பருவமழை காலத்தில் சுற்றுலா செல்ல கேரளா மற்றும் தமிழ்நாடு மலை பிரதேசங்களை கணக்கில் எடுக்கும் போது வால்பாறை, மூணார், தேக்கடி என நீண்டு கொண்டே சென்றது. இதில் அனைத்து  இடங்களும் ஓரிருமுறை சென்றதால் புதிதாக இடங்களை தேர்வு செய்யும் பொழுது, நண்பர்களின் மூலம் நமக்கு கிடைத்த இடம் பரம்பிக்குளம். பிறகு அங்கு செல்வதற்கும் அதன் சிறப்பம்சங்களை அறிந்து கொள்வதற்கும் இணையதளங்களை பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

இருமுறை வால்பாறை சென்றிருந்தாலும் எப்படி பரம்பிக்குளம் நம் கண்ணில் தென்படாமல்  தப்பித்தது என்ற யோசனையோடு ஆயத்த பணிகளை செய்து இறுதியாக விடுமுறையில் சென்னையிலிருந்து பொள்ளாச்சி வரை பேருந்தில் சென்று, அங்கிருந்து பரம்பிக்குளம் பயணம் இனிதே ஆரம்பித்தது மகிழ்வுந்தில். 

பொள்ளாச்சியிலிருந்து ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு   செல்லும் சாலையானது  வெண்ணிறக் கோடுகளால் சரி சமமாக பிரிக்கப்பட்டு, சாலையின் இருபுறங்களிலும் வெண்மை, கருமை மற்றும் வெண்மை நிற பட்டையோடு வானம் தெரியாமல் வளைந்து , தென்மேற்குப்  பருவக்காற்று மழையில் குளித்த குதூகலத்தில், பசுமையாய் நின்று, நம்மை இனிதே வரவேற்கிறது புளியமரங்கள்.

தேசிய நெடுஞ்சலைகள் வருவதற்கு முன்பு நமது பயணங்கள் அழகாக இருந்ததற்கு  இந்த சாலைகள் மற்றும் புளியமரங்களின் பங்கு மகத்தானது. அனால் இன்று நான்கு வழிச்சாலையில் மூன்றடி வளர்ந்த அரளிச்செடிகளை பார்த்து, அலுத்துக்கொண்டு பயணம் முடியாதா ? என்று வேகமாக செல்கிறோம்,  நாமும்  நமது இளைய தலைமுறையினரும் .

புளியமரங்களின் வரவேற்பு மட்டுமில்லாமல், அதன்பின்னரே  மணப்பெண் தோழிபோல் தென்னை மரங்களும் நின்று அதற்கான பாணியில் வரவேற்கின்றன, நம்மை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு.

சேத்துமடையில் உள்ள ஆனைமலை சோதனைச்சாவடியோடு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு , மகிழ்வுந்து மற்றும் பேருந்துகளில் மட்டுமே நம்மை ஆனைமலையின்  அழகை ரசிக்க அனுமதிக்கின்றனர்  வனத்துறையினர்.

ரசீது ஏதும் வழங்காமல் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு,  வாகனங்களை விட்டு எங்கும்  இறங்காதீர்கள் என்ற ஒரு சில எச்சரிக்கையோடு அனுமதிக்கின்றனர்  தமிழக வனத்துறை அதிகாரிகள். ரசீது கேட்டும், “அது தேவை இல்லை நீங்கள்  போகலாம்” என்ற அசாதாரண பதிலும் கிடைத்தது..!

ரசீது தரப்படாத சோதனை சாவடிகளில், கணினிமயமாக்கப்பட்ட ரசீது இயந்திரம் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.

சோதனையோடு சோதனைச்சாவடியை கடந்து சென்ற நம்மை மெதுவாகச் செல்லுமாறு  எச்சரிக்கை செய்கிறது குண்டும் குழியுமான குறுகிய சாலைகள்.

மலைகளை ரசித்துக்  கொண்டு செல்லும் வேகத்தில் மட்டுமே நமது வாகனம் செல்கிறது. ஆகையால் நெடுஞ்சாலைப் பயணங்கள் முற்றிலும் மறந்து வனத்தின் அழகை அதன் அமைதி இசையுடன் அனுபவிக்கமுடிகிறது. மலைகளின் கொண்டை ஊசி வளைவுகளில் மேலே செல்லச்  செல்ல ஏதேனும் விலங்குகள் தென்படாதா? என்ற எண்ணம் உருவாகிறது.

டாப்ஸ்லிப் அருகே செல்லும் பொழுது  யானைகள், புள்ளிமான்கள்,  மயில்கள் என ஆங்காங்கே காண முடிகிறது. டாப்ஸ்லிப் சற்று முன்பாக மறுபடியும் சோதனைச்சாவடி என்ற பெயரில் சிறிய தொகை ரசீது இல்லாமல் வசூலிக்கப்பட்டு நம்மை அனுமதிக்கின்றனர். 

parambikulam 1

அதன் பின்னர் பசுமையான புல்வெளிகள் மற்றும் யானை சவாரிகள் நம்மை வியக்க வைக்கிறது. 

மறுபடியும் சிறிது தூரம் வனத்தை ரசித்துக்கொண்டு செல்லும் பொழுது  ஆனைப்பாடி சோதனை சாவடி நம்மை இனிதே வரவேற்கிறது. இங்கிருந்து கேரள வனத்துறை எல்லை ஆரம்பமாகிறது. சோதனைச்சாவடியில் நுழைவுக்கட்டணம் சரியாக வசூலிக்கப்பட்டு அதற்கான ரசீதை வனத்துறையினர் கைப்பட எழுதி நம்மிடம் தருகின்றனர்.

அதிலிருந்து சிறிது தூரத்தில் நான்காவது சோதனை சாவடியோடு நமது வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இங்கிருந்து நாம் கேரள வனத்துறையினரின் வாகனங்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கின்றனர் அதன் இயற்கை அழகை ரசிக்க.

பரம்பிக்குளத்தில் நாம் தங்குமாறு இருந்தால் மட்டுமே நமது வாகனங்கள் ஒரு வனத்துறை பாதுகாப்பாளரோடு அனுமதிக்கின்றனர்.

இங்கு தங்குவதற்கு www. parambikulam.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இதன் பின்னர் நம் கண்களுக்கு வனத்தின் இயற்கை  விருந்துகள்தான்.

சாலையின்  இருபுறமும் சுமார் இருபது அடி தூரம் நன்றாக சுத்தம் செய்த நிலப்பரப்பில் புற்கள் மட்டுமே காணமுடிகிறது. ஆதலால்     நம்மை கண்டும் காணாமல் குதூகலத்தோடு துள்ளித்திரியும் மான் கூட்டங்களை ஆங்காங்கே நாம் காண முடிகிறது. புற்களை தொடர்ந்த நிலப்பரப்பில், அடர்ந்த தேக்கு மரக்காடுகள், பரம்பிக்குளம் எங்கும் காட்சியளிக்கிறது. 

பொதுவாக குறிப்பிட்ட இடங்களைத் தவிர, வாகனங்களை விட்டு இறங்க நாம் அனுமதிமதிக்கப்  படுவதில்லை.

parambikulam 2

அவ்வாறு ரசித்துக் கொண்டே செல்லும் பொழுது, பெரும்வாரிப்பள்ளம் அணைக்காக ஒரு சாலை பிரிகிறது. அங்கு ஒரு மரவீடு அணையை ஒட்டி உள்ளது. நாம் அங்கு தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி உண்டு.

இனி வரும் சாலைகள் தூணக்கடவு அணையின் கரையோரப் பயணங்களே..!

தெளிந்த நீரில் சிறிய மூங்கில் படகுகளில் மலை வாழ் மக்கள் ஆங்காங்கே மீன் பிடிப்பது  நம்மை கவருகிறது. அடர்ந்த காட்டினுள் அணை இருப்பதால், அதன் கரையோரங்களில் யானைகள் அதன் குட்டிகளோடு நீர் பருகும் அழகு  சாலையில் இருந்து ரசிக்கும்படி இருக்கின்றது.

அடுத்து  நாம் காணவிருப்பது தூணக்கடவு அணையின் கரையோர மர வீடு. இதன் நுழைவு வாயில் சாலையில் அருகேயும், வீடு முழுவதும்  நீரின்  மேலே இருக்குமாறும் அமைக்கப்பட்டிருக்கிறது. 

parambikulam 3

தூணக்கடவு அணையை கடந்து செல்லும் பொழுது சிறிது தூரத்தில் கன்னிமாரா தேக்கு மரத்திற்கான சாலை பிரிகிறது. அடர்ந்த காட்டினுள் மிகவும் மெதுவாக செல்லக்கூடிய சாலையில் கிட்டத்தட்ட ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு நானூற்றி அறுபது ஆண்டுகள் பழமை வாய்ந்த தேக்கு மரம் பசுமையுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

அதன் அடிப்பகுதி ஆறு  நபர்கள் சேர்ந்து கட்டி கொள்ளும் அளவு சுற்றளவு கொண்டது.

அதனை தொடர்ந்து பரம்பிக்குளம் செல்லும் வழியில் ஒரு சாலை நீர்வழிச்சுரங்கதிற்காக (மலைக்குடைவு) பிரிகிறது. இந்த நீர்வழிச்சுரங்கத்தின் மூலம் பரம்பிக்குள அணையின்  பக்கவாட்டில்  எஞ்சிய  நீரானது தூணக்கடவு அணைக்கு  மலையைக் குடைந்து உருவாக்கிய இரண்டரை கிலோமீட்டர் தூரம்  உள்ள நீர்வழிச்சுரங்கத்தின் மூலமாக அனுப்பப்படுகிறது.

அங்கிருந்து பக்கவாட்டில் நிரம்பும் நீரானது பெரும்வாரிப்பள்ளம் அணைக்குச்செல்கிறது.

இறுதியாக நாம் சென்றடையும் இடம் பரம்பிக்குளம்.

இங்கு உள்ள பெரிய வட்டவடிவச்சாலை சந்திப்பும்,  உயரமான தூணின் உச்சியில் நான்முக சிங்கமும்  நம்மை ஏதோ மாநகராட்சி பேருந்து நிலையத்தை அடைந்த உணர்வைத் தருகிறது.

இங்கு இரண்டு சுற்றுலா துறை மர வீடுகள் , மலைவாழ் மக்களின் வீடுகள், கடைகள், சுற்றுலா விடுதிகள்,  மூங்கில் படகு சவாரி, பரம்பிக்குள அணை, வீட்டிக்குன்னு தீவுகள் என எண்ணில் அடங்கா அம்சங்களை கொண்டு  அமைதியான  இடமாக திகழ்கிறது.

மாலைப்பொழுதில் சுற்றுலாத்துறையின் சார்பாக, மலை வாழ் மக்களின் இசை மற்றும் நடன கச்சேரி நடைபெறுகிறது. 

இங்குள்ள  சுற்றுலாத்துறையில்  மலைவாழ்  மக்களின் பங்கு இன்றியமையாதது. நாம் இங்கு தங்கும் பொழுது சுற்றுலாத்துறை சார்பாக இவர்களே உணவு தயாரிக்கின்றனர். உணவின் சுவை இன்னும் நாவில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. மதியம் மற்றும்  இரவு நேரம் அசைவம் உணவும், காலை வேலையில் சைவ உணவுகளும் கிடைக்கப்பெறுகிறது.

இரவு நேரங்களில் மர வீட்டில் தங்கும் பொழுது கிடைக்கப்பெறும் திகில் அனுபவம் என்றும் மறக்க முடியாததாய்  அமைகிறது. மேலும் தேவையான அணைத்து வசதிகளையும் வசதிகளும் அமையப்பெற்று, பாதுகாப்பு அம்சங்களோடு பசுமையோடு பசுமையாய்த்  திகழ்கிறது  இந்த மர வீடு. 

மரவீடு சாலையோரம் இருந்தாலும், இரவு நேரங்களில் பருவமழையின் ஓசை மரவீட்டின் கூரைகளை குடைந்து நமது செவிகளுக்கு பயம் கலந்த பரவசத்தை ஊட்டுகிறது.  மரவீடானது தேக்கு மரங்களின் துணையோடு தரையிலிருந்து பதினைந்து அடி உயரத்திலும் சாலையில்  இருந்து ஐந்தடி உயரத்திலும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது.

parambikulam 4

வனத்துறையினர் நாளை காலை, நன்றாக விடிந்தவுடன் நடைபயணம் செல்லலாம் என்று கூறிவிட்டுச் சென்றனர்.

மறு  நாள் காலை எழுந்து தயாராக, காலை மணி ஏழைக் கடந்தது.

வனத்துறையினர் வந்தவுடன், சற்று மிதமாகத்தூரிய சாரல் மழையுடன் வனத்தின் அழகை ரசிக்க நடந்து கொண்டிருந்தோம். 

parambikulam 5

சிறிது  தூரத்தில் அடர்ந்த வனத்தினுள்  நம்மை எடுத்துச்  செல்கிறது சிறிய ஒற்றையடிப் பாதை.                                                               

“எங்கும் பசுமை எதிலும் பசுமை” என்றார் போல் கண்கள் பசுமையின் அழகை கண்டு குளிர்கிறது. தினந்தினம் கொட்டி தீர்த்த பருவமழையில் விட்டுச்சென்ற மழைத்துளிகளை அள்ளிக்கொண்டு ஆங்காங்கே சிறிய நன்னீர் ஓடைகளாக, இறக்கத்தை நாடி ஓடிச் சென்று தனது படைகளை ஒன்று சேர்த்து இறுதியாக மழை  நீர் அணையை  அடையும் கண்கொள்ளாக் காட்சிகளை உள்ளடைக்கியது இந்த காடுகள்.

அடர்ந்த காட்டில், ஓங்கி உயர்த்த தேக்கு மரங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. காலையில் கண்விழித்த பறவைகள் அதற்க்கான குரலில் இசை பாட களைப்பின்றி நடை பயணம் தொடர்ந்தது. இப்படியே இங்கேயே மலைவாழ் மக்களோடு இருந்துவிடலாம் போல் என்று ஆழ் மனதில் யோசனை உண்டு பண்ணுகிறது இந்த காடுகளும் நடைப்பயணங்களும். 

parambikulam 6

இந்த நடைப்பயணம் செல்ல வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வழிகள் உள்ளது. நமது விருப்பத்திற்கேற்றவாறு வனத்துறையினர் நம்மை பாதுகாப்பாக அழைத்து செல்கின்றனர். இவ்வாறே இரண்டு மணிநேரங்கள் செல்ல, காலை உணவு முற்றிலும் மறந்தே போயிருந்தன.

அதன் பிறகு காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், வடை, பூரி என ஐந்து வகையான உணவு வழங்கப்பட்டன.

காலை உணவு உண்ணும் பொழுது ஒரு சிலர் அவசரமாக எழுந்து வாகனங்களை எடுத்துக் கொண்டு அணையை நோக்கி  வேகமாக பயணித்தனர்.  என்ன என்று கேட்கும் போதுதான் தெரிந்தது அணைகளின் கரையோரமாக யானைக்கூட்டங்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. நாம் போகும் வரை  யானைகள் இருந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று, கவனம் காலை உணவிலே சென்றது. அதன் பிறகு மூங்கில் படகு சவாரிக்கு அந்த யானைகள் இருக்கும் இடத்திற்கே செல்ல வேண்டும் என்ற தகவல் கிடைத்தவுடன் வேகமாகச்  சென்றது எமது கால்கள்.

ஆற்றங்கரை அடைந்ததும் அங்கு இரண்டு மூங்கில் படகு சுற்றுலா பயணிகளோடு கரையை  நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது தூரத்தில் யானைக்கூட்டங்களை  காண முடிந்தது. 

parambikulam 7

எங்களின்  தாமதம் சாதகமாக அமைந்தது. எவ்வாறென்றால் கிட்டத்தட்ட பதினைந்து நபர்கள் செல்ல கூடிய மூங்கில் படகு  எங்கள் இருவருக்காக யானை கூட்டங்களை நோக்கி மெதுவாய் நகர்ந்தது. 

படகு, யானைக் கூட்டங்களுக்கு அருகில் செல்லச்செல்ல அதன் பிரமாண்டமும் அதிகரித்தது. என்னால் அதன் கூட்டங்களை நன்றாக  புகைப்படம் எடுக்க முடிந்தது. குட்டி யானைகளின் அசாதாரணமான நடவடிக்கைகள் ஆச்சரியத்தை அளித்தது. வயதான பெண் யானைகள் , குட்டிகள்  என எண்ணிக்கை பதின்மூன்றைத் தாண்டியது. 

அவ்வாறே அதன் நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக  புகைப்படம் எடுக்க வசதியாக மூங்கில் படகு ஓட்டும் வனத்துறையினர் படகை குறிப்பிட்ட அளவு நெருக்கமாக கொண்டு சென்றனர். நமது ஆசைதான் விடுமா என்ன..! 

இன்னும் அருகில் செல்ல வேண்டுகோள் விடுக்கையில், அன்பாக மறுத்து அதனை தொந்தரவு பண்ணாமல் இருப்பது நமக்கு நல்லது என்று படகை திருப்பினர். கூடவே யானைகள் நன்றாகவும் சுலபமாகவும் நீந்தத் தெரிந்திருப்பதால் எந்த நேரமும் அது அணையில் இறங்கி நம்மை அடைய வாய்ப்பு அதிகம் என்று எச்சரித்தனர். ஏனெனில் அணையில்  தீவுகள் அதிகமாக  இருப்பதால் யானைகள் ஒவ்வொரு தீவுகளுக்கும் நீந்தியே செல்வது அடிக்கடி நிகழ்வதாக வனத்துறையினர் கூடுதலாக தகவல் கொடுத்தனர்.

parambikulam 8

அவ்வாறே படகு கரையை நோக்கி நகர்ந்தது . நானும் எனது புகைப்பட கருவியும் யானையை எதிர்நோக்கியே இருந்தது.

மேலும், இங்கிருந்து வீட்டிக்குன்னு தீவுகளை நாம் எளிதாக பார்க்க முடிகிறது.

இங்கு செல்ல வேண்டுமானால், அதற்க்காக முன்பதிவு செய்திருக்க வேண்டும். பிறகு அங்கு உணவு தயார் செய்வதற்கும் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். மதியம் வேளைகளில் ஐந்து நபர்களாக சென்று அங்கு உணவு சமைத்து, மறுநாள் காலை பதினொன்று மணியளவில் இந்த சேவை முடிவடைகிறது.

வீட்டிக்குன்னு தீவுகளின் அழகை கரையிலிருந்து ரசித்துவிட்டு, நாங்கள்  தங்கியிருந்த மரவீட்டை நோக்கி வனத்துறையின் உதவியோடு நடந்து சென்றுகொண்டிருந்தோம்.

பரம்பிக்குளத்திற்கு தினமும் மூன்று முறை கேரள மற்றும் தமிழக அரசின் சார்பாக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு செல்ல மனமில்லாமல் மரவீட்டின் அறையை காலி  செய்து கொண்டு பரம்பிக்குளத்திலிருந்து பொள்ளாச்சியை நோக்கி பயணம் தொடங்கியது. வரும் பொழுது பார்த்து மகிழ்ந்த புள்ளிமான் கூட்டங்கள் அனைத்தும் நம்மை மீண்டும் கண்கவரும் வகையில் மேய்ந்து கொண்டிருந்தன.

நம்முடன் வந்த வனத்துறையினர், அடுத்து வரவிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்முகத்தோடு பரம்பிக்குளத்தை சுற்றிக்  காட்டும் முனைப்பில் காத்திருந்தார்.

சேத்துமடையில் உள்ள புளியமரங்களும் நம்மை சிலு சிலுவெனு காற்றோடு வழியனுப்பி மீண்டும் மறுமுறை நம்மை வரவேற்கத் தயாராக இருந்தது..!

பரம்பிக் குளத்தில் ஓரிரவு தங்கிய அனுபவம் கீழ்கண்டவாறு என்னை எழுதத்தூண்டுகிறது. 

பருவமழை நனைத்த காடுகள்,

பரவசமூட்டும் புள்ளிமான் கூட்டங்கள்,

அணைகளை ஒட்டி நீளும் சாலைகள்,

காட்டு யானைகளின் கூட்டம்,

மூங்கில் படகில் தீவுகளின் காட்சி ,

மரவீட்டில் திகிலான இரவு,

அடர்காட்டில் நடை பயணம்,

மலை வாழ் மக்களின் அன்பு,

வனத்துறையின் பராமரிப்பு,

நீரின் தெளிவு, சாலைகளின் வளைவு

என நீண்டு கொண்டே செல்கிறது பரம்பிக்குளத்தின் அழகு.

- ப.சிவலிங்கம்

Pin It

இம்மாதம் (13.8.17,14.8.17) ஆகிய இவ்விரு நாட்களும் தகடூர் மாவட்ட புகைக்கல் (ஒகனேக்கல்)சென்று வரும் வாய்ப்பு கிட்டியது.

அருமையான வானிலை, குளிர்ந்த காற்று, தண்ணீரைக் காணவும், தண்ணீரில் குளித்து மகிழவும் சாரைசாரையாய் செல்லும் மக்கள் கூட்டம் என காண்பதற்கே இனிமையாக இருந்தது புகைக்கல். நாங்களும் இந்த மக்கள் திரளினூடே இரண்டறக் கலந்து கன்னட தேசத்தால் வஞ்சகமாய் தேக்கி வைக்கப்பட்டு அறமன்றத்தால் விடுவிக்க்கப்பட்டு பாய்ந்தோடி வந்த காவிரியின் புதுப்புனலில் நீராடி மகிழ்ந்தோம்.

நீர் மிகையாக உள்ளதென்று கூறி பரிசலை குறைந்த தொலைவே இயக்கிய போதும் அந்த அளவில் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.

Hogenakkal Tamil Nadu

நம் காவிரி பாய்ந்து வரும் அழகு,தெங்கிக் கொண்டிருக்கும் பாலத்தின் மேல் நின்று பார்த்தால் தெரியும் பாய்ந்து வரும் காட்டாற்று வெள்ளம், அவ்வெள்ள நீர் வழிந்தோடி ஆறாக உருமாறும் பள்ளத்தாக்குப் பகுதி, 'சமைக்கனுமாண்ணே' என்று அன்பொழுக கேட்டு கேட்டு வளைய வரும் பகுதி பெண்மணிகளும், "அண்ணே! எண்ணெய்க் குளியல் (மசாசு) பண்ணிக்கிறீகளா?" என்று கருநீல வண்ண உடையணிந்த பகுதி ஆண்கள் கேட்டு உலா வரும் காட்சி என அனைத்தும் புதியதொரு உற்சாகத்தை எங்களுக்கு அள்ளிக் கொடுத்தது.தொங்கு பாலத்தைக் காணக் கட்டணமாக பத்து உரூபாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமும், பரிசலில் செல்ல முந்நூறு உரூபாயை பென்னாகரம் ஊராட்சி ஒன்றியமும்,உயர் கோபுரத்திலேறி ஆர்ப்பரித்து கொட்டும் நீரின் அழகைக் காண உரூபாய் ஐந்தை தமிழ்நாட்டு காட்டு(வன)த்துறையும் பெற்றுக் கொள்கிறது.

திளைப்பும் திகைப்பும்:

சுற்றுலாவிற்கு வந்த மற்றவர்கள் மகிழ்ந்ததைப் போல தனிப்பட்ட முறையில் நாங்களும் மகிழ்ச்சியில் திளைத்த போதும் குமூக அக்கறையற்ற மாந்தர்கள் சுற்றுலா என்று வந்து செல்வதால் எமது தமிழ்த்தேசத்தின் சொத்தாகிய புகைக்கல் எந்தளவிற்கு சீரழிந்துள்ளது என்று கண்ணுறும் போது இனபமெல்லாம் பறந்தோடி துன்பமே மேலிடுகிறது.

மலை சூழ்ந்த பகுதியானது குப்பைக் காடாக மாற்றப்பட்டு வருவதைக் கண்டுற்று உள்ளம். வெதும்பி நின்றோம். மலைக்கு கீழேயுள்ள ஏழ்மை நிரம்பிய பென்னாகரத்தின் அமைதியான சிற்றூர்ப்புற வாழ்க்கையையும், அங்கிருந்து பதினைந்து அயிர மாத்திரி (கி.மி) தொலைவில் உள்ள புகைக்கல்லில் வகைவகையான மனிதர்கள், உடைகள்,உணவுகள், வாகனங்கள் என அப்படியே நேர்மாறான காட்சியைக் கண்டபோது அதிர்ச்சியில் உறைந்தோம்.

பென்னாகரம் புறவழிச் சாலை தொடங்கி ஒகனேக்கல் வரையிலும் இருமருங்கிலும் "ஞெகிழிப் பொருட்கள் தடைசெய்யப்பட்ட பகுதி" என்று பல அறிவிப்புப் பலகைகளைக் கண்டு 'பலே' என்று புகழ்பாடி வந்த எங்களுக்கு; புகைக்கல் (ஒகனேக்கல் )பகுதிக்குள் நுழைந்த தரை முதல் தண்ணீர் கரைபுரண்டோடும் பள்ளத்தாக்குப் பகுதி வரையிலும் எங்கெங்கு காணினும் ஞெகிழிக் குப்பைகள், மதுப்புட்டில்கள், மீன்கழிவுகள், காலணிகள், குடிநீர் புட்டில்கள், வாலும் தோலுமாக உரசியபடி உறவாடிக் கொண்டிருக்கும் மாந்த துணிமணிகள் என இவற்றையெல்லாம் கண்டபோது மகிழ்ச்சி எல்லாம் மொத்தமாய் காணாமற் போயிருந்த்து.

'நீர் கொட்டும் அறிவிக்கப்பட்ட பகுதியில் மட்டும்தான் குளிக்க வேண்டும்' என்று ஆங்காங்கே தென்படும் அறிவிப்புப் பலகைகளை கிஞ்சிற்றும் மதியாது மாந்தர்கள் தத்தமது மனம் போன போக்கில் பாறைகள் நிறைந்த, சமதளமற்ற, கணிக்க இயலாதவாறு ஆர்ப்பரித்து ஓடும் நீரில் பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் ஊறு ஏற்பட வாய்ப்பிருப்பதை உணராமல் இயல்பாக
நீராடியதைக் காண்கையில் எங்கள் மனம் பதைபதைத்தது.

காட்சியும் கண்டனமும்:

திறந்து விடப்பட்ட ஆயிரக்கணக்கான அடி கனநீர் பொங்கி வந்த போதும்; ஊராட்சி மன்றத்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வழங்கும் குடிநீர்க் குழாய்களில் பகுதி மக்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஞெகிழிக் குடங்களில் குடிநீர் பிடிப்பதைக் காண நேர்ந்தது.

மேலும் தண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடிய போதும் தாகத்திற்கு நீரருந்த புட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குடிநீரையே வாங்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் அங்கு நிறுவப்பட்டுள்ள ஓரே ஒரு தண்ணீரைத் தூய்மை செய்து,தாது உப்புக்கள் சேர்க்கப்பட்டு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் செயல்படாமல் காட்சிப்பொருளாய் காட்சியளித்தது. போதுமான அளவிற்கு தூய்மையான நன்கு பராமரிக்கும்படியான கழிப்பிடங்களைக் காண முடியவில்லை. அதுபோக சாலையில் குவிந்துள்ள குப்பைகளைக் கூட சரிவர அகற்றாமல் இருந்ததையும் காண நேர்ந்தது.

ஆரவாரமும் அழுக்கடைவும்:

குளிக்குமிடத்திற்கு செல்லும் வழியில் சாலையின் இடப்பக்க நடைபாதையானது சிற்றுண்டி விற்பனை செய்யும் இடமாகவும், வலப்பக்க நடைபாதையானது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளாகவும் மாறி நம்மை வரவேற்றது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதனால் மக்கள் கூட்டம் அதிகமிருந்தும் பாதுகாப்புக்காகவோ போக்குவரத்தை ஒழுங்கு செய்யவோ காவலர்களை யாம் கண்டிலம். குளிக்குமிடத்தைச் சுற்றிலும் தூய்மையற்ற முறையில் விற்கப்படும் தின்பண்டங்கள், வழலைக் கட்டிகள், சீயநெய் (சாம்பு), வெண்சுருட்டுகள், தலைக்கு தேய்க்கும் எண்ணெய் பொட்டலங்கள் என விற்பனை செய்யும் சிறு சந்தை போல மாற்றப்பட்டு பரிதாபமாக காட்சியளிக்கிறது.

ஆங்காங்கே வெட்டிய மீன்களை தூய்மை செய்வதும்,சமைத்த பாத்திரங்களை கழுவுவதும், துணிகளை துவைப்பதும் என நீரோட்டம் முழுவதும் அழுக்கடைவதால் இவ்விடத்தைச் சுற்றிலும் ஒருவித நீச்ச வாடை வீசுவதை உணரலாம்.

இடரினை உணராமல் இளைஞர்கள் மதுவருந்துவதும், மது அருந்திவிட்டு நீராடுவதும், மது அருந்தியவர்கள் எண்ணெய் குளியல் மேற்கொள்வதுமாய் இருந்தபடி காணப்பட்டனர். குளித்து முடித்து வெளியே வந்தால் ஓய்வெடுக்கலாம் என்று அருகில் உள்ள சிறுவர் பூங்காவினுள் செல்ல எத்தனிக்கையில் அங்கு சுற்றுலா வந்த ஒரு பெரிய குடும்பத்தினர் பூங்காவின் வாயிலை மறித்து தரையில் பதாகை ஒன்றினை விரித்து சமையலுக்கான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தைக் கண்டவுடன் முன்னே சென்ற எமது கால்கள் அதே வேகத்தில் பின்னே நகர்ந்தன.தூய்மை செய்யப்படாமலும் சிறார்கள் மகிழ்ந்து விளையாடும் சறுக்கு மரம், ஊஞ்சல், ஏற்ற இறக்கம் உள்ளிட்ட பொருட்கள் யாவும் சிதிலமடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் காட்சிப் பொருளாய் மாறிப் போனது. பணம் செலுத்தி உணவருந்தும் கூடம் என்று பெயரிடப்பட்டிருந்த கூடம் ஏனோ தாழிடப்பட்டு பூட்டுப் போடப்பட்டிருந்தது. இரவு ஏழு மணிக்கே தனியார் மருந்தகங்கள் மூடப்பட்டு இருந்ததையும் கண்டோம்.

எதிர்பார்ப்பும் தீர்வும்:

இங்கு சுட்டியுள்ளவற்றை உற்று நோக்கினாலே இவ்விடத்தில் களைய வேண்டுவனவ யாதென்று தெள்ளனெ விளங்கும்.

மாவட்ட மேலாண்மையும்(நிர்வாகம்) உள்ளூர் சிற்றூர்ப்பற மேலாண்மையும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வரல் வேண்டும். பகுதி மக்களுக்கு இது தமது தாய்நிலப் பகுதி என்கிற போதிலும் தமிழ்த்தேச சொத்தின் சுற்றுலாவிடம் என்கிற அடிப்படையிலான விழிப்புணர்வை உருவாக்க் முன்வரல் வேண்டும்.

பகுதி மக்களின் வாழ்நிலை, கல்வி மேம்பாடு, சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்டவையும் மேம்பட உறுதி செய்யப்படல் வேண்டும். மேலும் பரிசல் இயக்கும் தொழிலாளர்கள் மீன்வளத்துறையின் கூட்டுறவுக்கழகங்களின் கீழ் உறுப்பினர்களாக கொண்டுவரப்பட்டு முழுமையாக பயன்பெற முயல வேண்டும். நம் தமிழ்த்தேச நிலத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழ்த்தேச குடிமகனும் தனிமாந்த ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட முன்வரல் வேண்டும். மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நிலத்தில் பாயும் இவ்விடத்தை நாம் அதே இயற்கைச் சூழல் மாறாது நமது அடுத்த தமிழ்தேச தலைமுறையினர்க்கு கையளிக்க வேண்டியது நமது காலத்தின் கடமை என்று வேண்டுகோளே இக்கட்டுரை தீட்டியதன் பயனாய் விளைய வேண்டும் என்கிற அளவில் இதனை இந்தளவில் நிறைவு செய்கிறோம்.

- அசுரன் கா.ஆ.வேணுகோபால், எண்ணூர், சென்னை-57

Pin It

இந்த தலைப்பில் கற்றளி என்கிற வார்த்தையைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். கோயில் கட்டிடக் கலை குறித்து தெரிந்தவர்களுக்கும், தமிழகத்தில் கோயில்களின் பரிணாம வளர்ச்சி குறித்து தெரிந்தவர்களுக்கும், பல்லவர்களின் வரலாறு தெரிந்தவர்களுக்கும் இந்த வார்த்தை மிகப் பரிச்சயமாண ஒன்று. சதுரமாக அறுத்த கற்களைக் கொண்டு கட்டும் கற்கோயில்களுக்கு கற்றளி என்று பெயர்.

தமிழகத்தின் முதல் கற்றளி கோயிலை - அதாவது முதன் முதலாக பெரிய பெரிய பாறைக் கற்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்துக் கட்டிய கோயில் – குறித்த தெரிந்து கொண்ட நான் அதை தேடிப் போன பயணக் கதையைத்தான் இங்கே பேசலாம் என்று இருக்கிறேன். கதையா அப்ப நல்ல சுவாரசிய சங்கதியெல்லாம் இருக்கும்தானே என்றெல்லாம் பேராசை பட்டுத் தொலைக்காதீர்கள். தமிழக வரலாற்றின் மிக முக்கிய மைல் கல்லான ஒரு வரலாற்றுச் சின்னம் எப்படி நாதியற்றுக் கிடக்கிறது என்பதற்கான சிறந்த உதாரணம் - எனது அதைத் தேடிய பயணம்.

இந்தத் தேடல் பயணம் பத்து, பதிமூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த ஒன்று. பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது, மூன்றாம் ஆண்டு முடிவின்போதான மே மாத விடுமுறையில் அந்தப் பயணத்தை எனது நண்பன் ஒருவனுடன் தொடங்கினேன். பயணம் என்றால் மிக நீண்ட பயணமெல்லாம் இல்லை. தாம்பரத்தில் பேருந்தைப் பிடித்து காஞ்சிபுரத்தில் போய் இறங்கியதைத்தான் அப்படி கொஞ்சம் ‘பில்டப்பாக’ சொன்னேன். என்னுடன் வந்த நண்பனுக்கு வரலாறு, கோயில் கட்டிடக் கலை குறித்த சங்கதியெல்லாம் தெரியாத விசயங்கள். நான் கூப்பிட்டதற்காக என்னுடன் வந்தான். அன்றைய தினம் முழுவதும் என்னுடன் மே மாத வெயிலில் மனித கருவாடாக வேண்டும் என்பது அன்றைய அவனுடைய இராசி பலனாக இருந்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் முதல் கற்றளி, கூரம் என்கிற ஊரில் இருக்கிறது என்பதையும் அது காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் போகும் பிரதான சாலையில் கொஞ்சம் உள் வாங்கி இருக்கும் சிறிய கிராமம் என்பதையும், மா.இராசமாணிக்கனாரின் ‘பல்லவர் வரலாறு’ என்ற வரலாற்று ஆராய்ச்சிப் புத்தகத்தின் மூலம்தான் அறிந்து கொண்டிருந்தேன். அது ஒரு சிறிய சிவன் கோயில் என்பதையும் இராசமாணிக்கனார் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மேல் என்ன அங்க அடையாளங்கள் வேண்டும்!

காஞ்சிபுரத்தில் போய் இறங்கிவிட்டோம். அப்போதெல்லாம் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் டீக் கடைகளும், ஆட்டோ ஓட்டுனர்களும்தானே GPRS சேவையைத் தருபவர்கள். எங்களுக்கு வேண்டிய தகவலைப் பெற ஒரு டீக் கடையில் டீயை வாங்கியபடி கூரம் கிராமத்திற்கான பேருந்து குறித்த தகவலைக் கேட்டோம்.

இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும் தம்பி. ஒரே பஸ்சுதான். காலையில் ஒரு வாட்டி ஊருக்குள்ள போகும். அதோட சாயங்காலம் ஊருக்குள்ள போகும் என்றார். அடக் கொடுமையே! அப்ப காலையில் ஊருக்குள் போனால் அத்தோடு சாயங்காலம்தான் வெளியே வர முடியுமா? கூரம் சிவன் கோயிலோடு சேர்த்து காஞ்சி கைலாசநாதர் கோயிலையும் பார்ப்பது என்பது எனது அன்றைய திட்டம். இவர் சொல்வதைப் பார்த்தால் கூரம் கிராமத்திலேயே ஒருநாள் கழிந்துவிடுமே. சரி தமிழகத்தின் முதல் கற்றளிக்காக ஒரு முழு நாளை ஒதுக்கினால்தான் என்ன என்கிற முடிவுடன் இரண்டு மணி நேரத்தை காஞ்சி வரதராஜ (பெரிய) பெருமாள் கோயிலில் கழித்துவிட்டு கூரம் பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம்.

ஊரைச் சுற்றியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் வெளிதான். பெரிய ஆலமரத்தடியை ஒட்டிய ஒரு ஓட்டு வீட்டில் டீக் கடை. அதுதான் கூரம் பேருந்து நிறுத்தம். ஊருக்குள் இறங்கியது எங்களுடன் சேர்த்து மூன்று நான்கு பேர்தான். நாங்கள் இறங்கும்போது கண்டக்டர், "இன்னும் அரமணி நேரம் பஸ்சு ஊர்க்காரங்களுக்காக நிக்கும். அதுக்குள்ள திரும்பி வந்துருவீங்களா. இல்ல சாயங்காலம்தான் பஸ்சு வரும்" என்றார். தமிழகத்தின் முதல் கற்றளியை அரைமணி நேரத்தில் பார்த்துவிட்டு வருவதாவது! ஆனால் கண்டக்டருக்கு ஏற்கனவே அந்த கூரம் சிவன் கோயிலைத் தேடி வந்தவர்களைப் பார்த்த அனுபவம் இருந்திருக்கிறது என்பதை அடுத்த அரைமணி நேரம் கழித்துத்தான் நாங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.

அந்த ஆலமரத்தடி டீக் கடைக்கு அருகில் ஊருக்குள் செல்லும் பாதை. ஒற்றையடிப் பாதையாக இருக்கும்போல என்று கற்பனை செய்ய வேண்டாம். நல்ல பெரிய பாதை, இரண்டு வாகனங்கள் அருகருகே செல்லக் கூடிய அளவிற்கான பாதை. தேர் ஓடும் பாதை அப்படித்தானே இருக்கும். இராசமாணிக்கனாரின் எழுத்துக்களில் வருணிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் கற்றளியை நேரில் காணப் போகிறோம் என்கிற ஆர்வத்துடன் ஊருக்குள் சென்றோம். ஊருக்குள் இருந்தவர்கள் எல்லாம் உடனே எங்களை பப்பரக்கா என்று வேடிக்கை பார்த்திருப்பார்களாக்கும் என்று அடுத்த கற்பனைக்கு செல்ல உங்களுக்கு நான் அனுமதி தரப் போவதில்லை. காரணம் அப்படியெல்லாம் நடக்கவேயில்லையே!

ஊரின் மையத்தில் ஒரு மிகப் பெரிய திருமால் கோயில் (திருமால் கோயில் என்றுதான் கவனம்). விஜயநகர மற்றும் நாயக்கர் கால கோயில் கட்டிக் கலையில் கட்டப்பட்ட கோயில் அது. கோயில்களின் கட்டிக் கலையை வைத்தே அதன் காலத்தையும், அது எந்த பேரரசு காலத்திய கட்டிக் கலை என்பதையும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு கோயில் கட்டிடக் கலையிலும் வரலாற்றிலும் பரிச்சயம் உண்டு. கோயில்களில் இருக்கும் கல்வெட்டு எழுத்துக்களின் அமைப்பைக் கொண்டு (அதாவது அது தமிழியா, வட்டெழுத்தா, பிராகிருதமா) அந்த கோயில் கட்டப்பட்ட உத்தேச காலகட்டத்தை அறிந்து கொள்ளும் பரிச்சயமும் உண்டு. (இந்த பயிற்சிக்கு எனக்கு உதவியவைகள் நடன காசிநாதன் போன்ற வரலாற்று அறிஞர்களின் புத்தகங்கள்). நிச்சயமாக அது நான் தேடிவந்த கோயில் கிடையாது. அந்த கோயிலுக்கு வெளியே இரண்டு நீண்ட பெரிய தெரு. தெருவின் இரண்டு பக்கங்களும் வீடுகள். அவ்வளவுதான் மொத்த ஊரும்.

வேறு கோயில் இருப்பதற்கான எந்த புற அடையாளத்தையும் காணவில்லை. அந்த பெரிய கோயில் அருகில் இருந்த ஒருவரைக் கேட்டேன். இங்க சிவன் கோயில் ஒன்னு இருக்கு. அதுக்கு எப்படி போகணும் என்று. இதுதான் தம்பி அந்தக் கோயில் என்று பதில் வந்தது. இது என்னடா சோதனை. தவறான ஊருக்கு வந்துவிட்டோமா அல்லது இராசமாணிக்கனார் தவறாக ஏதும் குறிப்பிட்டுவிட்டாரா. நிச்சயமாக இராசமாணிக்கனார் தவறாகக் குறிப்பிட வாய்ப்பே இல்லை. நான்தான் தவறான இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்கிற நினைப்போடு, கண்ணில் பட்ட மேலும் இருவரைக் கேட்டோம். அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக 'சின்ன சிவன் கோயிலுங்க அது' என்று அங்க அடையாளமெல்லாம் சொல்லி, எங்களுக்குத் தெரிஞ்சு அப்படி சின்ன கோயிலெல்லாம் இங்க இல்லயே என்று பதில் வந்தது.

கூட வந்த நண்பன், "மச்சி கிளம்பு... நாம தப்பான ஊருக்கு வந்துட்டோம் போல. பஸ்சு நின்னுகுட்டுத்தான் இருக்கும்... வா போயிடலாம். இல்ல சாயங்காலம் வரைக்கும் இங்கதான் கிடக்கனும்" என்றான். அதுவும் சரிதான். தமிழகத்தின் முதல் கற்றளியை இன்று பார்க்க குடுப்பினை இல்லை போல என்று ஆலமரத்தடி டீக்கடைக்கு செல்லும் பாதையில் ஊரைவிட்டு வெளியே நடையைக் கட்டினோம். ஊருக்கு உள்ளே வரும் அந்தப் பாதையில் இடது புறமாக ஒரு வீடு இருந்தது. ஊருக்குள் வருபவர்களை முதலில் வரவேற்பதைப் போல இருந்தது அந்த வீடு. அந்த வீட்டில் உள்ளவர்களின் கண்களில் படாமல் யாரும் ஊருக்குள் சென்று விட முடியாது என்பதாக இருந்தது அந்த வீடு. வீட்டிற்கு வெளியே கணவனும் மனைவியுமாக இரண்டு பேர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

நண்பன் தாகம் எடுக்கிறது என்று அவர்களிடம் சென்று குடிக்க நீர் கேட்டான். உடனே அந்த அம்மையார் தண்ணீர் கொண்டு வர வீட்டிற்குள் சென்றார். அவருடைய கணவர் எங்களிடம் பேச்சுக் கொடுத்தார். நான் தமிழகத்தின் முதல் கற்றளியைப் பற்றியும், அது ஒரு சின்ன சிவன் கோயில் என்பதையும் அவருக்கு விளக்கிச் சொல்லி, "அந்தக் கோயில் இந்த ஊருலதான் இருக்குன்னே படிச்சேன்... அதான் பாத்துட்டு போகலாம்னு…..ஆனா….எதயும் காணல" என்றேன். பெரிய கோயிலை சுட்டிக்காட்டி "இங்க அந்த கோயில் ஒன்னுதான் இருக்கு" என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள் அந்த அம்மையார் எங்களுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்துவிட்டார். நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டிருப்பார் போலும். கணவரிடம், "ஏன் இந்தா பக்கத்துல ஒரு கோயிலு இருக்கே" என்றார். அதைக் கேட்டதும் அவரும் "அட ஆமா தம்பி.. தோ அங்க ஒரு இடிஞ்ச கோயிலு இருக்கு. அது கூட சிவன் கோயிலுதான்" என்றார்.

படக்கென்று அவர் சுட்டிக் காட்டிய திசைக்குப் போய் பார்த்தேன். அதேதான். நான் தேடி வந்த அதே அற்புதம்தான். இராசமாணிக்கனார் குறிப்பிட்டிருந்த அதே தமிழகத்தின் முதல் அதிசயம்தான். காலக் கொடுமையே! அந்த கோயிலின் நிலையைப் பார்த்தவுடன் தமிழனின் வரலாற்று பிரக்ஞை குறித்து புல்லரித்து விட்டது போங்கள். இந்த அழகில் அது தொல்லியல் துறையின் பராமரிப்பில் வேறு இருப்பதாக அறிவிப்புப் பலகை வேறு. பரமாரிப்பு என்கிற வார்த்தையைக் கிண்டல் செய்வதைப் போலிருந்தது கோயிலின் பராமரிப்பு. அரச மரத்தின் தடினமான வேர் கோயிலின் பிரஸ்தரப் பகுதியையும், பித்தி பகுதியையும் ஊடுருவிச் சென்றிருந்தது. (கோயில் கருவறையை சுற்றியிருக்கும் பகுதியை பித்தி என்பார்கள். பித்திக்கு மேல் பிரஸ்தர பகுதி. கோயிலின் அடியிலிருந்து முடி வரை ஆறு அங்கங்கள் உண்டு. அவை அதிட்டாணம், பித்தி, பிரஸ்தரம், கிரிவரம், கோபுரம் மற்றும் சிகரம். இந்த ஆறு அங்கங்களையும் உள்ளடக்கிய முழு உருவத்தை விமானம் என்பார்கள்.)

விமானத்திற்கு முன்பு ஒரு சிறிய முகப்பு மண்டபம். அவ்வளவுதான் அந்தக் கோயிலின் கட்டுமானம். விமானமும் அவ்வளவு பெரியதெல்லாம் இல்லை. முதல் கற்றளி முயற்சி என்பதால் அதன் உருவம் சிறியதாகத்தான் இருந்தது. சுமார் இரு நூறு வருடங்கள் கழித்து கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலின் முப்பாட்டான் இந்த கூரம் சிவன் கோயில். பித்திப் பகுதியிலும் அவ்வளவாக கோஷ்ட பஞ்சாச்சரங்கள் இடம் பெற்று இருக்கவில்லை. (கருவறையின் வெளி சுற்றுப் பகுதியில் இருக்கும் புடைப்பு சிற்பங்களையும், அது இருக்கும் அமைப்பையும் பஞ்சாச்சரங்கள் என்பார்கள். இதில் பல வகை உண்டு). கோயில் சிறியதாக இருந்தாலும் அவ்வளவு அழகாக இருந்தது. மூட்டப்பட்ட கேட்டிற்கு வெளியே சற்று தொலைவில் இருந்து பார்க்கும்போதே அதன் அழகு அள்ளியது. உள்ள போக முடியுமா என்று அவரைக் கேட்டேன். "போலாம் தம்பி ஆனா சாயங்காலம்தான் அய்யர் வருவார். அவருகிட்டதான் சாவி இருக்கு" என்றார்.

பிறகு சாயங்காலம் ஆகும் வரை அங்கேயே இருந்தோம். நாங்கள் எதிர்பார்த்திருந்த அய்யர் நான்கு மணி போல வந்தார். எங்களுக்கு அந்தக் கோயிலை அடையாளம் காட்டியவர், அய்யரிடம் நாங்கள் காலையிலிருந்து இந்தக் கோயிலைப் பார்ப்பதற்காக உட்கார்ந்திருப்பதை அவரிடம் சொன்னார். அப்படியா என்று ஆச்சரியத்துடன் ஐய்யர் கேட்டைத் திறந்துவிட்டார். கோயிலின் வளாகத்திற்குள் சென்று திருப்தியாக தமிழகத்தின் முதல் கற்றளியை சுற்றிப் பார்த்தேன். இந்தக் கோயில் கட்டப்பட்டபோது ஊரின் மையத்தில் இருந்திருக்கிறது. இப்போது ஊருக்கு வெளியில் இருக்கிறது. சாயங்காலம் வர வேண்டிய பேருந்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலிருந்ததால், இந்தக் கோயிலில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாமா என்று அய்யரிடம் கேட்டோம். "தாராளமா இருந்துட்டு போங்க தம்பி" என்று விட்டு அவர் ஊருக்குள் இருக்கும் பெரிய கோயிலுக்குப் போய்விட்டார்.

நானும், என் நண்பனும், தமிழகத்தின் முதல் கற்றளிக் கோயிலும் மட்டுமே அங்கே தனித்திருந்தோம். அட! அந்த அனுபவம். சுமார் ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்பு நம் முன்னோர்களால் கட்டப்பட்ட ஒரு கட்டடத்துடன் தனிமையில் இருக்கும் அந்த அனுபவம்! மாமல்லபுரம் ஆவணப் படம் எடுக்கும்போது இந்தக் கோயிலையும் அதில் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ஆனால் இந்த வருடம் செம்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப் பெருமாள் (பெரியது இல்லை) கோயில் மற்றும் கைலாசநாதர் கோயில் குறித்த ஆவணப்படம் எடுக்கலாம் என்று திட்டம். அப்போது இந்த கூரம் சிவன் கோயிலையும் ஆவணப் படுத்த வேண்டும் என்று கருதியிருக்கிறேன்.

(பின் குறிப்பு - சில ஆராய்ச்சியாளர்கள் முழுப் பாறையில் கோயிலாக செதுக்கப்பட்ட கட்டடக் கலையையும் கற்றளி என்று குறிப்பிடுவார்கள்.)

- நவீனா அலெக்சாண்டர்

Pin It

மனித கால் தடங்களே படாத இடங்களில் இருளின் வாசம் இன்னும் பிறக்காத குழந்தையின் சுவாசத்தைக் கொண்டிருக்கிறது. எனக்கு தெரிந்து ஒரு முறை கடவுள் வந்து விட்டு போனதாக கூட ஞாபகம்.. 

அருவி கொட்டும் 

அடிவானம் முட்டும் 

ஆழங்கள் கிட்டும் 

பெருமழை தட்டும்..... 

இந்தியாவில் இரண்டே இடங்களில் இருக்கும் சிங்கவால் குரங்குகள் இருக்கும் இரண்டாவது இடம் அல்லது முதல் இடம். அந்தம் கொண்ட ஆதியில் ஆதி கொண்ட அந்தமும் இருப்பது போல. 

40 கொண்டை ஊசி வளைவுகள்.....50 க்கும் மேற்பட்ட சிறு வளைவுகள் தாண்டி மெல்ல ஊர்ந்து நிமிர்கையில்... "கார்வர் மார்ஷ்" காட்டிய சொர்க்கம் கண்முன்னே விரியும். உங்கள் நிறம் எதுவோ அந்த நிறத்தில் மின்னும் இந்த "வால்பாறை"..... வாழும் போதே சொர்க்கம் தரும். அங்கு வாழ்ந்தவர்களின் கடைசி ஆசை அந்த மண்ணுக்கே உரமாக வேண்டும் என்பதே. அத்தனை  நிம்மதி. அத்தனையும் சன்னதி.

எப்போதும் மிதமான வானிலை. மழையும் மலையும் சூழ... லத்தீன் அமெரிக்க நாடான "சிலி"யின் தோற்றத்தை ஒத்த ஒரு மலைப் பிரதேசம். கோவையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஊர்.... இன்னும் பெரும்பாலான சுற்றுலா விரும்பிகளின் கண்களில் அவ்வளவாக படவில்லை என்பது ஆனந்த கூத்து எனக்கு. நான் இன்னமும் தனியனாய் வால்பாறை புற பகுதி சாலைகளில் ஒற்றையாக நடக்கும் காட்டு யானையின் தும்பிக்கையில் தும்பிகளின் நிழல் பற்றி அலைய யாரும் அங்கே வராமல் இருக்கவே வேண்டுகிறேன். பொள்ளாச்சியில் இருந்து 64 கிலோ மீட்டர்கள். "ஆழியார்" அணை தாண்டி "குரங்கு" அருவி தாண்டி... மலையை குடைந்து போட்ட கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி உச்சியை அடையும் போது "அட்டகட்டி" உங்களை வரவேற்கும். அதை தொடர்ந்து... "புலி பள்ளத்தாக்கு" தாண்டி.. "வாட்டர்பால்" கடந்து "ரொட்டிக்கடை" கடந்து கீழே இறங்க இறங்க தலை கிறு கிறுக்கும். தனிமை மொறு மொறுக்கும். இருந்தும் உள்ளே பரபரக்கும். 

ஆங்கிலேயன் காலத்தில் "கார்வர் மார்ஷ்" என்ற அறிஞன் ஆனைமலை காடுகளுக்குள் ஓர் ஊர் இருப்பதை கண்டு பிடித்தார். அந்த ஊர் யாருமற்ற புல்வெளியாக.....மரங்களின் அற்புத வனமாக மலை சரிவின் ஆத்மார்த்தமாக இருந்தது. மலையை வெட்டி வெட்டி சாலை போட்டார். வளைந்து வளைந்து மேலே சென்றார். காடு நகர்ந்தது. கண்கள் நிறைந்தது. காபியும் தேயிலையும்......பனித்துளிகள் சில்லிட.. புலிகளும் யானைகளும்.....பளிங்கு பாறைகள் துள்ளிட.... நதிகளும்.... ஓடைகளும்..... வான் நிறத்தில் வெள்ளியிட........ஆகா......அற்புத வானம் அவர்கள் மேல் விரிந்தது. அற்புத வனம் பக்கவாட்டில் பிரிந்தது.

பசிக்கும் பஞ்சத்துக்கும் மாட்டிக் கொண்ட மக்கள் பழனியிலிருந்து...... திருநெல்வேலியிருந்து.....கோவையிலிருந்து.... ஈரோட்டிலிருந்து......மைசூரிலிருந்து.....தர்மபுரியிலிருந்து...இலங்கையிலிருந்து.....என்று அங்கே குடி புகுந்தார்கள். கருங்கற்களால் ஆன லைன் வீடுகள் கட்டப்பட்டன. அது "சிலி"யின் வீடுகளை ஒத்திருந்தது. சிலியை போல இருக்கும் இந்த இடத்துக்கு சிலியின் முக்கியமான ஊரான "வால்பாறைஸோ" என்ற பெயரையே இங்கும் வைத்தார்கள். காலப்போக்கில் வால்பாறைஸோ "வால்பாறை"யாக மாறி இருக்கிறது. 

விறகு.. சுத்தமான மழை நீர் மலை பொதிந்து கொண்டு அவ்வப்போது சொட்டும் சிறு ஓடைகள்.... கால்வாய்கள்....வீடு... என்று எல்லாம் இலவசமாக கிடைக்க......அவர்கள் வேலை செய்யத் துவங்கினார்கள். காடு தேயிலையாகவும்.. காபியாகவும்... மாறியது. தேயிலை வளர்வதற்கான சரிவான பரப்புகள் அதிகம் உள்ள இடங்கள் வால்பாறை முழுக்க நிறைந்து இருக்கிறது. தேயிலைக்கு நீர் தேங்க கூடாது. ஆனால் அதே சமயம் தொடர்ந்து நீர் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அங்கு தான் எப்போதும் பேய் மழை பெய்யுமே. பெய்யும் மழையெல்லாம் பச்சை செய்யும் மந்திரம் கொண்ட பெருவெடிப்பின் மறு நிகழ்வென இப்போது உணருகிறேன்.

அது அங்கே நிகழ்ந்தது. வால்பாறை வளமானது. வாழத் தகுதியானது. ஊர் நிறைந்தது. அடுத்தடுத்து ஊர் பிறந்தது. மலையும் மலை சார்ந்த வாழ்வும் வசீகரித்தது. எல்லா வீடுகளும் கூட்டு குடும்பம் போல கதைத்தன. எவர் வீட்டு கதவும் எப்போதும் திறக்கும் கடவுளின் ஆசீர்வாதங்களால் தட்டவும்  திறக்கவும் காத்திருந்தன. ஆனால் இன்று வரை அங்கே தயாரிக்கப்படும் உயர் தர தேயிலையையும் காபியையும் அந்த மக்கள் இன்று வரை பருகியதே இல்லை என்பது தான் வரலாற்று பிழை. வரலாறு பிழைத்த விதை. 

மிக வலுவான செய்தி ஒன்று. தேயிலை செடி இல்லை. மரம். ஆறு மாதத்துக்கு ஒரு முறை கவாத்து என்று சொல்லப்படும் இலையின் தலையை ஒரே சீராக செதுக்கி விடும் வேலை நடைபெறுகிறது.

"சின்கோனா" என்றொரு ஊர் இருக்கிறது. அதுதான்.. வால்பாறையில் சிரபுஞ்சி. தொடர் மழை.. அடர் வனம். படர் பனி. சுடர் ஞாபகம்.

"கவர்க்கல்" எப்போதும் பனி படரும் பகுதி. எதிரே வரும் ஆட்கள் கூட தெரியாத அளவுக்கு பனி படரும் உயர்ந்த பகுதி. மேகத்தில் நடக்கும் தேவதூதர்கள் ஆகும் தருணம் கவர்க்கல்லை கடக்கும் தருணம். மெல்லிய பசும் வெண்மையை.....காரிருள் கும்மிருட்டை... மரணத்தின் செவ்வக தன்மையை காணும் இடமெல்லாம் காட்டும் கவர்க்கல்லில் இருந்துதான் கையை நீட்டி.. "இதோ இந்த பக்கம் ஓர் ஊர் இருக்கிறது" என்று வழி காட்டிய "கார்வர் மார்ஷ்" அவர்களுக்கு சிலை இருக்கிறது.

இன்றும் அந்த பனிக்குள் அஞ்சாத ஒரு சிங்கமென வெறித்துக் கொண்டு தீரா தாகத்தோடு "கார்வர் மார்ஷ்" ன் சிலை பார்க்கும் காட்சி மெய் சிலிர்க்கும் மெல்லிய நிகழ்வு. வல்லிய விளைவு.

வால்பாறையிலிருந்து சாலக்குடிக்கு ஒரு காட்டு பாதை "மளுக்கப்பாறை" வழியாக செல்வதை பெரும்பாலோர் அறிந்திருக்க முடியாது. அது ஆக சிறந்த பயணம் என்பதை உணர்ந்தோர்களில் நானும் ஒருவன். 

சேக்கல் முடி, நல்ல முடி, குரங்கு முடி, தோணிமுடி, தாய்முடி, கெஜமுடி, முத்துமுடி, இஞ்சிப்பாறை, மளுக்கப்பாறை, வரட்டுப்பாறை, வெள்ளமலை, பச்சைமலை, வாகமலை, அக்காமாலை, கருமலை, காஞ்சமலை, ஊசிமலை, தலனார், நல்ல காத்து, சோலையாறு, உருளிக்கல், வில்லோனி, காப்பிக்காடு, சின்கோனா, சிறுகுன்றா, முடீஸ், கல்யாண பந்தல், பன்னிமேடு, முருகாலி, ஈட்டியார், சின்னக்கல்லார், பெரியகல்லார், சவரங்காடு, மாணிக்கா, ஸ்டான் மோர், மானாம்பள்ளி என வித்தியாசமான பெயர்களில் வால்பாறையை சுற்றியுள்ள ஊர்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு ஊருக்கும் முதல் நிறம் பச்சை. பிறகு அதனதன் ஆழத்திலிருந்து வந்து விழும் சிறுஓடையென ஒரு நிறம்.

இன்னும் இன்னும் இருக்கும் ஊர்கள் எல்லாவற்றுக்கும் ஞாயிறில் வால்பாறை சந்தை ஒன்றுதான். விடுமுறை தினம் என்பதாலும் அத்தனை ஊர்     மக்களும் வால்பாறைக்கு வந்து காய்கறிகள், வீட்டு சாமான்கள் என்று தேவைகளை நிரப்பிக் கொண்டு வீடு திரும்புவது திருவிழாவுக்கு ஒப்பானது. ஆனால் பேருந்துகளில் ஏறி அமரும் தருணம் என்பது கொடியதிலும் மிகக் கொடியது. ஒரே வாசல் இருக்கும் பேருந்துகளில் அடித்து பிடித்து ஏறி இடம் பிடிக்கும் செயலைப் பார்க்கும் போது பகீரென உள்ளுக்குள் ஏதோ வெடிக்கும். சன்னல் வழியாக குழந்தையை தூக்கி போட்டு சீட்டில் இடம் பிடிக்கும் வீர சாகசங்கள் நிறைந்தது அந்த வளைவுகளின் பயணம்.  

எங்கு எப்படியோ.... வால்பாறையை சுற்றியுள்ள ஊர்களில் பொங்கல் படு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கரகாட்டம் என்றொரு கலையை இன்னமும் மறக்காமல் வருடாவருடம் கரகாட்ட கலைஞர்களை அழைத்து வந்து ஆட வைத்து மகிழும் அற்புத ரசனைவாதிகள் வால்பாறை மக்கள். கரகாட்டக்காரர்கள் ஆடும் பொழுது ஒரு வருடமும் ஆடாமல் உள்ளுக்குள் இருந்த கலை பீறிட்டு வெளிவருவதைக் காண கண்கள் மனதிலும் முளைக்கும். மைதானத்தில் அவர்கள் ஆட,.... சுற்றி நின்று ஊர் பெருசுகள் இளசுகள் என்று இவர்கள் ஆட, ஒரு வருட உழைப்பின் களைப்பு மெல்ல மெல்ல உற்சாகமாக மாறுவதை சில் அவுட் காட்சியில் கண்டிருக்கிறேன்.

சோலையாறு அணை, காடம்பாறை அணை, நீரார் அணை என்று வால்பாறையை சுற்றியுள்ள அணைகள் பார்க்க பார்க்க பரவச நிலைக்குள் நீந்தும் சிறு மீன்களின் ஊஞ்சல் ஞாபகம். எத்தனை விதமான மரங்கள்....பூக்கள்..... விலங்குகள்.... ஓடைகள்...அருவிகள் என்று ஒரு சொர்க்கத்துள் நுழைந்த கனவு மாதிரியே இருக்கிறது வால்பாறை. மானாம்பள்ளி வனச்சரகம் ஒரு வித மாய தத்துவத்தை நம் முன்னே விரிக்கிறது. அந்த மலைக்குள் இறங்கி மலை ஏறினால் "பொள்ளாச்சி"க்கு வந்து விடும் குறுக்கு பாதைகள்.....குதிரைப்பாதைகள் இன்னும் ஆங்கில திகில் பட இடைவேளை காட்சி போல மிரட்டிக் கொண்டே இருக்கின்றன. அக்காமாலை தாண்டி இறங்கினால் "மூணாறு" வந்து விடும் பூகோள அமைப்பு பிரமிப்பு .

ஆசியாவில் இரண்டாவது உயரமான அணை என்ற பெருமை இங்கிருக்கும் "சோலையாறு அணை"க்கு இருக்கிறது என்பது கண்கள் விரியும் கழுகின் சாமர்த்திய ஆச்சரியம். வால்பாறையை சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரம் என்பது தேயிலையும் அது சார்ந்த வேலைகளும் தான்.  இன்றும் குறைந்த கூலி வாங்கிக் கொண்டுதான் வாழ்வை நகர்த்துகிறார்கள். ஆனாலும் அங்கே வாகன இரைச்சலும்.... மாசு கொண்ட காற்றும் நீரும் அற்ற சுத்தமான சுவாசங்கள்....தாகங்கள் நிறைந்து இருப்பது அத்தனை மகிழ்வைக் கொடுக்கிறது. அதிகாலை வாசலில் வந்து சூழ்ந்திருக்கும் பனிப் பொழிவுகளுக்குள் நுழையும் தருணங்கள் வாழ்வின் மிகச் சிறந்த தருணமாக கொள்ளலாம். மழை விரட்ட ஓடி விளையாடும் சிறு பிள்ளைகளின் ஞாபகத்தில் காடு விரிந்து கொண்டே இருக்கிறது.

அதிக காதல் திருமணங்கள் நடக்கும் ஊர். சாதி மதங்கள் அத்தனை பாடு படுத்துவதில்லை. எவர் வீட்டுக்குள்ளும் அக்கா, அண்ணே, தம்பி, மாமா, மட்சா, நண்பா என்று முறை வைத்து கொண்டு நுழையும் அன்பை காணலாம்.  "அக்கா கொஞ்சம் கொழம்பு குடேன்" என்றபடியே தட்டில் சோற்றை போட்டுக் கொண்டு பக்கத்து வீட்டு வாசலில் அமர்ந்து மதிய உணவை முடித்துக் கொள்ளும் அழகியல் அங்கே ஏராளம்.

கில்லி விளையாடும்..... பச்சை குதிரை தாண்டும்...ஒளிந்து விளையாடும் மறைவுகள்....சாத் பூட் த்ரீ விளையாட்டு.......புதையல் தேடும் விளையாட்டு என்று இன்றைய தலைமுறை மறந்து போன பல விளையாட்டுகள்.... கிரிக்கெட்டை தாண்டி இன்னமும் அங்கே இருக்கின்றன.. அதுவும் கால் பந்தின் தீவிர ரசிக கூட்டமும் அங்கே இருக்கின்றது. இன்னமும் சொல்ல போனால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கால் பந்து விளையாட்டு வீரர் இருக்கிறார் என்றால் மிகை இல்லை. வீட்டுக்கு முன்னால் இருக்கும் தோட்டத்தில் ரோஜா பூத்தாலும் சரி.. மல்லிகை குலுங்கினாலும் சரி......மாம்பழம்.. கொய்யா, பலா பழம் என்று எதுவும் பகிர்ந்து கொள்ளப்படும்.  

இவர்கள் வால்பாறையின் பழங்குடிகள் அல்ல. எல்லாருமே வந்தேறிகள் தான். இங்கே பழங்குடிகள் என்று யாருமே இல்லை. ஆனால் காடர்கள் இனம் அங்கே உண்டு. செட்டில்மென்ட் ஏரியா என்று அழைக்கப்படும் காடர்கள் இனம் அங்கே இருக்கின்றது. இவர்கள் காலப்போக்கில் காட்டுக்குள் தங்களை தகவமைத்துக் கொண்டவர்களோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. பூகோளம் கதைத்த படி இந்த காட்டில் மனிதர்கள் காட்டுக்குள் இருந்து வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இங்கு வந்த எந்த ஒரு மனிதமும் இந்த வாழ்வை.....இடத்தை விட்டு தன்னை பிரிக்க ஒரு போதும் முனைவதில்லை. அத்தனை இயல்பாய் இயற்கையோடு இயற்கையாக தங்களை கோர்த்துக் கொள்ளும் அழகு ஆனந்த கூப்பாடு செய்கிறது. உடல்  நோயாளிகள் மிக குறைவுள்ள ஊர் இது. எப்போதும் உள்ளம் பிரகாசமாக இருக்கும் வெயிலும் மழையும் குளிரும் பனியும்.. ஊரும் உறவும்.. உண்மையும் அகமும் நிறைந்து இருக்கும் ஊரில் வாத்துக்கள்.. கோழிகள்.. மயில்கள்....காகம்....புறாக்கள், மாடுகள், கரடிகள், புலிகள், சிறுத்தைகள்,கேளையாடுகள், மிளாக்கள், முள்ளம்பன்றிகள்,யானைகள், குரங்குகள் என்று நிரம்பி செழிக்கும் ஆறுகளும்... அணைகளும்.... வாழ்வை ததும்ப ததும்ப தரும் அற்புத வளைவுகளினிமித்தம் செய்யப் பட்ட ஆலாபனை. 

பிரியாணி வீதி நிறைக்கும். கேக் கோவில் மணக்கும். கொழுக்கட்டை ஊர் முழுக்கும் . எம்மதமும் சமமதமென்று  கோட்பாடுகள் அதுவென்று தெரியாமலே பூக்கள் பூக்கும். இந்தியாவில் இலையுதிர் காலங்கள் இல்லையென்று யாரோ சொன்ன ஞாபகம். ஆனால் இங்கு இலையுதிர் காலங்கள் உண்டு. இலை உதிர்ந்த சூட மரங்கள்....திரும்பும் பக்கமெல்லாம் ஆன்மா உலரும். தமிழ் சினிமாவின் வரமென்று வால்பாறையை கூறலாம். அத்தனை சினிமாக்கள் வால்பாறையை சுற்றி எடுக்கப்பட்டிருக்கின்றன. "மூங்கில் காடுகளே" பாட்டில் கதை நாயகன் நீருக்கு நடுவே இருக்கும் மரக் கிளையை பற்றி இழுத்து குலுக்கும் காட்சி ஒரு சோறு பதம்.

நிஜமாகவே தொடுவானம் தொட்டு விடும் தூரம் தான் இங்கு. தொட்ட ஞாபகம்....தொடாமலும் ஞாபகம் வந்து தொலைக்கும் காலை பனியின் அதிர்வுகள் நிரம்பித் தவிக்கும் குறும்பு கனவுகள் சற்று அதிகம். ஒவ்வொரு வளைவுக்கு பின்னும் ஒரு குளிர் மெல்ல படர்ந்து வரும். ஒவ்வொரு மேட்டுக்கு பின்னும் ஒரு புலி மெல்ல பதுங்கி நிற்கும். செந்நாய் கூட்டத்தின் ஒளிமயம்..... இருளின் ஸ்வப்ன கூடுகள் அலையும் அதிசயம். திருமணத்துக்கு கூடும் கூட்டம் நம்பிக்கை. மரணத்துக்கு கூடும் கூட்டம் ஆறுதல். மாறி மாறி உதவிக்கொள்ளும் உணர்வுகள் மானுடம்.தேர் இழுத்தாலும் ஊர் கூடி நிற்கும். வேர் பிடித்தாலும் ஊர் கூடி நிற்கும். நிஜம் தேடும் நித்திய உலகத்தில்.... சாபங்கள் குறைந்த வரமாக நிறைந்து வழியும் வால்பாறைக்குள் ஒரு காட்டு முயலென எட்டிப்பார்த்த என் அனுபவங்களை அருவிக்குள் நகரும் சிறு பூமியின் சித்திரச் சோலையென விரிக்கிறேன்.

பிடித்துப் போங்கள். யாருக்கு தெரியும்.... வால்பாறை காட்டுக்குள் அதோ பறக்கும் பட்டாம்பூச்சி நீங்களாகவும் இருக்கலாம்.

Pin It

idaiyankudi church 500

கால்டுவெல்லின் நினைவிடம் என்பது அவர் கட்டிய தேவாலயமும், அதனையொட்டி அவர் வாழ்ந்திருந்த வீடும் சேர்ந்ததுதான். ஆலயத்தின் பின்புறத்தில் இருந்து பார்த்தால் அவர் வசித்த வீடு தெரிகிறது. இடையில் கால்டுவெல் நினைவு மேல்நிலைப்  பள்ளி இருக்கிறது.

கால்டுவெல் நீலகிரியிலிருந்து திருநெல்வேலி வரைக்குமான கால்நடைப் பயணத்தின்போது, செருப்பு அணியாமல் சென்றிருக்கிறார் என்பதை வாசித்திருக்கிறேன். அன்றைய தமிழக மக்களின் வாழ்நிலையை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்காக அவ்வாறு செய்திருக்கிறார். சூடு தாங்காமல் கால்கள் வெந்து, புண்ணான போதும், தொடர்ந்து செருப்பு போடாமலே நடந்திருக்கிறார்.

தேவாலயத்தின் முன்பு வண்டியை நிறுத்தியதும், அந்தப் பகுதியின் வெப்பநிலையையும், கால்டுவெல் அங்கு எப்படி வாழ்ந்திருப்பார் என்பதையும் உணர்ந்து கொள்ள செருப்பை வண்டியிலேயே விட்டுவிட்டு, வெறுங்காலுடன் இறங்கினேன்.

மதியம் இரண்டு மணி. காலையிலிருந்து சூரியன் வறுத்தெடுத்ததில், தரைப்பகுதி சூடான தோசைக்கல்லாக மாறி இருந்தது. முதல் அடி வைத்ததும், சுர்ரென பாதம் சுட்டது. பத்து அடிகளைக் கூட கடக்க முடியவில்லை. ஒரே ஓட்டமாக வண்டிக்குள் ஓடி, செருப்புகளை அணிந்து கொண்டேன். கால்டுவெல் அவர்களால் எப்படி இந்தப் பகுதிக்குள் வாழ்ந்திருக்க முடியும்?

idaiyankudi church 501

(தேவாலயத்தின் உட்புறம்)

அதை சமூகவியல் அறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் பின்வருமாறு கூறுகிறார்:

“தமிழ்நாட்டிலேயே திருச்செந்தூருக்கும் கன்னியாகுமரிக்கும் இடையிலுள்ள கடற்கரைப் பகுதி மிகமிக வெப்பமான பகுதி. இந்த இடத்தை அவர் தேர்வு செய்ததற்கான காரணம் நமக்குப் புரியவில்லை. ஆனால் இன்றுகூட அந்த ஊரிலே நாம் ஒருநாள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு வெயிலும் செம்மணல் தேரியினுடைய சூடும் தாங்கமுடியாது. அந்த ஊரிலே இந்த ஐரோப்பியர் 53 ஆண்டுக்காலம் இருந்திருக்கிறார் என்பது என்னைப் பொறுத்த மட்டில் வியப்புக்குரிய ஒன்றாகவே உள்ளது. நான் அந்த ஊருக்குக் கால்டுவெல் நினைவுக் கருத்தரங்கிற்காக மூன்றுமுறை சென்றுள்ளேன். ஆண்டுதோறும் ஜூலையில் நடத்துகிறார்கள்.

கால்டுவெல் என்ற மிஷனரியை விட, கால்டுவெல் என்ற மொழியியலறிஞரை விட, கால்டுவெல் என்கிற அர்ப்பணிப்பு உணர்வுடைய சமூகச்சீர்திருத்தவாதியைத் (Deticated Social Reformist)தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கால்டுவெல் வருகிறபோது, ஏன் இப்ப ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கூட அந்தப்பக்கம் பேருந்து வசதி கிடையாது. தேரிமணல், சாலைகளை காற்றிலே மூடிவிடும் என்பதனாலே பனைஓலைகளைப் போட்டு அதன்மீது ஜீப் ஓட்டுவார்கள். இதுதான் போக்குவரத்து வசதி. அப்படியென்றால் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே அந்த நிலம் எவ்வாறு இருந்திருக்கும்.

கால்டுவெல் குதிரை வண்டியிலும் குதிரையிலும்தான் பயணம் செய்திருக்கிறார். இடையன்குடி என்ற பெயரோடு வழங்கிய சின்னக் கிராமத்தினுடைய செம்மணல் தேரிக்காட்டின் தென்பகுதியை விலைக்கு வாங்கி, அதிலே ஒரு தேவாலயத்தைக் கட்டி, பக்கத்திலே தனக்கு ஒரு வீட்டைக் கட்டி தேவாலயத்தினுடைய வலதுபுறத்திலே தான் மதம் மாற்றிய அந்த எளிய நாடார் கிறிஸ்தவ மக்களுக்காகத் தெருக்களை, வீடுகளை அமைக்கிறார். அவ்வளவு நேர்த்தியாக, ஒழுங்காக இன்றளவும் அவை இருக்கின்றன.

caldwell family 445கால்டுவெல் காலத்திய இடையன்குடி எப்படி இருந்திருக்கும் என்பதற்கு வேறு எடுத்துக்காட்டே தேவையில்லை. இன்றைக்கும் அந்த தேவாலயத்திற்கு நேர் எதிரே இருபது மீட்டர் தாண்டிச் சென்றால் அந்தப் பழைய இடையன்குடி கிராமம் உள்ளது. அதே பழைய ஓலைக்குடிசைகள்; பனைமடலால் ஆன வேலிகள்; அழுக்கு, வறுமை, வெள்ளாடு இவைகளோடு அப்படியே இருக்கிறது. கால்டுவெல் வருகிறபோதும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். கால்டுவெல் நாடார் மக்களிடம் வருகிறபோது பதனியை இறக்கி கருப்புக்கட்டி உற்பத்தி செய்து கொண்டிருந்தார்கள். அன்றைக்குத் தென்மாவட்டங்களிலேயே இடையன் குடிக்கு ஒரு ஆறு கிலோமீட்டருக்கு முன்னாலேயே உள்ள திசையன்விளை பெரிய கருப்பட்டிச் சந்தை. அதை நம்பித்தான் அந்த மக்களுடைய வாழ்வாதாரம் இருந்தது.

இன்றைக்கு அந்த மக்கள் கல்வி, சமூக விடுதலை, பாதுகாப்பான வீடு இவற்றோடு நான்காவது தலைமுறையைக் கழித்துக் கொண்டு கால்டுவெல்லைத் தங்களுடைய குலதெய்வமாக, சாஸ்தா என்று நாம் சொல்வதைப் போல கருதுகிறார்கள். ஏனென்றால் அவர் தந்த வாழ்க்கைதான் இதெல்லாம். ஒரு சுவையான செய்தி. திசையன்விளையைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபர் பாளையங்கோட்டையிலே இருக்கிறார், Bellpins முதலாளி செல்லத்துரை நாடார். அவர் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். சீர்திருத்த திருச்சபைக்காரர்கள் எல்லாம் ஒரு புதிய இடத்தை வாங்கி அதில் ஊரை நிர்மாணிப்பார்கள். அப்படி நிர்மாணிக்கிறபோது அதற்கு சமாதானபுரம், சுவிசேஷபுரம், கடாட்ஷபுரம், மெய்ஞ்ஞானபுரம் என்ற மதம் சார்ந்த ஒரு பெயரை இடுவார்கள். வேதாகமம் சார்ந்த பெயர்கள் அவை. ஆனால் கால்டுவெல் இடையன்குடி பெயரை ஏன் மாற்றவில்லை என்று கேட்டார். எனக்குத் தெரியவில்லை என்று சொன்னேன் நான்.

அவர் சொன்னார். நான் கால்டுவெல் பிறந்த ஊருக்குப் போனேன். அவர் பிறந்த ஊரின் பெயர் Shepherdyard. அதாவது தமிழிலே சொல்வதானால் இடையன்குடி. இது தன்னுடைய ஊர்ப் பெயரை நினைவுபடுத்துகிற ஊர் என்பதாலே இந்த ஊர்ப் பெயரை மட்டும் கால்டுவெல் மாற்றவில்லை என்றார். எனக்கு ரொம்ப வியப்பாகவும் இருந்தது, நெகிழ்ச்சியாகவும் இருந்தது. இவர் தன்னுடைய ஊர்ப்பெயரைக்கொண்ட ஒரு ஊரை இங்கு தேர்ந்துகொண்டதாலோ என்னவோ அங்கு 53 ஆண்டுகள், இடையிலே ஒரேயொருமுறை மட்டும் இங்கிலாந்து சென்று வந்திருக்கிறார். தன்னுடைய மகளைக் கூட பக்கத்தில் நாகர்கோவிலிலே இருந்த இன்னொரு மிஷனரிக்குத்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.

இப்பொழுது அங்கு கால்டுவெல் தனக்காகக் கட்டிய வீடு இருக்கிறது. வீட்டிலே வேறெந்த நினைவுச் சின்னமும் இல்லை. கால்டுவெல் பயன்படுத்திய அந்த கோர்ட்ஸ்டாண்டு மட்டும் தான் உள்ளது. தேவாலயத்திலிருந்து அந்த வீட்டிற்கு நடந்து செல்ல நூறு அடிதான். இந்த நூறு அடியையும் அந்த மணலிலே வெயிலிலே நம்மால் நடந்து செல்ல இயலாது.

இந்த தேவாலயம் அவ்வளவு நேர்த்தியாக எண்ணி எண்ணி கட்டப்பட்டது. அந்த கோபுரமணியினுடைய ஓசை தனியாக இருக்கும். அது கால்டுவெல்லுடைய தம்பி ஐரோப்பாவிலிருந்து வாங்கி அனுப்பியது என்று சொல்கிறார்கள். இந்த கோபுர மணிக்குச் செல்லும் படிக்கட்டுகள் கூட கலை நேர்த்தியுடன் செய்யப்பட்டிருக்கின்றன. கால்டுவெல்லுடைய விருப்பப்படி, கொடைக்கானலிலே கால்டுவெல் இறந்தாலும் மூன்று நாட்களாக அந்த உடலைப் பாதுகாத்து மலையிலிருந்து டோலி கட்டிக் கீழே கொண்டுவந்து - அன்றைக்கு அதானே சாத்தியம் - அங்கிருந்து ரயிலிலே மதுரை கொண்டுவந்து, அப்படியே திருநெல்வேலி கொண்டுவந்து, அங்கிருந்து பீட்டன் அல்லது சாரட் என்று சொல்லக்கூடிய குதிரை வண்டியிலே பாளையங் கோட்டை தேவாலயத்தில் வைத்து பூசைசெய்து, இடையன் குடிக்குக் கொண்டு சென்று அந்த தேவாலயத்திலே அடக்கம் செய்திருக்கிறார்கள். அவர் மனைவியும் அங்கேதான் அடக்கம் செய்யப்பட்டார். ரொம்ப பெரிய வியப்பு இதுதான்.”

ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் சொகுசாக வாழ்க்கையைக் கழித்த பல ஆங்கிலேயர்களுக்கு மத்தியில், கால்டுவெல் தேர்ந்தெடுத்துக் கொண்ட இந்த வாழ்க்கை முறை வணக்கத்திற்கு உரியது.

idaiyankudi churchமதம் மாற்றும் நோக்கத்தோடு மட்டுமே அப்பகுதி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வசதிகளை கால்டுவெல் செய்து கொடுத்தார் என்றுகூட சிலர் சொல்லலாம். கிறிஸ்தவ மிஷினரிகளை ஏகாதிபத்தியத்தின் கைப்பாவைகள் என்றும், பிரெட், பால் கொடுத்து மதம் மாற்றினார்கள் என்றும் பலர் குற்றம் சாட்டுவது உண்டு. கல்வி கொடுத்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறி விடுவார்கள் என்று கல்வியை மறுத்த பார்ப்பனிய – முதலாளித்துவ சுரண்டலுக்கும், கல்வி, வேலைவாய்ப்பு கொடுத்து தாழ்த்தப்பட்ட மக்களை கைதூக்கி விட்ட கிறிஸ்தவ – ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது! இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிறிஸ்தவம் ஆற்றிய அளப்பரிய பணிகளை, ஏகாதிபத்தியம் என்ற ஒற்றைச் சொல் கொண்டு அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

***

இந்துக் கோவில்களில் மதிய நேரங்களில் நடை சாத்திவிடுவார்கள். வேலைகளில் மும்முரமாக இருக்கும் மதிய நேரங்களில் யாரும் கோவிலுக்குச் செல்வதில்லை என்பதாலும், உழைத்து(!), களைத்துப் போகும் பார்ப்பன பூசாரிகளின் ஓய்விற்காகவும் நடை சாத்திவிடுவார்கள். கிறித்துவ தேவாலயங்களில் நடை சாத்தும் பழக்கம் இல்லை என்றாலும், மேற்சொன்ன காரணங்கள் அங்கேயும் பொருந்துகிறது போலும். நாங்கள் போன நேரத்தில் (மதியம் இரண்டு மணிக்கு மேல்), பொதுமக்களும் இல்லை; பாதிரியாரும் இல்லை. நாங்கள் யாரைக் காணச் சென்றோமோ, அந்த கால்டுவெல், எலீசா அம்மையாரோடு நாங்கள் தனித்து விடப்பட்டோம்.

எந்த வழிபாட்டுத் தலத்திலும் நுழைவாயில் நடுவில் இருக்கும். ஆனால், இடையன்குடியில் கால்டுவெல் அதை ஓரமாக வைத்துள்ளார். காரணம் என்னவென்றால், தேவாலயம் முச்சந்தியில் அமைந்துள்ளது. கிராமங்களில் நடக்கும் நாட்டார் தெய்வ திருவிழாக்களில் மேளதாளத்துடன் வரும் சாமி ஊர்வலம், சிலுவைக்கு நேரெதிரே அமையும் என்பதால், கால்டுவெல் வாசலை ஓரத்திற்கு மாற்றினார் என்று சொல்கிறார்கள். இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அப்பம் சாப்பிட்டு வெறுத்துப் போன இயேசு, கிடா வெட்டுக்கு ஆசைப்பட்டு தேவாலயத்தை விட்டு இறங்கி விடலாம் என்ற அச்சம் கால்டுவெல்லுக்கு இருந்திருக்கலாம் போல!

வழிபாட்டுத் தலங்களில் – அது இந்து, முஸ்லிம், கிறித்துவ மத இடங்களாக இருந்தாலும் - நான் எப்போதும் ரசிப்பது, அதன் உயரமான மேற்கூரை. 22 வயது வரை நான் வசித்த ஓட்டு வீட்டின் உயரம் வெறும் 7.5 அடிதான். 6 அடி உயரமுள்ள நான், சற்று அண்ணாந்து பார்த்தாலே, ஓடு இடிப்பது போல் தோன்றும். அதுவும் ஒரு பகுதியில் மின்விசிறி மாட்டியிருப்பார்கள். சோம்பல் முறிப்பதற்காக கையை உயர்த்தினால்கூட, மின்விசிறியில் அடிபடும். மச்சு வீட்டிற்குள் நுழைந்தால், தலைக்கும் கூரைக்கும் இடையே அரை அடி வித்தியாசம் கூட இருக்காது. அதனால் உயரமான மேற்கூரை உள்ள எந்தவொரு இடத்தைப் பார்த்தாலும், அந்த பிரமாண்ட அழகு என்னை வசீகரித்துவிடும்.

பீஜப்பூர் கோல்கும்பாஸ் மசூதியைப் பார்த்தபோது, நான் அடைந்த பிரமிப்பையும், ஆனந்தத்தையும் அவ்வளவு எளிதில் விவரித்து விட முடியாது. அவ்வளவு உயரமாக, பரந்த மேற்கூரை உடைய கட்டடம் அது. கால்டுவெல் கட்டிய தேவாலயம் அந்தளவிற்கு உயரம் இல்லை என்றாலும், 66 அடி உயர கோபுரத்துடன் கூடிய, அண்ணாந்து ஆச்சரியப்பட வைக்கும் உயரம் உடையதுதான்.

கோதிக் கட்டடக் கலை முறையில் அதாவது இந்தோ – கிரேக்க முறையில் இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பை இராபர்ட் டெய்லர் என்பவர் இங்கிலாந்தில் இருந்து அனுப்பி இருக்கிறார். தேவாலயத்தின் உட்புற வடிவமைப்பு – அதாவது திருப்பீடம், கதவுகள், ஜன்னல்கள், வளைவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை, இராபர்ட் கால்டுவெல் களிமண் மாதிரி செய்து கொடுத்து இருக்கிறார். அந்த மாதிரிகளைப் பார்த்து, வேலையாட்கள் தேவாலய உட்புறத்தை வடிவமைத்து இருக்கிறார்கள். தேவாலயத்தில் பொருத்துவதற்கு நான்கு மணிகளை கால்டுவெல்லின் சகோதரர் ஜேம்ஸ், இலண்டனில் இருந்து அனுப்பி வைத்திருக்கிறார். இந்த மணிகளில் இருந்து எழும்பும் ஓசை மிகவும் இனிமையாக இருக்கும் என்றும், தெற்காசியாவில் இருக்கும் சிறந்த மணிகளில் இவையும் ஒன்றாகும் என்றும் தேவாலயத்தின் முகப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நாங்கள் சென்றிருந்தது பிற்பகல் நேரமாக இருந்ததால், அந்த மணி ஓசையைக் கேட்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டவில்லை.

தேவாலயத்தின் உள்ளேதான் கால்டுவெல், எலீசா அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இருவரைப் பற்றிய சிறுவிளக்கக் குறிப்புகளும் அங்கு இடம் பெற்றிருக்கின்றன. எலீசா அம்மையாரைப்  பற்றிய குறிப்பில் ‘இந்தப் பீடஸ்தானத்தின் அடியில் மகாகனம் கால்ட்வெல் பிஷப் அவர்களுக்குச் சமீபமாய் அவர்கள் பத்தினியாகிய எலைசா அம்மாளவர்களின் சரீரம் இளைப்பாறுகிறது’ என்றும், அவரது தந்தையாரின் பெயர் ‘சார்லஸ் மால்ட் ஐயர்’ என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஹேமாவிடம் அதை சுட்டிக் காட்டி, “கிறித்துவ மதத்திற்கு மாறிய மக்கள், இந்து மதத்தில் இருந்து சாதியை மட்டுமல்லாது, பெண்களுக்கு மட்டுமேயான ‘கற்பு’ நெறியையும் சேர்த்தே எடுத்துப் போயிருக்கிறார்கள். ஐரோப்பியராக இருந்ததால் ஐயராக்கி விட்டார்கள். கறுப்பினத்தவராக இருந்திருந்தால் பறையராகவோ, பள்ளராகவோ ஆக்கி இருப்பார்கள்” என்றேன்.

caldwell statue 450“ஹேமா! கால்டுவெல் மீது நான் இவ்வளவு நேசம் கொண்டிருப்பதற்கு அவரது சமுதாயப் பணிகளோடு, அவரது ஆய்வுப் பணிகளும் மிக முக்கிய காரணம் ஆகும். சூத்திரர்கள் என்றும், அவர்ணர்கள் என்றும் நம்மை ஒதுக்கிய ஆரிய மதம் தான் தங்களது மதம் என்று நம்பும் நிலையில்தான் தமிழ் மக்கள் இப்போதும் இருக்கின்றனர். தங்களுக்கென தனிக் கலாச்சாரம் கிடையாது; ஆரியக் கலாச்சாரத்தின் சாதி அடுக்குமுறையில் அழுந்தப்பட்டு, தங்களுக்கு கீழே ஒரு சாதி இருக்கிறது என்ற அற்ப மகிழ்ச்சியில் வாழும் நிலையில் தான் பன்னெடுங்காலமாக தமிழர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள். தமிழ் மொழியை விட சமஸ்கிருதம்தான் உயர்ந்தது என்ற கருத்தும் திணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ‘இந்த இழிவான ஆரியக் கலாச்சாரம் உன்னுடையது அல்ல; உனக்கென்று ஒரு தனித்த திராவிடக் கலாச்சாரம் உள்ளது; யாரையும் ஆண்டான், அடிமை என்று பிரித்துப்  பார்க்காத, மக்களில் உயர்வு, தாழ்வு புகுத்தாத பெருமைக்குரிய வரலாறு உடையவர்கள் நீங்கள்; தமிழ் மொழியும், அதன் தொன்மையும் உலகின் எந்தவொரு மொழிக்கும் பிந்தையது இல்லை; தமிழில் இருந்து திரிந்து, பிறந்தவையே தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகியன; ஆரியக் கலாச்சாரம் வேறு; திராவிடக் கலாச்சாரம் வேறு’ என்று பேசுவதுதான் திராவிட அரசியல். உன் மதம், உன் கடவுள், உன் மொழி எனக்கு வேண்டாம் என்று நாம் கலகக் குரல் எழுப்புவதற்கான வலுவான கருத்தியல் ஆயுதங்களாக தனது ஆய்வு முடிவுகளைத் தந்தவர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள். ஆனால், அவரை ஐயர் என்றும், அவரது மாமனாரை ‘சார்லஸ் மால்ட் ஐயர்’ என்றும் அழைக்கும் இழிநிலையில்தான் நாம் இன்னும் உள்ளோம்.” என்று வேதனையுடன் கூறினேன்.

ஹேமா அப்போது ஒன்றைக் குறிப்பிட்டாள். “இருபது ஐந்து வயதிற்குப் பின்னரான எனது எட்டாண்டு வாழ்க்கை மிகவும் கொடுமையானது. தனிமையும், எதிர்காலம் குறித்த அச்சமும் நிறைந்த காலமது. என் வாழ்க்கையில் மட்டும் ஏன் சந்தோஷம் இல்லாமல் போனது? எனது துயரத்திற்கு வடிகாலாக பைபிளின் வரிகள் இருந்தன. ‘வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்’ என்ற வரிகள் எனக்காகவே எழுதப்பட்டது போலிருந்தது. மகிழ்ச்சியே இல்லாத வாழ்வைத் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால், ஏதாவது  ஒரு நம்பிக்கையும், ஆறுதலும் வேண்டுமல்லவா? அதை கிறித்துவம் எனக்குக் கொடுத்தது. எனது துயரங்களைக் கேட்ட பாஸ்டர், ஒரு ஞாயிற்றுக் கிழமை கூட்டுப் பிரார்த்தனையின்போது, ‘இன்று சகோதரி ஹேமாவின் துயரமான வாழ்வில் சந்தோஷம் பொங்கவும், அவர் விரும்பும் நல்வாழ்வு அவருக்குக் கிட்டவும் கர்த்தரிடம் நாம் எல்லோரும் மன்றாடி, பிரார்த்தனை செய்வோம்’ என்று எனக்காக எல்லோரையும் பிரார்த்திர்க்கச் செய்வார். நமது துயரத்தில் பங்கு கொள்ளவும், ஆறுதல் சொல்லவும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற எண்ணமே, என்னைத் தொடர்ந்து கிறித்துவத்தில் ஈடுபடுத்தியது.

கிறித்துவக் கூட்டங்களுக்குப் போவதற்கு வீட்டில் கொஞ்சம் எதிர்ப்பு இருந்தாலும், எனக்கு ஒரு மனமாற்றம் கிடைக்கட்டும் என்று கருதி விட்டுவிட்டார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ‘ஏன் திட்டங்குளம் சர்ச்சுக்குப் போக வேண்டும்? வேறு சர்ச்சுக்குப் போகக்கூடாதா?” என்று கேட்டார்கள். காரணம், திட்டங்குளம் சர்ச் பள்ளர் சாதி மக்களுக்கானது. பாஸ்டரிடம் சொன்னபோது, அவர் கூறினார், “பள்ளர்களுக்கானது என்பதால்தான், இந்த சர்ச் சரியான கட்டடம் கூட இல்லாமல் சிறிய கூடாரத்தில் இருக்கிறது. கோவில்பட்டி சர்ச்சுக்கு கிடைக்கும் நிதியுதவி, திட்டங்குளத்திற்குக் கிடைப்பதில்லை. கிறித்துவத்தில் சாதி இல்லை என்றாலும், கிறித்துவத்திற்கு மாறிய மக்களிடம் சாதி இன்னமும் இருக்கிறது’ என்றார்.

திட்டங்குளத்திற்குப் போய்விட்டு, ஒரு நாள் திரும்பும்போது எனது ஸ்கூட்டர் பழுதாகி நின்றுவிட்டது. அந்த வழியாக வந்த, எனது அண்ணனின் நண்பர், “ஹேமா! இங்க ஏன் நிற்கிறே? இது பள்ளப் பயலுகள் இருக்கிற ஏரியா…! இங்க எல்லாம் தனியா வரக்கூடாது” என்று அவரது காரில் என்னை ஏற்றி, வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார். அதோடு, என்னை திட்டங்குளத்திற்கு எல்லாம் அனுப்ப வேண்டாம் என்று வீட்டில் சொல்லி விட்டுப் போனார். அடிப்படையில் வழக்கறிஞரான இவர், ‘நம்ம சாதிப் பொண்ணுகளை எல்லாம் பள்ள சாதிப் பையன்கள் கூட்டிக்கிட்டு போயிறாங்க…’ என்று சொல்லி, சாதி ஆட்களை எல்லாம் திரட்டி, அதற்கு எதிராக என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொடுத்தவர். அவரது கேள்வியும் என்னவென்றால், ‘ஏன் கோவில்பட்டியிலேயே சர்ச் இருக்கும்போது, திட்டங்குளத்திற்குப் போக வேண்டும்?’ என்பதுதான்.

ஆனால்,  நான் தேடிய ஆறுதல் திட்டங்குளத்தில் கிடைத்ததால், நான் வேறு எந்த சர்ச்சுக்கும் போகவில்லை. திட்டங்குளத்திற்குப் போய் வந்த அந்த நான்கு ஆண்டுகளில், பள்ளர் சாதி மக்களிடம் இருந்து எனக்கு எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை” என்று கூறினாள்.

“அவர்கள் ஏன் பிரச்சினை செய்யப் போகிறார்கள், ஹேமா? இவர்கள் அமெரிக்க மாப்பிள்ளை வேண்டும் என்று 26, 27 வயது வரைக்கும் பெண்களை வீட்டில் அடைத்து வைத்துவிட்டு, பழியை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போடுவது என்ன நியாயம்?”

***

நாங்கள் இருந்த அந்த அரைமணி நேரத்தில் ஒருவர்கூட தேவாலயத்திற்கு வரவில்லை. தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் நிதானமாக சுற்றிப் பார்த்தோம். பின்பு அங்கிருந்து கால்டுவெல் வசித்த வீட்டை நோக்கி நடந்தோம். ஓட்டு வீடுதான் என்றாலும் விசாலமான வீடாக இருந்தது. முகப்பில் கால்டுவெல் அவர்களின் மார்பளவு வெண்கலச் சிலை இருந்தது. 17-02-2011ம் தேதி, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் இந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு, இதுவரை நன்றாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் ‘அம்மா’ காதுக்கு போகாமல் இருக்க வேண்டும். போனால், கால்டுவெல் இல்லத்தை ‘இடையன்குடி மகப்பேறு மருத்துவமனை’யாக மாற்றினாலும் மாற்றி விடுவார்.

caldwell house 445

(கால்டுவெல் வாழ்ந்த வீட்டின் பின்புறம்)

கால்டுவெல் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரிய புகைப்படங்கள், தேவையான குறிப்புகளுடன் வீடு முழுக்க வைக்கப்பட்டு இருக்கின்றன. கால்டுவெல் காலத்து இடையன்குடியையும், தற்போதைய இடையன்குடியையும் ஒப்பிட்டுக் காணும்படியான புகைப்படங்கள், அவரது கைப்பட எழுதிய கடிதம், அவர் பயன்படுத்திய முத்திரை, அவருடன் இருந்த உபதேசிமார்களின் புகைப்படங்கள் ஆகியனவும் இருந்தது. அதோடு அவர் பயன்படுத்திய மேல் அங்கி ஒன்றும் கண்ணாடிப் பேழையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கால்டுவெல் பெயரில் ஆய்வு நூலகம் ஒன்றும் அந்த இல்லத்தில் இயங்கி வருகிறது. வீட்டின் பின்புறம் அழகான தோட்டம் ஒன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கால்டுவெல் என்று இணையத்தில் தேடினால், ஓரிரு புகைப்படங்கள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், இந்த நினைவு இல்லத்தில் பல அரிய புகைப்படங்கள் இருக்கின்றன. எனது கேமிராவில் அவற்றை பிரதி எடுக்க முயன்றபோது, போதிய வெளிச்சம் இல்லாததால், சரியாக வரவில்லை. இத்தகு புகைப்படங்களை scan செய்து, தேவைப்படுவோர் ‘copy’ எடுத்துக் கொள்ளும்படியான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா போகிறோம் என்று குழந்தைகளை ஊட்டி, கொடைக்கானல் என்று கூட்டிப் போகத்தான் பெற்றோர்கள் விரும்புகின்றனர். சமூகத்திற்குப் பயன் தரும்படி வாழ்ந்து, மறைந்துவிட்டுப் போன மூத்தோர்களின் இல்லங்களுக்கு நமது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களது வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து, மறைந்த இடங்களில் வைத்துச் சொல்லும்போது அது நிச்சயம் அடுத்த தலைமுறையினரின் மனங்களில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

அடுத்த முறை இந்தப் பக்கமாக வரும்போது எங்களது மகளை இங்கு அழைத்து வர வேண்டும் என்ற எண்ணத்துடன் இடையன்குடியை விட்டுக் கிளம்பினோம். தென்னிந்தியாவின் அழகிய கடற்கரைகளில் ஒன்றான மணப்பாடு நோக்கி எங்கள் வண்டி ஓடத் தொடங்கியது.

- கீற்று நந்தன்

Pin It