அலையின் சுழற்சியிலே,

இலைகள் தோன்றுகின்றன;

மடிகின்றன; இந்தச் சுழற்சி,

விரிவாக, நட்சத்திரங்களிடையே

மெதுவாகவே நிகழ்கிறது.

-    தாகூர்

என் வாழ்நாளில் மறக்க முடியாத மகத்தான ஓர் அனுபவம் ஏற்பட்ட நந்நாள் பொதிகையின் சிகரங்களில் ஏற்பட்டதுதான். பூங்குளம் என்னும் ஒரு மொட்டையான பாறையில் படுத்திருந்தபோது என்னைச் சுற்றி மஞ்சு தவழ்ந்து கொண்டிருந்தது. மெலிதாகத் தென்றல் வீசிக் கொண்டிருந்தது. திரைப்படப் பாடல்களில் வரும் தென்றலுக்கும், பொதிகை தென்றலுக்கும் அன்றுதான் வேறுபாடு தெரிந்தது. இறந்து போன உடலை உயிர்ப்பிப்பதற்கான வலிமை, அத்தென்றலுக்கு இருப்பதாக உணர்கிறேன். என்னுடைய இளவயதில் கானகத்தில் அலைந்த நாட்கள் என்னுடைய வாழ்க்கையை வேறு விதமாக மாற்றியமைத்தன. ‘பூங்குளத்தில்’ தான் தாமிரபரணி உற்பத்தியாகிறது.

பொதிகை மலையைப் பற்றி விரிவாக பார்க்கும் போது ஹாட்ஸ்பாட் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். ஹாட்ஸ்பாட் என்பதை உலகின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்று குறிப்பிடலாம். எங்குமில்லாத பல்லுயிர்ப் பெருக்கம், மிக அருகிப்போன அபாயத்தில் உள்ள மிருகங்கள், தாவரங்கள், வனப்பாதுகாப்பையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டிய இடமாக ஹாட்ஸ்பாட்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மறைந்து கொண்டிருக்கும் உயிரினங்களைப் பாதுகாக்கவும், மனிதன் அழித்தது போக மிஞ்சிபோன பல்லுயிர்ப் பெருக்கங்களைப் பாதுகாக்கவே இந்த ஹாட்ஸ்பாட் உருவாக்கப்பட்டது. 1988ல் பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் அறிஞர் நார்மன் மையர்ஸ் இக்கருத்தாக்கத்தை உருவாக்கினார். இப்பூவுலகில் ஹாட்ஸ்பாட்கள் நிலப்பரப்பில் 2.3 சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ளன. ஒவ்வொரு ஹாட்ஸ்பாட்டும் ஏற்கனவே தன்னுடைய 70% சதவீத இயற்கைப் பல்லுயிர்களை இழந்துவிட்டது. உலகில் இதுவரை ஹாட்ஸ்பாட்டுகளாக 34 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் இமயமும், பொதிகை மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளது.

ஹாட்ஸ்பாட்டுகளின் அடிப்படை இழையாக உள்ள கருத்தாக்கம் என்னவெனில் அழிந்து வரும் உயிரினங்கள், அதாவது திரும்பவும் உருவாக்க இயலாத தன்மையை இது கவனப்படுத்துகிறது. எனவே இதை பாதுகாப்பதே நமது தலையாய கடமை Bird life international என்னும் நிறுவனம் ‘218’ இடங்களில் அருகி வரும் பறவையினங்கள் உள்ளதாக குறிக்கிறது. ‘Global 200 Eco regions’ என்று இருநூறு இடங்களைச் சுற்றுச்சூழல் மதிப்புமிக்கதாகக் கூறுகிறது. இந்த ஹாட்ஸ்பாட்கள் சுற்றுச்சூழல் மதிப்புமிக்க இடங்களில் 60 சதவிகிதத்திற்கு மேல் உள்ளடக்கியுள்ளன.

‘ஹாட் ஸ்பாட்’ என்று ஒரு இடத்தை நாம் குறிப்பதற்கு அவ்விடம் 1,500 தாவரங்களைக் கொண்டதாகவும் (அதாவது உலகின் 5 சதவிகிதத்தை), இரண்டாவதாக அந்த இடம் தன்னுடைய சுயமான உயிரினங்களில் 70 சதவிகிதத்தை இழந்திருக்க வேண்டும். இந்த 34 ஹாட் ஸ்பாட்டுகளும் 1,50,000 அருகி வரும் தாவரங்களைக் கொண்டுள்ளன. அதாவது இவ்வுலகின் பாதி தாவரங்களை. இதைத் தவிர பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் அனைத்து பல்லுயிர்ப் பெருக்க நிகழ்வுகளும் அடங்கும்.

இந்தியாவின் ‘வளர்ச்சித் திட்டங்களால்’ மேற்குத் தொடர்ச்சி மலை பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. மக்கள்தொகைப் பெருக்கம், மரங்களை வெட்டுதல், விவசாயத்திற்கு காட்டை அழித்தல் ஆகியவற்றின் மூலமும் மேற்குத் தொடர்ச்சி மலை பல்வேறு அழிவுகளைச் சந்தித்து வருகிறது. வேட்டை, தொழிற்சாலைகள், போக்குவரத்து ஆகியவை நிரந்தரப் பிரச்சனைகளாகவும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் மேலைக் கடற்கரையோரத்தில் படிக்கட்டுகளைப் போல காட்சியளிப்பதால் இது (Western Ghats) மேலைப்படி என்று அழைக்கப்படுகிறது. தென்மேற்கு பருவக்காற்று மழையின் மூலம் ஜுன் முதல் செப்டம்பர் வரை பல்வேறு ஆறுகள் இம்மலையிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. இந்த ஆறுகளினாலேயே தமிழகத்தின் விவசாயம், குடிநீர், எரிசக்தி அனைத்தும் உருவாகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைச்சரிவுகளில் தொல் பழங்குடி மக்களான காணிக்காரர்கள், பறியர்க்காடர், இருளர், தொதவர், முதுவர், புலையர் போன்றவர்கள் வசிக்கின்றனர். பொதிகை மலையின் அடிவாரத்திலும் காணிக்காரர்கள் பெருவாரியாக வாழ்கின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியாக இலங்கையின் மலைகளும், காடுகளும் ஒரே ஹாட்ஸ்பாட்டாக அமைந்துள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியமான பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த, தொன்மையான புராணங்களும் தொன்மங்களும் நிறைந்த பகுதிதான் ‘பொதிகை’. தமிழகத்தையும் கேரளத்தையும் இரண்டாகப் பிரித்து, ஓங்கி நிற்கிறது இப்பொதிகை. தமிழகத்தின் தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம், காரை அணைக்கட்டுகளின் மேல்பகுதியே பொதிகை மலை என்று அழைக்கப்படுகிறது. பொதிகை மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 6.125 அடி உயரத்திலுள்ளது. 8.25&9.10 வடக்கு அட்ச மற்றும் 77.89&78.25 கிழக்குத் தீர்க்க ரேகையில் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அதிஉன்னதச் செழுமையான பகுதிகளைக் கொண்டுள்ளது இப்‘பொதிகை’. முழு மேற்குத் தொடர்ச்சி மலையுமே ஹாட் ஸ்பாட் என்று அழைக்கப்பட்டாலும், பொதிகை ஹாட் ஸ்பாட்டுகளின் ஹாட் ஸ்பாட்டாக அமைந்துள்ளது எப்படி என்று காணலாம்.

பொதிகையின் தன்மை

உண்மையில் பொதிகை மலையைப் பற்றி ஆய்வுகள் இல்லை. வாய்மொழிக் கதைகளும், புராணங்களும், தொன்மங்களுமே பொதிகை மலையை சிறப்பித்துள்ளன. எனினும் சங்க இலக்கியங்களில் பொதிகை மலை குறிப்பிடப்பட்டுள்ளது. மன்றப் பொதியில், தமிழ் மலை, பொதியப்பட்டு, அகத்தியர் மலை, மன பொதியம், தென்மலை, செம்மலை, குடைமலை, மலையாமலை, பொதியில் என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுவது பொதிகை மலையேயாகும். சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலையில் பொதிகை மலை தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது.

“பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே” (புறம் 2:8) புறநானூற்றுப் பாடல் ஒன்று இரு ஹாட் ஸ்பாட்களை அன்றே அடையாளப்படுத்தியுள்ளது. புராணங்களிலும் வெவ்வேறு இடங்களில் பொதிகை மலை வந்து போவது அதன் தொன்மையைக் காட்டுகிறது. மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் ‘பொதியில்’ என்று குறிப்பிடப்படுவது பொதிகை. ‘இரகு வம்சத்தில்’ காளிதாசர் பொதியமலையை குறிப்பிடுகிறார். பொதிகையில் உற்பத்தியாகும் தாமிரபரணியையும், அது சங்கமமாகும் இடத்திலுள்ள முத்துக் குளிக்கும் துறையான கொற்கையையும் குறிப்பிடுகிறார் காளிதாசர். வியாசபாரதம் இம்மலையை தாமிரபரணி என்று குறிப்பிடுகிறது. இது தேவர்கள் தவம் செய்யும் இறையுணர்வுமிக்க இடம் என்றும் குறிப்பிடப்படுகிறது.பொதிகை மலையில் ‘மகேந்திரகிரி’ என்ற இடம் உள்ளது. இவ்விடமே வால்மீகி இராமாயணத்தில் வரும் மகேந்திரமலையாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பொதிகையின் தமிழ் முனி அவலோகிதரா?அகத்தியரா?

என்னுடைய முதல் பொதிகைப் பயணத்தில் பூங்குளத்தை விட்டு இறங்கியபோது பதினைந்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் விசாரித்தபோது தாங்கள் புத்தரை தரிசிக்க வந்ததாகக் கூறினர். எனக்கு அது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. பின்பு வெகு நாட்களுக்குப் பிறகு முனைவர் ஜி.ஜான்சாமுவேலின் ‘பண்பாட்டுப் பயணங்கள்’ என்னும் நூலைப் படித்ததில் அவர் பொதிகை மலைக்கும், பௌத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி விரிவாக விளக்கியிருந்தார். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் பௌத்தம் தமிழகத்திற்கு வந்தது. பௌத்த இலக்கியங்களில் இம்மலை ‘போதலகிரி’ என்று குறிப்பிடப்படுகிறது.

தாராசூக்கம் என்னும் நூலில் அவலோகிதர் தன் மனைவி தாராதேவியுடன் வீற்றிருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தமிழ் வரலாறு’ எழுதிய இரா.இராகவையங்கார் அவலோகிதரைப் போதலகிரி நிவாஸிநி என்று குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டுகிறார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தோன்றிய மகாயான நூலான கந்தங்வவூவ்யூக சூத்திரம் தென்திசையிலுள்ள ‘பொத்தலகா’ என்ற மாலையில் ‘அவலோகிதர்’ வசித்ததாகக் குறிப்பிடுகிறது.

இந்தியாவிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் பௌத்தம் அழிக்கப்பட்டு பொதிகை மலையோடு அவலோகிதருக்கு இருந்த அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. காலப்போக்கில் அவலோகிதர் வீற்றிருந்த இடத்தில் அகத்தியர் இடந்தரப்பட்டார் என்றும் ஆனால் அகத்தியரை ஏற்றுக்கொள்ளாத பௌத்தர்கள், அகத்தியர் பொதிய மலைக்குச் சென்று அங்கு வீற்றிருந்த அவலோகிதரிடம் தமிழ் கற்றார் என்று கதையினை பௌத்தர்கள் ஏற்படுத்தினர் என்று ஜான் சாமுவேல் குறிப்பிடுகிறார்.

பௌத்த இலக்கண நூலான வீரசோழியத்தில்

“ஆயும் குணத்து அவயோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு

ஏயும் புவனிக்கு இயம்பின தண்டமிழ்”

என்று அகத்தியர் அவயோகிதரின் மாணவனாக வீற்றிருந்து தமிழ் கற்றார் என்பது குறிக்கப் பட்டுள்ளது.

பல்வேறு இலக்கியங்களின் மூலம் நாம் அறிவதென்பது ‘அகத்தியர்’ வட மாநிலத்திலிருந்து வந்தார் என்பதுதான். அவர் வந்தபோது பொதிகையில் அவலோகிதர் பொதிகை மாமுனியாக வீற்றிருந்தார் என்றும் நமக்குத் தெரிகிறது. எனினும் இவையாவும் விரிவான ஆய்வுகளின் மூலம் நிறுவப்பட வேண்டியவை. எனினும், பொதிகை மலையில் மாமுனி ஒருவர் தமிழை வளர்த்தார், உலகிற்கு தமிழ்க் கவிதையாக அளித்தார் என்று சொல்வது மிகையாகாது.

பொதிகையின் மகள் தாமிரபரணி

பொதிகையின் தொன்மையை தமிழர்கள் மட்டுமன்றி சீன யாத்ரிகர் யுவான் சுவாங் பொதிகையில் சந்தன மரங்களை சிலாகித்து எழுதி உள்ளார். தாலமி பொதிகைத் தென்றலை பதிவு செய்து எழுதியுள்ளார். பெரிபுளுஸ் ஆப் எரிதீரியன் சீ என்றும் கடற்பயண நூலை எழுதிய கிரேக்க மாலுமி பொதிய மலையைச் செம்ம என்று குறிப்பிடுகிறார். குமரிக்கண்ட கொள்கையின்படி எல்லாத் தொடர்ச்சிகளும் இருந்த காலத்தில் இவையனைத்துமே தாமிரபரணி என்று அழைக்கப்பட்டது. இன்று எல்லாவற்றின் நினைவாக பொதிகையிலிருந்து புறப்பட்டு புன்னைக்காயல் வரை தாமிரபரணி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. தாமிரபரணி என்பதற்கு சிவப்பு சந்தன மரக்காடுகளின் ஊடே பாய்ந்து ஓடுகிறது என்றும், தாமிரத்தின் நிறம் பெற்ற இலைகளிலிருந்து வரும் ஆறு என்றும் கூறுவன. எனினும் தமிழகத்தில் மூலிகைகளின் மருத்துவக் குணம் கொண்டு எப்பொழுதும் தண்ணீரோடு, வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருப்பது தாமிரபரணி ஒன்றுதான்.

பொருநை, தன் பொருநை, கண் பொருள் பொன்நிறத்துப்புனல் பெருகும் பொருநை தன் பொருத்தம், மகாநதி, தட்சிண கங்கை பொருநல் என்ற பெயர்களும் உண்டு. இவ்வாற்றின் மூலம் 2460 ஏரிகள், குளங்கள், 515 மைல் நீளமுள்ள 394 கால்வாய்கள், 3 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதி (நீளம் 225 கி.மீ), 149 புனித குளியல் கட்டிடங்கள், 3 மாவட்டங்களில் நாளன்றுக்கு 60 லட்சம் மக்கள் தங்கள் தாகத்தைத் தணித்து கொள்கின்றனர். இதன் கிளை, துணை நதிகளாக காரையாறு, பேயாறு உள்ளன. சேர்வலாறு, பாம்பாறு, மணி முத்தாறு, வராக நதி, ராம நதி, கடனா நதி, கள்ளாறு, கருணையாறு, பேச்சியாறு, சிற்றாறு, குண்டாறு, ஐந்தருவியாறு, ஹனுமா நதி, கருப்பா நதி, அமுத கன்னியாறு ஆகியன தொடர்ச்சியாக அமைந்துள்ளன. எட்டு அணைக்கட்டுக்கள் இதன் வழியே அமைந்துள்ளன. ஜூன் தொடக்கத்தில் மேலைக்காற்றும், தென் மேற்குப் பருவக்காற்றும் ஆரம்பிக்கிறது. ஜூன் 15க்குப் பிறகு முதல் வெள்ளம், இருமுறை தண்ணீர் கரைபுரண்டோடி முழு வெள்ளத்துடன் செழிப்பு வண்டல் மண் சமவெளியில் பாய்ந்தோட வேண்டும். ஆனால் இன்று இதில் நிறைய மாற்றங்கள், தொழிற்சாலைக் கழிவுகள், அதிபயங்கரமான மணல் கொள்ளை ஆகியவற்றால் இன்று தாமிரபரணி ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என விரைகிறது.

தாமிரபரணி தண்ணீரை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தில் பிசானம், கார், அட்வான்ஸ் கார் என மூன்று போகத்திற்கு தண்ணீர் வரத்து இருந்தது என சொல்லுகிறார்கள். ஆனல் இன்று சிப்காட், ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகளின் தேவைகளுக்காக ஆண்டு முழுவதும் நீர் பாய்ச்சப்படுகிறது. பிசானம் பருவ விவசாயத்திற்கு மட்டும் தாமிரபரணி நீர் கிடைக்கிறது. ஆலைகளுக்கே முதலிடம். விவசாயத்திற்கு அல்ல. தாமிரபரணி கடலில் கலக்கும் மன்னார் வளைகுடாவை யுனெஸ்கோ கடல்வாழ் உயிரினங்களுக்கான பாதுகாப்பு வளையமாக அறிவித்துள்ளது. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் தாரங்கதாரா கெமிக்கல்ஸ் பல ஆண்டுகளாக பாதரசம் உள்ளிட்ட மாசுக்களை தாமிரபரணி முகத்துவாரத்தில் கலக்க விடுகிறது.

தாமிரபரணி நதிக்கரையில் இரு உலக முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் எச்சங்கள் உள்ளன. ஒன்று ஆதிச்சநல்லூர். மற்றொன்று கொற்கை. ஆதிச்சநல்லூர் மூதமிழர்களின் வாழ்விடமாக (Proto Tamil) அறியப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகத்துக்கு இணையான நகரங்களும் தொன்மையும் நிறைந்த இடமாக ஆதிச்சநல்லூர் கருதப்படுகிறது. எனினும் இன்னும் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது இந்திய வரலாறே மாற்றம் பெறும் வகையில் ஆதிச்சநல்லூர் செயல்படும்.

கொற்கை தமிழர்களின் மிகத்தொன்மையான துறைமுகம். இது சங்ககால துறைமுகப் பட்டினமாகவும், பாண்டியர்களின் தலைநகராக இருந்துள்ளது. சங்கு குளித்தல், சங்¢கு அறுத்தல், முத்துக் குளித்தல் ஆகிய தொழில்களால் உலகப் புகழ் பெற்றிருந்தது. கோநகர் கொற்கை முத்து சிந்துவெளி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி என்பது வெறும் நதியல்ல, அது உலகப் பாரம்பரிய சின்னம். தாமிரபரணி தண்ணீரை குடித்து, கூடு கட்டி, குஞ்சுகள் பொரித்து, உயிர் வாழ்வதற்காக உலகெங்கிலுமிருந்து பறவைகள் கூந்தன்குளத்திற்கு வருகின்றன. பத்தமடை பாய்கள், திருநெல்வேலி அல்வா போன்ற அனைத்து பண்பாட்டு அடையாளங்களாகவும் விளங்குகிறது தாமிரபரணி. அத்தகைய அற்புத நீரை உருவாக்கி வழங்குகிறது பொதிகை மலை. காடுகள் என்பது கற்பனையான நிலப்பரப்பல்ல, அது நேரடியாக ஒவ்வொரு நிமிடமும் நம்மை பாதிக்கிற பொதிகை என்றும் அற்புதம்.

இவ்வளவு தொன்மைகளையும், அதிசயங்களை யும் உடைய பொதிகை இன்று எப்படி உள்ளது. இந்த ஹாட்ஸ்பாட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். மற்ற மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பகுதிகளைவிட இது இன்றும் அழியாமல் இருப்பதற்கு இங்கு பாதைகள் போடப்படாததுதான் காரணம். 2003ல் இக்காட்டின் வழியே பாதை போடப்பட வேண்டும் என்ற திட்டம் மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. இத்திட்டம் ஒருபோதும் வரக்கூடாது என்பதே நம் விருப்பம். மே மாதம் முதல் வாரத்தில் மட்டும் ஐந்தலைப் பொதிகையில் உள்ள அகத்தியரை வழிபட 2000க்கும் அதிகமான பக்தர்கள் சென்று வந்தனர். இப்பொழுது அதற்குத் தடை உள்ளது. ஆடி அமாவாசை சொரி முத்தைய்யனார் கோவிலுக்கு லட்சக்கணக்கில் மக்கள் வந்து தங்குவது வழக்கம். இவை இரண்டுமே பெரிய சுற்றுச்சூழல் சேதங்களை ஏற்படுத்தக்கூடியவை. வனத்துறையினரால் சிறப்பாக செயல் திட்டங்கள் தீட்டி இவற்றை நேர் செய்ய முடியும். மக்களும் இவ்வியற்கையை வழிபட்டாலே போதும். சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடாது என்ற மனோபாவத்தையும் வேண்டும்.

இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்தபடியாக அதிக மழை, அதாவது 4,300 மில்லி மீட்டர் மழை இங்கு பெய்து வந்தது. காலநிலை மாற்றத்தால் இது குறைந்திருக்கக்கூடும். மத்திய அரசு இதனை அகத்திய தேசியப் பூங்காவாக அறிவித்தது. வன உயிரினப் பாதுகாப்பு சட்டம், 1970 வனப்பாதுகாப்புச் சட்டம் 1980, 2005 பல்லுயிர் பாதுகாப்பு மசோதா, 2006 வன உரிமைச் சட்டம். இவ்வளவு சட்டங்களோடு ஹாட் ஸ்பாட் என்னும் தகுதியோடு பொதிகை இருந்து வந்தாலும், வனம் அழிந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. முன்பு இஞ்சிக்குழியில் நிறைய காணி மக்களின் குடியிருப்புகள் இருந்து வந்தன. களக்காடு&முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் பேரில் ஆதிவாசி மக்கள் காடுகளில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டனர். காடுகளையும், பழங்குடி மக்களையும் பற்றிய தவறான பார்வைதான் இது. பழங்குடி மக்கள் காடுகளைப் பாதுகாப்பார்கள். அவர்களுடைய பாரம்பரிய மருத்துவ, கானக அறிவை யாரும் நம்பத் தயாரில்லை. இன்னும் சொல்லப்போனால் பொதிகை மலையின் பாதைகளையும், தட்பவெப்ப நிலையையும் அறிந்தவர்கள் காணிக்காரர்கள் மட்டுமே. பொதிகைத் தாவரங்களின் மருத்துவ குணங்களை அறிந்தவர்கள் அவர்கள் மட்டுமே.

பொதிகை மலை முழுவதுமே சித்தர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. சித்தர்கள் மூலிகைகள் குறித்த மிக ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தனர். இன்றும் பொதிகை மலை அதனுடைய மருத்துவ மூலிகைகளுக்காகவே போற்றப்படுகிறது. பொதிகை மலைக்குள் மட்டுமே 11 விதமான மழைக்காடுகள் இருக்கின்றன. வாழை வகைகளில் மட்டுமே 26 விதங்கள் உள்ளன என்று சித்த மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். 10 வருடத்திற்கு ஒரு முறை காய்க்கும் கல்வாழை இன்றும் பொதிகையில் உள்ளது. 10 மாதங்களுக்குள் காய்க்கும் வாழைக்கு நாம் வந்துவிட்டோம். குங்கிலியம் இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. குழவு என்ற மரவகை இங்கு உள்ளது, இதைக் கீறிவிட்டால் ஒரு குடத்திற்கு எண்ணெய் கிடைக்கும், இதைப் பாதுகாப்பது நம் கடமை. அழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் கல்தாமரை பொதிகை மலையில் அதிகமாகக் காணக் கிடைக்கிறது. பெட்ரோல் காய் எனப்படும் அகழிக்காய் இங்கு காணப்படுகிறது.

தென்னிந்தியாவின் மூன்றாவது பெரிய சிகரமாக விளங்கும் பொதிகையில் இன்று எல்லோருடைய கவனத்தைக் கவர்ந்து காடுகளின் தலையாய அடையாளமாக விளங்கும் ‘புலி’ அதிகமாகவே உள்ளது. இந்தியாவின் காரையாறு, 17வது புலிகள் சரணாலயம் இஞ்சிக்குழி பூங்குளம், நாகப்பொதிகை, ஐந்தலைப் பொதிகை வழியாக நாம் பயணிக்கும்போது எண்ணற்ற ஆறுகள் மலையின் வழியாக ஓடுவதையும் நாம் காணலாம். பாம்பாறு, பேயாறு, கல்லாறு, சேர்வலாறு, மயிலாறு இன்னும் எத்தனையோ சிற்றாறுகள். கிழக்கே பாயும் தாமிரபரணியைப் போல கேரளாவில் மேற்கே பாயும் தாமிரபரணியும் இங்கு உண்டு. இது களியக்காவிளைக்கும், மார்த்தாண்டத்திற்கும் நடுவே ஓடுகிறது. 800 வகையான உயிரினங்கள் இங்கு உள்ளன. புலி, யானை, கரடி ஆகியவற்றை நாம் சாதாரணமாகப் பார்க்க முடியும்.

தமிழ்நாட்டில் காணப்படும் 5,640 அதிகமான தாவரங்களில், 2,254 தாவரங்கள் பொதிகையில் காணப்படுகின்றன. அழிந்து வரும் தாவரங்களில் 533ல், 448 தாவரங்கள் பொதிகை மலையில் காணப்படுகின்றன. அதாவது மாபெரும் அபாயத்தில் உள்ள 230 தாவரங்களில் 58 இங்கு உள்ளன. மருத்துவக் குணம் கொண்ட 1,761 தாவரங்களில் 601 இங்கு உள்ளன. பாலூட்டிகளில் அழிந்து வரும் இனத்தில் 17 வகையும், பறவைகளில் 140, ஊர்வனவற்றில் 39ம், நீர்நிலவாழ்வில் ambibians 27ம் pisces 9 இங்கு காணப்படுகின்றன. அரிதான பறவைகளான பஞ்சவர்ணப் புறா (emerald dove) இருவாச்சி அல்லது மலைமொங்கானை (Horn bill) இங்கே பார்க்க முடியும். தமிழ் தேசிய விலங்கான வரையாடுகளும் இங்கு அதிகமாக உள்ளது. சிறுத்தை, சிறுத்தைப் பூனைகளையும் பொதிகை மலையில் நாம் பார்க்க முடியும். 

பொதிகை மலைப் பயணம் என்பது சாதாரணமான ஒன்று அல்ல. வாகனங்கள் செல்ல முடியாத பாதை, நடப்பதற்கும் மிகக்கடினமான ஒன்று. கன்னிகட், துலுக்கமொட்டை, தவிலடிச்சாடின் பாறை, பாண்டியன் கோட்டை என்று காணிக்காரர்கள் ஒவ்வொன்றாக விவரிக்கும்போது நாம் இயற்கையின் சங்கமமாக மெல்ல மாறிக் கொண்டிருப்பதை உணர முடியும். நாம் எதைத் தேடிப் பொதிகைக்கு பயணம் செய்கிறோம்? பல்லுயிர்ப் பெருக்கத்தின் வளங்களைப் பார்க்கவா, 100 அடிகளுக்கும் மேலாக வளர்ந்து நிற்கும் மரங்களைப் பார்க்கவா, மிருகங்களைப் பார்க்கவா, தாவரங்களைப் பார்க்கவா, அருவிகளைப் பார்க்கவா, மலையுச்சியிலிருந்து தெரியும் நமது ஊரை பார்க்கவா? காட்டின் ஒவ்வொரு வளைவிலும் நாம் நம்மையே பார்க்கிறோம். நாம் பெரிதாக மதிக்கும் வாழ்வின் தத்துவங்களும், லட்சியங்களும், பேராசைகளும், ஒவ்வொரு சிகரங்களில் ஏறும்போது தகர்த்துவிடுகின்றன. மலையுச்சியில் நாம் பறவையின் காட்சியையும், இறுதியாக பறவை மனதையும் அடைகிறோம். அதுவரை வாழ்ந்த வாழ்வில் ஒவ்வொரு இலையும், மலர்களும் நம்மைக் கேள்வி கேட்கிறன.

இயற்கையின் முன் ஏதுமற்றுப் போகிறோம். கடினமான பளுவோடு சிரமத்தோடு ஏறிச்சென்ற நம் மனது பறவையாகி மாறி, லேசாகி பறந்து, மிதந்து மீண்டும் நிலப்பரப்பிற்கு வருகிறோம். கீழேயிருந்து பொதிகையைப் பார்க்கும்போது, இலைகளாலும், மரங்களாலும் பொதிகை தன் ரகசியங்களை மூடிக்கொள்கிறது. இறுதியில் நாம் கற்றுக்கொண்டது ஏதுமில்லை, இயற்கையின் லயத்தையும், அன்பையும் தவிர.

(பூவுலகு ஜூலை 2012 இதழில் வெளியானது)

Pin It

சமீபத்தில் வேலை மாற்றலாகி புதுக்கோட்டை சென்றேன். புதுக்கோட்டை என்றதும் நண்பர்கள் அங்கிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பற்றி சொன்னார்கள். ஆவுடையார்கோவில், சித்தன்னவாசல், செட்டிநாட்டு கட்டிடங்கள் என்று புதுக்கோட்டையை சுற்றி இவ்வளவு இடங்களா என்று ஆச்சரியப்பட்டு போனேன். இதுமட்டுமல்லாமல் அமைதியான கடற்கரை, நண்டும் ஆமையும் ஓடும் வயல்வெளிகள் என்று சிவகாசி மாதிரி காய்ந்து கருகிப்போன இடத்தில் இருந்து அங்கு சென்ற எனக்கு பல விசயங்களும் குளுகுளுவென மனதுக்கு இனிமை தருவதாக இருந்தன.

நான் ரசித்த செட்டிநாட்டு கட்டிடங்களையும், கடற்கரையையும், சித்தன்னவாசல் படங்களையும் ஃபேஸ்புக்கில் போட்ட போது, என் பெருமதிப்பிற்குரிய ஐயா திரு.ரத்தினவேல் அவர்கள், எனது ப்ளாக்கில் சித்தன்னவாசல் அனுபவங்களை பற்றி எழுத கேட்டுக்கொண்டார். அவர் கேட்ட பெரும்பாலான விசயங்களை நான் செய்ய முயற்சி செய்வேன் (அவரிடம் வாங்கிய புத்தகங்களை திரும்ப கொடுப்பதை தவிர). அந்த வரிசையில் இந்த சித்தன்னவாசல் அனுபவ & பயணக் கட்டுரை.

siddhannavasal_1

புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சித்தன்னவாசல். 5ரூபாய்க்கு டோக்கன் வாங்கினால் யாரும் உள்ளே செல்லலாம். பூங்கா எல்லாம் கட்டி வைத்து அழகாக பராமரிக்கிறார்கள். பூங்காவில் தமிழன்னை சிலை போல் ஒன்று இருக்கிறது. என்னால் பூங்காவினுள் படம் எடுக்க முடியவில்லை. சாலை ஆரம்பத்தில் இருந்து டோக்கன் வாங்கி உள்ளே செல்லும் வரை வழிநெடுக பள்ளி கல்லூரி காதல் ஜோடிகள் தோள் மீது கையை போட்டுக்கொண்டு திரிகிறார்கள். இதில் பூங்காவில் நான் படம் எடுக்க, “என் ஆள ஃபோட்டோ எடுக்குறான், மாப்ள” என்று எவனாவது அடியாளை கூப்பிட்டால் என்ன ஆவது? பிழைக்க போன எடத்துல வம்பு வேண்டான்டா ராம்கொமாரு என்று கிளம்பிவிட்டேன். ஓவியப்பாறைக்கு. இங்கு வரும் பலரும் காதல் ஜோடிகளாகவே இருப்பதால் பார்க்கோடு தங்கள் சில்மிஷங்களை முடித்துக் கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். மேலே இருப்பது தான் ஓவியப்பாறைக்கு செல்லும் வழி.

அங்கு மத்திய அரசு ஊழியர் ஒருவர் இருப்பார். எனக்கு பல அரிய விசயங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் சொன்னவர் அவர் தான். அங்கிருக்கும் ஓவியங்களை பாருங்கள்.

இவை அனைத்தும் மேல் சுவரில் வரையப்பட்டிருக்கும் 3ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்கள். சுண்ணாம்பு பூசிய சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள். குளத்தில் நிறைய தாமரைகள் மலர்ந்துள்ளன, கொக்குகளும், மீன்களும், முதலையும் யானையும் இருக்கின்றன.. முனிவர் ஒருவர் குளத்தில் பூ பறிக்கிறார். அத்தனையும் அச்சு அசலாக தத்ரூபமாக இருக்கின்றன.. இந்த மாதிரி ஒரு ஓவியத்தில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?

siddhannavasal_2

முனிவர் நின்று பூ பறிப்பதும் யானை ஒன்று நிற்பதும் இதில் எவ்வளவு அழகாக வரையப்பட்டிருக்கிறது பாருங்கள். பூவிதழ்களின் வண்ணம், தண்டு, இலைகள், என்று ஒவ்வொன்றும் தங்களின் நிஜமான வண்ணங்களில் இந்த ஓவியத்தில் இருப்பதை பாருங்கள்.

siddhannavasal_3

இந்த ஓவியத்தை நான் இன்னும் தெளிவாக எடுப்பதற்குள் அந்த ஊழியர் என்னை தடுத்துவிட்டார். படங்கள் எடுக்க கூடாதாம். இந்த ஓவியத்தில் ஒரு பூ மொட்டாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரும்பி மலர்வதை மிகவும் தத்ரூபமாக வரைந்திருப்பார்கள். தங்க வண்ண பின்புலத்தில் வரைந்திருக்கிறார்கள்.

siddhannavasal_4

இது போன்ற ஓவியங்களும் இதை விட இன்னும் அழகான மாடர்ன் ஆர்ட்டும் நம்மில் பலர் பார்த்திருக்கலாம். ஆனால் இதில் என்ன சிறப்பு என்றால், நாம் இது வரையப்பட்ட காலத்தை கொஞ்சம் மனதில் வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும். 1700 ஆண்டுகளுக்கு முன் சமணர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் இவை. இவை வரையப்பட்ட காலத்தில் பெயிண்ட்டோ, வண்ணங்களை கொண்டு படம் வரையும் முறை கண்டுபிடிக்கப்படவில்லை. வெறும் சிற்பங்கள் மட்டும் தான் அப்போதைய காலத்தில். எப்படி இவர்கள் வண்ணங்களை கண்டுபிடித்தார்கள்? மூலிகைகள் மூலம் வண்ணங்களை உருவாக்கினார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் எது உண்மை என்று தெரியவில்லை. மேலும் அப்போதைய காலத்தில் பெயிண்ட் அடிக்க பிரஷ் எதுவும் கிடையாது. பின் எப்படி இவ்வளவு நேர்த்தியாக, சரியான அளவில் படம் வரைந்து வண்ணங்களை பரவ விட்டிருக்கிறார்கள்? இதுவும் மிகப்பெரிய கேள்வி தான். இந்தப்படங்கள் எல்லாம் மேல் சுவரில் வரையப்பட்டவை. அண்ணாந்து பார்த்துக்கோண்டே இந்த ஓவியங்களை எத்தனை நாட்கள், எத்தனை பேர்கள் வரைந்திருப்பார்கள்?

ஒரு சின்ன தவறு நேர்ந்தால் அதை மாற்றி வரைய முடியாது. எவ்வளவு கவனமும் உழைப்பும் நேர்த்தியும் தேவைப்பட்டிருக்கும்? இத்தனை காலம் அழியாமல் இருக்க என்ன செய்திருப்பார்கள்? இத்தனை கேள்விகளையும் உங்கள் மனதில் ஏற்றிக்கொண்டு மீண்டும் ஒரு முறை அந்த ஓவியங்களை பாருங்கள். காணக்கண்கோடி வேண்டும் என்று நீங்கள் உணர்வீர்கள். ஆனால் இதை எத்தனை பேர் உணர்வோம்? நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு தம்பதி தங்கள் குழந்தையுடன் வந்தனர். அந்த சிறுவன் அவ்வளவு ஆச்சரியமாக பார்த்தான். ஆனால் பெற்றோர், “என்ன இவ்ளோ சின்ன இடம் தானா? ஒன்னுமே இல்ல?’ என்று சலித்துக்கொண்டு தங்கள் மகனையும் வம்பாக இழுத்து சென்றனர். இன்னும் பலர் தங்கள் காதலை காதலன்/காதலியிடம் சொல்ல துப்பில்லாமல் இங்கு சுவர்களின் காதலை கொட்டுகின்றனர். ஒரு வரலாற்று விந்தையின் மீது அக்கறை இல்லாத இதுகள் எல்லாம் காதலில் என்ன அக்கறையுடன் இருந்துவிட போகின்றன? வெயில் பட்டால் கூட வண்ணமும் ஓவியமும் உரிந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் வெயில் கூட படாமல் அரசாங்கம் இதை பராமரிப்பது மிகவும் நல்ல வரவேற்கத்தக்க செயல்.

இந்த ஓவியங்கள் மட்டுமல்லாமல் சமண மத தலைவர்கள் இருவரின் சிற்பங்களும் உள்ளன.. இது மஹாவீரரின் சிற்பம். இங்கு இப்போது ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்து இதை ஒரு கோவிலாக வழிபட்டு செல்கிறார்களாம்.

siddhannavasal_5

இது சமணர்களின் 23வது தீர்த்தங்கரர் பர்ஷவர். இவர்கள் இருவரும் தான் சமணர்களின் கடைசி இரண்டு தீர்த்தங்கரர்கள்.

siddhannavasal_6

ஓவியங்கள் இருக்கும் அதே இடத்தின் பக்கவாட்டில் தான் இந்த சிற்பங்கள் இருக்கின்றன.. இதை தாண்டி ஒரு சிறிய அறை இருக்கிறது. அங்கே மூன்று சிற்பங்கள் இருக்கின்றன. அவர்கள் யாரென்று தெரியவில்லை. அவர்களும் சமண மத துறவிகளாக இருக்கலாம்.

இந்த அறையின் சிறப்பு என்னவென்றால், இங்கு அடிவயிற்றில் இருந்து ‘ம்ம்ம்ம்’ என்று நீண்ட சப்தம் எழுப்பினால் அது ஒரு வித அதிர்வை உங்கள் உடம்பில் உண்டு பண்ணி சிலிர்க்கவைக்கும்.. நல்ல அனுபவம் அது. சித்தன்னவாசல் ஓவியமும் இந்த சிறப்ங்களும் ஒரு பாறையை குடைந்து அமைக்கப்பெற்றவை என்பது அச்சரியத்தில் இன்னொரு ஆச்சரியம்.

அடுத்ததாக இங்கேயே இருக்கும் சமணர் படுகைக்கு சென்றேன். மணி மதியம் 3. மாலை வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. அங்கும் 5 ரூ.க்கு டோக்கன் எடுத்தேன். டோக்கன் எடுக்கும் போதே ஊழியர் சொன்னார், “நீங்க தான் சார் மத்தியானத்துல மொத ஆளு”.. கேட்டதுமே பீதியாகிவிட்டது எனக்கு. அந்த மலை மீது நான் மட்டும் தனியாக ஏற வேண்டும் என்னும் நினைப்பே வியர்க்க வைத்துவிட்டது. துணைக்கு யாரும் கிடையாது. ஒரு முறை அந்த குன்றை மீண்டும் பார்த்தேன். கடவுளின் மீதும் அம்மா அப்பாவின் புண்ணியங்கள் மீதும் சுமையை ஏற்றி விட்டு மலையேற ஆரம்பித்தேன்.

siddhannavasal_7

மெதுவாக அடி மேல் அடி வைத்தேன். இது சமணர்கள் கி.மு.3ம் நூற்றாண்டில் பாண்டிய சைவ சமய மன்னர்களுக்கு பயந்து இங்கு வந்து ஒளிந்து வாழ்ந்ததாக கூறுகிறார்கள். மலை ஏறும் போதே நீங்கள் நினைப்பீர்கள், ‘தப்பி பிழைக்க வரும் பாவி இங்கு வந்தா ஒளிய வேண்டும்? இதுக்கு இவைங்க பாண்டிய மன்னன் கையால செத்தே போயிருக்கலாம்” என்று. அந்த அளவுக்கு உங்களை கஷ்டப்படுத்தும். மேலே ஏறி உச்சியை அடைந்து மீண்டும் அந்தப்பக்கம் கீழே இறங்க வேண்டும்.

siddhannavasal_8

மேலே படத்தில் இருக்கும் இந்த இடத்தில் நிற்கும் போது எனக்கு பயங்கரமாக மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது. கொளுத்தும் வெயில். கையில் தண்ணீரும் இல்லை. கீழே இறங்கலாம் என்றால் மேலே ஏறியதை விட இறங்குவது இன்னும் டெரராக இருந்தது. உதவிக்கு கூப்பிடக்கூட ஆள் இல்லை. செல் ஃபோனில் டவரும் படுத்துவிட்டது. இந்த வள்ளலின் குரங்குகள் வேறு.. கிளைகளின் அங்கும் இங்கும் தாவிக்கொண்டும் நம் வழியில் குறுக்கே வந்து கொண்டும் மயான அமைதியில் பயமேற்றும் சல சலப்பை உண்டு பண்ணிக்கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக மலையின் உச்சியை கிட்டத்தட்ட தவழ்ந்தே அடைந்துவிட்டேன்.

ஏறிச்செல்லும் பாதையை பாருங்கள். கொஞ்சம் ஸ்லிப் ஆனாலும் உங்கள் வீட்டிற்கு சொல்லி அனுப்பிவிடலாம் (யாராவது உங்களை கண்டுபிடித்தால் மட்டுமே). உச்சிக்கு வந்தாகிவிட்டது, சரி எங்கப்பா சமணர் படுகை என்று தேடினால் பாதை மீண்டும் கீழே இறங்கியது. என்னங்கடா இது கொடுமை என்று கைப்பிடியை பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கி செல்ல ஆரம்பித்தேன். பலமான காற்று வேறு. குரங்குகளும் ‘இவன்ட்ட எதாவது இருக்காதா?’ என்று என்னை ஃபாலோ பண்ணிக்கொண்டிருந்தன.

பிறந்ததில் இருந்து நான் இவ்வளவு தைரியமாகவும் பயத்துடனும் ஒரே நேரத்தில் இருந்ததில்லை. கூட்டமாக நண்பர்களோடு சென்றால் இந்த பயமெல்லாம் இருக்காது. தனிமையும் மதிய வெயிலும் குரங்கு சேட்டைகளும் பீதியை கிளப்பத்தான் செய்யும்.

siddhannavasal_9

இப்படியே கொஞ்ச தூரம் சுத்தி சென்றால் ஒரு நுழைவு வாயில் மாதிரி கட்டிவைத்திருக்கிறார்கள். செல்லும் போதே அணில்களின் சத்தமும் வௌவால்களின் சத்தமும் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கும். கொஞ்சம் தூரத்தில் கம்பிகள் போட்டு பாதுகாப்பாக “நான் தான் சமணர் படுகை” என்று நின்று கொண்டிருக்கும் சமணர் படுகை. முழங்கால் வரை தான் தடுப்பு இருக்கும். கொஞ்சம் லம்பினாலும் கீழே விழுந்துவிடுவோம். சமணர் படுகைக்கு அருகில் சென்றுவிட்டேன்.

திடீரென்று பட படவென்று சத்தம் எழுப்பிக்கொண்டு வௌவால்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன. இவ்வளவு தூரம் தைரியமாக வந்த என்னை இந்த வௌவால்கள் மொத்தமாக சாய்த்துவிட்டன. ஆள விட்டா போதும் என்று வேக வேகமாக திரும்பிவிட்டேன். தைரியம் என்பது பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பது தான் என்பது எவ்வளவு பெரிய உண்மை? ஆனால் பயம் என்பது ஒரு முறை லேசாக வந்துவிட்டால், மனதை மூடுபனி போல் மொத்தமாக ஆக்கிரமித்துக்கொள்ளும். கீழே இறங்கியதும் நினைத்துக்கொண்டேன், அடுத்த முறை நண்பர்கள் அல்லது உறவினர்களோடு வந்து கண்டிப்பாக சமணர் படுகையையும் பார்க்க வேண்டுமென்று. 

எதிலும் மெத்தனமாக இருக்கும் நம் அரசாங்கம் சித்தன்னவாசலை நன்றாக பராமரித்துக்கொண்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க செயல். அரசை எவ்வளவோ விசயங்களில் குறை சொல்லும் மக்கள், தொல்லியல் துறையில் அரசின் இந்த அக்கறையில் ஓரளவாவது தாங்கள் செய்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வேண்டும். காதல் கதைகளை கிறுக்குவதற்கும், காதலிகளோடு அசிங்கம் செய்வதற்கும், கலைச்செல்வங்களை பாழ்படுத்துவதற்கும் இந்த இடங்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

இன்னொரு முக்கியமான விசயம், நீங்கள் இங்கு செல்வதாக இருந்தால் கண்டிப்பாக கையில் தண்ணீரும் துணைக்கு உங்கள் மனதொத்த ஆட்களும் இருக்க வேண்டும். வயதானவர்கள் பெரும்பாலும் ஓவியத்தை மட்டும் பார்த்துவிட்டு திரும்பிவிடலாம். சமணர் படுகை வயதானவர்களுக்கு கொஞ்சம் ரிஸ்க் தான். வரலாற்றின் ஆச்சரியங்களை அறியும் ஆசை உள்ளவர்களுக்கு கண்டிப்பாக நல்ல தீனி போடும் இடம் தான் இந்த சித்தன்னவாசல். நான் மீண்டும் ஒரு முறை செல்லலாம் என்று இருக்கிறேன்.

- சிவகாசிக்காரன்

Pin It

சென்னைக்கு அருகில் பறவைகளை நோக்குவதற்கான பல்வேறு தளங்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது பழவேற்காடு ஏரி. கடற்கரைக்கு அருகிலுள்ள மிகப் பெரிய உப்புநீர் ஏரி இது. பண்டைக்காலத்தில் திருப்பாலைவனம் என்ற பெயரில் துறைமுகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

pazhaverkadu_1_370டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் இதை துறைமுகமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆங்கி லேயர் காலத்தில் பக்கிங்ஹாம் கால்வாயின் தொடர்ச்சியாக நீர்வழிப் பாதையாக பயன் படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் வாயில் பழவேற்காடு என்ற பெயர் நுழையாததால், புலிகாட் ஆகிவிட்டது.

இந்தியாவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கழிமுக உப்புநீர் ஏரி (Lagoon) இது. (முதல் மிகப்பெரிய ஏரி ஒரிசாவில் உள்ள சிலிகா ஏரி) தமிழகம் –ஆந்திரம் என இரு மாநலங்களில் அமைந்துள்ளது. பரப்பளவில் பார்த்தால் அதுவே தமிழகத்தின் பிரம்மாண்ட பறவை சரணாலயம். 46,102 ஹெக்டேர். 35 கி.மீ. அகலம் கொண்டது. 1980களிலேயே இந்த ஏரி பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள இந்த ஏரிக்கு 150 வகை பறவைகள் வந்து சென்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், கோடியக்கரை ஆகிய கடற்கரையோர பகுதிகளுக்கு பூநாரைகள் வருகின்றன என்றாலும் பழவேற்காடுதான் பார்ப்பதற்கு உகந்த இடம். ஶ்ரீஹரிகோட்டாவுக்குச் செல்லும் ஷார் சாலையில் உள்ள அடகாணிதிப்பாவில் பூநாரைகளை பெருமளவு பார்க்கலாம். இங்கு ஸ்வர்ணமுகி, காலங்கி, ஆரணி ஆகிய மூன்று நதிகள் கூடுகின்றன. இது பூநாரைகளின் அரண்மனை. 15,000க்கு குறையாத பூநாரைகள் வரும் என்கிறார்கள். அதிகபட்சம் 25 ஆயிரம் வரலாம்.

ஜனவரி மத்தியில் பூநாரைகள் அதிகம் வருகின்றன என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். அதேபோல 2008 ஜனவரி தொடக்கம் முதலே பூநாரைகள் வரவு தொடங்கிவிட்டது. இவற்றின் தாயகம் குஜராத்.

பூநாரைகளின் உடல் அமைப்பு வித்தியாசமானது. மற்ற நீர்ப்பறவைகளைப் போலவே கால்கள் நீளமானவை. அதேநேரம் கழுத்தும் கால் போன்று நீளமாக இருக்கும். உடல் ரோஸ் நிற இறக்கைகளால் ஆனது. மண்வெட்டி போன்று வளைந்த அலகு என பல அம்சங்கள் பூநாரைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன. பறக்கும்போது நடுவில் உடல் முன்னால் நீட்டிய தலை, பின்னால் நீட்டிய கால்கள் என்ற வகையில் வித்தியாசமாகப் பறக்கும். இளஞ்சிவப்பு வண்ண மேகப்பொதிகள் வேகமாக நகர்வது போலிருக்கும். பூநாரைகள் சகதியில் பானை வடிவில் கூடமைத்து முட்டையிடும்.

பூநாரைகளின் வருகையை ஆந்திர வனத்துறை ‘பூநாரைத் திருவிழா’ என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடுகிறது. ஏரி சூழ்ந்த வேணாட்டில்தான் பூநாரைத் திருவிழா நடை பெறுகிறது.

பழவேற்காடு ஏரிக்கு ‘ராம்சர் பேரவை அந்தஸ்து’ (Ramsar Convention Site) வழங்க வேண்டும் என்று இயற்கையியலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல்லுயிரிய முக்கியத்துவம் வாய்ந்த ஏரிகளுக்கு இந்த சர்வதேச அந்தஸ்து வழங்கப்படும். கடும் நெறிமுறைகளை கடந்து வழங்கப்படும் இந்த அந்தஸ்து கிடைத்தால், ஏரியையும் அதில் வாழும் பல்லுயிரிகளையும் பாதுகாக்க சர்வதேச நிதியுதவி கிடைக்கும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரிக்கும்.

ஹாலந்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஏரியைப் பாதுகாப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ‘சூலூர்பேட்டை பறவை ஆர்வலர்கள் சங்கம்’ (SPLS) என்ற அமைப்பை பழவேற்காடு பறவை ஆர்வலர்கள் அமைத்துள்ளனர்.

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் வெந்நீர் அப்படியே கடலில் கலப்பதால் மீன்கள் இறந்து போய் பல்லுயிரியம் கெடுகிறது. இதனால் பழவேற்காடு ஏரியின் தமிழக பகுதிக்கு பறவைகள் வருகை குறைவாக இருக்கிறது.

pazhaverkadu_370விம்ப்ரெல் (Whimbrel) பறவை ஆர்டிக் பகுதியில் இருந்து 4000 கி.மீ. இடைவெளி விடாமல் பறந்து வந்து இப்பகுதியை அடைகின்றன. பழவேற்காடு நண்டு என்று பெயர்பெற்ற சேற்று நண்டுகளை மட்டுமே இவை உண்கின்றன. Caspian Tern (ஆலாக்கள்) இந்த ஏரிக்கு வருகிறது. இந்த ஏரியில் கலக்கும் ஆறுகள் இந்த சேற்று நண்டுகளை கொண்டு வருகின்றன.

இந்த ஏரி பல்வேறு ஆபத்துகளை சந்தித்து வருகிறது. அதில் முதலாவது மேற்கண்ட நண்டுகளை ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள 34 இறால் தொழிற்சாலைகள் ஏரியின் பல்லுயிரியத்தை பாதிக்கின்றன. இரண்டாவது 1500 சதுர கி.மீ. பரப்புக்கு விரிந்திருந்த பழவேற்காடு ஏரி வண்டல் படிவதால் 350 சதுர கி.மீ. ஆகச் சுருங்கிவிட்டது என்று சென்னையில் உள்ள இயற்கை அறக்கட்டளை தெரிவிக்கிறது.

நவம்பர், டிசம்பரில் வண்டல் படிவதால் வலசை வரும் பறவைகளுக்கு உணவாகும் மீன், நீரடி பல்லுயிரியம் அமிழ்ந்துவிடுகிறது. பறவைகளுக்கு உணவு கிடைப்பதில்லை. அவற்றின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு மீன்கள் வேண்டும். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பருவகாலத்தில் மீன் பிடிக்கிறார்கள். வலைகளில் சிக்கி நாரைகள் கால் ஒடிந்து போகின்றன.

மீனவர்கள் குஞ்சுகளை பிடிக்காமல் இருக்க வேண்டும். ஏரியில் மீன்களை ஒட்டுமொத்தமாக வடித்துப் பிடிப்பது முறையானதல்ல.

மூன்றாவது, ஏரியில் வடக்கு புறத்தில் ரியல் எஸ்டேட் வியாபாரம் பெருகி வருகிறது என்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியரும் பறவை ஆர்வலருமான முருகவேள்.

Pin It

      நாடோடியாய்த் திரிந்த மாந்தன் ஓர் இடத்தில் நிலையாக வாழத் தொடங்கியதும் அவனைச் சுற்றி கலைகளும் இன்ப நுகர்வுகளும் வளரத் தொடங்கியது. அவை இசை, ஓவியம், சிற்பம் என நுண்கலையாய் பரிணமித்து தம் கலைத் திறனுக்கு உருவம் கொடுக்க சிற்பக் கலையைத் தேர்ந்தெடுத்தான். ஏனெனில் சிற்பக்கலை ஒன்றுதான்  காலத்தை கடந்து நின்று அவனது புகழ் பரப்பும். மாந்தர், அரசர், விலங்குகளின் சிற்பங்கள் காலப்போக்கில் கவனிப்பாரற்று சிதைந்து போகும். அதுவே கடவுள் சிற்பங்கள் எனின் அவை மக்களின் வழிபாட்டிற்கு உரிய சின்னங்களாக போற்றிப் பாதுகாக்கப்படும். எனவேதான் கோயில்களில் தன்னுடைய கலைத் திறமையை காட்டி பல்வேறு மிக நுண்மையான சிற்பங்களை அமைத்தனர். அரசர்களும், வள்ளல்களும் அவற்றிற்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து சிற்பக்கலையை ஊக்குவித்து வளர்த்தனர்.

பழனி பெரிய நாயகி அம்மன் கோயில்

      16ம் நூற்றாண்டில் பல்வேறு கால கட்டங்களில் நாயக்க மன்னர்களால் புணரமைப்பு செய்யப்பட்ட “ஊர்க்கோயில்” “யானைக்கோயில்” எனப்படும் “பெரியநாயகி அம்மன்” கோவில் சிற்பங்கள், காண்போரை பரவசமடையச் செய்து தமிழர்களின் கலை மேன்மையை உலகுக்கு உணர்த்துவதாய் உள்ளது. இந்தச் சிற்பங்கள் இதுவரை உலகுக்கு கவனப்படுத்தப்படாமல் குடத்திலிட்ட விளக்காய் உள்ளன.

palani_periya_kovil_640

நவரங்க மண்டபத்தின் அமைப்பு:

      சிற்பக்கலையின் மேன்மையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள நவரங்க மண்டபம் என்று அழைக்கப்படும் முன் மண்டபத்தில் 12 இராசிகளுக்கு 12 கலைநுட்பம் மிகுந்த மிகப் பெரிய தூண்கள் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றிலும் 27 நட்சத்திரங்களை குறிப்பிடும் 27 தூண்கள் மண்டபத்தின் மேற்கூரையைjjத் தாங்கி நிற்கின்றது. முற்றிலும் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட இம்மண்டபத்தைக் காணக் கண் கோடி வேண்டும். வெறும் கடவுளாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு அதில் உள்ள கலை நுணுக்கமும், நுண்ணிய வேலைப்பாடுகளும் தெரிய முடியாது போகலாம். 

தூண் சிற்பங்கள்:

      மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் செதுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தகுந்தாற் போல் 12 உள்புறத் தூண்கள் அந்தந்த ராசிக்கு உரிய கடவுளர் உருவங்கள் தாங்கி கம்பீரமாக நிற்கின்றது. ஒவ்வொரு தூணிலும் ஒரு புராணக் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேசராசி தூணில் ரிசபக் காளை வாகனத்தில் அமர்ந்து எதிர் தூணில் உக்கிரமாய்க் காட்சி தரும் நரசிம்மரை சாந்தப்படுத்துவது போன்று சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிதுனராசி தூணில் மிதுன ராசிக்கு உரிய ரதியும், மன்மதனும் கரும்பு வில்லோடு காட்சி தருகின்றனர்.

கடகராசிக்காரராகிய முருகக்கடவுள் கோவனத்துடன் தண்டு ஊன்றி நிற்கும் காட்சி முன்னோர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு. இத்தூணில் மேற்குப் பக்கம் அர்த்தனாரீஸ்வரரும், கிழக்குப் பக்கம் பூக்கூடையுடன் முருகன் அடியாரும் உள்ளனர். பூக்கூடை பனை ஓலையால் செய்யப்பட்டது போலவே நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

சிம்மராசிக்கு உரிய தூணில் பத்திரகாளியம்மன் தலைகவிழ்ந்து காட்சியளிக்கின்றாள். அதற்கு நேர் எதிரில்

மகரராசித் தூணில் சிவதாண்டவக் காட்சி அருமையாய் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் கலை நுணுக்கம் காண்போரை வியப்படையச் செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளாது. (காளியம்மை அகந்தை கொண்ட போது அவளுடைய அகந்தையை அடக்க சிவ தாண்டவம் ஆடியதாகப் புராணச் செய்தி)

palani_periya_kovil_620

துலாம் ராசித் தூணில் சூரியன் தேர் பூட்டிய ரதத்தில் செல்வது போன்ற சிற்பமும் சூரியனின் முழு உருவமும் 6 அடி உயரத்தில் கலை நுணுக்கத்துடன் வடித்துள்ளது பண்டைய தமிழ் மக்களின் கலைத் திறத்திற்கு எடுத்துக்காட்டு .

கன்னிராசி தூணில் வாமன அவதாரக் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

விருச்சிக ராசித் தூணில் சந்திரன் குதிரை பூட்டிய தேரில் ஏறிச் செல்வது போன்று முழு உருவம் தத்ரூபமாய் வடிவமைக்கப்பட்டுள்ள காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.

நடராஜரும், மீனாட்சியம்மையும் மகர ராசித் தூணிலும் நடராஜர் பாதத்திற்கு கீழ் காரைக்கால் அம்மை பேய் உருவம் கொண்ட காட்சி சிற்பக்கலையின் அழகுக்கு அழகு.

கும்ப ராசிக்கு உரிய தூணில் சுப்பிரமணியர் உருவமும் வள்ளி, தெய்வானை உருவங்களும் கலையழகுடன் செதுக்கப்பட்டுள்ளது.

கல்லிலே கலை வண்ணம் கண்ட தமிழனின் கலை நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாய் உமையொரு பாகன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில்  சக்தியும் , சிவனும் அர்த்தனாரீஸ்வரராக செதுக்கப்பட்டுள்ளது கலை நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

      நடுவில் உள்ள தூண்களில் இக்கோயில் சிற்பங்கள் செதுக்க உதவிய அரசர்கள், அவர்களின் மனைவிமார்கள், மன்னர்களின் தளபதிகள் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. கலைக்கண் கொண்டு நோக்கின் இவர்கள் உண்மையிலேயே நிற்பது போன்ற காட்சி புலப்படுகின்றது.

      வெளிப்பிரகாரத்தில் உள்ள தூண்களில் நுழைவு வாயில் பக்கத்தில் உள்ள தூணில் மீனாட்சியம்மை திருமணக் காட்சியும் அதை தென்திசை அகத்தியர் பார்ப்பது போன்ற காட்சி 30 அடி அளவில் ஆறு தூண்கள் அப்பால் செதுக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலை வடிவமைப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் அறிவியல் தொழில் நுட்பத்திற்கு சான்றாகவும் உள்ளது.

      அரசர்கள் புலியை வேட்டையாடிய காட்சி பல தூண்களில் இயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது.

      சனிபகவான் காக்கை வாகனத்தில் அமர்ந்திருக்கும் காட்சி சிறப்பானதாகும்.

      சிவபெருமானின் அடியையும், முடியையும் காண பன்றியாகவும், அன்னமாகவும் சென்ற காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

      இந்த கலை நுணுக்கத்துடன் வெளிநாட்டில் இச்சிற்பங்கள் இருந்திருக்குமேயானால், அவர்கள் இந்தச் சிற்பங்களின் பெருமையை உலகெங்கும் பரவச் செய்திருப்பர். எதையும் பக்தி கண்ணோட்டத்துடனே பார்க்கும் நம் மக்கள் அச்சிலைகளில் கடவுளை மட்டும் பார்த்தார்களேயன்றி அதில் உள்ள கலை நுட்பத்தையும், சிற்பியின் கலைத் திறனையும், அரசர்களின் முயற்சியையும் காணவில்லையாதலால் இச்சிற்பக் கலையின் பெருமை உலகோர்க்கு தெரியாமல் போய்விட்டது.

      ஒருசில இடங்களில் ஆண், பெண் உடல் உறவை சித்தரிக்கும் சிற்பங்கள் சிதைக்கப்பட்டு காணப்படுகின்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும். மன்னர்கள் புலியை வேட்டையாடிய காட்சி, காட்டுப் பூனை அன்னப்பறவையை வேட்டையாடிய காட்சி தத்ரூபமாக வடிவமைக்கபட்டுள்ளாது. இக்கோயிலின் நவரங்க மண்டபத்திலும் அர்த்த மண்டபத்தில் எல்லாக் கடவுளர் சிற்பங்களும் உள்ளது.

      இக்கோயில் ஒரே மன்னர்களால் கட்டப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனலாம். அர்த்த மண்டபம் திருமலை மன்னரால் கட்டப்பட்டிருக்கலாம். அர்த்த மண்டப முன்புறத் தூண்களில் ஒரு தூணில் அரசரும் அவரது மனைவிமார்கள் இருவரும் மற்ற இரண்டு தூண்களில் அரசர் மற்றும் அவரது மனைவிமார்கள் செதுக்கப்பட்டுள்ளனர். அரசருக்குப் பக்கத்தில் உள்ள தூணில் அரசரின் குல குருவின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. திருமாலின் அவதார காட்சிகள் பல தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

palani_periya_kovil_1

      திருமால், இந்திரன், பலராமன், அனுமன், நரசிம்மர், வாமனர், வராகம் என பல சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

      அர்த்த மண்டபம் எனப்படும் உள்மண்டபத்தில் 12 அடி உயரத்தில் 84 தூண்களில் பல நுண்ணிய இயற்கை காட்சிகள் வியக்க வைக்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.  

      ஒரே கல்லில் முருகனின் வாகனமாகிய மயில், யானை, குதிரைகள் ஆகியவை நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.

      ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு புராணச் செய்தியைக் கூறுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 அடி உயரமுடைய தூண்களின் மேல் யாழிகள் செதுக்கப்பட்டு மேற்கூரையைத் தாங்குவதாக உள்ளது.

கலை நுணுக்கம்:

      இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் கணினி மூலம் வடிவமைக்கப்படும் நுண் இழைகளை அந்தக் காலத்திலேயே கல்லில் செதுக்கியுள்ளது உலகோர் வியக்கும் செய்தியாகும். மயிலின் தோகை போன்ற நுண் அமைப்பு அன்னப்பறவையின் மெல்லிய தூவி, நடனப்பெண்களின் மெல்லிய உடைகள், தலைமுடி கூட மெல்லிய வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. கடவுளின் உருவங்கள் மட்டும் அல்லாது இயற்கைக் காட்சி சிற்பங்கள் பல தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீது எண்ணெய் மற்றும் பூசனைப் பொருள்கள் ஊற்ற்ப்படுவதால் பல சிலைகள் தன் உண்மைத் தன்மையை இழந்து நிற்கின்றது.

      பல இடங்களில் வினாயகப் பெருமானின் உருவங்கள், தனித்தனியாக துர்க்கை பார்வதி, லட்சுமி போன்றவரின் உருவங்கள் மிக மெல்லிய நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது.

      நமது முன்னோர்களின் இந்த அரிய கலைக்கூடம் உலகின் பார்வைக்கு இதுவரை எடுத்துச் செல்லப்படவில்லை. இந்த சிற்பங்களின் மேன்மையையும், கலை நுணுக்கத்தையும் உலகுக்கு எடுத்துக் கூறி தமிழ் மக்களின் நாகரீகமான வாழ்க்கை முறை, அவர்களின் தன்னடக்கத்தாலும், அறியாமையாலும் ஆவணங்களைப் பாதுகாப்பதில் இருந்த மெத்தனத்தாலும் நாம் பல கலைகளை இழந்து விட்டோம். இனியும் இந்நிலை நமக்கு வர வேண்டாம்.

      ஆய்வரங்கங்கள் மூலமாகவும், கட்டுரைகள் மூலமாகவும், இணையம், தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமும் உலகிற்கு எடுத்துக் கூறுதல் அவசியம்.

      இந்த அரிய வரலாற்று கலைக்கூட்டத்தின் பல சிலைகள் சிதைந்தும், சிதைத்தும் கிடக்கின்றன. அவை முறையாக பாதுகாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தொல்லியல் துறை மற்றும் சுற்றுலாத் துறை மூலம் இவற்றை பாதுகாக்கவும், உலகமக்களுக்கு எடுத்துக்கூறி அவர்கள் இவற்றை பார்வையிடவும், ஆய்வு செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

      கடவுள் நம்பிக்கை என்பது அவரவரின் விருப்பம். அவரவர் நம்பிக்கையை யாரும் தடுக்க முடியாது. ஆனால் காலத்தை விஞ்சி நிற்கும் இந்த அறிய கலைப் படைப்புகளை பக்தியின் பெயரால் சிதைப்பதும், அவற்றின் தன்மையைக் குறைப்பதும், அவற்றின் மேல் கலப்பட பூசைப் பொருள்களை பூசுவதாலும், கலப்பட எண்ணெய்யைப் பயன்படுத்துவதாலும் அவை சிதைந்து தன் உண்மை தன்மையை இழந்தும் வருகின்றது. இதன் தொன்மை மற்றும் சிறப்புக் கருதி இவற்றைத் தவிர்க்க நம் மக்களுக்கு போதிய பயிற்சியை அளிக்க (AWARENESS) முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு இக்கல்லூரி உயராய்வு மையமும், வரலாற்று துறையும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

-ஆ.நந்திவர்மன் M.A., M.A., M.A., B.Ed., அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பழனி.

Pin It

கரிக்கிளி கிராம மக்கள் பறவைகளை தங்கள் குழந்தைகள் போல பாவிக்கின்றனர். புகழ்பெற்ற வேடந்தாங்கல் சரணாலயத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தச் சரணாலயம்.

‘எங்கள் ஊரில் நல்லது கெட்டதுக்கு பட்டாசு வெடிக்க மாட்டோம். கொட்டுமேளம் வாசிப்பதில்லை. கோவில் திருவிழாக்கள் கூட மார்ச் மாதத்துக்குப் பிறகு (பறவைகள் சென்ற பிறகு) நடத்தப்படுகிறது. வேட்டு போட்டாலோ, பட்டாசு வெடித்தாலோ தண்டனை என்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த கற்பகம்.

“இந்தப் பறவைகள் இயற்கையின் குழந்தைகள், அவற்றை சிரமப்படுத்தக் கூடாது” என்று சில தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்த குறிசொல்லும் பாட்டி கூறியதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு, இந்த மக்கள் பறவைகளை பாதுகாத்து வருகின்றனர்.

கிராமப் பகுதி என்பதால், போக்குவரத்து வசதி குறைவு. வேடந்தாங்கலுக்குச் செல்லும்போது வாகனம் எடுத்துச் சென்றால் இந்த ஊரையும் பார்க்கலாம். 151 ஏக்கர் பரப்புள்ள ஏரியே சரணாலயம். படப்பை, நீர் அத்தி, கருவேல மரங்கள் ஏரியில் வளர்ந்துள்ளன.

வடகிழக்கு பருவமழையை ஒட்டி அக்டோபரில் பறவைகள் வருகை தொடங்குகிறது. நத்தைகுத்தி நாரையே இந்தச் சரணாலயத்தின் முதல் விருந்தினர். மற்றொரு முக்கிய பறவை கூழைக்கடா. கரண்டிவாயன், வெள்ளை அர்வாள்மூக்கன், சாம்பல் நாரை, வக்கா, ஊசிவால் வாத்து, மடையன் வாத்து, சின்ன கொக்கு, பெரிய கொக்கு, நீர்க்காகம் போன்ற பறவைகளை இங்கு பார்க்கலாம்.

இந்த ஏரியை நம்பி 600 ஏக்கர் வயல்கள் உள்ளன. பொன்னி நெல் விதைக்கப்படுகிறது. அது செழிக்க பறவைகளின் எச்சம், திரவ உரமே காரணம்.

Pin It