உலகம் முழுமையும், ஏன் உங்களுக்கும் நன்கு அறிமுகமான ஒரு பெயர்தான் ‘டைட்டானிக்’.

உலகத் திரைப்பட வரலாற்றில், வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி, பத்துக்கும் மேற்பட்ட ஆஸ்கர் விருதுகளையும் வாங்கிக் குவித்த ‘டைட்டானிக்’ என்ற திரைப்படத்தை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்; அல்லது, கேள்விப்பட்டு இருப்பீர்கள். தமிழிலும் வந்தது. அவ்வப்போது, தொலைக்காட்சிகளில் காண்பித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

Mariana_trench_mapஇங்கிலாந்து நாட்டில், ‘வெள்ளை விண்மீன் வரிசை’ (White Star Line) என்ற கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமானது ‘டைட்டானிக்’ பயணிகள் சொகுசுக் கப்பல். 1910-11 காலகட்டத்தில், அயர்லாந்து நாட்டின் பெல்ஃபாஸ்ட் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. அன்றைய நாளில், உலகிலேயே அதிக வசதிகள் நிறைந்த, அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்கக்கூடிய கப்பல், அதுதான். “எத்தகைய புயல், மழை வெள்ளத்திலும் இந்தக் கப்பல் கடலுள் மூழ்காது” என்று அந்த நிறுவனம் பெருமிதமாக அறிவித்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தக் கப்பலின் முதலாவது பயணத்தில் இடம் பெறுவதற்காகக் கடுமையான போட்டி நிலவியது. பயணச்சீட்டு கிடைக்காதவர்கள், எதையோ பறிகொடுத்தவர்கள் போல ஆனார்கள். இடம் கிடைத்தவர்கள், எதையோ சாதித்து விட்டதைப் போன்ற உணர்வுடன் கப்பலில் ஏறிக் கையசைத்தார்கள்.

1912 ஆம் ஆண்டு, ஏப்ரல் 10 ஆம் நாள், 2224 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணத்தைத் துவக்கியது டைட்டானிக். வடக்கு அட்லாண்டிக் கடலில், ஐந்து நாள்கள் மகிழ்ச்சியான பயணத்துக்குப் பின்னர், அமெரிக்கக் கரையை நெருங்கிக் கொண்டு இருந்தது கப்பல். இன்னும் 375 மைல்களைக் கடந்தால் கரையைத் தொடலாம்.

ஏப்ரல் 15 ஆம் நாள், முன்னிரவு 11.40 மணி. அன்றைய நாளை இன்பமாகக் கழித்துவிட்டுப் படுக்கைக்குச் சென்ற பயணிகள் கண் உறங்கத் தொடங்கி இருந்த நேரம். திடீரென ஏதோ ஒரு மோதல்; பலத்த அதிர்ச்சி பயணிகளைத் தாக்கியது.

ஆம்; அட்லாண்டிக் கடலில் மிதந்துகொண்டு இருந்த ஒரு பெரும் பனிப்பாறையில் கப்பல் மோதி விட்டது. அதனால், கப்பலில் பல இடங்களில் துளைகள் விழுந்தன. அந்த ஓட்டைகளின் வழியாகக் கடல் நீர் உள்ளே புகுந்தது; ஒவ்வொரு அறையாக நீர் நிரம்பியது; கொஞ்சம் கொஞ்சமாகக் கப்பல் கடலுள் மூழ்கத் தொடங்கியது.

கப்பலில் 20 உயிர் காப்புப் படகுகளே இருந்தன. உயிர் தப்புவதில் பெண்கள், குழந்தைகளுக்கு முதல் இடம் என்ற அடிப்படையில், அவர்கள் அதில் ஏற்றப்பட்டனர். அதற்குப்பிறகு, முதல் வகுப்புப் பயணிகளுள் சிலர் இடம் பிடித்தனர். இரண்டாம் வகுப்புப் பயணிகள்தாம் பெரும்பாலும் மாட்டிக்கொண்டனர்.

ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் கழித்து, டைட்டானிக் கப்பல், 1514 பேர்களுடன் கடலுள் மூழ்கி மறைந்தது. உயிர்காப்புப் படகுகளில் ஏறிய 710 பேர்கள் உயிர் தப்பினர். 12,415 அடிகள் (3784 மீட்டர்) ஆழத்தில், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் மீளாத்துயிலுக்குச் சென்றுவிட்டது.

பாதுகாப்பான கப்பல் என்ற பெருமையுடன் பயணத்தைத் துவக்கியது; பாதுகாப்பற்ற பயணமாக மாறியது.

இதற்குப் பிறகுதான், உலக நாடுகள் விழித்துக்கொண்டு, 1914 ஆம் ஆண்டு ஒரு மாநாட்டைக் கூட்டி, கடல் பயணப் பாதுகாப்புக்கான விதிகளை வகுத்தன. International Convention for the Safety of Life at Sea (SOLAS). அவைதாம், இன்றைக்கும் உலகம் முழுமையும் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் அவ்வப்போது தேவைக்கு ஏற்ற திருத்தங்களைச் செய்து வருகிறார்கள்.

டைட்டானிக் பற்றிய கதைகள், கட்டுரைகள், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் நீண்ட நெடுங்காலமாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தன. கடலுக்கு அடியில் கிடக்கின்ற அந்தக் கப்பலைத் தேடும் பணியில் பல நிறுவனங்கள், பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தன. அதன் விளைவாக, 1985 ஆம் ஆண்டு, அந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல, கடலுள் மூழ்கிய எத்தனையோ கப்பல்கள், கடலின் அடி ஆழத்தில் புதைந்து கிடக்கின்றன.

கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்த டைட்டானிக் கப்பலின் கதையோடு ஒரு இளஞ்ஜோடியின் காதலையும் இணைத்து ஒரு திரைப்படமாக எடுத்து வரலாறு படைத்தார் ஜேம்ஸ் கேமரூன்.

அந்தத் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில், ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கின்ற அந்தக் கப்பலைக் காட்டுவார். அங்கிருந்துதான், படம் தொடங்குகின்றது. அதிலிருந்து, கப்பல் மூழ்கியபோது நடைபெற்ற உணர்ச்சிப் போராட்டங்களை, அந்தக் கடைசிக் கட்டக் காட்சிகளை, அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ஜேம்ஸ் கேமரூன்.

1997 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம், இப்போது மிகுந்த பொருட்செலவில் 3 டி படமாக மாற்றப்பட்டு உள்ளது. வருகின்ற ஏப்ரல் 15 ஆம் நாள், டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு ஆகும். அதையொட்டி, ஏப்ரல் 5 ஆம் நாள், டைட்டானிக் 3 டி திரைப்படம், உலகம் முழுமையும் மறுவெளியீடு செய்யப்படுகிறது. சென்னையிலும், பல திரை அரங்குகளில் வெளியாகிறது.

அதுமட்டும் அல்ல இவருடைய டெர்மினேட்டர், அவ்தார், அபிஸ் உள்ளிட்ட ஒவ்வொரு படமும் மாறுபட்ட படைப்புகள் ஆகும்.

இவ்விதம், தேடலில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான ஜேம்ஸ் கேமரூன், இப்போது ஒரு புதிய சாதனையைப் படைத்து உள்ளார்.

ஆம்; கடலுள் உலகிலேயே ஆழமான இடத்துக்குள் இறங்கி மீண்டு வந்து உள்ளார்.

உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8,848 மீட்டர்கள்; 29,029 அடிகள்), 1953 ஆம் ஆண்டு, டென்சிங் நார்கே, எட்மண்ட் ஹில்லாரி ஆகியோர் முதன்முறையாக ஏறிச் சாதனை படைத்தனர். அதற்குப் பிறகு, கடந்த அறுபது ஆண்டுக் காலத்தில், 2000க்கும் மேற்பட்டவர்கள், அந்தச் சிகரத்தில் கால் பதித்துக் கொடி நாட்டி விட்டனர்.

மரியானா நீள்வரிப்பள்ளம்

அதுபோல, உலகிலேயே மிகவும் ஆழமான இடம், பசிபிக் கடலில் உள்ளது. ஜப்பானுக்குத் தெற்கே, பிலிப்பைன்ஸ் தீவுகளுக்குக் கிழக்கே, நியூ கினி தீவுகளுக்கு வடக்கே, ஆரம் போன்ற ஒரு வளைவாக மரியானா தீவுகள் அமைந்து உள்ளன. 17 ஆம் நூற்றாண்டில் இத்தீவுகளைக் கைப்பற்றிய ஸ்பானியர்கள், தமது நாட்டு இளவரசி மரியானாவின் பெயரை, இந்தத் தீவுகளுக்குச் சூட்டினர்.

அந்தத் தீவுக்கூட்டத்தின் தெற்குக் கடைக்கோடிக் குட்டித் தீவு நாடுதான் குவாம். தற்போது அமெரிக்காவின் பிடிக்குள் உள்ளது. அங்கிருந்து தென்மேற்கில், சுமார் 300 மைல் தொலைவில், மரியானா நீள்வரிப் பள்ளம் (Mariana Trench) அமைந்து உள்ளது. அதன் ஆழம், 35,756 அடிகள் (10,898 மீட்டர்கள்) ஆகும். மரியானா தீவுக்கூட்டத்தை ஒட்டி அமைந்து உள்ளதால், அப்பெயர் பெற்றது.

இந்தப் பள்ளம், வளர்பிறை (Crescent) வடிவத்தில் நீண்டு அமைந்து உள்ளதால், நீள்வரிப்பள்ளம் (Trench) என்று அழைக்கப்படுகின்றது. இதன் தென்வடல் நீளம், சுமார் 2500 கிலோ மீட்டர்கள். அகலம், 69 கிலோமீட்டர்கள் மட்டுமே. அதற்கு உள்ளும், அறைகூவும் ஆழம் (Challenger Deep) என்ற ஒரு ஆழப் படுகுழி உள்ளது. உலகில் இதன் அமைவிடம், 11° 22.4'N, 142° 35.5'E.[2] ஆகும்.

கடலுக்குள் உள்ள தரையில் இருந்து, ஒரு பள்ளமாக அமைந்து இருக்கின்றது. அந்தப் பள்ளத்தின் அகலம் 1.6 கிலோமீட்டர். (1 மைல்). இருபுறங்களிலும் சரிந்தவாறு செல்கிறது. அங்கே நீரின் அழுத்தம் 1086 பார்கள் (bars); 15,750 psi ஆகும்.

ஆய்வுகள்

1872-1876 ஆம் ஆண்டுகளில், இந்தப் பகுதியில் ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொண்ட இங்கிலாந்துக் கடற்படையைச் சேர்ந்த சேலஞ்சர் (HMS Challenger Expedition) என்ற கப்பல்தான், முதன்முதலில், இந்த இடத்தின் ஆழத்தைப் பற்றி அறிந்து உலகுக்கு அறிவித்தது. ஒலி அதிர்வு முறையில் அவர்கள் இந்தச் சோதனைகளை மேற்கொண்டனர். 1875 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி அவர்கள், இந்த இடத்தின் ஆழம், 4,475 ஃபாதம்ஸ் (26,850 அடிகள்; 8,184 மீட்டர்கள்) என்று அளந்தனர். ( ஒரு ஃபாதம் என்பது நான்கு முழம் அல்லது ஆறு அடி).

1912 ஆம் ஆண்டு வெளிவந்த, சர் ஜான் முர்ரே என்ற ஆய்வாளர் எழுதிய பெருங்கடல்களின் ஆழம் (The Depths of Ocean) என்ற புத்தகத்தில், இந்த இடத்தின் ஆழம் 31,614 அடிகள், (9,636 மீட்டர்கள்) என்று குறிப்பிட்டார். 1899 ஆம் ஆண்டு, USS Nero என்ற கப்பல் மேற்கொண்ட ஒலி ஆய்வுகளின் அடிப்படையில் அவர் இதைக் குறிப்பிட்டார்.

1957 ஆம் ஆண்டு, சோவியத் நாட்டின் வித்யாஸ் என்ற கப்பல் மேற்கொண்ட ஆய்வில், 11,034 மீட்டர்கள் (36,201 அடிகள்) என்றும், இதில், 20 மீட்டர்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்கள். மேலும், இந்த இடத்தில், கடலின் அழுத்தம், 111 MPa; 16,155 psi என்றும் வரையறுத்தனர். காற்று மற்றும் நீரின் அழுத்தத்தை பாஸ்கல் என்ற அலகால் அளக்கின்றார்கள். (International System of Units-SI) என்ற அமைப்புதான், இதற்கான ஆயம் ஆகும்.

1984 ஆம் ஆண்டு, ஜப்பானிய ஆய்வாளர்கள், 10,924, (35,840) அடிகள் ஆழமுள்ளதாகக் குறிப்பிட்டனர். 1995 ஆம் ஆண்டு, கைகோ (kaiko) என்ற ஆள் இல்லாத கோளகை (நீர்மூழ்கி) இறங்கியது.

Oceanic_trench_620

2009 ஆம் ஆண்டு, மே மாதம் 31 ஆம் நாள், நெரயஸ் (Nereus) என்ற ஆள் இல்லாத கோளகை, இந்த ஆழத்தை எட்டித் திரும்பியது. அப்போது, 10,994 மீட்டர்கள் (36,070) அடிகள் ஆழம் எனக் கணக்கிடப்பட்டது.

மரியானா படுகுழிக்குள் மனிதர்கள்

விண்வெளிக்கும், நிலவுக்கும் மனிதர்கள் சென்றுவந்தபோதிலும், ஆழ்கடலுக்குள் யாரும் இறங்கிடவில்லை. ஏனெனில், அது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. இவ்வளவு ஆழத்துக்கு உள்ளே மனிதர்கள் இறங்க முடியுமா?

டைட்டானிக் கப்பலுக்குள்ளும், இதர நீர்மூழ்கிக் கப்பல்களில் ஏற்பட்ட விபத்துகளின்போதும் உள்ளே சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் போனவர்களின் உடல்கள்தாம் அடி ஆழத்துக்குப் போயிருக்கக்கூடும். தவிர, கடலுக்குள் குதித்து ஒருவர் இறந்தாலும், அவரது உடல் கடலில் அடி ஆழத்துக்குச் செல்லாது. ஏனெனில், இறந்தவர்களின் உடலுக்குள் நீர்புகுந்து உப்பி இலகுவாகி, மேலே வந்து மிதக்கத் தொடங்கி விடும். அந்த நிலையில், நீரின் அடர்த்தி அதிகம் என்பதால், உடல் மிதக்கத்தான் செய்யும். உள்ளே போகாது. மேலும், ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாகவே, சுறா உள்ளிட்ட மீன்கள் உணவாகக் கொண்டு விடும்.

எனவே, மனிதர்கள் கடலின் அடி ஆழத்துக்குச் செல்வதென்றால், அதற்கென ஒரு நீர்மூழ்கியும், விசையும், எடையும் தேவை. கடலுக்குள் சில நூறு அடிகள் ஆழத்துக்குக் கீழ், சூரிய வெளிச்சம் புகாது. அதற்குப் பிறகு, எங்கும் கும்மிருட்டுதான். கடலுக்குள் பயணிக்கின்ற நீர்மூழ்கிக் கப்பல்கள்கூட, ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழே செல்ல முடியாது. ஏனெனில், ஆழத்துக்குள் செல்லச் செல்ல, அந்தக் கலத்தின் மீது, கடல் நீரின் அழுத்தம் அதிகரிக்கும். ஒரு நிலைக்குப் பிறகு, நீரின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல், நீர்மூழ்கி வெடித்துச் சிதறி விடக் கூடும். எனவேதான், அதிக நீரின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஒரு கருவியை வடிவமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஆழ்கடல் காட்சிக் கோளகை

1928-29 களில், அமெரிக்கப் பொறியியலாளர் ஒட்டிஸ் பர்ட்டன் (Otis Barton), ஆழ்கடல் காட்சிக் கோளகை (Bathysphere) என்ற ஒரு கருவியை வடிவமைத்தார். இதை, ஆழ்கடல் நீர்மூழ்கும் கவிகை மாடம் எனவும் அழைக்கலாம். (கவிகை மாடம் என்றால், அமர்ந்து பார்வை இடும் இடம்). ஒரு நீண்ட கம்பிக்கயிற்றில் இந்தக் கோளகையைக் கட்டி, கடலுக்கு உள்ளே இறக்கி, மேலே தூக்குகின்ற வகையில் வடிவமைத்து இருந்தனர்.

இந்தக் கோளகைக்குள் அமர்ந்து கொண்டு, வில்லியம் பீபே (William Beebe) என்ற ஆய்வாளரும், பர்ட்டனும் ஆழ்கடலுக்குள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள், 3,028 அடிகள் ஆழம் வரையிலும் அவர்கள் இறங்கி மீண்டனர். இதுவே, முதன்முதலில் மனிதர்கள், ஆழ்கடலுக்குள் இறங்கிய நீண்டதொலைவு ஆகும்.

இதே காலகட்டத்தில், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜீன் பெலிக்ஸ் பிக்கார்டு, பலூன்களின் உதவியோடு விண்ணில் உயரமான இடங்களுக்குப் பறப்பதில் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு இருந்தார். ஒட்டுமொத்தமாக அவர் 23 முறை பலூனில் பறந்தார், ஒவ்வொருமுறையும் முன்பைவிட அதிக உயரம் என, 75,459 (23000 மீட்டர்கள்) அடிகள் உயரம் வரையிலும் பறந்து காட்டினார்.

bathysphere1931 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது கவனம், ஆழ்கடலை நோக்கித் திரும்பியது. பலூனில் பறப்பதற்காகத் தாம் வடிவமைத்த ஒரு கருவியில் சிறிய மாற்றங்களைச் செய்தால், அதன் உதவியோடு ஆழ்கடலுக்கு உள்ளே புகுந்து ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தார். அதற்காக, பேத்திஸ்கேப் (Bathyscaphs) என்ற ஒரு நீர்மூழ்கியை வடிவமைத்தார்.

ஐரோப்பிய, ஆப்பிரிக்கக் கண்டங்களை இரண்டாகப் பிரிக்கின்ற நடுத்தரைக் கடலுக்குள் (Mediterraneon Sea) ஆழமான பல இடங்களில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டார். இரண்டாம் உலகப் போரின்போது, அவருடைய ஆய்வுகள் தடைப்பட்டன. அதற்குப் பின்னர் ஆய்வுகளைத் தொடர்ந்த அவர், தமது கண்டுபிடிப்பை மேம்படுத்தினார்.

நீர்க்குமிழியின் தத்துவத்தைப் பயன்படுத்தி, கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஒரு கருவியை வடிவமைத்தார். அந்தக் கருவி, 46 MPa; 6,700 psi அளவுக்கு அழுத்தத்தைத் தாங்கக்கூடியதாக இருந்தது. கேப்ஸ்யூல் வடிவிலான ஒரு இரும்பு உருளைக்கு மேலே, வெளிப்புறத்தில், நீர்மத்துள் அழுத்தும்போது எடை குறைவாகக் காணும் இயல்புடைய திரவத்தை அடைத்து வைத்து ஒரு டேங்கை இணைத்தார். இதனால், உள்ளே இருக்கின்ற மனிதரின் உடலில், கடல் நீரின் அழுத்தம் இறங்காது. அத்துடன், மிதப்பதற்கு வசதியாக கேசோலின் டேங்க் ஒன்றையும் இணைத்தார்.

இந்தக் கோளகை, கடலுக்கு உள்ளே அமிழ்ந்து, ஆழத்துக்குச் செல்ல வேண்டும் அல்லவா? அதற்காக, டன் கணக்கில் இரும்புப் பட்டைகளை இணைத்தார். மேலும், அவை ஆழத்துக்கு உள்ளே சென்று அங்கேயே அமிழ்ந்து விடாமல், மீண்டும் மேலே எழும்பி வருகின்ற வகையில், மின்மோட்டார்களைப் பொருத்தினார். இதற்கு FNRS 2 என்று பெயரிட்டார்.

1948 ஆம் ஆண்டு இந்தக் கோளகையை, ஆள் இல்லாமல் கடலுக்கு அடியில் அனுப்பி, திரும்பி வரச் செய்தார். பலமுறை இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டார். 1950 ஆம் ஆண்டு, ஃபிரெஞ்சுக் கடற்படை இந்தக் கருவியை விலைக்கு வாங்கிக் கொண்டது. அவர்களுடைய பொறியாளர்கள் இந்தக் கருவியை மேம்படுத்தினர். 1954 ஆம் ஆண்டு, முதன்முறையாக ஒரு மனிதனை ஏற்றிக்கொண்டு, 4,176 மீட்டர்கள் (13,701) அடிகள் ஆழம் வரையிலும் சென்று திரும்பியது.

பிக்கார்டு பல நீர்மூழ்கிகளைக் கட்டினார். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கடற்படைகளுக்கு விற்றார்.

நெக்டோன் திட்டம் (Project Nekton)

இத்தாலி நாட்டில் அவர் கட்டிய ட்ரீஸ்ட்டி என்ற கோளகையை வாங்கிய அமெரிக்கக் கடற்படை, தனது பொறியாளர்களைக் கொண்டு, அந்தக் கோளகையை, கூடுதல் ஆழத்துக்கு இறங்கித் திரும்புகின்ற வகையில் மேம்படுத்தியது. அந்தக் கோளகை தானே இயங்குகின்ற வகையில், இரண்டு குதிரைத் திறன் கொண்ட இரண்டு மின் மோட்டாரைப் பொருத்தினார்கள். அது ஆழத்துக்குச் செல்லவும், மேலே உயரவும், பக்கவாட்டில் திரும்பவுமான வகையில் வடிவமைக்கப்பட்டது.

ஆள் இல்லாமல் பலமுறை ஆழ்கடலுக்கு உள்ளே இறக்கி ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அப்போது, கருவிக்கு உள்ளே நீர் கசிந்தது. நீர் புகாதவாறு மாற்றி அமைத்தார்கள்.

பின்னர், குவாம் தீவுகளில் உள்ள அப்ரா என்ற ஆழ்கடல் துறைமுகத்தில், சோதனைகளை நடத்தினார்கள்.

மரியானா படுகுழிக்குள் இறங்குவதற்காக ஒரு திட்டத்தை வகுத்தார்கள். 1958 ஆம் ஆண்டு, டாக்டர் ராபர்ட் செய்ட்ஸ் என்பவர், இந்தத் திட்டத்துக்கு நெக்டோன் திட்டம் என்று பெயர் சூட்டினார். பிக்கார்டின் மகன், ஜேக்குஸ் பிக்கார்டு மற்றும் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த டான் வால்ஷ் ஆகிய இருவரும், சென்று வருவதென முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.

1959 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள், பிக்கார்டு 61 ஆவது முறையாகக் கடலுக்குள் இறங்கியபோது, 18,150 அடிகள் ஆழம் வரையிலும் சென்று மீண்டார்கள். பலமுறை முயன்று, 24,000 அடிகள் ஆழத்தில், மரியானா பள்ளத்தின் மேல்முகடு வரையிலும் சென்று வந்தனர்.

கடைசியில் 1960 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள், மரியானா படுகுழிக்கு உள்ளே புகுந்தனர். (ஒட்டுமொத்தமாக 65 ஆவது முறை; நெக்டோன் சோதனை வரிசையில் 8 ஆவது முறை)

9000 மீட்டர்கள் ஆழத்துக்குள் இறங்கிய நிலையில், கோளகையின் வெளிப்புறக் கண்ணாடி ஒன்று உடைந்து நொறுங்கியது. இதனால், கோளகையே குலுங்கியது; பலத்த அதிர்வுக்கு உள்ளானது. அப்போது, வெளிப்புறத்தில் கடல் நீரின் அழுத்தம் ஒரு சதுர இஞ்சுக்கு 6 டன் என்ற அளவில் இருந்தது. கோளகையில் மேலும் ஏதாவது ஒரு சிறிய கீறல் விழுந்தால்கூட, கடல் நீரின் அழுத்தம், அந்தக் கோளகையை இரண்டு துண்டுகளாகப் பிளந்து விடக் கூடிய நிலையில் இருந்தது.

james_cameronUSS Wandank II என்ற, கடலில் மிதந்துகொண்டு இருந்த தங்கள் கப்பலுடன், இருபது நிமிடங்கள் கழித்துத்தான் மீண்டும் தொடர்புகளைப் பெற்றனர். அப்போது பயன்படுத்தப்பட்ட கருவியின் வழியாக, மேலிருந்து பேசுகின்ற ஒரு குரல், ஏழு வினாடிகள் கழித்துத்தான் கோளகைக்கு உள்ளே இருப்பவர்களைச் சென்று அடைந்தது.

அதற்குப் பின்னர் தொடர்ந்து முன்னேறி, வினாடிக்கு 0.914 நாட் என்ற வேகத்தில் அவர்கள் தரையைத் தொட, 4 மணி 48 நிமிடங்கள் ஆனது.

35,797 அடிகள், அறைகூவும் ஆழத்தின் அடிமுனையைத் தொட்டனர். அப்போது, மேலே கப்பலில் இருந்த கருவி, 11,521 மீட்டர் (37,799 அடிகள்) வரையிலும் அவர்கள் இறங்கியதாகக் காண்பித்தது. பின்னர் அதை, 10,916 மீட்டர்கள் (35,814) அடிகள் என்றும், 1995 ஆம் ஆண்டு, 10,911 மீட்டர்கள் (35,797 அடிகள்) எனவும் திருத்தினார்கள்.

விண்வெளியில் லேசர் கதிர்களைப் பாய்ச்சி, நிலவு வரையிலும் அனுப்பி, நிலவுக்கும், பூமிக்கும் இடையிலான தொலைவைக் கணக்கிடும்போது, ஒரு சில சென்டிமீட்டர்கள் மட்டுமே வேறுபாடு தோன்றும். ஏனெனில், அங்கே காற்று இல்லை; வேறு எந்தத் தடைகளும் இல்லை. ஆனால், ஆழ்கடலுக்குள், அடர்த்தியான கடல் நீரைத் துளைத்துக்கொண்டு, மிகத்துல்லியமாக ஆழத்தைக் கணக்கிட்டு விட முடியாது. ஒவ்வொரு முறையும் வேறுபாடு தோன்றத்தான் செய்யும். அந்த வேறுபாடு, பத்து இருபது முதல் ஐம்பது நூறு மீட்டர்கள் வரையிலும் இருக்கலாம்.

வியப்பின் எல்லை

அந்த இடத்தில் தண்ணீர் நிலையாக நிற்கும்; ஆக்சிஜன் இருக்காது; எனவே, கதிர் இயக்கக் கழிவுகளை இங்கே கொட்டி வைத்துப் பாதுகாக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதி இருந்தார்கள்.

ஆனால், அந்த ஆழத்திலும், சோல் (Sole) எனப்படும் ஒரு அடி நீளமுள்ள, சிறிய தட்டை வடிவ மீன்கள் நீந்திக்கொண்டு இருந்ததைக் கண்டார்கள். ஜெல்லி மீன்களும் நீந்திக்கொண்டு இருந்தன. அந்த அழுத்தத்தை அவை எப்படித் தாங்குகின்றன? என்பது புரியாத புதிர்தான். எதிர்காலம் விடைகூறலாம்.

அங்கே நீரின் சுழற்சியும் இருக்கின்றது; இந்த மீன்கள் உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜனும் இருக்கின்றது என்பதை அறிந்தார்கள்.

அந்த இடத்தில், அவர்கள் 20 நிமிடங்கள் இருந்தார்கள். கடலுக்குள் அவர்கள் விளக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சி ஊடுருவிப் பார்த்தபோது, அவர்களது கோளகையைச் சுற்றிலும் இருந்து நீர் சூடாகிக் கொதிப்பதைக் கண்டார்கள். எனவே, அவர்கள் தொடர்ந்து விளக்கைப் பயன்படுத்தவில்லை. கோளகைக்குள் 7 டிகிரி செல்சியம் (45 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் நிலவியது.

எனவே, 20 நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டார்கள். மேலே எழும்பி வரும்போது, 3 மணி 15 நிமிடங்களில் கடல் மட்டத்தைத் தொட்டனர்.

சாதனைப் பரம்பரை

ஜீன் பெலிக்ஸ் பிக்கார்டு விண்வெளியில் 75,000 அடிகளைத் தொட்டார்.
அவரது மகன் ஜேக்குஸ் பிக்கார்டு, ஆழ்கடலுக்குள் 37,000 அடிகளைத் தொட்டார்.
அவரது மகன், பெர்ட்ரண்ட் பிக்கார்டு, பலூனில் ஏறி, எந்த ஒரு இடத்திலும் தரையில் இறங்காமல், 45,755 கிலோமீட்டர்கள் பறந்து, 20 நாள்களில் உலகை ஒருமுறை சுற்றி வந்த முதலாவது நபர் என்ற பெருமையைப் பெற்றார். (மார்ச் 1999)

மரியானா பள்ளத்துக்குள் ஜேம்ஸ் கேமரூன்

பிக்கார்டும், டான் வால்சும் சென்று வந்ததற்குப்பிறகு, கடந்த 52 ஆண்டுகளில், வேறு யாரும் மரியானா படுகுழிக்குள் இறங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.

அந்த மரியானா பள்ளத்துக்குள், அறைகூவும் படுகுழிக்குள் இறங்குவதற்காக, டைட்டானிக் ஜேம்ஸ் கேமரூன் 2005 ஆம் ஆண்டு முதலே திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். பல ஆண்டுகளாகக் கடலில் மூழ்கிப் பயிற்சி பெற்று வந்தார். ஏற்கனவே டைட்டானிக் படத்துக்காக அவர் பலமுறை ஆழ்கடலுக்குள் மூழ்கி உள்ளார். அப்போது, சுமார் 12,000 அடி வரையிலும் மூழ்கி உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஐந்து மைல் ஆழம் வரையிலும் மூழ்கி, மேலே எழும்பி வந்தார். 57 வயதான கேமரூன், இதுவரையிலும் 72 முறை ஆழ்கடலுக்குள் மூழ்கி வந்து உள்ளார். அவற்றுள், 33 முறைகள், டைட்டானிக் படப்பிடிப்புக்காகவும், 12 முறை மூழ்கிக் கிடக்கின்ற கப்பலுக்கும் சென்று வந்து உள்ளார்.

james_cameron_submarine_620

கடைசியாக, மரியானா பள்ளத்தின் மிக ஆழமான பகுதிக்குள் இறங்குவதற்காக அவர் தேர்ந்து எடுத்த நாள் 26 மார்ச் 2012 திங்கள் கிழமை.

ஆழ்கடல் அறைகூவுநர் (Deep Sea Challenger) என்ற கிளிப்பச்சை நிறத்திலான கோளகையில் தமது சாதனைப் பயணத்தைத் தொடங்கினார். அதன் எடை 12 டன். (12,000 கிலோ). 1960 இல் சென்ற ட்ரீஸ்ட்டியின் எடையை விட, 12 மடங்கு எடை குறைவானது. கோளகையின் உட்புற அகலம் 43 இஞ்ச் (மூன்றரை அடிகள்) மட்டுமே.

26 மார்ச் திங்கள் கிழமை அன்று, குவாம் நேரப்படி அதிகாலை 5.15 மணிக்குக் கடலுக்குள் இறக்கப்பட்டது. 2 மணி நேரம் 36 நிமிடங்களில் அடிமுனையைத் தொட்டது. 35,756 அடிகள் (10.89 கிலோமீட்டர்கள்).

இதைவிடச் சில அடிகள் கூடுதலாகவோ, குறைவாகவோ கொண்ட பள்ளங்கள் இருக்கலாம். இப்போதைய நிலையில், அதைத் துல்லியமாகக் கணக்கிட இயலாது.

ஜேம்ஸ் கேமரூன், மரியானா பள்ளத்துக்குள் ஆறு மணி நேரம் இருக்கத் திட்டமிட்டு இருந்தார். ஆனால், இரண்டரை மணி நேரங்களே இருக்க முடிந்தது.

கேமரூனின் கோளகையில் இருந்து மண்ணை அள்ளுவதற்கான மின்கைகள், எண்ணெய்க்கசிவினால் இயங்கவில்லை. அந்த எண்ணெய்க்கசிவு, கண்ணாடியை மறைத்ததால், மேற்கொண்டு, கேமரூனால் எதுவும் பார்க்க இயலவில்லை. உடனே கிளம்ப வேண்டியதாயிற்று. அங்கிருந்து, பல்வேறு சோதனைகளுக்காக மண் எடுத்து வந்து உள்ளார்.

நண்பகல் 12 மணி அளவில், அவரது கோளகை கடலின் மேற்பரப்பைத் தொட்டது. ஆக்டோபஸ் என்ற கப்பலின் தளத்துக்கு வந்தபோது, 1960 ஆம் ஆண்டு, அந்த ஆழத்துக்குள் இறங்கி மீண்ட டான் வால்ஷ், கேமரூனைக் கைகொடுத்துப் பாராட்டினார்.

தமது பயணம் குறித்து கேமரூன் கூறுகையில், “அது ஒரு மாற்று உலகம் போல இருந்தது; மற்றொரு கோளுக்குச் சென்று வந்ததுபோல இருந்தது” என்றார்.

இந்த இடத்தைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு இதுவரையிலும், மூன்று பேருக்கு மட்டுமே கிடைத்து உள்ளது. கேமரூன், தன்னந்தனியாகச் சென்று சாதித்து உள்ளார்.

கேமரூனின் இந்தத் திட்டத்துக்கு, ரோன் அல்லம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன், நேஷனல் ஜியாகிரபி தொலைக்காட்சி மற்றும், சுவிட்சர்லாந்து நாட்டின் ரோலெக்ஸ் வாட்ச் நிறுவனம் ஆகியோர் உறுதுணையாக இருந்து உள்ளனர்.

நேஷனல் ஜியாகிரஃபிக் தொலைக்காட்சி, கேமரூனின் பயணத்தைப் படம் பிடித்து இருக்கின்றது. விரைவில் ஒளிபரப்பாகக் கூடும். தற்போது, சுமார் நான்கரை நிமிடங்கள் ஓடுகின்ற குறும்படத்தையும், ஏராளமான படங்களையும் இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். நீங்கள் பார்க்கலாம்.

டைட்டானிக் மற்றும் அவ்தார் திரைப்படங்களின் மூலம், உலகத் திரைப்பட வரலாற்றில் வசூல் சாதனை நிகழ்த்திக் காட்டிய ஜேம்ஸ் கேமரூன், ‘மரியானா படுகுழிப் பயணம்தான் என்னுடைய வாழ்நாள் சாதனை’ என்கிறார்.

37,000 அடிகள் ஆழம் வரையிலும் அவர் சென்று வந்து விட்டார். ஆனால், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுள் அமிழ்ந்த காவிரிப்பூம்பட்டினம், கடற்கரையை ஒட்டி 1000, 2000 அடிகள் என மிகக்குறைந்த ஆழத்திலேயே புதைந்து கிடக்கின்றது. அதைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழின், தமிழரின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்ற வேண்டியது, இன்றைய இளையதலைமுறையின் கடமை ஆகும்!

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)