இருக்கும் சிறிய கிராமம் என்பதையும், மா.இராசமாணிக்கனாரின் ‘பல்லவர் வரலாறு’ என்ற வரலாற்று ஆராய்ச்சிப் புத்தகத்தின் மூலம்தான் அறிந்து கொண்டிருந்தேன். அது ஒரு சிறிய சிவன் கோயில் என்பதையும் இராசமாணிக்கனார் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மேல் என்ன அங்க அடையாளங்கள் வேண்டும்!

காஞ்சிபுரத்தில் போய் இறங்கிவிட்டோம். அப்போதெல்லாம் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் டீக் கடைகளும், ஆட்டோ ஓட்டுனர்களும்தானே GPRS சேவையைத் தருபவர்கள். எங்களுக்கு வேண்டிய தகவலைப் பெற ஒரு டீக் கடையில் டீயை வாங்கியபடி கூரம் கிராமத்திற்கான பேருந்து குறித்த தகவலைக் கேட்டோம்.

இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும் தம்பி. ஒரே பஸ்சுதான். காலையில் ஒரு வாட்டி ஊருக்குள்ள போகும். அதோட சாயங்காலம் ஊருக்குள்ள போகும் என்றார். அடக் கொடுமையே! அப்ப காலையில் ஊருக்குள் போனால் அத்தோடு சாயங்காலம்தான் வெளியே வர முடியுமா? கூரம் சிவன் கோயிலோடு சேர்த்து காஞ்சி கைலாசநாதர் கோயிலையும் பார்ப்பது என்பது எனது அன்றைய திட்டம். இவர் சொல்வதைப் பார்த்தால் கூரம் கிராமத்திலேயே ஒருநாள் கழிந்துவிடுமே. சரி தமிழகத்தின் முதல் கற்றளிக்காக ஒரு முழு நாளை ஒதுக்கினால்தான் என்ன என்கிற முடிவுடன் இரண்டு மணி நேரத்தை காஞ்சி வரதராஜ (பெரிய) பெருமாள் கோயிலில் கழித்துவிட்டு கூரம் பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம்.

ஊரைச் சுற்றியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் வெளிதான். பெரிய ஆலமரத்தடியை ஒட்டிய ஒரு ஓட்டு வீட்டில் டீக் கடை. அதுதான் கூரம் பேருந்து நிறுத்தம். ஊருக்குள் இறங்கியது எங்களுடன் சேர்த்து மூன்று நான்கு பேர்தான். நாங்கள் இறங்கும்போது கண்டக்டர், "இன்னும் அரமணி நேரம் பஸ்சு ஊர்க்காரங்களுக்காக நிக்கும். அதுக்குள்ள திரும்பி வந்துருவீங்களா. இல்ல சாயங்காலம்தான் பஸ்சு வரும்" என்றார். தமிழகத்தின் முதல் கற்றளியை அரைமணி நேரத்தில் பார்த்துவிட்டு வருவதாவது! ஆனால் கண்டக்டருக்கு ஏற்கனவே அந்த கூரம் சிவன் கோயிலைத் தேடி வந்தவர்களைப் பார்த்த அனுபவம் இருந்திருக்கிறது என்பதை அடுத்த அரைமணி நேரம் கழித்துத்தான் நாங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.

அந்த ஆலமரத்தடி டீக் கடைக்கு அருகில் ஊருக்குள் செல்லும் பாதை. ஒற்றையடிப் பாதையாக இருக்கும்போல என்று கற்பனை செய்ய வேண்டாம். நல்ல பெரிய பாதை, இரண்டு வாகனங்கள் அருகருகே செல்லக் கூடிய அளவிற்கான பாதை. தேர் ஓடும் பாதை அப்படித்தானே இருக்கும். இராசமாணிக்கனாரின் எழுத்துக்களில் வருணிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் கற்றளியை நேரில் காணப் போகிறோம் என்கிற ஆர்வத்துடன் ஊருக்குள் சென்றோம். ஊருக்குள் இருந்தவர்கள் எல்லாம் உடனே எங்களை பப்பரக்கா என்று வேடிக்கை பார்த்திருப்பார்களாக்கும் என்று அடுத்த கற்பனைக்கு செல்ல உங்களுக்கு நான் அனுமதி தரப் போவதில்லை. காரணம் அப்படியெல்லாம் நடக்கவேயில்லையே!

ஊரின் மையத்தில் ஒரு மிகப் பெரிய திருமால் கோயில் (திருமால் கோயில் என்றுதான் கவனம்). விஜயநகர மற்றும் நாயக்கர் கால கோயில் கட்டிக் கலையில் கட்டப்பட்ட கோயில் அது. கோயில்களின் கட்டிக் கலையை வைத்தே அதன் காலத்தையும், அது எந்த பேரரசு காலத்திய கட்டிக் கலை என்பதையும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு கோயில் கட்டிடக் கலையிலும் வரலாற்றிலும் பரிச்சயம் உண்டு. கோயில்களில் இருக்கும் கல்வெட்டு எழுத்துக்களின் அமைப்பைக் கொண்டு (அதாவது அது தமிழியா, வட்டெழுத்தா, பிராகிருதமா) அந்த கோயில் கட்டப்பட்ட உத்தேச காலகட்டத்தை அறிந்து கொள்ளும் பரிச்சயமும் உண்டு. (இந்த பயிற்சிக்கு எனக்கு உதவியவைகள் நடன காசிநாதன் போன்ற வரலாற்று அறிஞர்களின் புத்தகங்கள்). நிச்சயமாக அது நான் தேடிவந்த கோயில் கிடையாது. அந்த கோயிலுக்கு வெளியே இரண்டு நீண்ட பெரிய தெரு. தெருவின் இரண்டு பக்கங்களும் வீடுகள். அவ்வளவுதான் மொத்த ஊரும்.

வேறு கோயில் இருப்பதற்கான எந்த புற அடையாளத்தையும் காணவில்லை. அந்த பெரிய கோயில் அருகில் இருந்த ஒருவரைக் கேட்டேன். இங்க சிவன் கோயில் ஒன்னு இருக்கு. அதுக்கு எப்படி போகணும் என்று. இதுதான் தம்பி அந்தக் கோயில் என்று பதில் வந்தது. இது என்னடா சோதனை. தவறான ஊருக்கு வந்துவிட்டோமா அல்லது இராசமாணிக்கனார் தவறாக ஏதும் குறிப்பிட்டுவிட்டாரா. நிச்சயமாக இராசமாணிக்கனார் தவறாகக் குறிப்பிட வாய்ப்பே இல்லை. நான்தான் தவறான இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்கிற நினைப்போடு, கண்ணில் பட்ட மேலும் இருவரைக் கேட்டோம். அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக 'சின்ன சிவன் கோயிலுங்க அது' என்று அங்க அடையாளமெல்லாம் சொல்லி, எங்களுக்குத் தெரிஞ்சு அப்படி சின்ன கோயிலெல்லாம் இங்க இல்லயே என்று பதில் வந்தது.

கூட வந்த நண்பன், "மச்சி கிளம்பு... நாம தப்பான ஊருக்கு வந்துட்டோம் போல. பஸ்சு நின்னுகுட்டுத்தான் இருக்கும்... வா போயிடலாம். இல்ல சாயங்காலம் வரைக்கும் இங்கதான் கிடக்கனும்" என்றான். அதுவும் சரிதான். தமிழகத்தின் முதல் கற்றளியை இன்று பார்க்க குடுப்பினை இல்லை போல என்று ஆலமரத்தடி டீக்கடைக்கு செல்லும் பாதையில் ஊரைவிட்டு வெளியே நடையைக் கட்டினோம். ஊருக்கு உள்ளே வரும் அந்தப் பாதையில் இடது புறமாக ஒரு வீடு இருந்தது. ஊருக்குள் வருபவர்களை முதலில் வரவேற்பதைப் போல இருந்தது அந்த வீடு. அந்த வீட்டில் உள்ளவர்களின் கண்களில் படாமல் யாரும் ஊருக்குள் சென்று விட முடியாது என்பதாக இருந்தது அந்த வீடு. வீட்டிற்கு வெளியே கணவனும் மனைவியுமாக இரண்டு பேர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

நண்பன் தாகம் எடுக்கிறது என்று அவர்களிடம் சென்று குடிக்க நீர் கேட்டான். உடனே அந்த அம்மையார் தண்ணீர் கொண்டு வர வீட்டிற்குள் சென்றார். அவருடைய கணவர் எங்களிடம் பேச்சுக் கொடுத்தார். நான் தமிழகத்தின் முதல் கற்றளியைப் பற்றியும், அது ஒரு சின்ன சிவன் கோயில் என்பதையும் அவருக்கு விளக்கிச் சொல்லி, "அந்தக் கோயில் இந்த ஊருலதான் இருக்குன்னே படிச்சேன்... அதான் பாத்துட்டு போகலாம்னு…..ஆனா….எதயும் காணல" என்றேன். பெரிய கோயிலை சுட்டிக்காட்டி "இங்க அந்த கோயில் ஒன்னுதான் இருக்கு" என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள் அந்த அம்மையார் எங்களுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்துவிட்டார். நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டிருப்பார் போலும். கணவரிடம், "ஏன் இந்தா பக்கத்துல ஒரு கோயிலு இருக்கே" என்றார். அதைக் கேட்டதும் அவரும் "அட ஆமா தம்பி.. தோ அங்க ஒரு இடிஞ்ச கோயிலு இருக்கு. அது கூட சிவன் கோயிலுதான்" என்றார்.

படக்கென்று அவர் சுட்டிக் காட்டிய திசைக்குப் போய் பார்த்தேன். அதேதான். நான் தேடி வந்த அதே அற்புதம்தான். இராசமாணிக்கனார் குறிப்பிட்டிருந்த அதே தமிழகத்தின் முதல் அதிசயம்தான். காலக் கொடுமையே! அந்த கோயிலின் நிலையைப் பார்த்தவுடன் தமிழனின் வரலாற்று பிரக்ஞை குறித்து புல்லரித்து விட்டது போங்கள். இந்த அழகில் அது தொல்லியல் துறையின் பராமரிப்பில் வேறு இருப்பதாக அறிவிப்புப் பலகை வேறு. பரமாரிப்பு என்கிற வார்த்தையைக் கிண்டல் செய்வதைப் போலிருந்தது கோயிலின் பராமரிப்பு. அரச மரத்தின் தடினமான வேர் கோயிலின் பிரஸ்தரப் பகுதியையும், பித்தி பகுதியையும் ஊடுருவிச் சென்றிருந்தது. (கோயில் கருவறையை சுற்றியிருக்கும் பகுதியை பித்தி என்பார்கள். பித்திக்கு மேல் பிரஸ்தர பகுதி. கோயிலின் அடியிலிருந்து முடி வரை ஆறு அங்கங்கள் உண்டு. அவை அதிட்டாணம், பித்தி, பிரஸ்தரம், கிரிவரம், கோபுரம் மற்றும் சிகரம். இந்த ஆறு அங்கங்களையும் உள்ளடக்கிய முழு உருவத்தை விமானம் என்பார்கள்.)

விமானத்திற்கு முன்பு ஒரு சிறிய முகப்பு மண்டபம். அவ்வளவுதான் அந்தக் கோயிலின் கட்டுமானம். விமானமும் அவ்வளவு பெரியதெல்லாம் இல்லை. முதல் கற்றளி முயற்சி என்பதால் அதன் உருவம் சிறியதாகத்தான் இருந்தது. சுமார் இரு நூறு வருடங்கள் கழித்து கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலின் முப்பாட்டான் இந்த கூரம் சிவன் கோயில். பித்திப் பகுதியிலும் அவ்வளவாக கோஷ்ட பஞ்சாச்சரங்கள் இடம் பெற்று இருக்கவில்லை. (கருவறையின் வெளி சுற்றுப் பகுதியில் இருக்கும் புடைப்பு சிற்பங்களையும், அது இருக்கும் அமைப்பையும் பஞ்சாச்சரங்கள் என்பார்கள். இதில் பல வகை உண்டு). கோயில் சிறியதாக இருந்தாலும் அவ்வளவு அழகாக இருந்தது. மூட்டப்பட்ட கேட்டிற்கு வெளியே சற்று தொலைவில் இருந்து பார்க்கும்போதே அதன் அழகு அள்ளியது. உள்ள போக முடியுமா என்று அவரைக் கேட்டேன். "போலாம் தம்பி ஆனா சாயங்காலம்தான் அய்யர் வருவார். அவருகிட்டதான் சாவி இருக்கு" என்றார்.

பிறகு சாயங்காலம் ஆகும் வரை அங்கேயே இருந்தோம். நாங்கள் எதிர்பார்த்திருந்த அய்யர் நான்கு மணி போல வந்தார். எங்களுக்கு அந்தக் கோயிலை அடையாளம் காட்டியவர், அய்யரிடம் நாங்கள் காலையிலிருந்து இந்தக் கோயிலைப் பார்ப்பதற்காக உட்கார்ந்திருப்பதை அவரிடம் சொன்னார். அப்படியா என்று ஆச்சரியத்துடன் ஐய்யர் கேட்டைத் திறந்துவிட்டார். கோயிலின் வளாகத்திற்குள் சென்று திருப்தியாக தமிழகத்தின் முதல் கற்றளியை சுற்றிப் பார்த்தேன். இந்தக் கோயில் கட்டப்பட்டபோது ஊரின் மையத்தில் இருந்திருக்கிறது. இப்போது ஊருக்கு வெளியில் இருக்கிறது. சாயங்காலம் வர வேண்டிய பேருந்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலிருந்ததால், இந்தக் கோயிலில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாமா என்று அய்யரிடம் கேட்டோம். "தாராளமா இருந்துட்டு போங்க தம்பி" என்று விட்டு அவர் ஊருக்குள் இருக்கும் பெரிய கோயிலுக்குப் போய்விட்டார்.

நானும், என் நண்பனும், தமிழகத்தின் முதல் கற்றளிக் கோயிலும் மட்டுமே அங்கே தனித்திருந்தோம். அட! அந்த அனுபவம். சுமார் ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்பு நம் முன்னோர்களால் கட்டப்பட்ட ஒரு கட்டடத்துடன் தனிமையில் இருக்கும் அந்த அனுபவம்! மாமல்லபுரம் ஆவணப் படம் எடுக்கும்போது இந்தக் கோயிலையும் அதில் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ஆனால் இந்த வருடம் செம்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப் பெருமாள் (பெரியது இல்லை) கோயில் மற்றும் கைலாசநாதர் கோயில் குறித்த ஆவணப்படம் எடுக்கலாம் என்று திட்டம். அப்போது இந்த கூரம் சிவன் கோயிலையும் ஆவணப் படுத்த வேண்டும் என்று கருதியிருக்கிறேன்.

(பின் குறிப்பு - சில ஆராய்ச்சியாளர்கள் முழுப் பாறையில் கோயிலாக செதுக்கப்பட்ட கட்டடக் கலையையும் கற்றளி என்று குறிப்பிடுவார்கள்.)

- நவீனா அலெக்சாண்டர்

Pin It

idaiyankudi church 500

கால்டுவெல்லின் நினைவிடம் என்பது அவர் கட்டிய தேவாலயமும், அதனையொட்டி அவர் வாழ்ந்திருந்த வீடும் சேர்ந்ததுதான். ஆலயத்தின் பின்புறத்தில் இருந்து பார்த்தால் அவர் வசித்த வீடு தெரிகிறது. இடையில் கால்டுவெல் நினைவு மேல்நிலைப்  பள்ளி இருக்கிறது.

கால்டுவெல் நீலகிரியிலிருந்து திருநெல்வேலி வரைக்குமான கால்நடைப் பயணத்தின்போது, செருப்பு அணியாமல் சென்றிருக்கிறார் என்பதை வாசித்திருக்கிறேன். அன்றைய தமிழக மக்களின் வாழ்நிலையை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்காக அவ்வாறு செய்திருக்கிறார். சூடு தாங்காமல் கால்கள் வெந்து, புண்ணான போதும், தொடர்ந்து செருப்பு போடாமலே நடந்திருக்கிறார்.

தேவாலயத்தின் முன்பு வண்டியை நிறுத்தியதும், அந்தப் பகுதியின் வெப்பநிலையையும், கால்டுவெல் அங்கு எப்படி வாழ்ந்திருப்பார் என்பதையும் உணர்ந்து கொள்ள செருப்பை வண்டியிலேயே விட்டுவிட்டு, வெறுங்காலுடன் இறங்கினேன்.

மதியம் இரண்டு மணி. காலையிலிருந்து சூரியன் வறுத்தெடுத்ததில், தரைப்பகுதி சூடான தோசைக்கல்லாக மாறி இருந்தது. முதல் அடி வைத்ததும், சுர்ரென பாதம் சுட்டது. பத்து அடிகளைக் கூட கடக்க முடியவில்லை. ஒரே ஓட்டமாக வண்டிக்குள் ஓடி, செருப்புகளை அணிந்து கொண்டேன். கால்டுவெல் அவர்களால் எப்படி இந்தப் பகுதிக்குள் வாழ்ந்திருக்க முடியும்?

idaiyankudi church 501

(தேவாலயத்தின் உட்புறம்)

அதை சமூகவியல் அறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் பின்வருமாறு கூறுகிறார்:

“தமிழ்நாட்டிலேயே திருச்செந்தூருக்கும் கன்னியாகுமரிக்கும் இடையிலுள்ள கடற்கரைப் பகுதி மிகமிக வெப்பமான பகுதி. இந்த இடத்தை அவர் தேர்வு செய்ததற்கான காரணம் நமக்குப் புரியவில்லை. ஆனால் இன்றுகூட அந்த ஊரிலே நாம் ஒருநாள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு வெயிலும் செம்மணல் தேரியினுடைய சூடும் தாங்கமுடியாது. அந்த ஊரிலே இந்த ஐரோப்பியர் 53 ஆண்டுக்காலம் இருந்திருக்கிறார் என்பது என்னைப் பொறுத்த மட்டில் வியப்புக்குரிய ஒன்றாகவே உள்ளது. நான் அந்த ஊருக்குக் கால்டுவெல் நினைவுக் கருத்தரங்கிற்காக மூன்றுமுறை சென்றுள்ளேன். ஆண்டுதோறும் ஜூலையில் நடத்துகிறார்கள்.

கால்டுவெல் என்ற மிஷனரியை விட, கால்டுவெல் என்ற மொழியியலறிஞரை விட, கால்டுவெல் என்கிற அர்ப்பணிப்பு உணர்வுடைய சமூகச்சீர்திருத்தவாதியைத் (Deticated Social Reformist)தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கால்டுவெல் வருகிறபோது, ஏன் இப்ப ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கூட அந்தப்பக்கம் பேருந்து வசதி கிடையாது. தேரிமணல், சாலைகளை காற்றிலே மூடிவிடும் என்பதனாலே பனைஓலைகளைப் போட்டு அதன்மீது ஜீப் ஓட்டுவார்கள். இதுதான் போக்குவரத்து வசதி. அப்படியென்றால் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே அந்த நிலம் எவ்வாறு இருந்திருக்கும்.

கால்டுவெல் குதிரை வண்டியிலும் குதிரையிலும்தான் பயணம் செய்திருக்கிறார். இடையன்குடி என்ற பெயரோடு வழங்கிய சின்னக் கிராமத்தினுடைய செம்மணல் தேரிக்காட்டின் தென்பகுதியை விலைக்கு வாங்கி, அதிலே ஒரு தேவாலயத்தைக் கட்டி, பக்கத்திலே தனக்கு ஒரு வீட்டைக் கட்டி தேவாலயத்தினுடைய வலதுபுறத்திலே தான் மதம் மாற்றிய அந்த எளிய நாடார் கிறிஸ்தவ மக்களுக்காகத் தெருக்களை, வீடுகளை அமைக்கிறார். அவ்வளவு நேர்த்தியாக, ஒழுங்காக இன்றளவும் அவை இருக்கின்றன.

caldwell family 445கால்டுவெல் காலத்திய இடையன்குடி எப்படி இருந்திருக்கும் என்பதற்கு வேறு எடுத்துக்காட்டே தேவையில்லை. இன்றைக்கும் அந்த தேவாலயத்திற்கு நேர் எதிரே இருபது மீட்டர் தாண்டிச் சென்றால் அந்தப் பழைய இடையன்குடி கிராமம் உள்ளது. அதே பழைய ஓலைக்குடிசைகள்; பனைமடலால் ஆன வேலிகள்; அழுக்கு, வறுமை, வெள்ளாடு இவைகளோடு அப்படியே இருக்கிறது. கால்டுவெல் வருகிறபோதும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். கால்டுவெல் நாடார் மக்களிடம் வருகிறபோது பதனியை இறக்கி கருப்புக்கட்டி உற்பத்தி செய்து கொண்டிருந்தார்கள். அன்றைக்குத் தென்மாவட்டங்களிலேயே இடையன் குடிக்கு ஒரு ஆறு கிலோமீட்டருக்கு முன்னாலேயே உள்ள திசையன்விளை பெரிய கருப்பட்டிச் சந்தை. அதை நம்பித்தான் அந்த மக்களுடைய வாழ்வாதாரம் இருந்தது.

இன்றைக்கு அந்த மக்கள் கல்வி, சமூக விடுதலை, பாதுகாப்பான வீடு இவற்றோடு நான்காவது தலைமுறையைக் கழித்துக் கொண்டு கால்டுவெல்லைத் தங்களுடைய குலதெய்வமாக, சாஸ்தா என்று நாம் சொல்வதைப் போல கருதுகிறார்கள். ஏனென்றால் அவர் தந்த வாழ்க்கைதான் இதெல்லாம். ஒரு சுவையான செய்தி. திசையன்விளையைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபர் பாளையங்கோட்டையிலே இருக்கிறார், Bellpins முதலாளி செல்லத்துரை நாடார். அவர் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். சீர்திருத்த திருச்சபைக்காரர்கள் எல்லாம் ஒரு புதிய இடத்தை வாங்கி அதில் ஊரை நிர்மாணிப்பார்கள். அப்படி நிர்மாணிக்கிறபோது அதற்கு சமாதானபுரம், சுவிசேஷபுரம், கடாட்ஷபுரம், மெய்ஞ்ஞானபுரம் என்ற மதம் சார்ந்த ஒரு பெயரை இடுவார்கள். வேதாகமம் சார்ந்த பெயர்கள் அவை. ஆனால் கால்டுவெல் இடையன்குடி பெயரை ஏன் மாற்றவில்லை என்று கேட்டார். எனக்குத் தெரியவில்லை என்று சொன்னேன் நான்.

அவர் சொன்னார். நான் கால்டுவெல் பிறந்த ஊருக்குப் போனேன். அவர் பிறந்த ஊரின் பெயர் Shepherdyard. அதாவது தமிழிலே சொல்வதானால் இடையன்குடி. இது தன்னுடைய ஊர்ப் பெயரை நினைவுபடுத்துகிற ஊர் என்பதாலே இந்த ஊர்ப் பெயரை மட்டும் கால்டுவெல் மாற்றவில்லை என்றார். எனக்கு ரொம்ப வியப்பாகவும் இருந்தது, நெகிழ்ச்சியாகவும் இருந்தது. இவர் தன்னுடைய ஊர்ப்பெயரைக்கொண்ட ஒரு ஊரை இங்கு தேர்ந்துகொண்டதாலோ என்னவோ அங்கு 53 ஆண்டுகள், இடையிலே ஒரேயொருமுறை மட்டும் இங்கிலாந்து சென்று வந்திருக்கிறார். தன்னுடைய மகளைக் கூட பக்கத்தில் நாகர்கோவிலிலே இருந்த இன்னொரு மிஷனரிக்குத்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.

இப்பொழுது அங்கு கால்டுவெல் தனக்காகக் கட்டிய வீடு இருக்கிறது. வீட்டிலே வேறெந்த நினைவுச் சின்னமும் இல்லை. கால்டுவெல் பயன்படுத்திய அந்த கோர்ட்ஸ்டாண்டு மட்டும் தான் உள்ளது. தேவாலயத்திலிருந்து அந்த வீட்டிற்கு நடந்து செல்ல நூறு அடிதான். இந்த நூறு அடியையும் அந்த மணலிலே வெயிலிலே நம்மால் நடந்து செல்ல இயலாது.

இந்த தேவாலயம் அவ்வளவு நேர்த்தியாக எண்ணி எண்ணி கட்டப்பட்டது. அந்த கோபுரமணியினுடைய ஓசை தனியாக இருக்கும். அது கால்டுவெல்லுடைய தம்பி ஐரோப்பாவிலிருந்து வாங்கி அனுப்பியது என்று சொல்கிறார்கள். இந்த கோபுர மணிக்குச் செல்லும் படிக்கட்டுகள் கூட கலை நேர்த்தியுடன் செய்யப்பட்டிருக்கின்றன. கால்டுவெல்லுடைய விருப்பப்படி, கொடைக்கானலிலே கால்டுவெல் இறந்தாலும் மூன்று நாட்களாக அந்த உடலைப் பாதுகாத்து மலையிலிருந்து டோலி கட்டிக் கீழே கொண்டுவந்து - அன்றைக்கு அதானே சாத்தியம் - அங்கிருந்து ரயிலிலே மதுரை கொண்டுவந்து, அப்படியே திருநெல்வேலி கொண்டுவந்து, அங்கிருந்து பீட்டன் அல்லது சாரட் என்று சொல்லக்கூடிய குதிரை வண்டியிலே பாளையங் கோட்டை தேவாலயத்தில் வைத்து பூசைசெய்து, இடையன் குடிக்குக் கொண்டு சென்று அந்த தேவாலயத்திலே அடக்கம் செய்திருக்கிறார்கள். அவர் மனைவியும் அங்கேதான் அடக்கம் செய்யப்பட்டார். ரொம்ப பெரிய வியப்பு இதுதான்.”

ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் சொகுசாக வாழ்க்கையைக் கழித்த பல ஆங்கிலேயர்களுக்கு மத்தியில், கால்டுவெல் தேர்ந்தெடுத்துக் கொண்ட இந்த வாழ்க்கை முறை வணக்கத்திற்கு உரியது.

idaiyankudi churchமதம் மாற்றும் நோக்கத்தோடு மட்டுமே அப்பகுதி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வசதிகளை கால்டுவெல் செய்து கொடுத்தார் என்றுகூட சிலர் சொல்லலாம். கிறிஸ்தவ மிஷினரிகளை ஏகாதிபத்தியத்தின் கைப்பாவைகள் என்றும், பிரெட், பால் கொடுத்து மதம் மாற்றினார்கள் என்றும் பலர் குற்றம் சாட்டுவது உண்டு. கல்வி கொடுத்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறி விடுவார்கள் என்று கல்வியை மறுத்த பார்ப்பனிய – முதலாளித்துவ சுரண்டலுக்கும், கல்வி, வேலைவாய்ப்பு கொடுத்து தாழ்த்தப்பட்ட மக்களை கைதூக்கி விட்ட கிறிஸ்தவ – ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது! இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிறிஸ்தவம் ஆற்றிய அளப்பரிய பணிகளை, ஏகாதிபத்தியம் என்ற ஒற்றைச் சொல் கொண்டு அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

***

இந்துக் கோவில்களில் மதிய நேரங்களில் நடை சாத்திவிடுவார்கள். வேலைகளில் மும்முரமாக இருக்கும் மதிய நேரங்களில் யாரும் கோவிலுக்குச் செல்வதில்லை என்பதாலும், உழைத்து(!), களைத்துப் போகும் பார்ப்பன பூசாரிகளின் ஓய்விற்காகவும் நடை சாத்திவிடுவார்கள். கிறித்துவ தேவாலயங்களில் நடை சாத்தும் பழக்கம் இல்லை என்றாலும், மேற்சொன்ன காரணங்கள் அங்கேயும் பொருந்துகிறது போலும். நாங்கள் போன நேரத்தில் (மதியம் இரண்டு மணிக்கு மேல்), பொதுமக்களும் இல்லை; பாதிரியாரும் இல்லை. நாங்கள் யாரைக் காணச் சென்றோமோ, அந்த கால்டுவெல், எலீசா அம்மையாரோடு நாங்கள் தனித்து விடப்பட்டோம்.

எந்த வழிபாட்டுத் தலத்திலும் நுழைவாயில் நடுவில் இருக்கும். ஆனால், இடையன்குடியில் கால்டுவெல் அதை ஓரமாக வைத்துள்ளார். காரணம் என்னவென்றால், தேவாலயம் முச்சந்தியில் அமைந்துள்ளது. கிராமங்களில் நடக்கும் நாட்டார் தெய்வ திருவிழாக்களில் மேளதாளத்துடன் வரும் சாமி ஊர்வலம், சிலுவைக்கு நேரெதிரே அமையும் என்பதால், கால்டுவெல் வாசலை ஓரத்திற்கு மாற்றினார் என்று சொல்கிறார்கள். இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அப்பம் சாப்பிட்டு வெறுத்துப் போன இயேசு, கிடா வெட்டுக்கு ஆசைப்பட்டு தேவாலயத்தை விட்டு இறங்கி விடலாம் என்ற அச்சம் கால்டுவெல்லுக்கு இருந்திருக்கலாம் போல!

வழிபாட்டுத் தலங்களில் – அது இந்து, முஸ்லிம், கிறித்துவ மத இடங்களாக இருந்தாலும் - நான் எப்போதும் ரசிப்பது, அதன் உயரமான மேற்கூரை. 22 வயது வரை நான் வசித்த ஓட்டு வீட்டின் உயரம் வெறும் 7.5 அடிதான். 6 அடி உயரமுள்ள நான், சற்று அண்ணாந்து பார்த்தாலே, ஓடு இடிப்பது போல் தோன்றும். அதுவும் ஒரு பகுதியில் மின்விசிறி மாட்டியிருப்பார்கள். சோம்பல் முறிப்பதற்காக கையை உயர்த்தினால்கூட, மின்விசிறியில் அடிபடும். மச்சு வீட்டிற்குள் நுழைந்தால், தலைக்கும் கூரைக்கும் இடையே அரை அடி வித்தியாசம் கூட இருக்காது. அதனால் உயரமான மேற்கூரை உள்ள எந்தவொரு இடத்தைப் பார்த்தாலும், அந்த பிரமாண்ட அழகு என்னை வசீகரித்துவிடும்.

பீஜப்பூர் கோல்கும்பாஸ் மசூதியைப் பார்த்தபோது, நான் அடைந்த பிரமிப்பையும், ஆனந்தத்தையும் அவ்வளவு எளிதில் விவரித்து விட முடியாது. அவ்வளவு உயரமாக, பரந்த மேற்கூரை உடைய கட்டடம் அது. கால்டுவெல் கட்டிய தேவாலயம் அந்தளவிற்கு உயரம் இல்லை என்றாலும், 66 அடி உயர கோபுரத்துடன் கூடிய, அண்ணாந்து ஆச்சரியப்பட வைக்கும் உயரம் உடையதுதான்.

கோதிக் கட்டடக் கலை முறையில் அதாவது இந்தோ – கிரேக்க முறையில் இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பை இராபர்ட் டெய்லர் என்பவர் இங்கிலாந்தில் இருந்து அனுப்பி இருக்கிறார். தேவாலயத்தின் உட்புற வடிவமைப்பு – அதாவது திருப்பீடம், கதவுகள், ஜன்னல்கள், வளைவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை, இராபர்ட் கால்டுவெல் களிமண் மாதிரி செய்து கொடுத்து இருக்கிறார். அந்த மாதிரிகளைப் பார்த்து, வேலையாட்கள் தேவாலய உட்புறத்தை வடிவமைத்து இருக்கிறார்கள். தேவாலயத்தில் பொருத்துவதற்கு நான்கு மணிகளை கால்டுவெல்லின் சகோதரர் ஜேம்ஸ், இலண்டனில் இருந்து அனுப்பி வைத்திருக்கிறார். இந்த மணிகளில் இருந்து எழும்பும் ஓசை மிகவும் இனிமையாக இருக்கும் என்றும், தெற்காசியாவில் இருக்கும் சிறந்த மணிகளில் இவையும் ஒன்றாகும் என்றும் தேவாலயத்தின் முகப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நாங்கள் சென்றிருந்தது பிற்பகல் நேரமாக இருந்ததால், அந்த மணி ஓசையைக் கேட்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டவில்லை.

தேவாலயத்தின் உள்ளேதான் கால்டுவெல், எலீசா அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இருவரைப் பற்றிய சிறுவிளக்கக் குறிப்புகளும் அங்கு இடம் பெற்றிருக்கின்றன. எலீசா அம்மையாரைப்  பற்றிய குறிப்பில் ‘இந்தப் பீடஸ்தானத்தின் அடியில் மகாகனம் கால்ட்வெல் பிஷப் அவர்களுக்குச் சமீபமாய் அவர்கள் பத்தினியாகிய எலைசா அம்மாளவர்களின் சரீரம் இளைப்பாறுகிறது’ என்றும், அவரது தந்தையாரின் பெயர் ‘சார்லஸ் மால்ட் ஐயர்’ என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஹேமாவிடம் அதை சுட்டிக் காட்டி, “கிறித்துவ மதத்திற்கு மாறிய மக்கள், இந்து மதத்தில் இருந்து சாதியை மட்டுமல்லாது, பெண்களுக்கு மட்டுமேயான ‘கற்பு’ நெறியையும் சேர்த்தே எடுத்துப் போயிருக்கிறார்கள். ஐரோப்பியராக இருந்ததால் ஐயராக்கி விட்டார்கள். கறுப்பினத்தவராக இருந்திருந்தால் பறையராகவோ, பள்ளராகவோ ஆக்கி இருப்பார்கள்” என்றேன்.

caldwell statue 450“ஹேமா! கால்டுவெல் மீது நான் இவ்வளவு நேசம் கொண்டிருப்பதற்கு அவரது சமுதாயப் பணிகளோடு, அவரது ஆய்வுப் பணிகளும் மிக முக்கிய காரணம் ஆகும். சூத்திரர்கள் என்றும், அவர்ணர்கள் என்றும் நம்மை ஒதுக்கிய ஆரிய மதம் தான் தங்களது மதம் என்று நம்பும் நிலையில்தான் தமிழ் மக்கள் இப்போதும் இருக்கின்றனர். தங்களுக்கென தனிக் கலாச்சாரம் கிடையாது; ஆரியக் கலாச்சாரத்தின் சாதி அடுக்குமுறையில் அழுந்தப்பட்டு, தங்களுக்கு கீழே ஒரு சாதி இருக்கிறது என்ற அற்ப மகிழ்ச்சியில் வாழும் நிலையில் தான் பன்னெடுங்காலமாக தமிழர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள். தமிழ் மொழியை விட சமஸ்கிருதம்தான் உயர்ந்தது என்ற கருத்தும் திணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ‘இந்த இழிவான ஆரியக் கலாச்சாரம் உன்னுடையது அல்ல; உனக்கென்று ஒரு தனித்த திராவிடக் கலாச்சாரம் உள்ளது; யாரையும் ஆண்டான், அடிமை என்று பிரித்துப்  பார்க்காத, மக்களில் உயர்வு, தாழ்வு புகுத்தாத பெருமைக்குரிய வரலாறு உடையவர்கள் நீங்கள்; தமிழ் மொழியும், அதன் தொன்மையும் உலகின் எந்தவொரு மொழிக்கும் பிந்தையது இல்லை; தமிழில் இருந்து திரிந்து, பிறந்தவையே தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகியன; ஆரியக் கலாச்சாரம் வேறு; திராவிடக் கலாச்சாரம் வேறு’ என்று பேசுவதுதான் திராவிட அரசியல். உன் மதம், உன் கடவுள், உன் மொழி எனக்கு வேண்டாம் என்று நாம் கலகக் குரல் எழுப்புவதற்கான வலுவான கருத்தியல் ஆயுதங்களாக தனது ஆய்வு முடிவுகளைத் தந்தவர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள். ஆனால், அவரை ஐயர் என்றும், அவரது மாமனாரை ‘சார்லஸ் மால்ட் ஐயர்’ என்றும் அழைக்கும் இழிநிலையில்தான் நாம் இன்னும் உள்ளோம்.” என்று வேதனையுடன் கூறினேன்.

ஹேமா அப்போது ஒன்றைக் குறிப்பிட்டாள். “இருபது ஐந்து வயதிற்குப் பின்னரான எனது எட்டாண்டு வாழ்க்கை மிகவும் கொடுமையானது. தனிமையும், எதிர்காலம் குறித்த அச்சமும் நிறைந்த காலமது. என் வாழ்க்கையில் மட்டும் ஏன் சந்தோஷம் இல்லாமல் போனது? எனது துயரத்திற்கு வடிகாலாக பைபிளின் வரிகள் இருந்தன. ‘வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்’ என்ற வரிகள் எனக்காகவே எழுதப்பட்டது போலிருந்தது. மகிழ்ச்சியே இல்லாத வாழ்வைத் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால், ஏதாவது  ஒரு நம்பிக்கையும், ஆறுதலும் வேண்டுமல்லவா? அதை கிறித்துவம் எனக்குக் கொடுத்தது. எனது துயரங்களைக் கேட்ட பாஸ்டர், ஒரு ஞாயிற்றுக் கிழமை கூட்டுப் பிரார்த்தனையின்போது, ‘இன்று சகோதரி ஹேமாவின் துயரமான வாழ்வில் சந்தோஷம் பொங்கவும், அவர் விரும்பும் நல்வாழ்வு அவருக்குக் கிட்டவும் கர்த்தரிடம் நாம் எல்லோரும் மன்றாடி, பிரார்த்தனை செய்வோம்’ என்று எனக்காக எல்லோரையும் பிரார்த்திர்க்கச் செய்வார். நமது துயரத்தில் பங்கு கொள்ளவும், ஆறுதல் சொல்லவும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற எண்ணமே, என்னைத் தொடர்ந்து கிறித்துவத்தில் ஈடுபடுத்தியது.

கிறித்துவக் கூட்டங்களுக்குப் போவதற்கு வீட்டில் கொஞ்சம் எதிர்ப்பு இருந்தாலும், எனக்கு ஒரு மனமாற்றம் கிடைக்கட்டும் என்று கருதி விட்டுவிட்டார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ‘ஏன் திட்டங்குளம் சர்ச்சுக்குப் போக வேண்டும்? வேறு சர்ச்சுக்குப் போகக்கூடாதா?” என்று கேட்டார்கள். காரணம், திட்டங்குளம் சர்ச் பள்ளர் சாதி மக்களுக்கானது. பாஸ்டரிடம் சொன்னபோது, அவர் கூறினார், “பள்ளர்களுக்கானது என்பதால்தான், இந்த சர்ச் சரியான கட்டடம் கூட இல்லாமல் சிறிய கூடாரத்தில் இருக்கிறது. கோவில்பட்டி சர்ச்சுக்கு கிடைக்கும் நிதியுதவி, திட்டங்குளத்திற்குக் கிடைப்பதில்லை. கிறித்துவத்தில் சாதி இல்லை என்றாலும், கிறித்துவத்திற்கு மாறிய மக்களிடம் சாதி இன்னமும் இருக்கிறது’ என்றார்.

திட்டங்குளத்திற்குப் போய்விட்டு, ஒரு நாள் திரும்பும்போது எனது ஸ்கூட்டர் பழுதாகி நின்றுவிட்டது. அந்த வழியாக வந்த, எனது அண்ணனின் நண்பர், “ஹேமா! இங்க ஏன் நிற்கிறே? இது பள்ளப் பயலுகள் இருக்கிற ஏரியா…! இங்க எல்லாம் தனியா வரக்கூடாது” என்று அவரது காரில் என்னை ஏற்றி, வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார். அதோடு, என்னை திட்டங்குளத்திற்கு எல்லாம் அனுப்ப வேண்டாம் என்று வீட்டில் சொல்லி விட்டுப் போனார். அடிப்படையில் வழக்கறிஞரான இவர், ‘நம்ம சாதிப் பொண்ணுகளை எல்லாம் பள்ள சாதிப் பையன்கள் கூட்டிக்கிட்டு போயிறாங்க…’ என்று சொல்லி, சாதி ஆட்களை எல்லாம் திரட்டி, அதற்கு எதிராக என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொடுத்தவர். அவரது கேள்வியும் என்னவென்றால், ‘ஏன் கோவில்பட்டியிலேயே சர்ச் இருக்கும்போது, திட்டங்குளத்திற்குப் போக வேண்டும்?’ என்பதுதான்.

ஆனால்,  நான் தேடிய ஆறுதல் திட்டங்குளத்தில் கிடைத்ததால், நான் வேறு எந்த சர்ச்சுக்கும் போகவில்லை. திட்டங்குளத்திற்குப் போய் வந்த அந்த நான்கு ஆண்டுகளில், பள்ளர் சாதி மக்களிடம் இருந்து எனக்கு எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை” என்று கூறினாள்.

“அவர்கள் ஏன் பிரச்சினை செய்யப் போகிறார்கள், ஹேமா? இவர்கள் அமெரிக்க மாப்பிள்ளை வேண்டும் என்று 26, 27 வயது வரைக்கும் பெண்களை வீட்டில் அடைத்து வைத்துவிட்டு, பழியை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போடுவது என்ன நியாயம்?”

***

நாங்கள் இருந்த அந்த அரைமணி நேரத்தில் ஒருவர்கூட தேவாலயத்திற்கு வரவில்லை. தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் நிதானமாக சுற்றிப் பார்த்தோம். பின்பு அங்கிருந்து கால்டுவெல் வசித்த வீட்டை நோக்கி நடந்தோம். ஓட்டு வீடுதான் என்றாலும் விசாலமான வீடாக இருந்தது. முகப்பில் கால்டுவெல் அவர்களின் மார்பளவு வெண்கலச் சிலை இருந்தது. 17-02-2011ம் தேதி, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் இந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு, இதுவரை நன்றாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் ‘அம்மா’ காதுக்கு போகாமல் இருக்க வேண்டும். போனால், கால்டுவெல் இல்லத்தை ‘இடையன்குடி மகப்பேறு மருத்துவமனை’யாக மாற்றினாலும் மாற்றி விடுவார்.

caldwell house 445

(கால்டுவெல் வாழ்ந்த வீட்டின் பின்புறம்)

கால்டுவெல் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரிய புகைப்படங்கள், தேவையான குறிப்புகளுடன் வீடு முழுக்க வைக்கப்பட்டு இருக்கின்றன. கால்டுவெல் காலத்து இடையன்குடியையும், தற்போதைய இடையன்குடியையும் ஒப்பிட்டுக் காணும்படியான புகைப்படங்கள், அவரது கைப்பட எழுதிய கடிதம், அவர் பயன்படுத்திய முத்திரை, அவருடன் இருந்த உபதேசிமார்களின் புகைப்படங்கள் ஆகியனவும் இருந்தது. அதோடு அவர் பயன்படுத்திய மேல் அங்கி ஒன்றும் கண்ணாடிப் பேழையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கால்டுவெல் பெயரில் ஆய்வு நூலகம் ஒன்றும் அந்த இல்லத்தில் இயங்கி வருகிறது. வீட்டின் பின்புறம் அழகான தோட்டம் ஒன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கால்டுவெல் என்று இணையத்தில் தேடினால், ஓரிரு புகைப்படங்கள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், இந்த நினைவு இல்லத்தில் பல அரிய புகைப்படங்கள் இருக்கின்றன. எனது கேமிராவில் அவற்றை பிரதி எடுக்க முயன்றபோது, போதிய வெளிச்சம் இல்லாததால், சரியாக வரவில்லை. இத்தகு புகைப்படங்களை scan செய்து, தேவைப்படுவோர் ‘copy’ எடுத்துக் கொள்ளும்படியான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா போகிறோம் என்று குழந்தைகளை ஊட்டி, கொடைக்கானல் என்று கூட்டிப் போகத்தான் பெற்றோர்கள் விரும்புகின்றனர். சமூகத்திற்குப் பயன் தரும்படி வாழ்ந்து, மறைந்துவிட்டுப் போன மூத்தோர்களின் இல்லங்களுக்கு நமது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களது வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து, மறைந்த இடங்களில் வைத்துச் சொல்லும்போது அது நிச்சயம் அடுத்த தலைமுறையினரின் மனங்களில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

அடுத்த முறை இந்தப் பக்கமாக வரும்போது எங்களது மகளை இங்கு அழைத்து வர வேண்டும் என்ற எண்ணத்துடன் இடையன்குடியை விட்டுக் கிளம்பினோம். தென்னிந்தியாவின் அழகிய கடற்கரைகளில் ஒன்றான மணப்பாடு நோக்கி எங்கள் வண்டி ஓடத் தொடங்கியது.

- கீற்று நந்தன்

Pin It

kudiyam caves 1

தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட இரண்டு இலட்சம் முதல் பன்னிரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான மனிதர்கள் (தமிழர்கள், திராவிடர்கள், இந்தியர்கள், ஆசியர்கள். உலக மாந்தர்கள்..) – மூதாதையர் வாழ்ந்த குடியம் குகைகளுக்கு (Kudiyam Caves) கல்விப் பயணம், அறிவு சுடர் நடுவம் சார்பில் திட்டமிட்டோம். இணையத்தை தட்டினால் போக வர 14 கி.மீ காட்டு ஒற்றையடி மலைபாதை நடைபயணம் என்று காட்டியது பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆஸ்த்துமா நோய், கால் ஊனம்.. நடக்கமுடியுமா..? கேள்விகள் வந்து வந்து எச்சரித்தது. இதையும் மீறி இந்த மலைக்குகைக்கு போக வேண்டுமா என்ற கேள்வியும் எழுவது இயல்புதான்! கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சாமியே அய்யப்பா ..சரணம் அப்ப்பப்பா… என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து மண்டலம் விரதம் இருந்து, முடியாவிட்டாலும் மனிதர்கள் தூக்கி சுமக்கும் பல்லக்கில் ஏறியாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அய்யப்பன் என்ற மனிதனை காண ஏன் செல்கிறார்கள்..? இலட்சக்கணக்கில் செலவு செய்து புனித ஹஜ் யாத்திரைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குள் வாழ்ந்த முகம்மது நபியின் சமாதியை காண ஏன் செல்ல வேண்டும்? பிணங்கள் மிதக்கும் அசுத்த கங்கை நீரில் நீராட வயதான காலத்தில் காசி யாத்திரைக்கு போவது அவசியமா..? இதெல்லாம் அவசியமெனில், இவைகளை விட ஆயிரம் மடங்குகள்… இலட்சம் மடங்குகள் நியாயம், அவசியம், தேவைகள் இந்த 2 லட்சம் முதல்12 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எம் மூதாதையர் வாழ்விடத்திற்கு இருக்கிறது. அதை காணும் பொழுது எழும் உள்ளக்கிளர்ச்சி நமது வைராக்கியத்தை மேலும் உறுதிப்படுத்தும். ஏனெனில், இந்த குடியம் குகை மாந்தர்கள் இல்லையெனில் இன்று நான் இல்லை…நீங்களும் இல்லை!!

வழக்கம் போல வருவதாக வாக்களித்த நண்பர்கள் கைவிட்டு விட …. ஆர்வமாய் வருகிறோம் என்ற நண்பர்களை நாங்கள் கைவிட… ஆரம்ப சொதப்பல்கள் “இனிதே” இந்த பயணத்திலும் இருந்தது. அன்று பூத்த புத்தம் புதிய சிகப்பு குல்மாஹார் மரத்தின் கிளைகளில் மலர்கள் பரப்பி கிடந்த வீடும், வரவேற்ற தோழர் வெற்றிவீர பாண்டியனின் முகமனும் அந்த சோர்வை இருந்த இடம் தெரியாமல் செய்தது. காலை சிற்றுண்டிக்கு பின்பு பசுமை விரிந்த, குளுமை பரப்பிய வயல்கள், மரங்கள், புல்வெளிகள், புதர்செடிகள் இருபக்கங்களும் சூழ்ந்த சாலைகள் வழியாக பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து சுமார் 10 கி.மீ பயணித்தது சுகமான அனுபவம்..

குடியம் கிராமத்தை காலை 10 மணிக்கு அடைந்தோம். கோடைகாலமான ஜீன், ஜீலை மாதங்கள் வழக்கத்திற்கு மாறாக மழைகாலமாக இப்பொழுது மாறி விட்டிருந்தது. பருவநிலை மாற்றங்கள், புவி வெப்பமடைதல், எல்ஈநோ ..என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. தென்மேற்கு பருவ காற்று தமிழகம் முழுவதும் நிறைய மழையை கொண்டு வந்து சேர்த்து கொண்டிருக்கும் அதிசம் நிகழ்ந்த நேரம் இது. வானம் சாம்பலும், கருமையுமான மேகங்களால் மூடப்பட்டு இருந்தது. இதமான குளிர் தென்றல் அனைவரையும் வருடிச் சென்றது. நீண்ட தொலைவில் பரந்துவிரிந்த பசும்புதர்காடுகளுக்கு அப்பால் குடியம்குகை குன்றுகள் தெரிந்தது. கூழாங்கற்களாலான செம்மண் மாட்டு வண்டி பாதையும் ஒற்றை அடி பாதையுமாக நீண்ட பாம்பு போல் நெளிந்து விரிந்து கொண்டிருந்தது. இயல்பான தயக்கம் எழுந்து மற்றவர்கள் போகட்டும் நாம் வேனில் இருந்து விடுவோமா என்று ஒரு கணம் தோன்றியது. ஆனாலும் பசுமை ஒளிரும் காட்டின் வசீகர கொள்ளையழகு வா..வா.. என்று சுண்டி இழுத்தது. ஆதித்தாயின் கம்பீரமான ஒங்கார குரல்கள் ஒலித்த அந்த மலைகுகைள் கைகளை நீட்டி அழைப்பது போல தோன்றியது.

இரண்டு குழந்தைகள் உட்பட 16 பேர் கொண்ட குழு புறப்பட்டது. எல்லாரும் முன் செல்ல நானும், காலில் அறுவைசிச்சை செய்துள்ள பயணப்பிரியர் நண்பர் ஆனந்தும் சிறிது பின் தங்கினோம். காட்டிற்குள் வாகனங்கள் செல்ல கூடாது என்று இரு இடங்களில் பெரிய பள்ளங்களை வன துறையினர் பாதையின் குறுக்காக வெட்டி வைத்து இருந்தனர். பாதை முழுவதும் வழுப்பான சிறியதும், பெரியதுமான கூழாங்கற்களாலானதாக இருந்தது. மலை பிரதேசங்களுக்குள் செல்லும் ஆறுகளில், அவற்றின் படுகைகளில் இப்படியான கூழாங்கற்கள் இருக்கும். இந்த பகுதி கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்கினுள் வருகின்றது. இங்கு நான்கு படிவுப் படுக்கைகள் (Four Fold Terrace System) உள்ளன என்றும்,கூழாங்கற்திரளை அடுக்கின் பகுதி (Boulder Conglomerate Horizon) ஒன்று காணப்படுகிறது என்றும் தெரியவருகின்றது. மேலும், இப்பகுதியில் இரண்டு வகை மண்பரப்புகளைஅடையாளம் கண்டு வெளிப்படுத்தினர். அவை - இப்பகுதியில் சிறப்பாகக் காணப்படும் செம்மண் படிவங்களின் பரப்பு (Latrite Formation), மற்றும் பிளைஸ்டோசின் கால சிதைந்தசெம்மண் படிவப் பரப்பு என்பன ஆகும். மலைகள், பாறைகள் எரிமலை வெடிப்பு குழம்பினால் உருவானவையாகும். இவற்றில் பல வகைகள் உள்ளன. அதில் ஒருவகையான வெடித்து சிதறும் எரிமலை குழம்பில் உருவானது குடியம்குகை மலையும், இந்த பகுதியுமாகும் என்று வெற்றிவீர பாண்டியன் விளக்கினார்.. சிலர் புரியாமல் கருதுவது, எழுதுவது போன்று இது ஆற்றினாலோ, கடலினாலோ உருவான நிலவியல் அமைப்பு கிடையாது.

பூவுலகின் நண்பர்கள் சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரத்தின் குடிநீர் ஆதாரமான ஏரிகள் கல்வி பயணத்தில் குடியம்குகைகள் செல்வதாக திட்டமிடப்பட்டது. செம்ம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஏரிகளுக்கு சென்ற பிறகு மாலை 4.30 க்கு மேல் குடியம்குகைகள் செல்வதா, இல்லையா என்று விவாதிக்கப்பட்டு பின்பு நிறுத்தப்பட்டது. அப்படியான பயணம் சாத்தியமே கிடையாது. சென்னையில் இருந்து குடியம்குகைகள் செல்வது ஒரு முழுநாள் பயணமாகும். காலை 9 மணிக்கு குடியம் கிராமத்தில் இருந்து பயணம் செய்தால்தான் முழுமையாக குடியம் குகைகளை அதோடு இணைந்த புதர்காட்டையும் முழுமையாக அனுபவதித்து பார்க்க இயலும். காலை 10 மணிக்கு மேல் புறப்பட்ட எங்கள் குழு 12.30 மணிக்கு பிறகுதான் பெரிய குடியம்குகையை அடைய முடிந்தது. இடையில் அய்ந்து அய்ந்து நிமிடங்கள்தான் இரண்டு இடங்களில் நின்றோம். குகையினுள் ஒன்றரை மணிகள் பார்வையிடல், உரையாடல்கள், உணவுக்கான நேரம் போனது. மாலை 4.30 மணிக்குதான் குடியம் கிராமத்திற்கு குழு வந்து சேர்ந்தது. காட்டின் வளத்தை, வனப்பை நின்று பார்க்க கூட நேரமில்லை. ஓட்டமும் நடையுமாக பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வர மாலை 5.30 மணியாகி விட்டது. எனவே, குடியம் குகைகளை, அதனுடன் இணைந்த காட்டை காண சென்னையில் இருந்து முழுநாள் பயணம்தான் யதார்த்தம் என்பதை இந்த பயணம் உணர்த்தியது. இனி குடியம் வருபவர்கள் இதற்கான புரிதலுடன் வரவேண்டும் என்பதற்கே இந்த பதிவு

விட்டு விட்டு பெய்த மழைகளால் காடு குளித்து புத்தாடைகள் அணிந்து கொண்டிருந்தது. காட்டின் பல்லுயிர்களும் புத்துயிர்ப்பு பெற்று புது பொலிவுடன் செழுமை பூரித்து கிடந்தன. வழுப்பான கூழாங்கற்களாலான பாதை என்பதால் சில விநாடிகள் கூட நிலம் நோக்கி பார்க்காமல் நிமிர்ந்து நடக்க முடியாது. நிமிர்ந்த நடை சவடால் இங்கு வேலைக்கு ஆகாது. அசந்தால் சறுக்கி மண்ணை கவ்வச் செய்து விடும். வெண்மைக்கும் கருமைக்கு இடையில் இருக்கும் எண்ணற்ற வண்ண கலவைகளால் இக்கூழாங்கற்கள் காட்சி அளித்தன. பலவகை வட்டங்கள், பல்வேறு சதுர – முக்கோண – அறுகோண - பற்பலக் கோண….ங்களால் இந்த கூழாங்கற்கள் இருந்தன. சில கூழாங்கற்களில் விண்மீன்கள், பிறைநிலாகள் என்று பல ஒவியக்காட்சிகளும் வரையப்பட்டு இருந்தன. எரிமலை குழம்பும், மழை வெள்ளங்களும் இணைந்து தீட்டிய அழகோவியங்கள் இவைகள்!

kudiyam caves 2

பெரிய காட்டு கலாக்காய், காட்டு கலாக்காய் பழம், சூரப்பழம் புதர் செடிகள், நெல்லி, நாகப்பழம் மரங்கள், லெமன்கிராஸ் புற்புதர்கள் .. .. என்று பல்வகை புதர்களாலான காடாக குடியம் குகை வழிபாதை இருந்தது. வானுயர்ந்த பெரிய மரங்கள் எதுவும் கிடையாது. வனத்துறையினர் எவனோ முதலாளிக்காக பல இடங்களில் நட்டு வளர்க்க முயலும் மரங்கள் கூட இருபது அடிகளுக்கு மேல் வளராமல் குட்டையாக ஆண்டுகணக்கில் இருக்கின்றன. பாதை எங்கும் இனிமையான குரல்களில் மகிழ்ச்சியுடன் பலவித பறவைகள் இசைத்து குழைத்து பாடுவதை கேட்பதற்கு தனியாக ஒருநாள் பயணப்பட வேண்டும். ஒட்டு மொத்தமாக பல்லுயிர் சூழலில் அமைந்திருந்த இந்த ஆதிமனிதன் குகைகள் இருந்தன. கொற்றலை ஆற்றின் பள்ளத்தாக்கு புதர்காடுகள், பெருமரக்காடுகள், சமவெளிகள், மலைக்காடுகள் என்று பல்வகை நிலவியல்கள் ஒருங்கிணைத்தாக இன்றும் கூட இருக்கின்றது. உயிரியல் பரிணாம வளர்ச்சிக்கு இயைந்ததான சுற்றுபுறச்சூழல் அமைந்த பகுதி இது என்பதை இயல்பாக உணர முடிந்தது.

வண்டிபாதை முடிந்து காட்டு ஒற்றையடி பாதை தொடங்கியது. வேர்க்கடலை உருண்டை போன்று பாறைகள் இருந்த பகுதி இது. வெற்றிவீரபாண்டியன் எங்களை வழிநடத்தி சென்றார். கொற்றலை ஆற்றில் மணல் குவாரிகள் அமைப்பதற்கு எதிராக கொற்றலை பாதுகாப்பு இயக்கத்தை ஒருங்கிணைத்து வருகிறார். சாந்தி பாபு என்ற தொல்லியல் ஆய்வாளரின் ஆய்வுக்கு உதவியாளராக இப்பகுதிக்கு வந்துள்ளார். பல தொல்லியல் ஆய்வாளர்களுக்கு இவர் உதவி உள்ளார். தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இப்பகுதி மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். ஒன்றரை கோடி செலவில் பூண்டிநீர்த்தேக்கத்திற்கு செல்லும் தார்சாலை இவரது சமூக பணிக்கு சான்றாக உள்ளது.

மிகவும் பின்தங்கி போனதால் வழக்கறிஞர் மனோகரன் அவர்கள் எனது பையை வாங்கி உரையாடிக் கொண்டு கூடவே நடந்தார். கையில் இருந்த காமிரா தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தது. ஆதித்தாயின் பெரும்குகை குளுமையான தூறலை வானில் இருந்து பொழிந்து எங்கள் வரவேற்றது. அந்த குளுமையிலும் இலேசாக வியர்த்தது. குகையில் கால்வைத்த அந்த கணம் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் சென்று விட்டு மீண்டேன்.

மூன்று திருமண மாஹால்கள் அளவிற்கு பெரிய குகை மையமாகவும் , அதை சுற்றிலும் “ப” வடிவதில் இருந்த மலை குன்றுகளில் 15 குகைகளும் இருக்கின்றன. தொல்மாந்தர்கள் பெரும் மக்கள் சமூகமாக வாழ்த்தற்க்கான அடையாளமாக இந்த குகைகளும், காடும், சமவெளி, ஆற்று படுகையும் இருக்கின்றன. பெரும்குகையின் உயரமானதொரு மூலையில் பல மலைத்தேனிக் கூடுகள் இருந்தன. மலைத்தேனிக் கூடுகள் கலைக்க கூடாது. இரண்டு மூன்று தேனிகள் கொட்டினால் கூட மயக்கமடைய நேரிடும் என்று வெற்றிவீரபாண்டியன் குழுவினரை எச்சரித்தார். அங்காங்கே குழுக்களாக, தனியாக நண்பர்கள் காமிராக்களை கிளிக்கினர். குகையின் மறுபக்கம் சிறு மரங்களாலும், புதர்களாலும் குகைகயின் மேலிருந்து தொங்கிய பசும் கொடிகளாலும் இயற்கை சொர்க்கபுரியை படைத்திருந்தது.(காணொளி1)

வெற்றிவீரபாண்டியன் இந்த இடத்தின் முக்கியத்துவத்தை பற்றியும், தனது அனுபவங்களையும், இன்றைக்கு இதை கவனிப்பார் அற்ற நிலையையும் விளக்கினார். இங்கு கிடைத்த தொல்மாந்தர் எலும்பு கூட்டை எந்த வரையரையும், கணக்கும் இல்லாமல் வெளிநாட்டு ஆய்வாளர்கள் எடுத்து சென்ற அவலத்தை பகிர்ந்தார். இந்திய தொல்பொருள் துறை இந்த குகைகள் பாதுகாக்க எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை. ஒரு அறிவிப்பு பலகை கூட வைக்கப்பட வில்லை. இதன்விளைவாக கிராம மக்கள் சிலர் அம்மன் சிலையை, சூலாயுதத்தை, சில கடவுளர் படங்களை இங்கு வைத்து வழிபட தொடங்கி உள்ளனர். அடுத்ததாக புதிய கட்டுமானங்களை கட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும். சிலை வழிபாடு, உருவ வழிபாடு அப்பொழுது கிடையாது. இரண்டு இலட்சம் ஆண்டுகள் வரலாற்றை மறைப்பதில் அல்லது குழப்புவதில் இவை கொண்டு சென்று சேர்த்து விடும் என்றார்.

தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்டைய தமிழர் சமூகம் என்ற கட்டுரையில் ச. செல்வராஜ் அவர்களின், “திருவள்ளூர் மாவட்டம், பூண்டியை அடுத்து, குடியம் எனும் பழங் கற்கால மக்கள்வாழ்விடமான, இயற்கையான குகைத்தலத்துடன் கூடிய ஊர்ப்பகுதி அமைந்துள்ளது. இக்குடியம் குகைத்தலம், கூனிபாளையம், பிளேஸ்பாளையம் ஆகிய இடங்களுக்கு இடைப்பட்டபகுதியில் அமைந்துள்ளது. இவை, பூண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றன. இங்கு மொத்தம் 16 குகைகள் உள்ளன. இக்குடியம் குகையின் உட்பகுதியில், ஒருஅகழ்வுக் குழியும், வெளியில் இரண்டு அகழ்வுக் குழிகளும் இடப்பட்டன*.

இவ்வாய்வில், இரண்டு வகையான கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. குழியின் அடிப்பகுதியில், அச்சூலியன் வகையைச் சார்ந்த கற்கருவிகளும்; மேல்பகுதியில், இடைக்காலஅச்சூலியன் வகையைச் சார்ந்த கற்கருவிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. அச்சூலியன் வகைக் கற்கருவியில் இருந்து, நுண் கற்காலக் கருவிகளின் வளர்ச்சி நிலைகள் வரைதொடர்ச்சியாக இடைவெளியின்றி இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள மண்ணடுக்குகளும், முறையான வளர்ச்சி நிலையையே காட்டுகின்றன.

இங்கு கிடைத்த கைக் கோடாரி, கிழிப்பான்கள் (Cleaver), சுரண்டிகள் (Scrapper), வெட்டுக்கத்திகள் (Blade) போன்ற கற்கருவிகள் குறிப்பிடத்தக்கவை. இக் கற்கருவிகளில், அதிக அளவில்சில்லுகள் பெயர்த்த நிலையைக் காண முடிகிறது. இவையே பின்னர், நுண் கற்கருவிகள் தொழிற்கூடத்துக்கு வழிவகுக்கக் காரணமாக அமைந்துள்ளதை இதன்மூலம்அறியமுடிகிறது. குகைகளில் வாழ்வதைவிட வெளியிலேயே அதிகமாக வாழ்ந்துள்ளனர் என்ற கருத்தை, இங்குக் கிடைத்த கைக் கோடாரிகளின் அளவை வைத்து, இங்கு அகழாய்வுமேற்கொண்ட கே.டி.பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இங்கு கிடைத்துள்ள பழைய கற்காலக் கற்கருவிகள் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் செதுக்கப்பட்டவை. வடிவத்தில் இதயம் போன்றும், வட்ட வடிவிலும், நீள்வட்ட வடிவிலும்,ஈட்டிமுனை போன்ற கற்கருவிகளும் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கூர்மையான முனைகளும், பக்கவாட்டின் முனைகளும் கருவியை மிகவும்;கூர்மைபடுத்துவதற்காக நுண்ணிய சில்லுகளைப் பெயர்த்துள்ளதும் நன்கு தெளிவாக அறியமுடிகிறது. இவை அனைத்தும் சென்னை கைக் கோடாரி மரபைச் சார்ந்தவை என்பதுதொல்லியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். அடுத்து, இங்கு சேகரிக்கப்பட்ட கைப்பிடியுடன் கூடிய ஓர் கற்கருவி மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் தொழில்நுட்பஅறிவு காண்போரை வியக்கச் செய்கிறது. இக்கற்கருவி ஆமை வடிவத்தில் அமைந்துள்ளது. இதனை து.துளசிராமன் அவர்கள் தனது கள ஆய்வின்போது கண்டறிந்தார். இக்கருவியைஆமை வடிவ (Micoqurin) கைக் கோடாரி என்றே குறித்தனர். இவை மட்டுமின்றி, கற்கருவிகள் செய்யப் பயன்படுத்திய கல் சுத்திகள் பலவும் இவ்வாய்வில் சேகரிக்கப்பட்டன. இக் கல்சுத்திகள், பல வடிவங்களில் கிடைத்துள்ளன. இவை அனைத்தும், தமிழகத்தில் பரிக்குளம் அகழாய்வில்தான் முதன்முதலாக கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன…” என்ற கருத்துகளை தோழரும் வழிமொழிந்து விரிவாக விளக்கினார்.( காணொளி 2 )

பழங்கற்காலத்தின் பல்வேறு கால கட்டங்களும், புதிய கற்காலத்தின் பல்வேறு கால கட்டங்களும், நுண் கற்காலம், அதை தொடர்ந்து வர்க்க சமூகங்களாக உருவான காலம், அதன் பல்வேறு வளர்ச்சி கட்டங்கள் என்று வரலாற்று தொடர்ச்சிகளுக்கான தொல்லியல் தரவுகள், ஆதாரங்கள் கொற்றலை நதி படுகையில் மட்டுமல்ல கூவம் நதி, பாலாற்று படுகைகள் என்று திருவள்ளுவர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுவதும் எண்ணற்ற இடங்களில் விரவிக் கிடக்கின்றன. இது பற்றி தமிழ்நாடு தொல்லியல் துறை தனியாக ஒரு நூலையும் வெளியிட்டுள்ளது. இந்த இடங்கள் அனைத்தும் கவனிப்பார் இல்லாமல் இன்று பெரும் அழிவுகளை சமூக விரோத சக்திகளால் சந்தித்து வருகின்றன. இதில் முக்கியமானதாக குடியம் குகைகள் இருக்கும்.

ஆதிதாய் தலைமையிலான வர்க்கமற்ற புராதான கம்யுனிச சமூகம் நிலவிய இந்த கற்கால மாந்த சமூகத்தை பற்றி தமிழ்நாடு மக்கள் கட்சி தோழர் செல்வியும், நானும் குழுவினருடன் பகிர்ந்து கொண்டோம்.(காணொளி3) தொடர்ந்து கோழிக்கறி குழம்புடன் தக்காளி சாதம், தயிர்சாதம், வடை, உருளைக்கிழங்கு பொறியல் என்று எங்கள் அனைவருக்கும் வெற்றிவீரபாண்டியன் குடும்பத்தினர் ஒரு விருந்து படைத்தனர் என்றால் மிகையல்ல. பெரிய பாத்திரங்களில் இவ்வளவு தூரம் சுமந்து வந்த தோழர் மணிமாறன் துணைவியார் பஞ்சவர்ணம், வெற்றிவீரபாண்டியனுக்கு குழுவினர் நன்றி கூறினர். வெற்றிவீரபாண்டியன் குழந்தைகள் அக்கா-தம்பி விளையாடிய நேரம் போக மற்ற நேரங்களில் நடந்த பஞ்சாயத்துகளையும் மகிழ்ச்சியுடன் குழு நண்பர்கள் தலைமைதாங்கி தீர்த்து வைத்துக் கொண்டிருந்தனர். மழை தொடர்ந்து பெய்தாலும் இந்த பகுதி முழுவதும் எங்கும் தண்ணீர் தேக்கி இருக்கும் குட்டைகளுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. அவரவர் சுமந்து வந்த குடிநீரை அனைவரும் அருந்தினர். நீண்ட நடைபயணத்திற்கு குடிநீர் அதிகம் தேவை இருப்பது புரிந்தது. மீதமிருந்த உணவை (சென்னைவாசிகளை நம்பி இவ்வளவு உணவு சமைக்கலாமா நண்பரே..) பல்லுயிர்களுக்கும் பகிர்ந்து அளித்தோம். மதியம் 2 மணிக்கு மேல் தாய்வழி சமூகத்தை போற்றுவோம் என்று முழங்கி விட்டு கிளம்பினோம்!

அனைவரும் வேக வேகமாக நடக்க நாம் காட்டின் ஒவ்வொரு அசைவைகளையும் நிதானமாக இரசித்தவாறு நடந்தோம். குழுவினர் காட்டு கலாக்க பழங்களை பறித்து தின்று கொண்டே சென்றனர். ஒரு புதர்செடியில் நிறைய பழங்கள் இருந்தன. குழுவினர் சிலர் அதை பறிக்க பாய்ந்தனர். வெற்றிவீரபாண்டியன் அதை தடுத்து, இதைச் சாப்பிடக்கூடாது. காட்டு கலாக்க பழத்தின் போல் காட்சி அளிக்கும் வேறு நச்சு பழங்கள் இவை… இதே போல போலிகள் கலந்துதான் காடும் இருக்கும், பறவைகள் உண்ணும் பழங்களைதான் மனிதர்கள் சாப்பிட வேண்டும் என்றார் வெற்றி வீரபாண்டியன்.

காமிராக்குள் காட்டை அடைக்கும் நமது முயற்சியில் மிகவும் பின் தங்கி விட்டோம். கால்வலியும் இதற்கு கூடுதல் காரணமாக இருந்தது. குழுவினர் காட்டின் ஒற்றை அடிப்பாதையில் எங்களுக்காக காத்து கிடந்தனர். இப்படி போனால் இருட்டி விடும் என்று தோழர் வெற்றி காமிரா பையை பறித்து கொண்டு நடந்தார். திரும்பவே மனம் இல்லாமல் மழையில் புத்தொளி வீசும் அந்த புதர் காட்டிற்கு டா..டா..காட்டி விட்டு திரும்பினேன். இறுதியாக முன்னோர்கள் வாழ்ந்த மண்ணை முத்தமிட்டு விட்டு விடை பெற்றோம்.( கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கதையுடன் இதை இணைத்து புரிந்து கொள்ள வேண்டும். )

பூண்டி நீர்தேக்கத்தையும், அங்கு அமைத்துள்ள கற்கால தொல்லியல் அருங்காட்சியகத்தையும் ஒரு எட்டு பார்த்து விட்டு வெற்றிவீரபாண்டியன் வீட்டிற்கு சென்றோம். சூடான தேநீர் அனைவருக்கும் கிடைத்தது. பல ஆண்டுகள் கொற்றலை ஆற்று படுகையில், குடியம் குகைகள் காட்டில் வெறும் பனம்பழங்களை தின்று பசியாறி தானும் தனது தம்பியும் அலைந்து திரிந்து கண்டெடுத்த கற்கால கல் கருவிகள், ஆயுதங்களான கைக்கோடாரிகள், கிழிப்பான்கள்(Cleaver), சுரண்டிகள்(Scrapper), வெட்டுக்கத்தி(Blade)களில் ஒவ்வொன்றை குழுவினர் ஒவ்வொருவருக்கும் பரிசளித்தார்.

இலட்டசம் ஆண்டுகளுக்கு முன் ஆதிதாய்மார்கள் தங்களின் உழைப்பினால், அறிவுதிறத்தால் வடிவமைத்த வேல்வடிவ கல் ஆயுதங்களை தனதுமகன்களுக்கு அளித்தாள். அவைதான் பின்நாட்களில் முருக கடவுள்களுக்கான வேலாயுதங்களாக பரிமாற்றங்கள் அடைந்தன. அத்தகையதொரு கல் ஆயுதங்களை தோழர்வெற்றிவீர பாண்டியன் அறிவு சுடர் நடுவ கல்வி பயணத்தில் பங்கெற்றவர்களுக்கு பரிசளித்தார். கல் என்ற வேர்சொல்ல்லில் இருந்து கல்வி என்ற சொல் உருபெற்றதை விளக்கி, கல்வி பயணத்தை நிறைவு செய்தார்.(காணொளி4) இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித உழைப்பின் முதல் தொழில்நுட்ப அறிவின் அற்புத படைப்பு இந்த கல் கருவிகள்! அதை கைகளில் ஏந்திய பொழுது இலட்சம் ஆண்டு வரலாற்றை சுமக்கும் பெருமிதத்தினால் கண்கள் பனித்தன!!

1. https://www.youtube.com/watch?v=rZMiw2l1qAc

2. https://www.youtube.com/watch?v=E9a93Hyh7yk

3. https://www.youtube.com/watch?v=nCn1eVUJDFw

4. https://www.youtube.com/watch?v=5VSVwM0vBtE

- கி.நடராசன்

Pin It

மகள்களைப் பெற்ற அப்பாக்கள் மட்டுமல்ல, நல்ல மச்சான்களைப் பெற்ற மாப்பிள்ளைகளும் கொடுத்து வைத்தவர்கள்தான். அவர்களில் நானும் ஒருவன். பின்னே... ஒரு மச்சான் swift காரை வாங்கி, சென்னையில் வைத்துவிட்டு, 'நான் திரும்பி வரும்வரை ஓட்டிக் கொண்டு இருங்கள்’ என்று அமெரிக்கா போய்விட, இன்னொரு மச்சான் Ford Fiesta காரை வாங்கி கோவில்பட்டியில் வைத்துவிட்டு அயர்லாந்து போய்விட, இந்த இரண்டு கார்களையும் கட்டிக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு(!) என் தலைமேல் விடிந்தது. இல்லை என்றால், நான் எல்லாம் என்றைக்கு கார் வாங்கி... என்றைக்கு ஓட்டுவது?

ஏதோ செல்வந்தன்போல், வட மாவட்டங்களில் சுற்றுவதற்கு Swift காரையும், தென் மாவட்டங்களில் சுற்றுவதற்கு Fiesta காரையும் பயன்படுத்திக் கொண்டு இருந்தேன்.

சாதாரணமாகவே விடுமுறை நாட்களில் வீட்டில் தங்குவது என்பது எனக்கு அடுப்பின் மீது உட்கார்ந்திருப்பது போன்றது... அதுவும் வண்டி வந்தபின்பு கேட்கவா வேண்டும்? ஹேமாவை (என்னுடைய துணைவி) வண்டியில் ஏற்றிக் கொண்டு எங்கேயாவது கிளம்பி விடுவது வழக்கம் ஆகிவிட்டது. அப்படித்தான், இடையன்குடி செல்லும் நீண்ட நாள் ஆவலை அன்று தணித்துக் கொள்ள முடிவெடுத்தேன்.

robert caldwell and his son

மாற்றுவெளி ஆசிரியர் குழு வெளியிட்ட ‘கால்டுவெல் சிறப்பிதழ்’ படித்ததில் இருந்து, கால்டுவெல் மீதும், அவர் வாழ்ந்த இடையன்குடி மீதும் பெரும் ஈர்ப்பு உருவாகி இருந்தது. தமிழ் மொழிக்கும், திராவிட இனத்திற்கும் தனித்த அடையாளத்தை வழங்கியதில், கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலுக்கு அளப்பரிய பங்கு உண்டு. கால்டுவெல் வாழ்ந்து, திரிந்த தெருக்களில் நானும் நடக்க வேண்டும், மானசீகமாக அவருடன் கை குலுக்க வேண்டும் என்பது தணியாத ஆவலாக இருந்தது. “இடையன்குடி போலாமா?” என்று ஹேமாவிடம் கேட்டேன்.

எனது ஊர் சுற்றும் ஆர்வத்திற்கு எப்போதும் துணை நிற்பவள் ஹேமா. இன்னும் சொல்லப் போனால், அவள் என் வாழ்க்கைக்குள் வந்த பிறகே, பயணங்களின் ருசி எனக்குப் புரிபட ஆரம்பித்தது. வெளியே மழை பெய்து கொண்டு இருக்கிறது. லெஸ்லி லீவிசின் ‘பீகி பீகி’ பாடலை கேட்டுக் கொண்டே வண்டி ஓட்டுகிறீர்கள்... வாழ்வின் துயரங்களை எல்லாம் வடிய வைத்து, தீராத காதலை உங்கள் மீது ஒரு மென்தூறலாக பெய்துவிட்டுச் செல்லும் அந்தப் பாடலும்... அப்பாடல் எழுப்பி விட்டுச் செல்லும் உணர்வலைகளை பகிர்ந்து கொள்ள அழகும், காதலும் நிரம்பிய ஒரு பெண் அருகிலும் இருந்தால், அந்தப் பயணம் எத்தனை ரம்மியமானது...! ஹேமா அப்படித்தான் எனது பயணங்களை எல்லாம் ரம்மியமானதாக மாற்றிக் கொண்டு இருக்கிறாள்.

எத்தனை நீண்ட பயணமாக இருந்தாலும், களைப்பு இல்லாமல் தொடர்வதற்கு ஹேமாவின் அருகாமையும், நல்ல பாடல்களுமே எனது பற்றுகோள்கள். பயணங்கள் தான் எங்கள் வாழ்வை அழகாக ஆக்குகின்றன; பயணங்கள்தான் எங்களுக்குள்ளான காதலை அதிகப்படுத்துகின்றன; பயணங்கள்தான் எங்கள் வாழ்வின் வெற்றிடங்களை இட்டு நிரப்புகின்றன.

ஒவ்வொரு பயணம் ஏற்படுத்தும் பரவசமும், மகிழ்ச்சியும் அடுத்த பயணத்திற்கு எங்களைத் தயார்படுத்துகின்றன. இன்னமும் பயணிக்க வேண்டிய இடங்கள் அனேகம் இருக்கின்றன என்ற எண்ணமே, நாளை வாழ்தலுக்கான தேவையை என்னுள் விதைக்கின்றது.

பெயர் பெற்ற சுற்றுலாத் தளங்களுக்கு மட்டுமே பயணிக்க வேண்டும் என்று நான் எப்போதும் கருதியது இல்லை. வித்தியாசமான நில அமைப்பு, வேறுபட்ட பருவ நிலை, புதியதொரு சமூகச் சூழல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நம் வாழ்வைப் புரட்டிப் போட்ட மனிதர்கள் வாழ்ந்த பகுதிகள் இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால்கூட போதும்... அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டாகி விடும். இடையன்குடி மீதான ஆர்வமும் அப்படித்தான் ஏற்பட்டது.

தேரி மணல் காடு, பனை மரங்கள் நிறைந்த பகுதி, எப்போதும் தகிக்கும் வெப்ப நிலை, கால்டுவெல் தனது வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த இடம், தனது உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினாரோ, அந்தப் பகுதி... இவை போதாதா, இடையன்குடி செல்வதற்கு...?

தென் தமிழ்நாட்டில் பிறந்து, ஏறக்குறைய 21 ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்திருந்தபோதும், இடையன்குடி என்ற ஊரின் வரலாற்று முக்கியத்துவம் எனது 30 வயதுகளில், சென்னைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது.

மாற்றுவெளியின் கால்டுவெல் சிறப்பிதழைப் போலவே, பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் இடையன்குடி பற்றிய எழுத்துக்களும், அந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை அதிகப்படுத்தி இருந்தது.

***

ஏதாவது ஓர் ஊருக்குப் போக வேண்டும் என்று சொன்னால், அந்த ஊரில் என்ன இருக்கிறது என்று ஹேமா கேட்பாள். நானும் அந்த ஊரின் அழகான, மனதை மயக்கும் இயற்கைக் காட்சிகளை கூகுளில் தேடி எடுத்துக் காண்பிப்பேன். “இடையன்குடியில் என்ன ஸ்பெஷல்?” என்று ஹேமா கேட்டபோது, அதை நிழற்படங்களாகக் காட்ட முடியவில்லை. கால்டுவெல் என்ற மகத்தான மனிதனின் வாழ்க்கையைத்தான் விவரித்தேன்.

கால்டுவெல் பிறந்தது அயர்லாந்து என்று சொன்னபோது, ஹேமாவிற்கு அதன் சீதோஷ்ண நிலையை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. 7 ஆண்டுகளுக்கு முன்பு, அயர்லாந்து சென்ற ஹேமாவின் அண்ணனும், அண்ணியும் இப்போது அங்கு குடியுரிமை பெற்று விட்டார்கள். அவர்களது குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள இரண்டு வீட்டைச் சேர்ந்த பெரியவர்களும் 3 மாதங்களுக்கு ஒரு முறை போய், வந்து கொண்டு இருக்கிறார்கள். கிளம்பும்போது, அவர்கள் எடுத்துப் போக வேண்டிய குளிர் பாதுகாப்பு ஆடைகளின் பட்டியல் அயர்லாந்தில் இருந்து வரும். இவர்கள் திரும்பி வரும்போது, குளிரைத் தாங்க முடியாமல் பட்ட அவஸ்தைகளும் கூடவே வரும். குளிர் மைனஸில் இருக்கிற, பனிமழை பொழியும் நாடு; ஹீட்டர் இல்லாமல் வீட்டிற்குள் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது என்று புலம்பித் தள்ளுவார்கள். அதனால் கால்டுவெல் பிறந்தது அயர்லாந்து என்று சொன்னதும், ஹேமாவிற்கு அதற்கு மேல் அந்த நாட்டைப் பற்றி விவரிக்க அவசியம் ஏற்படவில்லை..

robert caldwell memorial house

(கால்டுவெல் வாழ்ந்த இல்லம்)

அந்த கடுங்குளிர்ப் பகுதியில் இருந்துதான், கால்டுவெல் தனது இருபது வயதுகளில் கிறித்துவ சமயப் பணிக்காக இந்தியா கிளம்புகிறார். எட்டு மாத கடல் பயணத்திற்குப் பின், சென்னை வந்து அடைகிறார். அதன்பின் தமிழகத்திலேயே ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் வசிக்கிறார். இந்தியாவிற்குக் கிளம்பியபோது, அவரது தாய், தந்தையைப் பார்த்ததுதான் கடைசி. மீண்டும் அவர்களை உயிருடன் அவரால் பார்க்க முடியவில்லை. அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவரும் இறந்த செய்தி, ஏறக்குறைய ஆறு மாதங்கள் கழித்த பின்னரே கால்டுவெல்லுக்குக் கிடைக்கிறது. இறப்புச் செய்தியை தாங்கிய அக்கடிதங்களை கையில் வைத்தபடி, கண்ணீர் உகுக்க மட்டுமே அவரால் முடிந்து இருக்கும்.

சென்னை வந்த கால்டுவெல் முன்பு இரண்டு தேர்வுகள் இருந்தன. ஒன்று ஆங்கிலம் தெரிந்த உயர்சாதி இந்துக்களிடம் கிறித்துவ சமயப் பணி ஆற்றுவது (பெரும்பான்மையான ஐரோப்பிய சமயப் பணியாளர்கள் தேர்ந்து எடுத்துக் கொண்டது இதைத்தான்); இன்னொன்று, தமிழ் மொழியைக் கற்று, படிப்பறிவு இல்லாத, ஒடுக்கப்பட்ட ஏழை இந்துக்களிடம் பணியாற்றுவது. கால்டுவெல் தேர்ந்து எடுத்துக் கொண்டது இதைத்தான்.

இயல்பிலேயே வாசிப்பதில் ஆர்வமுள்ள கால்டுவெல், தமிழ் மொழி கற்பதை ஒரு கடமையாகக் கருதாமல், உண்மையான அக்கறையுடன் கற்றார். தமிழின் முக்கிய இலக்கியங்கள் அனைத்தையும் தேடி வாசித்தார். அதோடு, தமிழ் மொழியை தெளிவாக உச்சரிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தினார்.

தமிழ் மொழிப் பயிற்சிக்குப் பின், ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு, சமயப் பரப்பலுக்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டார். திருநெல்வேலி செல்வதற்கு முன், சென்னை பிஷப்பிடம் ஆசி பெற விரும்பினார். அப்போது, பிஷப் ஊட்டியில் தங்கி இருந்தார்.

கால்டுவெல் ஊட்டிக்கு நடந்தே சென்றார். பாண்டிச்சேரி, தரங்கம்பாடி, தஞ்சை, திருச்சி, ஶ்ரீரங்கம் வழியாக கோவை சென்று அடைகிறார். ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போது, அந்த ஊரில் பிரசித்தி பெற்ற இடங்களைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். தஞ்சை பெரிய கோயிலின் அழகில் சொக்கிப் போகிறார். அதைப் பற்றி விரிவாக எழுதுகிறார்.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், பின்பு ஊட்டி வந்து அடைகிறார். சென்னை பிஷப்பைச் சந்தித்து அவருடன் சில காலம் தங்கி இருக்கிறார். பின்னர் அவரிடம் விடைபெற்று, திருநெல்வேலி நோக்கி குதிரையில் பயணிக்கிறார். ஆனால் மலையில் இருந்து இறங்கும்போதே, ஒரு சரிவில் குதிரை கீழே விழுந்து, அதன் காலில் காயம்படுகிறது. கால்டுவெல்லுக்கும் அடி. மீண்டும் நடை பயணத்துக்கு மாறுகிறார். ஆனால், குதிரையின் சேணத்தை மட்டும் ஏனோ கடைசிவரை சுமந்து செல்கிறார்.

திருநெல்வேலி நோக்கிய பயணத்தில், கால்நடையாகவே நடந்து திரிந்ததில், கால்டுவெல் பார்ப்பதற்கு பஞ்சைப் பராரி போல் தென்படுகிறார். அதனால், பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சத்திரங்களில் தங்குவதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்டிருந்த, அதிக வசதிகள் இல்லாத, சுத்தமற்ற இடங்களில்தான் அவர் தங்குகிறார். சில இடங்களில் திண்ணையில் படுத்தும் தூங்கி இருக்கிறார். அவரைப் பார்த்த மக்கள், ‘அய்யோ பாவம். ஏழை வெள்ளைக்காரர் போலும்’ என பரிதாபப்பட்டு இருக்கிறார்கள். இந்திய சமூகத்தில் நிலவி வந்த சாதி ஒடுக்குமுறையை கால்டுவெல் அனுபவப்பூர்வமாக உணர்கிறார். பார்ப்பனர்களுக்கும், இதர சாதி மக்களுக்கும் இடையே மனிதாபிமானத்தில் இருந்த வேறுபாடுகளை அறிந்து கொள்கிறார்.

திருநெல்வேலி வந்த பின்பு, அவர் பணிபுரியும் இடமாக இடையன்குடி பகுதி அமைகிறது. அங்கு நிலவிய வெப்பநிலையைப் பற்றி கால்டுவெல் எழுதும்போது, ‘மூன்று மாதங்கள் கோடை காலமாகவும், ஒன்பது மாதங்கள் கடுங்கோடை காலமாகவும் இருக்கிறது’ என்று குறிப்பிடுகிறார். ஆனால், அந்த நிலப்பரப்பில்தான் 53 ஆண்டுகள் வாழ்ந்தார்.

இடையன்குடியில் அதிக அளவு இருந்தது நாடார் சாதி மக்கள். ‘சாணார்கள்’ என்று அழைக்கப்பட்ட அந்த மக்களின் முக்கிய தொழில் பனையேறுவது. வடமாவட்டங்களில் மரியாதைக் குறைவான பேச்சுவார்த்தைகளைக் கேட்டிருந்த கால்டுவெல்லுக்கு, திருநெல்வேலி பகுதி நாடார் மக்களின் பண்பான பேச்சும், கனிவான பழக்க வழக்கங்களும் பிடித்துவிடுகிறது.

அன்றைய காலத்தில் நாடார்களின் சமுதாய நிலை, பறையர், பள்ளர்களை ஒத்தே இருந்தது. கோயில் மறுப்பு, தீண்டாமை, சமுதாய விலக்கு என தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருந்த அத்தனை ஒடுக்குமுறைகளும் நாடார்கள் மீதும் இருந்தன. ஒடுக்குமுறையின் கொடுமையை உணர்ந்து இருந்த கால்டுவெல், இறுதிவரை அந்த நாடார் மக்களுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்தார். 53 ஆண்டுகள் வரை அங்கு வாழ்ந்து இருந்தபோதும், நாடார்களைத் தவிர்த்த பிற சாதி மக்களிடம் அவர் சமயப் பணியும், சமுதாயப் பணியும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கால்டுவெல் இடையன்குடி வருவதற்கு முன்பு கிறித்துவத்தைப் பின்பற்றும் ஒரு சிறுகூட்டம் அங்கு இருக்கத்தான் செய்தது. ஆனால் அவர்களை வழிநடத்துவதற்கு முழுநேர சமயப் பணியாளர்கள் இல்லாததால், அவர்கள் முறையாக கிறித்துவத்தைப் பின்பற்றவில்லை. அங்கிருந்த சிறு தேவாலயமும் சரியாகப் பராமரிக்கப்படாமல் சிதைந்து இருந்தது.

1785ம் ஆண்டு திருநெல்வேலி கிறித்தவப் பதிவேட்டில் 40 பேர் இடம் பெற்று இருந்தார்கள். அதில் ஒருவர்கூட நாடார் சாதி இல்லை. ஆனால் 100 ஆண்டுகளுக்குப் பின், அதாவது கால்டுவெல் வருகைக்குப் பின், 1880 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், திருநெல்வேலி பகுதியில் கிறித்துவத்தைத் தழுவிக் கொண்டவர்கள் 50,000 பேர்கள் ஆவர். இதில் 95 சதவீதம் பேர் நாடார்கள் எனில், கால்டுவெல்லின் பங்களிப்பை உணர்ந்து கொள்ளலாம்.

கால்டுவெல் வெறுமனே சமயப் பணி ஆற்றுபவராக மட்டும் இருந்திருந்தால், இது சாத்தியமாகி இருந்திருக்காது. அவர் ஆற்றிய சமூகப் பணிகளின் காரணமாகவே, அத்தனை ஆயிரம் மக்கள் அவர் பின்னே திரண்டார்கள். இன்று என்னைப் போன்ற பகுத்தறிவுவாதிகள்கூட அவரைப் போற்றுவதற்குக் காரணமும் அதுவே.

idaiyankudi 620

(இடையன்குடி பகுதி)

இடையன்குடி மிகவும் வறட்சியான, செம்மண் தேரிப் பகுதி. பனைமரங்கள் மட்டுமே அப்பகுதி மக்களின் வருமானத்திற்கான வழி. ஊர் என்று சொல்லும் தகுதி பெறாத அளவுக்கு, தாறுமாறாக குடிசை வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. மக்கள் வறுமையில் வாடி வதங்கி இருந்தனர்.

ஊரை செம்மைப்படுத்துவது, மக்களை முன்னேற்றுவது இரண்டு பணிகளையும் கால்டுவெல் தனது தலைமேல் சுமந்து கொண்டார். அவர் டப்ளினில் ஓவியப் படிப்பு படித்தவர்.  இடையன்குடியை அழகாக திருத்தி அமைக்க வேண்டும் என்பதற்காக, உயரமான ஒரு மரத்தில் ஏறி, அந்த ஊரின் நிலவமைப்பை ஆராய்ந்து, ஒரு வரைபடத்தைத் தயாரித்தார். அந்த வரைபடத்தில் தெருக்கள், வீடுகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதை தெளிவாக வரைந்தார்.

தேவாலயத்தைச் சுற்றி இருந்த நிலங்களை விலை கொடுத்து வாங்கினார். நிலம் வாங்குவதற்கும், அவற்றைத் திருத்துவதற்கும் ஆகும் செலவிற்கு தனது நண்பர்களிடம் நன்கொடை திரட்டினார். நிலத்தை சீர்படுத்தும் வேலைக்கு இடையன்குடி நாடார்களை சம்பளத்திற்கு அமர்த்தினார். அந்த சம்பளப் பணத்தை அவர்களை சேமிக்கச் செய்து, அந்த நிலத்தில் வீடு கட்ட பயன்படுத்திக் கொள்ளச் செய்தார். மாதிரிக்கு சில வீடுகளை கட்டிக் கொடுத்து, அதேபோல் மற்ற வீடுகளைக் கட்டச் செய்தார். தெருக்களை விசாலமாக அமைத்து, தெருக்கள் கூடும் சந்திகளில் கிணறுகள் அமைத்தார். தெருவின் இருபுறமும் மரங்களை நட்டு வைத்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடையன்குடி கிராமத்திற்கு, ‘சிறந்த திட்டமிடப்பட்ட கிராமம்’ என்று விருது நடுவண் அரசால் தரப்பட்டது என்றால், அதற்கான முழு பாராட்டும் கால்டுவெல்லையே சாரும்.

வெறுமனே வீடு கட்டித் தந்ததோடு தனது பொறுப்பு முடிந்து விட்டது என்று கால்டுவெல் கருதவில்லை. அந்த வீடுகளில் வாழும் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்துவது குறித்தும் சிந்தித்தார். கல்வி, தொழில் வசதிக்கான வேலைகளிலும் இறங்கினார்.

கால்டுவெல் தனது வாழ்நாள் காலத்தில் தமிழகத்தில் 9 பள்ளிக்கூடங்களைத் தொடங்கியதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.  தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக (1844ம் ஆண்டு) பெண்களுக்கான உறைவிடப் பள்ளியை கால்டுவெல்லின் மனைவி எலிசாதான் தொடங்கினார். பெண்கல்விக்கு மக்களிடம் எதிர்ப்பு இருந்தபோது, கால்டுவெல் ஊர் மக்களை சந்தித்து, பெண்கள் கற்பதன் முக்கியத்துவத்தை எடுத்து உரைத்து, சம்மதிக்க வைத்தார். எலிசா பெண்களுக்கு தையல் பயிற்சியும் அளித்தார்.

படிக்க வரும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதை கால்டுவெல்தான் அறிமுகம் செய்தார். இடையன்குடி மக்களின் சுகாதார வசதிகளுக்காக சென்னை கவர்னரிடம் பேசி, 1870ம் ஆண்டு மருத்துவமனை ஒன்றைத் தொடங்க ஏற்பாடுகள் செய்தார்.

அழகான ஓர் ஊரை நிர்மாணித்த கால்டுவெல், அவ்வூரில் பிரமாண்டமான ஒரு கிறித்துவ ஆலயத்தை கட்ட விரும்பினார். 1847ல் அடிக்கல் நாட்டினார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நிதி திரட்டத் தொடங்கினார். எதிர்பார்த்த அளவு நிதி உடனே கிட்டாததாலும், கால்டுவெல் மேற்கொண்ட தமிழ் ஆய்வுப் பணிகள் காரணமாகவும் ஆலயத்தைக் கட்டிமுடிக்க 33 ஆண்டுகள் ஆனது. கலைத்திறன் மிக்க அந்த ஆலயம் 1880ல் திறக்கப்பட்டது.

இடையே ஒரு முறை, கடும்வெப்ப நிலை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட கால்டுவெல், 1854ல் ஓய்விற்காக அயர்லாந்து சென்றார். அங்குதான் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை உருவாக்கினார். 1856ல் இலண்டன் நகரில் அந்நூல் வெளியானது. மூன்று ஆண்டு ஓய்விற்குப் பின், மீண்டும் இடையன்குடி வந்து சேர்ந்தார்.

வாழ்வின் கடைசிக் காலத்தில் கொடைக்கானலில் ஓய்வெடுத்தார். 28-08-1891 அன்று உயிர் நீத்தார். அவர் விருப்பப்படி அவரது உடல் இடையன்குடியில் அவர் கட்டிய தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர், அவரது மனைவியும் அங்கேதான் அடக்கம் செய்யப்பட்டார்.

***

கால்டுவெல் வரலாற்றை சொல்லி முடித்தபோது, ‘இப்படியும் ஒரு மனிதன் இருந்திருக்க முடியுமா என்று ஆச்சரியத்துடன் ஹேமா கேட்டாள். அடிமைகளாக்கி, நம்மை சுரண்ட வந்த வெள்ளையர்களில் பென்னிகுயிக்கும், கால்டுவெல்லும் இருக்கத்தானே செய்தார்கள். நல்ல மனிதர்கள் எல்லா ஊர்களிலும் உண்டுதானே!!

***

காலை 10 மணி சுமாருக்கு கோவில்பட்டியிலிருந்து கிளம்பினோம். இடையன்குடிக்கு கோவில்பட்டியிலிருந்து எட்டையபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக செல்ல வேண்டும். கோவில்பட்டியிலிருந்து எட்டையபுரம் வரைக்கும் சாலை சுமாராக இருக்கும்; அதன்பின்பு தூத்துக்குடி வரைக்கும் நான்கு வழிச் சாலை. நான்கு வழிச் சாலையில் நுழைந்ததும், எட்டையபுரத்தில் இருந்து நான்கு அல்லது ஐந்தாவது கிலோ மீட்டரில் ‘மேல ஈரால்’ என்ற ஊர் இருக்கிறது. ஊர் என்பது நான்குவழிச் சாலையில் இருந்து ஒன்றரை கி.மீ. தள்ளிதான் இருக்கும். அந்த ஊர் நிறுத்தத்தில் இருக்கும் கடைகள் தின்பண்டங்களுக்குப் பெயர் பெற்றவை. அவ்வளவு மொறுமொறுப்பான, சுவையான வறுவல், கருப்பட்டி மிட்டாயை வேறு எந்த ஊரிலும் நீங்கள் சாப்பிட முடியாது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கிளம்பும் லாரிகள், அந்தக் கடைகளில் நின்று வறுவலும், கருப்பட்டி மிட்டாயும் வாங்கிச் செல்வதைப் பார்க்க முடியும். எட்டையபுரத்தில் இருந்து நீங்கள் செல்வதாக இருந்தால், மேல ஈராலில் சாலையின் வலப்பக்கத்திலும், தூத்துக்குடியில் இருந்து செல்வதாக இருந்தால், இடப்பக்கத்திலும் அந்தக் கடைகள் இருக்கும். தவறாமல் வாங்கிச் செல்லுங்கள்!! நாங்களும் கொஞ்சம் வாங்கிக் கொண்டோம்.

தூத்துக்குடி சாலையில் கானல் நீரை நிரப்பிக் கொண்டிருந்தது வெயில். போக்குவரத்து அதிகமில்லை.

தூத்துக்குடியோடு நான்கு வழிச் சாலை முடிந்தது. அதன்பின்பு திருச்செந்தூர் வரைக்கும் சாலை கொஞ்சம் குண்டும், குழியுமாகத்தான் இருந்தது. இரண்டு பக்கமும் வறண்ட, மானவாரி நிலங்கள். நாங்கள் சென்றது பிப்ரவரி மாதம்; தமிழ் மாதம் என்றால் மாசி மாதம். எங்கள் பகுதியில் ‘மாசி மாசம் மச்சும் குளிரும்’ என்பார்கள்... ஆனால், திருச்செந்தூர் பகுதியில் வெயில் பிளந்து கொண்டிருந்தது. வண்டியில் ஏசியை எவ்வளவு கூட்டி வைத்தாலும், அது வெயிலின் கொடுமையைத் தணிக்கவில்லை. முதுகுப்பக்கம் டி-சர்ட் நசநசத்து, உடம்போடு ஒட்டிக் கொண்டது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், நாவறட்சி அடங்கவில்லை. வண்டியை இரண்டு முறை நிறுத்தி, இளநீர் குடித்தோம். வண்டியிலிருந்து இறங்கும்போது கண்கள் கூசும் அளவிற்கு வெயில் அடித்தது. அனற்காற்று முகத்தில் அறைந்தது. தாமிரபரணி நதி பாயும் ஆத்தூர் பகுதி மட்டும் கொஞ்சம் செழிப்பாக இருந்தது. மற்ற இடங்களில் எல்லாம் மரங்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. வெயிலைத் தாக்குப் பிடித்து நிற்கும் பனைமரங்கள்தான் அதிகம் இருந்தன.

east coast road 620

(கிழக்கு கடற்கரை சாலையில்...)

திருச்செந்தூருக்கு அடுத்து அழகான கிழக்கு கடற்கரை சாலை தொடங்கியது. அந்த சாலையின் அழகை நீங்கள் நேரில் சென்று பார்த்தால் மட்டுமே உணர முடியும். வளைந்து, நெளிந்து, மேலேயும், கீழேயும் ஏறி இறங்கும் சாலை. ஆங்காங்கே ரம்மியமான கடல்பரப்பு உங்கள் கண்ணுக்குத் தெரியும். தேரி மணலும், பனைமரங்களும் நெஞ்சை அள்ளும். பச்சைப் பசேல் என்று இருப்பது ஒரு வகை அழகு என்றால், இதுவும் ஒருவகை அழகுதான்.

இந்த அழகு ஏன் எந்த ஒரு தமிழ் சினிமாவிலும் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே, இடையன்குடி செல்லும் சாலையில் பிரிந்தோம்.

எல்லா கிராமங்களையும் போலவே, இடையன்குடியும் வெறிச்சோடிக் காணப்பட்டது. படித்தவர்கள் வேலைவாய்ப்புகளின் பொருட்டு, பெருநகரங்களில் குடியேறிவிடுவதும், அதற்கு முந்தைய தலைமுறையினர் மட்டுமே கிராமங்களில் வசிப்பதும் அனைத்து கிராமங்களிலும் நடப்பதுதானே! ஒரு கடைப் பக்கமாக வண்டியை நிறுத்தி, கால்டுவெல் நினைவிடத்திற்கு வழி கேட்டோம். நேரே போகச் சொன்னார்கள்.

எந்த வகையில் பார்த்தாலும், இடையன்குடி ஒரு வெள்ளையர் தங்குவதற்கு ஏதுவான இடமல்ல. எந்த ஒரு பெரிய நகரமும் அருகில் இல்லை. கன்னியாகுமரி – சென்னை சாலையைப் போல் எந்த ஒரு பெரிய வழித்தடமும் அருகில் இல்லை. கடற்கரையை ஒட்டி இருக்கிற ஊரும் இல்லை. விருதுநகர், பொள்ளாச்சி போல் மிகப் பெரும் சந்தை நடைபெறுகிற இடமோ அல்லது சிவகாசி, ஈரோடு போன்ற தொழில்வளம் நிறைந்த ஊரோ அல்லது தஞ்சை, பாபநாசம் போல் நீர்வளம் நிரம்பிய விவசாயப் பகுதியோ இல்லை. இப்போதே இப்படி என்றால், கால்டுவெல் காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்த ஊரில்தான் கால்டுவெல்லும், அவரது குடும்பத்தினரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கிறார்கள்.

சம்பளம் அதிகமாக கிடைத்தால் கூட புனே, டெல்லியில் இருக்க முடியாமல், ஓரிரு ஆண்டுகளிலேயே சென்னைக்கு மாற்றலாகி வந்துவிடும் மென்பொறி வல்லுனர்களை நிறையப் பார்த்திருக்கிறேன். மிகவும் சொகுசான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றாலும்கூட, முதுமைக்காலத்தில் தமிழத்திற்குத் திரும்பும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறோம். தாய்மண்ணின் மீதான பற்றுதல் அப்படி. ஆனால், பாலைவனம் ஒத்த அந்த இடையன்குடியில்தான் கால்டுவெல் தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தார். தனது உடல் அங்குதான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார் என்றால், அந்த ஊரையும், மக்களையும் எந்தளவிற்கு நேசித்தார் என்பதை உணர முடிகிறது.

(தொடரும்)

- கீற்று நந்தன்

Pin It

பாண்டிய நாட்டு சவுராஷ்டிரா மக்கள் நெசவு செய்த பட்டுத் துணிகளை சேர நாட்டு அரச குடும்பங்கள் விரும்பி வாங்குவார்களாம். அதனால் சவுராஷ்டிரா மக்கள் தாங்கள் நெய்த துணிகளை விற்பனைக்காக சேர நாட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்படி ஒரு சவுராஷ்டிரா வணிகர் தனது மகள் புஷ்கலையுடன் சேர நாட்டுக்குப் பயணிக்கிறார். ஆரியங்காவு என்னும் ஊரை அடைந்தபோது, இருட்டி விடுகிறது. அன்றிரவு அங்கே இருக்கும் கோயிலில் இருவரும் தங்குகின்றனர். கோயிலில் சிலையாக இருந்த அய்யப்பனின் உருவ அழகைக் கண்டு, புஷ்கலை மயங்குகிறாள்; அய்யப்பன் மீது காதல் கொள்கிறாள். மறுநாள் தந்தையுடன் கிளம்ப மறுக்கிறாள். தான் இந்தக் கோயிலிலேயே தங்கப் போவதாகவும், திரும்பி வரும்போது தன்னை அழைத்துச் செல்லுமாறும் கூறுகிறாள். தந்தை ஏதோதோ சமாதானம் கூறியும், புஷ்கலை கேட்கவில்லை. வேறுவழியின்றி, கோயில் மேல்சாந்தியின் பொறுப்பில் மகளை விட்டுவிட்டு, பயணத்தைத் தொடர்கிறார்.


முந்தைய பகுதிகள்:

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 2

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 4

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 5

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 6

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 7

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 8

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 9


அடர்ந்த காட்டின் வழியில் பயணிக்கும்போது, மதம் கொண்ட யானை ஒன்றிடம் மாட்டிக் கொள்கிறார். அச்சமுற்ற வணிகர், ஆரியங்காவில் பார்த்த அய்யப்பனை நினைத்து, தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டுகிறார். அப்போது அங்கு வாலிப வயதில் ஒரு வேடன் வருகிறான். அவன் யானையை சைகையாலேயே அடக்குகிறான். மகிழ்ச்சி அடைந்த வணிகர், பட்டாடை ஒன்றைப் பரிசாக அளிக்கிறார். வேடன் அதை அப்போதே அணிந்து, அந்த ஆடையில் தான் எப்படி இருப்பதாக வணிகரிடம் கேட்கிறான். “மாப்பிள்ளை போல் இருக்கிறீர்கள். உங்களுக்கு வேறு என்ன வேண்டும்?” என்று கேட்கிறார். “என்ன கேட்டாலும் தருவீர்களா?” என்று வேடன் கேட்க, “என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறீர்கள். என்ன வேண்டுமானாலும் தருவேன்” என்று வணிகர் பதில் சொல்கிறார். “அப்படியென்றால் உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறான் வேடன். வணிகரும் சரி என்று சொல்ல, “திரும்பி வரும்போது ஆரியங்காவு கோயிலில் என்னை சந்தியுங்கள்” என்று சொல்லிவிட்டு வேடன் சென்று விடுகிறான்.

aariyankavu 600

(ஆரியங்காவு கோயில்)

வியாபாரத்தை முடித்துவிட்டு, ஆரியங்காவு திரும்பிய வணிகர், மகளைக் காணாது திகைக்கிறார். கோயில் சாந்தியும், வணிகரும் இரவு முழுவதும் தேடியும் புஷ்கலை கிடைக்கவில்லை. களைப்பு மேலிட, மேல் சாந்தி தூங்கிவிடுகிறார். கனவில் அய்யப்பன் தோன்றி, புஷ்கலையை தன்னுடன் அய்க்கியப்படுத்திக் கொண்டதாக கூறுகிறார். கனவு கலைந்து எழுந்த மேல்சாந்தி நடந்ததை வணிகரிடம் கூறுகிறார். காலையில் கோயில் திறந்து பார்க்கிறார்கள். காட்டில் வணிகர் கொடுத்த பட்டாடை அய்யப்பனின் இடுப்பில் உள்ளது. பக்கத்தில் புஷ்கலை தேவி வீற்றிருக்கிறார். மகளுக்கு முக்தி கிடைத்ததை உணர்ந்த வணிகர், மதுரை திரும்புகிறார். இப்படி ஒரு கதையை தல புரணமாக சொல்கிறார்கள்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 9ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் அய்யப்பன் - புஷ்கலை திருமண உற்சவம் கொண்டாடப்படுகிறது. பெண்வீட்டாராக மதுரை சவுராஷ்டிரா மக்கள் ஆரியங்காவுக்கு சீர்வரிசை கொண்டு செல்கிறார்கள்.

மதம் கொண்ட யானையை அய்யப்பன் அடக்கியதால், ஆரியங்காவு அய்யப்பனுக்கு ‘மதகஜ வாகன ரூபன்’ என்ற பெயரும் உண்டு. மாப்பிள்ளை கோலத்தில் அய்யப்பன் இங்கு அருள் பாலிப்பதால், திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கினால், விரைவில் திருமணம் நடக்கும் என்று நம்புகிறார்கள். இக்கோயில் செங்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

அய்யப்பனின் சரவீடுகளில் எருமேலி, சபரிமலை கோயில்கள்தான் சுத்தமற்றுக் காணப்படுகின்றன. இங்குதான் பக்தர்கள் அதிகம் செல்கின்றனர். அச்சன்கோவில், குளத்துப்புழா, ஆரியங்காவு கோயில்களுக்கு அய்யப்ப பக்தர்கள் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனால் குறைவான பக்தர்களே செல்கிறார்கள்; கோயில்களும் சுத்தமாகக் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது, இந்த மூன்று கோயில்களுக்கு மாலை போட்டு, விரதமிருந்துதான் செல்ல வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. பெண் பக்தர்களுக்கு எந்த வயதுக் கட்டுப்பாடும் இல்லை. அப்பம், அரவணை இங்கும் கிடைக்கிறது.

***

பூஜை முடிந்ததும், கோயில் வளாகத்திற்குள் இருந்த ஒரு மரத்தடியில் பக்தர்களுடன் உட்கார்ந்தேன். பயணத்தின் நான்காவது மற்றும் இறுதி நாள் இது. ஆனால் வீட்டை விட்டு வந்து, எத்தனையோ நாட்கள் ஆனதுபோல் இருந்தது. அலுவலக நாட்கள் அல்லது வார விடுமுறை நாட்கள் என்றால், புதிதாக ஒரு அனுபவம் கிடைப்பதே அரிது. வழக்கமாக அல்லது எதிர்பார்த்தபடியே தான் பொழுது கழியும். ஆனால், இந்த நான்கு நாட்களில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. புதிய இடங்கள், புதிய கதைகள், புதிய நபர்கள் என பெற்றது மிக அதிகம். அதுவும் நான்கு நாட்களும் காலை நான்கு அல்லது ஐந்து மணியிலிருந்து இரவு 12 வரை உயிரோட்டமாகக் கழிந்தது. ஒரு நாளைக்கு 4 மணி நேரத் தூக்கம் மட்டுமே இருந்தது. அத்தனையும் சேர்ந்து நான்கு நாட்கள் என்பதை ஏதோ நாற்பது நாட்கள் போலக் காட்டின. சென்னையில் நாற்பது நாட்களில் கிடைக்காத அனுபவங்கள் இந்த நான்கு நாட்களில் கிடைத்தன.

aariyankavu 601

(ஆரியங்காவில் சரவணன், இரவி மாமாவுடன் நான்)

கோயிலில் அரைமணி நேரம் பொழுது போக்கி விட்டு, அங்கிருந்து குற்றாலம் நோக்கி கிளம்பினோம். குற்றாலத்தை நாங்கள் அடைந்தபோது மதியம் 1.30 மணி இருக்கும். சீஸன் இல்லாத நேரம் என்றாலும், அய்யப்ப பக்தர்களுக்காக குற்றாலம் பரபரப்பாக இருந்தது. மெயின் அருவி அருகே இருந்த ஒரு சத்திரத்தை எங்கள் குழுவினர் பிடித்தனர். மதிய சாப்பாடுக்குத் தேவையான சமையல் பொருட்கள், பாத்திரங்களை இறக்கி வைத்தனர். சமையல்காரர்கள் உணவு தயாரிப்பு வேலைகளில் இறங்க, பக்தர்கள் அருவிப் பக்கம் சென்றனர்.

மழைக் காலத்தில் மொட்டை மாடியிலிருந்து மழை வடிகால் குழாய் மூலம் எந்தளவிற்கு தண்ணீர் வருமோ, அந்தளவிற்குத் தான் அருவியில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதில் குளிப்பதற்கு 30, 40 பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அந்த வரிசையில் சேர விருப்பமில்லாமல், நானும், சரவணனும் கடைவீதிப் பக்கம் போனோம். நேந்திரம் சிப்ஸ் வாங்கினோம். சரவணன் அவனது குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள் வாங்கினான். சத்திரத்திற்குத் திரும்பி, கொஞ்சம் ஓய்வெடுத்தோம். 3.30 மணி வாக்கில் மதிய சாப்பாடு தயாரானது. சோறு, சாம்பார், ரசம், அப்பளம், பருப்பு பாயாசம் என சாப்பாடு அமர்க்களமாக இருந்தது. அதிலும் பருப்பு பாயசத்தின் சுவையும், மணமும் இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்றது.

ஐந்தரை மணி வாக்கில் குற்றாலத்திலிருந்து கிளம்பினோம். சில பக்தர்கள் இராஜபாளையத்திலிருந்து வந்ததால், அவர்களை இறக்கிவிடும் பொருட்டு, இராஜபாளையம் வழியாக வண்டிகள் சென்றன. இரவு 9 மணி வாக்கில் அருப்புக்கோட்டை சிவன் கோயில் வந்தடைந்தோம். அங்கு இரவி மாமாவின் டாடா சுமோ காருடன் அவரது நண்பர் காத்திருந்தார். இரவி மாமா வீட்டிற்குச் சென்றோம். சரவணனது Maruthi Ritz அங்குதான் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு, மீண்டும் சிவன் கோயிலுக்கு வந்தோம்.

பொறுப்பாளர்கள் பிரசாதப் பைகளை கட்டிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு பக்தராக குரு சாமி அழைத்தார். வழக்கப்படி அவர்கள் குரு சாமி விழுந்து, பைகளைப் பெற்றுக் கொண்டார்கள். எனக்கும் ஒரு பிரசாதப் பை இருக்கிறது என்று சொன்னார்கள். இரவி மாமா என்னிடம் “குரு சாமி காலில் விழுந்து வணங்கிவிட்டு, வாங்கிக் கொள்” என்று சொன்னார்கள்.

“மாமா... நான் சுயமரியாதைக்காரன். யார் காலிலும் எதன் பொருட்டும் விழ மாட்டேன்.” என்று மறுத்தேன்.

குரு சாமி என்னை அழைக்கும்போது, அவரிடம் பயண ஏற்பாடு சிறப்பாக இருந்தன என்றும், பொறுமையுடன் எங்கள் அனைவரையும் வழிநடத்திச் சென்றதற்கு நன்றி என்றும் கூறினேன். குரு சாமி, “அடுத்த ஆண்டு மாலை போட்டு வருவீர்கள் என நம்புகிறேன்” என்று கூறினார். நான் புன்னகைத்தவாறு விடை பெற்றுக் கொண்டேன்.

***

விருதுநகர் சாலையில் சரவணன் கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.

“இந்தக் குழு இரண்டு மாதங்கள் கழித்து, திருச்செந்தூருக்கு பாதயாத்திரை போகிறார்கள். நானும் போவதாக இருக்கிறேன். நீயும் வருகிறாயா?” என்று கேட்டான்.

aariyankavu 602

(ஆரியங்காவில் நாகராஜ சிலைகளின் முன்பு)

“வாய்ப்பு இருந்தால் நிச்சயம் வருகிறேன்” என்று பதில் சொன்னேன்.

“அடுத்த ஆண்டு சபரிமலைக்கு வருவாயா?”

“இல்லை. வர மாட்டேன். நான் திருச்செந்தூருக்கு வருகிறேன் என்று சொன்னது, அந்த நடைபயண அனுபவம் எப்படி இருக்கிறது என்று உணரத்தானே தவிர, பக்தியினால் அல்ல. இந்த முறை சபரிமலை வந்ததும் அப்படித்தான். சபரிமலையில் என்னதான் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் வந்தேன். அடுத்த ஆண்டும் அதே இடத்திற்குச் செல்வது வீண். அதுவும் அங்கிருக்கும் அசுத்தத்திற்கு மீண்டும் ஒரு முறை அங்கு செல்லும் எண்ணமே எனக்கு வராது”

“உனக்கு எப்படியோ, எனக்கு இந்தப் பயணம் பிடித்திருந்தது. அடுத்த வருடமும் போகப் போகிறேன்” என்றான். ‘அசிங்கம் இருக்கிறது; அந்தப் பக்கம் போகாதே’ என்று சொல்லத்தான் முடியும். மீறிப் போவேன் என்று அடம்பிடிப்பவர்களுடன் மல்லுக்கட்டவா முடியும்?

***

சரவணனை வீட்டில் விட்டுவிட்டு, அவனது காரை எடுத்துக் கொண்டு கோவில்பட்டி வந்தேன். இரவு 1 மணி இருக்கும். எனக்காக ஹேமா காத்துக் கொண்டிருந்தாள். முதலில் போய் குளித்தேன். பேக்கில் இருந்த துணிகளை எல்லாம் எடுத்து, மற்ற அழுக்குத் துணிகளோடு போடாமல், தனியாகப் போட்டேன். பம்பை, சபரிமலையில் வெறும் தரையில் குப்பைகளோடு குப்பையாய் படுத்துக் கிடந்தபோது போட்டிருந்த துணிகள். அத்தையிடம் சொல்லி, இரண்டு முறை வாஷிங் மெஷினில் போட்டு எடுக்கச் சொல்ல வேண்டும்.

பயண அனுபவங்களை எல்லாம் ஹேமாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். தூங்குவதற்கு மூன்று மணி ஆகிவிட்டது.

குரு சாமி எனக்குக் கொடுத்த அன்பளிப்பு பணத்தை அத்தையிடம் கொடுத்தேன். “இதன் மூலமாக கோடி, கோடியாக பணம் கொட்டினால், அதில் எனக்கு 50% கொடுத்து விட வேண்டும்” என்று சொன்னேன்.

“50% என்ன... முழுவதும் கொடுத்து விடுகிறேன்” என்று பதில் சொன்னார்கள்.

மறுநாள் காலை 11 மணிக்கு சரவணன் அழைத்தான். மதியம் வீட்டில் விருந்து இருக்கிறது என்று என்னையும், ஹேமாவையும் அழைத்தான். போனோம்.

செப்டிக் டேங்க் போன்ற பம்பை நதியில் சரவணன் குளித்தான் அல்லவா? அப்போது பயன்படுத்திய துணிகளை ஒரு வாளியில் போட்டு, முக்கி எடுத்து, அந்தத் தண்ணீரை வீடு முழுக்கத் தெளித்துக் கொண்டிருந்தான். புனிதமாம்!

***

ஜனவரி மாதக் குளிரில் அலைந்தது, அதிகாலையில் பச்சைத் தண்ணீரில் குளித்தது, தூக்கமில்லாமல் திரிந்தது, பயண அலுப்பு எல்லாம் சேர்ந்து மறுநாள் சளி, இருமலுடன் காய்ச்சல் பிடித்துக் கொண்டது. ஒரு நாளில் சரியாகி விடும் என்று பார்த்தால், சரியாகவில்லை. சரவணனுக்கும் அதே சளி, காய்ச்சல்.

நெய்த் தேங்காயிலிருந்து கொஞ்சம் நெய்யை எடுத்து, உடம்பு சரியில்லாதபோது தடவிக் கொள்ளச் சொல்லி, சரவணனுக்கு குரு சாமி கொடுத்தார் அல்லவா? (எனக்குத் தரவில்லை). அதை தடவியிருப்பான் என்று நினைத்தேன்.

ஆனால், அவன் “இப்போதுதான் டாக்டரைப் பார்த்து, ஊசி போட்டுவிட்டு வருகிறேன்” என்றான்.

“குரு சாமி கொடுத்த நெய்?”

“அது வீட்டில் இருக்கு”

***

அய்யப்ப பக்தர்களுக்கு சில கேள்விகள்:

இந்து மதப் புராணங்களின்படி, அய்யப்பன் பிறந்தது கிருத யுகத்தில். பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, பூமியில் அவதரிக்கும் அய்யப்பன் மகிஷியை வதம் செய்துவிட்டு, இருபது வயதுகளிலேயே முக்தி அடைந்துவிடுகிறார். அதாவது 17,28,000 ஆண்டுகள் நீளம் கொண்ட கிருத யுகத்திலேயே அவரது வாழ்க்கை முடிந்துவிடுகிறது. கலிகாலத்தில்தான் - அதுவும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தான் - இஸ்லாமிய மதம் தோன்றியதும், அரேபியர்கள் இந்தியா வந்ததும். அப்படியென்றால், கிருத யுகத்தில் அதாவது 21,60,000 ஆண்டுகளுக்கு முன்பு முக்தியடைந்த அய்யப்பனுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வாபர் நண்பர் ஆனது எப்படி?

மதுரைக்கு சவுராஷ்டிரா மக்கள் குடிபெயர்ந்து வந்தது கி.பி. 16ம் நூற்றாண்டில். கிருதயுகத்தில் பிறந்து, மடிந்த அய்யப்பன், கலியுகத்தில் பிறந்த சவுராஷ்டிரா பெண்ணான புஷ்கலாவை மணந்தது எப்படி? கிருத யுகம், கலியுகம் முதலான கட்டுக்கதைகளை எங்களைப் போன்ற பகுத்தறிவுவாதிகள் நம்பவில்லை. ஆனால் அவற்றை நம்பும் பக்தர்களே, நீங்கள் யோசித்துப் பாருங்கள்... உங்கள் காலக் கணக்குப்படி பார்த்தால், அய்யப்பன் வரலாற்றில் நான் மேலே சொன்ன பெரிய ஓட்டை எப்படி வந்தது? காரணம் என்னவென்றால், இந்தக் கதையெல்லாம் பக்தர்களை மடையர்களாக நினைத்து புளுகப்பட்டிருப்பவை. நீங்கள் அந்தப் புளுகையெல்லாம் அப்படியே நம்புவதால்தான், ‘ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்கும். அப்படி பிறந்த குழந்தைதான் அய்யப்பன்’ முதலான அறிவுக்கு ஒவ்வாத கதைகளை எல்லாம் எழுதிக் கொண்டே போகிறார்கள். உலகில் வேறு எந்த மதத்திலாவது இவ்வளவு கேவலமான, முட்டாள்தனமான கதைகள் உண்டா?

அய்யப்பனுக்கு மாலை போட்ட பின்பு, வீடுகளில் நீங்கள் எத்தனை சுத்தம் பார்க்கிறீர்கள்? அதில் ஒரு சதவீதமாவது சபரிமலையிலும், பம்பையிலும் இருக்கிறதா?

என்னுடன் சபரிமலைக்கு வந்த பக்தர்களில் ஒருவரிடம் “இனி இந்த ஆண்டு பொய் சொல்லாமல், யாரையும் ஏமாற்றாமல் தொழில் செய்வீர்களா?” என்று கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே “தொழில் வேற; பக்தி வேற” என்று சொல்லி விட்டார். ஆண்டு முழுவதும் பொய் சொல்லி, பிறரை ஏமாற்றிச் சம்பாதித்து, ஒழுக்கமில்லாமல் வாழ்ந்துவிட்டு, ஒரு மண்டலம் விரதமிருந்து சபரிமலைக்குச் சென்று வந்தால், அய்யப்பன் உங்களை மன்னித்து விடுவாரா? அய்யப்பனை அந்தளவுக்கு அப்பாவியாகக் கருதுகிறீர்களா?

உங்களை யாராவது கூவம் நதியில் தள்ளிவிட்டால், எவ்வளவு கோபம் வரும்? அதைவிட அசுத்தமான பம்பை நதியில் வருடா வருடம் குரு சாமி உங்களைத் தள்ளி விடுகிறார். நீங்கள் என்னடாவென்றால் அவரது காலில் விழுந்து வணங்குகிறீர்கள்!

200 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டித் தருகிறீர்கள். அதில் பாதியையாவது திருவிதாங்கூர் தேவஸ்தானம் உங்களுக்காக செலவிடுகிறதா? தங்குமிடம், உணவு எதிலாவது தரம், சுத்தம் இருக்கிறதா?

இவ்வளவு அசுத்தத்திற்கும் ஒரேயடியாக திருவிதாங்கூர் தேவஸ்தானத்தை மட்டுமே பொறுப்பாக்க முடியாது. இன்னொரு காரணம் பக்தர்களாகிய நீங்கள்தான். ஒரு நாளைக்கு 5 இலட்சம் பேர், 10 இலட்சம் பேர் என்று நீங்கள் குவிந்தால், யார்தான் சமாளிக்க முடியும்? மகர பூஜையன்றுதான் அய்யப்பனை தரிசிக்க வேண்டும் என்று என்ன கட்டாயம் இருக்கிறது? கடவுளைக் கும்பிடுவதற்குக்கூட காலம், நேரம் பார்க்க வேண்டுமா? ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களிலும் சபரிமலை கோயில் திறக்கப்படுகிறது. அப்போது சென்று தரிசித்தால், அய்யப்பன் வேண்டாம் என்று சொல்கிறாரா?

தற்போது தமிழ்நாட்டிலும் அய்யப்பன் கோயில்கள் நிறைய இருக்கின்றன. அங்கு சென்று வழிபட்டால் ஆகாதா? தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும் உங்களது கடவுள் தமிழ்நாட்டுக் கோயில்களில் இருக்க மாட்டாரா?

ஒரு முறை சென்றாலே அத்தனை பலன்களும் கிடைத்து விடும்போது, ஆண்டுதோறும் செல்வது தேவையற்ற செலவுதானே?

ஆண்டுதோறும் சபரிமலை செல்கிறீர்கள். அதனால் வாழ்க்கையில் கிடைத்த முன்னேற்றம் என்ன என்று என்றாவது யோசித்துப் பார்த்தீர்களா? எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை செல்கிறார். அவர் இன்றளவும் அன்றாடங் காய்ச்சியாகத்தான் இருக்கிறார். பத்து ஆண்டுகளில் இரண்டு முறை மிகப் பெரிய விபத்துக்களைச் சந்தித்து, படுத்த படுக்கையாக மாதக்கணக்கில் கிடந்தார். இவரைப் போல் எத்தனை பக்தர்கள் கஷ்டப்படுகிறார்கள்? சபரிமலை போய்விட்டுத் திரும்பும்போது, விபத்தில் மரணித்தவர்கள் எத்தனை பேர்? அய்யப்பனின் சக்தி இவ்வளவுதான் என்றால், அவரைப் பிடித்துத் தொங்குவதன் அவசியம் என்ன? சாமியைக் கும்பிட்டுத்தான் தீருவேன் என்றால், அதற்கு ஊரில் இருக்கும் ஏதாவது மாடனையோ, கருப்பசாமியையோ கும்பிட்டுப் போகலாமே!

அய்யப்பன் மீது உங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கிறதா? அய்யப்பனுக்குப் படைத்த நெய், தீராத வியாதியை எல்லாம் தீர்க்கும் வல்லமை கொண்டது என்கிறீர்கள். ஆனால், உடல்நலம் சரியில்லை என்றால், அய்யப்பனை நம்பி, அந்த நெய்யைத் தடவாமல், மருத்துவமனைக்குத்தானே ஓடுகிறீர்கள்?

அய்யப்பனுக்கு பூர்ணா, புஷ்கலை என இரண்டு பொண்டாட்டிகள் இருக்கும்போது, அவரை பிரம்மச்சாரி என்று சொல்வது ஏன்?

அப்படியே பிரம்மச்சாரி என்றாலும், வயதுக்கு வந்த பெண்களைப் பார்த்தால் தன்னுடைய பிரம்மச்சரிய விரதம் கெட்டுவிடும் என்று பயப்படும் அளவுக்கு அய்யப்பன் பலவீனமானவரா?

***

ஆடைகளின்றி, முடி மழிக்காமல், சுத்தமற்று இருந்ததுதான் ஆதிமனிதனின் வாழ்க்கையாக இருந்தது. சுத்தமாக இருப்பது, சக மனிதர்களை மதிப்பது, தன்னைத் தேடி வந்தவர்களை வரவேற்று, வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து விருந்தோம்புவது எல்லாம் மனித குலம் வளர்ச்சிப் போக்கில் தன்னிடம் சேர்த்துக் கொண்ட மாண்புகள். இந்த மாண்புகளை எல்லாம் தொலைக்கும் இடமாக சபரிமலை இருக்கிறது.

இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் தவறாமல் செல்லும் மாநிலங்களில் கேரளா முதன்மையானது. ‘கடவுளின் தேசம்’ என்று விளம்பரப்படுத்தப்படும் மாநிலம். கேரளாவில் மூணாறு, திருவனந்தபுரம், கொச்சி, வயநாடு, ஆலப்புழா, கோழிக்கோடு, பாலக்காடு என பல்வேறு பகுதிகளில் பயணம் செய்திருக்கிறேன். சுற்றுலா முக்கிய வருமானமாக இருப்பதால், கேரள அரசு பயணிகளுக்கு செய்து கொடுத்திருக்கும் வசதிகள் அநேகம். சுற்றுலாத் துறையில் இந்தியாவின் பிற மாநிலங்கள், கேரளாவைவிட பல மடங்கு பின்தங்கி உள்ளதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், அந்த கேரளா வேறு, சபரிமலை இருக்கும் கேரளா வேறு.

எருமேலி, பம்பை, சபரிமலையில் கண்ட அசுத்தம், இப்போது நினைத்தாலும் என் உடலைக் கூசச் செய்கிறது. எனது வாழ்க்கையில் நான் மறுபடியும் போகவே விரும்பாத இடங்களாக அவை இருக்கின்றன. பக்தி என்ற பெயரில் மக்களை எந்தக் கீழ்நிலையிலும் வைத்திருக்கலாம் என்பதற்கு அடையாளங்களாக அந்த இடங்கள் இருக்கின்றன.

சபரிமலைக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் கூடும் இடம் திருப்பதி. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு அண்மையில் திருப்பதி சென்றிருந்தேன். திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அவ்வளவு சுத்தமாகப் பேணப்படுகிறது. ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஓர் இலவசக் கழிப்பறை இருக்கிறது. 50 ரூபாய்க்கு, 100 ரூபாய்க்கு எல்லாம் தங்கும் அறை கிடைக்கிறது; அதையும் சுத்தப்படுத்தி விட்டுத்தான் நமக்குத் தருகிறார்கள். மூன்றுவேளையும் சுவையான அன்னதானம் பரிமாறுகிறார்கள். அதுவும் காத்திருக்க அவசியமில்லாத வகையில், பெரிய பெரிய கூடங்களில்.... அங்கு இருக்கும் உணவு விடுதிகளிலும் தரமான உணவு, நியாயமான விலையில் கிடைக்கிறது. அங்கு செல்லும் பக்தர்களை மதித்து, அவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் திருப்பதி தேவஸ்தானம் செய்து கொடுக்கிறது.

ஆனால் சபரிமலை தேவஸ்தானம்? ஒவ்வொரு ஆண்டும் கோடிகளில் சம்பாதிக்கிறது. இந்த 2015ம் ஆண்டு மகரபூஜை முடிந்தபோது 200 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கிறது. ஆனால் பக்தர்களை மனிதர்களாகவேனும் மதிக்கிறதா? கேரளாவின் பிற பகுதிகளுக்கு வரும் பயணிகளைப் பார்த்து, பார்த்து கவனிக்கும் கேரள அரசு, சபரிமலைப் பயணிகளை அவ்வாறு கவனிக்கிறதா? ஆடு, மாடுகளை அடைக்கும் தொட்டிகூட சபரிமலையை விட சுத்தமாக இருக்கும். காரணம் என்ன? சபரிமலைக்குச் செல்லும் முக்கால்வாசி பக்தர்கள் தமிழர்கள்... எவ்வளவு கேவலமாக நடத்தினாலும் சொரணையற்று ஆண்டுதோறும் அங்கு செல்வதற்குத் தயாராக நம்மவர்கள் இருக்கிறார்கள்.

எத்தனையோ இடங்களுக்கு நாம் பயணிக்கிறோம். அவை இயற்கை அழகு நிறைந்த இடங்களாகவோ, கட்டடக் கலை சிறப்பு மிக்க கோயில்கள், மசூதிகள், தேவலாயங்கள், அரண்மனைகளாகவோ இருக்கும். அந்த இடங்கள் குறித்து பசுமையான நினைவுகள் இருக்கும்; மற்றவர்களுக்கு அந்த இடங்களைப் பரிந்துரைப்போம்; வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஒரு முறை செல்லலாம் என்றுகூடத் தோன்றும். ஆனால் இவை எதிலும் சேராத இடங்கள்தான் எருமேலி, பம்பை மற்றும் சபரிமலை. நம்மை மதிக்காதவர்கள் வீட்டுக்கு, விருந்துக்கு செல்ல மாட்டோம் அல்லவா? அந்த உணர்வுதான் சபரிமலைக்கு மீண்டும் செல்வதைத் தடுக்கிறது.

***

இந்த ஆண்டு சபரிமலை நடை திறந்தாகி விட்டது. ரஷ்யாவில் இருந்து பக்தர்கள் குழு வந்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வாபர் பள்ளிவாசலுக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று இந்துத்துவா சக்திகள் பேஸ்புக்கில் பிரச்சாரம் செய்து வருகின்றன.

நேற்று இரவு கோவில்பட்டி இலட்சுமி திரையரங்கில் 10.30 மணி காட்சிக்கு சென்று இருந்தேன். நான்கு இளவயது அய்யப்ப பக்தர்கள் டிக்கட் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். கோயில் திருவிழாவின்போதும், புதுப்பட ரிலீஸின்போதும் குடித்துவிட்டு ஆட்டம் போடுபவர்களாக இவர்களைப் பார்த்து இருக்கிறேன். விளக்குகள் அணைந்து, திரையில் எழுத்துக்கள் ஒளிர்ந்தபோது, ஒரு சிகரெட் எரிய ஆரம்பித்தது. ஒவ்வொரு இழுப்புக்குப் பின்னரும், சிகரெட் அடுத்த பக்தருக்கு கை மாறியது. சாமியே சரணம் அய்யப்பா!!

(முற்றும்)

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It